Loading

மறுநாள் காலை அதிகாலையிலேயே எழுந்த சமுத்ராவின் மனம் உற்சாகத்தோடு இருந்தது.

எழுந்ததும் தன் வயிற்றை ஆதூரமாக தடவிக் கொடுத்தவள் 

“குட்மார்னிங் பாப்பு செல்லம். நைட் நல்லா தூங்குனீங்களா? இன்னைக்கு அம்மாவும் பாப்புவும் கோவிலுக்கு போறோம். கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு வருவோம். அப்பாவும் வந்தா நல்லா இருக்கும். ஆனா இப்போ அப்பா நம்ம கூட இல்லையே.” என்று யோசித்தவளுக்கு ஏதோ யோசனை தோன்ற

“பாப்பு அப்பாவை வரவைப்போமோ?” என்று கேட்டபடியே தன் போனை எடுத்தவள் ஷாத்விக்கிற்கு அழைத்தாள்.

அழைப்பு சற்று தாமதமாகவே எடுக்கப்பட

“ஹலோ மாம்ஸ்.” என்று சமுத்ரா உற்சாக குரலில் பேச ஷாத்விக்கோ தூக்க கலக்கத்தில் 

“நான் நல்லமூடுல தூங்கிட்டு இருக்கேன்.தயவு செஞ்சு போனை வச்சிரு பவித்ரா.” என்றவன் எதிர்புறமிருந்து பதிலை கூட எதிர்பார்க்காமல் அழைப்பை துண்டிக்க சமுத்ராவிற்கோ கடுப்பாக இருந்தது.

மீண்டும் அழைத்தவளிடம்

“ஒரு தடவை சொன்னா புரியாதா உனக்கு? ஏன் எல்லாரும் என்னையே டர்ன் வச்சு டார்சர் பண்ணுறீங்க?” என்று போனிலேயே தூக்க கலக்கத்தில் ஷாத்விக் புலம்ப

“வேற யாரு டார்சர் பண்ணுறாங்க?” என்று சமுத்ரா கடுப்புடன் கேட்க இப்போது குரலை அடையாளம் கண்டுகொண்டான் ஷாத்விக்.

சட்டென்று கண்களை தேய்த்துக்கொண்டு எழுந்தமர்ந்த ஷாத்விக் காதிலிருந்து போனை எடுத்து பார்க்க அதில் சமுத்ராவின் பெயர் தெரிந்தது.

 சமுத்ராவின் பெயரை பார்த்ததும் பதறியவன் உள்ளுக்குள்

“ஐயய்யோ இவனு தெரியாமல் கடுகடுனு பேசிட்டேனே” புலம்பியபடியே

“சமுத்ரா நீ என்ன இந்த நேரத்துல?” என்று ஷாத்விக் கேட்க

“வேற யாரு கூப்பிடுவாங்கனு எதிர்பார்த்தீங்க?” என்று அவள் எதிர்கேள்வி கேட்க ஷாத்விக்கிற்கு தான் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

“அது அது நீ இப்படி திடீர்னு கூப்பிடுவனு எதிர்பார்க்கல.” என்று கூறியவனின் மனமோ சற்று நேரத்திற்கு முன் சமுத்ரா எப்படி கூப்பிட்டாளென்ற யோசனையில் ஆழ்ந்தது.

ஆனால் அதற்கெல்லாம் இடம் கொடுக்காதவள்

“ஏதோ டார்ச்ர்னு சொன்னீங்களே?” என்று அவள் மீண்டும் தொடர

“அது தூக்கம் கலைஞ்சிடுச்சேனு கடுப்புல பவித்ரானு நெனைச்சு அப்படி சொல்லிட்டேன்.” என்று ஷாத்விக் வாலண்டியராகவே பாயிண்ட் எடுத்துகொடுக்க

“அப்போ இன்னும் பவித்ரா கூட பேசிட்டு தான் இருக்கீங்க?” என்று கேட்டவளுக்கு என்ன பதில் சொல்வதென்று ஷாத்விக்கிற்கு தெரியவில்லை.

பவித்ரா சில காலம் சமுத்ராவின் வீட்டில் தங்கியிருந்த போதிலும் பரசுராமர் இறப்பிற்கு ஊரிற்கு வந்தவளை ஏதேதோ காரணம் சொல்லி மீண்டும் வராதபடி செய்துவிட்டான் ஷாத்விக்.

ஆனாலும் கூட இப்படி சில நேரங்களில் அவள் அவனுக்கு அழைத்து அவனை கடுப்பேற்றுவதுண்டு. இன்றும் அவளாக தான் இருக்குமென்று அப்படி பேசிவிட்டான்.

“இப்போ எதுக்கு கூப்பிட்ட?” என்று ஷாத்விக் பேச்சை மாற்ற

“இது நான் கேட்ட கேள்விக்கான பதில் இல்லையே?” என்று சமுத்ரா தன் கேள்விக்கான பதிலை தெரிந்துகொள்வதற்கு பிடிவாதமாக இருக்க

“நான் எதுவும் பேசுல. அவ தான் போரடிக்கும் போதெல்லாம் கூப்பிட்டு தொந்தரவு பண்ணிட்டு இருப்பா.” என்று ஷாத்விக் சொல்ல

“நிஜமாகவே தொந்தரவுனு நினைச்சீங்கனா ப்ளாக் லிஸ்டுல போட வேண்டியது தானே.” என்று சமுத்ரா பாயிண்டாக கேட்க ஷாத்விக்கிற்கு தான் மண்டை காய்ந்தது.

“என்ன இவ இத்தனை கேள்வி கேட்குறா? ஒன்னா இல்லாதப்பவே இவ்வளவு கேள்வி கேட்குறானா இவளோட சமாதானம் ஆகிட்டா உன் நிலைமை ரொம்ப மோசமாகிடும் போலயே ஷாத்விக்கு” என்று மனசாட்சி அவனை கிண்டல் செய்ய சமுத்ராவின் வாயை அடைப்பதற்காக

“என் மேல முழு உரிமை இருக்க என் அம்மாவே என்னை இத்தனை கேள்வி கேட்டதில்லை. உரிமையே இல்லைனு முகத்துக்கு நேரா சொன்னவங்க எல்லாம் இப்போ கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டாங்க.” என்றவனது பேச்சு சமுத்ராவை வாயடைக்க செய்யுமென்று அவன் எண்ணியிருக்க சமுத்ரா இதற்கெல்லாம் அசரும் ஆளில்லை என்று அவளின் அடுத்த கேள்வி அவனுக்கு புரியவைத்தது.

“அத்தை பொண்ணுங்கிற உரிமையில் எந்த கேள்வியும் கேட்கலாம். அதோட…” என்றவள் அடுத்து வந்த வார்த்தைகளை மென்று விழுங்கிவிட்டு

“அதோட இப்போதைக்கு வீட்டுல உள்ளவங்க உங்களுக்கு என்ன பிரச்சினைனாலும் என்னை தான் கேட்பாங்க. அவங்களுக்கு பதில் சொல்லுற உரிமையில் கேட்குறேன்.” என்றவளின் பதிலில் சற்று மிரண்டு தான் போனான் ஷாத்விக்.

அவனின் மனமோ 

“இவளுக்கு என்னாச்சு திடீர்னு? நேத்து சம்பந்தமே இல்லாமல் கால் பண்ணி சாப்பிட்டீங்களானு கேட்குறா. இன்னைக்கு பவித்ரா கூட எதுக்கு பேச்சு வார்த்தைனு மிரட்டுறா. இவ என்ன நினைக்கிறா ஏன் இப்படி நடந்துக்குறானு ஒன்னுமே புரியமாட்டேங்குது” புலம்ப

“சரி ப்ளாக் லிஸ்டுல போடுறேன். இப்போ எதுக்கு கூப்பிட்டனு சொல்லு.” என்று ஷாத்விக் சமாதானக்கொடி காட்ட

“உங்க அட்வர்டீஸ்மெண்டுக்கு டீடெயில்ஸ் கேட்டு இருந்தேனே?” என்று சமுத்ரா சொல்ல

“அதுக்காகவா இந்த காலையில கூப்பிட்ட?” என்று ஷாத்விக் சந்தேகமாக கேட்க

“ஆமா. எனக்கு வேலை ரொம்ப முக்கியம். என்கிட்ட கொஞ்சம் சேம்ப்பல் இருக்கு. நீங்க வந்து பார்த்து எது சரிப்படும்னு சொன்னீங்கனா அதுக்கு தகுந்த படி ரெடி பண்ணச் சொல்லிடுவேன்.” என்று சமுத்ரா கூற ஷாத்விக்கிற்கு இது நம்பும்படியாக இல்லாத போதிலும் அவனுக்கு இதனை நம்புவதை தவிர வேறு வழியிருக்கவில்லை.

“சரி எத்தனை மணிக்கு ஆபிஸிற்கு வரட்டும்?” என்று ஷாத்விக் கேட்க

“ஆபிஸிற்கு வேணாம் வீட்டுக்கு வாங்க. இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் ஆபிஸிற்கு கிளம்பிடுவேன். அதனால ஏழரை மணிக்கு வந்தீங்கனா சரியா இருக்கும்.” என்று சமுத்ரா கூற ஷாத்விக்கும் சரியென்று விட்டு போனை வைத்தான்.

போனை வைத்த ஷாத்விக்கிற்கு சமுத்ராவின் பேச்சு சற்று குழப்பத்தை கொடுத்தது.

“இவ இப்படி தன்மையா பேசுற ஆளில்லையே. என்னாச்சு இவளுக்கு? இதுவரைக்கும் இவ இவ்வளவு அமைதியாக அப்பாகிட்ட பேசி தான் பார்த்திருக்கேன். என்ன திடீர்னு இப்படி பேசுறா? ஏதாவது பிரச்சினையா இருக்குமோ? அப்படி ஏதும் இருந்தா மஹதி சொல்லியிருப்பாளே. ஆனா அவளுக்கு தெரியாமல் இருந்தா?” என்று யோசித்தவனுக்கு சற்று கவலையாக இருந்தது.

“சரி அதான் வீட்டுக்கு போறோமே பார்த்துக்கலாம்.” என்று நினைத்தவன் படுக்கையிலிருந்து எழுந்து குளியலறைக்குள் புகுந்தான்.

மறுபுறம் போனை வைத்த சமுத்ரா

“பாப்பு இன்னைக்கு அப்பா நம்மளை பார்க்க வாராங்க. நான் நீங்க அப்பா மூனு பேரும் கோவிலுக்கு போறோம்.” என்று மகிழ்ச்சியுடன் கருவில் அமைதியாயிருந்த சிசுவிடம் கூறியவள் குளிக்கச் சென்றாள்.

குளித்து முடித்து புடவையில் தயாரானவள் தன்னை வழமைக்கு மாறாகவே அலங்கரித்துக்கொண்டாள். நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டினை ஒட்டிக்கொண்டவள் அனைவர் கண்ணுக்கு தெரியும் வகையில் வகிட்டிலும் திலகமிட்டாள். அது இன்னும் அவளை அழகாய் காட்ட புடவையில் தாய்மை மிளிர்வுடன் தேவதையாய் ஜொலித்தாள் சமுத்ரா.

புடவையில் தயாராகி வெளியே வந்த சமுத்ராவை மாலதி ஆச்சர்யமாக பார்த்தார். சந்தேகத்தோடு காலெண்டரை பார்த்தவர் எதுவுமில்லையென்று உறுதிசெய்துகொண்டு சமுத்ரா அருகே சென்றார்.

“என்ன சமுத்ரா இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்ட?”என்று கேட்க தன் புடவையை சரி செய்தபடி

“கோவிலுக்கு போயிட்டு அப்படியே ஆபிஸ் போகலாம்னு ரெடியாகிட்டேன் அத்தை.” என்று சமுத்ரா கூற அவள் முகத்திலிருந்த மலர்ச்சி மாலதியின் பார்வையிலும் விழுந்தது.

“சரி டிபன் எடுத்து வைக்கிறேன். சாப்பிட்டு போம்மா.” என்று கூற

“அத்தை மாமாவும் வருவாரு. அவருக்கும் சேர்த்து எடுத்து வைங்க.” என்று சமுத்ரா கூற மாலதிக்கு மகிழ்ச்சி தாளவில்லை.

“ஷாத்விக் மாப்பிள்ளை வர்றாரா? முன்னாடியே சொல்லியிருந்தா இன்னும் தடல்புடலாக செய்திருப்பேன்ல?” என்று மாலதி உற்சாகத்துடன் கூற

“வேலை விஷயமா ஏதோ பேசனும்னு சொன்னாரு. அதான் வீட்டுக்கு வரச்சொன்னேன்.” என்று சமுத்ரா நடந்ததை சற்று மாற்றிக்கூற மாலதிக்கோ சமுத்ரா ஷாத்விக்கிடம் பேசியதே போதும் என்றிருந்தது.

“சரி நீ இரும்மா. நான் சாப்பாட்டை எடுத்துவச்சுட்டு சொல்லுறேன்.” என்று கூறிய மாலதி மஹதி மற்றும் வினயாஸ்ரீயை தேடி சென்றார்.

அவர்களிடமும் விஷயத்தை சொன்னவர் சமையலுக்கு உதவுமாறு அழைத்துச்சென்றார்.

சற்று நேரத்தில் ஷாத்விக்கும் வர ஹாலில் அமர்ந்திருந்த சமுத்ராவை பார்த்து அசந்து தான் போனான் ஷாத்விக்.

புடவையில் அளவான ஒப்பனையுடன் கம்பீரமாக அமர்ந்து லாப்டாப்பில் ஏதோ செய்துகொண்டிருந்தவளின் அழகு அவனை கிறங்கடித்தது.

“என்ன என் பொண்டாட்டி இன்னைக்கு இம்புட்டு அழகா இருக்கா. அதுவும் பக்கவா குடும்ப குத்து விளக்கு மாதிரி இருக்காளே.” என்று ரசித்தபடியே தன் மொபைலை எடுத்தவன் அவள் அறியாது அவளை புகைப்படமெடுத்துக்கொண்டான்.

மொபைலை பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டவன் 

“இவ பார்க்கும் போது ஏதேதோ தோனுதே. டேய் ஷாத்விக்கு கொஞ்ச நேரத்துக்கு அடக்கி வாசி. இல்லைனா வேதாளம் முருங்கமரம் ஏறி மறுபடியும் தலைகீழா தொங்க ஆரம்பிச்சிடும்.” என்று தனக்கு தானே எச்சரித்துக்கொண்டவன் மாலதியை அழைத்தபடியே உள்ளே வந்தான்.

ஷாத்விக்கின் சத்தம் கேட்டு தலையை திருப்பி பார்த்த சமுத்ரா அவனை கண்டதும் முகம் மலர்ந்து

“வாங்க மாமா.” என்று அழைக்க அவனோ அவளை கண்டுகொள்ளாததை போல்

“சித்தி மஹதி” என்றபடி அனைவரின் பெயரையும் ஏலம் போட்டான்.

அவன் வேண்டுமென்றே தன்னை கடுப்பேற்றுகிறான் என்று புரிந்து கொண்ட சமுத்ரா

“மஹி வினி அத்தை” என்று அவளும் எல்லாரையும் அழைக்க ஷாத்விக்கோ அவளை திரும்பி பார்த்தான்.

அவளோ “என்ன லுக்கு?” என்பது போல்‌ பார்க்க ஷாத்விக்கோ

“இவகிட்ட என்னமோ சரியில்லை. சீக்கிரம் என்னதுன்னு கண்டுபிடிக்கனும்.” என்று உள்ளுக்குள் எண்ணிக்கொண்டான்.

இருவரின் சத்தம் கேட்டு மாலதி சமையலறையிலிருந்து வெளியே வந்தவர் அங்கு ஷாத்விக் இருப்பதை கண்டு அவனை வரவேற்றார்.

“அத்தை சாப்பாடு எடுத்து வைங்க.” என்று சமுத்ரா கூற

“எனக்கு எதுவும் வேணாம் சித்தி.” என்று ஷாத்விக் மறுக்க

“உங்களுக்கும் சேர்த்து தான் அத்தை சமைச்சிருங்காங்க. அதனால தாரளமாக சாப்பிடலாம்.” என்று சமுத்ரா சொல்ல ஷாத்விக்கிற்கு சுருசுருவென்று கோபம் வந்த போதிலும் மாலதி இருந்ததால் எதனையும் காட்டிக்கொள்ளவில்லை.

சூழ்நிலை சூடுபிடுப்பதை உணர்ந்த மாலதி ஷாத்விக்கை சமாளித்து உணவருந்த அழைத்து சென்றார்.

ஷாத்விக்கோடு சமுத்ராவும் அமர்ந்து உண்ணத்தொடங்கினாள். எப்போதும் அளவாக சாப்பிடுபவள் இன்று வழமைக்கு அதிகமாக சாப்பிட்டாள். இதனை ஷாத்விக் கவனிக்காத போதிலும் மாலதி கவனித்தார். 

ஆனால் பசி அதிகம் என்று எண்ணிக்கொண்டவர் வேறு எதுவும் கேட்கவில்லை.

உணவை முடித்ததும் ஷாத்விக் வேலை பற்றி விசாரிக்க

“சில சேம்ப்பல் என்னோட ஆபிஸ் டெஸ்டாப்ல தான் இருக்கு. அங்க போய் பார்ப்போமா?” என்று சமுத்ரா சமர்த்தாக கேட்க இப்போது ஷாத்விக் அவளை முறைத்தான்.

“இதுக்கு என்னை அங்கேயே வர சொல்லியிருக்கலாமே?” என்று ஷாத்விக் சற்று எரிச்சலுடன் கேட்க

“நானும் அங்க இருக்கும்னு எதிர்பார்க்கல. காலையில செக் பண்ணும் போது தான் சிலது இதுல இல்லைனு தெரிஞ்சிக்கிட்டேன். இப்போ என்ன அங்க வரமுடியாதா?”என்று சமுத்ரா கேட்க ஷாத்விக்கிற்கு தான் கடுப்பாக இருந்தது.

அலைக்கழித்து விட்டு அதட்டலாக ஆர்டர் போடுபவள் தலையில் ஒன்று போடமுடியாத தன் நிலையை வெறுத்தான் ஷாத்விக்.

வீட்டில் மற்றவர்கள் முன்னிலையில் வாக்குவாதம் வேண்டாமென்று நினைத்தவன்

“போகலாம்.” என்றபடி முன்னே நடக்க சமுத்ராவும் மாலதியிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள்.

காரின் சாவியை ஷாத்விக்கிடம் சமுத்ரா தூக்கிபோட

“இப்போ மேடத்துக்கு ட்ரைவர் வேலையும் பார்க்கனுமா?” என்று உள்ளுக்குள் கடுகடுத்தவன் சமுத்ரா அமர்ந்ததும் வண்டியை எடுத்தான்.

பாதி வழியில் கோவில் அருகே சமுத்ரா வண்டியை நிறுத்த சொல்ல

“இப்போ என்ன?” என்ற ரீதியில் பார்த்தான் ஷாத்விக்.

“கோவிலுக்கு போயிட்டு போகலாம்” என்று கூறியவன் அவனின் பதிலை கூட எதிர்பார்க்காமல் வண்டியிலிருந்து இறங்கி சென்றுவிட்டாள்.

“இவ என்ன தான் நெனச்சிட்டு இருக்கா மனசுல?இவகிட்ட ஒரு உதவி கேட்டது குத்தமா போச்சு” என்று முனகியபடியே அவனும் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு கோவிலுக்குள் சென்றான்.

இருவரும் தம்பதிகளாக சேர்ந்து வெவ்வேறு பிரார்த்தனைகளோடு சன்னிதானத்தின் முன் நின்று வேண்டினர்.

பின் பிரகாரத்தை சுற்றி வலம் வந்ததும் ஷாத்விக் கிளம்பலாமென்று சொல்ல சமுத்ராவும் மன நிறைவுடன் கோவிலிருந்து கிளம்பினாள்.

இருவரும் காரிலேறி கிளம்பி அவளின் அலுவலகம் நோக்கி சென்றனர்.

பாதி வழியில் சமுத்ரா சௌகரியமாக உணர

“மாமா வண்டியை கொஞ்சம் ஓரமா நிறுத்துங்க.” என்று கூற

“ஏன் என்னாச்சு?” என்று ஷாத்விக் வண்டியை நிறுத்த இடம் தேடியபடியே கேட்க

“ப்ளீஸ் மாமா நிறுத்துங்க.” என்று அவசரப்படுத்தியவள் ஒரு கையால் தன் நெஞ்சை நீவிகொடுக்க ஷாத்விக் ஒரு ஓரமாய் வண்டியை நிறுத்தியதும் சட்டென்று வண்டிக்கதவை திறந்துகொண்டு வெளியே இறங்கிய சமுத்ரா வாந்தி எடுக்கத்தொடங்கினாள்.

அவளின் நிலை கண்ட ஷாத்விக் உடனடியாக காரிலிருந்து இறங்கி அவளை தாங்கிக்கொண்டான்.

வயிற்றிலுள்ள அனைத்தையும் வாந்தி எடுத்து முடித்தவள் சோர்வுடன் அவன் மேலேயே சாய அவள் மெதுவாக அமர வைத்தவன் அவளுக்கு குடிக்க தண்ணீர் எடுத்து வந்தான்.

தன்னை சுத்தப்படுத்திக்கொண்ட சமுத்ரா மெதுவாக தண்ணீரை அருந்த அவளின் சற்று மட்டுப்பட்டது.

“என்னாச்சு சமுத்ரா? சாப்பிட்டது ஏதும் சேரலையா?” என்று கேட்க

“தெரியல மாமா. திடீர்னு வயித்தை புரட்டிட்டு வந்திடுச்சு.” என்று சமுத்ரா சொல்ல

“ஹாஸ்பிடலுக்கு போவோம் வா.” என்று ஷாத்விக் அழைக்க சட்டென்று சுதாரித்தவள்

“இல்ல அதுக்கு அவசியமில்லை. நேத்து தான் ஆஸ்பிடல் போயிட்டு வந்தேன்.” என்று சமுத்ரா கூற

“நேத்து போனீயா? ஏன் என்னாச்சு? மறுபடியும் உடம்புக்கு முடியலயா?” என்று ஷாத்விக் பதட்டத்துடன் கேட்க

“அதெல்லாம் எதுவும் இல்லை. ரெகுலர் செக்கப்புக்கு போனோன். கொஞ்சம் அன்பிட்டா இருக்கிறதா சொல்லி டாக்டர் கொஞ்சம் டேப்லெட்ஸ் கொடுத்தாங்க. வேற எதுவும் இல்லை.” என்று சமுத்ரா கூற ஷாத்விக்கிற்கு அவள் கூறுவதில் சற்றும் நம்பிக்கை இல்லை.

“எதுக்கும் ஒரு தடவை ஹாஸ்பிடல் போகலாமே?” என்று ஷாத்விக் கேட்க

“அதெல்லாம் தேவையில்லை. சாப்பாடு ஏதோ சரியா செரிமானம் ஆகல. கோவில்ல இருந்து கிளம்பும் போது வயிறு ஒரு மாதிரி தான் இருந்துச்சு.” என்று ஏதேதோ காரணம் கூறியவள் ஷாத்விக்கை அழைத்துக்கொண்டு கிளம்பினான்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்