Loading

சமுத்ரா மற்றும் ஷாத்விக் அவளது ஆபிஸிற்கு வந்ததும் சமுத்ரா ஷாத்விக்கை அவளது அறைக்கு அழைத்து சென்றாள்.

அவளது அறைக்கு வந்ததும் ஷாத்விக்

“காபி கிடைக்குமா?” என்று கேட்க சமுத்ரா அவனுக்கு காபி சொல்லிவிட்டு அவர்கள் வந்த வேலையை கவனிக்கத்தொடங்கினாள்.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது காபி வந்திட அதனை சமுத்ரா புறம் தள்ளி வைத்தவன்

“இதை குடி. வாந்தி எடுத்ததுல வயிறு காய்ஞ்சிருக்கும்.” என்று சொன்னவனின் அக்கறை சமுத்ராவிற்கு அத்தனை தித்திப்பாயிருந்தது.

மறுக்காமல் அவளும் அதை எடுத்து குடிக்க ஷாத்விக் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

அவள் குடித்துமுடித்ததும் 

“நாளைக்கு டாக்டருக்கு அப்பாயிண்மெண்ட் போடுறேன். மறுபடியும் ஒருதடவை செக் பண்ணிட்டு வந்திடலாம்.” என்று ஷாத்விக் கூற சமுத்ராவோ காபி கோப்பையை தள்ளிவைத்தபடி

“யாருக்கு?” என்று ஷாத்விக்கின் வார்த்தைகளுக்கான அர்த்தம் தெரிந்து தெரியாததை போல் கேட்க

“உனக்கு தான். நானும் கூட வாரேன்.” என்று ஷாத்விக் கூற

“அதுக்கு அவசியமில்லை. அதான் ஏற்கனவே டாக்டரை பார்த்தாச்சே.” என்று சமுத்ரா சொல்ல

“இங்க பாரு சமுத்ரா உன் பிடிவாதத்தை ஹெல்த் விஷயத்துல காட்டாத. ஏற்கனவே உனக்கு அப்பண்டிஸ் ஆப்பரேஷன் நடந்திருக்கு. இப்போ அன்பிட்டா இருக்கேன்னு சொல்லுற. ஒரு தடவை புல் பாடி செக்கப் செய்திட்ட எந்த கவலையும் இருக்காது.” என்று ஷாத்விக் சொல்ல

“நான் தான் எனக்கு எதுவும் இல்லைனு சொல்றேனே. அதோட நேத்து தான் ஹாஸ்பிடல் போயிட்டு வந்தேன். இன்னைக்கு இந்த வாமிட்டிங் கூட சாப்பிட்டது சரியாக செரிமானமாகதால நடந்தது. இதுல பயப்படுறதுக்கோ பிடிவாதம் பிடிக்கிறதுக்கோ எதுவும் இல்லை.” என்று சமுத்ரா சொல்ல ஷாத்விக்கிற்கு தான் எரிச்சலானது.

“உன் திமிரு தான் உன்னோட பலவீனம். யாரு சொன்னாலும் நீ கேட்கமாட்ட. என்னமோ செய்.” என்றவன் கோபத்தில் வந்த வேலையை கூட மறந்துவிட்டு எழுந்து சென்றுவிட்டான்.

அவன் செல்வதற்காகவே காத்திருந்ததை போல் சமுத்ரா மீண்டும் வாஷ் ரூம் நோக்கி ஓடினாள்.

மீண்டுமொருமுறை வாந்தி எடுத்து களைத்தவளுக்கு இப்போது பசி ஆட்டிபடைத்தது. மதியத்துக்கு எடுத்து வந்திருந்த உணவை விரைந்து காலி செய்தவள் அங்கிருந்து கிளம்பி மருத்துவமனைக்கு சென்றாள்.

நேற்று மருத்துவமனையிலிருந்து கிளம்பும் போதே கைனகாலோஜிஸ்ட் ஒருவரின் அப்பாயிண்மெண்ட் வாங்கியிருந்தாள் சமுத்ரா.

இன்று அவரை பார்க்கவே கிளம்பியிருந்தாள் சமுத்ரா.

அவள் மருத்துவமனை வந்தபோது பவனின் அன்னையான நிர்மலாவும் அங்கு தானிருந்தார்.

அவரின் தோழி ஒருவர் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க அவரை பார்ப்பதற்காக வந்த நிர்மலாவின் கண்களில் விழுந்தாள் சமுத்ரா.

என்னதான் மற்றவர்கள் முன் சமுத்ராவை திட்டி மகிழ்ந்தாலும் அவள் முன்னே பேசும் தைரியம் அவரிடமில்லை. இன்றும் அவளை மருத்துவமனையில் கண்டவருக்கு மெல்லுவதற்கு புதிதாக ஒரு அவல் கிடைத்துவிட்டது என்ற எண்ணம் மட்டும்.

அவளோடு வேறு யாரும் வந்திருக்கிறார்களா என்று நோட்டம் விட்டவர் சமுத்ரா எந்த மருத்துவரை சந்திக்க செல்கிறாரென்று கவனித்தார்.

அவள் கையில் சில ரிப்போர்ட்சோடு உள்ளே செல்வதை கவனித்த நிர்மலாவின் மனமோ தவறான கணிப்புகளுக்கு தம்பட்டம் அடித்துக்கொண்டது.

யோசனையோடு நின்றவளை கலைத்தது ஒரு குரல்.

“என்ன ஆண்டி இங்கேயே நின்னுட்டீங்க?” என்று அவளை அனுப்பி வைப்பதற்காக வந்திருந்த நிர்மலாவின் தோழியின் மகள் கேட்க

“தெரிஞ்ச பொண்ணை பார்த்தேன். அதான் அவ எப்படி இங்கனு யோசிச்சேன்.” என்று நிர்மலா யோசனையுடன் கூற

“ஏதாவது கண்சல்டிங்கிற்கு வந்திருப்பாங்க. இது கைனோகோலேஜி டிப்பார்ட்மெண்ட். இங்க அதிகமா லேடிஸ் தான் இருப்பாங்க.” என்று அந்த பெண்ணும் சொல்ல நிர்மலாவிற்கோ இப்போது ஆர்வம் கூடியது.

அவரின் மனமோ 

“இவ எப்படி இங்க? அதுவும் இந்த நேரத்துல? ஏதோ சரியில்லையே. கண்டுபிடிக்கிறேன்.” என்று எண்ணிக்கொண்டவர்

“சரிம்மா நீ கிளம்பு. நான் அவங்களை பார்த்துட்டு கிளம்புறேன்.” என்று கூறி அந்த பெண்ணை அனுப்பி வைத்துவிட்டு சமுத்ரா சென்ற அறை அருகே சென்றார்.

அப்போது அந்த அறையிலிருந்து வெளியே வந்த நர்ஸ்

“மேடம் உள்ள டாக்டர் பேஷண்டை அட்டென்ட் பண்ணிட்டு இருக்கார். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்றவர் ஏதோ வேலையாக வெளியே சென்றார்.

உள்ளே சமுத்ராவை ஒரு முறை பரிசோதித்த மருத்துவர்

“குழந்தையோட ஸ்டேட் ஸ்டேபல் ஆக வரைக்கும் ரொம்ப கவனமாக இருக்கனும். நல்லா ஆரோக்கியமான சாப்பாட்டை சாப்பிடுங்க. முடிந்த அளவு அசிடிட்டி ஜாஸ்தியான உணவுகளை தவிர்த்துக்கோங்க. அது தவிர கொஞ்சம் விட்டமின்ஸ் எழுதித்தரேன். அதையும் எடுத்துக்கோங்க. இன்னும் ஒரு வாரத்துல அடுத்த செக்கப்புக்கு வாங்க.” என்று மருத்துவர் சமுத்ராவுக்கு தேவையான அறிவுரைகளை சொல்ல சமுத்ராவும் தன் சந்தேகம் அனைத்தையும் கேட்டு தெரிந்துகொண்டாள்.

டாக்டரிடம் நன்றி கூறிவிட்டு வெளியே வந்த சமுத்ரா வெளியே அவளின் வரவுக்காக காத்திருந்த நிர்மலாவை பார்த்து ஒரு நிமிடம் திகைத்து போனாள். ஆனால் மறுநிமிடமே தன்னை சமாளித்துக்கொண்டவள் தன் முகத்தில் எந்த உணர்வையும் வெளிக்காட்டாது பேசத்தொடங்கினாள்.

“டாக்டரை பார்க்க வந்தீங்களா அத்தை?” என்று மட்டும் கேட்க நிர்மலாவோ அவளை கூர்ந்து கவனித்தபடியே பதில் கூறினார்.

“என் ப்ரெண்ட் ஒருத்தி உடம்புக்கு முடியாமல் இந்த ஹாஸ்பிடல்ல தான் அட்மிட்டாகியாருக்கா. அவளை பார்த்துட்டு போகலாம்னு வந்தேன். அப்போ தான் எதேச்சையாக உன்னை இங்கு பார்த்தேன்.” என்றவரின் பதிலில் நீ எதற்கு வந்தாய் என்ற மறுகேள்வி இருந்ததை சமுத்ரா உணர்ந்துதானிருந்தாள்.

“பீரியட்ஸ் இர்ரேகுலராக இருந்துச்சு. அதான் டாக்டரை பார்க்க வந்தேன். அன்பிட்டாக இருக்கேன்னு சொல்லி மாத்திரை கொடுத்திருக்காங்க.” என்று சமுத்ரா எந்த தடுமாற்றமும் இல்லாமல் ஒரு காரணத்தை ஒப்புவிக்க நிர்மலாவுக்கோ புஸ்ஸென்றாகிவிட்டது.

நரம்பில்லா நாவிற்கு தீனி கிடைக்கவில்லையே என்ற வருத்தத்தில்

“மாத்திரையெல்லாம் ஒழுங்கா சாப்பிடு. நாளை பின்ன புள்ள பெத்துக்குறதுல ஏதாவது பிரச்சினையாகிட போகுது. அப்புறம் வாழ்க்கை பூரா ஹாஸ்பிடல் படியாக ஏறி இறங்கவேண்டியிருக்கும்.” என்று நிர்மலா பேச சமுத்ரா அவரின் குத்தலான பேச்சுகளை ஏற்கனவே அறிந்திருந்தபடியால் எதையும் கண்டுகொள்ளவில்லை.

“கை நெறைஞ்சா மட்டும் பத்தாது. வயிறும் நெறைஞ்சா தான் மதிப்பு. சரி நான் கிளம்புறேன்.” என்று தன் வன்மத்தை கக்கிவிட்டு நிர்மலாவும் கிளம்பிட சமுத்ராவும் அலுவலகத்திற்கு கிளம்பினாள்.

அன்றிரவு பவனிடம் சமுத்ராவை மருத்துவமனையில் பார்த்ததை பற்றி பவனிடம் சொன்னார் நிர்மலா.

“என்ன பிரச்சினைனு கேட்டதுக்கு அந்த திமிரு புடிச்சவ எதுவுமே சொல்லலை. ஆனா ஏதோ பிரச்சினை இருக்குடா. அதை மறைக்க தான் அப்படி சாதாரணமா பேசிட்டு போனா. இந்த திமிருக்கு தான் இவளுக்கு இத்தனை வருஷமா கல்யாணமே நடக்கல. ஏதோ அவங்க மாமா பாவப்பட்டு அவர் மகனை கட்டி வச்சாரு. ஆனா அந்த பையன் கூடயும் நல்ல உறவுல இல்லை போல‌. இப்போ இப்படி ஒரு பிரச்சினை. இது தெரிஞ்சா அந்த பையனும் வேணாம்னு போயிடுவான். ” என்று நிர்மலா சொல்ல பவனுக்கு அவர் என்ன பிரச்சினையை சொல்கிறாறென்று புரியவில்லை.

“என்னமா பிரச்சினை?” என்று பவன் சந்தேகத்தை கேட்க

“அதான்டா. இந்த மாதிரி பிரச்சினையோடு டாக்டரை பார்க்கப்போன நிறைய பேருக்கு குழந்தை பெத்துக்கமுடியாம போயிருக்கு. பல ட்ரீட்மெண்ட்டுக்கு பிறகு தான் அவங்களுக்கு குழந்தை உண்டாகும். நம்ம ரேவதி நாத்தனாருக்கும் இப்படி தான். ஆரம்பத்துல சத்து குறைபாடுனு சொன்னாங்க. ஆனா அப்புறம் ஏதோ பி.. பி..”

“பி.சி.ஓ.டியா?” என்று பவன் எடுத்துக்கொடுக்க

“ஆ.. அதான். அப்படினு சொல்லி ட்ரீட்மெண்ட் பண்ண சொல்லியிருக்காங்க. அது குணமான பிறகு தான் அவளுக்கு குழந்தை உண்டாச்சு. அதுக்குள்ள ரொம்ப அவதிப்பட்டுட்டா ரேவதி நாத்தனார்.” என்று நிர்மலா சமுத்ரா சொன்ன பொய்யை யார்யாரோடோ தொடர்புபடுத்தி பேச பவனோ அனைத்தையும் அமைதியாக கேட்டுக்கொண்டானே தவிர வேறு எதுவும் பேசவில்லை.

அவனுக்கு தெரியும் தான் ஏதாவது மறுத்து பேசினால் தன் அன்னை சமுத்ராவை வாயால் வசைபாடியே வதைத்துவிடுவாரென்று.

உணவை முடித்துவிட்டு தன் அறைக்கு வந்ததும் ஷாத்விக்கிற்கு அழைத்தான் பவன்.

“சொல்லு பவன். என்ன இந்த நேரத்துல?” என்று ஷாத்விக் கேட்க தன் அன்னை சொன்ன விஷயத்தில் தேவையானதை மட்டும் சொன்னான் பவன்.

“நேத்து ஹாஸ்பிடல் போனதா சொன்னா. இன்னைக்கு நான் அழைச்சிட்டு போறேன்னு சொன்னதுக்கு அவசியமில்லைனு சொல்லிட்டு அவளே போயிட்டு வந்திருக்கா. இவ என்ன நெனச்சிட்டு இருக்கான்னு தெரியலைடா.” என்று ஷாத்விக் புலம்ப

“என்னன்னு விசாரிச்சு பாரு. நிச்சயம் அவ வாய் திறக்க மாட்டா. அவ சொன்ன மாதிரி சாதாரண விஷயம்னா விட்டுடலாம். ஆனா வேற ஏதாவது பெருசா இருந்தா பிறகு பிரச்சினையாகிடும்.” என்று பவனும் அறிவுறுத்த ஷாத்விக்கிற்கும் அது சரியென்றே பட்டது.

“நான் பார்க்கிறேன்டா.” என்றவன் அழைப்பை துண்டித்துவிட்டு என்ன செய்வதென்று யோசித்தான்.

சமுத்ராவுக்கு அழைத்து பேசலாமென்று எண்ணியவள் எதையும் யோசியாது அவளுக்கு அழைத்தான்.

சமுத்ரா அப்போது தான் உணவை முடித்துவிட்டு தன் அறைக்கு வந்திருந்தாள்.

ஷாத்விக் அழைப்பதை பார்த்தவளது கண்கள் பளிச்சிட

“பாப்புமா அப்பா தான் கூப்பிடுறாங்க.” என்று தன் வயிற்றை தடவிக்கொடுத்தபடி அழைப்பை ஏற்றாள்.

“சொல்லுங்க. என்ன இந்த நேரத்துல?” என்று சமுத்ரா சாதாரணமாக கேட்க

“இப்போ உடம்புக்கு எப்படி இருக்கு? மறுபடியும் வாமிட் எடுத்தியா?” என்று கேட்க

“இல்லை இப்போ எந்த பிரச்சினையும் இல்லை.” என்று சமுத்ரா கூற

“நிஜமாகவே எந்த பிரச்சினையும் இல்லையா?” என்று ஷாத்விக் கேட்க

“இல்லையே. நான் நல்லா தான் இருக்கேன். ஏன் திடீர்னு இப்படி கேட்குறீங்க?” என்று சமுத்ரா கேட்க

“இல்லை இன்னைக்கு உன்னை xxx ஹாஸ்பிடல்ல இருந்து வெளியில வர்றதை பார்த்தேன். அதான் கேட்டேன்.” என்று ஷாத்விக் நடந்ததை போட்டு வாங்க பார்க்க சமுத்ராவோ சுதாகரித்துக்கொண்டாள்.

“இன்னைக்கு கைனோகிட்ட ஒரு அப்பாயிண்மெண்ட் இருந்துச்சு. அதுக்காக ஹாஸ்பிடல் போயிருந்தேன்.” என்று சமுத்ரா நிர்மலாவுக்கு கூறிய அதே பதிலை கூற 

“ஏன் திடீர்னு என்னாச்சு?” என்று கேட்க அவனுக்கு புரியும் வகையில் விஷயத்தை மேலோட்டமாக விளக்கினாள் சமுத்ரா.

“வேற ஏதும் பிரச்சினையில்லையே?” என்று ஷாத்விக் நம்பாமல் கேட்க

“வேற என்ன பிரச்சினை?” என்று சமுத்ரா அவனிடமே கேட்க

“அது அது…” என்று ஷாத்விக் என்ன சொல்வதென்று புரியாது கேட்க

“எதுவும் இல்லை நான் நல்லா தான் இருக்கேன். நீங்க சாப்பிட்டீங்களா?” என்று கேட்க

“ம்ம் ஆச்சு. ஆனா சாப்பாடு தான் கொஞ்சம் செட்டாகமாட்டேங்கிது.” இப்போது அவனும் லகுவாக பேச 

“அப்போ சாப்பாட்டுக்கு இங்க வந்திடுங்க. நான் அத்தைகிட்ட சொல்லிடுறேன். புது கடை வேலை இருக்கிறதால உங்களுக்கு அங்க இங்க போகவேண்டியிருக்கும். வெளியில சாப்பிட்டா உங்களுக்கு ஒத்துக்காது. அத்தை கிட்ட சொல்லி உங்களுக்கும் சேர்த்து லன்ச் பேக் பண்ண சொல்லுறேன்.” என்று சமுத்ரா சொல்ல ஷாத்விக்கிற்கு சமுத்ராவா இப்படி பேசுவது என்று நம்ப முடியாதபோதிலும் ஏதேனும் கேட்டு அவனும் இந்த சூழ்நிலையை கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை.

அப்போது அவனுக்கு வேறொரு யோசனை வர

“இப்போ நான் தங்கியிருக்க ரூமையும் காலி பண்ண சொல்லிட்டாரு ஓனர். அவரு வெளிநாடு போறதால வேற யாருக்கோ கைமாத்துறாராம். வேற இடம் பார்க்க வரைக்கும் டைம் கேட்டிருக்கேன். ” என்று ஷாத்விக் ஒரு பொய்யை சொல்ல

“நீங்க இங்க நம்ம வீட்டுக்கு வந்துடுங்க.” என்று சமுத்ரா எதையும் யோசிக்காமல் சொல்ல ஷாத்விக்கோ இதற்கு தான் காத்திருந்தவனை போல் 

“சரி நாளைக்கு காலையில ரூமை காலிபண்ணிட்டு அங்க நம்ம வீட்டுக்கே வந்திடுறேன்.”என்றவன் வேறு ஏதேதோ பேசிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டான்.

மறுபுறம் சமுத்ராவோ தன் வயிற்றை தடவியபடி

“பாப்பு அப்பா இனி நம்ம கூட தான் இருக்கப்போறாங்க. இனி டெய்லி அப்பாவை நீங்க பாக்கலாம்.” என்று உற்சாகத்துடன் சொன்னவள் மேலும் சில நேரம் குழந்தையோடு பேசிவிட்டு உறங்கச்சென்றாள்.

 

 

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்