Loading

நிறம் 4

 

ஷ்யாம் வர்ஷினியை முறைத்துக் கொண்டே, “அப்படி ஒருத்தர் இருந்தா தான விசாரிக்க முடியும்?” என்று சொல்லி முடித்த மறுநிமிடம் வாயில்புறமிருந்து, “அப்படி ஒருத்தன் தான் இங்க இருக்கேனே.” என்ற குரல் ஒலிக்க, அனைவரின் கண்களும் குரல் வந்த திசை நோக்கி பயணித்தன.

 

அங்கு கதவின் ஒருபுறம் சாய்ந்தவாறு நின்றிருந்தவனைக் கண்டவர்கள் அவன் யாரென்று பார்க்க, அவனோ லேசாக செருமியபடி, “என் பேரு இந்திரஜித். நீங்க இப்போ யாரைப் பத்தி பேசிட்டு இருந்தீங்களோ, அந்த ‘இந்தர்’  நானே தான்.” என்று கூறினான்.

 

அதைக் கேட்டவர்களில் யார் அதிகம் அதிர்ந்தது என்று தான் தெரியவில்லை. ஏனெனில், அவனிருந்த நிலை அப்படி!

 

பின்கழுத்து வரை அடர்த்தியாக (!!!) வளர்ந்திருந்த முடியை சிறு ‘ரப்பர் பேன்டிற்குள்’ அடக்கி வைத்திருந்தான். ‘நோ ஷேவ் நவம்பர்’ போல பல நாட்கள் கத்தி படாத தாடி, முகத்தை பாதி மறைத்த கருநிற கூலிங் கிளாஸ், சாம்பல் நிற கார்கோ பேண்ட், வெள்ளை நிற மேற்சட்டை அதில் முதலிரண்டு பொத்தான்கள் தங்களின் வேலையை சரிவர செய்யாமல் போனதால், அவர்களின் கவனத்தில் பதிந்த அவனின் பரந்து விரிந்த மார்பு… இப்படி தான் நின்றிருந்தான் அவன், தன்னை ‘இந்திரஜித்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டவன்.

 

இதில் வர்ஷினியின் நிலை தான் ‘அந்தோ பரிதாபம்!!!’ என்பது போல இருந்தது. அவளின் கற்பனை நாயகன் அளவிற்கு இல்லையென்றாலும் ஏதோ சுமாரான அளவில் ஒருவனை எதிர்பார்த்திருந்தவள், இப்படி ஒருவனைக் கண்டதும் திறந்த வாய் மூடாமல் அவனை வெறித்திருந்தாள்.

 

அகிலும் கிட்டத்தட்ட வர்ஷினியின் நிலையில் தான் இருந்தான். ‘இவன் என்ன காட்டுல இருந்த அப்படியே வந்தவன் மாதிரி இருக்கான். இவனை லவர்னு சொன்னா நம்புவாங்களா?’ என்று யோசித்துக் கொண்டிருக்க, மற்ற இரு காவலர்களும் அவனின் யோசனையை மெய்ப்பிப்பது போலவே இந்திரஜித்தை மேலிருந்து கீழாக பார்த்திருந்தனர்.

 

இரு நொடிகள் அங்கு அமைதி நிலவ, அதற்கு மேல் பொறுக்க இயலாதவனாக, “பேபி, உனக்கு ஒன்னுமில்லையே?” என்று அருகில் வந்தவன், “என்ன பேபி, இப்படி திகைச்சு போய் பார்த்துட்டு இருக்க? ஓஹ், நான் இவ்ளோ நேரம் எங்க போனேன், அங்கயிருந்து எப்படி தப்பிச்சேன்னு பார்க்குறியா?” என்று கேள்வி கேட்டுக்கொண்டே அவளின் கைகளைப் பற்றி அழுத்தினான்.

 

அந்த அழுத்தலில் தான் சுயத்தை அடைந்தவள், தன்னருகே நின்றிருந்தவனை பார்த்து எச்சிலை விழுங்கி, ஒரு முறை அந்த அறைக்குள் இருந்தவர்களை சுற்றிப் பார்த்தாள்.

 

அனைவரும் அவர்கள் இருவரின் மேலிருந்த கவனத்தை நொடி பொழுது கூட சிதற விடாமல் பார்த்திருப்பதை உணர்ந்தவள், கூடவே அகிலின் எச்சரிக்கைப் பார்வையையும் பார்த்தவள், மெல்ல தன் முகபாவத்தை மாற்றிக் கொண்டாள்.

 

இந்திரஜித் கூறிய முதல் வரி அவளின் மூளையை எட்டவில்லை என்றாலும் அவனின் இறுதி வரை எட்டியிருக்க, ‘நல்ல வேளை அவனே எடுத்துக் கொடுத்துட்டான்!’ என்று நினைத்துக் கொண்டவளாக, ‘ஆம்’ என்னும் விதமாக தலையை ஆட்டினாள்.

 

“ச்சு பேபி, இதுக்கு போய் பயப்படலாமா? நான் உன்ன அவ்ளோ சீக்கிரம் விட்டுட்டு போயிடுவேனா?” என்று தேர்ந்த காதலன் போல அவளின் கன்னத்தை பற்றிக் கொண்டு உருக்கமாக பேச, உருக வேண்டியவளோ, ‘அடேய் பரதேசி, கைய எடுத்துட்டு பேசு டா.’ என்று மானாவாரியாக அவனைத் திட்டிக் கொண்டிருந்தாள், மனதிற்குள் தான்!

 

‘என்னடா நடக்குது இங்க?’ என்ற பாவனை தான் மற்ற மூவரிடத்திலும்.

 

சற்று நேரத்திற்கு மேல் சகிக்க முடியாதவளாக, அவனின் கைகளை விலக்கி விட்டு, அதாவது விலக்கி விடுவது வெளியில் தெரியாதவாறு விலக்கி விட்டுக் கொண்டே, “என்னாச்சு இந்தர்? அங்க என்ன நடந்துச்சு?” என்று பேசிக் கொண்டிருக்கும்போது தான், ‘அய்யயோ இவனுக்கு எங்க ஸ்க்ரீன்-ப்ளே தெரியுமா தெரியாதான்னு தெரியலையே? எதுக்கும் நாம ஆரம்பிச்சு வைப்போம். இந்த தாடி அதை வச்சு ஏதாவது சமாளிக்கிறானான்னு பார்ப்போம்.’ என்று சிந்தித்தவள், இந்திரஜித்திற்கு எடுத்துக் கொடுத்தாள்.

 

“நீயும் அந்த ரியாஸும் சண்டைப் போட்டுட்டு இருந்தப்போ, குறுக்க வந்து தடுக்க வந்த என்னை அந்த ரியாஸ் கீழ தள்ளிவிட்டதால மயங்கிட்டேன். அடுத்து என்ன நடந்துச்சு இந்தர்?” என்று தன் நடிப்புத் திறமையை வர்ஷினி வெளிப்படுத்த, “கூல் பேபி. நான் உனக்கு எல்லாமே சொல்றேன். ஆனா, அதுக்கு முன்னாடி ஜஸ்ட் ரிலாக்ஸ்.” என்று அவளை நன்கு சாய்ந்தமர வைத்தான்.

 

‘ஓஹ், பயபுள்ளைக்கு யோசிக்க டைம் வேணும் போல. பரவாயில்ல, என்ன தான் பார்க்க ஒரு மாதிரி இருந்தாலும், நல்ல ப்ரெஷன்ஸ் ஆஃப் மைண்ட் இருக்கு. ஆனாலும், அந்த பிரதீப் மலமாடு இப்படி ஒருத்தனை என்னோட லவரா அனுப்பியிருக்க வேணாம்!’ என்று வர்ஷினி மனதோடு புலம்பினாள்.

 

அப்போது தான் சுற்றியிருந்தவர்களை கவனிப்பது போல பார்த்த இந்திரஜித், “சாரி சார். உங்க விசாரணையில குறுக்க வந்துட்டேனா?” என்று கேட்டான்.

 

‘என்னமா நடிக்கிறான் டா?’ என்று அகிலே வியக்கும் அளவிற்கு இருந்தது அந்த புதியவனின் செயல்கள்.

 

“ஹலோ மிஸ்டர். இந்திரஜித், நான் குணசேகரன் ஐ.ஜி.” என்று ஆரம்பித்தவர், சற்று முன்னர் வர்ஷினியிடம் கூறியதை அப்படியே வார்த்தை மாறாமல் இந்திரஜித்திடம் கூறினார்.

 

“சார், உங்க கடமை எனக்கு புரியுது. நாங்க கண்டிப்பா எங்களுக்கு தெரிஞ்ச விஷயங்களை உங்ககிட்ட சொல்றோம். ஆனா, அதுக்கு முன்னாடி வி நீட் சம் டைம் அலோன். நீங்க புரிஞ்சுப்பீங்கன்னு நம்புறேன்.” என்று அமைதியாக பேசினான் இந்திரஜித்.

 

“ஐ கேன் அண்டர்ஸ்டான்ட் மிஸ்டர். இந்திரஜித். ஒரு அரை மணி நேரம் கழிச்சு உங்க ரெண்டு பேரு கிட்டயும் விசாரிக்கிறோம்.” என்று அவர் எழுந்தார்.

 

ஷ்யாமோ இவ்வளவு நேரம் புதிதாக வந்தவனையே கூர்மையாக அளவிட்டுக் கொண்டிருந்தவன், குணசேகர் எழுந்ததும், “சார், ஆனா எனக்கு இவங்ககிட்ட கேட்க வேண்டிய கேள்வி இருக்கு.” என்றான்.

 

குணசேகர், ஏதோ கூற வருவதற்குள், “விடுங்க சார் அவரு கேட்கட்டும்.” என்றான் இந்திரஜித்.

 

புதியவனின் கிண்டலை கண்டுகொண்டாலும் அதைப் பற்றி எதுவும் வினவாமல் அவனின் கேள்வியைக் கேட்டான் ஷ்யாம். “நாங்க அந்த இடத்துல பார்த்தப்போ மிஸ். ஷீதல் மட்டும் தான் இருந்தாங்க. அப்போ நீங்க எங்க போயிருந்தீங்க? ஒரு வேளை அந்த விக்ரம் கும்பலோட நீங்க போயிருந்தீங்கன்னா எப்படி அவங்ககிட்ட இருந்து தப்பிச்சீங்க?” என்றான் ஷ்யாம், சற்றும் தன் பார்வையை மாற்றிக் கொள்ளாமல்.

 

“ஹுஃப், ஷீதல் சொன்ன மாதிரி எனக்கும் அந்த ரியாஸ், அதாவது விக்ரமோட நண்பரோட பையனுக்கும் சண்டை நடந்தது உண்மை தான். ஆனா, ரியாஸ் அடிச்சதுல ஷீதல் மயங்கி விழுந்ததும், எனக்கு நொடி நேரம் கவனக்குறைவு ஏற்பட, அந்த நேரம் என்னோட தலையில கம்பியால அடிச்சிட்டான் அந்த ரியாஸ். சரியா அந்த நேரம் தான் வெளிய துப்பாக்கி சத்தம் கேட்டுச்சு. பதட்டத்துல எல்லாரும் தப்பிச்சு வெளிய போக ட்ரை பண்ணப்போ, அரை மயக்கத்துல இருந்த என்னையும் வெளிய இழுத்துகிட்டு போயிட்டாங்க. ஆனா, ஷீதலை அங்க விட்டுட்டு போறோம்னு என் மனசு சொல்லிட்டே இருந்ததுல, அவங்களை எப்படியோ எதிர்த்து அங்கயிருந்து உள்ள வர முயற்சி செஞ்சுருக்கேன். ஆனா, வழில எதுலயோ மோதி கீழ விழுந்து மயங்கிட்டேன். முழிச்சு பார்க்குறப்போ தான் நான் மயங்கி விழுந்த இடம், அந்த கட்டிடத்துக்கு பின்னாடி இருந்த புதர்னு தெரிஞ்சுது.” என்று இந்திரஜித் கூறி இடைவெளி விட்டு நிறுத்த, ஷ்யாமோ அகிலை முறைத்தான்.

 

“அந்த இடம் முழுக்க செக் பண்ண சொன்னேனே.” என்று வார்த்தைகளை கடித்துத் துப்பினான் ஷ்யாம்.

 

“சார், முழுசா செக் பண்ணோம் சார்…” என்று அகில் இழுக்க, ஷ்யாமின் பார்வையோ இந்திரஜித்தை சுட்டிக் காட்டி, ‘நீங்க செக் பண்ண லட்சணம்’ என்ற பொருளில் அகிலை பொசுக்கியது.

 

அகிலோ இந்திரஜித்தை நோக்கி, ‘நீ ஏன்ய்யா பாதில ப்ரேக் விடுற?’ என்பதை போல பார்க்க, அதை உணர்ந்து கொண்டானோ என்னவோ, இந்திரஜித் தன் பேச்சை மீண்டும் ஆரம்பித்தான்.

 

“திரும்ப அந்த கட்டிடத்துக்கு உள்ள போக முயற்சி செஞ்சப்போ தான், நைட் நடந்தது தெரியவர, ஷீதல் எங்கன்னு தெரியாம, அடுத்து என்ன பண்ணன்னு புரியாம முழிச்சுட்டு இருந்தேன். அப்போ தான், அங்க பிடிபட்ட ரவுடி கும்பலை இங்க சேர்த்திருக்கிறதா இன்ஃபர்மேஷன் கிடைச்சது. ஷீதலுக்கும் அடிப்பட்டதால இங்க சேர்த்திருக்கலாம்னு ஒரு யூகத்துல தான் இங்க வந்தேன். ஹாஸ்பிடலுக்குள்ள விடமாட்டேன்னு சொன்னவங்களை, பைக்ல ஆக்சிடென்ட்னு சமாளிச்சு உள்ள வந்தப்போ, இந்த ரூம்ல ஒரு பொண்ணு இருக்கிறதாவும் அந்த ரவுடி கும்பலோட இந்த பெண்ணையும் கூட்டிட்டு வந்ததாவும் ரெண்டு போலீஸ் பேசிக்கிட்டதை கேட்டு இங்க வந்தேன்.” என்று முடித்தான் இந்திரஜித்.

 

‘ஐயோ பாவம், அந்த ரெண்டு போலீஸ் யாருன்னு தெரியல. பாவம் இன்னைக்கு இந்த மனுஷனுகிட்ட மாட்டிட்டு முழிக்கப் போறாங்க.’ என்று அவர்களுக்காக கவலைப்பட்டான் அகில்.

 

மீண்டும் ஏதோ கேட்க வந்த ஷ்யாமை அழைத்த குணசேகர், “வெளிய காத்திட்டு இருக்க பிரெஸ்ஸுக்கு இங்க மிஸ். ஷீதல் பத்தின நியூஸ் தெரியாம பார்த்துக்குறது உங்க வேலை. பிரெஸ்ஸுக்கு பதில் சொல்லிட்டு, அப்படியே டி.ஜி.பிக்கு ரிப்போர்ட் பண்ணிட்டு இவங்களை விசாரிங்க ஷ்யாம்.” என்று கட்டளையிட்டுவிட்டு செல்ல, வேறு வழியில்லாமல் அவரைப் பின்தொடர்ந்தான் ஷ்யாம்.

 

செல்லும்போது இந்தரையும் வர்ஷினியையும் பார்த்துவிட்டே சென்றான். அகிலிடமும் இருவரையும் பார்த்துக்கொள்ளுமாறு சைகை செய்தான்.

 

ஷ்யாம் சென்ற பின்னர், அங்கிருந்த தண்ணீர் போத்தலில் உள்ள தண்ணீர் முழுவதையும் ஒரே மூச்சாக குடித்து முடித்த பின்னர் தான் நிதானத்திற்கு வந்தான் அகில்.

 

அந்த சூழலுக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லாதது போலவே நின்று கொண்டிருந்தவனை பார்த்து, “அடேய் வரதுன்னா சொல்லிட்டு வரமாட்டிங்களா? கொஞ்சம் ப்ரீபேர்ட்டா இருந்துருப்போம்ல. இதுல என்னை வேற அவன்கிட்ட மாட்டிவிடுற.” என்று புலம்ப ஆரம்பித்தவனை சிறிதும் கண்டுகொள்ளவில்லை அந்த புதியவன்.

 

வர்ஷினியின் மனமோ ‘இனி என்ன?’ என்பதிலேயே தேங்கி நின்றதால், இந்த காட்சி அவள் கண்ணில் பட்டாலும், கருத்தில் பதியவில்லை.

 

“க்கும், ஆமா, நீ வரத சொல்லவே இல்ல. சரி அடுத்து என்ன பிளான்னு சொன்னாங்களா?” என்று சிறிது பரபரப்புடன் அகில் வினவ, அந்த புதியவனோ, “எஸ்கேப்” என்று ஒரு வார்த்தையில் முடித்துக் கொண்டான்.

 

அப்போது தான் நிகழ்விற்கு வந்தவளை சென்றடைந்தது அந்த வார்த்தை. அகிலும் வர்ஷினியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள, அந்த புதியவனோ அந்த அறையின் ஜன்னலை அடைந்து வெளியே ஆராய்ந்தான்.

 

*****

 

அதே சமயம், வெளியில் சென்ற ஷ்யாமை ஊடகவியலாளர்கள் சூழ்ந்து கொண்டனர்.

 

“சார், உள்ள விக்ரமோட ஆளுங்கன்னு பிடிச்சு வச்சுருக்கீங்களே, அவங்க உண்மைலேயே விக்ரமோட ஆளுங்க தானா?”

 

“இதெல்லாம் வெறும் கண்துடைப்புன்னு சொல்றாங்களே, அப்படியா சார்?”

 

“நீங்களும் ஒவ்வொரு முறையும் விக்ரமை அரெஸ்ட் பண்ண போறீங்கன்னு சொல்லிட்டே தான் இருக்கீங்க. இன்னைக்கு வரைக்கும் பிடிச்ச பாடில்லை!” என்று பல கேள்விகள் அவனை நோக்கி வந்த வண்ணம் இருந்தன.

 

ஏற்கனவே, தன்னுடைய விசாரணை மறுக்கப்பட்டதில் கோபத்தில் இருந்தவனிற்கு இத்தகைய கேள்விகள் மேலும் கோபத்தையே அளித்தது.

 

“விசாரணை நடந்துட்டு இருக்கு. எதுவா இருந்தாலும் எங்க விசாரணை முடிஞ்சதுக்கு அப்பறம் சொல்றோம்.” என்றான் ஷ்யாம் இழுத்துப் பிடித்த பொறுமையுடன்.

 

“என்ன சார் இவ்ளோ அசால்ட்டா பதில் சொல்றீங்க?” என்று சிலர் முணுமுணுக்க, கூட்டத்தில் ஒருவர், “இதே மெத்தன போக்கை தான் விசாரணைலையும் கடைபிடிச்சுருப்பாங்க.” என்று சற்று சத்தமாகவே கூறிவிட்டார்.

 

கோபத்தின் எல்லையில் நின்றிருந்தவனை, அதற்குள் நொடியினில் தள்ளியிருந்தது அந்த பத்திரிக்கையாளரின் பேச்சு. ஒரு பெருமூச்சுடன் ஏதோ கூற வந்தவனை முந்திக் கொண்டது அவளின் குரல்!

 

“ப்ளீஸ் பீ ரெஸ்பான்சிபில். நீங்க மாறி மாறி குற்றம் சொல்றதுக்கு இந்த பிரெஸ் மீட் இடமில்ல. இங்க எல்லாருமே மக்களுக்காக தான் உழைக்கிறோம். சோ தேவையில்லாம சண்டை போட்டு நேரத்தை வேஸ்ட் பண்ணாம, வந்த வேலையை பார்க்கலாம்.” – நிறுத்தி நிதானமாக, அதே சமயம் அழுத்தமாக ஒலித்தது அவளின் குரல்.

 

ஷ்யாம் அவளின் குரலை வைத்தே அவளை அடையாளம் கண்டுகொண்டான், முதல் நாள் தன்னிடம் கேள்வி கேட்ட பெண்ணவளை.

 

“ம்ம்ம் இண்ட்ரெஸ்டிங்!” – அவளின் பேச்சைக் கேட்டவனின் வாய் அந்நொடியே அவளிற்கு மௌனமாக பாராட்டு பாத்திரம் வாசிக்க, இதயமோ அவளை இதற்கு முன்னரே பார்த்திருக்கிறான் என்று அடித்துக் கூற, மூளை எங்கே பார்த்திருக்கிறான் என்று சிந்திக்க ஆரம்பித்தது.

 

ஷ்யாம் அவனின் சிந்தனையில் மூழ்க, அங்கு அவளிற்கு ஆதரவாக சிலர், எதிராக சிலர் என்று சலசலப்பு ஏற்பட, அந்த கூட்டத்தைக் கலைக்க முற்பட்டனர் காவலர்கள்.

 

அப்போது எதேச்சையாக அவளின் பார்வை கனநேரம் அவனைத் தீண்டிச் செல்ல, அந்த பார்வை சொன்ன செய்தியில் சற்று அதிர்ந்து தான் போனான் ஷ்யாம். இனிய அதிர்ச்சியோ?

 

“சோடாபுட்டி!” என்று அவன் முணுமுணுக்க, அவனின் முணுமுணுப்பு அவளை எட்டியது போலும், மீண்டும் ஒருமுறை பார்வையை இவன் புறம் வீசிவிட்டு சென்றாள்.

 

*****

 

“இது தான் கரெக்ட் டைம். சீக்கிரம் நாம இங்கயிருந்து தப்பிக்கணும்.” என்று வர்ஷினியை பார்த்து கூறியவன், கீழே செல்வதற்கு எதுவாக ஏதேனும் உபகரணம் கிடைக்குமா என்று பார்த்தான்.

 

செய்தி சேகரிக்கவென்று அந்த மருத்துவமனையின் முன்பக்கம் கூட்டம் கூடியதால், வர்ஷினியின் அறை இருந்த பின்புறம் ஆளரவமின்றி காட்சியளித்தது.

 

புதியவனின் செயல்களை பார்த்துக் கொண்டிருந்த வர்ஷினி தான் அதிர்ந்தாள். ‘என்ன இந்த ஆள் விட்டா கீழ தள்ளிவிட்டுடுவான் போல!’ என்று பாவமாக அகிலை பார்க்க அவனும் அந்த புதியவனை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அந்த அறையிலிருந்த ஜன்னல்களில் தொங்கவிடப்பட்டிருந்த திரைசீலைகளை உருவியவன், அதன் கடினத்தன்மையை சோதித்துப் பார்த்து அவற்றை இணைத்தான்.

 

“ஹலோ பார்த்தது போதும், வா போலாம்.” என்றான் வர்ஷினியை பார்த்து.

 

அவனின் வேகத்தில் மலைத்த அகிலோ, “ஹே வெயிட் வெயிட், ஒரு போலீஸ் முன்னாடியே தப்பிச்சு போக பிளான் போடுற.” என்று சொல்லி முடித்ததும் அவனை மேலிருந்து கீழ் பார்த்த புதியவனின் பார்வையிலிருந்த எள்ளலை சரியாக புரிந்து கொண்ட அகில், “க்கும், சரி சரி, அந்த கஞ்சி சட்டை கேட்டா, என்னை அடிச்சுட்டு நீங்க ரெண்டு பேரும் தப்பிச்சுட்டீங்கன்னு சொல்றேன்.” என்றான் சமாளிக்கும் விதமாக.

 

“எதுக்கு பொய் சொல்லணும்?” என்று அந்த புதியவனின் கேள்வியில் புரியாமல் யோசிக்கும் நொடி, அகிலின் மூக்கில் குத்தி அவன் கூறியதை உண்மையாக்கி இருந்தான்.

 

“அடப்பாவி, ஒரு போலீஸ்னு கூட பார்க்காம மேல கை வச்சுட்டானே.” என்று புலம்பியவனை கண்டு கொள்ளாமல், இத்தனை நேரம் நடந்ததை ‘ஆ’வென்று பார்த்துக் கொண்டிருந்தவளை அந்த ஜன்னலின் புறம் நகர்த்தினான் அவன்

 

“ம்ம்ம் இந்த துணியை பிடிச்சிட்டு கீழ இறங்கு.” என்று அவன் கூற, “என்ன கீழ இறங்கனுமா? என்னால முடியாது. என்னை என்ன ஒண்டர் உமன்னு நினைச்சியா?” என்று சிறுகுரலில் மறுத்து கூறியவளை முறைத்தவன், “நான் மட்டும் என்ன சூப்பர் மேனா, உன்னை தூக்கிட்டு கீழ இறங்க? ஒழுங்கா இறங்குறியா, இல்ல கீழ தள்ளிவிடவா?” என்றான்.

 

‘ச்சே, இந்த தாடி கேடி கீழ தள்ளிவிட்டாலும் விடுவான்.’ என்று மனதிற்குள் புலம்பியவள், மெல்ல எட்டிப்பார்த்தாள். உயரம் என்றாலே பயம் என்றிருப்பவளை துணியை பிடித்து கீழே இறங்கு என்றால் அவளும் என்ன செய்வாள்?

 

உதட்டைப் பிதுக்கியபடி பின்னால் திரும்ப, அங்கு அவளின் கவனத்தில் பட்ட அகிலை பாவமாகப் பார்த்தாள். அவனோ வலித்த மூக்கை கைகளால் பற்றியபடி அவளிற்கு இணையான பாவ முகத்துடன் நின்றிருந்தான்.

 

இருவரின் எதிர்வினையையும் கண்ட அந்த புதியவனோ தலையை இருபக்கமும் ஆட்டி ஏதோ முணுமுணுத்தவன், “உங்க அண்ணன் தங்கச்சி பாசத்தையெல்லாம் அப்பறம் வச்சுக்கோங்க. இப்போ சீக்கிரம் கீழ இறங்குற வழியை பாரு.” என்று அவளை அவசரப்படுத்தினான்.

 

“ஐயோ! எப்படி இறங்கப் போறேனோ? உன் பிள்ளையை நீ தான் காப்பாத்தனும் கடவுளே!” என்று முணுமுணுத்தவாறே கீழே இறங்கினாள்.

 

*****

 

மருத்துவமையிலிருந்து தன் வாகனத்தில் கிளம்பிச் சென்ற குணசேகரன், சிறிது தூரத்திலேயே, ஓட்டுநரை தனக்கான தேநீர் வாங்கிவரச் சொல்லி பணித்தவர், அவர் சென்றதும் தன் அலைபேசியில் குறிப்பிட்ட இலக்கத்தை அழுத்தினார்.

 

ஒவ்வொரு முறையும் அழைப்பு முழுதாக சென்று யாரும் எடுக்கப்படாமல் இருந்ததால், சற்று பதட்டத்தில் இருந்தார் குணசேகர்.

 

சரியாக மூன்றாவது அழைப்பின் இறுதியில் போனால் போகிறது என்று அதை ஏற்றிருந்தார் எதிர்புறம் இருந்தவர்.

 

அழைப்பை ஏற்றதும், ‘கண்டேன் சீதையை’ என்பதைப் போல, சம்பிரதாயமாகக் கூறப்படும் ‘ஹலோ’வைக் கூட விட்டுவிட்டு, “நீங்க அனுப்புன ஆள் வந்துட்டான்.” என்று கூறியிருந்தார் குணசேகர்.

 

“என்னய்யா உளர்ற? நானே நைட் அடிச்ச சரக்கோட போதையே தெளியாம இருக்கேன். இதுல ஆள் அனுப்புனேன்னு சொல்ற. பொண்ணுங்க சம்பந்தப்பட்ட தொழிலைக் கூட இப்போ விட்டாச்சு. இப்போ புதுசா ஆளுன்னு சொல்லிட்டு திரியுற.” என்று போதையில் தெளிவில்லாமல் ஏதேதோ பிதற்றினார் எதிரில் இருந்தவர்.

 

அவரின் பேச்சே அவர் கூறியதை உண்மையென்று எடுத்துக் கூற, ‘அப்போ அங்க வந்தது யாரு?’ என்று பதற்றத்தின் உச்சியை அடைந்தார் குணசேகர்.

 

அந்த சமயம் தேநீரைக் கொண்டு வந்த ஓட்டுநரிடம் மீண்டும் வண்டியை மருத்துவமனைக்கு விடச் சொன்னவரின் முகமோ கலக்கத்தின் பிடியில் இருந்தது.

 

*****

 

சில பல முயற்சிகளுக்கு பின்னர், அவனிடம் சில பல திட்டுக்களை பெற்று கொண்ட பின்னர்,  வெற்றிகரமாக (!!!) அந்த மருத்துவமனையிலிருந்து வெளியே வந்திருந்தனர் இருவரும்.

 

இத்தனை நேரம் பிடித்து வைத்திருந்த மூச்சை வெளியிட்டு தன்னைத் தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டாள் வர்ஷினி.

 

“தேங்க்ஸ், இனி நீ உன் வழில போகலாம். நான் என் வழில போறேன். ஓகே பை.” என்று கிளம்ப ஆயத்தமானவளின் கைகைளைப் பற்றியவன், “ஹலோ, எங்க போற? உன்னை இப்படி ஃப்ரீயா விடவா, இவ்ளோ ரிஸ்க் எடுத்துருக்கேன்? உன்னை வச்சு இன்னும் நிறைய சாதிக்க வேண்டியதிருக்கு. சோ நீயா அமைதியா கார்ல ஏறுனா, சேதாரம் இல்லாம தப்பிப்ப.” என்று மிரட்டினான் அவன்.

 

‘அய்யயோ அவனுங்க கிட்டயிருந்து தப்பிச்சு இவன்கிட்ட மாட்டிக்கிட்டேன் போலயே!’ என்று மனதினுள் பயந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “ஹே, என்ன ஓவரா பேசுற? நான் யாருன்னு தெரியுமா? எங்க அப்பா யாருன்னு தெரியுமா?” என்று சத்தமிட்டாள்.

 

“உன் அப்பனுக்காக தான் உன்னை கடத்துறதே. உள்ள போடி.” என்று அவளை அந்த கருநிற பொலிரோவிற்குள் தள்ளினான்.

 

‘எதே அப்பனுக்காக கடத்துறானா? அப்போ பிரதீப் அனுப்புன ஆள் இல்லயா இவன்? அய்யயோ அந்த ஆள் பேரை சொன்னா, பயந்துட்டு விட்டுடுவான்னு பார்த்தா, அவனுக்காக தான் கடத்துறேன்னு சொல்றானே. இப்போ அந்த ஆள் என் அப்பா இல்லைன்னு சொன்னா நம்புவானா? ஹுஹும், நிச்சயம் நம்ப மாட்டான். என் தலைவிதி இப்படி ஒவ்வொருத்தருக்கிட்டயா மாட்டிக்கணும்னு காட் ரைட்டிங் இன் மை ஹெட் போல!’ என்று புலம்பியபடி இருந்தாள் வர்ஷினி.

 

தன்னை வாகனத்திற்குள்ளே தள்ளியதிலிருந்து மற்றைய புறம் திரும்பாமல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு முணுமுணுத்துக் கொண்டே அமர்ந்திருந்தவள், ஏதோ சத்தம் கேட்க திரும்பிப் பார்த்தாள்.

 

அங்கு அமர்ந்திருந்தவனைக் கண்டு விழிகளை விரித்தவள் அவனை நோக்கி, “ஹே யாரு நீ? அந்த ரவுடி எங்க? நீ எப்போ கார்ல ஏறுன?” என்று கேள்விகளாக கேட்க, அவனோ அதற்கு பதில் சொல்ல விரும்பாதவனாக நேர்பார்வையுடன் வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தான் அவளின் இந்திரஜித்!

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்