Loading

காரிகை 1

கரும்பச்சை இலைகளைத் திசையெங்கும் எறிந்து, பரந்து விரிந்திருந்த அரச மரத்தின் அடியில் பிரக்ஞை இன்றித் தளர்வாய் அமர்ந்திருந்தாள் அஸ்வதி. ஒருகாலத்தில் மனதிற்கு இதமளித்ததும் இதே மரம் தான்; இன்று மனதின் ரணத்தை அதிகரிப்பதும் இதே இடம் தான். இன்று நேற்றல்ல; இருபத்தியொரு வருட பழக்கம் இந்த மரத்துடன் அவளுக்கு. உண்ண, உறங்க, விளையாட, படிக்க என அன்றாட வாழ்வின் ஆத்மார்த்தமான பகுதியாகவே மாறிப்போன இவ்விடத்தில் அவளது பற்றுதலை உணர்ந்தாலேயன்றி சொல்லிப் புரிய வைக்க முடியாது. அதற்கு முதன்மைக் காரணம் அவளின் உயிர்த்தோழி மான்வி என்றால் அது மிகையாகாது.

 

இதே மரத்தடியில்தான், இதே மரத்தடியில்தான் பல வருடங்களுக்கு முன் மானுவை அவள் சந்தித்தது. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், இருபத்தொரு வருடங்கள் இரண்டு மாதங்கள் பதின்மூன்று நாட்கள்! அப்போது இவளுக்கு ஐந்தே ஐந்து வயது; மானுவுக்கும் தான்! சிறு சிறு சீண்டல்களுடன் நட்பாக ஆரம்பித்து பின்,  இவளின் சர்வமுமாகிப் போன மானுவின் கடைசிப் பிரிவைக்கூட அறிய முடியாதபடி அவர்கள் வாழ்வில் விதி விளையாடுமெனக் கனவிலும் நினைத்திருக்கவில்லை அவள்.

 

மானுவின் பிரத்தியேகமான இடம் இந்த அரச மரம்! அவர்களது முன்பள்ளிக்கு அருகில், கிளைகளையெறிந்து கம்பீரமாக நின்றிருக்கிறது அது. இப்போதெல்லாம் மூன்று வயதிலேயே குழந்தைகளை முன்பள்ளிக்கு சேர்த்து விடுகிறார்கள்; அஸ்வதியின் காலத்தில் நான்கு வயதில்தான் குழந்தைகளை முன்பள்ளியில் சேர்ப்பார்கள். அதற்கு முன் ப்ளே ஸ்கூல் (மழலையர் பள்ளி) தான். அஸ்வதியின் நான்காவது வயதில் அவளை முன்பள்ளியில் சேர்க்கும்போது, புதிய முகங்களையும் புதிய உறவுகளையும் நினைத்து அவளுக்கு ஒரே பயம்! ‘பள்ளிக்கு செல்ல மாட்டேன்’ என அழுது அடம்பிடித்தவளை ஒருவாறு கெஞ்சி, கொஞ்சி, சமாதானப்படுத்தி கொண்டு சென்று சேர்ப்பதற்குள் ஒருவழியாகிப் போயினர் அவளின் பெற்றோர். ஆனால் அங்கு சென்ற இரு தினங்களிலேயே அங்குள்ள மற்றைய பிள்ளைகளுடன் ஒட்டிக் கொண்டு, ‘வீட்டுக்கு வர மாட்டேன்’ என அடம்பிடிக்க ஆரம்பித்தது தனிக்கதை. இதனால் ஏனைய குழந்தைகள், குறிப்பாக அஸ்வதியின் மனங்கவர்ந்த நண்பர்கள் சென்று முடித்தபின் காத்திருந்து அவளை வீட்டிற்கு அழைத்து வருவார் அவளின் தந்தையார்.

 

இப்படியே ஒரு வருடம் கழிந்த நிலையில்தான், அவளது முன்பள்ளிக்குப் புதிதாக வருகை தந்திருந்தாள் மான்வி. முன்பு அஸ்வதிக்கு இருந்த பயம் இப்போது மான்விக்கு. புதிய முகங்களும், புதிய உறவுகளும் பற்றிய பயம் அவளுள் ஒரு தனித்தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க, இதே அரச மரத்தின் கீழ் நின்றுதான் தன் தாயாரிடம் அழுது ஆர்ப்பாட்டம் புரிந்து கொண்டிருந்தாள் அன்று. சரியாக அந்த நேரம் பார்த்து பள்ளிக்கு வந்து கொண்டிருந்த அஸ்வதியின் பார்வையில் அவள் பட்டுவிட, அவளை சீண்டிப் பார்க்கும் ஆவலில்தான் தனது தந்தையிடமிருந்து விடுபட்டுக்கொண்டு மான்வியிடம் ஓடினாள் அஸ்வதி.

 

“ஏன் அழுவுற?”

சத்தியமாய் இந்தக் கேள்வியைப் பாசமாக அவளிடம் கேட்டிருக்கவில்லை இவள். ஆனால் திடீரெனத் தன்னருகே கேட்ட புதிய குரலில் திடுக்கிட்டு, அழுகை மட்டுப்பட மலங்க மலங்க விழித்தாள் மான்வி.

 

“மானு ம்மா! இங்க பாருங்க; உங்களுக்கு ஒரு குட்டி ஃப்ரண்ட் கிடைச்சிருக்காங்க. அவங்களோட சேர்ந்து ஸ்கூல் போறீங்களா?”

என்றபடியே அஸ்வதியின் கன்னத்தை வாஞ்சையாய் வருடினார் மானுவின்  தாயார். அவர்களின் முன்பள்ளிக்கெனத் தனித்துவமான சீருடையை அஸ்வதி அணிந்திருக்க, அவளும் முன்பள்ளிக்குத்தான் வந்திருக்கிறாள் என அறிந்துகொள்ள அதிக நேரம் எடுக்கவில்லை மானுவின் தாயான சுபாஷினிக்கு.

 

“உன் பேரென்ன?”

சற்று அதிகாரமான தொனியில் அஸ்வதி கேட்டுக்கொண்டிருக்கும்போதே, அவளின் தந்தையும் அருகில் வந்து விட்டிருந்தார்.

 

“என்னங்க? அஸு என்ன சொல்லறா? பிள்ளை ஏன் அழறா? சாரிங்க.. நான் பைக்க சரியா நிறுத்திட்டு வரதுக்குள்ள இங்க ஓடிவந்து ரகளை பண்ணிட்டா போல”

மன்னிப்பு வேண்டும் தொனியில் கேட்டிருந்தார் தந்தையார். அஸ்வதி ஏதோ கேட்கப் போய்த்தான் மானு அழுகிறாள் என்பதாய் அவரின் எண்ணப் போக்கு.

 

“ஐயையோ சாரிலாம் எதுக்குங்க? பாப்பா எதுவும் பண்ணல. மானுதான்… முன்னாடி வேற ப்ரீஸ்கூல்ல சேர்த்திருந்தோம். அங்க நல்லா ஒட்டிக்கிட்டா. அவங்கப்பாவுக்கு இந்த ஊர்ல வேலை கிடைச்சதுனால, நாங்க ஊர் மாறி வர வேண்டியதாப் போச்சு. அதனாலதான் அவள இந்த ப்ரீஸ்கூலுக்கு மாத்தினோம். இங்க எல்லாரும் புதுசா இருப்பாங்க, அவள சேத்துக்க மாட்டாங்கன்னு பயம் அவளுக்கு. அதனாலதான் அழறா”

 

“நீ வா; நான் உன்னை சேத்துக்கறேன்”

என்றபடியே அவள் கையைப் பிடித்துத் தன்புறம் இழுத்தாள் அஸ்வதி. மானுவுக்கு சற்றுப்பயம்தான் என்றாலும், ஏனோ அஸ்வதியின் கையை அவள் விலக்கவே இல்லை. இழுக்காத குறையாக அஸ்வதி அவளைப் பள்ளியினுள் அழைத்துச் சென்றுவிட, இரு பெற்றோரும் பரஸ்பரம் புன்னகைத்துக் கொண்டு திரும்பினர்.

 

“உன் பேர் என்ன?”

அஸ்வதி தான், மான்வியைக் குடைந்து கொண்டிருந்தாள்.

 

“மா..ன்வி”

 

“ஓஓ… எல்லாரும் இங்க பாருங்க எனக்கு இன்னிக்குப் புது ப்ரண்ட் கிடைச்சிருக்கா. பேரு மாவி”

அந்தோ பரிதாபம்! அந்த வயதில் அவளுக்கு ‘மான்வி’ என்ற சொல் வாய்க்குள் நுழையவே இல்லை. ‘மாவி’ என்றுதான் சொல்ல முடிந்தது. இதற்குள் அவளின் மற்ற நண்பர்களும் ‘மாவி மாவி’ என்று கூச்சலிட, மான்விக்குத்தான் அது கொஞ்சம் கூடப் பிடிக்கவேயில்லை.

 

“என் பேரு ஒண்ணும் மாவி இல்லை. மான்வி! உங்களுக்கு சரியாக் கூப்பிடத் தெரியலனா மானு ன்னு கூப்பிடுங்க”

சற்றுக் காட்டமாகவே சொன்னாள் என்றாலும், அது ஏனோ நம் அஸ்வதியின் பிஞ்சு நெஞ்சை அவ்வளவாகப் பாதிக்கவில்லை.

 

“சரி மானு. உனக்கு அண்ணா அக்கா யாராவது இருக்காங்களா?”

 

“இல்லை; ஒரு தம்பிப்பாப்பா மட்டும் இருக்கான்”

 

“ஹிஹிஹீ…. நான் தனிப் பொண்ணு. எனக்கு மட்டும் தான் வீட்டுல செல்லம். உன்னோட வீட்டுல தம்பிப் பாப்பா இருக்கறதுனால அவனத்தான் எல்லாரும் தூக்கித் தூக்கி கொஞ்சுவாங்க. ஆனா என்னோட வீட்டுல என்னைத்தான் எல்லாரும் தூக்குவாங்க; கொஞ்சுவாங்க”

என்று கூறி அஸ்வதி சிரித்த வெற்றிச்சிரிப்பு, மானுவின் கோபத்தைக் கிளறப் போதுமானதாக இருந்தது. ஏனோ, மானுவிடம் சண்டையிட்டு அவளை விடத் தான் உயர்வாக இருப்பதாகக் காட்டிக் கொள்வதில் அஸ்வதிக்கு அலாதி ஆனந்தம்! அந்த வயதில் அவளுக்கு அது தவறென்றும் தோன்றவில்லை. ஆனால் கொஞ்சம் ஈகோ இருந்ததென்று சொல்லலாம்.

 

“எங்க வீட்டுலயும் எனக்கு மூத்த பிள்ளைனு ரொம்பச் செல்லம் தான்”

என மூக்குடைத்துக் கூறி விட்டாலும், ‘தன்னை விடத் தம்பி தான் எல்லோருக்கும் முக்கியமோ?’ என்ற எண்ணம் மான்வியின் மனதினோரத்தில் மெல்லிய சாயமாகப் படியத்தான் செய்தது.

 

நாட்கள் வாரங்களாகக் கழிந்து, மானுவுக்கும் சற்றே மற்றைய நண்பர்களுடன் நெருக்கம் உண்டாயிற்று; அஸ்வியுடனும் தான். வழமையாக மானு வந்து அந்த அரச மரத்தடியில் நின்று கொள்வாள்; அஸ்வதி வரும்போது கையோடு அவளையும் அழைத்துக் கொண்டு முன்பள்ளிக்குள் நுழைவாள். மானுவுக்கு அதில் விருப்பமெல்லாம் ஒன்றும் இல்லை; அஸ்வதியின் கட்டளை அது! தான் வரும்வரைக்கும் மான்வியைக் காத்திருக்க வைப்பதில் அவளுக்கு அப்படி ஒரு சந்தோஷம்! ஒருநாள், ஒரே ஒருநாள் அஸ்வி பள்ளிக்கு வரச் சற்றுத் தாமதமாகி விட்டதால், மான்வி இன்னொரு நண்பியுடன் பள்ளிக்குள் நுழைந்ததற்கு ஒரே ரகளை! மான்வியையும் திட்டி, அழைத்து வந்த மற்றைய பிள்ளையையும் திட்டி, தன்னுடைய நட்பு வட்டாரத்தை இரு நாட்கள் முழுதும் அவர்கள் இருவருடனும் பேச விடவில்லை இவள். குழந்தைகள் இருவருக்கும் தாம் தனித்து விடப்பட்டதைப் போல பெரும் மன வருத்தம். அந்தப் பயத்தினாலேயே மானு அந்த மாபெரும் தவறைத் திரும்பச் செய்ததில்லை. ஒருநாள் இரண்டுநாள் அல்ல; அவள் உயிரோடு இருந்த வரைக்கும்!

 

மான்வி தனக்காகக் காத்திருக்கிறாளா, இல்லையா என்பதை அறிந்து கொள்வதற்காகவே, அஸ்வதி வேண்டுமென்றே நேரந்தாழ்த்தி பள்ளிக்கு வருகை தந்த காலமெல்லாம் உண்டு. சில நேரங்களில் கால்வலி தாளாமல், அரச மரத்திலேயே சாய்ந்து அமர்ந்திருப்பாள் மானு. தாய் எவ்வளவுதான் கேட்டாலும், அஸ்வதி வராமல் பள்ளிக்குள் நுழைய மாட்டாள். இரண்டு நாட்கள் பட்டபாடே போதும் என்று இருந்தது அவளுக்கு. ஐந்து வயது கடந்து, ஆறு வயதாகும் போது அவர்களை ஆரம்பப் பாடசாலைக்கு சேர்க்கும் போதும் இது தொடரத்தான் செய்தது. முன்பள்ளி அருகிலேயே ஆரம்பப் பாடசாலையும் அமைந்து விட, மானுவுக்கு எப்படியோ? அஸ்வதிக்கு அதில் பரம சந்தோஷம். அவளுக்காகத் தொடர்ந்தும் இவள் காத்திருக்கத்தானே வேண்டும்!

 

காலம் செல்லச் செல்ல அவர்களின் போட்டி பொறாமை மனப்பாங்கு மாறி, ஒருவரை ஒருவர் ஆத்மார்த்தமாக நேசிக்க ஆரம்பித்திருந்தனர். அஸ்வதிக்காக விரும்பியே காத்திருக்கலானாள் மானு. இருவருக்கும் விருப்பமான ஆஸ்தான பீடமாகிப் போனது இந்த அரசமரம். வீட்டில் சந்தித்துக் கொள்வதை விட, இந்த அரசமரத்தடியில் சந்திப்பதில் அவர்களுக்கு அப்படி ஒரு நிறைவு! இவர்களது வயதை ஒத்த சில நண்பர்களையும் சேர்த்துக் கொண்டு, இந்த மரத்தடியிலேயே விளையாடி, அரட்டை அடித்து, உணவருந்தி, உறங்கி என அவர்கள் கொண்ட நிறைவு தாராளம். போதாக்குறைக்கு ஏதோ ஒரு பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையைப் படித்துவிட்டு,

“ஹே, உனக்கொண்ணு தெரியுமாடி? அரச மரத்துல செரட்டானின்னு ஒரு பதார்த்தம் சுரக்கப்படுமாம். அது எங்க உடம்பில ஆல்ரெடி சுரக்கப்படற ஒரு ஹார்மோனாம். நம்மளுக்கு உற்சாகமான, சந்தோசமான மனநிலையைத் தரக்கூடியதாம் இந்த செரட்டானின். அரச மரத்துக்குக் கீழ இருந்து படிச்சா நம்மளோட அறிவுத்திறன்லாம் அதிகரிக்குமாம்”

என்று அஸ்வதி சொல்லி வைக்க, பிறகு என்ன? படிப்பதற்கும் அதே மரம் தான்! அஸ்வதி கேட்டோ அல்லது கூறியோ மான்வி எதையும் மறுத்ததில்லை; ஆனால் இவள் தவறிழைக்கும் சந்தர்ப்பங்களில் அவள் கண்டிக்கவும் தவறுவதில்லை. முன்பள்ளியிலிருந்து சற்று முரண்பாடுகளுடன் ஆரம்பித்த நட்புதான்; இப்போது உயிர் நட்பாக வளர்ந்து, ஆழமாக வேரூன்றி நிற்கிறது!

 

அப்படியெல்லாம் உற்ற துணையாக இருந்தவள், திடீரென்று தொலைதூரமாகி விட இன்று அஸ்வதிதான் தனித்துப் போனாள். இவள் மேற்கல்விக்காக எந்தக் கல்லூரியைத் தேர்வு செய்தாளோ, முழுமனதாக சம்மதித்து அதே கல்லூரியையே தனது மேற்படிப்புக்காகவும் தேர்வு செய்து கொண்டாள் மான்வி. வீட்டிலிருந்து வந்து இந்த அரச மரத்தடியில் காத்திருந்தால், அடுத்த ஐந்து நிமிடத்திற்குள்ளாக ஆஜராகிவிடுவாள் அஸ்வதி. இருவரும் சேர்ந்து சற்றே தொலைவிலுள்ள பேருந்து நிறுத்தத்திற்குச் சென்று, அவர்களுக்கான பேருந்தில் ஏறி கல்லூரி சென்று வருவார்கள். எல்லாம் நல்லபடியாகத்தான் சென்று கொண்டிருந்தது, மானுவிற்கு ஆகாஷ் மேல் காதல் வரும்வரை!

 

அந்தக் காதலை ஆகாஷிடம் தெரிவிக்க முன்னரே அஸ்வதியிடம் தான் சொல்லி இருந்தாள் மான்வி.

“போச்சு, உனக்கும் இளவு வந்திடுச்சா? பாரு மானு, நம்ம பேரண்ட்ஸ் நம்மளப் படிக்கறதுக்காகத்தான் காலேஜ்க்கு அனுப்பறாங்க. நம்ம இங்க படிக்கறோம்னும் நம்பறாங்க; நீ அத விட்டுட்டு காதல் கத்தரிக்கானு சுத்தினா என்ன அர்த்தம்? சுபாஷினி ஆன்டியும் என்னை நம்பித்தான் உன்னை அனுப்பறாங்க. நீ என்னோட பேரக் கெடுத்துடாத என்ன?”

 

படபடவென பேசியவளை, மூச்சே காட்டாமல் வெறித்திருந்தாள் மான்வி. அவள் எதிர்பார்த்திருந்த பதிலே வேறு.

‘இந்த வயசில இதெல்லாம் சகஜம் மானு; நம்ம ஆகாஷ் பத்தி விசாரிப்போம். அவன் நல்ல பையன்னு எனக்கு நம்பிக்கை வந்திச்சுனா, இந்தக் காதல் நம்ம வீட்டுல ஒத்து வரக்கூடியதா இருக்கும்னா, தாராளமா நீ உன்னோட லவ்வ ஆகாஷ்கிட்ட சொல்லலாம். உனக்கு என்னோட ஃபுல் சப்போர்ட் இருக்கும். கொஞ்சம் கொஞ்சமா நம்ம வீட்லயும் தெரியப்படுத்திடலாம். ஆனா, ஒருவேளை இந்த லவ்வ வீட்ல அக்செப்ட் பண்ணிக்க மாட்டாங்கன்னா… என்ன முடிவு எடுக்கறதுனு நீ தான் யோசிக்கணும்’

இப்படியான பதிலைத்தான் அவள் எதிர்பார்த்தாள். ஆனால் அதற்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தையல்லவா தோழி கூறியிருக்கிறாள்? மானு அதை அஸ்வதியிடம் கேட்டும் விட்டாள்.

 

“லவ் பண்ணறது தப்புனு சொல்ல வரியா அஸு? உனக்கு ஓகேனா நான் ஆகாஷ் கிட்ட சொல்லலாம்னு நினைச்சேன்”

மானுவின் குரலில் பெரிதும் ஏமாற்றம் கலந்திருந்தது.

 

“ஓகே இல்லனா?”

 

“இல்ல…னா… வந்து…”

 

“எனக்கு இழுக்கறது பிடிக்காது மானு”

 

“உனக்கு விருப்பமில்லனா…. எனக்கு இந்தக் காதல் வேண்டாம் அஸு. என் லைஃப்ல இனி வரப்போற ஒரு பர்சன் கண்டிப்பா உனக்கு அப்பறம் தான் எனக்கு முக்கியம். நான் கல்யாணம் பண்ணிக்கற பையனை உனக்கும் பிடிக்கணும். அப்படி இல்லனா அது வே..ணாம்”

குரல் பெரிதும் உள்ளிறங்கியிருக்க, கண் சற்றுக் கலங்கியிருந்தது மானுவுக்கு.

 

“மானு ம்மா…”

 

“ம்ம்”

 

“ஆகாஷ் பத்தி விசாரிப்போம். நல்ல பையன்னா, உங்க வீட்டுல அவனை ஏத்துக்குவாங்கங்கிற நம்பிக்கை உனக்கு வந்திச்சுனா… நீ தைரியமா உன் காதலை அவன்கிட்ட தெரியப்படுத்து. உன்னோட வீட்டுல பேசி ஆங்கிளயும் ஆன்டியையும் ஒத்துக்க வைக்கிறது என் பொறுப்பு. அதே நேரம் அவனுக்கு உன் மேல காதல் இல்லனா… அவனுக்கு இதுல விருப்பம் இல்லனு சொல்லறான்னா… அத ஏத்துக்கற பக்குவம் உனக்கு இருக்கணும் சரியா? கொஞ்சம் டைம் குடு. அவனப்பத்தி விசாரிச்சுப் பாக்கறேன்”

 

மானுவிற்கு இந்தப் பதிலில் பலத்த அதிர்ச்சி; கூடவே கொள்ளை சந்தோஷமும்.

“காதல்லாம் தப்புங்கற மாதிரிப் பேசுன முன்னாடி?”

 

“காதல் தப்பில்லக் கண்ணம்மா; ஆனா காதலிக்கற பர்சன் ரொம்ப சரியா இருக்கணும். முன்னாடி சொன்னது… ச்சும்மா, உன்னைப் போட்டு வாங்கினேன்”

 

“போடி; நிஜமாவே ரொம்பப் பயந்துட்டேன் தெரியுமா?”

என்றபடி அழுதே விட்டாள் மானு.

 

மானுவைத் தழுவி ஆறுதல்படுத்திய அஸ்வதிக்குள் மனதினுள் மெல்லிதாய் ஒரு பயப்பந்து உருள ஆரம்பித்தது. பேச்சுக்காக இந்தக் காதல் வேண்டாம் என்றதையே தாங்க மாட்டாதவள், ஒருவேளை ஆகாஷுக்கு இந்தக் காதலில் விருப்பமில்லை என்றால் அல்லது மானுவின் வீட்டினர் இந்தக் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தால் தாங்குவாளா? என நினைக்கவே மலைத்தது. எது எப்படியோ, அவர்களின் ஒப்புதல் அவளுக்கு அப்பாற்பட்ட விடயம்; மானுவுக்காக இந்த விடயத்தினுள் முழு மூச்சாக இறங்குவதாகத் தீர்மானித்துக் கொண்டாள் அஸ்வதி. ஆனால், இந்த இரு எதிர்ப்புக்களையும் தாண்டிய பெரிய

சுழலொன்றில் தாம் சிக்கிக் கொள்ளப் போகிறோம் என அப்போது அவளுக்குத் தெரிந்திருக்கவே இல்லை!

தொடரும்…

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்