Loading

நன்றாக குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தாள் அகல்யா. தரையில் படுத்து இருந்த தரணீஸ்வரனுக்கு முழிப்பு வந்துவிட்டது. ஆனாலும் கண் திறக்க முடியவில்லை. கடினப்பட்டு கெஞ்சி கூத்தாடி விழித்திறந்தவன் எழ முடியாமல் படுத்திருந்தான். தலை பாரமாவது போல் இருந்தது அவனுக்கு. அரை மணி நேரம் படுத்து இருந்தவன் தன்னை தயார் படுத்திக் கொண்டு எழுந்தான்.

எழுந்தவன் பார்வையில் முதலில் விழுந்தது அகல்யா தான். வாயை நன்றாக பிளந்து கொண்டு ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள். மணியை திரும்பிப் பார்க்க, அது ஒன்பது என்று காட்டியது. அவளைக் கண்டு கொள்ளாமல் குளியலறை சென்றவன் முகம் கழுவ, அப்பொழுது தான் அவள் நேற்று காலை பேசியது ஞாபகத்திற்கு வந்தது.

பாதி கழுவிய முகத்தோடு வெளியில் சென்றவன், “என் வீட்ல இருந்துட்டு என்னையவே நக்கலா பேசிட்டு, எவ்ளோ தைரியமா தூங்கிட்டு இருக்க. மணி ஒன்பது ஆகுது. கும்பகர்ணன் கூட இவ்ளோ நேரம் தூங்க மாட்டான்.” என அவள் தூங்கும் தைரியத்தில் சத்தமாக பேசினான்.

‘என்ன செய்யலாம்’ என்று யோசித்தவன் ஏதாவது கிடைக்கிறதா என்று தேடினான் அறை முழுவதும். அந்த யோசனையில் தன்னை யாரோ இரவு அரைகுறையாக திட்டியது போல் ஞாபகத்திற்கு வர, “நான் எப்படி தரையில படுத்தேன்.’ மீண்டும் யோசனைகளை சுழல விட்டான்.

சரியான பதில் கிடைக்காததால் சலிப்போடு திரும்பியவன் பார்வையில் உடற்பயிற்சிக்காக உபயோகிக்கும் கயிறு கண்ணில் பட்டது. பட்டென்று கண்ணில் மின்னல் அடிக்க வேகமாக அதை எடுத்து வந்தான். தூங்கிக் கொண்டிருப்பவள் எழுந்து விடாமல்  சாமர்த்தியமாக இரண்டு கைகளையும் கட்டி விட்டான். காலை கட்டில் இருக்கும் தூரத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் அவை இருக்கும் தோரணைக்கு ஏற்ப  துணி கொண்டு கட்டி விட்டான்.

‘நீ ஒரு ஆளு உன்கிட்ட நான் தப்பா நடந்துட்டேன். ஆளையும் மூஞ்சியும் பாரு நல்லா தேவாங்கு மாதிரி.’ தனக்குள் அவளை திட்டிக் கொண்டவன் நினைவு அன்று மீட்டிங் நடக்கும் நாளை நினைத்தது.

நிதானம் இல்லாமல் தான் அங்கு சென்றான். கதவில் சாய்ந்து கொண்டு நிற்க, வேகமாக திறந்தவள் மீது விழுந்துவிட்டான். ஆதிலட்சுமி சுதாரித்து அருகில் வருவதற்குள் அவனை பலம் கொண்டு தள்ளினாள் தரையில். மகனை காப்பாற்றியவர்   அறைக்கு அழைத்துச் சென்றார்.

அவனை நன்கு திட்டி தீர்த்தவர்கள் மீட்டிங் நடக்கும் இடத்திற்கு சென்று விட்டு, அகல்யாவை அனுப்பி வைத்தார்கள் அவனைப் பார்த்துக் கொள்ளும்படி. வந்தவள் முதலில் அவன் இருக்கும் கோலத்தை பார்த்து முகம் சுழிக்க,

“ஹேய்! எதுக்காக என்னை அப்படி பார்க்குற? அழகா இருக்கன்னு சைட் அடிக்கிறியா.” என்று குழைந்தான்.

வேண்டா வெறுப்பாக முகத்தை திருப்பிக் கொண்டாள் அகல்யா. அதைப் பார்த்தவன், “நீதான் அந்த அகல்யாவா! எப்ப பாரு எங்க அம்மா உன் புராணத்தை பாடுறாங்க. நான் கம்பெனி பக்கம் வராததால அவங்களை மயக்கி நீ எம்டி ஆகலாம்னு  பார்க்கிறீயா.” என்றதும் கோபம் வந்துவிட்டது அவளுக்கு.

“பேசுறதை யோசிச்சு பேசுங்க சார். இதை வாங்கி தான் பிழப்பு நடத்தணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை. எங்க அப்பாவே எனக்கு போதுமான அளவு சேர்த்து வச்சிருக்காரு. ஊதாரியா சுத்திட்டு என்னை குறை சொல்ற வேலை வச்சுக்காதீங்க.” என்று வெடித்தாள் அவனிடம்.

“ஏய்! யாரடி ஊதாரின்னு சொல்கிற?”

“இங்க உங்களைத் தவிர வேற யாரு இருக்கா.”

“அடிங்க்க்கு…” என அவளை அடிக்க எழ முயன்றவன் தொப்பென்று இருக்கையில் அமர்ந்தான் முடியாமல்.

“ஒழுங்கா எந்திரிச்சு நிக்க கூட முடியல இதுல கோபம் ஒரு கேடு. அப்பா அம்மா இவ்ளோ கஷ்டப்படுறதையும் பார்த்து எப்படி தான் குடிக்க மனசு வருதோ! தினமும் மேடம் ஒரு மணி நேரமாது உங்களை பத்தி பேசுவாங்க. பெருமையா பேசுவாங்கன்னு நினைச்சுக்காதீங்க. அழாத குறையா மனசு நொந்து பேசுவாங்க. பெத்தவங்கள அழ வச்சிட்டு ரொம்ப நாள் நீங்க நல்லா வாழ முடியாது.”

அவள் பேசிய வார்த்தைக்கு கோபம் கொள்ளாதவன் அழுக ஆரம்பித்து விட்டான். திடீரென்று அவன் அழுததில் பதறிய அகல்யா அருகில் சென்று, “எதுக்கு இப்போ அழுறீங்க. நான் எதோ ஒரு ஆதங்கத்துல பேசிட்டேன்.” என்றாள் அவன் கண்ணீரில் மனம் இறங்கி.

பதில் எதுவும் சொல்லாமல் அவன் அழுகையை அதிகரிக்க, “சாரி சார் ப்ளீஸ்.” என்றாள் பயந்து கொண்டு.

“நீ எதுக்கு சாரி சொல்ற நான் தான் சாரி சொல்லணும். எங்க அம்மாவையும் அப்பாவையும் ரொம்ப கஷ்டப்படுத்துறேன். என்னை மாதிரி ஒரு பையன பெத்ததுக்கு அவங்க சும்மாவே இருந்திருக்கலாம்.” என்று சத்தமாக அழ ஆரம்பித்து விட்டான்.

“ப்ளீஸ் சார்! அழாதீங்க யாராது வர போறாங்க.”

“உனக்கு தெரியாது நான் அவங்கள ரொம்ப கஷ்டப்படுத்துறேன். இன்னைக்கு கூட குடிக்காம இங்க வரணும்னு தான் நினைச்சேன். ஆனா முடியல… அவ ஞாபகம் இதோ இந்த” என்றவன் தலையில் வேகமாக அடித்துக் கொண்டு,

“இங்க வந்து கொல்லுது. எதுக்கு டி இப்படி பண்ணன்னு அவளை பார்த்து கேக்கணும். அப்போ தான் என் மனசு அடங்கும்.” என்றான் புலம்பிக் கொண்டு.

தரணீஸ்வரன் யாரைக் குறிப்பிடுகிறான் என்பது தெரியாததால் அவள் குழப்பமாக பார்த்துக் கொண்டிருக்க, வெடுக்கென்று எழுந்து அவளை பயமுறுத்தினான். நெஞ்சில் கை வைத்துக் கொண்டு அவள் பயத்தோடு  பார்க்க,

“நான் எதுக்கு அவளை கேட்கணும். அவ யாரு எனக்கு? நான் வேணாம்னு போனவ எக்கேடு போனாலும் எனக்கு கவலை இல்லை. அவளை நினைச்சு இனிமே நான் குடிக்க மாட்டேன். இது உன் மேல சத்தியம்.” என்று பயந்து கொண்டிருந்த அகல்யா தலை மீது கை வைத்து சத்தியம் செய்தான்.

அதிர்ந்து அவன் என்ன செய்தான் என்பது புரியாமல் முழிக்க, “ஐயையோ! உன் மேல சத்தியம் பண்ணிட்டேனே. திரும்ப நான் குடிச்சா நீ செத்துப் போய்டுவியா.” என்று உளறிக்கொண்டு இருக்கையில் அமர, அவள் தான் முழி பிதுங்கி நின்றாள் அவன் முன்பு.

‘எதுக்குடா என் மேல சத்தியம் பண்ண’ என்ற ரீதியில் அவள் முக பாவனைகள் இருக்க, “நீ யாரு எனக்கு? நீ செத்தா நான் ஏன் கவலைப்படனும். நான் இங்க இருந்து போனதும் குடிப்பேன்.” என்றதில் சுவற்றில் முட்டிக் கொள்ளலாம் போல் இருந்தது அவளுக்கு.

பைத்தியக்காரனிடம் சிக்கிக் கொண்டது போல் அவள் நொந்து கொண்டிருக்க, அங்கிருந்து வெளியேற பார்த்தான் தரணீஸ்வரன். அவன் செல்வதை தாமதமாக உணர்ந்தவள், “சார்! நீங்க எங்கயும் போகக்கூடாது உள்ள வாங்க.” என்று அழைத்தாள்.

காதில் வாங்கிக் கொள்ளாத தரணீஸ்வரன் கதவை திறக்க, ஓடி சென்று அதை மூடிவிட்டாள். “ஏய்!” என்றவன் கதவை திறக்க,

“சார் சொன்னா கேளுங்க. மேடம் வர வரைக்கும் உங்களை எங்கயும் நான் அனுப்ப மாட்டேன்.” என்று கதவை மூடினாள்.

“அவ தான் என்னை விட்டு போய் ரொம்ப வருஷமாகுதே. அவ எப்ப வரது நான் எப்ப வெளிய போறது.” என்று மீண்டும் அழத் துவங்கினான்.

இப்போதும் அவன் யாரை சொல்கிறான் என்பது விளங்கவில்லை அவளுக்கு. இருந்தும் தவறான ஆளை குறிப்பிடுகிறான் என்பதை அறிந்து, “சார் நான் சொன்னது உங்க அம்மாவ.” என்றாள் திருத்தமாக.

“அதான!” என அழுகையை நிறுத்தி விட்டு அவள் முகம் நோக்கியவன் அடுத்த நொடி அழத் துவங்கினான். பேயிடம் சிக்கிக் கொண்டது போல் தவித்தாள் அகல்யா. அவன் அழுகை சத்தம் அதிகரித்தது. யாராவது வருவதற்குள் நிறுத்த நினைத்தவள்,

“எதுக்காக சார் அழுறீங்க” கேட்டாள் பாவமாக.

“எங்க அம்மாவ தவிர வேற யாரும் இல்லையே எனக்கு. அவ என்னை விட்டுப் போயிட்டான்னு தெரிஞ்சும் இன்னமும் யோசிக்கிறேன் பார்த்தியா என்னை எதைக் கொண்டு அடிக்க” என்று நிறுத்தியவன் அவள் காலை பிடித்தான்.

பதறி அகல்யா விலகுவதற்குள் காலணிகளை கழட்ட முயன்றான். அவன் என்ன செய்யப் போகிறான் என்பதை உணர்ந்து, “சார் இப்படி எல்லாம் பண்ணாதீங்க.” என்று தடுத்தாள்.

தரணி கேட்டுக் கொள்ளாமல் காலணிகளை கழட்டுவதில் குறியாக இருக்க, கெஞ்சி பார்த்தவள் ஒரு கட்டத்தில் கோபம் கொள்ள ஆரம்பித்தாள். அதை மீறியும் அவன் ஒரு காலணியை கழட்டி விட, வேகமாக தள்ளிவிட்டாள் தரையில்.

விட்டால் பல்டி அடித்து இருப்பான் போல அந்த அளவிற்கு இருந்தது அவள் வேகம். எழுந்து அமர்ந்தவன் மயக்க நிலையில் அவளை பார்க்க,

“லூசா டா நீ? அறிவுகெட்ட தனமா என் காலை பிடிச்சிட்டு இருக்க. யாரைப் பத்தி பேசுறன்னு சொல்லிட்டு பேசுனா தான எனக்கு கொஞ்சமாது புரியும்.” என்ற மிரட்டலில் பயந்து அவன் அழத்துவங்க,

“இன்னொரு தடவை அழுத ஓங்கி அறைஞ்சிடுவேன். ஆம்பள புள்ள மாதிரியா நடந்துக்குற சும்மா சும்மா அழுதுட்டு. தொடடா கண்ண!” என்று கட்டளையிட்டாள்.

இப்பொழுது அவன் பேயை பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தான் அகல்யாவை. சொன்னதை செய்யாமல் இருக்கும் தரணீஸ்வரனை உஷ்ணத்தோடு ஏறிட்டவள், “சொல்றேன்ல கண்ணை தொடன்னு. தொடடா!”  சத்தமாக கத்தினாள்.

மயக்கம் அனைத்தும் தெளிந்தது அதில். தன்னிலை உணர்ந்து எழுந்து நின்றவன் அவளை முறைக்க, “என்னடா முறைக்கிற? எருமை மாடு வயசாகுது இன்னமும் சின்ன குழந்தை மாதிரி பண்ற.” என்றாள்.

அவ்வார்த்தை அவனுக்கு கோபத்தை கிளற, “ஏய் ரொம்ப பேசுற நீ!” என்று தன்னை நிதானிக்க ஆரம்பித்தான்.

ஆடவன் நினைவு திரும்புகிறது என்பதை அறியாதவள், “வந்ததுல இருந்து ரொம்ப பண்ணிட்டு இருக்குறது நீதான். இன்னைக்கு யாரு முகத்துல முழிச்சன்னு தெரியல உன் கூட மல்லு கட்ட வேண்டியதா  இருக்கு. ஆள மூஞ்ச பாரு.” வேலைக்கு வந்துவிட்டு இவனுக்கு காவலாக இருப்பதால் தன்னை தானே நொந்துக் கொண்டு பேசினாள்.

அகல்யாவின் பேச்சு சுத்தமாக பிடிக்காமல் போனது அவனுக்கு. யார் என்று தெரியாதவள் தன்னை திட்டுகிறாள் என்பதை உணர்ந்தவன்,
“இன்னொரு வார்த்தை பேசுன வாய உடைச்சிடுவேன். நான் யாருன்னு தெரிஞ்சும் பேசுறன்னா  உனக்கு எவ்ளோ தைரியம் இருக்கும். இப்பவே உன்ன வேலைய விட்டு அனுப்புறேன் பாரு.” அவனும் பேச்சுக்கு பேச்சு ஈடு கொடுக்க ஆரம்பித்தான்.

“முதல்ல அதை பண்ணு. உன்னை மேய்க்கறதுக்கு நாலு எருமைய மேய்ச்சிட்டு போலாம்.” என்றவளை அவன் பதிலுக்கு திட்ட வர, மீட்டிங்கை முடித்த பெற்றோர்கள் உள்ளே வந்தார்கள்.

அவர்களைக் கண்டதும் தரணீஸ்வரன்  அமைதியாக தலை குனிந்து கொள்ள, இவளோ வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள். நினைவில் இருந்து வெளிவந்தவன்…

“அன்னைக்கே பதில் கொடுத்து இருக்கணும் விட்டுட்டேன். இன்னைக்கு இருக்கு உனக்கு” என்றான்.

 

அன்றைய நிகழ்வுகளில் இருந்து வெளிவந்தவன் தூங்கிக் கொண்டிருப்பவள் எழுவதற்காக காத்துக் கொண்டிருந்தான். அவனை அதிகம் எதிர்பார்க்க வைக்காமல் எழுந்தாள் அகல்யா.

அரைகுறை தூக்கத்தில் இருந்தவள் கை கால்களை அசைக்க முயல, அதுவோ கட்டி வைத்திருந்ததால் நகர மறுத்தது. அசோகர்யமாக இருப்பதால் தூக்கம் அவளை விட்டு பறந்தோடிது. கை கால்கள் கட்டப்பட்டு இருப்பதால் பயத்தோடு எழுந்தமர முயன்றாள். அவள் முயற்சி தோல்வியில் முடிய, அசாதாரண சூழ்நிலையை பயத்தோடு எதிர்கொண்டாள்.

ஆந்தை கண் போல் விரிந்திருக்கும் அவளின் விழிகளில் உற்சாகம் கொண்டவன் அவள் முன்பு நின்றான். மேலாடை இல்லாமல் தன் முன் நிற்கும் தரணீஸ்வரனை கண்டு முறைத்தவள் வேறு பக்கம் திரும்பிக் கொள்ள,

“இனி நீ திரும்பி எதுவும் ஆகப்போறது இல்ல.” என்றான் கள்ள சிரிப்போடு.

அவன் வார்த்தையில் வேகமாக திரும்பியவள் அதிர்ந்து முகத்தை பின்னுக்கு இழுத்தாள் அவன் முகம் தன் அருகில் இருப்பதை உணர்ந்து. நெருங்கி சென்றவன் அவளை ரசிப்பது போன்ற பாவனையை விழிகளால் கொடுக்க,

“பொறுக்கி! எதுக்குடா அப்படி பார்க்குற?” என்றவளை இன்னும் அலற விட்டான் பக்கத்தில் படுத்து.

கை கால்களை அசைக்க அவள் முயற்சி செய்ய, “சும்மா சொல்லக்கூடாது நேத்து நைட்டு செமையா ஒத்துழைச்ச. நான் கூட நீ பிடிவாதம் பிடிப்பன்னு கை கால எல்லாம் கட்டிப் போட்டுட்டேன் தெரியாம.” என்றவாறு இன்னும் அவளுடன் நெருங்கியவன்,

“நீ சும்மா சொல்லிட்டு இருந்த வார்த்தை உண்மை ஆகிடுச்சு. இதையும் மறக்காம எங்க அம்மா கிட்ட சொல்லு.” என்று கன்னம் தட்டினான்.

பதில் எதுவும் பேசாமல் அவள் முறைத்துக் கொண்டு இருக்க, “என்னடி முறைக்கிற? இனிமே இந்த முறைப்பெல்லாம் என்கிட்ட ஆகாது. தாலி கட்டி ஃபஸ்ட் நைட்யும் முடிச்சிட்டேன்.” என்றான்.

பற்கள் கடிக்கும் ஓசை பக்கத்தில் இருந்ததால் நன்றாக கேட்டது தரணீஸ்வரனுக்கு. அவளைப் பார்த்தவாறு இருந்தவன் கட்டி இருக்கும் அவள் வலது கையில் படுத்துக்கொண்டு, “நீ எதுக்கு முறைக்கிறன்னு தெரியும், சொல்லட்டா?” என அவள் இருக்கும் பக்கம் முகத்தை திருப்பினான்.

அவளோ பார்க்க சகிக்காமல் வேறு புறம் திரும்பிக் கொள்ள, “உனக்கு இது ஃபர்ஸ்ட் நைட். எனக்கு இது செகண்ட் நைட் அதனால தான.” என்றதோடு நிறுத்தாமல் அதிக சத்தத்தோடு சிரிக்க, அவளுக்கு எரிச்சல் உற்றது.

“எங்க அம்மாவ கேள்வி மேல கேள்வி கேட்டியே நீ ஒழுங்காடி.” என்றதும் அவள் பார்வையில் அனல் தெறித்தது.

“நல்லா பிளான் பண்ணி இந்த வீட்டுக்கு மருமகள் ஆகிட்ட. இதுவே ஒன்னும் இல்லாத ஒருத்தனை ரெண்டாம் தரமா கட்டிக்க சம்மதிச்சு இருப்பியா? பையன் வசதியா இருக்கவோ வாழ்க்கை தரேன்னு உள்ள புகுந்துட்ட. இந்த லட்சணத்துல நீ என்னை குப்பைன்னு சொல்ற.”

“வாய மூடிட்டு என் கை கட்ட அவுத்து விட்டுடு. இல்லன்னா இன்னைக்கு உன் சாவு என் கையால தான் நடக்கும்.”

முன்பு போல் திரும்பிப் படித்தவன் ஒரு கையை தலைக்கு தாங்கிக் கொண்டு, “ஆஹான்! எந்த கையால நடக்கும்… இந்த கையா? இல்ல இந்த கையா?” கட்டியிருக்கும் இரண்டு உள்ளங்கைளிலும் அவன் சுரண்டி விட, கூச்சம் வருவதற்கு பதில் நெருப்பு தான் பற்றி எரிந்தது அவளுக்குள்.

“என்னை தொட்டு பேசுற வேலை வெச்சுக்காத.”

“அட கிறுக்கு பயபுள்ள! நேத்தே எல்லாம் முடிஞ்சிடுச்சுன்னு சொல்றேன் இன்னும் தொட்டுக்காத ஒட்டிக்காதன்னு…” என்று அவளை இன்னும் கோபப்படுத்தினான்.

பதில் எதுவும் பேசாமல் மீண்டும் அவள் முறைக்கும் வேலையில் ஈடுபட, “இப்படி எல்லாம் பார்த்தா
மயங்கி திரும்பவும் ஏதாச்சும் பண்ணிடுவோமா என்ன! உனக்கு அவ்ளோ சீன் இல்ல.” என்றிட,

அவளோ அவனே மேலிருந்து கீழாக கேவலமாக ஒரு பார்வை பார்த்தாள். புருவம் சுருக்கி கேள்வியோடு அவன் நோக்க, “அதுக்கெல்லாம் முதல்ல நீ ஒர்தா இருக்கணும்டா குடிகாரா.” என்ற ஒரே வரியில் அவனின் கோபத்தை பன்மடங்காக தூண்டிவிட்டாள்.

அவளின் கழுத்தை நெறித்து தன் கோபத்தை காட்டியவன் பேசுவதற்கு முன், “நிக்க கூட நிதானம் இல்லாம தினமும் தள்ளாடிட்டு வர நீ ஒரு ஆளுன்னு பயப்படுவேன்னு பார்க்கிறீயா. நீ மட்டும் தைரியமான ஆம்பளையா இருந்தா கைய அவுத்து விடுடா அப்ப தெரியும்.” என்றாள் அவனை துச்சமாக பார்த்து.

மனைவியின் வார்த்தைக்கு பதில் அளிக்காமல் அவன் முறைக்க, “பேசு இவ்ளோ நேரம் பேசுனியே!” இன்னும் கேலி பேசிட,

“கைய அவுத்து விட்டா மேடம் என்ன பண்ணுவீங்க?” எதற்கும் தயார் என்று துணிந்து பேச்சை துவங்கினான்.

“முதல்ல ரோஷத்தோட என் கை கட்ட அவுத்து விடுடா‌.”

“முடியாது”

“இதுல இருந்து தெரியல நீ ஒரு வெத்து வெட்டுன்னு. காலைல போதை தெளிஞ்சி நடிக்க பார்க்குறியா. உன்னால என்னை எதுவும் பண்ண முடியாது. அந்த அளவுக்கு நீ தைரியமான ஆம்பளையும் கிடையாது.” என்றவள் பேச்சை முடிக்கும் பொழுது கைகட்டை அவிழ்த்து விட்டான் தரணீஸ்வரன்.

இதற்காகத்தானே அவள் இவ்வளவு பேசியது. அதை அறியாத தரணீஷ்வரன் கோபத்தோடு அவளின் கன்னம் பற்றி, “யாரைப் பார்த்து டி தைரியமான ஆம்பள இல்லன்னு சொன்ன. என் முன்னாடி நிற்க எத்தனை பேர் நடுங்குவாங்கன்னு தெரியுமா உனக்கு?” எரிந்து கொண்டிருக்கும் புகையை தண்ணீர் ஊற்றி அணைப்பது போல் அவன் கோபத்தோடு பேசிக் கொண்டிருக்கும் பொழுது போர்வையை முகத்தில் மூடி  ஜாக்கி சான் போல் அடிக்க ஆரம்பித்தாள்.

“எவ்ளோ தைரியம் இருந்தா என் கைய கட்டி வச்சிருப்ப. இன்னையோட நீ செத்தடா என்கிட்ட. தாலியா கற்ற தாலி. ஒருத்தி போனா இன்னொருத்தின்னு வருவியா. செகண்ட் நைட்டு கேக்குதா உன் முகர மூஞ்சிக்கு.” என்றவள் ஓங்கி அவன் தலையில் கொட்டினாள்.

உள்ளே இருந்தவனுக்கு கண் எல்லாம் கலங்கிவிட்டது அவள் கொடுத்த வலியில். அதை அறியாதவள் மீண்டும் ஓங்கி மூளை இருக்கும் பக்கத்தில் ஒரு குத்து விட, நேற்று இரவு அகல்யா அடித்தது ஞாபகத்திற்கு வந்தது அவனுக்கு. சுனாமி போல் மேலெழுந்து தன் மேல் இருக்கும் போர்வையை அவள் மேல் போற்றி கீழே தள்ளினான்.

கால்கள் இரண்டும் இன்னும் அவிழ்க்கப்படாமல் இருப்பதால் அவன் சாய்த்த வேகத்தில் சிக்கிக்கொண்டது. முகத்தை மூடி இருக்கும் போர்வையை விலக்கியவன், “நேத்து ராத்திரி என்னை அடிச்சியாடி?” என்று கேட்டான்.

அதுவரை கோபத்தோடு அவனைத் தாக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்தவள் செயலை நிறுத்திவிட்டு முழிக்க ஆரம்பித்தாள். அவள் முட்ட கண் முழியில் இன்னும் சந்தேகம் கூட, “சொல்லுடி! நேத்து ராத்திரி என்னை நீ தான அடிச்சு கீழே தள்ளிவிட்ட.” என்று திரும்பவும் கேட்டான்.

கருவிழியை வலப்புறம், இடப்புறம் அசைத்தவாறு சுழன்று அவனைப் பார்த்தவள் பேச்சு வராமல் தடுமாற, “எதுக்குடி அடிச்ச? காலைல எழுந்ததும் தல ஒரு பக்கம் செம்மையா வலிச்சுது. அப்பவே யோசிச்சு பார்த்தேன் ஞாபகத்துக்கு வரல. இப்ப நீ அடிக்கும் போது தான் சந்தேகம் வந்துச்சு. என் வீட்டுல இருந்துட்டு என்னை அடிக்கிற அளவுக்கு தைரியம் வந்துடுச்சா உனக்கு. என்னை தொட்ட கைய உடைக்காம விடமாட்டேன்.” என்றவன் இடது கையைப் பிடித்து முறுக்க ஆரம்பித்தான்.

துள்ளி எழுந்து அமர்ந்தவள் கையை விடுவித்துக் கொள்ள போராட, மற்றொரு கையையும் சேர்த்து பிடித்தவன் முறுக்கு புழிவது போல் வளைக்க ஆரம்பித்தான்.

“ஆஆ… அய்யோ! வலிக்குது விடுடா.” எனப் போராடிக் கொண்டிருப்பவள் வேதனையில் உள்ளம் மகிழ்ந்தவன் இன்னும் அலற விட்டான்.

“டேய் குடிகாரா! கை உடைஞ்சிற போதுடா விடு.”

“உடையட்டும்…டி” என்று இன்னும் அதில் பலத்தை கூட்ட, ஏதோ ஒரு மூட்டு அசைந்து சத்தத்தை கொடுத்தது கையில்.

“அம்மா!” என்று பெரும் சத்தம் அவளிடம். பயந்து கையை விட்டவன் என்ன ஆனது என்று தெரியாமல் முழிக்க, மூக்கில் ஓங்கி ஒரு குத்து குத்தினாள்.

தலை மொத்தமும் ராட்டினம் போல் சுழன்று மயக்க நிலைக்கு கொண்டு சென்றது அவனை. ஏற்கனவே நேற்று இரவு குடித்தது இன்னும் மண்டைக்குள் பாக்கி இருக்க இப்போது அவளின் குத்து உயிரை எடுக்கும் வேளையில் இறங்கி இருந்தது.

தலையைப் பிடித்துக் கொண்டு மெத்தையில் சரிந்தான். அவனைக் கண்டு கொள்ளாதவள் கால் கட்டை அவிழ்த்து விட்டுக்கொண்டு, “இன்னொரு தடவை என்கிட்ட உன் வீரத்தை காட்டணும்னு நினைச்ச அவ்ளோ தான்.” என்று வெளியில் சென்று விட்டாள்.

மருமகளுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள் வீட்டின் பெரியவர்கள். கோபத்தோடு வந்தவள் அவர்களை பார்த்து அமைதியாகி விட, “அகல் இந்தா டீ குடி.” என்று மருமகளின் கையில் திணித்தார் தேனீர் கோப்பையை.

நேற்று அவர்கள் பேசியதற்கு பின் கொஞ்சம் அவள் மனம் மாறி இருக்க, எதுவும் பேசாமல் குடிக்க ஆரம்பித்தாள். மருமகளின் மாற்றத்தை கண்டவர் உள்ளுக்குள் நிம்மதி அடைய,

“உங்க அம்மா போன் பண்ணி இருந்தாங்க. உன்னையும் தரணியையும் மறு வீட்டுக்கு அழைச்சு இருக்காங்க. உனக்கு என்ன விருப்பம்னு சொல்லு அதுபடி நாங்க பேசிக்கிறோம்.” என்றார் தயாளன்.

அவள் எதுவும் பேசாமல் அமைதியாக டீ குடித்துக் கொண்டிருக்க, மருமகளுக்கு விருப்பமில்லை என்பதை உணர்ந்தவர்கள், “உங்க அம்மா கிட்ட இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு எல்லாத்தையும் வச்சுக்கலாம்னு சொல்லிக்கிறோம்.” என்றார்கள்.

இவர்கள் புரிந்து வைத்திருக்கும் அளவுக்கு கூட தன் தாய் புரிந்து வைக்கவில்லையே என்ற வேதனை அவளுக்குள். என்ன மாதிரியான சூழ்நிலையில் மகள் இருக்கிறாள் என்பதை அறிந்தும் கேட்கும் அன்னை மீது அளவு கடந்த கோபமும் எழுந்தது. தன்னை தானே நிதானப்படுத்தியவள் நேரத்தை கடந்தாள்.

அவளுக்குள் மாற்றத்தை கொண்டு வர விரும்பிய ஆதிலட்சுமி, “நீ ஃப்ரீயா இருந்தா வீட்ட சுத்தி பார்த்துட்டு வரலாமா.” என்று உத்தரவு கேட்டிட, வாய்மொழியாமல் தலையசைத்து சம்மதம் சொன்னாள்.

சிரிப்போடு மருமகளை அழைத்துச் சென்றார். முதலில் நின்றார்கள் சமையல் அறையில். அங்கிருக்கும் பொருட்கள் ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டி விளக்கியவர் அடுத்தடுத்து நகர ஆரம்பித்தார் மருமகளோடு. அவளோ முதலில் வேண்டா வெறுப்பாக கேட்டுக் கொண்டிருக்க, மாமியாரின் முகத்தில் தெரியும் மகிழ்வில் சாதாரணமாக கேட்க ஆரம்பித்தாள்.

அவர்களின் அறைக்கு அழைத்துச் சென்றவர், “இந்த ரூம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் அகல். நாற்பது வருஷமா என்னோட நல்லது கெட்டது எல்லாத்தையும் இந்த அறை பார்த்திருக்கு. உன்ன மாதிரி தான் நானும் என்னோட கண்ணீரை யாருக்கும் காட்டக்கூடாதுன்னு நினைப்பேன். ஆனா இந்த அறை அதையும் பார்த்துடுச்சு.” என்றதில்  அப்படி என்ன இவருக்கு வருத்தம் என்று யோசித்தாள் அகல்யா.

காலதாமதமான குழந்தை அதுவும் ஒரே குழந்தையை பெற்று அவன் வாழ்க்கை தன் கண் முன்னால் காணாமல் போனதை தவிர பெரிய கஷ்டம் என்ன இருக்கப் போகிறது அவருக்கு.

“இந்த போட்டோ யாருன்னு தெரியுதா?” என்றதும் அகல்யாவின் பார்வை அந்த புகைப்படத்தை மொய்க்க, பார்த்ததுமே கண்டுகொண்டாள் அது தரணீஸ்வரன் என்று.

இருப்பினும் தெரியாது என்பது போல் சைகை செய்ய, “உன்னோட புருஷன்.” என்றார் புன்னகையோடு.

“இந்த ரூம்ல இருக்க முக்காவாசி பொருள் அவனோடது தான். அவனோட வாழ்க்கைக்குள்ள அவ வரதுக்கு முன்னாடி வரைக்கும் நான் தான் ஊட்டி விடுவேன். தினமும் மடியில படுத்து கதை கேட்டுட்டே தூங்குவான். எல்லாம் மாறிடுச்சு…” அவர் விழியில் அப்படி ஒரு வலி தென்பட்டது.

புதிர் நிறைந்த அவரின் முகத்தில் எதையோ அவள் தேட முற்பட, ஒரு அலமாரியை திறந்து காண்பித்தார். அதில் முழுக்க பரிசுப் பொருட்கள்  நிறைந்து இருந்தது. இதெல்லாம் யாருடையது என்ற கேள்வி எழுந்தாலும் அவரே சொல்வார் என்பதால் காத்துக் கொண்டிருந்தாள்.

“இதெல்லாம் உன் புருஷனோட அடையாளங்கள். ஸ்டேட் லெவல்ல நிறைய பரிசு வாங்கி இருக்கான். அவன் ஈட்டி தூக்கிட்டு ஓடும்போது பார்க்கணுமே அப்படி ஒரு பவர் இருக்கும் அந்த கண்ணுல. அதை பார்க்குறதுக்காகவே எங்க போட்டி நடந்தாலும் அவனோட போய்டுவேன்.” என்ற ஆதிலட்சுமியின் விழிகள் கலங்கியது.

மௌனம் காக்க முடியாமல் அவளது வாய், “எதுக்கு அழுறீங்க?” என்று கேட்டிட,

“என் மகன் கண்ணுல அந்த பவரை பார்த்து நாலு வருஷம் ஆயிடுச்சு.” என்றார் கசந்த புன்னகையோடு.

ஆறுதல் சொல்ல மனமில்லாமல் அகல்யா அவரையே பார்த்துக் கொண்டிருக்க, தன்னை தானே தேற்றிக்கொண்டவர் அடுத்தடுத்து என விஷயங்களை விவரித்தார். இரண்டு புகைப்பட ஆல்பத்தை கையில் கொடுத்தவர்,

“நேரம் இருக்கும் போது இதெல்லாம் எடுத்து பாரு. எல்லாம் தரணியோட ஞாபகங்கள். இதைப் பார்த்தாலே தெரியும் என் மகன் குடிகாரன் இல்லன்னு.” என்பவருக்கு அவள் மறுப்பு சொல்லும் முன்னரே கையில் திணித்தார்.

வேறு வழி இல்லாமல் வாங்கிக் கொண்டவள் நகர பார்க்க, விடவில்லை ஆதிலட்சுமி. மீதம் இருக்கும் எல்லா இடங்களையும் சுற்றி காண்பித்தார். கடைசியாக வீட்டின் பின்புறம் வந்தார்கள். அந்த இடத்தை பார்த்ததும் அவளின் கண்கள் விரிந்தது. திருமணம் ஆகி வந்ததிலிருந்து இப்பொழுது தான் மருமகளின் பழைய முகபாவனையை பார்க்கிறார் மாமியார்.

புன்னகையோடு, “முன்னாடியெல்லாம் நாங்க மூனு பேரும் இங்க தான் உட்கார்ந்து நேரத்தை செலவழிப்போம். இது அத்தனையும் தரணியோடு ஏற்பாடு.” என்றவர் பேச்சு காதில் விழுந்தாலும் அங்கிருக்கும் இயற்கை சூழ்நிலையை மெல்ல ரசிக்க ஆரம்பித்தாள் அகல்யா.

நீண்ட கொடிகளும் பூக்களும் சுற்றி குடை போல் அழகாக ஜோடிக்கப்பட்டிருந்தது. வைத்ததற்கு ஏற்றவாறு அதுவும் வளைந்து நெளிந்து அழகாக பூக்களோடு காட்சி அளித்தது. அதனை சுற்றி ரோஜா செடிகள் நிறைந்து இருந்தது. பெரும்பாலும் சிகப்பு நிற ரோஜாக்கள் தான் அதிகம் பேசும் பொருளாக இருக்கும். அவள் காணும் இடத்திலோ மஞ்சள் நிற ரோஜாக்கள் பூத்துக் குலுங்கியது.

பார்த்து கண் குளிர்ச்சியானது. அதற்கு மேல் மழை வந்தால் நனையாமல் இருக்க சிறு கூடாரம் அமைத்து இருந்தான். குடை போல் காட்சி அளித்த கொடிகளுக்கு கீழ் இருக்கைகள் அமைந்திருந்தது. அவை பக்கத்திலேயே சிறு தொட்டி  அமைத்து கீழே நீர் போவது  போல் ஏற்பாடு செய்திருந்தான்.

‘என்ன ஒரு ரசனை!’ முதல்முறையாக கணவனின் செயலை பாராட்டுகிறாள் மனதில்.

அவள் பார்க்கும் காட்சி மனதை மாற்றி இருந்தது. இதழில் அவளையும் அறியாமல் புன்னகை. மாமியார் சொல்வதற்கு முன், “ரொம்ப அழகா இருக்கு இந்த இடம்.” என்றாள்.

மருமகளின் வார்த்தையில் உள்ளம் மகிழ்ந்தவர் அவள் கைப்பிடித்துக் கொண்டு அமர்ந்தார் அங்கிருந்த இயற்கையின் நடுவில். சுற்றிலும் பார்வையை சுழல விட்டவள் பூக்களுக்கு நடுவில் ராணியாக அமர்ந்திருப்பது போல் உணர்ந்தாள்.

மருமகள் முகத்தில் தெரியும் பாவனையில் உள்ளம் மகிழ்ந்தவர், “எங்களோட மொத்த சந்தோஷமும் இந்த இடத்துல தான் இருக்கும். இங்க இருக்க எல்லாமே உன் புருஷனோட ஏற்பாடு. ஒரு இலை உதிர்ந்தா கூட அவன் மனசு தாங்காது. அந்தச் செடி சரியாகி செழிப்பா வளர வரைக்கும் இங்கயே தான் இருப்பான். மணிக்கணக்கா உட்க்கார்ந்து இந்த ரோஜாவோட பேசிட்டு இருப்பான்.” அவர் வார்த்தை எல்லாம் அவளுக்குள் வியப்பை கூட்டியது.

“என்னன்னு தெரியுமா!” என்றவரை அவள் வியப்பு மாறாமல் பார்த்துக் கொண்டிருக்க, “அதோ அங்க இருக்குல” என்று குவிந்திருக்கும் மணலை கைகாட்டினார்.

அவள் பார்வையும் அங்கு செல்ல, “உன் புருஷன் தினமும் மண் வீடு கட்டி விளையாடுவான்.” என்றதும் புன்னகை அவள் முகத்தில்.

“மண்ண செடிய கூட மனுஷனா மதிச்சு பேசுவான்‌‌. எங்க வாழ்க்கை ரொம்ப நல்லா போயிட்டு இருந்துச்சு. ஒரு பிள்ளை தான என்கிற குறை இல்லாம அவன் எங்களை பார்த்துக்கிட்டான். என் மகனை நினைச்சு நாங்க பெருமைப்படாத நாளே இல்லை. திடீர்னு ஒரு நாள் எல்லாமே அழிஞ்சு போயிடுச்சு அகல். எங்க மகன் வேற ஒருத்தனா தெரிஞ்சான். எங்களை விட்டு தூரம் போனான். அவன் ரசிச்ச இந்த எல்லா விஷயத்தையும் விட்டு விலகிப் போனான்.” என்றவருக்கு கண்ணீர் கட்டுப்படாமல் போக மருமகள் முன்பு அழுக ஆரம்பித்தார்.

நல்ல மனநிலையில் இருந்தவள் அவரின் கண்ணீரை பார்த்து சங்கடப்பட்டாள். இருந்தும் அருகில் சென்று ஆறுதல் படுத்த அவள் மனம் தயாராக இல்லாததால் வேதனையோடு பார்த்துக் கொண்டிருந்தாள். மனைவியை வெகு நேரம் காணாததால் தேடி வந்தார் தயாளன். அவர் அழுவதை பார்த்தவர் பதறி தைரியப்படுத்தினார்.

கணவனுக்கு தான் நலம் என்பதை சிரிப்பால் காட்டியவர், “சாரிமா தேவை இல்லாம உன்ன சங்கடப்படுத்திட்டேன்.” என்றார் வருத்தத்தோடு.

“அதெல்லாம் எதுவும் இல்லங்க.”

மருமகளின் வார்த்தையில் பிடித்தம் இல்லை அவருக்கு. “அத்தை” என்று அழைக்காமல் யாரோ ஒருத்தி போல் பேசுவது என்னவோ போல் இருந்தது அவருக்கு. இருந்தும் இவ்வளவு பேசியதே பெரிய விஷயம் என்பதால் எதுவும் சொல்லவில்லை.

“போதும் ஆதி அந்த பிள்ளை எழுந்த கையோட கூட்டிட்டு வந்துட்ட. குளிச்சிட்டு வரட்டும் பொறுமையா மாமியாரும் மருமகளும் பேசிட்டு இருங்க.” மாமனாரின் பேச்சுக்கு அவள் முகத்தில் புன்னகை அரும்ப,

“சாரிமா” என்றார் மீண்டும் மாமியார்.

பதில் எதுவும் சொல்லாதவள் தலையசைத்து எழுந்து கொள்ள, ” குளிச்சிட்டு கீழ வா உனக்கு டிபன் செஞ்சு வைக்கிறேன்.” என்று அனுப்பி வைத்தார் மருமகளை.

தலையசைத்து நகர்ந்தவள் பார்வையில் சற்று தூரத்தில் இருக்கும் பெரிய கூண்டு ஒன்று கண்ணில் பட்டது. அதைப் பார்த்து நகராமல் நின்றவள் யோசனையோடு திரும்பி மாமியாரை பார்க்க, முதலில் அவருக்கு புரியவில்லை.

பின் புரிந்து கொண்டு, “தரணி ஒரு நாய் வளர்த்துட்டு இருந்தான். அதுதான் எங்க ரெண்டு பேர விட அவனுக்கு ரொம்ப செல்லம். தரணி கிட்ட யாரையும் நெருங்க விடாது அது. கூட பொறக்காத தம்பியா பார்த்துட்டு இருந்தவன் குணம் மாறி எங்கயோ கொண்டு போய் விட்டுட்டான்.” அதற்கு மேல் பேச முடியவில்லை ஆதிலட்சுமியால்.

தொந்தரவு செய்ய விரும்பாதவள் யோசனையோடு அங்கிருந்து நகர்ந்தாள். சிரித்த முகமாக பேசும் ஆதிலட்சுமி பேச்சை முடிக்கும் பொழுது ஒவ்வொரு தடவையும் எதற்காக கலங்குகிறார் என்ற சிந்தனையில் உள்ளே வந்தவள் படுத்திருக்கும் தரணீஸ்வரனை பார்த்து கோபம் கொண்டாள்.

அறையை விட்டு வெளியேறுவதற்கு முன் நடந்த சம்பவங்கள் ஞாபகத்திற்கு வர, சண்டை போட விரும்பாது குளியலறைக்கு நகர்ந்தாள். போகும்போது ஓரக்கண்ணால் அவனைப் பார்க்க, தலையில் கை வைத்துக் கொண்டு படுத்திருந்தான்.

குளித்து முடித்து வெளியில் வந்தவள், “நான் டிரஸ் மாத்தணும் வெளியே போங்க.” என்றாள்.

அவன் அசையாமல் படுத்துக் கொண்டிருக்க, “உங்க கிட்ட தான் சொல்றேன் நான் டிரஸ் மாத்தணும் வெளிய போங்க.” மீண்டும் கூற, அலட்சியமாக படுத்துக் கொண்டிருந்தான்.

கட்டுப்படுத்தி வைத்திருந்த கோபம் கொழுந்துவிட்டு எரிந்தது அவளுக்குள். எரிச்சலோடு நான்கு ஐந்து முறை கூறிவிட்டாள் வெளியில் போகுமாறு. அசைந்து படுத்தானே தவிர எழவில்லை. தலையில் அடித்துக் கொண்டு குளியலறைக்கு மாற்று துணிகளை எடுத்துச் சென்றாள்.

உள்ளே அவனை திட்டிக் கொண்டு உடை மாற்றியவள் வெளியில் வந்தும் தொடர்ந்தாள். கண்ணாடி முன்பு தலைவாரிக் கொண்டிருக்க, அவன் கை நீட்டி அழைப்பது தெரிந்தது. திரும்பிப் பார்த்து முறைத்தவள் உதட்டுக்குள் முணுமுணுத்தாள் அவனை வசைப்பாடி.

தன்னை அலங்கரித்துக் கொண்டு வெளியேற முயன்ற அவளை தரணீஷ்வரன் கைநீட்டி அழைக்க, “அறிவே இல்லையா உனக்கு! இவ்ளோ திட்டுறேன் சூடு சொரணை இல்லாம கூப்பிடுற. எனக்கு வர கோபத்துக்கு உன்னை அப்படியே கொல்லலாம் போல இருக்கு.” என்று கழுத்தை பிடிப்பது போல் கைகளை எடுத்துச் சென்றாள்.

அருகில் அவன் முகம் பார்க்க எதுவோ சரியில்லாதது போல் தோன்றியது.  தலையில் கை வைத்துக் கொண்டு அங்கும் இங்கும் அசைந்து கொண்டு இருந்தான். உதடு என்னவோ பேசிக் கொண்டிருக்க, போதை இன்னும் தெளியவில்லை என்று நினைத்தவள் கோபத்தோடு நகர்ந்தாள்.

சக்தி மொத்தத்தையும் ஒன்று திரட்டி அவளின் கையைப் பிடித்தவன், “தலை வலிக்குது அகல்” என்றான் உளறலோடு.

கணவனின் வார்த்தையில் கோபம் தணிந்து பாவம் குடியேறியது. “நேத்து குடிச்சதால அப்படி இருக்கும். நீங்க எழுந்து உட்காருங்க ஏதாச்சும் எடுத்துட்டு வரேன்.” என்றவள் நகர, மீண்டும் கைப்பிடித்தான்.

கேள்வியோடு அவள் பார்க்க, “அகல் ரொம்ப வலிக்குது.” என்றான்.

அருகில் நகர்ந்தவள் தலையில் கை வைக்க, சேர்த்து பிடித்துக் கொண்டு கண் மூடினான். நன்றாக நெற்றியை தடவி விட்டு கையை எடுத்துக் கொள்ள முயற்சிக்க, உடும்புபிடியாக பிடித்து இருந்தான் தரணீஸ்வரன்.

லேசான கோபம் எட்டிப் பார்க்க, கைகளை எடுக்க முயற்சித்தாள். போராடி வெடிக்கென்று கையை பிடுங்கிக் கொள்ள, அவள் அசைவுக்கு ஏற்ப தரணீஸ்வரனின் முகம் திரும்பியது. சிடுசிடுப்போடு அவனை விட்டு வெளியேறியவள் படியிறங்க, அவனது முகம் தோன்றியது.

யோசனையோடு மீண்டும் அறைக்கு ஓடியவள் அவனை எழுப்ப முயன்றாள். அவனோ அசைவில்லாமல் படுத்துக் கொண்டிருந்தான். நொடிகள் கடக்க அவளுக்குள் பயம் அதிகரித்தது. கன்னத்தை வேகமாக தட்டி, “எந்திரிங்க” என குரல் கொடுத்தாள்.

எந்த அசைவும் இல்லாமல் போக நீரை முகத்தில் அடித்து எழுப்பினாள். அதுவும் வீணானது அவன் எழாமல் இருப்பதால். “தரணி… என்ன ஆச்சு எந்திரிங்க.” இந்த முறை சத்தமாக எழுப்ப ஆரம்பித்தாள்.

அசைவின்றி படுத்து கொண்டிருப்பவன் தோரணையில் எதுவோ ஆகியிருக்கிறது என்பதை உணர்ந்து சத்தமிட்டாள்,

“அத்தை… மாமா… ” என்று.

ஹாலில் இருந்த தயாளனுக்கு மருமகளின் குரல் கேட்க, “என்னம்மா ஆச்சு?” என வேகமாக அறைக்கு ஓடினார்.

சமையலறையில் இருந்த ஆதிலட்சுமிக்கு கணவனின் குரல் பதட்டத்தை கொடுக்க, அவரும் பின்னால் ஓடினார். மூவரும் எழுப்பியும் அசைவின்றி படுத்துக் கொண்டிருந்தான் நாயகன். தாய் தந்தை இருவரும் கண்ணீரில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை மறந்திருக்க, துரிதமாக செயல்பட்டு அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள் அகல்யா.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
30
+1
70
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்