

ரொம்ப பிடிவாதம் பிடிச்சுதான் வண்டி வாங்கினா .ஆனா அவளுக்கு ஏதாவது அடிபட்டுடுன்னு பயந்து கிட்டே அவளை நான் வண்டி கூட ஓட்ட விட்டதே இல்லை. கண்ணுக்குள்ள வச்சு
அப்டி வளர்த்த என் கண்மணியை அன்னிக்கு என் கண் முன்னாடி தூக்கிட்டு போனான்.”
முகத்தில், தலையில் அடித்துக் கொண்டு கதறினார். அதிபனின் காரில்தான் திரும்பி வரும்போது மரையாதையுடனே அழைத்து வரப்பட்டாள்.
அனால் அவள் வந்த நிலை ?
மகள் வந்த கோலத்தை எப்படி ஒரு தந்தையால் தாங்கிக் கொள்ள முடியும்? வித்யா வந்தாள். பெற்றவர்கள் என்ன கேட்க முடியும்? அமைதியாக வந்தாள்.
அவர் சொல்ல சொல்ல அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான் வெற்றி.
தன்னறைக்கு வந்தவள், யாரையுமே அருகில் வர அனுமதிக்க வில்லை. எல்லாப் பொருட்களையும் தூக்கி எறிந்தாள். அழுதாள்,கதறினாள். பெற்றவர்கள் தடுக்கவில்லை. அவளின் மனப் பாரம் அழுதால் சற்று குறையுமே என்று எண்ணினார்கள். ஓடிச் சென்று குளித்தாள் . உடம்பை சுரண்டி சுரண்டி குளித்தாள் . வெகு நேரம் ஷவரின் அடியில் அமர்ந்திருந்தவளுக்கு காயத்ரி தான் சென்று உடல் துடைத்து வேறு ஆடை மாட்டினாள் . அவளின் நகக் கீறல் அவளின் உடல் எங்கும் இருந்தது. மகளிடம் அதற்கு பிறகு வேறு எந்த அசைவும் இல்லை. கண்ணீருடன் மகளின் தலையை தடவி தூங்க வைத்தார் அன்னை .
சிறிது நேரம் கழித்து ரெஸ்ட் ரூம் சென்று வந்தவர் மகளிடம் எதையோ பார்த்தார். அது என்னவென்று யாருக்கும் தெரியாது.
ஏதோ எனக்கு வேண்டாம் என்று ஏற்றுக் கொள்ள மறுத்த மூளை மகளுக்கு நடந்த கொடுமைகளை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டது.
அப்போதிலிருந்து இப்படித்தான். ஒரு புறம் சித்த பிரம்மை பிடித்த மகள். மறு புறம் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை மகளைத் தேடும் மனைவி. இவர்களுக்காகவே இன்னும் பைத்தியம் பிடிக்காத விஜயன்.
எப்படி இவர்களுக்கு ஆறுதல் கூற முடியும்? சட்டென்று ஏதோ யோசனை வந்தவனாக வெற்றி விஜயனிடம் கேட்டான்.
“சார் ! இந்த வீடு? இந்த வீட்டை கேட்டு அவங்க மிரட்டினதா சொன்னீங்க?”
“என்னோட பொண்ணுக்கு கிஃப்டா இந்த வீட்டை எனக்கே கொடுத்துட்டான் பாவி. அவன் என் பெண்ணை ரொம்ப விரும்பறானாம் . ஊருக்கு போயிட்டு வந்து அவங்க அப்பாகிட்ட பேசுவானாம். நம்ம வித்யாவை பார்த்துலேர்ந்து அவனால் வேற இந்தப் பொண்ணுகிட்டையும்., மென்று முழங்கினார்.
அவரின் கையை தந்தது கைகளுக்குள் பொத்திக் கொண்டான் வெற்றி.
“போதும் சார்! வேணாம் “
“என்ன பணம் பதவி எல்லாம் இருந்தும் என்ன? நான் பெத்த பொண்ண என்னால காப்பாத்த முடியலையே ?”
மீண்டும் மீண்டும் முகத்தில் அடித்துக் கொண்டு அழுதார்.
அதற்குள் காயத்ரி மீண்டும் வந்து,
“என்னங்க! வித்யா காலைல வேலைக்கு போனா. இன்னும் வரலையே? அடடே வெற்றி. அவ வரல? எங்க அவளை காணும்?”
வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு காயத்ரி சாதாரணமாக இருப்பது போலவேத் தோன்றும். காலையில் எழுந்து கொள்வாள். வழக்கம்போல குளித்து சாமி கும்பிட்டு காபி போட்டு எல்லாம் செய்வாள். நடு நடுவே வாயிலுக்குச் சென்று இன்னும் வித்யா வரவில்லையே என்று தேடிக் கொண்டிருப்பாள். எப்படியும் ஒரு நாளைக்கு குறைந்தது நூறு முறையாவது கேட்டு விடுவாள். அவள் நடக்கும் நடைக்கு அவளுக்கு நிச்சயம் ஓய்வு தேவை. இரவில் மாத்திரை கொடுத்து தூங்க வைத்து விடுவார் விஜயன்.
“ரொம்ப முடியலைன்னா மட்டும் கொடுங்க” மருத்துவர் பகலுக்கும் சேர்த்தே மாத்திரை கொடுத்தார். அதில் மற்ற சத்து மாத்திரைகளை கொடுப்பவர் தூக்க மாத்திரையை மட்டும் கொடுப்பதில்லை. பகலில் அதை செய்ய விஜயனுக்கு இஷ்டமில்லை. மகளை பார்த்துக் கொள்ள ஒரு நர்ஸ் வந்துக் கொண்டிருந்தாள். இரவில் வித்யாவுக்கும் உறங்குவதற்கு மருந்து கொடுத்து விடுவார்கள். இவர்கள் இருவரையும் பார்த்து பார்த்து இவர்தான் உறக்கமில்லாமல் தவித்தார். குடும்பதோடு தற்கொலை செய்து கொள்ளலாம் போல இருந்தது. காதல் மனைவியையும், உயிரான மகளையும் எப்படி கொல்ல முடியும்? அழுவார்.நினைத்து நினைத்து அழுவார்.
அவரின் நிலை யாருக்கும் வரக் கூடாது. வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல், பெற்ற மகளுக்கு நடந்த கொடூரம்., பெற்றவனாக இருந்தும் என்ன பயன்? நானெல்லாம் ஒரு ஆம்பிளையா ? கோபம் வெறி வெறுப்பு எல்லாம் இருந்தது. ஒன்னும் செய்ய முடியவில்லை. அழுகை மட்டுமே மிஞ்சியது.
சில சமயம் நான் ஏன் இன்னும் உயிருடன் இருக்கிறேன்? எனக்கு ஏன் இதயம் நிக்கவில்லை? என்றுத் தோன்றும். அடுத்த நொடி தனக்குப் பிறகு என்ன என்ற கேள்வி பயமுறுத்தும். பகல் முழுவதும் அவருக்கு எந்த நினைப்பும் வர விடாமல் மனைவி பார்த்துக் கொள்வார். “என்னங்க வித்யாவைக் காணுமே?” இந்த கேள்விக்கு பதில் தேடவும் பதில் சொல்லவும் தான் நேரம் சரியாக இருக்கும் . அவரின் குமுறல் கதறல் எல்லாம் இரவில் தான்.
எத்தனையோ தீவிர கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் கூட இது போன்ற நிகழ்வுகளால் கடவுள் இல்லை என்ற பக்கம் செல்வதற்கு யார் தான் காரணம்? விடை உங்களுக்கேத் தெரியும்.
நாள் பார்த்து நட்சத்திரம் பார்த்து கிரஹ பிரவேசம் செய்து குடி வந்த வீடு தான். உங்க பொண்ணுக்கு ரொம்ப அமோகமான ஜாதகம். நம்பினார்கள்தான்.
எல்லாம் பலித்ததா ?
“அடுத்து என்ன?” வெற்றிக்கு எதுவும் புரியவில்லை. மனதை சமாதானப் படுத்திக் கொண்டான். அப்படி சொல்லக் கூடாது. சமாதானம் செய்துக் கொள்ள கூடிய விஷயமா இது? ஒன்று செய்யலாம். விஜயன் போலவே வெற்றியும் இதைப் பற்றி நினைப்பதை வேண்டுமானால் தள்ளிப் போட்டுக் கொள்ளலாம். இன்னும் சில நிமிடங்கள் தான். காயத்ரி படி ஏறி வந்து விடுவார்.
“வெற்றி! இதை நான் உங்க கிட்ட கேக்க கூடாது. ஆனா எனக்கே பைத்தியம் புடிச்சுடும் போல இருக்கு. அதனாலதான்…”
“என்ன விஷயம் சொல்லுங்க சார்”
“ரெண்டு மூணு நாளைக்கு எனக்கு துணைக்கு இருக்க முடியுமா? “
அவர் கண்களில் நீர் கொட்டியது. அது இல்லாமையால் வந்தது அல்ல. இயலாமை . நெருங்கிய சொந்தங்கள் நண்பர்கள் எல்லாம் இருந்தும் யாரிடமும் எதுவும் வாய் விட்டுக் கூற முடியாத அவலம்.
“இருக்கேன் சார்”
அன்று முழுவதும் வெற்றி அங்கு தான் இருந்தான். நாள் முழுவதும் ஏதேதோ காரணங்களைச் சொல்லி மனைவியை சமாதானப்படுத்தும் கணவனை பார்க்கப் பார்க்க அவனுக்குப் பாவமாக இருந்தது. முதலில் அவருக்கு ஒய்வு தேவை. வெற்றிக்குப் புரிந்தது.
“ஐயா ! முதல்ல நீங்க கொஞ்ச நேரம் படுங்க. முதல்ல உங்களுக்குத்தான் ரெஸ்ட் தேவை.” பிடிவாதமாக அவரைப் படுக்க வைத்தான்.
அடுத்த சில தினங்கள் இப்படியே கழிந்தது. காயத்ரிக்கு பிடித்த பாடல்கள் பழைய காலத்து படங்கள் போன்றவற்றை போட்டு சிறிது சிறிதாக நேரம் கடத்தினார்கள்.
வெற்றி வித்யாவுடன் இருக்க, கணவன் மனைவிக்கு நேரம் செலவழித்தார். காயத்ரி ஏங்கியத் தருணங்கள்.
“என்னங்க! “கோ” ன்னு ஒரு படம் வந்துருக்காம். ரொம்ப நல்லா இருக்காம் எப் பீ ல(முக நூல்) போட்டுருக்காங்க. நாம போலாமா?”
“என்ன அன்னையே! தந்தையுடன் எஸ்கேப்புக்கு (சென்னையில் இருக்கும் ஒரு மால் ) எஸ்கேப் ஆக பிளான் பண்ணறியா?”
தந்தையின் தோளில் நாடி வைத்துக் கட்டிக் கொண்டு கேட்டாள் .
இறுதியில் மகளும் மனைவியும் தான் எஸ்கேப்புக்கு எஸ்கேப் ஆனார்கள். வழக்கம்போல, “இந்த மாதிரி சில்லியா என்னை தொந்தரவு பண்ணாதே” என்று கூறியவர் வழக்கம்போலவே வேலையைப் பார்க்க சென்று விட்டார்.
“என்னங்க யுவன்னு ஒரு படம் டிவில போட்டிருக்கான். வறீங்களா சேர்ந்து பாக்கலாம்?”
“இல்லம்மா! என்னைத் தொந்தரவு பண்ணாத. நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்.”
மொத்தமாக இல்லை என்றாலும் எப்போதாவது சேர்ந்து படம் பார்க்கச் செல்வார்கள். இப்போதோ என்ன பார்க்கிறோம் என்றுத் தெரியாமல் ஒரு நாளைக்கு ரெண்டு மூன்று என்று படங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
காலையில் எழுந்த உடனேயே, ‘இன்னிக்கி மார்கழி கச்சேரி எங்க?’ கூகிளில் பார்க்க ஆரம்பித்தார்.
இந்த அலப்பறையிலும் வாசலில் பெரிய கலர் -புல் கோலம் மின்னியது.
‘மகளுக்கு அலுவலக ப்ராஜெக்ட் இருக்கிறது. தாமதமாக வந்து அசந்து தூங்கும் மகளை எழுப்ப வேண்டாம். ‘
இந்த எண்ணத்தில் தானே தினமும் வழக்கம் போல காலை வேலைகளை செய்து விடுகிறார். வித விதமான காலை சிற்றுண்டி, சப்ஜி, சட்னி சாம்பார் எல்லாம் மணக்க மணக்க சாப்பிடுகிறார்கள். அத்தனையும் கணவனுக்காக, மகளுக்காக. இப்போதெல்லாம் காலையில் மகளை அழைத்துச் செல்ல வரும் வெற்றிக்காக கூட சேர்த்து சமைக்க ஆரம்பித்து விட்டாள் .
“என்னங்க வித்யாவை இன்னும் காணலியே ?”
காலை பத்து மணி போல ஆரம்பித்து விடுவாள்.
அதற்காகத் தான் இந்த புது முயற்சிகள் எல்லாம்.
பார்த்தசாரதி சபாவில் பிரின்ஸ் ராம வர்மாவின் கச்சேரிக்கு புக் செய்தார் விஜயன் .
பெர்ரி ப்ளூ பனாரஸ் பட்டுக்கு கெல்லி கிறீன் பார்டர். அதே நிற ரவிக்கை இல்லாமல், பாட்டில் கிறீன் போட்டிருந்தார். காதலித்த காலத்தில் கூட அவர் மனைவிக்கு இப்படி பார்த்து பார்த்து செய்ததில்லை. “ஆனியன் ஸ்கின் கலர் வேண்டாமே. இது பாரு. லாவண்டர் ஒனக்கு சரியா பிரைட்டா இல்ல. லேலக் பாரு”
வேண்டுமென்றே நேரம் கடத்தினார். மாலையில் நடக்கும் கச்சேரிக்கு காலை முதலே மனைவியை தயார் செய்யத் தொடங்கி விட்டார். இன்று எப்படி அவளை சமாளிக்கப் போகிறார்?
“வா! வா! சீக்கிரமா வித்யா வரதுக்குள்ள நாம ஜூட் விடணும்.”
இப்படியேத் தான் சொல்லிக் கொண்டிருந்தார். இப்படியே இன்னும் எத்தனை நாள்? மாதம்? நினைத்தாலே அவருக்குத் தலை சுற்றியது.
சில நேரங்களில் வெற்றியிடம் இவர்களை ஒப்படைத்து விட்டு அலுவலகம் செல்வார். வெற்றியும் எப்படியோ சமாளித்துக் கொள்வான்.
இதோ சபாவுக்கு வந்து விட்டனர் நம் தம்பதி .
முத்துஸ்வாமி தீக்ஷிதர் இயற்றியது. வெஸ்டர்ன் நோட்ஸ். தில்லானா மோகனாம்பாள் பாடலில் கூட இது போல வேறு ஒரு பாடல் வருமாம்.
இவருக்கு எங்கே இது எல்லாம் தெரியும்.
‘ஸ்ஸா ஸா நித தா ஸ நி ப நீ த ம த பா ம க.. நிவேதா “
இதுவும் அது போல நிறைய நோட்ஸ் வர்ற மாதிரி பாட்டு தான். காயத்ரிதான் காரில் வரும்போது சொல்லிக் கொண்டு வந்தாள்.
காதல் தொடரும்…
