Loading

காதல் 15

 

அடுத்த நாளே மலரிடம் கூறிக்கொண்டு, ஊருக்கு வந்து சேர்ந்தனர் மூவர் குழு. முதலில் ரஞ்சுவின் உடல்நிலை, மனநிலை என்று அனுப்ப மறுத்த மலரை, தர்ஷு தான் சமாதானப்படுத்தினாள்.

“அத்த, இங்க இருந்தா தான் அவ பழசை நினைச்சு வருத்தப்படுவா. நீங்க கவலைப்படாதீங்க. நாங்க பார்த்துக்குறோம்.” என்று தனியே அவரிடம் வாக்கு கொடுத்துவிட்டு வந்திருந்தாள்.

எப்போதும் போல, அந்த காலை நேர நடைப்பயிற்சி. சோர்வாக இருந்த காரணத்தினால் தர்ஷு அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்க, அவளை எழுப்பாமல், ரஞ்சு மட்டும் கிளம்பி வந்திருந்தாள்.

வழக்கமாக ஊரிலிருந்து வந்த அடுத்த நாள் காலை, இருவருமே நடைப்பயிற்சிக்கு செல்ல மாட்டார்கள். இப்போது ரஞ்சு இருக்கும் மனநிலையில் தூக்கம் தூரமாகிப் போக, காலை நேர காற்றை சுவாசித்தாலாவது மனம் வேறுபுறம் திரும்புமா என்று பரிசோதிக்கவே கிளம்பினாள் ரஞ்சு.

சில அடிகள் நடந்திருந்தவளின் மூளை முதல் நாள் அந்த சட்டமிடப்பட்ட புகைப்படத்தை ஆராய்ந்த நிகழ்வை எண்ணிப் பார்த்தது.

முதல் நாள், சஞ்சுவின் திட்டப்படி ‘நூடுல்ஸ்’ செய்து சாப்பிட்டதும், வேலை காரணமாக வெளியூர் சென்றிருந்த வசுந்தரா அழைத்துப் பேசினார். அவர் வருவதற்கு இன்னும் சில நாட்கள் இருந்ததால், அனைவரையும் பாதுகாப்பாக இருக்குமாறு கூறினார். தர்ஷு மற்றும் சஞ்சுவிடம், ரஞ்சுவைக் கவனித்துக் கொள்ள சொல்லவும் மறக்கவில்லை.

அதன் பின்னான நேரம் சோம்பலாக கழிய, மற்ற இருவரும் வரவேற்பறையிலேயே உறங்கிவிட, ரஞ்சுவோ அவர்களின் தூக்கத்தை கலைக்காதவாறு எழுந்து தன்னறைக்கு சென்றவள், தான் மறைத்து வைத்த புகைப்படத்தை எடுத்தாள்.

சற்று நேரம் இவாஞ்சலினின் முகத்தையே பார்த்திருந்தவள், அதில் வேறு ஏதாவது துப்பு கிடைக்குமா என்று தேடினாள். புகைப்படத்தை அதன் சட்டத்திலிருந்து வெளியே எடுத்து திருப்பிப் பார்த்தவளிற்கு முகவரியும் தொலைப்பேசி எண்ணும் கிடைத்தது.

உடனே, தன் அலைபேசியிலிருந்து அந்த எண்ணிற்கு அழைப்பு விடுத்தாள். மறுமுனையிலோ அந்த எண் உபயோகத்தில் இல்லை என்ற பதிவு செய்யப்பட்ட குரல் கேட்டது.

என்ன தான் முதல் முறையிலேயே தான் நினைத்தது ஈடேறிவிடும் என்று எண்ணவில்லை என்றாலும், ரஞ்சுவின் மனம் சோர்ந்து தான் போனது. அவள் படிக்கும் கல்லூரிக்கு அருகில் அந்த முகவரி இருந்தது மட்டுமே அவளை மேலும் சோர்வுறச் செய்யாமல் தடுத்தது.

அவள் மனதிற்குள், ‘ஊருக்கு போனதும் நேராவே போய் விசாரிக்கலாம்.’ என்று கூறிக் கொண்டாள்.

அதை யோசித்துக் கொண்டே வந்தவள், வழியில் யாருடனோ மோதிக் கொள்ள, வலியில் லேசாக முனகினாள்.

“ஹே ஆர் யூ ஓகே?” என்ற படபட குரலில் யாரென்று நிமிர்ந்து பார்த்தவள் வியந்து தான் போனாள்.

ஹூடட் டி-ஷர்ட் மற்றும் ட்ராக் பேண்ட் சகிதம் அங்கு நின்றிருந்தவன் சஞ்சய் தான். அவனின் தோற்றத்தைக் காட்டிலும் அவளை அதிர்ச்சியடைய செய்தது அவனின் குரலும் முகம் காட்டிய பாவமும் தான்.

அவளை வேறெதுவும் யோசிக்க விடாமல், அங்கிருந்த மேஜையில் அமரச் செய்தவன், “அப்படி என்ன தீவிரமான யோசனை? முன்னாடி யாரு வராங்கன்னு பார்க்க மாட்டியா?” என்று சற்று கடுமையுடன் வினவினான் சஞ்சய்.

‘அதான, என்னடா இன்னும் சிடுசிடுன்னு பேசலையேன்னு பார்த்தேன்!’ என்று உள்ளுக்குள் நொடித்துக் கொள்ள, அவள் மனமோ முந்தைய மருத்துவமனை நிகழ்வை எடுத்துக் காட்டி, அவன் சார்பாக பேசியது.

ரஞ்சு அவளின் மனதோடு விவாதித்துக் கொண்டிருக்க, அவளின் நிலை கண்ட சஞ்சய் அவள் முன்பு கைகளை அசைத்து, “ஹலோ மேடம், கனவு கண்டுட்டே வாக்கிங் போவீங்களோ?” என்றான் கிண்டலாக.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல.” என்றவள், சுற்றிலும் தேட, அவளின் தேடுதலைக் கண்டுகொண்டவனாக, “உன் பிரென்ட் வரல.” என்றான்.

தான் ஏன் சஞ்சீவை அவளின் ‘நண்பனாக’ கூறினோம் என்று சஞ்சயும் யோசிக்கவில்லை, அதைக் கேட்டவளிற்கும் அதை ஆட்சேபிக்க மனம் வரவில்லை.

சில நொடிகள் மெளனமாக கழிய, சஞ்சயே ஆரம்பித்தான். “இப்போ எப்படி இருக்கு?”

“ம்ம்ம் இப்போ பரவால. தேங்க்ஸ், அன்னைக்கு ஹெல்ப் பண்ணதுக்கு.” என்று ரஞ்சு கூற, “எத்தனை பேரு எத்தனை விதமா தேங்க்ஸ் சொல்வீங்க?” என்று அவளிடம் சாதாரணமாக உரையாடினான் சஞ்சய்.

“ஆமா, அன்னைக்கே கேட்கணும்னு நினைச்சேன். நீங்க எப்படி அங்க வந்தீங்க?” என்று தன் சந்தேகத்தை வினவினாள் ரஞ்சு. சூழ்நிலை வேறாக இருப்பின், இதைக் கேட்டிருப்பாளா என்று தெரியாது. ஆனால், அவன் இலகுவான பேச்சு அதைக் கேட்க வைத்தது.

மற்றவர்களை சமாளிப்பதில் அண்ணனும் தம்பியும் ஒரே போல யோசிப்பர் போலும். அன்று சஞ்சீவ் தோழிகள் இருவரிடம் சொன்னதையே சற்று மாற்றி கூறினான் சஞ்சய்.

“ஏன் உன் பிரெண்ட்ஸ் ரெண்டு பேரும் கூட வரல?” “உடம்பு சரியாகுற வரைக்கும் தனியா எங்கயும் போகாத.” போன்ற பேச்சுக்கள் இருவரிடமும் சரளமாக நிகழ, அதை அவர்கள் உணரவில்லை. ஆனால், இருவரையும் கண் கொத்திப் பாம்பாக கண்காணிக்கும் அந்த நபரின் பார்வையிலிருந்து தப்பவும் இல்லை.

இவர்கள் இருவரையும் கவனித்தது அந்த நபர் மட்டுமல்ல லோகேஷும் தான்.

“என்னடா இது? நம்மள வாட்ச் பண்ண சொல்லிட்டு, அந்த வேலையை இவரே பார்க்குறாரு. அப்பறம் எதுக்கு தேவையில்லாம நானு?” என்று சலித்துக் கொண்டே அங்கிருந்த மேஜையில் அமர்ந்து, விட்ட தூக்கத்தை மீண்டும் தொடர்ந்தான்.

“லேட்டாச்சு நான் கிளம்புறேன்.” என்று எழுந்த ரஞ்சுவை தொடர்ந்து தானும் எழுந்தவன், “நான் சொன்னதை மறந்துடாத. தனியா எங்கயும் போகக் கூடாது.” என்று எச்சரித்தவன், “டேக் கேர்.” என்று கூறினான்.

ரஞ்சுவும் அவன் கூறியவற்றிற்கு நன்றாக தலையாட்டியவள், அவனை திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தாள்.

“திரும்பிப் பார்க்குறேன்னு இப்பவும் யாரு மேலயாவது மோதிடாத.” என்று சஞ்சய் சற்று சத்தமாக கூறியதும் தான், தான் செய்து கொண்டிருக்கும் செயல் உரைக்க, மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக சென்றாள்.

அதை சிறு சிரிப்புடன் கண்டவன், அவள் அங்கிருந்து மறைந்ததும் வேகமாக சென்று நின்றது மேஜையில் சாய்ந்து சுகமாக தூங்கிக் கொண்டிருக்கும் லோகேஷின் முன்பு தான்.

அவனோ அதை அறியாமல் தூங்க, அவனின் அலைபேசிக்கு தொடர்பு கொண்டான் சஞ்சய்.

அப்போதும் கண் விழிக்காமல், தூக்கத்திலேயே அழைப்பை ஏற்றான் லோகேஷ்.

“லோகேஷ், எங்க இருக்கீங்க?” என்று பல்லைக் கடித்துக் கொண்டு சஞ்சய் வினவ, “இங்க தான் சார்… பார்க்ல.” என்றவாறே கண்களை லேசாக திறந்தவன் முன்பு, அகன்ற கால்களுக்கு விரிந்த நெஞ்சுடனும், லேசாக அரும்பிய வியர்வையுடனும் நின்றிருந்தவனைக் கண்டு அதிர்ந்தவன் எழுந்து நின்றான்.

“இது தான் நீங்க பார்த்துக்குற லட்சணமா?” என்று பல்லைக் கடித்துக் கொண்டு சஞ்சய் வினவ, “சார்… அது வந்து…” என்று தலையை சொரிந்தான் லோகேஷ்.

“ஐ டோன்ட் வான்ட் யுவர் சில்லி ரீசன்ஸ் லோகேஷ். இனிமே இப்படி நடக்காம பார்த்துக்கோங்க. அண்ட் இனி நான் கொஞ்சம் பிஸியா இருப்பேன். இப்படி உங்களை அனுப்பிட்டு பின்னாடியே வந்து உங்களுக்கு சப்ஸ்டிட்யூட் வேலை பார்க்க முடியாது.” என்று கூறிவிட்டு அவன் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் விறுவிறுவென்று சென்று விட்டான்.

இன்னும் தூக்கக் கலக்கத்தில் இருந்த லோகேஷோ, ‘என்னடா நடக்குது இங்க!’ என்று முழித்துக் கொண்டிருந்தான்.

“ஃபீல்டு ஒர்க் வந்தா ஜாலியா இருக்கலாம்னு பார்த்தா, இப்படி எல்லாரு கிட்டயும் திட்டு வாங்க வேண்டியதா இருக்கே.” என்று புலம்பிக் கொண்டே தன் பணியை தொடர சென்றான்.

*****

சஞ்சய் பூங்காவிலிருந்து வீட்டிற்கு சென்றவன், தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு சஞ்சீவ் இருந்த மருத்துவமனைக்கு சென்றான். அவன் செல்லும் நேரம் தான், மருத்துவர் சஞ்சீவை பரிசோதித்துக் கொண்டிருந்தார்.

பரிசோதனையை முடித்தவர் சஞ்சயிடம், “ஹி இஸ் ஆல்ரைட் நவ். ஆனாலும் தலைல அடிபட்டதுனால கொஞ்ச நாள் எந்தவித ஸ்ட்ரெஸ்ஸும் இல்லாம ஓய்வா இருக்குறது பெட்டர்.” என்று கூறிவிட்டு செல்ல, சஞ்சயோ சஞ்சீவிடம் திரும்பி, “டாக்டர் சொன்ன மாதிரி கொஞ்ச நாள் நீ ரெஸ்ட் எடுக்கணும்.” என்று கூறினான்.

“நோ வே ஜெய், ஹோட்டல் போய் பார்த்தே ரொம்ப நாளான மாதிரி இருக்கு. அப்பறம் இப்படி ஒரே இடத்துல இருக்குறதெல்லாம் எனக்கு செட்டாகாதுன்னு உனக்கே தெரியுமே.” என்று மறுத்து பேசியவனை கண்களாலேயே தடுத்து நிறுத்திய சஞ்சய், அடுத்த பத்து நிமிடங்களில் சஞ்சீவின் வாயிலிருந்தே வீட்டிலிருந்து ஓய்வெடுப்பதாக கூற வைத்திருந்தான்.

அதைக் கேலிச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த கோகுல் புறம் திரும்பினான் சஞ்சய்.

‘அய்யயோ என்ன நம்ம பக்கம் திரும்புறாரு?’ என்று அதிர்ந்தவனிற்கு, சரியாக அதிரக் கூட அவகாசம் கொடுக்காமல், “அந்த ராஜசேகர் விஷயம் எண்னாச்சு கோகுல்?” என்று வினவினான்.

“எந்த ராஜசேகர்?” என்று தன்னை மறந்து வெளியே கூறிவிட்டவனை பொசுக்கும் பார்வை பார்த்தவாறே நின்றிருந்த சஞ்சையைக் கண்டவன், ‘ஹ்ம்ம், இப்போ தான் பாஸ் இஸ் பேக் டு ஃபார்ம். ஆனா, இப்படி அவருக்கிட்ட முதல் ஆளா நான் மாட்டுவேன்னு எதிர்பார்க்கலையே! இப்போ என்ன சொல்லி சமாளிக்கிறது?’ என்று வழக்கம் போல புலம்பினான் கோகுல்.

இப்போது இவர்களைக் கண்டு சிரிப்பது சஞ்சீவின் முறையானது. அதே ‘முறை’யை சஞ்சீவிற்கு திருப்பி விட்ட கோகுலின் கவனத்தை ஈர்த்த சஞ்சய், “என்ன சொல்லி சமாளிக்கன்னு தெரியலையா?” என்றான்

“பாஸ், நீங்க தான ஃபர்ஸ்ட் சஞ்சீவ், அதுக்கு அப்பறம்…. அந்த ராஜசேகர்…” என்று திக்கியவனை நோக்கி, “சஞ்சுவை கண்டுபிடிச்சு எத்தனை நாளாச்சு கோகுல்?” என்று கைகளைக் கட்டிக்கொண்டு வினவ, ‘ஐயோ, விட மாட்டிங்குறாரே. என்னைக்கும் இல்லாம இன்னைக்கு ரொம்ப வருத்தெடுக்குறாரே.’ என்று மண்டை காய்ந்தான் கோகுல்.

அவனின் நிலை சஞ்சீவிற்கு பாவமாக இருக்க, “விடு ப்ரோ, நெக்ஸ்ட் ஆக வேண்டியத பார்க்கலாம்.” என்று கூற, ஒரு பெருமூச்சுடன் அதை ஒப்புக்கொள்வதைப் போல, “இனி இப்படி வெயிட் பண்ணிட்டே இருந்தா, அந்த ராஜசேகரை பிடிக்க முடியாம போயிடும். சோ நாமளே தேட வேண்டியது தான்.” என்று கூறினான் சஞ்சய்.

“ஓகே பாஸ் இன்னைக்கே தேட ஆரம்பிச்சுடலாம்.” என்று அவனிடம் மேலும் திட்டு வாங்காமல் தப்பிக்க இப்படி கூறினான் கோகுல்.

இருவரையும் பார்த்த சஞ்சீவ், “ஹலோ என்ன ரெண்டு பேரும் ஏதேதோ பிளான் பண்ணிட்டு இருக்கீங்க. நான் மட்டும் இப்படி நாலு சுவத்துக்குள்ள அடைஞ்சு இருக்கணும். நீங்க மட்டும் உங்க வேலையை பார்க்க போவீங்களா? அதெல்லாம் முடியாது. ஒன்னு எல்லாரும் அவங்கவங்க வேலையை பார்க்க போவோம், இல்ல எல்லாரும் ரெஸ்ட் எடுப்போம்.” என்று சற்று பிடிவாதமாகவே கூறினான் சஞ்சீவ்.

சஞ்சய் எத்தனையோ சமாதானங்கள் கூறினாலும் கேட்க மறுத்துவிட, வேறு வழியின்றி சஞ்சய் சஞ்சீவுடன் வீட்டிற்கு செல்வது என்றும், கோகுல் ராஜசேகரைக் கண்டுபிடிக்க நியமித்திருக்கும் துப்பறிவாளரோடு செல்வான் என்றும் முடிவு செய்யப்பட்டது.

சில பல உத்தரவுகளை சஞ்சயிடம் பெற்றுக் கொண்டு ராஜசேகரைத் தேடிச் சென்றான் கோகுல். சஞ்சயும் சஞ்சீவும் அவர்களின் வீட்டை நோக்கி பயணப்பட்டனர்.

*****

தன் நடைப்பயிற்சியை முடித்துக் கொண்டு அறைக்கு வந்து கொண்டிருந்த ரஞ்சு இன்னமும் சிந்தனையின் பிடியிலேயே இருந்தாள். ஆனால், நடைப்பயிற்சிக்கு முன்னிருந்த சிந்தனையும் அதற்குப் பின்னான சிந்தனையும் முற்றிலும் வேறானது.

‘நான் ஏன் அவங்களை அப்படி பார்த்தேன்?’ என்று நூறாவது முறையாக தன்னையே கேட்டுக் கொண்டு வந்தவள், மீண்டும் வழியில் யாரையோ இடித்துக் கொள்ள, சட்டென்று மனதில் அவன் கூறிய வார்த்தைகள் மறுஒலிபரப்பாக, தன்னை மறந்த நிலையில் நின்று கொண்டிருந்தாள்.

எதிரில் ரஞ்சுவின் செய்கைகளை வித்தியாசமாக பார்த்துக் கொண்டிருந்த அவளின் விடுதி தோழி ஸ்ரீநிதி, அவளை உலுக்கி நிகழ்விற்கு அழைத்து வந்தாள்.

“ஹே ரஞ்சு என்னாச்சு உனக்கு? நான் அத்தனை தடவை கூப்பிடுறேன், ஏதோ கனவுல இருக்க மாதிரி நின்னுட்டு இருக்க? ஹ்ம்ம், உன்னை பார்த்தா வேறெதோ மேட்டர் மாதிரி தெரியுதே.” என்று கேலி செய்ய ஆரம்பித்தாள்.

அவளைப் பொறுத்தவரை, ரஞ்சு எப்போதும் போல ஊருக்கு சென்று வந்திருந்தாள். ரஞ்சுவின் குடும்பத்தைப் பற்றிய எந்த செய்தியும் அவளிற்கு தெரிவிக்கப்படவில்லை. அவள் மட்டுமல்ல, சஞ்சு தர்ஷு தவிர, வேறு ஒருவருக்கும் அதை தெரியப்படுத்தவில்லை. இதன் காரணமாகவே எப்போதும் போல ரஞ்சுவை கேலி செய்தாள் ஸ்ரீநிதி.

ஸ்ரீநிதியைப் பார்த்தவுடன் தான் அவளிடம் தான் கேட்க வேண்டிய உதவி நினைவிற்கு வந்தது. அதன் தாக்கத்தால் சஞ்சய் கூட அவளின் மனதின் ஒரு மூலைக்கு சென்று விட்டான்.

“ஹே ஸ்ரீ, நீ எனக்கு ஒரு ஹெல்ப் செய்யனும்.” என்று வினவ, ஸ்ரீயும் அவளின் முக மாறுதலைக் கவனித்தவாறே, “என்ன ஹெல்ப் ரஞ்சு? சொல்லு கண்டிப்பா பண்ணிடலாம்.” என்று உதவியைக் கோரும் முன்பே சம்மதித்திருந்தாள்.

இது கிட்டத்தட்ட பிரதியுபகாரம் போலவே. சில மாதங்களுக்கு முன்பு, இதே ஸ்ரீ உதவி கோருமிடத்தில் நிற்க, ரஞ்சு அவளிற்கு உதவுவதாக வாக்களித்து, அதன் படியே அந்த உதவியை செய்திருந்தாள். அதன் காரணமாகவே எப்போதும் ஸ்ரீக்கு ரஞ்சுவை பிடிக்கும். அவளிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று எதிர்நோக்கியிருப்பவளிற்கு அதற்கான சந்தர்ப்பம் வாய்க்கும்போது அதை விட்டுவிடுவாளா என்ன?

“ஸ்ரீ, உங்க அண்ணா டிடெக்ட்டிவ் தான. எனக்கு ஒருத்தவங்களோட அட்ரெஸ் கண்டுபிடிக்கணும். அதுக்கு அவங்க ஹெல்ப் வேணும் ஸ்ரீ.” என்றாள் ரஞ்சு.

“அவ்ளோ தான, பண்ணிட்டா போச்சு! அவங்க யாரு, கடைசியா எங்க இருந்தாங்க, அவங்களை பத்தி உனக்கு தெரிஞ்ச விபரங்கள் எல்லாம் கொடு, அண்ணா கிட்ட சொல்றேன்.” என்றாள் ஸ்ரீ.

“என்கிட்ட அவங்க பழைய போட்டோவும், பழைய போன் நம்பர் அட்ரெஸ் மட்டும் தான் இருக்கு.” என்றவள், தான் ஏற்கனவே அலைபேசியில் சேமித்து வைத்திருந்த புகைப்படத்தையும், விலாசத்தையும் ஸ்ரீக்கு அனுப்பினாள்.

“இது… இது உங்க அம்மா தான?” என்று ஸ்ரீ கமலத்தை நோக்கி கை நீட்ட, ரஞ்சுவோ ஒரு பெருமூச்சுடன், “ம்ம்ம்” என்று மட்டும் கூறியவள், “கொஞ்சம் சீக்கிரமா கண்டுபிடிக்க முடியுமா ஸ்ரீ?” என்றாள்.

அதற்குள் ஸ்ரீயை யாரோ அழைக்க, “டோன்ட் வொரி ரஞ்சு. சீக்கிரமா கண்டுபிடிச்சுடலாம்.” என்று கூறியவாறு சென்று விட்டாள்.

இப்போதும் ரஞ்சுவிற்கு தான் செய்ய நினைக்கும் செயல் சரியா தவறா என்று தெரியவில்லை. இருப்பினும் முடிவு செய்துவிட்டாள், அவளின் பிறப்பிற்கு காரணமானவர்களை பார்த்தே ஆக வேண்டும் என்று.

*****

சஞ்சீவை அவனின் அறையில் விட்டுவிட்டு தன்னறைக்கு வந்த சஞ்சய்க்கு நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் ஏதோ உணர்த்த முயன்று கொண்டிருந்தன.

சற்று நேரத்திற்கு முன்பு கோகுலை திட்டிய நிகழ்வு மனதில் ஓட, ‘நான் ஏன் அப்படி நடந்துகிட்டேன்?’ என்று நினைத்தான்.

‘என்னமோ புதுசா நடந்துகிட்ட மாதிரி சொல்ற? அந்த ராட்சசி செஞ்சு வச்ச வேலைக்கு அப்பறம் எல்லாருக்கிட்டயும் அப்படி தான நடந்துகிட்ட!’ என்று அவனைப் பற்றி அவனே மறந்த விஷயங்களை அவனிற்கு நினைவுபடுத்தியது அவனின் மனசாட்சி.

அவனும், ‘அதான’ என்று யோசிக்க அவனை மேலும் யோசிக்க விடாமல், ‘அந்த ரஞ்சுவை பார்த்ததும் தான் சார் புதுசா நடந்துக்குற மாதிரி இருக்கு.’ என்று எடுத்துக் கூறியது.

அவனின் செயல்கள் அனைத்தையும் வரிசை படுத்தி பார்த்தவனிற்கு அவனின் மனம் கூறுவது சரியென்றே பட்டது. அவனின் இந்த வித்தியாசமான செய்கைகளுக்கான காரணத்தை மனதிடமே கேட்க, அவனின் மனமோ சற்றும் தாமதிக்காமல் காதல் என்ற பதிலைத் தந்தது. ஆனால், அதை ஏற்றுக்கொள்ளத் தான் சஞ்சயால் முடியவில்லை.

‘என்னது காதலா? லூசா நீ? ஏற்கனவே ஒருத்தி அதை சொல்லித் தான் ஏமாத்திட்டு போயிருக்கா. திரும்பவும் அதுக்குள்ள போறதுக்கு நீ என்ன லூசா? நோ நெவர்! இன்னொரு தடவை இந்த பொண்ணுங்கள நம்ப நான் தயாராயில்ல. அதுவும் அந்த முகம்…’ என்று விவாதித்துக் கொண்டிருந்தவனை, இடைவெட்டிய அவனின் மனம், ‘அந்த முகத்தை பார்த்து தான் திரும்பவும் காதல்ல விழுந்துட்டீங்க மிஸ்டர். எஸ்.ஜே.’ என்று அவனிற்கு சளைக்காமல் பதிலளித்தது அவனின் மனம்.

‘வாட்? யூ மீன் பிசிகல்லா அவ மேல அட்ராக்ஷன் வந்துருக்குன்னு சொல்றியா?’

‘அதுல ஒன்னும் தப்பிலையே! முதல் ஈர்ப்பு முகத்தை பார்த்து வந்தாலும், அது காதலா மாறுறதுக்கு மனசும் ஒத்துப்போகணும். அப்படி பார்த்தா, நீ இப்போ செகண்ட் ஸ்டேஜ்ல இருக்க!’

‘எது? பார்த்த ரெண்டு நாள்ல லவ்வா?’

‘அதை நீ முடிவு பண்ண வேணாம். நான் முடிவு பண்ணா போதும். அண்ட் எஸ் அவ மேல உனக்கு லவ் தான்!’

‘ரிடிக்குலஸ்!’ – இப்படி அவனிற்கும் மனதிற்கும் விவாதம் போய் கொண்டிருக்க, அதை முடித்தவன் அவனே.

‘வந்த வேலையை முடிச்சுட்டு சீக்கிரம் பிசினஸ் பார்க்க போகணும். சும்மா இருந்தா இது மாதிரியான எண்ணங்கள் தான் வரும்.’ என்று அவன் நினைக்க, ‘இன்னும் எத்தனை நாளைக்குன்னு பார்க்குறேன்!’ என்று அவனின் மனமோ சிரித்துக் கொண்டது.

சில மணி நேரங்களிலேயே அவனின் மனம் கூறியது உண்மையென்று நிரூபிப்பதைப் போல, அவனவளிற்காக ஓடினான் சஞ்சய்.

*****

அன்றைய நாள் கல்லூரிக்கு செல்லும்போது கூட சற்று பதட்டமாகவே காணப்பட்டாள் ரஞ்சு. சஞ்சு கேட்டதற்கு ஏதோ கூறி சமாளித்து விட்டாள்.

ஸ்ரீயிடமிருந்து ஏதாவது தகவல் வந்ததா என்று அடிக்கடி அலைபேசியை எடுத்து பார்த்துக் கொண்டவளை தர்ஷு புருவம் சுருக்கி பார்த்தாலும் அவளிடம் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.

மாலை வேளையும் வந்துவிட, ரஞ்சுவின் அலைபேசியில் அவள் எதிர்பார்த்த தகவல் தான் வரவில்லை. சற்று சோர்வுடனே அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தவளை தற்காலிகமாக அந்த சோர்விலிருந்து மீட்கவே அந்த தகவல் கிடைத்தது. அதைக் கண்டவள், சஞ்சு மற்றும் தர்ஷுவிடம் ப்ராஜெக்ட் சம்பந்தமாக அவளின் கைட் வர சொன்னதாக கூறினாள்.

“ப்ச், இவங்களுக்கு வேற வேலையே இல்ல. காலேஜ்ல இருக்குறப்போ எல்லாம் கண்டுக்குறதே இல்ல. இப்போ கூப்பிட்டு வர சொல்றது.” என்று சஞ்சு சலித்துக் கொள்ள, தர்ஷுவோ, “நாளைக்கு வரேன்னு சொல்லிட்டு வா ரஞ்சு.” என்றாள்.

“இல்ல தர்ஷு நான் போயிட்டே வரேன். இப்போ விட்டா திரும்ப அவங்க எப்போ அவைலபிலா இருப்பாங்களோ!” என்று வாய்க்கு வந்ததை கூறிவிட்டு சென்று விட்டாள்.

“இவ எப்போ இவ்ளோ சின்சியரா ஆனா?” என்று சஞ்சு யோசிக்க, தர்ஷுவிற்கும் அதே எண்ணம் தான்.

*****

ரஞ்சுவின் கல்லூரிக்கும் விடுதிக்கு இடைப்பட்ட இடத்தில் இருந்தது அந்த உணவகம். மாலை வேளை என்பதால் ஆங்காங்கு மக்களின் சலசலப்பு இருந்து கொண்டேயிருந்தது. ரஞ்சுவின் கவனமோ அதிலெல்லாம் இல்லை. எப்போது ஸ்ரீயின் அண்ணன் வருவார், அவரிடமிருந்து எப்போது தனக்கு அந்த தகவல் கிடைக்கும் என்பதிலேயே குறிப்பாக இருந்தாள்.

அப்போது அவளின் அலைபேசி ஒலித்தது. ஸ்ரீ தான் அழைத்திருந்தாள்.

“ரஞ்சு வெரி சாரி, அண்ணாக்கு ஒரு முக்கியமான வேலை வந்துடுச்சாம். அவசரமா ஊருக்கு கிளம்பிட்டு இருக்கானாம். இஃப் யூ டோன்ட் மைண்ட், அவனோட பிரெண்டு வந்து அந்த டிடெயில்ஸ் கொடுத்தா வாங்கிக்குறியா?” என்று கேட்க, ரஞ்சுவோ தகவல்கள் கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் இருந்தவள், “அதுனால என்ன ஸ்ரீ? நான் தான் அவசரமா வேணும்னு உன் அண்ணாவ தொல்லை பண்ணிட்டேன்னு நினைக்குறேன்.” என்றாள்.

“ச்சேச்சே, அதெல்லாம் இல்ல ரஞ்சு. அண்ணாவோட பிரெண்ட் டிடெயில்ஸ் உனக்கு வாட்சப்ல அனுப்புறேன்.” என்று கூறி அழைப்பை துண்டித்தாள்.

அவள் கூறியதைப் போலவே, செய்தியும் வர சிறிது நேரத்தில் அந்த நண்பனும் வந்தான். அவன் தந்த தகவலை கண்டவளிற்கு, அன்றைய நாளின் சாதனையாய் அது தோன்றியது.

அந்த தகவல்களில் பார்வையை ஓட்டியவள், அங்கிருந்த விலாசத்தைக் கண்டு சிறிது நிம்மதியுற்றாள்.

‘ஷப்பா, இங்க பக்கத்துல இருக்க அட்ரெஸ் தான். இதுக்கு தனியா பொய் சொல்லிட்டு வரணுமான்னு யோசிச்சேன். இப்போவே கையோட பார்த்துட்டு போயிடலாம்.’ என்று அவள் முடிவெடுக்க, அவளின் முடிவை சாதாகமாக்கிக் கொள்ள ஒருத்தி காத்துக் கொண்டிருக்கிறாள் என்பதை அறியாமல் போனாள்.

*****

“ஷப்பா, தலைவலிக்கு ஒரு காபி வாங்கி குடிக்கலாம்னா என்ன கூட்டம்!” என்று அலுத்துக் கொண்டே அவனின் பணியிடமான அந்த விடுதிக்கு எதிர் வீட்டிற்கு சென்றான் லோகேஷ்.

கல்லூரியிலிருந்து தோழிகள் மூவரும் விடுதியை நோக்கி செல்ல, ‘இனி எங்க போயிடப் போறாங்க? நாம சூடா ஒரு காபி குடிச்சுட்டு வரலாம்.’ என்று அந்த தெரு துவக்கத்திலிருந்த கடைக்குள் சென்றான்.

அவன் சென்ற நொடியிலேயே, ரஞ்சுவின் அலைபேசிக்கு தகவல் வந்ததையோ, அவள் மற்ற இருவரையும் சமாளித்துவிட்டு சென்றதையோ கவனிக்காமல் போனது அவனின் துரதிர்ஷடமோ!

வெகு நேரத்திற்கு பின்பே, ரஞ்சு விடுதியில் இல்லாததைக் கண்டுபிடித்தான் லோகேஷ். அதுவும், சஞ்சு மற்றும் தர்ஷு இருவரும் மாறி மாறி வெளியில் வந்து போய் கொண்டிருப்பதைக் கண்டவனிற்கு, வயிற்றில் புளியைக் கரைத்தது போலிருந்தது.

அதை உண்மையாக்குவதைப் போலவே, அடுத்த ஐந்தாம் நிமிடம் சஞ்சயிடமிருந்து அழைப்பு வர, பயந்து கொண்டே அதை உயிர்பித்தவனின் செவிகளில் ரத்தம் கசியும் வண்ணம் திட்டித் தீர்த்தான் சஞ்சய்.

*****

மனதை வெகுவாக சமாதானப்படுத்தி, தன் வேலைகளில் கவனத்தை திருப்பியவனிற்கு கிடைத்தது சில மணி நேர வெற்றி மட்டுமே.

சரியாக ஆறு மணிக்கு அவனின் அலைபேசி ஒலியெழுப்ப, தன் வேலையை கலைத்ததினால் உண்டான சலிப்புடனே அதை உயிர்ப்பித்தான். மறுமுனையில் கூறிய செய்தியில் அவன் கண்கள் சிவக்க, தாடை இறுக, பயங்கர கோபத்தில் அந்த அழைப்பைத் துண்டித்தவனின் கைகள் அடுத்த நொடி அழைத்தது லோகேஷின் எண்ணிற்குத் தான்.

ஐந்து நிமிடங்களிற்கும் மேலாக லோகேஷை திட்டியவனின் மனமோ, அவளிடம் செல்ல உத்தரவிட, இம்முறை அதற்கு மறுப்பு எதுவும் கூறாமல், அவன் மனம் சொன்னதை அப்படியே நிறைவேற்ற அவனின் கால்கள் அவளை நோக்கி விரைந்தன…

காதல் கொள்வோம்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
7
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்