Loading

வானம் – 20

டிசம்பர் – 2017

திருமணமாகி கடந்த மூன்று மாதங்களில் சித்தார்த் – தேவிகாவின் வாழ்வில் சில முன்னேற்றங்கள் ஏற்படத் துவங்கியிருந்தன. அப்போது தான் குளித்துவிட்டு தலையை துவட்டியவாறே அறைக்குள் நுழைந்தவனை வரவேற்றது தேவிகாவின் அசதியான முகம்.

“என்னாச்சு தேவி? ஏன் காலைலயே ஒருமாதிரி டல்லா இருக்கா? உடம்பு எதுவும் சுடுதா?” என வேகமாக அவளது நெற்றியைத் தொட்டுப் பார்த்தான் சித்தார்த்.

“அதெல்லாம் எதும் இல்லங்க” என்றவள் இறுக மூடியிருந்த தன் கரங்களை அவன்முன் மெல்ல நீட்டினாள். அவளது செய்கையின் அர்த்தம் புரியாமல், “கைல என்ன தேவி?” என குழப்பத்தோடு வினவ, அவளோ மெதுவாக தனது கரங்களை விரித்தாள்.

அவளது உள்ளங்கையில் பிரெக்னென்சி கிட் இரு கோடுகளை அடர் சிவப்பு நிறத்தில் காட்டிக்கொண்டிருந்தது. முதலில் திருதிருவென முழித்தவன், அதன் அர்த்தத்தை உள்வாங்குவதற்கே சில நிமிடங்கள் பிடித்தன.

“ஹே, தேவி!” என கூச்சலிட்டவன் அவளை அப்படியே தூக்கி தட்டாமாலை சுற்றினான் சித்தார்த். “என்னங்க, மெதுவா” என்ற தேவிகாவின் குரல் காற்றில் தான் கரைந்தது.

அவனின் சத்தத்தைக் கேட்டு அவர்களது அறைக்கே வந்துவிட்டார் கற்பகம்மாள். “என்னடா ஆச்சு, ஏன் அவள இப்படி தூக்கி சுத்தற?” என்ற கேள்வியோடே வர, அவளை கையில் தாங்கியவாறே, “அம்மா நீங்க பாட்டி ஆகப் போறீங்க” என்றவனின் வார்த்தைகளே பிரதிபலித்தது அவனின் சந்தோசத்தை.

கற்பகம்மாளுக்கு அந்த சந்தோசம் ஒட்டிக்கொண்டாலும் கூடவே கண்டிப்பும் பிறந்தது. “மாசமா இருக்கிற பிள்ளைய ஏன்டா இப்படி தூக்கி சுத்தற! மொதல்ல அவள கீழ இறக்கி விடுடா” என்கவும் தான் அவளை தரையில் இறக்கிவிட்டான் சித்தார்த்.

அதன்பின் இனிப்பு, கொண்டாட்டம் என அந்த இல்லமே மகிழ்ச்சியில் திளைக்க தங்கள் அறையில் சுவரோரம் சாய்ந்து அமர்ந்திருந்தவளின் முகமோ சோர்வைத் தத்தெடுத்திருந்தது.

தற்போது தான் அவர்களின் வாழ்க்கையை வாழவே தொடங்கி இருக்க உடனே கர்ப்பம் அவளே எதிர்பாராதது. இன்னும் தங்களுக்கென வாழவே இல்லையே எனத் தோன்றியது அவளுக்கு.

அவள் என்னதான் சித்தார்த்தின் மனைவியாய் வாழத் தொடங்கி இருந்தாலும் அவளது மனதில் இன்னும் சஞ்சலங்கள் நிழலாடிக் கொண்டு தான் இருந்தன.

நாள் தள்ளிப் போயிருந்ததை உணர்ந்தவுடனே சற்று ஐயத்துடனே தான் பிரெக்னென்சி கிட்டை வாங்கி வந்து பரிசோதித்தாள். தன்னுள் ஒரு உயிர் உருவாகிக் கொண்டிருப்பதை உணர்ந்தவளுக்கு இனம்புரியா ஓர் உணர்வு. அத்தோடு கூடவே ‘இப்பவே இந்த குழந்த வேணுமா!’ என்ற கேள்வியும் எழத் துவங்கியது.

தன் கணவனிடம் இதனைப் பற்றி பேசலாம் என்றெண்ணி இருக்க அவனோ மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்ததால் அதனைக் கண்டவள் எதுவும் பேசாமல் அமைதியாகி விட்டாள் தேவிகா.

அவளை கையில் வைத்து தாங்காத குறையாய் கவனித்துக் கொண்டான் சித்தார்த். அதில் அவள் மனம் கரையத் தொடங்க, தனது கர்ப்பகால பயணத்தை மெதுமெதுவாய் ரசிக்கத் தொடங்கி இருந்தாள்.

ஏழாவது மாதம் வளைகாப்பு முடிந்து தாய் வீடு சென்றவளை பிரிய மனமில்லாமல் அனுப்பி வைத்தான் சித்தார்த். ஆனால் அதுவே அவர்களின் வாழ்க்கையின் பிரிவுக்கும் காரணமாக அமைந்தது.

தனது கடந்தகால காதலை மறந்து முற்றிலும் சித்தார்த்தின் மனைவியாய் அவன் குழந்தையின் தாயாய் அவள் மனமும் உள்ளமும் மாறி இருக்க அதில் கல்லெறியும் விதமாய் அமைந்தது அவளின் கடந்த கால காதலனின் வருகை.

அவளது அன்னை வெளி வேலையாய் சென்றிருக்க அவள் மட்டுமே தனியாய் இருந்தாள். தொலைக்காட்சியில் ஓடிய பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஒன்றில் ஆழ்ந்திருந்தவளை கலைத்தது வீட்டின் அழைப்புமணி.

“அதுக்குள்ள அம்மா வந்துருச்சா என்ன?” என்றவாறே தனது நிறைமாத வயிற்றை தாங்கிப் பிடித்துக் கொண்டே மெதுவாய் அடி எடுத்து வைத்து கதவைத் திறந்தவள் தன் எதிரே நின்றிருந்தவனைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தாள்.

அவளது அதரங்களோ, “சுரேஷ்” என உச்சரித்தன. அவனது பார்வை அவளது முகத்தில் பட்டு பின் அவளது நிறைமாத வயிற்றில் நிலைக்குத்தியது.

“நீ… நீ எப்படி இங்க?” என தடுமாறின வார்த்தைகள்.

“ஏன், என்னை எதிர்பார்க்கலயா ஸ்வீட் ஹார்ட்!” என ஒற்றைப் புருவம் உயர்த்தினான் சுரேஷ். “அது… இப்போ ஏன் இங்க வந்த, தயவு செஞ்சு கிளம்பு” என தட்டுத்தடுமாறி வார்த்தைகள் வந்தன.

“நீ சந்தோசமா இருக்கியா?” என்றவனின் பார்வை கொஞ்சமும் மாறாமல் அவளது வயிற்றிலேயே தான் இருந்தன. “ப்ளீஸ் சுரேஷ், தயவு செஞ்சு இங்க இருந்து போய்ரு. அம்மா பார்த்தாங்கன்னா பெரிய பிரச்சினை ஆகிரும்” என அவனை அங்கிருந்து அனுப்புவதிலே குறியாய் இருந்தாள் தேவிகா.

“சரி, நான் கிளம்புறேன். எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு. நீ சந்தோசமா இருக்கியா?” என்றவனின் கேள்வி அவள் மனதின் அடி ஆழத்தை தோண்டத் துவங்கியது.

“ரொம்ப சந்தோசமா இருக்கேன். போதுமா! உனக்கு என்னைப் பத்தி எதுக்கு கவல? இதுக்கு தான நீ ஆசப்பட்ட, நீ ஆசப்பட்ட மாதிரியே நடந்துருச்சுல்ல. இப்போ கிளம்பு” என மூச்சிறைக்க வேகவேகமாய் பேசியவள் அதே வேகத்தில் கதவையும் இழுத்து சாத்தினாள்.

மூடிய கதவை ஓரிரு விநாடிகள் வெறித்துப் பார்த்தவன் அங்கிருந்து கிளம்பினான். ஆனால் மூடிய கதவின் மேலேயே சாய்ந்தவளின் கன்னங்களில் கண்ணீர் படர்ந்தது.

“நீ சந்தோசமா இருக்கியா?” அவனின் கேள்வியே அவளது மனதில் ஓடின. ‘என் சந்தோசமே நீ தான டா. ஆனா, அத புரிஞ்சுக்காம உன் குடும்பம் தான் முக்கியம்னு அன்னிக்கு ஓடுனியே! இப்ப வந்து என் சந்தோசத்த பத்தி ஏன் தெரிஞ்சுக்கணும் நீ?’ என மானசீகமாய் அவனிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள்.

சுரேஷ் அவளது கல்லூரி தோழன். நட்பு காதலாய் மலர கல்லூரி பருவத்தில் காதலர்களாக வலம்வரத் துவங்கினர். ஆனால் அவை அனைத்தும் தேவிகாவின் வீட்டினருக்கு அவர்களது காதல் விவகாரம் தெரியும் வரை தான்.

வழக்கமாய் வரும் எதிர்ப்பு தான் அவர்களது காதலுக்கும் வந்தது. ஆனால் தேவிகா விடாபிடியாய் இருக்கவே அவளுக்கு உடனே மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை ஆரம்பித்தனர் அவளது பெற்றோர்.

அந்த சமயத்தில் வந்த வரன் தான் சித்தார்த். உடனே சம்பந்தம் பேசி முடித்துவிட வேண்டும் என அவர்கள் நினைக்க சித்தார்த்திற்கும் தேவிகாவை பிடித்துவிட உடனே கல்யாண வேலைகள் ஆரம்பிக்கத் துவங்கின.

அவர்களின் வேகத்தைக் கண்டு மிரண்டுப் போனாள் தேவிகா. உடனே சுரேஷிடம் இருவரும் பதிவு திருமணம் செய்து கொள்ளலாம் என அழைக்க அவனோ, “கொஞ்சமாச்சும் யோசிச்சு பேசு தேவி. இப்பதான் ரெண்டு பேருமே காலேஜ் முடிச்சுருக்கோம். எனக்கு இன்னும் உருப்படியா ஒரு வேல கூட அமையல. அதும் இல்லாம நம்ம லவ் மேட்டர எங்க வீட்ல சொன்னா மட்டும் நம்மள ஆரத்தி எடுத்து வரவேற்ப்பாங்கன்னா நினைச்ச! உன் வீட்டு ஆளுங்கள விட எங்க வீட்ல அதிக எதிர்ப்பு தான் வரும். இந்த நேரத்துல யாரு சப்போர்ட்ம் இல்லாம நாம என்ன பண்றது” என்றான்.

“அப்போ நம்ம காதல்? வீட்ல பார்க்கிற மாப்பிள்ளைய கட்டிக்க சொல்றியா?” கோபமாய் வந்தன வார்த்தைகள்.

“நான் அப்படி சொல்லல. இன்னும் கொஞ்ச நாள் எப்படி ஆச்சும் இந்த கல்யாணத்த தள்ளி போடு. எனக்கும் ஒரு வேல அமைஞ்சவுடனே நம்ம வாழ்க்கைய பத்தி யோசிக்கலாம்” என்றான் சுரேஷ்.

“அப்பக்கூட யோசிக்கலாம்னு தான சொல்ற! இவ்வளவு தான லவ்” என்றவளின் ஆதங்கம் வார்த்தைகளில் தெரிந்தது.

“இங்க பாரு தேவி, ரெண்டு பேருக்கும் வருமானத்துக்கு ஒரு வழியும் இல்லாம கல்யாணம் பண்ணிட்டு என்ன பண்ண சொல்ற? கொஞ்சம் நிதர்சனத்த யோசி தேவி. இது ஒன்னும் சினிமா இல்ல, வாழ்க்கை. கொஞ்சம் நாள் தான உன்னை சமாளிக்க சொல்றேன். என் பக்கம் இருந்து கொஞ்சம் யோசிச்சு பாரு” என அவளுக்கு பொறுமையாய் அவன் விளக்கத் தொடங்க,

“புரிஞ்சுப் போச்சு. எப்படா இவள கழட்டி விடலாம்னு தான இருந்த! இப்போ அதுக்கு தானா ஒரு வாய்ப்பு அமைஞ்சுருச்சு. நீ தான் என் சந்தோசம்னு இவ்ளோ நாள் நான்தான் லூசுத்தனமா நினைச்சுட்டு இருந்திருக்கேன்” என்றவளிடம் என்ன சொல்லி தன்னைப் புரிய வைப்பது எனத் தெரியாமல் தவித்தான் சுரேஷ்.

இவன்மேல் இருந்த வெறுப்பால், ‘நான் ஆசப்பட்டது தான் எனக்கு அமையல. தானா அமைஞ்சத ஏத்துக்க வேண்டியது தான்’ என்ற நிலைக்கு வந்திருந்தாள்.

அதன்பின் திருமணம், சித்தார்த் உடனான வாழ்க்கை என அவளது வாழ்வே மாறிப் போயிருந்தன.

சித்தார்த், அவனைப் பற்றி ஒரே வார்த்தையில் கூறி விடலாம். ஜென்டில்மேன். அவனது அன்பால் தான் அவளது மனம் இத்தனை வேகமாய் அவளால் கடந்தகாலத்தை மறக்க முடிந்திருந்தது. என்னதான் அவள் வாழ்க்கை மாறி இருந்தாலும் மனதினோரம் இருந்த சிறு சஞ்சலத்தை சுரேஷின் வருகை பூதாகரமாக்கியது.

எவ்வளவு நேரம் கதவிலே சாய்ந்து நின்றிருந்தாளோ! அவளது அன்னை வந்து கதவைத் தட்டும் வரைக்கும் அதே நிலையில் தான் இருந்தாள். கதவு தட்டப்படும் சத்தத்தில் தன்னை மீட்டுக் கொண்டவள் வேகமாய் முகத்தைத் துடைத்துத் தன்னை சரிபார்த்துக் கொண்டே கதவைத் திறந்தாள்.

“என்னா வெயிலு! ஷப்பா, கொளுத்தி எடுக்குது” என புடவை முந்தானையில் விசிறிக் கொண்டே தேவிகாவின் முகத்தைப் பார்த்தவர், “என்னாச்சு டி, ஏன் ஒரு மாதிரி இருக்க? ரொம்ப மசக்கையா இருக்கா?” என கேள்வி எழுப்பினார்.

“அது, கொஞ்சம் தல சுத்தற மாதிரி இருக்கு மா. நான் கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்கிறேன்” என்றவாறே தன் அறைக்குள் புகுந்துக் கொள்ள, இந்த சமயத்தில் மசக்கை சாதாரணமான ஒன்று என எண்ணியவர் அதன்பின் அவளை தொந்தரவு செய்யவில்லை.

தன் அறையில் வந்து படுக்கையில் விழுந்தவளுக்கு கண்கள் கரித்துக்கொண்டு வந்தன. அவளது நிலை உணர்ந்ததோ அவளின் சிசு. மெல்ல அவளது வயிற்றில் அசைந்தாட, அதன் உணர்வில் கண்களை இறுக மூடி தன் கரங்களால் வயிற்றைத் தடவிக் கொடுத்தாள் தேவிகா.

அவளது அலைப்பேசி அழைப்பில் கண்களை திறந்தவள் யாரென பார்க்க சித்தார்த் தான் அழைத்திருந்தான். அவனுடன் பேசும் மனநிலையில் இல்லை அவள். ஆனால் அழைப்பை எடுக்காமல் விட்டால் அவன் பதறியவாறே அடுத்த நொடி தனது அன்னைக்கு அழைத்து விடுவான் என எண்ணியவள், மனமில்லாமல் அழைப்பை ஏற்றாள்.

“தேவி” என்ற அழைப்பிலே அவளது பிரிவால் அவன் வாடுவது தெரிந்தது. ஆனால் அவனுடன் பேசும் மனநிலையில் இல்லாததால், “அப்புறம் கால் பண்ணட்டுமாங்க… மசக்கையா இருக்கு, ப்ளீஸ்” என வார்த்தைகள் இறைஞ்சின.

அவளுடன் ஆசையாய் பேச நினைத்தவனுக்கு வருத்தமாய் இருந்தாலும், “பரவால்ல தேவி, நீ மொத ரெஸ்ட் எடு. அப்புறம் கால் பண்றேன்” என அழைப்பைத் துண்டித்தான் சித்தார்த்.

அலைப்பேசியை படுக்கையில் போட்டவளுக்கு உண்மையிலேயே கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. ஆனால் சில விநாடிகளிலே மீண்டும் அலைப்பேசி அழைக்க, அதனை எடுத்தவள் அரைக்கண்களோடு தொடுதிரையை பார்த்தவள் அதில் தெரிந்த எண்ணைக் கண்டவுடனே வேகமாய் கண்கள் விரிந்தன.

_தொடரும்

 

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment