Loading

 

அத்தியாயம் 3

 

கோபிநாத்திடம் பேசியதை எண்ணியபடியே வீட்டில் அமர்ந்திருந்த மயூரனை கலைத்தது பாஸ்கர் தான்.

 

“மிஸ்டர், மயூரன் அப்படி என்ன தீவிரமான யோசனை? என்னன்னு சொன்னா, நாங்களும் ஜாயின் பண்ணிப்போம்ல.” என்ற பாஸ்கரின் கையை மதுக்கோப்பை அலங்கரித்திருந்தது.

 

அவனையும் கோப்பையையும் பார்த்து முறைத்த மயூரனோ, “நீ ஒன்னும் ஜாயின் பண்ண வேண்டாம். எழுந்து உன் ரூமுக்கு போடா.” என்றான்.

 

“ப்ச், ஒரு குவார்ட்டருக்கு இவ்ளோ அக்கப்போரா இருக்கே!” என்று முனகினாலும் அவ்விடத்தை விட்டு அசையவில்லை பாஸ்கர்.

 

கிஷோர் தான், “அவனை விடு மயூரன். நீ ஏன் இப்படி பயந்து போய் உட்கார்ந்துருக்க?” என்றான்.

 

தனக்குள்ளேயே வைத்துக் கொள்வதற்கு நண்பர்களிடம் பகிர்ந்தால், இதிலிருந்து தப்பித்து வெளிவர ஏதேனும் வழியை சொல்வார்கள் என்று நம்பி நடந்ததை கூறினான் மயூரன்.

 

அத்துடன் இறுதியாக கோபிநாத் பேசியதும் நினைவுக்கு வந்தது.

 

*****

 

“சாரி மயூரன். துவா உங்களை தொந்தரவு பண்றான்னு எனக்கு நல்லா புரியுது. ஆனா, அதை அவ புரிஞ்சுக்க மாட்டிங்குறா. நான் சொல்லியும், அவளுக்கு அது புரியல. என் வளர்ப்பு தான் தப்போன்னு இன்னைக்கு யோசிக்க வச்சுட்டா.” என்றவரின் குரலில் அப்பட்டமாக வருத்தம் வெளிப்பட்டது.

 

அவரின் குரலும் அதிலிருந்த தவிப்புமே, இதற்கு முன் அவர் இப்படி யாரிடமும் விளக்கம் கொடுத்ததில்லை என்பதை மயூரனுக்கு உணர்த்தியது.

 

இரண்டு நாட்கள் தான் என்றாலும், கோபிநாத்தின் மீது நல்லெண்ணத்துடன் கூடிய மதிப்பு உருவாகிருந்தது மயூரனுக்கு.

 

அப்படிப்பட்டவர், இன்று தன் மகளுக்காக தன்னிடம் மன்னிப்பு கேட்பது மயூரனாலேயே ஜீரணிக்க முடியவில்லை.

 

மனதில், ‘என்ன பொண்ணு இவ?’ என்று தோன்றினாலும், வெளியே அதைக் கூறினால், அவளின் தந்தை வருந்துவார் என்பதால், “சார், பிளீஸ்… நீங்க இவ்ளோ வருத்தப்பட தேவையில்ல.” என்று பெயருக்கு சொன்னானே தவிர, வேறு என்ன சொல்லி அவரைத் தேற்ற என்று தெரியவில்லை.

 

“இப்பவும் வருத்தப்படலைன்னா, பின்னாடி இன்னும் நிறைய வருத்தப்பட வேண்டியதிருக்கும் மயூரன்.” என்ற கோபிநாத்தின் குரல் கலங்கி ஒலித்தது.

 

வாழ்வின் இறுதி வரை வர இருப்பவளாக நினைத்த மனைவியின் இழப்பு எப்போதும் விட இப்போது பூதாகரமாக தெரிந்தது.

 

“அம்மா இல்லாத பொண்ணுன்னு ஓவர் செல்லம் குடுத்துட்டேன். அதான், இப்படி அடமண்ட்டா வளர்ந்து நிக்கிறா. நான் தப்பு பண்ணிட்டேன் மயூரன்.” என்று கவலையாக கூறுபவருக்கு என்ன பதில் சொல்வதென்று அவனுக்கும் தெரியவில்லை.

 

“இன்னைக்கு உங்ககிட்ட விளையாடுறா. நீங்க நல்லவன் மயூரன். அதான், அவகிட்ட இருந்து ஒதுங்கிப் போறீங்க. இதுவே, நாளைக்கு வேற யாருக்கிட்டயாவது இப்படி விளையாட போய், அவங்க இவளை அப்யூஸ் பண்ணிட்டா… நினைக்கவே பதறுது. துவா பார்க்க தான் ரஃப்பா தெரிவாளே தவிர, அவ இன்னமும் ஒரு குழந்தை தான்! அது தான் எனக்கு இன்னமும் பயத்தை தருது.” என்று இதுவரை எவரிடமும் பகிராததை தன்னை அறியாமலேயே மயூரனிடம் பகிர்ந்திருந்தார் கோபிநாத்.

 

அது மயூரனுக்கும் புரிந்தே இருந்தது. இப்போதும் அவன் எதுவும் கூறாமல் இருக்க, தன்னிலை அடைந்த கோபிநாத்தோ, “சாரி மயூரன். என் சோக கதை எல்லாம் சொல்லி போரடிச்சுட்டேன்.” என்றவர், மேஜை மீதிருந்த தண்ணீரைப் பருகி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

 

பின் அவரே, “மயூரன், துவா பிரச்சனையை ஆஃபிஸ் விஷயத்துல எடுத்துட்டு வர மாட்டிங்கன்னு நம்புறேன்.” என்றவரின் குரலில் பழைய கம்பீரம் மீண்டிருந்தது.

 

‘ஹ்ம்ம், பெரிய பிஸினஸ்மேன் தான்!’ என்று உள்ளுக்குள் கூறினாலும், வெளியே, “பெர்சனலையும் ப்ரொஃபெஷனையும் வேறயா தான் பார்ப்பேன் சார்.” என்றவனை கோபிநாத்திற்கும் பிடித்த போனது.

 

மயூரனுக்கு விருப்பம் என்றால் மகளையும் கட்டிக் கொடுக்கும் அளவுக்கான விருப்பம் அது!

 

ஏனோ, தந்தையையும் மகளையும் முதல் நாளே ஈர்த்திருந்தான் மயூரன். அதன் காரணமாகவே, அவன் குடும்ப பின்னணியை அறிவதற்கு முன்னரே, மருமகனாக்க எண்ணம் கொண்டார். ஆனால், அவன் குடும்பத்தை பற்றி தெரிய வரும்போதும் இதே முடிவில் இருப்பாரா?

 

*****

 

கோபிநாத் மனதிற்குள் இப்படி நினைத்திருக்க, மயூரனின் மனமோ அவனுக்கு ஏன் இந்த வேலை அத்தனை முக்கியம் என்பதை நினைவு கூர்ந்து கொண்டிருந்தது.

 

இதற்கு முன், பல இடங்களில் விண்ணப்பித்தும், முதற்கட்ட தேர்வுகளை எல்லாம் வெற்றிகரமாக கடந்திருந்தாலும், இறுதி நேர்காணலில் சொல்லி வைத்தது போல, “நீங்க இந்த ஜாபுக்கு ஓவர் குவாலிஃபைட்டா இருக்கீங்க.” என்றோ, “இந்த எக்ஸ்பிரியன்ஸ் எங்களுக்கு போதாது.” என்றோ கூறி அவனை நிராகரித்திருக்கின்றனர்.

 

‘இதெல்லாம் முன்னாடியே தெரியலையா? இவ்ளோ ரவுண்டுக்கு அப்பறம் தான் தெரிஞ்சுதா?’ என்று கத்த வேண்டும் போன்று இருந்தாலும், இதற்கெல்லாம் காரணகர்த்தா யாரென்று தெரிந்ததால், வில்லை விடுத்து அம்பை குறை சொல்லி என்ன பயன் என்று சென்று விடுவான் மயூரன்.

 

இதோ, துவா கன்ஸ்ட்ரக்ஷனுக்கு நேர்காணலுக்கு வரும்போது கூட, ‘எப்படியும் இங்கேயும் ரிஜக்ட் பண்ண தான் போறாங்க.’ என்ற விரக்தியுடனே தான் வந்தான்.

 

வழக்கம் போல, அனைத்து சுற்றுகளும் முடிவு பெற்று, கோபிநாத்தின் முன்பு அமர்ந்திருந்தான்.

 

மனம் முழுவதையும் ஏமாற்றம் வியாபித்திருந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் அவன் அமர்ந்திருக்க, அவனின் செயல்திறன் மதிப்பீட்டை எல்லாம் பார்த்த கோபிநாத்தோ அவன் திறமையைக் கண்டு வியந்தவராக ஏதோ பேச ஆரம்பிக்க, அவரை தடுத்தது தொலைபேசி அழைப்பு.

 

அதை ஏற்றவருக்கு என்ன சொல்லப்பட்டதோ, தன் முன் அமர்ந்திருந்த மயூரனை புருவம் சுருக்கி அவர் பார்க்க, அதிலேயே புரிந்து போனது மயூரனுக்கு.

 

ஒரு பெருமூச்சுடன், தன் சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு அவன் கிளம்ப ஆயத்தமாக, தொலைபேசி அழைப்பை முடித்தவர், “என்ன மிஸ்டர். மயூரன், அதுக்குள்ள கிளம்பிட்டீங்க? நம்ம இன்னும் பேசவே ஆரம்பிக்கலையே!” என்றார்.

 

“பரவால்ல சார், உங்க முடிவு என்னவா இருக்கும்னு எனக்கு ஏற்கனவே தெரிஞ்சுடுச்சு.” என்றான் மயூரன்.

 

“ஓஹ், நான் சொல்றதுக்கு முன்னாடியே என் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுடுச்சா? இன்ட்ரெஸ்டிங்! ஹ்ம்ம், அது மட்டும் தான் தெரிஞ்சுதா, இல்ல என்ன சேலரின்னு எல்லாமே தெரிஞ்சுடுச்சா?” என்று விளையாட்டாக கோபிநாத் வினவ, முதலில் எதுவும் புரியவில்லை மயூரனுக்கு.

 

புரிந்தபோதோ எப்படி எதிர்வினையாற்ற வேண்டும் என்று தெரியாமல் திகைத்தவனை நோக்கி இதழ் விரித்து சிரித்தவர், “கம்மான் மேன், சேலரி டீடெயில்ஸ் டிஸ்கஸ் பண்ணலாமா?” என்றார்.

 

அதன்பின்னர் நடந்த பேச்சுவார்த்தையிலும் கூட அவன் முழுதாக கலந்து கொள்ளவில்லை என்பது கோபிநாத்திற்கு புரிந்தது.

 

அனைத்தையும் பேசி முடித்ததும், அவனை அப்போதே வேலையில் சேர்ந்து கொள்ள சொல்ல, நன்றியுடன் அவரிடம் விடைபெற்றவன் வெளியேற முயல, “மயூரன்…” என்று அவனை அழைத்த கோபிநாத்தோ, “நான் எப்பவும் திறமையை நம்புறவன். அதை மாதிரி, ஆட்களை சரியா கணிக்கிற அளவுக்கு எனக்கும் திறமை இருக்குன்னு நம்புறேன்.” என்றவரின் பார்வை தொலைபேசியை தொட்டு மீண்டது.

 

அதை உணர்ந்த மயூரனும், “உங்க நம்பிக்கையை காப்பாத்துவேன் சார்.” என்று கூறியபடி வெளியேற, அப்போது தான் துவாரகாவுடன் மோதிக் கொண்டான்.

 

திடுக்கிட்டு நினைவுகளில் இருந்து வெளிவந்தவனோ, ‘இந்த வேலை இல்லன்னா, திரும்ப வேலைக்கு அலைய வேண்டியதா இருக்கும். வேலையை விடுறேன்னு தப்பு பண்ணிடாத!’ என்று தனக்குத்தானே கூறிக் கொண்டான்.

 

சரியாக அதே சமயம் கோபிநாத்தும் தன் நினைவுகளிலிருந்து மீண்டு வர, “ஓகே மயூரன், நீங்க போய் உங்க வேலையை கன்டின்யூ பண்ணுங்க.” என்றார்.

 

*****

 

இதோ, வேலையில் சேர்ந்து நான்கு மாதங்கள் முடிந்து விட்டது. துவாரகாவின் தொல்லைகளை எல்லாம் அவளின் தந்தைக்காகவும், தன் வேலைக்காகவும் தான் பொறுத்துக் கொண்டான்.

 

இல்லை என்றால், தலைகீழாக தொங்க விட்டதற்கு குறைந்தபட்சம் வேலையை விட்டாவது நின்றிருப்பானே!

 

‘பொறுமையா இருக்கணும்!’ என்று உருப்போட்டுக் கொண்டிருப்பவனின் பொறுமையை சோதிக்கவென்றே அடுத்த திட்டத்தை தீட்டிக் கொண்டிருந்தாள் துவாரகா.

 

அவளின் திட்டத்தில் சிக்கி காதலில் விழுவானா மயூரன்?

 

*****

 

வெள்ளிக்கிழமை இரவு… நண்பர்களுக்கு அது கொண்டாட்ட நேரம்!

 

இதோ, ஏழு மணிக்கெல்லாம் அவசரமாக வெளியே கிளம்பிக் கொண்டிருக்கின்றனர் மயூரனும் அவனின் நண்பர்களும்.

 

‘வெளியே வர மாட்டேன்’ என்று முறுக்கிய மயூரனை அடம்பிடித்து கிளம்ப வைத்திருந்தனர் மற்ற இருவரும்.

 

அதில், அவன் கிளம்பியிருக்க, பாஸ்கரோ அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தான்.

 

“டேய் மயூரா, சென்ட் பாட்டில் எங்க?” என்றவாறே மயூரனின் அறைக்குள் வந்தவன், பதிலுக்கு காத்திருக்காமல், அவன் மேஜையிலிருந்த பொருட்களை கைகளால் அலைந்து விட்டு, இறுதியில் அதை ஒருவாறு தேடி எடுத்து தன்மீது தெளித்துக் கொண்டான்.

 

மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கு இப்படி தான் தெரியும்.

 

ஆனால், மயூரனுக்கு தான் பாஸ்கரின் அத்தனை செயல்களும் அத்துப்படி ஆகிற்றே!

 

நண்பனின் கண்கள், மேஜையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்களை கண்காணிப்பதை அறிந்து கொண்டவன், தாமதிக்காமல் அவன் பின் மண்டையில் பட்டென்று அடித்தவன், “நீதான் அந்த ராட்சஸிக்கு தூது அனுப்பிட்டு இருக்கியா?” என்று வினவினான்.

 

‘ஹையோ கண்டுபிடிச்சுட்டானே!’ என்று மனதிற்குள் பயந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், அப்பாவி போல் விழித்து, “என்ன மச்சான் சொல்ற? ராட்சஸியா? யூ மீன்… யுவர் ராட்சஸி?” என்று கேட்டு அதற்கும் முறைப்பை வாங்கிக் கொண்டான்.

 

“டேய் என்னை சந்தேகப்படுறியா மச்சான்? உன் நண்பனை சந்தேகப்படுறியா?” என்று வராத கண்ணீரை கண்களை குத்தி வரவழைக்க முயன்றவனை, “கேவலமா நடிக்காத. பார்க்க சகிக்கல. உன் ரீல்லை எல்லாம் மூட்டை கட்டிட்டு, ரியலா என்ன நடக்குதுன்னு சொல்றியா?” என்றான் மயூரன்.

 

‘ஐயோ! சொல்லலைன்னா இவன் அடிப்பான், சொன்னா அவ அடிப்பா! இப்படி ஒரு சிசுவேஷன்ல என்னை சிக்க வச்சுட்டியே ஆண்டவா!’ என்று புலம்பியவன், ‘சரி, சமாளிப்போம்.’ என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டு மயூரனிடம் விளக்க ஆரம்பித்தான்.

 

“அது வந்துடா மயூரா… என்ன இருந்தாலும் தங்கச்சி பாவம்ல!” என்ற பாஸ்கரை இடைவெட்டிய மயூரனோ, “தங்கச்சியா? உனக்கு யாரு தங்கச்சி?” என்று வினவ, “சில்லி பாய், உன் ஆளு எனக்கு தங்கச்சி தான?” என்று சொல்லி மீண்டும் வாங்கிக் கட்டிக்கொண்டான்.

 

‘பாவிப்பய, அவளை அடிக்க முடியாத கோபத்தை எல்லாம் என்மேல காமிச்சுட்டு இருக்கான்.’ என்று உள்ளுக்குள் தான் கூறிக்கொள்ள முடிந்தது பாஸ்கரினால்.

 

“டேய், சொல்றதுக்கு முன்னாடியே அடிச்சா எப்படி டா? முழுசா சொல்ல விட்டுட்டு அடியேன்!” என்றான் பாஸ்கர் பாவமாக.

 

மயூரனுக்கும் அது சரியெனப்பட்டதோ என்னவோ அவன் அமைதியாக இருக்க, பாஸ்கர் துவாரகாவிடம் பேசிய நினைவுகளுக்கு பயணப்பட்டான்.

 

*****

 

பாஸ்கரும் துவா கன்ஸ்ட்ரக்ஷனில் தான் பணிபுரிகிறான். ஆனால், அவன் இருப்பது அக்கவுண்ட்ஸ் பிரிவில்.

 

மயூரனிடம் காதலை கூறியதுமே, அவன் தங்கியிருக்கும் இடம், அவனின் நண்பர்கள் என்று அனைத்தையும் ருத்ரன் மூலம் அறிந்து கொண்டாள் துவாரகா.

 

‘பாடி கார்ட் வேலைக்கு வந்தா, டீடெக்டிவ் வேலையெல்லாம் செய்ய வேண்டியதா இருக்கே!’ என்று சடைத்துக் கொண்டே தான் அதை செய்தான் ருத்ரன்!

 

அதன் மூலம் பாஸ்கரை பற்றி அறிந்தவள், மயூரனிடம் காதலை கூறிய மூன்றாவது நாளே பாஸ்கரை சந்தித்து பேசியிருந்தாள்.

 

முதலில் முதலாளி என்ற பயத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல் பாஸ்கர் திகைக்க, துவாரகாவோ, “அண்ணா..” என்று அழைத்து அவனை மொத்தமாக வீழ்த்தியிருந்தாள்.

 

அதில் ‘தங்கை பாசம்’ பெருக்கெடுக்க, அவளின் பேச்சில், ‘நீ சொன்னா, அவனை கையை காலை கட்டிப்போட்டு தூக்கிட்டு வந்து லவ் சொல்ல வைக்குறேன்.’ என்ற அளவுக்கு சென்று விட்டான் பாஸ்கர்.

 

அப்போது நண்பனின் நினைவு மறந்து தான் போனது!

 

“அச்சோ அண்ணா, அதெல்லாம் வேண்டாம். எனக்கு வேறொரு ஹெல்ப் பண்ணுவீங்களா?” என்று மெல்ல தூண்டில் போட, அதில் இலகுவாக சிக்கிக் கொண்டான் மீனாக!

 

“என் நினைப்பு எப்பவும் அவருக்கு இருக்கணும்னு, நான் தினமும் அவருக்கு கிஃப்ட் குடுக்குறேன். ஆனா, அதுக்கு எந்த ரெஸ்பான்ஸும் இல்ல.” என்று சோர்வுடன் அவள் கூற, “எது? கிஃப்ட்டா? நேத்து ஒரு ரோஜாப்பூவை குப்பைல தூக்கி போட்டானே, அது நீ குடுத்த கிஃப்ட்டாமா?” என்று நண்பனை மாட்டி விட்டான் பாஸ்கர்.

 

‘மய்யூ… நான் குடுத்த ரோஸை குப்பைலயா தூக்கிப் போட்டீங்க? இதுக்கு, நாளைக்கு வச்சு செய்யுறேன்!’ என்று மனதிற்குள் சபதம் போட்டவள், வெளியே அப்பாவியாக, “பார்த்தீங்களா அண்ணா, நான் எவ்ளோ ஆசையா பூ குடுத்தா, அதை குப்பைல தூக்கிப் போடுறாங்க? ஒரு பொண்ணு, நான் அவரு பின்னாடி வரேன்னு என்னை ஈஸியா நினைச்சுட்டாருல.” என்று கூற, அதில் மொத்தமாக மதி இழந்து தான் போனான் பாஸ்கர்.

 

“ச்சு, நீ ஃபீல் பண்ணாத மா. இனி, நீ குடுக்குற பூவை அவன் காதுலயே வச்சு விடுறேன் அண்ணா.” என்று பாஸ்கர் கூற, அதை நினைத்துப் பார்த்தவள் களுக்கென்று சிரித்து விட்டாள்.

 

“அச்சோ பாவம், அப்படி எல்லாம் பண்ண வேண்டாம் ண்ணா. இனிமே, இப்படி என் கிஃப்ட்டை இக்னோர் பண்ணா, என்கிட்ட சொல்லுங்க அது போதும்.” என்றவள் இன்னும் சிலபல ‘பிட்டு’க்களை போட்ட பின்பே கிளம்பி இருந்தாள்.

 

*****

 

நடந்ததை வார்த்தை மாறாமல் பாஸ்கர் மயூரனிடம் கூற, அவனை குனிய வைத்து முதுகிலேயே குத்தினான் மயூரன்.

 

அவன் வைத்த ஒவ்வொரு அடியும் இடியாக உடம்பில் இறங்க, வலியில் அலறியவாறே, “டேய் டேய், நிறுத்து டா. நானும் இங்க விக்டிம் தான் டா. அவ தான் என்னை ஹிப்னோடைஸ் பண்ணி, இப்படியெல்லாம் பண்ண வச்சுருக்கா.” என்று கூறியவனை, நிமிர்த்தி, “அவ உன்னை ஹிப்னோடைஸ் பண்ணாளா? த்தூ…” என்று துப்பிய மயூரன் துவாரகாவின் பரிசு தொல்லை ஆரம்பித்த நாளின் நினைவுக்கு சென்றான்.

 

*****

 

தன் வேலையில் கவனமாக இருந்த மயூரனோ, திடீரென்று தன்னை துளைக்கும் பார்வையை உணர்ந்தான்.

 

அது அவளன்றி வேறு யாராக இருக்க முடியும்?

 

என்னதான் அவள் தொல்லைகளை சகித்துக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்திருந்தாலும், அது அத்தனை எளிதாக இல்லையே!

 

இதோ, அவளின் இமை சிமிட்டாத பார்வையில் அவன் தான் நெளிய வேண்டியதாக இருக்கிறது.

 

“மே…ம்…” என்று அவன் திக்க, “ப்ச், இன்னும் என்ன மேம்? துவான்னே கூப்பிடலாம்ல. இல்லன்னா, உங்களுக்கு பிடிச்ச மாதிரி செல்லப்பேரு கூட வைக்கலாம்!” என்று கண் சிமிட்டியவள், “எங்க என்னை செல்லமா கூப்பிடுங்க பார்ப்போம்.” என்றும் கேட்டு வைத்தாள்.

 

‘எது? செல்லமாவா? கிழிஞ்சுது!’ என்று நினைத்தவன், வெளியே ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருக்க, “ஹ்ம்ம், இப்படியே இருந்தா, எப்படி தான் நம்ம லவ் டெவலப் ஆகுறதோ!” என்று அலுத்துக் கொண்டவள், “சரி சரி எந்திரிங்க.” என்று சொல்லிக் கொண்டே அவனை இழுத்தாள்.

 

எங்கு இரு கரங்களை பற்றி தூக்கி விடுவாளோ என்று அஞ்சியவனாக, அவனே எழுந்து நிற்க, அவன் முன்பு சிவப்பு ரோஜாவை நீட்டியவள், “ஐ லவ் யூ மய்யூ…” என்றாள் மையல் பார்வையுடன்.

 

அவனோ அவளின் செயலில் கஷ்டப்பட்டு எச்சிலை விழுங்கியபடி திருதிருவென்று முழித்துக் கொண்டு நின்றான்.

 

“ஹோய், என்ன ஷாக்கா? இதுக்கே ஷாக்கானா எப்படி? இனி, டெயிலி, என் கிஃப்ட்ஸ் உங்களுக்கு வரும்.” என்றவள், அவன் கைகளில் ரோஜாவை திணித்து விட்டு, அவன் கன்னத்தை லேசாக தட்டிவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.

 

அவனோ தன் கைகளில் திணிக்கப்பட்ட ரோஜாவை பார்த்துக் கொண்டிருந்தவன், என்ன தோன்றியதோ அதைக் குப்பைக்கூடையில் எரிந்திருந்தான்.

 

அவளின் திணிக்கப்பட்ட காதலுக்கும் அதே நிலை தானோ?

 

இதை தான் பாஸ்கர் துவாரகாவிடம் கூறியிருந்தான்.

 

அடுத்த நாளே, கையில் அடுத்த பரிசுடன் வந்தவள், “என்ன மய்யூ…ரன், நேத்து என் ரோஸை குப்பையில போட்டீங்களாமே? அதுக்கு தண்டனை குடுக்கணும்ல!” என்றபடி அவனருகே வந்தாள்.

 

அவனுக்கு தான் அவளின் நெருக்கத்தில் வியர்க்க ஆரம்பித்தது. முதல் நாளாவது, மதிய உணவு இடைவேளையின் போது வந்திருந்ததால், மற்றவர்களின் கண்களுக்கு அந்த காட்சி தென்படாமல் போனது. இப்போதோ, அனைவரின் பார்வையும் அவர்களின் மீதே இருக்க, மயூரனுக்கு தான் என்ன செய்வது என்று புரியாத நிலை!

 

மேலும், தன் முன்னே இருப்பவள், என்ன செய்வாள் என்றும் யூகிக்க முடியாத நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தான்.

 

அவளோ எந்த பதற்றமும் இல்லாமல், அவன் காதருகே குனிந்தவள், “ச்சு, இதுக்கே இப்படி வேர்த்து வழிஞ்சா எப்படி?” என்றவள், தன் கைக்குட்டை கொண்டு அவனின் வியர்வையை துடைக்க எத்தனிக்க, சட்டென்று அதை தன் கையில் எடுத்துக் கொண்டான்.

 

அதைக் கண்டு உதட்டை பிதுக்கியவள், “இந்தாங்க, இன்னைக்கான கிஃப்ட். இதுவும் குப்பைக்கு போச்சுன்னா, நாளைக்கு கிஃப்ட் எடுத்துக்கிட்டு வீட்டுக்கே வந்துடுவேன்.” என்று மிரட்டிவிட்டே சென்றாள்.

 

அங்கிருந்தவர்கள் நடந்தவற்றை பொழுதுபோக்கு நிகழ்ச்சி போல பார்த்துக் கொண்டிருக்க, அதில் ஒருவனாக பாஸ்கரும் இருந்தான்.

 

‘என்ன இந்த போடு போடுது? இந்த பிள்ளையா நேத்து அவ்ளோ சாதுவா இருந்தது?’ என்று நினைக்கையிலேயே, அவனைக் கடந்து சென்றவளோ, “தேங்க்ஸ் அண்ணா.” என்று கண்ணடித்து செல்ல, ‘அடியாத்தி, போற போக்குல சிக்க வச்சுட்டாளே!’ என்று பதறியபடி மயூரனைக் கண்டான்.

 

மயூரனோ, சற்று முன் அவள் கொடுத்துவிட்டு சென்ற பரிசை தான் வெறித்துக் கொண்டிருந்தான்.

 

கண்ணாடியிலான காதல் ஜோடி ஒருவரையொருவர் தழுவியபடி இருக்க, அவர்களுக்கு இடையே ‘ஐ லவ் யூ’ என்ற வாசகம் மின்னியபடி இருந்தது.

 

அதைக் காணும்போது மனதில் தோன்றும் உணர்வுகளை வெளிக்காட்டாதபடி ஒரு பெருமூச்சுடன் தன் வேலையின் புறம் கவனத்தை திருப்பினான்.

 

*****

 

இதோ, அன்றிலிருந்து இப்போது வரை பல பரிசுப் பொருட்கள் அவன் வீட்டு மேஜையினை அலங்கரித்திருந்தன.

 

எப்போதும் போல அவற்றை ஒரு பார்வை பார்த்தவனிற்கு ஏதோ தோன்ற, அருகிலிருந்த பாஸ்கரை சந்தேகமாக பார்த்தான்.

 

‘ஹையோ, பார்க்குறானே பார்க்குறானே!’ என்று படபடத்த பாஸ்கரோ, அவன் கையில் அகப்படாமல் இருக்க, அறையை விட்டு வெளியே ஓட, “நாயே, நில்லு டா.” என்று அவனை துரத்திக் கொண்டு ஓடினான் மயூரன்.

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்