4 – காற்றிலாடும் காதல்கள்
தென்னை மரத்தோப்பின் நடுவே கச்சிதமாக வீற்றிருக்கும் அந்தப் பழங்காலத்து மச்சு வீட்டின் மாடியில் இருந்த ஒற்றை அறையை, பேத்திகென நவீன காலத்திற்கு ஏற்ப வசதியாகப் புதுவிதமாக வடிவமைத்திருந்தார் வெள்ளைச்சாமி.
பேத்தியின் வேதனை அறிந்தவர் அவளின் மன அமைதிக்காகவே மகனிடம் சண்டையிட்டுப் பேத்தியை இங்கே வரவழைத்து இருந்தார். இங்கிருந்தால் அவளின் மனம் மாறும் என்ற நம்பிக்கை அவருக்குள் இருந்தது. இந்த ஊர்மக்களும், விண்ணுலக தேவர்களின் வருகை நிறைந்த மண்ணும் அவளுக்கு நன்மைப் பயக்கும் என்ற எண்ணம் தான்.
“அம்மாடி மிருணா.. எந்திரி டா.. இங்க வந்து பாரு..” என அவளை மெல்லத் தட்டியெழுப்பினார்.
காலைச் சூரிய உதய வேளையில் குயில்களும், பல்வேறு வகையான குருவிகளும், பறவைகளும் துயில் கலைந்து, கானம் பாடியபடி இரைத் தேடி பறக்கத் தொடங்கியிருந்தது.
தென்னை மரங்களைத் துயிலிடமாகக் கொண்டிருந்த மயில்கள் எல்லாம் மெல்ல மெல்ல எழுந்து மண் தொட்டு தோகை விரிக்க ஆரம்பித்திருந்தன.
மிருணாளினி எழுந்ததும் மெல்லப் பாய்ந்த மஞ்சள் நிறக்கதிர்களின் ஊடே தோகை விரித்தாடும் மயில்களின் நடனத்தைத்தான் பார்த்தாள். அந்த நொடி அவளுக்குச் சொர்க்கத்தில் இருப்பதைப் போன்றப் பிரம்மையை ஏற்படுத்தியது.
“தாத்தா.. வாவ்.. ரொம்ப அழகா இருக்கு. தினம் இங்க இப்படி தான் மயில் எல்லாம் வந்து தோகை விரிச்சியாடுமா?” கண்கள் விரியக் கேட்டாள்.
“ஆமா கண்ணு.. நம்ம தோப்புல தான் முக்கால்வாசி மயிலுங்க தங்கியிருக்கு. அது மரத்துல இருந்து குதிச்சதும் இப்படி ஆடும். நானும் உன் பாட்டியும் தினம் இத பாக்க பின்னாடி திண்ணைக்கு போயிடுவோம். இப்ப இந்த அறைய கட்டினதால கொஞ்சம் ஒசரம் வச்சி கட்டி படுத்தே பாக்கறமாதிரி சுத்திலும் ஜன்னலும் வச்சேன். விடிஞ்சதும் இப்படி இயற்கையும் எந்திரிக்கறத பாத்தா உடம்புக்கும், மனசுக்கும் புது உசுரு வந்தமாறி இருக்கும். நீ பாத்துட்டு இரு நான் உளுந்தங்கஞ்சி கொண்டு வரேன்.”
மிருணாளினி புதிதாகப் பிறந்ததைப் போல உணர்வுக் கொண்டு அந்தக் காட்சியைக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். பறவைகளின் ஒலியும்,மயிலின் நடன தரிசனமும், சுத்தமானக் காற்றும் அவளின் உடலையும் மனதையும் சேர்த்தே நிறைத்தது.
உற்சாகமாகக் கீழிறங்கி மயில்களை நோக்கியோடினாள். ஆனால் அவைகளோ இவளைக் கண்டுப் பறந்துச் சென்றது. அதில் அவளின் முகமும் தான் சிறிது வாடியது.
“ஏய் புள்ள மிருதங்கம்.. ஏன் மயில தொரத்தற?“எனக் கேட்டபடி இந்திரன் அங்கே வந்து நின்றான்.
“நான் கிட்ட போய் பாக்கலாம்ன்னு வந்தேன் இந்திரண்ணா.. ஆனா அது பறந்து போயிரிச்சி..“ சிறுக் குழந்தைப் போல அவள் சொன்ன விதமும் அவனை உரிமையாக அழைத்ததும் அவனைக் கனிய வைத்தது.
“நீ புதுசா வந்திருக்கல்ல அதான் பயந்து ஓடுது. உன்னைய ஒரு வாரம் பாத்தா கிட்ட வரும். நாமலா கிட்ட போககூடாது. அதுவா வரும் அதுக்கு நாம பொறுமையா இருக்கணும். நல்லா தூங்கினியா?” என அன்பாகக் கேட்டான்.
“இந்திரண்ணா உனக்கு என்மேல இருந்த கோவம் போயிருச்சா?”அவன் சகஜமாகப் பேசுவதுக் கண்டுக் கேட்டாள்.
“நான் கோவப்பட்டு யாருக்கு புள்ள நட்டமாவும்? எனக்கு தான் நட்டம். உரிமையா சண்டை போட கூட நாதியத்து இருக்கேன். உனக்கும் என்னைய பத்தி தெரியாது. எனக்கும் உன்னைய பத்தி தெரியாது. நானும் வாய்விட்டு இருக்ககூடாது தானே? மனசுல எதுவும் வச்சிக்காத புள்ள. எதுனாலும் என்கிட்ட கேளு நான் செஞ்சி தரேன். நீர் பாயவிட்டுட்டு வரேன். தாத்தா என்னமோ கொண்டு வராக போய் குடி போ” எனக் கூறிவிட்டு தண்ணீர் மோட்டார் போட்டு விட்டு நீர் பாயும் பாத்திகளைச் சரிப் பார்த்தான்.
நேற்றுக் கண்டதும் நக்கல் செய்துக் கோபப்பட்டுச் சென்றவன், விடிந்ததும் கரிசனமாக வந்துப் பேசுகிறான். அவனுக்கென்று குடும்பம் இல்லையென்ற வேதனை அவளுக்கு நன்றாகப் புரிந்தது. நேற்றிரவு கீதன் அவனாக நாளை வருவான் என்று கூறியதும் நினைவில் வந்தது, கூடவே கடைசியாகச் சொன்ன வாக்கியமும்..
“அம்மாடி மிருணா.. இந்தா இந்த கஞ்சிய குடி. நான் இந்திரனுக்கு குடுத்துட்டு வரேன்” என அவளிடம் ஒரு லோட்டா குடுத்துவிட்டு மற்றொன்றை எடுத்துக் கொண்டுச் சென்றார்.
அவர் அவளின் அருகே வந்து அமர்ந்ததும்,“இந்திரண்ணாவுக்கு இப்ப யாரும் இல்லையா தாத்தா?” அவனைப் பார்த்தபடிக் கேட்டாள்.
அவன் வேலைகளைக் கவனித்தபடிக் கஞ்சியைக் குடித்துக்கொண்டே, அடுத்த வேலையை வேலையாட்களுக்கு ஏவுவதைப் பார்த்தபடி, “அவன் அப்பா, அம்மா, அக்கா, தங்கச்சி, அண்ணன் தம்பின்னு எல்லாரும் ஒரே நாள்ல இறந்துட்டாங்க டா. அப்ப இவனுக்கு 6 வயசு தான் இருக்கும்” எனத் தாத்தா கூறினார்.
“ஒரே நாள்லயா? எப்படி தாத்தா?” என அதிர்வோடுக் கேட்டாள்.
“கீதன் அப்பாவும் அன்னிக்கி தான் இறந்தாரு. எப்படின்னு இன்னிக்கி வரைக்கும் யாருக்கும் தெரியல கண்ணு. கீதன் அம்மா மாலா தான் அத கண்ல பாத்த ஒரே ஆளு. அந்த புள்ளையும் வாயவே தொறக்கல. அவ்ளோ கோரமான மரணம் அந்த புள்ளையோட புருஷனுக்கு வந்திருக்கக்கூடாது. நல்ல பையன் அவனும். பல அறிய கோவில எல்லாம் கண்டுபிடிச்சி தொறக்க வச்சான். கடைசில அவன் முடிவு இப்படி வந்துருச்சு” எனக் கூறியபடி வேலையாள் கேட்ட பொருளை எடுத்துக் கொடுக்கச் சென்றுவிட்டார்.
‘என்ன எல்லாம் ஒரே மர்மமா இருக்கு? கீதன்கிட்ட என்ன நடந்துச்சின்னு கேக்கணும். நம்ம ஒரு ஃபீலிங்க்ல இந்த ஊருக்கு வந்தா இங்க நம்மள விட அதிக ஃபீலிங்க்கோட எல்லாரும் இருக்காங்க போலயே. என்ன மிரு இது உனக்கு வந்த சோதனை?‘ எனத் தனக்குத் தானே பேசிக்கொண்டு தோப்பின் இடையே நடந்துக் கொண்டிருந்தாள்.
“இந்தா புள்ள மிருதங்கம்..” என அழைத்தபடி இந்திரன் கையில் இளநீரோடு அவளருகே வந்தான்.
“மிருணா-ன்னு கூப்பிடுங்க இந்திரண்ணா..” உள்ளுக்குள் எழுந்தக் கோபத்தை அடக்கியபடிக் கூறினாள்.
“எனக்கு இப்படி கூப்பிட தான் பிடிச்சிருக்கு. இந்தா இந்த இளநீய குடி” எனக் கூறியபடிப் பக்குவமாகச் சீவிக் கொடுத்தான்.
“இப்பதானே கஞ்சி குடிச்சேன். வேணாம் இந்திரண்ணா..”
“கொஞ்சமா குடிச்சதுலாம் என்னத்துக்கு ஆகும்? பட்டணத்துல உனக்கு நல்ல சோறே போடல போல இப்படி எழும்பும் தோலுமா நிக்கற நீ. ஒரு பத்து நாள் அண்ணே உனக்கு விதம் விதமா சமைச்சிதரேன். அத சாப்பிடு நல்லா கொலுகொழுன்னு உன்னய மாத்தி காட்டறேன்” என உரிமையுடன் அவளிடம் வாயாடி அவளை இரண்டு இளநீர் அருந்த வைத்திருந்தான்.
“போதும் இந்திரண்ணா.. இதுக்கு மேல காலை டிபன் கூட சாப்பிட வயித்துல இடமில்ல..“
“காலைக்கு தாத்தா நல்ல வெடக்கோழியா அறுக்க சொன்னாராம். இப்பதான் நல்ல கருப்பு கோழியா பாத்து பிடிச்சி குடுத்துட்டு வரேன். களி நான் கிண்டப்போறேன். வந்து எப்படி செய்யறேன்னு பாரு. நாளபின்ன புருஷனுக்கு ஆக்கி போடுவியாம். வா“ என அவளின் கைப்பிடித்து வீட்டின் பின்பக்கமிருந்த சமையலறைக்கு அழைத்துச் சென்றான்.
“வாவ்.. வீட்ட விட்டு தனியா சமையலறை.. அழகா இருக்கு..” என அந்த இடத்தைச் சுற்றி வந்துப் பார்த்தாள்.
கனமான ஓலை வேயப்பட்டதால் அந்த இடத்தில் நெருப்பின் அணல் கூட சுடவில்லை. ஒருபக்கம் அடுப்பிற்கு விறகு வைத்து நெருப்பு மூட்டிக் கொண்டிருந்தனர். அந்த அடுப்பைப் பார்க்க வித்தியாசமாக இருந்தது.
அது ராக்கெட் அடுப்பு. ஒரு பக்கம் விறகை வைத்து நெருப்பை மூட்டினால், 3 முதல் 5 பாத்திரம் வைக்க, நெருப்பு வரும்படி செய்துக் கொள்ளலாம். அதிலேயே மற்றொரு பக்கம் நேரடையாக நெருப்பில் சூட்டுச் சாப்பிடும் பார்பிக்யூ வகையாகவும் சமைக்கலாம்.
நமது தேவைக்கு ஏற்ப அடுப்பை நாமே வடிவமைத்துக் கொள்ளலாம். அங்கே ஏற்கனவே 3 பெண்கள் 3 அடுப்பின் முன் நின்று சமைத்துக் கொண்டிருந்தனர்.
இந்திரன் நேராக சற்றுத் தாழ்வான அடுப்பிற்கு சென்றுப் பாத்திரம் எடுத்து வைத்து ராகி களி கிண்டத் தேவையானப் பொருட்களை எடுத்து வைத்து விட்டு, சமைக்க ஆரம்பித்தான்.
அவளும் அந்த சமையல் முறையை அதிசயமாகப் பார்த்தபடி அவனுடன் பேசிக்கொண்டே கவனித்துக் கொண்டிருந்தாள்.
“ஏ புள்ள உனக்கு சமைக்க தெரியுமா?” என அவளுக்கு நாட்டுக்கோழி சூப் கொடுத்தபடிக் கேட்டான்.
“ஆம்லெட் போடுவேன், மேகி நூடுல்ஸ் எல்லாம் செய்வேன். அப்பறம் குக்கர்ல வைக்கற வெரைட்டி ரைஸ் எல்லாம் பண்ணுவேன்” எனக் கூறியபடி மெல்ல ஊதிக் குடித்தபோதும் புரையேறி இருமத் தொடங்கினாள்.
“ஏண்டா கொஞ்ச நேரம் கம்முன்னு இருக்க மாட்டியா? பாரு புள்ளைக்கு புரையேறி எப்புடி இருமுது? அத ஒரு வா அமைதியா குடிக்க விடுடா” என அதட்டியபடி விஸ்வநாதன் அங்கே வந்தார்.
“என் வாய் தானே பேசுது அதுவா பேசுது? ஒழுங்கா ஒரு சூப் குடிக்க தெரியல இந்த புள்ளைக்கு. என்ன தான் பட்டணத்துல வளத்துனாங்கலோ?“ என அவளுக்கு தண்ணீர் மொண்டுக் கொடுத்தபடிக் கூறினான்.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல தாத்தா.. காரம் அதிகம் அதான்..”
“இந்தா புள்ள இருளாயி காரத்த கம்மியா போடு. பட்டணத்து புள்ள உப்பு காரம் எல்லாம் கொறவா தான் சாப்பிடும்” என சமையல் செய்யும் பெண்மணியை அதட்டிவிட்டு அவளிடம் வந்து அமர்ந்தார்.
“ராத்தூக்கம் நல்லா வந்துச்சா கண்ணு?“ ஆதூரமாக விசாரித்தார்.
“நல்லா தூங்கினேன் தாத்தா. நீங்க?” என அவர் யாரென தெரியாமல் வார்த்தையைப் பாதியில் விழுங்கினாள்.
“இவரு தான் கீதனோட தாத்தா. விஸ்வநாதன் விசாலாட்சி” என இந்திரன் கூறினான்.
“ஓ சரி சரி.. எனக்கு உங்கள பாத்தா ஞாபகம் இல்ல தாத்தா அதான் தெரியல. தப்பா எடுத்துக்காதீங்க.“
“நீ சின்ன புள்ளையா இருக்கறப்ப இங்க வந்த கண்ணு. பெரிய மனுஷி ஆனதுக்கு அப்பறம் உங்கப்பனும் அவங்கப்பன்கிட்ட சண்டைய போட்டுட்டு இங்க வரல நீங்களும் வரல. அதான் சொந்த பந்தமெல்லாம் தெரியல. இப்பவாது நீ வந்தியே அதுவே சந்தோஷம். ஊருல எல்லாரும் சொகமா இருக்காங்களா?”
“எல்லாரும் நல்லா இருக்காங்க தாத்தா.. நானும் ரொம்ப வருஷமா வெளியூர்ல தான் தங்கி படிச்சேன். இப்ப தான் படிப்பு முடிஞ்சது.”
“நல்லது நல்லது.. உனக்கும் ஒரு பையன பாத்து கட்டி வச்சா வெள்ளையன் சந்தோஷமா இருப்பான்.”
“ம்க்கும்.. ஊருல ஒரு பொம்பள புள்ள கொஞ்சம் நிம்மதியா இருந்துட கூடாது உடனே பிடிச்சி எவன் தலைலயாவது கட்டிரணும். அதுவே கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்னு தான் இங்க வந்திருக்கு. இங்கிருந்தும் வெரட்டாதீங்க” என இந்திரன் கூறிவிட்டுக் களியை இரண்டு கட்டைகள் வைத்து பதமாகக் கிண்டத் தொடங்க, ராகியின் வாசனை அந்த இடத்தையே நிறைத்தது. ராகி வேக வேக வாசனையை வைத்தே எவ்வளவு வெந்திருக்கிறது என்று இந்திரன் கூறியபடி சூடாகத் தட்டில் எடுத்து உருண்டைப் பிடித்து அவளுக்குக் கொடுத்தான்.
அந்த ருசியில் மிருணாளினி இந்திரனுக்கு விசிறியாகிப் போனாள். அதனோடு நாட்டுக்கோழி குழம்பும், பிச்சி போட்ட வறுவலும் அவளின் வயிற்றை மட்டுமின்றி மனதையும் நிறைத்தது.