Loading

அந்தப் புத்தர் சிலையை வாங்கிப் பார்த்த அவளது கணவனோ”ஓஹ்! உனக்குப் புத்தர் – ன்னா ரொம்ப பிடிக்குமோ?” என்று கேட்டு விட்டு அதை வாங்கிப் பார்த்தான்.

 

“ஆமாம் ங்க” என்றாள் யக்ஷித்ரா.

 

“அழகாக இருக்கு” என்று பாராட்டுப் பத்திரம் வாசித்தான் அற்புதன்.

 

“இதெல்லாம் கனவு மாதிரி இருக்கு ங்க. நாங்க ரெண்டு பேரும் மீட் பண்ணுவோம்ன்னு நான் நினைச்சுக் கூடப் பார்க்கலை!” என்று அவனிடம் கூறியவளிடம்,

 

“ஏன்?” எனக் கேட்கவும்,

 

“கல்யாணத்துக்கு அப்பறம் நாங்க மீட் பண்ணிக்கனும்ன்னு நினைச்சாலும் ஏதாவது ஒரு தடங்கல் வந்துரும் ங்க. இன்னைக்குத் தான் அது நிறைவேறி இருக்கு” என்று அவனிடம் விளக்கிக் கூறினாள் யக்ஷித்ரா.

 

“இனிமேல் அப்படி எதுவும் வராமல் பார்த்துக்கலாம்” என அவளுக்கு உறுதி அளித்தவனோ,

 

“நான் உனக்கு வாங்கி வச்சிருக்கிற கிஃப்ட்டையும் உனக்குக் கொடுத்தா நீ வாங்கிப்பியா?” என்று தன்னிடம் ஏக்கத்துடன் வினவிய கணவனை,‘இந்த வேலை எப்போது செய்தான்?’ என்ற ஆச்சரியம் மேலிட பார்த்தாள் யக்ஷித்ரா.

 

“என்னம்மா யோசிக்கிற?” என்று அவளிடம் கேட்டான் அற்புதன்.

 

“ஹாங்! ஒன்னுமில்லை ங்க” என்றவளிடம்,

 

“கிஃப்ட்டை எடுத்துட்டு வரவா?” 

 

“ம்ம். கொண்டு வாங்க” என்று கூறியவளுக்கு இன்னும் தன் கணவனின் மீதான வியப்புப் பார்வை மறையவில்லை.

 

அவள் கொண்டு வந்து கொடுத்தப் பொருளைப் பார்த்ததும் தானாகவே அவளது இதழ்களில் புன்னகை அரும்பியது.

 

“உனக்கு என்னப் பிடிக்கும்ன்னு நிறைய யோசிச்சேன். உன்னை அப்சர்வ் – வும் பண்ணேன். ஆனால் என்னன்னுக் கண்டுபிடிக்க முடியலை ம்மா. அதான், எனக்குத் தோனினதை வாங்கிட்டேன். உனக்குப் பிடிச்சிருக்கா?” என்று அவளிடம் ஆவலுடன் வினவினான் அற்புதன்.

 

“நீங்க முதல் முதல்ல எனக்காக யோசிச்சு வாங்கிக் கொடுத்திருக்கிற கிஃப்ட்‌. பிடிக்காமல் இருக்குமா? அதுவுமில்லாமல், இதை நானே வாங்கனும்ன்னு நினைச்சிட்டு இருந்தேன். அதை அப்படியே மனசில் நினைச்சு எனக்கு வாங்கித் தந்துட்டீங்க!” என்று அவள் கூறியதைக் கேட்டதும் தான் இவனது மனதிலிருந்த கொஞ்ச நஞ்ச பதட்டமும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது.

 

ஏனெனில், தன்னுடைய பரிசு அவளுக்குப் பிடிக்குமா? இல்லையா? என்ற குழப்பத்துடன் தானே அவ்வளவு நேரமாகச் சுற்றிக் கொண்டு இருந்தான் அற்புதன்.

 

இப்போது தான், அவனது உள்ளம் நிம்மதி அடைந்தது.

 

அவன் தன் மனைவிக்கு வாங்கிக் கொடுத்தப் பரிசுப் பொருள், ஒரு அழகிய பணப்பை ஆகும்.

 

ஆம்! அவளுக்குப் பரிசு கொடுக்க நினைத்தவனுக்கு எதை வாங்கித் தருவது என்று மனதிற்குள் ஒரு போராட்டமே நடத்தி விட்டு,

 

அதற்குப் பிறகு தான், பணப்பையை வாங்கித் தருவதாக முடிவெடுத்து அதை அவளுடன் சென்ற கடையிலேயே அவளுக்குத் தெரியாமல் வாங்கி வைத்துக் கொண்டு இப்போது அவளிடம் கொடுத்திருக்கிறான் அற்புதன்.

 

“இந்தப் பர்ஸ்ஸைத் தான், நான் இனிமேல் யூஸ் பண்ணப் போறேன்!” என்றவளோ, அவனது கண் முன்னாலேயே தன்னுடைய பழைய பணப் பையிலிருந்தப் பொருட்களை எல்லாம் புதியதில் மாற்றி வைத்து விட்டாள் யக்ஷித்ரா.

 

அதைக் கண்டு, அத்துணை மகிழ்ச்சிக்கான ரேகைகள் அவனது முகத்தில் படர்ந்தது.

 

“இது உண்மையிலேயே உனக்குப் பிடிச்சிருக்கா? இல்லை, எனக்காக இப்படி சொல்றியா?” என்று அவளிடம் கேட்டான் அற்புதன்.

 

“கண்டிப்பாக இல்லை ங்க. எனக்குத் தேவையானப், பிடிச்சப் பொருளைத் தான் நீங்க வாங்கித் தந்து இருக்கீங்க!” என்று அவனிடம் நன்றி சொல்லித் தள்ளி வைக்க வேண்டாமென்று நினைத்தாள் யக்ஷித்ரா.

 

அதைப் புரிந்து கொண்டவனுடைய இதயம் இறக்கையின்றி வானத்தில் பறப்பதைப் போன்ற உணர்வில் மிதந்தான் அவளது கணவன்.

 

“நான் இன்னைக்கு ரொம்பவே ஹேப்பியா இருக்கேன் ங்க!” என்று அவனிடம் தன்னுடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டவளைக் கனிவுடன் பார்த்தான் அற்புதன்.

 

“எனக்கு இவ்வளவு நல்ல குடும்பம் கிடைச்சதுக்கு நான் ரொம்ப லக்கி தானே ங்க?” என்று அவனிடம் வினவினாள் யக்ஷித்ரா.

 

“ஆமாம் மா” என்று அவளது வார்த்தைகளை ஆமோதித்துக் கூறினான் அவளது மணாளன்.

 

“இதை நான் ஃபோட்டோ எடுத்து எங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கவா ங்க?” என்று தன் கணவனிடம் ஆசையாக கேட்க,

 

“ம்ஹ்ம். அதுக்கு எதுக்கு ம்மா எங்கிட்டே பர்மிஷன் கேட்கிற? உனக்குத் தோன்றதை செய்” என்று அவன் கூறி விடவும்,

 

உடனே தாமதிக்காமல் தன்னுடைய கைப்பேசியில் அந்தப் பணப்பையைப் புகைப்படம் எடுத்து,’அது தன் கணவனின் முதல் பரிசு’ என்று அதைத் தனது தங்கையின் செல்பேசிக்கு அனுப்பி வைத்து விட்டாள் யக்ஷித்ரா.

 

அதைக் குறுஞ்சிரிப்புடன் பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தான் அவளது கணவன்.

 

தன் பரிசைக் கையில் வாங்கிப் பார்த்ததும், தன்னை நோக்கி ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்து விட்டு’நன்றி’ என்ற வார்த்தையைக் கூறி விட்டு ஒதுங்கிக் கொள்வாள் என்று தான் அவளைப் பற்றிய புரிதல் இருந்தது அவனுக்கு. ஆனால், இப்போது அவளது செய்கைகளால் தனது மனம் குளிர்ந்து போவதை உணர்ந்தான் அற்புதன்.

 

தன்னுடைய செல்பேசியில் இருந்து வந்த ஒலியைக் கேட்டதும் அதை எடுத்து ஆராய்ந்து பார்த்த யக்ஷித்ராவோ,”நிவி தான் மெசேஜ் செஞ்சு இருக்கிறா” என்று தன் கணவனிடம் சொல்லி விட்டுத் தன் தோழிக்குப் பதில் அனுப்பி வைத்து விட்டு, 

 

அன்றைய நாள் முழுவதும் தனக்குக் கிடைத்த அனைத்து சந்தோஷங்களையும் தன் மனம் முழுவதும் சேமித்து வைத்துக் கொண்ட திருப்தியுடன் உறங்கச் சென்றாள் யக்ஷித்ரா.

 

அவளை இந்தளவிற்கு மகிழ்வித்தப் பெருமிதத்துடன் தானும் நித்திரை கொண்டான் அற்புதன்.

 

இங்கோ, உன் ஊருக்குப் பயணம் செய்து கொண்டிருந்த நிவேதிதாவோ, தனது தோழி வாங்கித் தந்தப் பரிசைத் தன்னுடைய கணவனுக்குப் புலனத்தில் அனுப்பி வைத்தாள்.

 

அதை உடனே பார்வையிட்டு,’சூப்பராக இருக்கு ம்மா!’ என்று பாராட்டினான் சுகந்தன்.

 

அவனிடம் தனது பயணத்தைப் பற்றிய தகவலைத் தெரிவித்து விட்டுக் கண் அயர்ந்தாள் அவனது மனைவி.

 

அதே போலவே, மறுநாள் விடியற்காலையில், தன்னுடைய ஊரை அடைந்தவுடன் அந்தச் செய்தியைத் தன் கணவன் மற்றும் தோழிக்குக் குறுந்தகவல் அனுப்பி வைத்து விட்டு வீட்டை அடைந்தாள் நிவேதிதா.

 

அவள் பாதுகாப்பாக வீடு சென்று சேர்ந்ததை அறிந்ததும் நிம்மதிப் பெருமூச்சை வெளியிட்டுக் கொண்டு எப்போதும் போலத் தன்னுடைய வேலைக்குக் கிளம்பிச் சென்றாள் யக்ஷித்ரா.

 

அவளுடைய கணவன் அற்புதனோ, என்ன ஆனாலும் சரி, அடுத்து வரும் தினங்களில், தன் மனைவியிடம் அவளது வாழ்வில் நிகழ்ந்த அனைத்தையுமே கேட்டுத் தெரிந்து கொள்ள முடிவெடுத்தான்.

 

இனிமேல் தன் மனைவியுடன் அதிகமான நேரங்களைச் செலவழிக்க வேண்டும் என்று தனக்குத் தானே சத்தியம் செய்து கொண்டு, ஒரு விடுமுறை நாளில்,”உன்னோட கதையை மொத்தமாக எங்கிட்ட சொல்லு யக்ஷி. கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்றது வேலைக்கு ஆகாது போல!” என்று அவளிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டான் அற்புதன்.

 

“நான் உங்ககிட்ட எல்லாத்தையும் ஷேர் பண்ண ரெடி. ஆனால், உங்களுக்குத் தான் நேரமே கிடைக்கிறது இல்லையே?” என்று அவனிடம் கேலியாக வினவினாள் யக்ஷித்ரா.

 

“ஒரு வாரம் லீவ் போட்டுட்டுக் கூட நான் உங்கிட்ட கதைக் கேட்கத் தயார்!” என்று அவளிடம் கூறிச் சிரிக்கவும்,

 

“ஐயையோ! அப்படியெல்லாம் எதுவும் பண்ணிடாதீங்க! நான் இன்னைக்கே முழுக் கதையையும் உங்ககிட்ட சொல்ல டிரை செய்றேன்” என்று தன் கணவனிடம் கெஞ்சினாள் அவனது மனைவி.

 

“சூப்பர்! கமான்! ஸ்டார்ட் பண்ணு” எனத் தனக்குத் தோதான இடத்தைப் பார்த்துக் கட்டிலில் அமர்ந்து கொண்டு அவள் கூறுவதைக் கேட்கத் தாயாராகி விட்டான் அற்புதன்.

__________________________

 

“ஹேய் யக்ஷி! நம்மளோட ஃபேர்வெல் டே- க்கு என்னனென்ன சாப்பாடு கொடுப்பாங்கன்ற லிஸ்ட் வந்துருச்சு. அதை இப்போ கொஞ்ச நேரத்தில் கிளாஸ் லீடர் வந்து இன்ஃபார்ம் பண்ணுவா. பாரேன்!” என்றாள் நிவேதிதா.

 

“அப்படியா? அந்த விஷயம் உனக்கு எப்படி தெரியும்?” என்று அவளிடம் கேட்கவும்,

 

“நான் ஸ்டாஃப் ரூமில் நம்ம மேத்ஸ் மிஸ் கிட்டே பேசிட்டு இருந்தேன். அப்போ தான் இதைத் தெரிஞ்சிக்கிட்டேன்” என்று அவளுக்குப் பதிலளித்தாள் அவளது தோழி.

 

“ஓஹ்ஹோ!” என்று இவள் சொல்லிக் கொண்டிருந்த வேளையில், அவர்களது வகுப்பின் தலைமை மாணவி அங்கே பிரசன்னம் ஆகி, சற்று நேரம் முன்பாக நிவேதிதா சொன்னதை அனைத்து மாணவிகளுக்கும் அறிவித்தாள்.

 

“பார்த்தியா?” என்று யக்ஷித்ராவிடம், காலரை உயர்த்திக் காட்டுவதைப் போன்ற சைகை செய்தாள் அவளது தோழி.

 

“ம்ம். பயங்கரம்!” என்று அவளைக் கண்களால் மெச்சிக் கொண்டாள் யக்ஷித்ரா.

 

“வெஜ் பிரியாணி, வெஜ் கிரேவி இதெல்லாம் கண்டிப்பாக இருக்கும். பரோட்டா, குருமா மட்டும் கடைசியாக ஃபிக்ஸ் பண்ணிக்கலாம்ன்னு முடிவு செய்திருக்காங்க. ஏதாவது ஒரு ஸ்வீட் இருக்கும். அதுக்கும் மேலே எந்தச் சாப்பாட்டை சேர்த்துக்கலாம்ன்னு நம்மப் பிரின்சிபால் மேடம் சொல்லுவாங்களாம்!” என்று கூறி முடித்தவளோ,

 

“எந்த மாதிரியான டிரெஸ் போடலாம்னு சொல்லி இருக்காங்க. நல்லா கேட்டுக்கோங்க! ஃபங்க்ஷனுக்குச் சுடிதார், தாவணி மட்டும் தான் அலவட். வேற ஜீன்ஸ் பேண்ட், டீ ஷர்ட், இல்லைன்னா நார்மல் டாப் எல்லாம் போட்டுட்டு வரக் கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட் ஆகச் சொல்லிட்டாங்க!” என்று அனைவரிடமும் தெரிவித்தாள் அந்த வகுப்பின் தலைமை மாணவி.

 

அவள் அங்கேயிருந்து அகன்றதும்,”உங்கிட்ட பாவாடை, சட்டை, தாவணி இருக்கா நிவி?” என்று தோழியிடம் கேட்டாள் யக்ஷித்ரா.

 

“ஊஹூம்! இல்லவேயில்லை! ஜீன்ஸ், பேண்ட் அண்ட் டாப்ஸ் தான் இருக்கு. அதையும் போட்டுட்டு வரக் கூடாதுன்னு சொல்லியாச்சு!” என்று அவளிடம் சோகமாக உரைத்தவளிடம்,

 

“ஆனால், எனக்குத் தாவணி கட்டிட்டு வரனும்ன்னு ஆசையாக இருக்கே!” என்று தன்னிடம் திடுமென இப்படிக் கூறியவளைக் கண்டு விழி விரித்து ஆச்சரியப்பட்டாள் நிவேதிதா.

 

அதைக் கண்ணுற்ற யக்ஷித்ராவோ,”நான் உண்மையாகத் தான் சொல்றேன் ம்மா. இஃது தானே நாம ஸ்கூலில் கொண்டாடுற கடைசி ஃபங்க்ஷன். நாம ரெண்டு பேரும் ஒன்னா பாவாடை, தாவணிப் போடலாம்ன்னு நினைச்சேன்” என்றவளிடம்,

 

“நீ என்ன அடுத்தடுத்து ஷாக் ஆன விஷயங்களைச் சொல்லிட்டு இருக்கிற?” என்று வியப்புடன் வினவினாள் நிவேதிதா.

 

“ஏன் ம்மா?”

 

“அப்பறம் என்ன? எனக்கு இதெல்லாம் பழக்கமே இல்லையே? நான் எப்படி பாவாடை, தாவணியைப் போட்டுட்டு வர்றது? அதுவும் அந்த டிரெஸ் எங்கிட்டே கிடையவே கிடையாது!” என்று உறுதியாக கூறினாள் அவளது நண்பி.

 

“சரி” என்றவளைக் கனிவுடன் நோக்கிய நிவேதிதவோ,”உன் கூடச் சேர்ந்து நானும் தாவணி கட்டிட்டு வரனும்ன்னு நீ ஆசைப்பட்டா அதை நான் உனக்காகப் பண்றேன்” என்று அவளுக்கு வாக்குக் கொடுத்தாள்.

 

“அதெல்லாம் வேண்டாம் மா. நானும் சுடிதாரே போட்டுக்கிறேன்” என்று அவளிடம் சொல்லி மறுத்து விட்டாள் யக்ஷித்ரா.

 

“நீ தாவணிப் போட்டுட்டு வா ம்மா. நான் அதை யார்கிட்டேயாவது கேட்டு வாங்கித் தர்றேன்” என்று கூறி அவளைச் சம்மதிக்கச் செய்தாள் நிவேதிதா.

 

“ஓகே ம்மா. ஆனால், நீ எனக்காக யார்கிட்டேயும் எதையும் கேட்க வேண்டாம். என் சொந்தக்காரங்க கிட்டே கேட்டுப் பார்க்கிறேன்” என்கவும், அதற்கு அவளது தோழியும் ஒப்புக் கொண்டாள்.

 

ஆனால், அவர்கள் எதிர்பார்த்தவாறு யக்ஷித்ராவின் சொந்தங்களோ தங்களிடம் அந்த உடை இல்லவே இல்லை என்று கையை விரித்து விட்டார்கள்.

 

எனவே,”இரவல் வாங்கி அதைப் போடனும்னு எனக்கு ரொம்ப ஆசை இல்லை ம்மா. விடு” எனத் தன் தோழியிடம் சொல்லி விட்டாள் யக்ஷித்ரா.

 

“நம்மக் கிளாஸ்மேட்ஸ் கிட்டே கேட்டுப் பார்க்கலாம்” என்றவளோ, தங்களது வகுப்பில் இருந்த சில மாணவிகளிடம் கேட்க, அவர்களில் இரண்டு பேரிடம் மட்டுமே அந்த ஆடை இருந்தது.

 

அவர்களில் ஒரு மாணவியோ, அதைத் தான் தானும் அன்றைய தினம் அணிந்து வரப் போவதாக கூறி விட, அடுத்த மாணவியிடம் அந்த உடையைத் தன்னுடைய தோழி ஒருநாள் மட்டும் அணிந்து கொள்ளத் தருமாறு வேண்டிக் கேட்டாள் நிவேதிதா.

 

“அதுக்கு என்ன? நான் நாளைக்கே கொண்டு வந்து தர்றேன்” என்று அவளும் ஒப்புதல் அளித்து விட,

 

உடனே, அந்த விஷயத்தை யக்ஷித்ராவிடம் சென்று பகிர்ந்து கொள்ள,

 

அவளோ,“நீ எனக்காக இவ்வளவு சிரமப்படனுமா?” என்றாள்.

 

“ஆமாம். எனக்குத் தெரிஞ்சு நீ ஆசைப்பட்டுப் பேசினது இதைப் பத்தித் தான்! அப்பறம் நான் எப்படி இதை அப்படியே விட முடியும்?” என்று அவளிடம் விளக்கிக் கூறினாள் நிவேதிதா.

 

“தாங்க்ஸ் நிவி!” என அவளிடம் தனது நன்றியைத் தெரிவித்தாள் யக்ஷித்ரா.

 

அவள் இதை அப்படியே தன்னுடைய தாய் மற்றும் தங்கையிடமும் பகிர்ந்து கொண்டதும்,

 

“ம்ஹ்ம். நாங்களும் அந்தப் பொண்ணுக்குத் தாங்க்ஸ் சொன்னதாகச் சொல்லிரு” என்றுரைத்தனர் இருவரும்.

 

அதற்கடுத்த நாள், தான் வாக்குக் கொடுத்தபடியே உடையை எடுத்துக் கொண்டு வந்து நிவேதிதாவிடம் தந்தாள் அவளது வகுப்பு மாணவி.

 

அதற்குப் பெரிய நன்றியைச் சொல்லி விட்டு அந்த உடையைத் தன் தோழியிடம் ஒப்படைத்தாள் நிவேதிதா.

 

                 – தொடரும் 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்