Loading

மனமே! நீ மென்மையின் இலக்கணமாய் போற்றப்படலாம்!
புத்தரும் சித்தரும் உன்னுள் ஒளிந்திருக்கலாம்!
ஆனால் வன்மையின் பிறப்பிடமே நீ என்பது அறியாயோ?
மென்மை என்றே விளிக்கட்டும் மாந்தர்கள், வன்மை வெளிப்படாதவரை!

அவ்வளவு நேரம் சூனியமாய் இருந்த அமைதி குலைந்தது கொட்டிய மழையால். அவளின் உடல் நடுங்கியது. முழங்கால் மடித்து அமர்ந்து, அதில் முகம் புதைத்தாள். அவளுக்கு என்ன நிகழ்ந்ததென்று நினைவில்லை. ஆனால் இயல்பாய் நிகழ வேண்டியது நிகழ்வில்லை. அவளின் ஏதோ ஒரு  செய்கையால் அறையில் இறுக்கம் சூழ்ந்திருக்கிறது என்று மனம் சூளுரைத்தது. அவனின் முகத்தை விழியெடுக்காமல் பார்த்திருந்தாள். அவனுக்கும் வார்த்தைகள் இல்லை. வழமையாய் அவள் அமைதிக் காக்கும் தருணம் அவன், அதை நிரப்பிடுவான். ஆனால் இன்று அது முடியவில்லை. ஏனெனில் அவள் நடந்து கொண்ட விதம் அப்படி. அவனை மூன்றாம் மனிதன் போல் நடத்தினாளே. அதை சிந்தனை செய்யாமல் ஒதுக்கி வைக்கவும் முடியவில்லை அவனால். அவன் மனதின் மெல்லிய பாகத்தைத் தீயிட்டுப் பொசுக்கியதுபோல் தோன்றியது. மனதின் மறுபக்கம் வாழ்ந்த புத்தனும் சித்தனும் அவனை அடக்க முற்பட, அடிபட்ட பாகத்திலிருந்து மிருகம் அவற்றை அடக்கியது. இறுதியில் பட்டிமன்றம் நிறைவுக்கு வராமல் நடக்கக் கட்டளைப் பிறப்பித்தது மூளை.

“எனக்கு என்னமோ ஆகுது கீதன். எனக்கு என்னனு சொல்லத் தெரியலை” என்று வழமைக்கு மாறாக அவளே மௌனம் களைந்தாள்.

அவளின் இந்த வாக்கியத்தில் அவனுமே குழப்பமடைந்தான். மெய்யொன்று நிகழ்ந்திருக்க, பொய்மைப் பரிமாறும் அவளின் உதடுகள் அவனையும் சிந்திக்க வைத்தது.

“வாட்..?” என்றான் ஒற்றை வார்த்தையில்.

அவள் வார்த்தைகள் தேடித்தேடி தோற்றுப் போனாள்.

“கொஞ்சம் பொறுமையா யோசிச்சு சொல்லு.. என்ன நடந்துச்சு?” என்று தன்னிலையில் இருந்து கீழிறங்கி வந்தான்.

“அது… அது..” என்றவள், என்ன சொல்வதென்று விளங்காமல் மலங்க மலங்க விழித்தாள்‌.

“நீ எதுவுமே சொல்லாம எப்படி நான் புரிஞ்சிக்கணும்னு எதிர்பார்க்குற. நானும் மனிஷன்தான். நாம இப்போ எதுக்கு இங்க வந்துருக்கோம்னு உனக்கு நல்லா தெரியும். வயசுக்குள்ள எதிர்பார்ப்புகள் என்கிட்ட நிறையவே இருக்கு நிரண்யா. ஆனாலும் பொறுமையா உங்கிட்ட பேசுறேன்..” என்றவனின் சொற்களில் கொஞ்சம் சீற்றமும், ஏமாற்றமும் கலந்து ஒலித்தது.

நிரண்யாவிற்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. தொண்டைக் குழிக்குள் யாரோ பாராங்கல்லை வைத்து அழுத்தும் உணர்வு. எழுந்து குளியலறை நோக்கி ஓடினாள். பின் தண்ணீரை எடுத்து அடித்து முகம் கழுவினாள். அவனின் அருகில் வந்து அமர்ந்தாள். சில நொடிகள் மௌனம். பின் முடிவுக்கு வந்தவளாய், அவனின் கைகளைப் பற்றினாள்.

“கீதன்.. யார் யாரோ எங்கிட்ட பேசுறாங்க..” என்று அவள் கூற, அவன் அவளை விசித்திரமாக பார்த்து வைத்தான்.

“புரியலை..”

“எனக்கும் எப்படி சொல்றதுன்னு தெரியலை..”

“யார் பேசுறா.. யாராவது ராங் கால் பண்ணி தப்பா பேசினாங்களா?”

“இல்லை.. இது வேற மாதிரி..‌”

“வேற மாதிரின்னா..”

“எனக்குள்ள யாரோ பேசுறாங்க..”

“வாட்…” என்று அதிர்ந்தவன் எழுந்துவிட்டான். அவனின் விலகலில் அவள் தரையில் விழுந்த மீனாய் துடித்துவிட்டாள். அவள் மனதின் போராட்டம் அவளின் விழியில் உவர்நீராய் கரைந்து ஓட, அவன் அவளின் அருகில் அமர்ந்தான்.

“யூ மீன் ஹேலுசினேஷன்..” என்றான் அதிர்ச்சி கலந்த குரலில். சில நொடி மௌனங்களுக்குப் பின்.

சிறிது நேரம் சிந்தித்ததவள், “இருக்கலாம்” என்றாள் வார்த்தையில் வலியுடன்.

அவனுக்கும் இது அதிர்ச்சியாகவே இருந்தது. இப்பொழுது இவ்வளவு தெளிவாக இருக்கும் இவள், சற்று முன் நடந்து கொண்ட முறைக்கு என்னவென்று விளக்கம் தருவது.

“இது எப்போலேந்து..”

“கொஞ்ச நாளா?”

அதன்பிறகு இருவரும் பேசும் மனநிலையில் இல்லை. தனக்குள் சில குரல்கள் ஒலிக்கிறது என்றால், அது அவளின் மனம் அமைதியற்று தவிக்கிறது என்று பொருளாயிற்றே. அப்படி அவள் மனதில் அழுத்தம் கொள்ளும் அளவு, என்ன கவலை இருக்கிறது. அவளுக்கு எந்தவொரு கவலையும் இல்லையே. அனைத்தும் நிறைவாகவே இருக்கிறது அவளது வாழ்வில்.

“உனக்கு ஏதாவது பிரச்சினை இருக்கா?”

“இப்போதைக்கு இதைத் தவிர வேற எதுவும் இல்லை கீதன்.”

அவள் எதையோ மறைக்கிறாளோ என்று ஐயுற்று அவளைப் பார்த்தான். ஆனால் அவளின் முகத்தில் பொய்யின் சாயல் சிறிதும் இல்லை.

“சரி.. கிளம்பு.. ஊருக்குப் போகலாம்..” என்றான் மொட்டையாக.

“என் மேல் கோபம் இல்லையே..”

“தெரியலை.. ” என்றான் முகத்தைத் திருப்பிக்கொண்டு.

உண்மையில் ஏமாற்றமும் கோபமும் அவனின் மனதில் மண்டிக் கிடந்தாலும், சூழ்நிலையை முதிர்ச்சியுடன் அவன் கையாண்ட விதம் அவளை வெகுவாய் ஈர்த்தது.

இருவரும் மனம் முழுக்கக் குழப்பத்துடன் சென்னை வந்து சேர்ந்தனர்.

இரண்டு நாட்கள் கீகன் எதுவும் பேசவில்லை. அலுவலகம் செல்வதும், வீடு வருவதும், தேவையான விஷயத்திற்கு மட்டுமே அவளுடன் உரையாடுவதும் என்று பொழுது போயிற்று.  இவள் ஏதேனும் கேட்டாலும் கேட்டக் கேள்விக்கு மட்டுமே பதில் கூறினான்‌.

அன்று மாலை வீட்டிற்கு வந்தவன், “நிரு.. வெளில போகலாம்.. கிளம்பு” என்றான்.

“ஏங்க போறோம்?” என்றாள் சற்று உற்சாகமாக. பதில் சொன்னாதான் வருவியா என்று அவன் பார்த்து வைக்க, அவளின் முகம் வாடிப்போனது.

அதன்பிறகு இருவரும் ஒரு மருத்துவமனையில் இருந்தனர். மனநல மருத்துவர் மதுராவைப் பார்க்க, பார்வையாளர்கள் அறையில் காத்திருந்தனர். நிரண்யாவின் கைகளில் சிறிது நடுக்கம். அதை கவனித்த கீதன், அவளின் கைகளை இறுக்கிப் பிடித்து ஆறுதல் கூறினான்‌.
அவளின் பெயரை சொல்லி அழைக்கும்போது அவளின் இதயம் ஆயிரம் முறை துடித்துவிட்டது.

அவளின் பெயர் கொண்டு அழைத்ததும், இருவரும் உள்ளே சென்றனர்.

“வாங்க.. உட்காருங்க. என்ன பிரச்சினை?” என்று மதுரா வினவ, அவள் அமைதியாய் இருந்தாள். அவளைப் பார்த்தவன், அவனே பதில் கூறினான்.

“மேம்.. இவளுக்கு ஏதோ குரல் கேக்குதாம். சில சமயம் ரொம்ப வினோதமா நடந்துக்குறா” கீதன்.

“நீங்க சொல்லுங்க நிரண்யா.. என்ன பிரச்சினை. கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா?” மதுரா.

“என்கூட யாரோ பேசுற மாதிரி இருக்கு மேம்.. எனக்கு.. அ..தை எப்படி சொல்றதுன்னு தெரியலை” நிரண்யா.

“எப்போலாம் கேக்குது?”

“அது..” என்று சிந்தனையில் ஆழ்ந்தாள் நிரண்யா.

“நீங்க தனியா இருக்கும்போது கேட்குதா? இல்லை கூட்டத்தில் இருக்கும்போது கேட்குதா?”

“தனியா இருக்கும்போது..”

“அந்த குரல் எப்படி இருக்கு. அதாவது தெளிவா கேட்குதா? இல்லை ஒழுங்கற்று கேட்குதா?”

“தெளிவா இருக்கு மேம்..”

“அந்த வாய்ஸ் கேட்கும்போது உங்களுக்கு சந்தோஷமா இருக்கா.. இல்லை பயமா இருக்கா?”

“அது சரியா சொல்லத் தெரியலை” என்றாள் சிறிது சிந்தனைக்குப் பின்.

“குரல் தெளிவா கேட்கும்போது அது எப்படி தெரியாமப் போகும்..”

“அது தெளிவா கேக்குது. கொஞ்ச நேரம் ஏதோ மனசைப் பிசையும் உணர்வு. வார்த்தைகளும் பொருளும் தெளிவில்லைன்னா எனக்கு மனசுல இந்த பயவுணர்வு வராதே..”

“ஏதாவது வார்த்தைகள் ஞாபகம் இருக்கா?” என்று அவர் வினவ, சிறிது சிந்தனைக்குப் பின், “இல்லை..” என்றாள்.

“கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க..”

“இல்ல மேம்.. எதுவும் ஞாபகம் இல்லை.”

அவளைப் பற்றிய சில தகவல்களையும் குறிப்பெடுத்தவர், “கொஞ்சம் அதிகமான அழுத்தம் இருந்தா கூட இந்த மாதிரி இருக்கும். உங்களுக்கு புதுசா கல்யாணம் ஆகிருக்கு. அதனால ஏதாவது அதிகமா யோசிச்சு அழுத்தம் ஏற்பட்டிருக்கலாம்” என்றார்.

“எனக்கு அவரை ரொம்பவே பிடிச்சுப் போய் கல்யாணம் செஞ்சுக்கிட்டேன். அப்புறம் எப்படி அழுத்தம் வரும்” நிரண்யா.

“அவரைப் பிடிக்கிறது வேற.. இந்த உறவின் மேல் இருக்கும் புரிதல் வேற” மதுரா.

“இப்பவும் அவரைப் பிடிக்கும் மேம்.. கீதன் என்னோட ஒரு நாள் பேசலைனா கூட, என்னால தாங்க முடியாது” என்றாள் உண்மையான வருத்தத்துடன்.

“மிஸஸ்.. நிரண்யா.. ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க.. உங்களுக்குள்ள பிசிக்கல் ரிலேஷன்ஷிப் எப்படி இருக்கு?” என்று அவர் வினவ, தலை குனிந்தாள் அவள்.

“மேம்.. எங்களுக்கு கல்யாணமாகி இரண்டு வாரம்தான் ஆகுது..” என்றான் கீதன் அவசரமாக.

“ஸோ வாட்… டூ யூ தின்க், திஸ் டூ வீக்ஸ் ஆர் நாட் இனஃப்? நான் சொல்றது புரியுதா.. உங்களுக்குள்ள அந்த புரிதல் சரியா இருந்தா நீங்க இங்க வந்திருக்க மாட்டீங்க..”

“நான் அவளைப் புரிஞ்சுக்க முயற்சி செஞ்சிட்டு இருக்கேன்..” என்றான் இறங்கிய குரலில்.

“நிச்சயம் முடிஞ்சு எத்தனை மாசம் ஆகுது..”

“ஆறு மாசம்..”

“அந்த ஆறு மாசத்தில் ரெண்டு பேரும் எவ்ளோ பேசிருக்கீங்க..”

“அது நிறைய..”

“நிறையன்னா?”

“ஒரு நாளைக்கு குறைஞ்சது ரெண்டு மணி நேரம்..”

“அப்போ புரியாததா இந்த சில வாரத்தில் புரியப் போகுது” என்று மதுரா கேட்க, அவனுக்கும் என்ன பதில் சொல்வதென்று விளங்கவில்லை.

“கம்மிங் டு தி பாயிண்ட்.. அவ்ளோ பேசுன நீங்க, செக்ஸ் பத்தியும் பேசிருக்கணுமே..” என்றதும் சிறு தடுமாற்றம் இருவருக்கும்‌.

“என்ன எதுவும் பதில் சொல்லாம இருக்கீங்க?” மதுரா.

“அது அவ அப்பா அம்மாவோட இருந்தா மேம்.. நான் சில சமயம் ட்ரை பண்ணிருக்கேன். ஆனா கூட யாராவது இருக்கும்போது கொஞ்சம் இன்ட்டிமேட்டா எப்படி பேசுறது..” என்றவனை சிறு புன்னகையுடன் பார்த்தான் மதுரா.

“இது உங்களுக்கே அபத்தமான இல்லை..” என்று ஆழ்ந்த பார்வையுடன் நிரண்யாவைப் பார்த்தார் அவர்.

திகையாதே மனமே!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்