Loading

நாட்கள் அதன் போக்கிற்கு நகர உதய் மற்றும் மகிழினிக்கிடையிலான இடைவெளியில் எந்த மாற்றமும் இல்லை. 

இருவரின் மனதிலும் காதல் குடியேறியிருந்த போதிலும் அதன் இருப்பினை இருவரும் வெளிகாட்டாமல் தமக்குள்ளேயே மறைத்து வைத்திருந்தனர்.

மஹிழினி உதய் வேறு யாரையோ விரும்புவதாக நினைத்திருக்க உதய்யோ எங்கே தன் காதலை சொன்னால் இப்போது இருக்கும் நட்பு உடைந்துவிடுமோ என்ற பயத்தில் அமைதியாக இருந்தான். 

இந்த கண்ணாம்பூச்சி ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வர உதய்யின் தந்தையே களத்தில் குதித்தார்.

அன்று காலை உதய்யின் அறைக்கதவை தட்டிய அவனின் அன்னை

“உதய் வேண்டுதலுக்காக கோவிலுக்கு போறாம். அப்பா உன்னை வேஷ்டி சட்டையில தயாராகி வரச்சொன்னாரு.” என்று உதய்யின் அன்னை கூற அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அவனும் வேறு ஏதும் கேட்காமல் கிளம்பி வந்தான்.

வழமையாக செல்லும் கோவிலுக்கு வந்ததும் அங்கு நின்றிருந்த முனீஸ்வரன் தம்பதிகள் மற்றும் மகிழினியின் அன்னை,மகிழினியை பார்த்தவனுக்கு ஏதோ புரிய சற்று பதட்டமானான்.

தன் அன்னையை நெருங்கிய உதய் அவர் காதில்

“மிஸ்டர். காலபைரவர் இப்போ எதுக்கு எல்லாரையும் இங்க வர வச்சிருக்காரு?” என்று கேட்க மதியழகியோ

“இல்லடா நாம வேண்டுதலுக்காக தான் இங்க வந்திருக்கோம்.” என்று மதியழகியோ தான் மனப்பாடம் செய்திருந்த வாக்கியத்தை அப்படியே ஒப்புவிக்க 

“இதை நான் நம்பமாட்டேன்னு உங்களுக்கு நல்லவா தெரியும். உண்மையை சொல்லுங்க.” என்று உதய் தன் அன்னையிடம் விசாரித்துக்கொண்டிருக்க

“அங்க என்ன பேச்சு இரண்டு பேருக்கும்? நல்ல நேரம் முடியிறதுக்கு முன்னாடி எல்லாம் முடிச்சாகனும்.” என்று காலபைரவர் சத்தம் போட மதியழகி இதை சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்டு உதய்யிடமிருந்து தப்பித்துக் கொண்டார்.

உதய் என்ன செய்வதென்ற யோசனையோடு தன் அன்னையோடு மற்றவர்கள் நின்றிருந்த இடத்திற்கு வந்தான்.

மறுபுறம் மகிழினியும் ஒரு வித பதட்டத்துடனேயே இருந்தாள். அவளுக்கு இந்த ஏற்பாட்டில் எந்த வித எதிர்ப்பும் இல்லாதபோதிலும் உதய்யை நினைத்தே அவள் மனம் வாடியது.

ஏற்கனவே அவன் அவளை காதலிப்பதாக கூறியதை வேறு யாரோ என்று அவள் நினைத்திருக்க இந்த ஏற்பாடு உதய்யின் காதலுக்கு தடையாகிடுமோ என்ற கவலை அவளுக்கு.

முனீஸ்வரன் தம்பதிகள் இந்த ஏற்பாட்டை பற்றி கூறியபோது மகிழினி முதலில் மறுத்தாள்.

“இல்ல அங்கிள். உதய் எனக்கு ஒரு நல்ல ப்ரெண்ட். அதை தாண்டி நானும் அவரும் வேறு எதையும் யோசிச்சதில்லை. இதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக வேண்டாம் அங்கிள்.”என்று மகிழினி மனதில் வேறொன்றை நினைத்துக்கொண்டு கூற வந்தனாவோ

“இங்க பாரு மகிமா. பெரியவங்க நாங்க சட்டுனு இந்த முடிவை எடுக்கல. எல்லாரும் கலந்து பேசி தான் இந்த முடிவை எடுத்திருக்கோம். உதய்யோட வீட்டு பெரியவங்க தான் இந்த பேச்சையே முதல்ல ஆரம்பிச்சாங்க. அதனால நீ எதை பத்தியும் கவலைப்படாமல் சந்தோஷமாக இரு.” என்று முனீஸ்வரன், அவளின் அன்னை, வந்தனாவென்று மாறி மாறி சமாதானம் கூற அதற்கு மேல் மறுக்கமுடியாது சரியென்று தலையாட்டியிருந்தாள்.

ஆனாலும் கூட உதய்யின் மனநிலை தெரிந்த பின்னேயே திருமணம் பற்றிய முடிவை எடுக்கவேண்டுமென்ற உறுதியோடிருந்தாள் மகிழினி.

இளசுகள் இருவரும் பதட்டத்தோடு நின்றிருக்க பெரியவர்களோ அது எதனையும் கண்டுகொள்ளாது நிச்சயதார்த்தத்திற்கு தேவையான வேலைகளை கவனித்துக்கொண்டிருந்தனர்.

சில விநாடிகளின் பின் இரு குடும்பத்தாரும் மூலஸ்தான தெய்வத்தை வணங்கிவிட்டு நிச்சயதார்த்த நிகழ்வினை அழைத்திருந்த சில முக்கிய உறவினர்களின் முன்னிலையில் நடத்தினர்.

அனைத்து நிகழ்வுகளும் நடந்து முடியும் வரை அமைதியாக இருந்த உதய், சடங்குகள் அனைத்தும் முடிந்ததும் மகிழினியோடு தனியாக பேசவேண்டுமென்று கூறி பெரியவர்கள் ஏதும் கூறும் முன்பே அவளை தனியே அழைத்து சென்றான். 

மகிழினியும் இதை எதிர்பார்த்திருந்ததால் இத்தனை நேரம் மனதில் ஓட்டிப்பார்த்திருந்த வாக்கியத்தை மீண்டும் நினைவுபடுத்தியபடியே உதய்யை பின் தொடர்ந்தாள்.

கோவிலின் மறுபுறம் வந்ததும் உதய்யே பேசத் தொடங்கினான்.

“சாரி மகி. கோவிலுக்கு வரும்வரை இப்படி ஒரு ஏற்பாடு நடந்திருக்குனு எனக்கு தெரியாது. எதையும் மறுத்து பேச முடியாத ஒரு இக்கட்டுல மாட்டிக்கிட்டேன்” என்று உதய் கூற

“எனக்கு புரியிது. எனக்கும் மறுப்பு சொல்ல காரணமில்லாமல் தான் அமைதியாக இருந்தேன்.” என்று மகிழினி வேறெதையோ மனதில் வைத்துக்கொண்டு கூற உதய்தான் அதனை தவறாக புரிந்துகொண்டான்.

“நான் வீட்டுல பேசுறேன் மகி. இன்னைக்கு நடந்த இந்த நிச்சயத்தால உன் மனசு காயப்பட்டிருந்தா ஐயம் எக்ஸ்ட்ரீம்லி சாரி. சீக்கிரமே நான் எல்லாத்தையும் சரி பண்ணுறேன்.”என்று அவன் பாட்டுக்கு பேசிக்கொண்டே போக மகிழினி 

“இல்லை நானே பேசுறேன். ஆனா நீங்களும் உங்க காதலை பத்தி வீட்டுல சொல்லனும்.” என்று மகிழினி சொல்ல உதய்யோ இப்போது விழித்தான்.

“அது மகி…” என்று அவன் எதை சொல்வதென்று புரியாமல் விழிக்க

“சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுவீங்கனு நம்புறேன்.” என்று அவள் உள்ளுக்குள் எழுந்த வலியை மறைத்துக்கொண்டு இதழில் புன்னகையோடு பேச உதய்க்கோ தலைசுற்றியது.

“மகி நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க. நான்” என்று உதய் விளக்கம் கொடுக்கும் முன்பே

“இல்ல உதய். நான் எதையும் தப்பா நினைக்கல. நீங்க ஏற்கனவே ஒரு பெண்ணை விரும்புறதாக சொன்னது எனக்கு நினைவில் இருக்கு. அது தெரிஞ்சும் நான் இந்த ஏற்பாட்டுக்குக்கு சம்மதிச்சது என்னோட தப்பு தான். உங்க சைட்ல இருந்து ஏதாவது செய்வீங்கனு தான் நான் அமைதியாக இருந்தேன். இப்போ நானே பேசுறேன்.” என்று மகிழினி உதய் பேசுவதற்கு வாய்ப்பே கொடுக்காமல் பேசிக்கொண்டே போக உதய்

“ஐயோ நான் விரும்புறதே உன் தான் மகி.” என்று கூற மகிழினிக்கு ஒரு நிமிடம் எதுவும் புரியவில்லை. 

“உதய் நீங்க.. நீங்க… இது விளையாடுற விஷயமில்லை.” என்றவளின் குரலில் ஒரு நடுக்கம் இருந்தது.

“நான் நிஜமாக தான் சொல்லுறேன். நான் விரும்புற பொண்ணு நீ தான். இது எங்க வீட்டாட்களுக்கும் தெரியும். அது தெரிஞ்சு தான் இந்த ஏற்பாடு. ஆனா இதுல உன்னோட விருப்பத்தை கேட்காமல் அவங்களே இந்த ஏற்பாட்டை செஞ்சிட்டாங்க.” என்று உதய் தாழ்ந்த குரலில் சொல்ல மகியோ என்ன பேசுவதென்று தெரியாமல் வாயடைத்து போய் நின்றிருந்தாள்.

இத்தனை நேரம் அவள் மனதை வதைத்த வேதனையும் ஏமாற்றமும் உதய்யின் அந்த வார்த்தைகளால் தன் இருப்பிடம் மறந்து காணாமல் போனது.

அது அவளின் விழிகளில் கண்ணீராய் வெளிப்பட அதற்கான உண்மை காரணம் அறியாது உதய் பதறினான்.

“ஹே சாரி மகி. அப்பா இப்படி ஒரு ஏற்பாட்டை செய்வாருனு எதிர்பார்க்கல. இங்க வரும் வரைக்கும் கூட எனக்கு இதுபற்றி எதுவுமே தெரியாது. அப்படி தெரிஞ்சிருந்தா பாதி வழியிலேயே இறங்கி ஓடியிருப்பேன்.” என்று உதய் சொல்ல சட்டென்று சிரித்துவிட்டாள் மகிழினி.

தன் கன்னத்தில் பாதியை ஆக்கிரமிக்க தயாராகிய கண்ணீரை துடைத்துக்கொண்டவள்

“அப்போ முன்னாடியே தெரிஞ்சிருந்தா இந்த நிச்சயத்துக்கே வந்திருக்க மாட்டீங்க? ” என்று மகிழினி உதய்யை வம்பிழுக்கும் நோக்கத்துடன் கேட்க

“நிச்சயம் வந்து உன்னை இப்படி கஷ்டப்படுத்தியிருக்கமாட்டேன்.” என்று உதய் அவளின் கேலியை புரிந்துகொள்ளாமல் குற்றவுணர்ச்சியுடன் பதில் சொல்ல

“நான் கஷ்டப்பட்டேன்னு உங்களுக்கு யாரு சொன்னா?” என்றவளின் குரலில் இப்போது கேலி அளவுக்கதிகமாகவே இருக்க

“நீ இப்போ…” என்று ஏதோ பதில் கூறத்தொடங்கியவனுக்கு மகிழினியின் பேச்சில் தெரிந்த மாற்றம் மண்டையில் உரைக்க அவளை நேருக்கு நேர் பார்த்தவனுக்கு அப்போது தான் அவளின் விழிகளிலும் இதழ்களிலும் இருந்த குறும்புத்தனம் புரிந்தது.

அதனை எப்போதும் போலல்லாது இப்போது சரியாக புரிந்து கொண்டவன் மனதில் எழுந்த ஆனந்த படபடப்பினை அடக்கியபடி

“மகி உனக்கும் இந்த ஏற்பாட்டுல…” என்று அவன் வார்த்தைகளை இழுக்க அதற்கு கண்களாலே பதில் கூறியவளின் பதிலில் துள்ளிக்குதித்து தன் மகிழிச்சியை தெரியப்படுத்தினான் உதய்.

அவனின் உற்சாகத்துள்ளலை கண்டு மெல்ல சிரித்தவளின் கைபற்றியவன் 

“மகி நான் இப்போ எவ்வளவு சந்தோஷமாக இருக்கேன்னு வார்த்தைகளால் சொல்லமுடியாது. இப்படியொரு நாள் வராதானு எத்தனை நாள் ஏங்கியிருக்கேன் தெரியுமா?” என்றவனை இடைமறித்தாள் மகிழினி.

“அன்னைக்கு கார்ல நீங்க விரும்புற பொண்ணு நான் தான்னு சொல்லியிருந்தா இந்த நாள் எப்பவோ வந்திருக்கும்.” என்று கூற

“அந்த நேரத்துல நீ தப்பா நினைச்சிருவியோங்கிற பயம் மட்டும் தான் மனசுல இருந்துச்சு. அதனால தான் சொல்ல வந்ததை பாதியோட நிறுத்திட்டேன்.” என்று உதய் தயங்கித் தயங்கி சொல்ல மகிழினிக்கு அவனின் நிலை புரிந்தது.

“சரி நடந்ததெல்லாம் போகட்டும். நான் ரொம்ப நாளாகவே உங்ககிட்ட ஒன்னு கேட்கனும்னு நினைச்சிருந்தேன். என்னை முதல் முதலாக எப்போ பார்த்தீங்க?” என்று கேட்க

“அந்த பர்த்டே பார்ட்டியில தான்.” என்று உதய் சொல்ல

“எந்த பர்த்டே பார்ட்டி?” என்று மகிழினி கேட்க முதன் முதலில் அவளை பார்த்த சந்தர்ப்பத்தை விவரித்தான்.

“ஹே அது நீங்க தான். உங்களை எங்கேயோ பார்த்த ஞாபகம் இருக்கு. ஆனா எங்கன்னு தெரியல அப்போ. மலர்கிட்ட கேட்டப்போ அவளும் நீங்க தான் அவளை தேடி வந்ததாக சொன்னா. அவளுக்கும் எந்த விவரமும் தெரியல. எப்படி என்னை கண்டுபிடிச்சீங்க?” என்று மகிழினி ஆர்வத்தோடு கேட்க தான் அவளை பற்றி தெரிந்து கொண்டது முதற்கொண்டு அனைத்தையும் கூறினான் உதய். அவன் கூறியவற்றை கேட்டு வாயடைத்துப்போனவள்

“ஒரு முறை பார்த்த பொண்ணுக்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டீங்க?” என்று அவள் ஆச்சர்யத்துடன் கேட்க

“ஒரு முறை பார்த்திருந்தாலும் பல நாள் கனவுல வந்து என்னை தொல்லை செய்த பொண்ணுக்காக தான் இவ்வளவும் செய்தேன்.” என்று அவன் குறும்புத்தனத்துடன் கூற

“அப்போ தொல்லை பண்ணதால தேடி வந்தீங்க? இல்லைனா வந்திருக்கமாட்டீங்க?” என்று மகிழினி போலியான கோபத்துடன் கேட்க

“இல்லை.” என்று உதய்யும் அதே கேலியை தொடர

“ஓ அப்படியா அப்போ ப்ரேக்கப் பண்ணிக்கலாம். தொல்லைனு சொல்லிட்டு தேடி வரவங்க எல்லாம் எனக்கு வேணாம்.” என்று இப்போது மகிழினி முறுக்கிக்கொள்ள

“ஹேய் என்ன இன்னும் யெஸ் சொல்லி ஐந்து நிமிஷம் கூட ஆகல. அதுக்குள்ள ப்ரேக்கப்னு சொல்லுறியே மா. என்னம்மா நீங்க இப்படி பண்ணுறீங்களேமா?” என்று அவன் இப்போது போலியாக புலம்ப

“மொதல்ல போய் எப்படி லவ் பண்ணுறதுனு கத்துக்கிட்டு வாங்க. அப்புறம் இந்த ப்ரேக்கப்பை ப்ரேக் பண்ணுறதா கண்டினியூ பண்ணாறதானு கண்சிடர் பண்ணுறேன்.” என்று மகிழினி மீண்டும் முறுக்கிக்கொள்ள 

“அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல மகிழினி.” என்று ஒரு குரல் கேட்க இருவரும் குரல் வந்த திசையை திரும்பி பார்த்தனர்.

அங்கே சமுத்ராவும் ஷாத்விக்கும் அவர்களை நோக்கி வந்துக்கொண்டிருந்தனர்.

“ஹே சமுத்ரா நீயும் வந்திருக்கியா? வாங்க ப்ரோ.” என்று உதய் வரவேற்க மகிழினியும் இருவரையும் வரவேற்றாள்.

இருவரும் சமுத்ராவை மாறி மாறி நலம் விசாரித்தபின் சமுத்ரா ஷாத்விக்கை பார்க்க அவன் தன் பான்ட் பாக்கெட்டிலிருந்த அந்த சிறிய பெட்டியை எடுத்து சமுத்ராவிடம் கொடுத்தாள்.

உதய்யும் மகிழினியும் என்னவென்பது போல் பார்க்க

“உதய்யோட உடன்பிறவாத தங்கச்சிங்கிற முறையில ஒரு சின்ன கிப்ட். இரண்டு பேருக்கும் பிடிக்கும்னு நம்புறேன்.” என்று சமுத்ரா புன்னகையுடன் கூறியபடி அந்த பெட்டியை திறந்து காட்ட அதில் மகிழினி மற்றும் உதய்யின் முதல் எழுத்து பொறிக்கப்பட்டு இரண்டு மோதிரங்கள் இருக்க அதனை எடுத்து கொடுத்து இருவரையும் மோதிரம் மாற்றிக்கொள்ளச்சொன்னாள் சமுத்ரா.

அவளின் விருப்பத்திற்கிணங்க உதய்யும் மகிழினியும் செய்ய மீண்டும் ஒருமுறை இருவருக்கும் சமுத்ராவும் ஷாத்விக்கும் வாழ்த்து சொல்லினர்.

பின் சற்று நேரத்திலேயே அனைவரும் கிளம்பி மதிய உணவிற்காக ஹோட்டலுக்கு கிளம்பினர்.

மதிய உணவை ஜோராக முடித்துவிட்டு சமுத்ராவும் ஷாத்விக்கும் வரும் வழியில் சமுத்ரா ஷாத்விக்கிடம் அந்த கேள்வியை கேட்டாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment