

KKEN-24
இந்த காரணத்தினால் தானோ என்னவோ ரவிக்கு மீனு மீது
ஏதோ ஒரு விதமான வெறுப்பு என்று இல்லை என்றாலும் மனதிற்குள் ஒரு வித நெருடல் இருந்துக் கொண்டே தான் இருந்தது. இயற்கையில் அவன் அந்த குழந்தையின் அப்பா இல்லை அது அவனுக்குத் தெரியும். இருப்பினும் அவளின் மனதில் தன்னை நினைத்து தன்னுடைய அண்ணாவோடு இணைநதால்?அதற்கு தான் எப்படி பொறுப்பாக முடியும். எப்போது இந்த நினைப்பு வந்தாலும் ரவிக்கு தலை வெடித்து விடாதா என்ற எண்ணம் வரத் தான் செய்கிறது. தனக்கும் ஏதாவது ஒன்று என்றால் இந்த குழந்தையின் கதி? இந்த எண்ணமும் வருகிறது. இரு தலை கொல்லி எறும்பாக அவன் படும் அவஸ்தைக்கு யார் மருந்து? அவனின் காயம் பட்ட மனதிற்கு தேவை ஆறுதல் இல்லை. மயிலிறகாக வருடும் வார்த்தைகள். உன் மேல எந்த தப்பும் இல்ல. யாராவது சொல்லி விட மாட்டர்களா? ஓ வென்று காத்த வேண்டும் என்று தோன்றும். அந்த வார்த்தையை சொல்வதற்கு அவனுக்கு யார் இருக்கிறார்கள். அல்லது யாரிடம்தான் இந்த அசிங்கத்தை பகிர்ந்துக் கொள்ள முடியும்?
தந்தையின் கட்டாயத்தினால் தான் அவன் இங்கு இந்தியாவில் வந்து செட்டில் ஆனதே. இல்லையென்றால் அவன் சிங்கப்பூரிலேயே இருந்திருப்பான். வந்த இடத்தில உறவுகளையும் இழந்து இப்படி தனி மரமாக நின்றுக் கொண்டிருக்கிறான்.
விரைவாக இந்த நாடு விட்டு சென்று விட வேண்டும்., எண்ணம் வந்தாலும் இங்கே நம் நாட்டிலும் தொழில் நநன்றாகப் பெருகியதால் அவனால் சட்டென இங்கிருந்து நகர முடியவில்லை.
அங்கே அவன் தொழிலைப் பார்த்துக் கொள்ள நல்ல டீம் இருக்கிறது. இவனின் உற்ற தோழன் அங்கே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வதால் ரவிக்கு பெரிய கவலை எல்லாம் இல்லை. அவனே அத்தனையும் அங்குப் பார்த்துக் கொள்கிறான். இங்கு தான் புது இடம். மக்கள் தொகையும் அதிகம். அதனால் தேவையும் அதிகம். அதுவும் இல்லாது மக்கள் தொகை அதிகம் இருக்கும் இடத்தில் மார்க்கெட் இழப்பது புத்திசாலித்தனம் அல்ல. எத்தனையோ ஐ டீ நிறுவங்கள் வந்து போட்டிப் போடும் போது அத்தனை பேருக்கும் தேவை உணவு. அந்த மார்க்கெட்டை விட்டு விட முடியுமா?
இங்கே வந்த புதிதில் இவன் இந்த இடம் பிடிக்கவில்லை என்று சொன்ன போது இவன் தந்தை,
“வா! கொஞ்ச நேரம் காலாற நடந்துட்டு வருவோம் என்று இவனை அழைத்துச் சென்றார்.
குப்பை,நாற்றம், சாக்கடை, பள்ளம் கொண்ட சாலை, எல்லாவற்றையும் கடந்து இவனுக்கு நடப்பதுக் கூட சிரமமாகத் தான் இருந்தது. ஏன் இங்கேயே பிறந்து வளர்ந்த தந்தைக்குக் கூட இடைப்பட்ட காலத்தில் மாறியிருந்த இயல்பினால் இயல்பாக இருக்க முடியவில்லை.
“போ! போய் அந்த கடைல நமக்கு பபில் கம் வாங்கிட்டு வா.” கையில் ஒரு பத்து ரூபாய் தாளை நீட்டினார்.
ரவியும் கடைக்குப் போனான். சூப்பர் மார்க்கெட் இல்லை. சாலையோர கடை. பெரியது என்று கூறி விட முடியாது. மத்திய அளவில் இருந்தது. நல்ல கும்பல். வண்டியில் வந்து மாவு மிளகாய் எல்லாம் இறங்கியது. இவர்களின் பிராண்ட் தான். எப்படியும் மாலை ஆறு ஆறரை இருக்கலாம். இரண்டு பபிள் கம் வணங்க இவனுக்கு அரை மணி நேரத்துக்கும் மேலே ஆனது. தமிழ் நாடு தான். ஏகப்பட்ட ஹிந்தி ஆள்கள்தான் நின்றுக் கொண்டிருந்தார்கள். மாவு வந்து இறங்கிய வேகத்தில் காலி ஆகிவிட்டது. இட்லி பொடி இல்லை . நாளைக்குத் தான் என்றார்கள். கரம் மசாலா பத்து ரூபாய் பாக்கெட்டுகள் காலி. கடைக்காரர்கள் ஆங்கிலத்தையே தமிழ் போலவும் ஹிந்தி போலவும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“மசாலா எப்ப வரும்” ஹிந்திக்காரர் தமிழில் கேட்டார்.
அதற்கு, கடைக்காரர் ,
“கல் மார்னிங்” என்றார். அவனும் அமைதியாக சென்று விட்டான். இவனுக்குத் தான் அவர் சொல்லிய பதில் புரிய சில நொடி ஆனது .
பல இடிபாடுகளுக்கு நடுவில் இவன் கேட்ட ஐட்டம் வேகமாக வந்து விழுந்தது மிச்ச சில்லறையுடன்.
ரவி எல்லாம் பிறந்ததிலிருந்து தொழிலதிபர் இல்லை. பிறக்கும்போதே தொழிலதிபர்தானே . தனது தந்தை எதற்காக கூட்டிக் கொண்டு வந்தார் என்பது அவனுக்கு இனி அவன் தந்தை சொல்லாமலேயே புரிந்திருக்கும்.
இப்போது அவனுக்கு பள்ளம் மேடு நாற்றம் தூசி குப்பை எதுவும் தெரியவில்லை. பலரின் கைகளில் இருந்த இவர்களின் பொருள்களைத் தான் பார்க்க ஆரம்பித்தான். இந்த நாட்டில் இருக்கும் குறைகள் எனக்குத் தேவை இல்லை. இவர்கள் தான் நம்ம வாழ வைக்கிறார்கள் புரிந்துக் கொண்டான் .
ஏதேதோ காரணங்கள், தந்தையுடன் இங்கேயே இருக்க ஆரம்பித்து விட்டான். அண்ணிதான் அடுத்த அம்மா என்று தந்தை சொல்லி இருந்ததினால் தான் இன்னமும் அவன் மனதில் அவள் அண்ணியாகவே இருந்தாள் . இருப்பினும் அவள்.. அவள் நடந்து கொண்ட விதம் யாராலும் ஜீரணிக்க முடியாதது அல்லவா?
அதனாலேயே அவன் குழந்தையிடம் பெரியதாக நெருங்கியதில்லை. அதுவே குழந்தையை பார்த்துக் கொள்ள வந்தவளுக்கு குழந்தையை கடத்துவதற்கு வசதியாக போனது. பல நாட்களுக்கு பிறகு குழந்தையை தழுவிக் கொண்டவனுக்கும் ஆழ்ந்த உறக்கம்தான்.
“சீக்கிரம் எழுந்து கிளம்பு. மீட்டிங் இருக்கு.” வேற யாரு? சூரியன்தான் முகத்தில் தன் ஒளியை பரப்பி எழுப்பி விட்டார். இயற்கை அன்னை இருக்கும்போது யாரும் எப்போதும் அநாதை இல்லையே!
இன்று ஒரு பெரிய ஏழு நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் முக்கிய அதிகாரியுடன் சந்திப்பு. அவர்களுக்கு இந்தியா முழுவதும், மூன்று, நான்கு, ஐந்து ஏழு நட்சத்திர ஹோட்டல்கள் பல உள்ளன. மிகப் பெரிய இடம். வெளி நாடுகளிலும் அவர்களுக்கு கிளைகள் உண்டு. இந்த டீல் ஓகே ஆனால் இவர்களின் கம்பனியின் நிலை வேற லெவலுதான். அதற்காகத்தான் இவனே நேரில் செல்கிறான். வழக்கம்போல காலையிலேயே எழுந்துவிட்ட மலருக்கு செய்வதற்கு எந்த வேலையும் இல்லை. குழந்தை எழுந்தவுடன்தான் வேலை. சமையல் அம்மாவிடம் இருந்து ஒரு பழைய புடவையை வாங்கி கட்டி இருந்தாள் . தலைக்கு குளித்திருந்தவள் நன்றாக துவட்டி விட்டு நுனியில் முடி போட்டுக் கொண்டாள் .
காபி குடிக்க கீழே வந்தவன் பார்த்த காட்சி புது மலராக கையில் பவள மல்லியுடன் வந்தவளைத் தான்.
“வணக்கம் சார் ”
குட் மார்னிங் கேட்டு பழக்க பட்டவனுக்கு இது வேறு மாதிரி இருந்தது.
“குட் மார்னிங் சொல்லணும் புரிஞ்சுதா?” சமையல் அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள்.
“இட்ஸ் ஓகே! உன்னோட பேரு என்ன?”
“கொடி மலர் சார். எல்லாரும் மலருன்னு சொல்லுவாங்க”
“ஏத்த பேருதான்” சொல்லிக் கொண்டே ரவிக்கு காபியை கொடுத்துவிட்டு சென்றாள் சமையல் அம்மா.
ரவி காலையில் கிளம்பும் போது ,
“அப்பாவுக்கு டாடா சொல்லுங்க” வாயில் வரை குழந்தையுடன் வந்து நின்றாள். குழந்தைக்கு இன்னும் பேச்சு வரவில்லை. குழந்தையின் கையை இவளே ஆட்டி டாடா சொன்னாள் . அவனே அறியாமல் அவனுக்கு மனதில் ஏதோ ஒரு சந்தோஷம். வழக்கம்போலவே சென்ற காரியம் வெற்றி. வரும் வழியில் வரிசையாக துணிக் கடைகள் இருந்தன. ஏனோ சம்பந்தமே இல்லாத ரவிக்கையுடன் அந்த புடவையை சுற்றி கொண்டு நின்றிருந்தவளின் முகம் கண்ணில் வந்தது. வண்டியை ஓரம் கட்டி விட்டு அவளுக்கென சில ஆடைகளையும், உள்ளாடைகளையும் சேர்த்தே வாங்கி கொண்டான் ரவி. ஒரு பெண்ணுக்காக ரவி வந்து இப்படி உள்ளாடை பிரிவில் நிற்கப் போகிறான் என்று யாராவது சொல்லி இருந்தால் அவனே நம்பி இருக்க மாட்டான்.
வீட்டிற்கு வந்து அவள் துணிகளை கொடுத்ததும் அவளுக்கு அத்தனை மகிழ்ச்சி.
“அப்டரால் ட்ரெஸ்க்கு இவ்ளோ சந்தோசப்படுவாங்களா? ரொம்ப ஓவராத்தான் பண்ணறா. மனதிற்குள் லேசாக திட்டினான். அவன் வாங்கி கொடுத்தது நான்கு செட். அவள் உபயோகப்படுத்துவது இரண்டு தான். அதே உடைகளையேத் தான் மாற்றி மாற்றி போட்டுக் கொண்டாள் .
“ஏன் இதையே மாத்தி மாத்தி போடற” பொறுக்க முடியாமல் கேட்டுவிட்டான் ரவி.
“போட மனசு வரலைங்க ”
“ஏன்? போட்டுக்கத்தானே வாங்கி கொடுத்தேன்?”
“அப்புறம் அழுக்காய்டும்” அவள் பதிலில் நெற்றியில் அடித்துக் கொண்டான்.
வெற்றி அவளை பார்க்க வரும்போது சில புதுத் துணிகளை கொண்டு வந்து கொடுத்தான்.
“என்னடா! வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க?”
“எனக்கு என்னக்கா தெரியும்?”
” இது என்னடா? நம்ம குடும்பம் இப்டி ஆயிட்டுது . இந்த மாதிரி எதுவும் ஆகிட கூடாதுன்னு தானே நான் அவ்ளோ கஷ்டத்தை பொறுத்துகிட்டேன். அப்பாதான் ஏதோ கோபத்துல பேசிட்டாருன்னா நீயும் ஏன்டா இப்டி புடிவாதமா தொங்கிகிட்டு நிக்கற?”
“அவங்களுக்கு என்ன பேச உரிமை இருக்கு. ஆனா வித்யாவை?” கண்களில் குளம் காட்டியது. “நான் வரேன்” சொல்லி விட்டு கிளம்பிவிட்டான் தனது காரில்.
காரா ? ஆட்டோவா? கார்தான். நம் வெற்றி இப்போது ஆட்டோ ஓட்டும் வெற்றி அல்ல. வாழ்க்கையில் வெற்றி அடைந்து கொண்டிருக்கும் வெற்றி. வித்யாவின் வீட்டை விட்டு வந்த போது ஒரு பெரிய பணக்காரருக்கு ரத்தம் தேவைப்பட்டது. இவன்தான் கொடுத்திருந்தான்.
இந்த மகிழுந்து கூட அவருடையது தான். மகிழுந்து ஓட்டிக் கொண்டு செல்பவனுக்குத் தான் மகிழ்ச்சி இல்லை. பெரும்பாலும் அப்படித் தான்.
அது சரி ட்ராபிக்கில் ஒட்டிக் கொண்டு போனால் தானேத் தெரியும்.
அவர் இவனுக்கு நிறைய உதவிகளை செய்தார். அவர் பெரிய சூப்பர் மார்க்கெட் ஓனர். அவருக்கு பெரிய பெரிய கடைகள் இருந்தன. அதில் வேலை பார்த்து தொழில் கற்றுக் கொண்டான். யாரிடம் எப்படி பேச வேண்டும். எப்படி டீலர் ஷிப் எடுக்க வேண்டும். குறைகள், நிறைகள் அத்தனையும் கற்று கொடுத்தார். அவருக்கு ஒரு மகள் வெளி நாட்டில் படித்துக் கொண்டிருக்கிறாள். தொழில் அனைத்தையும் அவர் ஒருவரே தான் பார்த்துக் கொண்டிருந்தார். வேலைக்கு என்று நிறைய ஆட்கள் இருந்தார்கள்தான். கண்ணுக்கு கண்ணாக, மூளைக்கு மூளையாக அவர் கண்ணை காட்டினாலே செய்து விடும் செகரட்டரி இருந்தாள் . பார்த்து பார்த்து கவனிக்கும் மனைவி இருந்தாள் . இருந்தாலும் இவனின் உதவி, ஒரு பெற்ற பிள்ளையை போன்றது. கணவன் மனைவி இருவருக்குமே இவனை மிகவும் பிடித்து விட்டது. தந்தையிடம் கிடைக்காத பாசம் அவரிடம் கிடைத்ததாகவே வெற்றியும் நன்றியுடன் இருந்தான்.
வண்டி ஓட்டிக் கொண்டு சென்றவனுக்கு மனதில் ஆயிரம் எண்ணங்கள். அவன் மனதில் என்ன இருக்கப் போகிறது? அவள் தான்.
காதல் தொடரும்…

