Loading

வானம் 23

ஏப்ரல் 12, 2022

மாலைப்பொழுதில் நடுகூடத்தில் சாய்வாய் அமர்ந்திருந்தான் சித்தார்த். வெளியே விளையாடிக் கொண்டிருந்த இதழிகா வேகமாக உள்ளே ஓடிவரவும், “இதழி மா எத்தன தடவ சொல்லிருக்கேன் இப்படி வேகமா ஓடக்கூடாதுனு” என சிறு கண்டிப்போடு மகளை பார்க்க அவளோ அதனை எல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் இல்லை.

வேகமாக வந்து அவனது மடியில் அமர்ந்தவள், “அப்பா எனக்கு தம்பிபாப்பா வேணும் ப்பா, ப்ளீஸ்” என அவன் தாடையை பிடித்து கொஞ்சினாள்.

அவளது வார்த்தைகளில் ஸ்தம்பித்திருந்தான். கையில் காஃபி டம்பளரோடு வந்த கற்பகம்மாளோ பேத்தியின் வார்த்தைகளில் அதனை நழுவ விட்டிருந்தார்.

தன்னை ஒருவாறு சமன்படுத்தியவன், “என்னடா இதழி மா, திடீர்னு இந்த ஆச எப்படி வந்துச்சு!” என இதமாய் வினவ, “நம்ம பக்கத்து வீட்டு ராம் இருக்கான்ல ப்பா, அவனுக்கு தங்கச்சிபாப்பா பொறக்க போகுது, இனி உன் கூட விளையாட வர மாட்டேனு சொல்றான் ப்பா. எனக்கும் தம்பி பாப்பா இருந்தா நானும் அதுகூட விளையாடுவேன்ல” என்றவளுக்கு என்ன பதில் அளிப்பது எனப் புரியாமல் விழித்தான் சித்தார்த்.

ஆனால் அவளோ விடாமல், “அவங்க அம்மா வயிறு இம்மா பெருசு இருக்கு ப்பா. அதுல தான் தங்கச்சிபாப்பா இருக்குனு சொன்னான். அப்போ உன் வயித்துலயும் தம்பிபாப்பா வரும்ல ப்பா” என அவன் வயிற்றை தொட்டுக் காட்ட, சித்தார்த் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டான்.

“நானும் ராம்ட்ட சொன்னேன் பா, என் அப்பாட்ட சொல்லி எனக்கும் தம்பிபாப்பா வரும்னு. அதுக்கு அவன் உன் அப்பாட்ட கேட்டா வராது, அம்மாட்ட கேட்கணும்னு சொல்றான். எனக்கு அம்மாவும் நீ தான ப்பா. அப்போ நீ தான எனக்கு தம்பிபாப்பாவ கொடுப்ப”

அவளின் வார்த்தைகளில் அவன் உடைந்துபோக அவளை இறுக அணைத்துக்கொண்டான். தன் தந்தையின் செயல் புரியாமல் அவள் மலங்க மலங்க விழிக்க கற்பகம்மாளோ முந்தானையால் முகத்தைப் பொத்திக்கொண்டு அழத் துவங்கினார்.

ரயுவால் மேற்கொண்டு படிக்க இயலாமல் வேகமாய் மூடி வைத்தாள். வானதியின் வார்த்தைகள் வேறு காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

“அவன ஆம்பளையே இல்லனு சொல்லித் தான ஓடிப் போனா”

நேராக அவள் அறைக்குச் சென்று அவள் கன்னத்தில் நான்கு அறை விட்டு, ‘என் சித் தான் டி உண்மையான ஆம்பளை. அவர கொற சொல்ல உங்களுக்கு தான் தகுதி இல்ல’ எனக் கூற வேண்டும் என உடலும் உள்ளமும் முனைந்தது.

அவன் வாழ்வில் என்ன நடந்தது என்றுகூட அறியாமல் இவர்களின் கற்பனைக்கு தீனி போட்டு அதனை ஊரெங்கும் பரப்பி வைத்திருக்கின்றனர். அரைகுறையாய் தெரிந்துகொண்ட விசயத்தை வைத்து தாங்களே ஒரு கதையை புனைந்து ஊரெங்கும் அதனை பரப்பி வைத்திருந்திருக்கும் இந்த சமூகத்தை நினைத்து வெட்கிப் போனாள் சரயு.

நம் ஊரில் குடும்ப கட்டுப்பாடு என்பது பொதுவாய் பெண்களுக்கானது என்றே எழுதப்படாத விதி. இதில் இருந்து விலகி ஓரிரு ஆண்கள் முன்வந்து வாசெக்டமி செய்து கொண்டாலும் நம் சமூகம் அவர்களை வரவேற்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி தான்.

அதுமட்டுமின்றி வாசெக்டமி பற்றிய போதுமான விழிப்புணர்வும் நம் மக்களிடையே இல்லை என்பதே கசப்பான உண்மை. வாசெக்டமி செய்து கொண்டால் குழந்தைப்பேறு மட்டுமே தவிர்க்க முடியும். அவர்களின் தாம்பத்திய உறவிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பதைக் கூட பலரும் அறியாமல் அதனைப் பற்றின தவறான கண்ணோட்டத்துடனே வலம்வருகின்றனர்.

சித்தார்த்தின் மீதான வியப்பு காதலாக வலுவடையத் தொடங்கியது. இதுவரை சிறு தூரலாய் இருந்த காதல் தற்போது அடைமழையாய் வலுக்கத் தொடங்கி இருக்க டைரியை நெஞ்சோடு இறுக புதைத்துக் கொண்டாள் சரயு.

இரவு முழுவதும் தூக்கம் மறந்து அவனின் நினைவிலே சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். விடிந்தும் எழாமல் படுக்கையிலேயே படுத்திருக்க, “டைமாச்சு டி. என்ன இன்னிக்கு இன்னும் எந்திரிக்காம படுத்திருக்க? காலேஜ்க்கு கிளம்ப வேண்டாமா?” என சம்யுக்தா அவளை உலுக்க,

“கொஞ்சம் தலவலியா இருக்கு டி. நீ கிளம்பு, நான் மேம்ட்ட லீவு சொல்லிக்கிறேன்” என்றவளை நம்பாத பார்வை பார்த்தாள் சம்யுக்தா.

அவளை ஒருவழியாக சமாளித்து அனுப்பி வைத்தவள் அனைவரும் கிளம்பும் நேரத்திற்காக காத்திருந்தாள். கல்லூரி, வேலை என அனைவரும் தங்களது பணிநிமித்தம் வெளியே சென்றுவிட விடுதியே நிசப்தமாய் காணப்பட்டது.

அதன்பின் எழுந்த சரயு குளித்து முடித்து வெளியே கிளம்பினாள்.

காலையில் வழக்கம்போல் கடைக்கு வந்த சித்தார்த் தனது டைரியை தேட அதுவோ அவன் கைகளில் அகப்படாமல் போனது. “நேத்து கிளம்பும்போது இங்க தான வச்சேன். எங்க போச்சு” என்றவாறே தேடத் தொடங்கினான்.

“என்னண்ணா, ஏதோ தேடற மாதிரி இருக்கு. எதுவும் மிஸ் பண்ணிட்டீங்களா?” என்றவாறே வந்தான் பாண்டியன்.

“என்னோட டைரிய காணோம் பாண்டியா. இங்க தான் வச்சேன், நீ எதுவும் பார்த்தியா?” என்றவாறே தனது தேடுதல் பணியை தொடர, அவன் பார்க்கவில்லை என்று கூறவும் ஏதோ நினைவு வந்தவனாய் சிசிடிவி காட்சிகளை பார்க்கத் துவங்கினான்.

அதற்குள் மளிகை பொருள்கள் வந்திருக்க அதனை குடோனில் இறக்குவதற்காக பாண்டியன் கிளம்பிவிட, சித்தார்த்தின் கண்கள் சிசிடிவி காட்சிகளில் தேடத் துவங்கின.

அனைவரும் கிளம்பும் நேரத்தில் சரயு அந்த டைரியை எடுப்பது அவன் கண்முன் திரையில் படமாய் ஓட, சித்தார்த்தின் கண்களோ இறுக மூடின.

அதனை அவள் படித்திருந்தால் அதன்பிறகு அவளின் முடிவு என்னவாக இருக்கும் என அவனால் ஊகிக்க முடியவில்லை. ஏற்கெனவே அவளின் செயல்களில் இவன் தடுமாறிக் கொண்டிருக்க தனது கடந்தகாலத்தை அறிந்தபின் அவளின் எதிர்வினைகள் என்னவாக இருக்கும் என நினைத்தவனுக்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போலிருந்தது.

எப்பொழுதும் கவனமாய் இருப்பவன் நேற்று எப்படி இதில் தவறு செய்தேன் என தன்னையே நொந்துகொண்டான்.

அவனை மேலும் சிந்திக்க விடாமல் பாண்டியன் அழைத்துவிட குடோனில் இறக்கி வைக்கப்பட்ட பொருட்களை பார்க்கச் சென்றுவிட்டான்.

வேகமாய் கடையினுள் நுழைந்தவளின் கண்கள் சித்தார்த்தின் இருப்பிடத்தை தான் நோக்கின. அவனைக் காணாததால், கண்கள் அலைபாய  உடன் பணிபுரியும் கலா, “என்ன சரயு, காலேஜ்க்கு போகாம இங்க வந்துட்ட! இன்னிக்கு லீவா என்ன?” என்றாள்.

“இல்ல க்கா. கொஞ்சம் வேலையா வெளிய வந்தேன். அதான் இந்தப்பக்கம் வந்துட்டு போகலாம்னு” என்றவள், “ஆமா சித்தார்த் சார் எங்க கா? இன்னும் வரலயா” என்றாள் கண்களில் தவிப்புடன்.

அவளும் சுற்றிமுற்றித் தேடியவாறே, “சார் அப்பவே வந்துட்டாரே” என்றவள், சில விநாடிகள் கழித்து, “சரக்கு வந்துருக்குனு பாண்டியன் குடோனுக்கு போகணும்னு சொல்லிட்டு இருந்தாங்க. ஒருவேள சாரும் அங்க போய்ருக்கலாம்” என்ற அடுத்த நொடியே குடோனை நோக்கி செல்லத் தொடங்கினாள் சரயு.

அவசரமாய் செல்பவளைக் கண்டவளுக்கு யோசனை படிய தனது வேலையை கவனிக்கச் சென்றார் கலா.

அவர்களது சூப்பர் மார்கெட்டிற்கு அடுத்ததாகவே தான் குடோனும் அமைந்திருக்க அங்கு பாண்டியனும் சித்தார்த்ம் பொருட்களின் அளவை சரிபார்த்துக் கொண்டிருந்தனர். உள்ளே நுழைந்தவளின் கண்களில் முதலில் பட்டது சித்தார்த் தான்.

அவள் பார்வைக்கு அவனின் முதுகு பக்கம் தெரிய பாண்டியனிடம் ஏதோ விசாரித்துக் கொண்டிருந்தான். அவனைக் கண்ட அடுத்த நொடி தாயைக் கண்ட சேயை போல வேகமாய் ஓடி அவனது முதுகோடு அணைத்திருந்தாள்.

அவளது திடீர் அணைப்பில் அவனது கைகளில் இருந்த குறிப்பேடு தவறி விழுந்தது. ஓர் நொடி அதிர்ந்த பாண்டியன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து மெதுவாக வெளியேறினான்.

அவனின் இதயத்துடிப்போ 150-யை கடந்திருந்தது. தன்னை அணைத்தது சரயு தான் என்பதை உணர முடியாமல் இல்லை. ஆனால் அவளின் வினைக்கு எதிர்வினையாற்ற முடியாமல் நின்றவனின் கரங்கள் லேசாக நடுங்கத் தொடங்கின.

“எனக்கு நீங்க வேணும் சித். I want You till my last breath” என்றவளின் அணைப்பு இன்னும் இறுகத் தொடங்கியது. அவளது இதழ்கள் அவனது முதுகில் பதிந்திருந்தன.

ஓரிரு நிமிடங்கள் அந்த மோன நிலையை கலைக்க இருவருமே எத்தனிக்கவில்லை. தன்னை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தவன் அவனது வயிற்றோடு கோர்த்திருக்க அவளது கரங்களை மெல்ல விலக்கிவிட்டான்.

முதலில் கைகளை விலக்க மறுத்தவளை கடினப்பட்டு விலக்கி விட்டான் சித்தார்த். அவனது முகத்தை பார்க்க முடியாமல் தரையை நோக்கி குனிந்திருந்தாள் சரயு.

குடோனில் வேறு யாரும் இல்லாததால் நிசப்தம் குடிகொண்டிருந்தது. “உங்க பெர்மிசன் இல்லாம உங்க டைரிய எடுத்ததுக்கு சாரி சித்” என்றவளின் வார்த்தைகளில் வெறும் காற்று தான் வெளிவந்தது.

“என்னைப் பத்தி முழுசா தெரிஞ்சும் தான் இந்த முடிவு எடுத்துருக்கியா சரயு?” அவளது கண்ணை நேராக எதிர்கொண்டான்.

அவளது இமைகள் தாழ்த்திக் கொள்ள, “ம்” என்ற சப்தம் மட்டுமே வெளிவந்தது. “இப்போ எடுத்த முடிவு தப்புனு நீ புரிஞ்சுக்க கூடிய காலம் வரும்போது என்ன பண்ணுவ?” என்றவனை வேகமாய் ஏறிட்டாள் அதிர்ச்சியோடு.

“இந்த உலக வாழ்க்கைய பத்தி இன்னும் தெரிஞ்சுக்காத காலேஜ் பொண்ணு நீ. உன் பிரண்ட்ஸ், காலேஜ், ஹாஸ்டல் இப்போ இதுமட்டும் தான் உன்னோட உலகம் சரயு. அதுனால இப்போ எடுக்கிற எந்த முடிவுமே உனக்கு சரினு தோணும். ஆனா இந்த கட்டமைப்ப விட்டு வெளிய வந்து இந்த உலகத்த பார்க்கும்போது தான் நீ எடுத்த முடிவு எவ்வளவு பெரிய முட்டாள்தனம்னு புரியும். என் வயசு என்னனு தெரியுமா உனக்கு?” என்றவனிடன் ‘ம்’ என தலையாட்டினாள்.

“34. உனக்கு 22 தான் ஆகுது. அதுவும் இல்லாம எனக்குனு ஒரு குழந்தை இருக்கு. நான் ஏற்கெனவே திருமணம் ஆனவன்…” என்றவனை மேற்கொண்டு பேச விடாமல், “அதான் டைவர்ஸ் அப்ளை பண்ணிட்டீங்கள்ள” என இடைமறித்தாள் சரயு.

“நான் டைவர்ஸ் அப்ளை பண்ணது இன்னொரு கல்யாணம் பண்றதுக்காக இல்ல சரயு. என் மனநிம்மதிகாக, என் இதழிமா’வுகாக. ஏற்கெனவே பட்ட காயங்கள் இன்னும் ஆறாத ரணமா இருக்கும்போது…” என்றவனின் வார்த்தைகளில் ரணத்தின் வலி தென்பட்டது.

“இது எல்லாத்தையும் தாண்டி என்னை நம்பி வர்றவளுக்கு என்னால…” என்றவனின் குரலில் நடுக்கம் ஏற்பட, சிறிதும் தாமதிக்காமல் அவனை இறுக அணைத்திருந்தாள் சரயு.

“ப்ளீஸ் சித். உங்கள நீங்களே வதைச்சுக்காதீங்க. எனக்கு நீங்க வேணும். நீங்க தான் வேணும். உங்கள என் வாழ்க்கைல இழக்க விரும்பல” என்றவள் அவனது முகத்தை கையில் ஏந்த அவனது கண்களோ இறுக மூடியிருந்தன.

அவனது முகத்தில் மனதின் வலி பிரதிபலிக்க, “I want you till my last breath” என்றவாறே எக்கி அவனது இமைகளில் தனது இதழை ஒற்றினாள். தன்னைக் கட்டுப்படுத்த அவன் முற்பட உடலில் சிறு நடுக்கம் ஏற்பட்டது. பின் வேகமாய் அவளை விலக்கியவன், “ஸ்டாப் இட் சரயு. சின்னப் புள்ளைனு பொறுமையா சொல்லிட்டு இருந்தா நீ உன் லிமிட்ட கிராஸ் பண்ற. மொத படிப்ப ஒழுங்கா முடிக்கிற வழிய பாரு” என முயன்றவரை வார்த்தைகளில் கடினமேற்ற முற்பட்டு தோற்றுப் போக வேகமாய் அங்கிருந்து வெளியேறினான்.

அவளது நெருக்கத்தில் அவன் தன்னை இழக்கத் தொடங்கவே தான் கடினபட்டு தன்னை விலக்கிக் கொண்டு அங்கிருந்து ஓடத் துவங்க, அதனை உணர்ந்தவளாய் சரயுவின் இதழ்கள் குறுநகையை தவழவிட்டது.

_தொடரும்

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
6
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. Sarayu super. Athaivada sidhu super .adutha ud eppo sis