Loading

அத்தியாயம்- 3

 

         “அப்பா பஸ் வந்துற போகுது ப்பா. கொஞ்சம் வேகமாதான் போயேன். காலேஜ் பஸ்ஸ விட்டா தனியா வேற போக தெரியாதே. இவரு வேற இந்த உருட்டு உருட்டுறாரு. கடவுளே பஸ் போயிரக்கூடாது.” என்று மனதிற்குள் புலம்பியபடி மெதுவாய் உருளும் வண்டியில் அவஸ்தையாய் அமர்ந்திருந்தாள் தமிழ்செல்வி.

 

          “தமிழு காசு வச்சுருக்கல்ல? சாய்ந்திரம் பசிச்சா எதாவது வாங்கி சாப்பிட்டுக்க. செலவாவுதுனு வயித்தக்கட்டிக்கிட்டு வராத. இப்ப தான் காச்ச சரியாயிருக்கு சரியா.”, குமாரவேலன்.

 

          “அதெல்லாம் வாங்கி சாப்பிட்டுக்குறேன் ப்பா. அப்பா மணி 7 ஆயிடுச்சு. 7.15 க்கு பஸ் வந்துரும் கொஞ்சம் சீக்கிரம் போப்பா.” என்று அவள் தந்தையை விரைவுப்படுத்த, 

 

          “ஏழு தானே மா ஆகுது. இன்னும் கால்மணி நேரமிருக்கே. போய்டலாம் மா அதுக்குள்ள.” என்று சற்றே வண்டியின் வேகத்தை அதிகரிக்கவும் தான் தமிழிற்கு அப்பாடா என்றிருந்தது.

 

         சரியாக ஏழு பத்திற்கு வண்டி அவளின் பேருந்து நிறுத்தத்தில் நிற்க, முன்பே வந்திருந்த முகில் அவளைப் பார்த்துக் கையசைக்க, இவளும் கையசைத்து,

 

        “அப்பா நீ கிளம்பு ப்பா. நான் ஏறிக்கிறேன்.” என்று தன் தந்தையிடம் உரைத்தாள்.

 

        “பரவால்ல தமிழு. இன்னும் ஒரு அஞ்சு நிமிசம் தானே உன்னை ஏத்தி விட்டுட்டே போறேன்.” என்றார்.

 

         “சரிப்பா.” என்று அவள் முகிலை பார்த்து நிற்க,

 

         “நீ போ தமிழு. நா இங்க தான் நிக்கிறேன்.” என்று குமாரவேலன் அவளின் குறிப்புணர்ந்துக் கூற, மலர்வாய் ஒரு புன்னகையை அவருக்கு பதிலாய்த் தந்துவிட்டு தமிழ் முகிலிடம் போய் நின்றாள்.

 

         “சீக்கிரமே வந்துட்டியா முகில்.”

 

        “இல்ல தமிழ் ஒரு அஞ்சு நிமிஷம் தான் ஆகுது வந்து.” என்கவும் தமிழ் மென்முறுவல் பூத்தாள்.

 

         “தமிழ் நீ ஏன் டெய்லி அப்பாவோட வர. பஸ்ல வரலாம்ல. டெய்லி உன்னை கொண்டு வந்துவிட்றது அப்பாவுக்கு கஷ்டம் தானே.”

 

          “இல்ல முகில் நான் தனியா இதுவரை எங்கயும் போனதில்ல. இப்படி இவ்வளோ தூரம் வெளில வர்றது, காலைல சீக்கிரம் கிளம்புறதுனு எனக்கு எல்லாமே புதுசு. அதோட நம்ம ஸ்டாப்பிங்ல யார் ஏறுவா என்னனு ஏதும் தெரியாதுல்ல முன்ன. அதான் எனக்கு பழகுற வரை அப்பாவே கொண்டு வந்து விட்றேன்னு சொன்னாங்க.”

 

          “ஓஓ சரி தமிழ். அப்ப கொஞ்ச நாள் அப்பா வரட்டும். அப்றம் சாய்ங்காலம் என் கூட பஸ்ல வா. நா முன்னாடியே இறங்கிருவேன் தான். அப்புறம் ஒரு மூனு ஸ்டாப்பிங் தானே உங்க ஊரு நீயும் பழகிக்குவ. அதுக்கப்புறம் காலைலையும் நீயே பஸ்ல வந்துடு. ம்ம்.” என்று முகில் புன்முறுவல் பூத்தாள்.

 

         எப்படி தனியாக பேருந்தில் வருவது என்று உள்ளுக்குள் பயந்தாலும் வெளியே விழித்து பின் ஒரு மாதிரி சரியென்று தமிழ் தலையாட்டிட, அவளின் முகபாவனை கண்டு சிரித்த முகில்,

 

       “நான் உன்னை நாளைக்கே என்கூட பஸ்ல வர சொல்லல தாயே. உனக்கு எப்போ பஸ்ல வர தோனுதோ அப்போ வா.” என்க, தமிழ் அசடு வழிந்து வேகமாகத் தலையாட்டி சிரிக்க, முகிலின் சிரிப்பு அதிகமானது.

       

        “பஸ் வருது பாரு வா.” என்று முகில் சிரிப்போடு இரண்டடி முன்சென்று நிற்க, தமிழும் திரும்பி தலையசைத்து தந்தையிடம் விடைபெற்று ஆர்வம் ததும்பும் விழிகளோடு தங்களை நெருங்கி வரும் பேருந்தைப் பார்த்தபடி முகிலின் அருகில் வந்து நின்றாள்.

 

         பேருந்து அவர்களை கடந்துச் சற்று முன் சென்று நிற்க, முகில் வேகமாக முன்னே படி நோக்கி செல்ல, தமிழின் விழிகள் ஜன்னல்கள் வழியே பேருந்திற்குள் அலைப் பாய்ந்தாலும் கால்கள் அனிச்சையாய் அவளைப் பின் தொடர்ந்துக் கொண்டிருந்தன. கடைசி இருக்கைக்கு முன்னிருக்கையில் அமர்ந்திருந்த மதுரனை கண்டதும் அலைப்பாய்ந்த விழிகள் இரண்டும் அலை கரையைச் சேர்ந்தது போல் மலர்ந்து விரிந்தது. காற்றில் கலைந்தாடியக் கேசத்தை ஒரு கரத்தால் ஒதுக்கிக் கொண்டே தன் நண்பனோடு பேசிக் கொண்டிருந்தவனை இதழ்களில் அனிச்சையாய்த் துளிர்த்தப் புன்னகையோடு விழிகளில் நிறைத்துக் கொண்ட தமிழ், இரண்டொரு நொடிகளில் முகத்தை இயல்பாக்கிக் கொண்டு பேருந்தில் ஏற, பேருந்து நகரத் தொடங்கியது.

 

        தமிழும் முகிலும் சிறு புன்னகையோடு நிலா அருகில் சென்று அமர்ந்தனர். 

 

        “என்ன தமிழ் உடம்பு சரியாகிருச்சு போலவே. ப்ரஷ்ஷா தெரியுற.” என்ற நிலாவினை பார்த்து தமிழ் இதழ் விரித்து ஆமென்று தலையாட்டி,

 

        “ஆமா நிலா. இன்னிக்கு தான் நல்லாருக்கு சோர்வில்லாம.” என்ற தமிழை பார்த்து நிலாவும் முகிலும் மலர்ந்தனர்.

 

        “நீ எந்த ஊரு தமிழ்?.”, நிலா.

 

         “தாளக்குடி நிலா. நீ எந்த ஊரு?”

 

        “நா சத்திரம் தான். ஆண்டாள் வீதில தான் எங்க வீடு.”

 

         “ஆண்டாள் வீதியா? அப்புறம் ஏன் நிலா நீ தில்லைநகர்ல போய் பஸ் ஏறுற. நாங்க ஏற்ர இடமே உனக்கு பக்கம் தானே.” என்று முகில் கேட்டாள்.

 

         “ஆமா நிலா. நீ ஏன் இங்கேர்ந்து அவ்ளோ தூரம் போய் ஏறுற?” என்று தமிழும் கேட்க,

 

        “மதுரன் அங்க தான் ஏறுவான். பஸ் ஸ்டார்ட்டிங் பாயிண்டும் அதானே. அதான் அங்கவே போய்ட்டேன். இல்ல பா எனக்கு இந்த ஸ்டாப்பிங்ல நீங்கல்லாம் ஏறுவீங்கனு தெரியாது. மதுரனும் இதே காலேஜ்ல சேர்ந்துருக்கேன்னு சொன்னான் அப்பாவும் ஸ்டார்ட்டிங் பாயிண்டல்யே ஏறிக்கலாம்னு சொல்லவும் தான் அங்க போறேன்.” என்றாள் நிலா.

 

         “ஓஓ மதுரன் தில்லைநகரா?!” என்று தமிழ் மனதிற்குள் கூறிக் கொண்டதை முகில் வாய்விட்டு நிலாவிடம் கேட்டே விட்டாள்.

 

         “ஆமா அவங்க வீடு அங்க தான் இருக்கு.” என்று நிலா கூறவும்

 

         “அப்ப ஓகே நீ மதுரன் கூடவே வா. நீ எங்கக்கூட வந்தா நல்லாருக்கும்னு யோசிச்சோம் பரவால்ல.”, முகில்.

 

        “ஆமா நிலா. ஆனா நாம தான் ஒன்னாவே ட்ராவல் பண்றோமே இதுபோதும். நீ மதுரன் கூடவே வா நீ திடீர்னு ஸ்டாப் மாறுனா அவங்களுக்கு ஒருமாறி ஆகிடும்.” என்ற தமிழை பார்த்து மலர்வாய்ப் புன்னகைத்தாள் நிலா.

 

         “தேங்க்ஸ் பா.” என்றாள்.

 

         “ப்ரண்ட்ஸுக்குள்ள என்ன தேங்க்ஸ். ஃப்ரீயா விடு நிலா.”, முகில்.

 

        “ஆமா நமக்குள்ள இனி நோ தேங்க்ஸ் நோ சாரி ஓகேவா.”, என்று தமிழ் விரல் ஆட்டி செல்லமாய்க் கண்டிக்க, நிலாவும் முகிலும் மென்னகையோடு ஒரு சேர “ஓகே” என்றனர்.

 

        இவர்களது உரையாடல்களை காதில் வாங்கிய வண்ணம் ஏறி வந்த தென்றலும் துளசியும் 

 

        “எங்களுக்கும் ஓகே தமிழ்.” என்று ஒருசேர கூறியபடி அவர்களின் இருக்கைக்கு பின் அமர, தமிழோடு நிலாவும் முகிலும் கூட அவர்களை பார்த்துப் புன்னகைத்தனர். 

 

        “இப்படி கண்டிஷன் போட்ற அளவு தமிழ உசுப்பிவிட்டது யார்? குற்றம் நடந்தது என்ன?” என்று தென்றல் தொகுப்பாளரை போல பேச, மற்ற நால்வரும் ஒருவரையொருவர் பார்த்து கலகலவென்று சிரிக்க, தென்றலின் இதழ்களிலும் சிரிப்பு விரிந்தது.

 

        முகில் சுருக்கமாய் தங்களுக்குள் நடந்த உரையாடலை சொல்லி முடிக்க,

 

       “என்ன வார்த்தை சொல்லிட்ட நிலா. நீதான் தமிழ உசுப்பி விட்டதா. தமிழ் சொன்னது தான் சரி இனிமே நமக்குள்ள யாரு தெரியாம கூட சாரி, தேங்க்ஸ் சொன்னாலும் சொன்னவங்க மறுநாள் எல்லாருக்கும் அஞ்சு ரூபா டெய்ரி மில்க் வாங்கித் தரணும்.”, துளசி.

 

        “ஹை சூப்பர் துளசி. செம்ம ஸ்வீட் பனிஷ்மென்ட் இது. எனக்கு ஓகே பா.”, முகில்.

 

       “எனக்கும் ஓகே.”, தென்றல்.

 

       “எனக்கு டபுள் ஓகே.” என்று நிலா குதூகலமாய்க் கூறிட, காற்று போன பலூன் போல் முகத்தை வைத்திருந்த தமிழை அனைவரும் கேள்வியாக நோக்க,

 

      “எனக்கு டெய்ரி மில்க் புடிக்காது. ஏன் சாக்லேட்டே அவ்வளவா சாப்ட மாட்டேன். வேற பனிஷ்மென்ட் மாத்திக்கலாமா?!” என்று கேட்க, மற்ற நால்வரும் ஒரு சேர,

 

       “நோ” என்று கத்த, முன்பின் இருக்கைகளில் அமர்ந்திருந்தவர்கள் திரும்பி அவர்களை ஒருவிதமாய் ஏற இறங்கப் பார்க்க, நால்வரும் விழித்து விட்டு அமைதியாக ஒன்றும் தெரியாதது போல் அமர, அவர்கள் திரும்பிக் கொள்ளவும் திடீரென்று அவர்கள் கத்தியதில் உறைந்துப் போன தமிழ் அமைதியாக நால்வரையும் கண்டு விழிக்க,

 

       “மெஜாரிட்டி நாங்க தான். உனக்கு புடிக்கலனா உன் டெய்ரி மில்க்கை எங்கக்கிட்ட குடுக்கலாம் நாங்க வேண்டானே சொல்ல மாட்டோமே.” என்றாள் துளசி.

 

       “ம்ம். சரி. மொத்தமாலா குடுக்க மாட்டேன் நா கொஞ்சம் எடுத்துட்டு குடுப்பேன். அப்படி என்ன தான் அதுலயிருக்குனு நானும் பார்க்கணும்ல.” என்று படு மும்முரமாக முகத்தை வைத்துக் கூறிய தமிழை பார்க்கையில் நால்வருக்கும் சிரிப்பு வெடித்துக் கிளம்ப, அதிகம் சத்தமிட்டு மீண்டும் மற்றவர்களை திரும்பிப் பார்க்க வைக்கக் வேண்டாமென்று சத்தத்தைக் குறைத்துச் சிரித்தனர். முதலில் அவர்களை முறைத்த தமிழும் அவர்களோடு சேர்ந்து சிரித்தாள். பின் ஐவரும் அமைதியாகிட, தென்றல், தமிழ், நிலா மூவரும் உறங்கிக் கொண்டு வர, முகிலும் துளசியும் மட்டும் பேருந்துக் கல்லூரிக்குள் நுழையும் வரை பேசிக் கொண்டே வந்தனர்.

 

         பேருந்துக் கல்லூரிக்குள் நுழைய, உறங்கி விழித்திருந்த தமிழ் முதல் ஆளாக பையைத் தேடி எடுத்துக் கொண்டு படிகளின் அருகில் போய் நின்றுக் கொள்ள, அவளைத் தொடர்ந்து முகில், நிலா என்று அனைவரும் நின்றனர். மதுரனும் பின்பக்கப் படியில் இறங்குவதற்கு தயாராய் நின்றான். காற்றில் அலையும் கேசத்தைக் கைக் கொண்டு அடக்கியபடி தலையை ஒருபக்கமாக சாய்த்து பின் நின்ற நண்பன் கூறிய எதுவோ ஒன்றிற்கு சிரித்த மதுரனை துள்ளிக் குதிக்கும் உள்ளத்தோடு அள்ளிப் பருகிக் கொண்டிருந்தாள் விழிகளால் தமிழ். பேருந்து நிற்கும் முன் இறங்கிச் சென்றவனைக் கண்டு மென்னகைப் புரிந்த தமிழ், முகத்தினை இயல்பாய் வைத்துக் கொண்டு இறங்கி தோழிகளிடம் விடைப்பெற்று தன் வகுப்பறை நோக்கி உற்சாகமாய் நடையிட்டாள்.

 

       அன்றைய நாள் அனைவருக்கும் இனிதாகவேக் கழிய, மாலை கல்லூரி முடிந்ததும் வழக்கம் போல் நிலா அனைவருக்கும் இடம் பிடித்து வைத்திருக்க, மற்றவர்கள் அந்த இருக்கைகளில் வந்தமர்ந்தனர். பேருந்து புறப்படும் முன் பின்னால் அமர்ந்திருந்த துளசியை பார்ப்பதுப் போல் திரும்பி மதுரன் ஏறிவிட்டானா என்று பார்த்து உறுதிச் செய்துக்கொண்டு மீண்டும் திரும்பி அமர்ந்தாள் தமிழ். அன்றைய நிலாவின் கேள்விகளாய் எந்ததெந்த காய்கள் செடியில், கொடியில், நிலத்தின் அடியில் காய்க்கின்றன என்றிருக்க, தமிழ் தான் அறிந்தவற்றிற்கு பதில் கூறிக் கொண்டு வர, நிலா அவளை ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டு வந்தாள். நிலாவிற்கு தமிழை கண்டு ஆச்சர்யம் என்றால் தமிழிற்கு சிறுப் பிள்ளையாய் கேள்விகள் கேட்கிறாளே என்று நிலாவை கண்டு ஆச்சர்யமாகயிருந்தது. இருவரும் இத்தகைய ஆச்சர்ய பரிமாற்றங்களில் ஆழ, மற்ற மூவரும் உறக்கித்தின் பிடியில் இருந்தனர். அன்றும் இறங்கியப் பின் ஜன்னல் வழியே மதுரனின் முகம் கண்டு மலர்வாய் இதழ் விரித்துத் தந்தையோடு புறப்பட்டாள் தமிழ்.

 

        நாட்கள் வேகமாக நகர்ந்து ஒரு மாதம் ஓடியிருக்க, தோழிகள் ஐவருக்குள்ளும் இணக்கம் துளிர்க்கத் துவங்கியிருந்தது. தமிழும் புதுக் கல்லூரியிலும் நண்பர்களோடும் பொருந்தும் முயற்சிகளைத் தொடங்கியிருந்தாள். தமிழிற்கும் நித்தமும் மதுரனை காண்பது வழக்கமாகியிருந்தது. காலையில் அவனை பேருந்தில் காண முடியாவிட்டால் கேண்டினின் வெளியில், கேண்டினின் ஜன்னல் ஓரத்தில், ஸ்டோரின் அருகினில், அவன் வகுப்பிருக்கும் கட்டிடத்தின் வெளியே இருக்கும் வேப்ப மரத்தினடியில், ஸ்டோருக்குச் செல்லும் வழியில் என்று எங்காவது பார்த்து விடுவாள். அவனை பார்க்காவிடில் அவளுக்கு அந்த நாள் முழுமைப் பெறாது என்று தோன்றவே நித்தமும் அவனை ஒருமுறையாவதுப் பார்த்து விடுவாள். ஒரு மாதத்தில் அவன் வழக்கமாக எந்த நேரத்தில் எங்கிருப்பானென்று ஓரளவு அவன் அடிக்கடி விழிகளில் விழுகையில் இடத்தையும் நேரத்தையம் குறித்து வைத்து கணக்கிட்டு அறியுமளவு மதுரன் அவள் எண்ணங்களில் நிறைந்திருந்தான்.

 

         ஒருநாள் காலை முகிலும் தமிழும் பேருந்தில் அமர்ந்ததுமே 

 

        “இன்னிக்கு உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு.” என்றாள் நிலா. இருவரும் புரியாது விழித்து அறிந்துக் கொள்ளும் ஆவலில் ஒருசேர,

 

        “என்ன சர்ப்ரைஸ் நிலா?” என்று கேட்டிட,

 

        “ம்ம் அத இப்ப சொல்ல மாட்டேன் சாய்ங்காலம் சொல்றேன்.” என்று புன்னகைத்த நிலாவை இருவரும் கெஞ்சும் பார்வைப் பார்க்க,

 

       “நான் சாய்ங்காலம் தான் சொல்லுவேன்.” என்று நிலா உறுதியாகக் கூறிடவும்

 

       “என்னனு தெரிலனா மண்டை காயுமே.” என்று தமிழ் புலம்ப,

 

        “ஆளையும் மண்டையும் பாரு. போடி. சாய்ந்திரம் தான் சொல்வனா அத அப்ப சொல்ல வேண்டியது தானே. காலையிலயே சர்ப்ரைஸு சாய்ந்திரம் சொல்றேன்னு மண்டைய காயவிட்டு கடுப்ப கெளப்புற.” என்று முகில் அவளைத் திட்ட, நிலா சிரிக்க, முகிலும் தமிழும் அவளை முறைத்துவிட்டு உதட்டைச் சுழித்துவிட்டு என்ன சர்ப்ரைஸா இருக்கும் என்று சிந்தத்தபடி திரும்பி அமர்ந்துக் கொண்டனர். 

 

       “இன்னிக்கு க்ளாஸ் கவனிச்ச மாறி தான்.” என்று தமிழ் உள்ளுக்குள் புலம்பினாள். பேருந்தில் ஏறிய தென்றல் துளசியிடம்

 

        “என்ன வழக்கத்துக்கு மாறா சங்கம் சத்தமேயில்லாம இருக்கு.” என்று கேட்க,

 

        “அதானே இரு இந்த அதிசியம் எப்படி நடந்துச்சுனு தெரிஞ்சுக்குவோம்.” என்ற துளசி முகிலை சுரண்ட, முகில் திரும்பி அவளை முறைக்க, அதனை சட்டைச் செய்யாத துளசி,

 

       “என்ன மூனு பேரும் சைலன்ட்டா இருக்கீங்க.” என்று கேட்டாள்.

 

        “ஒரு சர்ப்ரைஸ் இருக்கு ஆனா சாய்ங்காலம் தான் சொல்லுவேன்னு சொல்றா நிலா. அத ஏன் இப்பயே சொல்லணும். அது என்னவாயிருக்கும்னு யோசிச்சே இன்னிக்கு மண்டைய காயும்.” என்று நிலாவை முறைத்த வண்ணம் கோபமும் பாவமுமாய் பாவம் மாற்றி கூறினாள் முகில்.

 

        தென்றலும் துளசியும் 

 

       “கேட்டா பல்பு தான் கெடைக்கும் சொல்லிட்டேன்.” என்ற தமிழின் முன்னறிவிப்பினை மீறி நிலாவிடம் என்னவென கேட்டு பல்பு வாங்கிக் கொண்டனர். அவர்களும் என்னவாகயிருக்கும் என்று மூளையை குடைந்துக் கொண்டிருந்தனர். பேருந்து விட்டு இறங்குகையில் “டாட்டா டி” என்ற நிலாவை மற்ற நால்வரும் எரித்து விடுவது போல் பார்த்துவிட்டு தங்களது வகுப்புகளுக்குச் சென்றனர். அன்றைய நாள் முழுதும் என்னவாகயிருக்குமென்று யோசித்தே நால்வருக்கும் மண்டை காய்ந்தது.

 

      மாலை பேருந்தில் ஏறியதுமே நால்வரும் “இப்ப சொல்லு என்ன சர்ப்ரைஸ்” என்று கேட்க,

 

       “தென்றலும் துளசியும் இறங்குறப்ப சொல்றேன்.” என்ற நிலாவா வெட்டவா குத்தவா என்று நால்வரும் முறைத்தனர்.

 

       “ஆத்தி சொல்லலனா அடி விழுமோ. சொல்லிருவோம்.” என்று மனதிற்குள் எண்ணிய நிலா புன்னகைத்து

 

        “உடனே டென்ஷனாவாதீங்க. கூல் கூல். இனி என் ஸ்டாப்பிங்கும் சத்திரம் தான்.” என்றாள்.

 

        நால்வரும் குதூகலமாகி “ஹை சூப்பர்.” என்று ஒரு சேர உற்சாகமாய்க் கூறிட, நிலாவின் முகத்தில் புன்னகைப் படர்ந்தது.

 

       “ஆமா நிலா நீ எங்ககூட ஏறுனா மதுரன் எதுவும் சொல்ல மாட்டாங்களா?”, என்று உள்ளே மகிழ்ந்தாலும் மதுரன் கோபித்துக் கொள்வானோ என்றெண்ணி கவலை இழையோட தமிழ் கேட்டாள்.

 

        “ஹே ஆமா மதுரன் கோவிச்சுக்கப் போறாங்க.”, முகில்.

 

         “என்ன உங்கக்கூட வரச் சொன்னதே அவன் தான். அவன் எப்பிடி கோவிச்சுக்குவான்?” என்ற நிலாவை ஆச்சர்யத்தை முகத்தில் வழிய விட்டு பார்த்திருந்தனர் நால்வரும். நிலாவே சிறு முறுவலோடுத் தொடர்ந்தாள்.

 

         “ஆமா பா. நாம எப்பவும் ப்ரண்ட்ஸ் தான். புது காலேஜ்ல புது ப்ரண்ட்ஸ் கிடைப்பாங்க. இங்க தான் நல்ல மெமரீஸ் சேர்க்க முடியும். உனக்கும் புதுசா நாலு பேரோட பழகுற நல்ல எக்ஸ்பீரியன்ஸ் கெடைக்கும் அப்பாவுக்கும் அலைச்சல் மிச்சம் சத்திரத்துல தான் ரெண்டு பொண்ணுங்க ஏற்ராங்கள்ல நீ அவங்கக்கூடவே வானு சொன்னான்.” 

 

        அதனைக் கேட்ட நால்வருக்கும் மகிழ்ச்சியில் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

 

        “மதுரன் சூப்பர் பா. எல்லா விதமாவும் யோசிக்கிறாங்க.”, முகில்.

 

        “இன்னொன்னும் சொன்னான்.” என்று நிலா நிறுத்த,

 

        “என்ன நிலா?” என்று ஆர்வமாய் கேட்டாள் தமிழ்.

 

        “உன் ப்ரண்ட்ஸ் எனக்கும் ப்ரண்ட்ஸ் தான்‌னு சொன்னான்.” என்று நிலா புன்னகைக்க, நால்வரது இதழ்களிலும் புன்னகை விரிந்தது. தமிழின் மனதில் அவன் மீதான மரியாதைப் பிறந்தது. அதன்பின் தென்றலும் துளசியும் “நாங்க தான் முன்னாடியே இறங்கிருவோம்.” என்று பாவமாகக் கூற, 

 

        “ஆனா இறங்குற வரை நாம எல்லாரும் ஒன்னா தானே இருக்கோம்.” என்ற நிலாவின் பேச்சில் இருவரும் முகம் மலர்ந்தனர். பின் ஐவரும் வகுப்பு அனுபவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துக் கொண்டு அரட்டையில் இறங்கினர்.

 

        தமிழின் கவனம் பேச்சில் இருந்தாலும் “ச்ச எப்படி இப்படி யோசிச்சான். க்ரேட் டா நீ.” என்று மனம் மதுரனை நொடிக்கொரு முறை பாராட்டிக் கொண்டிருந்தது. 

 

        சத்திரத்தில் அன்று நிலா விழிகளாலேயே பின்னே அமர்ந்திருந்த மதுரனிடம் விடைபெற்று இறங்க, முதலில் இறங்கிய தமிழ் ஜன்னல் வழியே அவனின் முகம் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டாள். தமிழ் இப்பொழுதெல்லாம் மாலை வேளையில் பேருந்தில் செல்ல துவங்கியிருந்ததால், நிலா விடைபெற்றுச் சென்றதும் முகிலும் தமிழும் லால்குடி வழிச் செல்லும் பேருந்து ஒன்றில் ஏறினர். இரு நிறுத்தங்களில் முகில் இறங்கியவுடன் தமிழின் மனம் மதுரனை நினைக்க அவன் மீது புதிதாய் மரியாதை எழ, அவளின் அதரங்களில் புன்னகை விரிந்தது. 

 

“அலைப் பாயும் விழிகளின்

        ஆவலாய் நான்!

  நித்தமும் சேரும் மனதின்

        நிறைவாய் நீ!”

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்