Loading

காதல் -4

 

கண்கள் சிவந்து முகம் வெளிறி உடை கிழிந்து , தலை முடிகள் கலைந்து நடுங்கிய வண்ணம் கீழே இறங்கி வர, அப்போது தான் இலை பறித்து விட்டு மதிய உணவை உண்பதற்கு அனைவரும் கூட்டமாக வர, மலை உச்சியில் இருந்து இறங்கி வந்த சாயாலியை பார்த்து அனைவரும் அதிர்ந்தனர்.

 

அவள் பின்னே இரண்டடி இடைவெளி விட்டு அவளை தொடர்ந்து வந்தான் தமிழ் மறவன்.. இருவரையும் பார்த்து மக்களுக்குள் சலசலப்பு உண்டாக.. அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவர்களை கடந்து செல்ல போக… அப்போது ஒரு பெண்மணியின் குரல் அவர்களுக்கு தெளிவாக கேட்டது…

 

“ஊமைன்னு நினைச்சா, பாரேன் ஊமை ஊரை கெடுக்கும்ங்றது சரியா போச்சு ,அது சரி பெரிய வீட்டு சமாச்சாரம் நமக்கு எதுக்கு ” என்று அவர்கள் கலைய…

 

“பிடிச்சாலும் பிடிச்சா புளியங்கொம்பால பிடிச்சிட்டா தேனு மவ” என்று வாய்க்கு வந்ததை பேசி விட்டு செல்ல, அதில் ஒருவர் மட்டும் முன் வந்து ” ஆத்தா சாயா என்ன ஆச்சு த்தா உனக்கு, ஏன் இப்படி ஒரு கோலத்தில இருக்க ” என்று மனம் தாங்காமல் கேட்டு வைக்க… அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகையை அவரை கட்டி கொண்டு அழுது தீர்த்தாள் சாயாலி…

 

உணர்ச்சி துடைத்த முகத்துடன் தமிழ் அவளையே பார்க்க , அவளது அழுகை இருக்க இருக்க கூடி கொண்டே போக , ” ஷட் அப் சாயாலி ” என்று தன் மொத்த கோபத்தையும் கூட்டி  கத்தி விட.. அதில் உடல் நடுங்கி அந்த பெண்மணியை இறுக்க அணைத்து கொண்டாள். அவள் நினைவுகளோ நேற்று அவன் அலுவலகத்தில் இருந்து விடைபெற்று வந்த தருணத்திற்கு சென்றது.

 

தமிழ் மாறன் செய்த அதிரடியில் அங்கிருந்து வேகமாக வெளியேறிய சாயாலி தோட்டத்திற்கு வேலைக்கு செல்லாமல் அங்கிருக்கும் சர்ச் ஒன்றில் புகுந்து கொண்டு தன் மனக் குமுறல்களை எல்லாம் அந்த இயேசு நாதரிடம் இறக்கி வைத்தாள்.. இந்து மதம் தான் என்றாலும் இயேசுநாதர் மீது சிறிது பிடித்தம் இருந்தது.. அங்கு கூறும் போதனைகளை கேட்கும் பொழுது அவள் மனம் நிம்மதியடையும்..

 

இதோ வெளி வரத் துடித்த அழுகையை கடினபட்டு அடக்கி கொண்டு இயேசுவின் முன்பு மண்டியிட்டு அமர்ந்தவள் கைகூப்பி , ‘இன்னும் எத்தனை நாளைக்கு என்ன அழ வைக்க போறீங்க , இன்னும் என்ன கஷ்ட படுத்தி பார்க்க ஆசையா, அப்படினா அதை தாங்கிக்கிற அளவுக்கு என் மனசுல சக்தியை கொடுங்க இல்லேனா செத்து போயிடுவேன் போல ‘ என்று ஆற்றாமை தாங்க முடியாது கதறி விட்டாள்..

 

சிறிது நேரம் அங்கேயே இருந்து ஃபாதர் கூறும் போதனைகளை கேட்டு விட்டு சற்று மனம் தெளிந்து எப்போதும் வேலை முடித்து வரும் நேரத்தை ஒட்டி வீட்டிற்க்கு சென்றாள் சாயாலி.

 

இனிமேல் எப்படியும் அந்த வேலையில் தனக்கு இடமில்லை என்பது தெளிவாக புரிந்து விட, அடுத்து என்ன செய்வது என்பது தான் தெரியவில்லை..

 

தேனுவிடம் நடந்த எதையும் கூறவில்லை, அவளுக்கு நடந்த விஷயம் தமிழுக்கும், அவன்  பிஏ பிரீத்திக்கும் மட்டும் தானே தெரியும்.. எப்படியும் இவர்கள் வெளியே சொல்ல மாட்டார்கள் என்று நம்பியவள் .. கை கால் முகத்தை கழுவி கொண்டு எப்போதும் மனம் நாடும் ” தமிழ் காதலன் ” புத்தகத்தை எடுத்து வந்து டேபிளில் அமர்ந்தாள்…

 

‘வர வர வாரத்துல ஏழு நாளும் உங்க புத்தகம் எனக்கு தேவைப்படுது ‘ என்று சிரித்து கொண்டே ‘ இன்னைக்கு நான் ரொம்ப நிம்மதி இல்லாம இருக்கேன் , எனக்கு அடுத்து என்ன பண்ணுறதுன்னு தெரியலை ” என்று பெரும் மூச்சை விட்டவள் கண்களை மூடி வழக்கமாக ஒரு பக்கத்தை திறந்து பார்த்தாள்…

 

இதோ அவள் திறந்தது பக்கம் எண் 68 .. அதில் இருந்த வரிகள்…

 

புயலில் சிக்கித்தவிக்கும்

தோனி கூட

எதிர்நீச்சல் இட்டு

கரையை அடையும் ..

 

மாற்றம் வேண்டுமெனில்

தடுமாற்றம் ஏனோ..?

 

எழுவோம் என்ற நம்பிக்கை கொண்டால் மாற்றம் உண்டு தடு(தடம்)மாற்றமில்லை..!!

 

 

படித்தவுடன் புது உத்வேகம் வர,சற்று மனம் நிம்மதியை உணர, புத்தகத்தை மூடி வைத்து விட்டு இரவு உணவு உண்ணாமல் படுக்கையில் சரிந்தவள் உறங்கி போனாள். தேனு வந்து பார்த்தது ஆழ்ந்து தூங்கும் மகளைத்தான்.. உணவு உண்ணாமல் படுத்து விட்டாளே என்ற கவலை இருந்தாலும் அவள் முகமே அவள் ஆழ்ந்த நித்திரையில் இருப்பதை கூற தன் மகளுக்கு அருகில் பாயை விரித்து அவரும் படுத்து கொண்டார்.

 

எப்போதும் போல் அழகான விடியல்! ஆனால் சாயாலிக்கு ???

 

காலை எழுந்து எப்போது வேலைக்கு கிளம்புவதை போல் கிளம்பி கூடையை எடுத்து தலையில் மாட்டி கொண்டவள், இன்று இரண்டு புது புத்தகங்களை எடுத்து கூடையில் போட்டு கொண்டு, தேனு சமைத்து கொடுத்த உணவை வாங்கி கொண்டு, தோட்டத்தில் இருக்கும் கொய்யா பழங்களை எடுத்து கூடையில் போட்டு கொண்டு நடையை கட்டினாள்.

 

தேனுவை பொறுத்த வரை அவள் வேலைக்கு செல்கிறாள், ஆனால் உண்மையில் அவளுக்கு இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் எப்போது போகும் மலை உச்சிக்கு நடையை கட்டினாள். ‘அங்கு போய் மனதை ஒருநிலை படுத்தி எதவாது யோசித்து முடிவை எடுத்து கொள்ளலாம்.. இவர் ஒருவரது தோட்டம் தான் ஊட்டியில் இருக்கிறதா ,பக்கத்தில் இருக்கும் தோட்டத்தில் கேட்டு பார்க்கலாம் ‘ என்று சிந்தித்து கொண்டே மலை உச்சியை அடைந்து இருந்தாள்.

 

எப்போதும் போல் அங்கிருந்த காட்டு பூக்களை பறித்து தொடுத்து பிள்ளையாருக்கு சூட்டி விட்டு, சற்று நேரம் அமர்ந்து கதை புத்தகம் படிக்க, அவளை சுற்றி ஓடி வந்தது அணில் கூட்டம் , கண்களை விரித்தவளுக்கு அப்போது தான் ஒரு உண்மை புரிந்தது.. ஆக தினமும் தன்னை தேடி இந்த கூட்டம் வருகிறது என்பது புரிந்து போனது..

 

வந்தால் கொடுக்கலாம் என்று பறித்து வந்த கொய்யா பழங்கள் எல்லாம் அணில் கூட்டம் ருசித்து கொண்டிருக்க, அவர்களுடன் சேர்ந்து அவளும் தேனு கொடுத்த உணவை உண்டு முடித்தாள்..

 

மீதி இருந்த நாவலையும் படித்தவள் மணியை பார்க்க… நண்பகல் பன்னிரெண்டு மணியை தொட்டு இருந்தது… ‘இப்போ சர்ச் போய் அங்க கொஞ்ச நேரம் இருந்துட்டு வர வழியில உள்ள தோட்டத்துல வேலைக்கு கேட்டு வரலாம்’ என்று  எண்ணத்துடன் கூடையில் புத்தகங்களை போட்டு கொண்டவள் தலையில் மாட்டி கொண்டு அணில் கூட்டத்திற்கு விடுதலை அளித்து நடக்க ஆரம்பித்தாள்.

 

அதேபோல் அவள் நடக்க ஆரம்பித்து ஐந்து நிமிடம் இருக்கு , அன்று கேட்ட அதே சலசலப்பு அவள் செவிகளில் விழ, கண்களை சுழற்றி பார்த்தவளை அப்படியே வாயை மூடி ஒரு உருவம் இழுத்து சென்று நடு காட்டில் போட்டது…

 

அவளது கூடை புத்தகங்களோ சிதறி போய் அவள் போகும் திசையை கனத்த இதயத்துடன் பார்த்தது..

 

வாயை மூடி நடு காட்டிற்கு கொண்டு சென்றவன் அவளை கீழே போட்டு கன்னம் எரிய இரு பக்கமும் சரமாரியாக அடிகளை இறக்க,வலியில் துடித்து போனாள் பெண்ணவள்…

 

கை கால்கள் அசைக்க கூட முடியாமல் கண்கள் சொருகி அவள் கீழே கிடக்க, எதிரில் நின்ற ஆடவனோ அவன் உடைகளை கலைந்து அரை நிர்வாணமாக ஆக்கி கொண்டு, அவளது மேல் சட்டையும் கலைந்து தூக்கி எரிந்தவன் அவள் மீது படர போக துடித்து விட்டாள் பேதை…

 

இப்போதே தன்னை மரணம் தழுவாதா என்று கண்களை இறுக்க மூடிக் கொண்டு இயலாமையின் கண்ணீர் வடித்தாள். இதோ அவளது பெண்மை களவு போக போவது தெரிந்து விட்டது இனிமேல் எதற்கு இந்த உயிர் … என்று பல்லை கடித்து தன் வேதனையை எண்ண.. எங்கிருந்தோ வந்த அணில் கூட்டம் மொத்தமும் அந்த ஆடவன் மீது ஏறி சரமாரியாக கடிக்க இதை எதிர்பாராதவன் அவர்களை எல்லாம் தள்ளி விட்டு அவள் மேல் படர போக ஒரே மிதியில் தூக்கி எறியப் பட்டான் .

 

கீழே விழுந்து வலியில் முகம் சுருக்கி பார்க்க , எதிரில் கண்கள் சிவக்க நின்று கொண்டிருந்தான் தமிழ் மறவன்.. காலை அலுவலகம் வந்த பின்பு பதிவேட்டில் சாயாலியின் கையெப்பம் இருக்கிறதா என்று பரிசோதனை செய்ய, அவள் பெயருக்கு நேர் வெற்றிடமாக இருக்க அமைதியாக சென்று அறையில் அமர்ந்து கொண்டான்.. பொறுத்து பொறுத்து பார்க்க மதியத்திற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் ஏதோ மனம் ஊந்துதலில் காரை எடுத்து கொண்டு தோட்டத்தின் பக்கம் வர, அங்கும் அவள் இல்லை, ஒருவேளை அன்று சென்ற உச்சிக்கு சென்று விட்டாளோ என்று தோன்ற.. காரை கீழே நிறுத்தி விட்டு உச்சியை நோக்கி சென்று விட்டான்.

 

அப்போது தான் வர வழியில் அவள் கூடையும் அதில் சரிந்து கிடந்த தமிழ் காதலன் புத்தகமும் கண்களுக்கு தெரிய, எதோ தவறாக நடந்துள்ளது என்பது மனதிற்குள் மணி அடிக்க.. அணில் கூட்டத்தின் சத்தத்தில் தான் காட்டிற்குள் ஓடினான்.

 

அங்கு அவன் வந்த போதே சாயாலியின் சட்டையை கழற்றி ஏறியும் காட்சியை தான் பார்க்க நேர்ந்தது. ஒரு நிமிடம் அவன் ஐம்புலன்களும் வேலை நிறுத்தம் செய்ய அடுத்த நொடி அவளை நோக்கி ஓடி இருந்தான் தமிழ் மறவன்.

 

இதோ பறந்து சென்று விழுந்த அந்த ஆடவனை வெறி கொண்டவன் போல் அடித்தவன் அவனது தலையை பிடித்து மரத்தில் அடித்து அவனை ரத்த வெள்ளத்தில் மிதக்க விட்டவன் சாயாலியின் அருகில் ஓட அவளது குறை கோலம் கண்டு வேகமாக அவன் சட்டையை கழற்றி அவள் மீது போர்த்தி விட்டு அவளை கைகளில் தாங்கி கொண்டு காட்டை விட்டு வெளியே வந்தவன், அருகில் ஓடிய அருவி தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் அடித்து, அவளுக்கும் கொஞ்சம் நீரை குடிக்க கொடுக்க மெதுவாக கண் விழித்தாள் சாயாலி.

 

கண் விழித்த கணம் அவளது கரு விழிகளுக்குள் விழுந்தான் தமிழ் மறவன்,  அவனை பார்த்து சற்றே மனம் நிம்மதி அடைந்தாலும் அடுத்த நொடி பதட்டத்துடன் தன் உடலை பார்க்க மனம் துடித்து போனது.. ஆக இவன் முன் அரை குறை ஆடையில் இருந்திருக்கிறோம் என்பது தெளிவாக புரிந்தது, ஆனால் தன் பெண்மைக்கு எந்த கலங்கமும் வரவில்லை என்பதை அவளால் நன்கு உணர முடிந்தது.

 

மெதுவாக அவள் கை பிடித்து எழுப்பியவன் ,” முதல்ல சட்டையை போடு” என்றான் அதிகப்படியான சினத்தில்.. அவன் திரும்பி கொள்ள அவனுடைய சட்டையை எடுத்து அணிந்து கொண்டாள்… கூடவே அவளது கூடையையும் தமிழ் காதலன் புத்தகங்களையும் எடுத்து கொண்டாள்.

 

“போகலாம் ” என்று தமிழ் மறவன் முன்னே நடக்க , அவனுக்கே முன்னேறி அவள் நடந்தாள். ” ஒரு வார்த்தை நன்றி சொல்லுறாளா , திமிரு பிடிச்சவ” என்று கருவி கொண்டே அவள் பின்னே நடந்தான். அவனுக்கு வந்த கோபத்தில் அவள் கன்னத்தில் நான்கு அடிகளை இறக்க தான் கை பரபரத்தது, ஆனால் ஏற்கனவே அந்த ஆடவனின் கைகளில் அடிவாங்கி அவள் கன்னங்கள் சிவந்து இருப்பதை ஆடவனின் விழிகள் கவனிக்க தவறவில்லை.

 

இதோ கீழே வந்து அந்த பெண்ணின் மார்பில் சாய்ந்து அழுது கொண்டிருக்கிறாள்.

 

“என்ன நடந்துச்சு சாயா ” என்று அவள் தலையை வருடி கொண்டு கேட்க.. அவள் மேலும் மௌனம் காக்கவும் , ” எப்படி சொல்லுவா அதான் இந்த கோலத்துல வந்து நிண்டுகிட்டு இருக்காளே , பெரிய இடம் அதுனால அந்த அளவுக்கு பெருசா போகாது ” என்று பக்கத்து தோட்டத்தில் வேலை பார்க்கும் ஆட்கள் கேலி செய்து விட்டு போக பல்லை கடித்தான் தமிழ் மறவன்.

 

‘இவ்வளவு நடக்குது இவ வாயை திறந்தா  என்ன ? ‘ என்று மனதிற்குள் வெம்பியவன்..

 

“மேலே என்ன நடந்துச்சுன்னு வாயை திறந்து சொல்ல மாட்டியா , இங்க எல்லாம் என்ன பேசுறாங்கன்னு உனக்கு புரியுதா இல்லையா ?” என்று பொறுமையை சுத்தமாக காற்றில் பறக்க விட்டவன் உச்ச டெசிபலில் கத்தி விட…

 

” ஏன்னுங்க தம்பி எப்படி அந்த புள்ளை சொல்லும் , நீங்கதான் நடந்ததை சொல்லனும் ” என்று அங்கிருந்தவர்கள் கூற,

 

” ஏன் மகாராணி சொல்ல மாட்டாங்களா” என்று கடுப்பாக கேட்டவன் அவளை அக்னி பார்வை பார்க்க..

 

” அட என்ன தம்பி ஊமை பிள்ளை எப்படி வாயை திறந்து பேசும் ” என்று ஒருவர் சாயாலியின் உண்மை முகத்தை கூறி விட , அதிர்ந்து போனவன் ” வாட்ட்ட்ட்ட…..” என்று கண்களை விரித்தவனின் விழிகள் முழுவதும் சாயாலியை தான் பார்த்திருந்தது.

 

சனா💖

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
9
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்