1,945 views

துருவ், அவன் சொன்ன இடத்திற்கு உத்ராவை போக சொல்ல, அவள், முதலில் மருத்துவமனைக்கு தான் வந்தாள்.

துருவ் அவளை முறைத்து, “நான் உன்னை…” என்று ஆரம்பிக்க,

“நீ கால் ஊண்டவே கூடாது துருவ். இப்போ எதுக்கு நீ வரேன் வரேன்னு சொல்லிக்கிட்டு இருக்க…” என்று உத்ரா திட்ட,

“நான் வந்தா தான் சரி வரும். ஒரு கால் நல்லாத்தான இருக்கு. நான் மெதுவா நடக்கிறேன்” என்றான் பிடிவாதமாக.

அவள் அவனை முறைத்து விட்டு, “சரி நீ வா… பட் நடக்காத” என்று வீல் சேரில் அமர வைத்து, அவனையும் சேர்ந்து தள்ளி கொண்டே, காருக்கு வர,

அவன் “ஹே கால்ல அடி தான பட்டருக்கு. காலே போன மாதிரி  பில்ட்அப் குடுக்குற. இந்த வீல் சேர்லாம் வேணாம்…” என்று மறுக்க, மறுக்க, அவனை காரில் அவளே கை தாங்களாக அமர வைத்து விட்டு, வீல் சேரையும் காரினுள் போட்டாள்.

  இவள் அலப்பறை இருக்கே… என்று புன்னகைத்தவன், பின், “அந்த கரண் பிரகாஷ் வீட்டுக்கு போ” என்று சொல்ல,

அவள் விழி விரித்து “மினிஸ்டர் வீட்டுக்கா. விளையாடறியா? அங்க கட்சி ஆளுங்க நிறைய பேர் இருப்பாங்க..அது போக, நம்ம சேர்ந்து அங்க போனோம்னா நம்ம கல்யாணத்துக்கு அந்த ஆள் கிட்ட ஆசீர்வாதம் வாங்க போனோம்னு பத்திரிக்கைகாரன் கிழிச்சு தோரணமா தொங்க விட்ருவான்.

சும்மாவே நம்ம ரெண்டு பேரை பத்தி தாறுமாறா எழுதுறானுங்க. இதுல என் பெரியப்பா வேற என்னை கொலை குத்தம் பண்ணுன மாதிரி முறைச்சு பார்த்துகிட்டே இருக்காரு. நானே அவர் கண்ணுல படாம சுத்திகிட்டு இருக்கேன். இதுல நீ வேற”  என்று புலம்பி தள்ளினாள்.

அவன் சிறிது யோசித்து விட்டு, “இது நல்லாருக்கே. அப்போ கண்டிப்பா நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து தான் போகணும்… காரை ஸ்டார்ட் பண்ணு.” என்று அசட்டையாக கூற உத்ரா மறுத்தாள்.

அவன் “இப்போ நீ காரை ஓட்டுறியா. இல்ல நானே ஓட்டட்டுமா?” என்று கடுமையாக  கேட்க,

உத்ரா, “ஆ ஊ… ன்னா திட்ட வேண்டியது. உராங் உடான்.” என்று முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு ஓட்டியவள், காரை அந்த மினிஸ்டர் வீட்டின் பின் பக்க வாசலில் நிறுத்தினாள்.

துருவ் ஏன் என்று கேட்க,  “முன்னாடி வாசல்ல ஆளுங்க இருப்பாங்க.. நம்ம இந்த வாசல் வழியா போகலாம்.” என்று இறங்கி விட்டு, துருவை வீல் சேரில் அமர வைத்து தள்ளிக்கொண்டு முன்னேறப் போகையில் அங்கு நடந்த காட்சியை பார்த்து,

உத்ரா “என்னடா நடக்குது இங்க.” என்று கத்தினாள்.

துருவ் இவள் ஏன் இப்படி கத்துறா என்று அவனும் அங்கு பார்க்க, அவன் ‘இவன் இங்க என்ன பண்றான்…’ என்று குழம்பினான்.

இப்படி இவர்களின் குழப்பத்திற்கே காரணம் வேறு யாரும் இல்லை. நம்ம விதுன் தான்.

துருவ் அவனுக்கு வேலை குடுத்து அனுப்ப, விதுன் மருத்துவமனை வழியாக செல்ல, அப்போது அனு வண்டி பஞ்சர் ஆகி வண்டியையே பாவமாக பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

விதுன், அவள் முன்னே சென்று காரை நிறுத்தி, “என்ன போலி டாக்டர். வண்டியை எப்படி ஸ்டார்ட் பண்றதுன்னு குழப்பமா இருக்கா” என்று  நக்கலடிக்க,

“சார் வண்டி பஞ்சர் சார்…” என்றாள் முகத்தை சுருக்கி.

“சரி வா நான் உன்னை டிராப் பண்றேன்”

“லேட்டா  போனா அப்பா திட்டுவாங்க அதுனால உங்க கூட வரேன்” என்று சற்று பெருந்தன்மையாய் சொல்லிக்கொண்டு, அவன் காரில் ஏறினாள்.

விதுனும், கிடைத்த வாய்ப்பை தவற விடாமல், அவளைப் பற்றி கேட்டுக்கொண்டே வர, அவளும், அவள் அப்பா அம்மாவிற்கு ஒரே பெண் என்றும், அப்பாவுக்கு மிகுந்த பயம் என்றும் தெரிந்துகொண்டான்.

இப்படியே அவள் வீடும் வர, காரில் இறந்து இறங்கியவள், விதுனுக்கு பை என்று சொல்லி திரும்பையில், அங்கு கீழே இருந்த முள்ளை கவனிக்காமல், அதில் காலை வைத்து விட்டு “ஆ” என்று கத்தினாள்.

அதில் அவன் பதறி, இறங்கி வந்து அவள் காலை பார்க்க, பாதத்தில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

அவன் வேகமாக அவள் செருப்பை கழற்றி விட்டு, அவள் முன்னே ஒரு காலை மடக்கி அமர்ந்து, அவள் பாதத்தை அவன்  முட்டியில் வைத்து, அந்த முள்ளை எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.

அவளுக்கு வலியில் கண்ணீரே வர, அவனுக்கு தான் உள்ளுக்குள் ஏதோ ஆனது.

அவளை சமாதானப்படுத்தி, முள்ளை எடுக்க, அவள் அவன் தோளை பிடித்துக்கொண்டு நின்றாள்.

இது தான் சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டிய காட்சியாய் வியந்து விட்டு, உத்ரா வேகமாக அவன் அருகில் சென்று “அண்ணா” என்று பாசமாக அழைக்க,

விதுன் “நம்மளை யாரு இவ்ளோ மரியாதையா கூப்புட்றது” என்று திரும்ப, அங்கு உத்ராவை பார்த்து, அதிர்ந்தான்.

“நீ என்ன பண்ற இங்க” என்று அவன் அதிர, அவள் “நீ என்ன ராசா பண்ணுற” என்று நக்கலாக கேட்டுவிட்டு, அனுவின் காலை அவன் பிடித்திருப்பதைப் பார்க்க, விதுன் டக்கென்று, அனுவின் எழுந்து நின்றான்.

உத்ரா அவனை ஒரு மாதிரியாக பார்க்க, விது “இல்ல உதி அவளுக்கு கால்ல முள்ளு குத்திருச்சா…அதான்” என்று அசடு வழிந்து விட்டு, அனுவை காரினுள் அமர வைத்து, கட்டு போட்டு விட்டான்.

உத்ரா தான் ” ஏண்டா, அறியாத வயசுல, நான் நடக்குற பாதைல முள்ளைப் போட்டு, என் கால ரத்தக்களரி ஆக்குவ… இப்போ எவளோ ஒருத்தி காலை பிடிச்சுக்கிட்டு இருக்க.” என்று கலாய்க்க,

அவன் மனது “அவள் யாரோ இல்லை என்… என்” என்றே குழம்பி நின்றது.

அவள் அவனை மேலும் கிண்டலடித்து விட்டு  சற்று தள்ளி இருந்த அந்த பெரிய வீட்டின் வாட்ச்மேனிடம் மினிஸ்டரை பார்க்க வேண்டும் என்று சொல்ல, அவர் “வீட்டு ஆட்கள் தவிர வேறு யாரையும் இந்த வாசல் வழியே அனுமதிப்பதில்லை மேடம்” என்றார்.

அவள் விசிட்டிங் கார்ட் காட்டியும் உள்ளே விடவே இல்லை. அவள் துருவை பார்த்து நீ ஏதாவது பேசேன் என்று பார்க்க,

“நம்ம முன் வாசல் வழியாவே போலாம் உதி… எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை” என்றான் குறுஞ்சிரிப்புடன்.

“உனக்கு என்ன பிரச்சனை. எனக்கு தான் பிரச்சனை” என்று நொந்து கொண்டு, மீண்டும் அந்த வாட்ச்மேனிடம் அனுமதி கேட்டாள்.

அப்பொழுது இவர்களை நோக்கி வந்த விது நடந்ததை அறிய, அனுவும் அவன் பின்னே வந்து, வாட்ச்மேனிடம் “என்ன பிரச்சனை” என்று கேட்ட்டாள்.

அவன், “மேடம்… இவங்க மினிஸ்டர பார்க்கணுமாம். இந்த வழியா போக கூடாதுன்னு சொன்னா கேட்க மாட்டுறாங்க. சார் வேற மீட்டிங்ல இருக்காரு” என்று சொல்ல,

அவள் “இவங்க எனக்கு தெரிஞ்சவங்க தான். அப்பா கிட்ட சொல்லி இங்க வரச்சொல்லுங்க” என்று மூவரையும் பார்த்து உள்ளே அழைத்தாள்.

அவர்கள்  புரியாமல் பார்க்க, “நீங்க பார்க்க வந்த மினிஸ்டர் என் அப்பா தான். இந்த வழியா வேற யாரையும் அலோவ் பண்ணகூடாதுனு சொல்லுவாரு. பட் நீங்க எனக்கு தெரிஞ்சவங்கன்னு சொல்றேன் வாங்க” என்று என்னம்மோ அவர்களுக்கு உதவி செய்யும் ரேஞ்சில் அவர்களை உள்ளே கூட்டிச்செல்ல,

விது தான் “இவள் மினிஸ்டர் பொண்ணா. இவ்வளவு நேரம் நம்ம அரசியல்வாதி பொண்ணுகூடயா குப்பை கொட்டிக்கிட்டு இருந்தோம்…” என்று மிரண்டு விட்டு,

அவள் இதை மட்டும் ஏன் என்னிடம் முதலிலேயே சொல்லவில்லை. தன்னை நம்பவில்லையோ என்று நினைத்தவன், நினைப்பை அழித்து விட்டு, அவள் அழைத்து சென்ற அறையில் சென்று அமர,

உத்ரா, “விது… பெரிய ஆளுடா நீ. மினிஸ்டர் பொண்ணையே உனக்கு அடிமையா வச்சுருக்க பெருமை உன்னையவே சேரும்” என்றாள் நக்கலாக.

அவன் அவளை முறைத்து, “சத்தமா சொல்லாத உதி. நானே ஷாக்ல இருக்கேன்” என்று புலம்ப, அப்போது குரலை கணைத்துக் கொண்டு, பட்டு வேஷ்டி சட்டையும், தோளில் துண்டுமாய், விறைப்பாக நடந்து வந்த கரண் பிரகாஷ், துருவைக் கண்டு சற்று திகைத்து, பின், இயல்பாகி, அவர்கள் முன்னே அமர்ந்து, “சொல்லுங்க என்ன விஷயம்.” என்று கேட்டார்.

அப்பொழுது அனு, அவர்கள் மூவருக்கும் ஸ்னேக்ஸ்ஸும், டீயும் கொண்டு வந்து கொடுக்க, விது,

“ஐயோ இவள் வேற நாங்க எதுக்கு வந்துருக்கோம்னே தெரியாம விருந்தோம்பல் பண்ணுறாளே” என்று புலம்பி விட்டு, அதனை எடுக்கப் போக,

உத்ரா அவன் கையை தடுத்து எதுவும் சாப்பிடாதே என்று கண்ணை காட்டினாள்.

அனு, அந்த டீயவே பார்த்து விதுவையும் பார்க்க, அவனுக்கு தான் தர்ம சங்கடமாக இருந்தது.

உதி “அனுவுக்காக” என்று சொல்ல வர,

அவள் “எதிரி வீட்டில கை நனைக்க கூடாது” என்று முணுமுணுக்க அவன் “அப்போ காலை நனைக்கலாமா.” என்று கடுப்புடன் கூறினான்.

உத்ரா தான் “நீ என்ன உன் மாமனார் வீட்டுக்கா வந்துருக்க? பஜ்ஜி சொஜ்ஜிலாம் சாப்பிட… நம்ம சண்டை செய்ய வந்துருக்கோம்” என்று முறைத்தாள்.

கரண் அனுவை இவர்களை இப்படி உள்ளே விட்டு விட்டாயே அதுவும், அவர் குடும்பத்தினர் உபயோகிக்கும் இடத்திற்கு அழைத்து வந்து உபசரிப்பு வேறு என  முறைத்து விட்டு, “உள்ள போ” என்று சொல்ல,

அவள் “அப்பா எனக்கு இவங்களை” என்று பேச வர, அவர் மேலும் அவளை அதட்டி உள்ளே அனுப்பினார்.

அவள் முகத்தை சுருக்கி கொண்டு உள்ளே செல்ல, விதுவுக்கு தான் கோபமாக வந்தது.

மீண்டும் கரண், “எதுக்கு இங்க வந்துருக்கீங்க” என்று கேட்க, துருவ் “அந்த பொண்ணை எங்க வச்சுருக்க” என்று கேட்டதும், அவர் அசட்டையாக “எந்த பொண்ணு” என்று வினவினார்.

துருவ், “ம்ம் என்னை கொலை பண்ண சொல்லி, ஒருத்தனோட பொண்டாட்டியை கடத்தி அடைச்சு வச்சுருக்கியே அந்த பொண்ணு தான்” என்று சொல்ல, அவர் விருட்டென்று எழுந்து,

“இங்க பாரு தேவை இல்லாம பேசிகிட்டு இருக்காத, மூணு பேரும் உள்ள வந்ததை யாருமே பார்க்கல. நான் பாட்டுக்கு உங்களை போட்டு தள்ளிட்டு இங்கயே புதைச்சுருவேன் அப்பறம் உங்க எலும்பு துண்டு கூட யாருக்கும் கிடைக்காது.” என்று மிரட்ட,

துருவ் விழியை உயர்த்தி, “முதல்ல உன் எலும்பு துண்டு கிடைக்குதான்னு பாப்போம்” என்று சொல்லி, அவன் கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் அருகில் சென்று அவன் வயிற்றில் துப்பாக்கியை வைத்து அழுத்தினான்.

அதில் கரண், “என்ன உள்ள வந்து ரௌடிசம் பண்ணுறீங்களா. நான் நினைச்சா, இந்த நாட்டுலயே நீங்க இருக்க முடியாது.” என்று கத்த,

உத்ரா, அவர் வாயில் பிளாஸ்டரை ஓட்டினாள்.

அவர் ம்ம் ம்ம் என்று கத்த, கத்த யாருக்குமே கேட்கவில்லை. அப்பொழுது எதேச்சையாக அனு அங்கு வந்தவள் நடந்ததை கண்டு அதிர்ந்து நிற்க, உத்ரா, அவளை இழுத்து, விது அருகில் அமர வைத்து, “இங்கயே உட்காந்துருக்க. உன் சத்தம் வெளிய வந்துச்சு” என்று மிரட்டியதில் அவள் அரண்டு விதுவை பாவமாக பார்க்க,

அவன் “இதுங்களுக்கு போய் உன்னை யாரு ஹெல்ப் பண்ண சொன்னது” என்று தலையில் அடித்தான்.

அங்கு நடப்பதை யாரும் பார்க்காத படிக்கு தடுப்பு போட்டிருக்க கட்சி ஆட்களுக்கும் ஒன்றும் தெரியவில்லை.

அப்பொழுது என்று பார்த்து வீட்டினரும் யாரும் வீட்டில் இல்லை.

துருவ், “சொல்லு அந்த பொண்ணை எங்க வச்சுருக்க… ம்ம்” என்று கேட்க, அவர், “என்கிட்டே மோதாத… நான் சாதாரண ஆள் இல்ல.” என்று சைகையிலேயே அவனை மிரட்ட,

உத்ரா, அங்கிருந்த கத்தியை எடுத்து, அவன் கண்ணருகில் கொண்டு சென்று, “இப்போ நீ சொல்லல. உன் கண்ணை நோண்டி வெளிய எடுத்துருவேன்” என்றதில்,

அனு “ஐயோ அப்ப்பா” என்று கத்த, விது அவள் வாயை பொத்தினான்.

கரண் அசராமல் அசையாமல் அமர்ந்திருக்க, துருவ் “ம்ம் சோ நீ சொல்லமாட்ட… அப்படித்தான.” என்றவன், அர்ஜுனுக்கு போன் செய்து, சொன்ன வேலையை முடித்தாகி விட்டதா என்று கேட்க, அவன் பதில் சொல்லியதும், கரணிற்கு லைவாக அவனின் சொந்தமான பேக்டரி இடிந்து விழுந்ததை காட்டினான்.

அதில் அவர் கண்கள் கோபத்தில் ரத்தமென சிவக்க, அவன் அடுத்து அஜய்க்கு போன் செய்து விவரம் கேட்டான்.

அஜய், “மினிஸ்டரோட கீப் இங்க சேஃப் துருவ்” என்றதும், அவன் அவருக்கு இன்னொரு வீடியோவில், அந்த கரணின் ஊழல் சம்பந்தப்பட்ட வீடியோவை காட்டி , மேலும், அவரின் கீப்பின் வீட்டில், அவர் பதுக்கி இருந்த பணமும், கணக்கில் வராத அவரின் குற்றங்களும் துருவின் விரல் நுனியில் இருந்தது.

உத்ரா தான் நடப்பதை வாயை பிளந்து கொண்டு பார்த்தாள். இவ்வளவு வேலையை எப்படி பார்த்தான் நமக்கு கூட தெரியாம.. என்று வியக்க, கரணிற்கு அஸ்திவாரமே ஆட்டம் கண்டது போல் இருந்தது.

துருவ் “இப்போவே இதெல்லாம் சேனல்க்கு அனுப்புனா என்ன ஆகும் தெரியுமா. உன்னை பதிவியில இருந்து தூக்கி, அர்ரெஸ்ட் பண்ணி, உன் சொத்தை எல்லாம் பிடுங்கி… ப்ச்… ரொம்ப கஷ்டம்ல” என்று போலியாக பரிதாபப்பட,

அவர் கண்ணில் இப்போது தான் பயமே தெரிந்தது.

பின், “நான் சொல்கிறேன்” என்று தலையாட்ட, உத்ரா கத்தக்கூடாது என்று மிரட்டலாய் சொல்லிவிட்டு,  வாயில் இருந்து பிளாஸ்திரியை எடுக்க, அவர் அந்த பெண்ணை அடைத்து வைத்திருக்கும் இடத்தை சொன்னதும், துருவ் உடனடியாக செயல் பட்டான்.

கரண்  “உன்னை சும்மா விட மாட்டேன் துருவ். என்கிட்டயே மோதிட்டீல”  என்று மிரட்டினார்.

அதில் அனு தான் தன் அப்பாவா இப்படி என்று சிலையாகி உறைந்திருந்தவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. விது அவள் நிலையை உணர்ந்து அவள் கையை ஆதரவாக பிடித்து கொண்டான்.

வெகு நேரம் ஆனதே, இந்த நேரத்தில் கட்சி அலுவலகம் செல்ல வேண்டுமே என்று நினைத்து வேறு வழியில்லாமல், கட்சி ஆட்கள் உள்ளே வர, துருவ் துப்பாக்கியை எடுத்து உள்ளே வைத்து விட்டு, அவரிடம், “அப்போ மினிஸ்டர் சார். என்கிட்ட எல்லாமே பத்திரமா இருக்கு. நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க நான் பாத்துக்குறேன்” என்று நக்கலாகக் கூற, அவரால் பதில் பேசவே முடியவில்லை அங்கு நடந்ததை யாரிடமும் சொல்லவும் முடியவில்லை.

அந்த பெண்ணை காப்பாற்றியாயிற்று என்று அர்ஜுன் சொல்ல, மூவரும் வெளியில் வந்தனர்.

உதிதான், “சே, மினிஸ்டர் வீட்டுக்குள்ளேயே புகுந்து விளையாடியாச்சு… செம்ம மாஸ் செல்லம் நீ” என்று துருவின் கன்னத்தை பிடித்து கிள்ள, அவன் சிரித்துக் கொண்டான்.

விது அனுவையே திரும்பி திரும்பி பார்த்து கொண்டு வந்தான். அவள் அழுவதை அவனால் தாங்கவே முடியவில்லை.

உண்மையில் அவள் வெகுளி. அனைவரையும் எளிதில் நம்பி விடுகிறாள் என்று இந்த சில காலத்திலேயே தெரிந்து கொண்டான்.

இப்படியாக, நாட்கள் செல்ல, கரண் துருவின் கண் பார்வையிலே தான் இருந்தார்.

உத்ரா குடும்பத்தினர், துருவை டிஸ்சார்ஜ் செய்து, அவன் வீட்டிற்கு செல்கிறேன் என்றதை எல்லாம் காதில் வாங்காமல் அவர்கள் வீட்டிற்கே அழைத்து சென்றது.

உத்ரா ஒரு புறமும், வீட்டினர் ஒரு புறமும் என்று அவனை அன்பில் குளிப்பாட்டினர் அனைவரும்.

குடும்பம், பிணைப்பு, சொந்தம் என்ற வார்த்தைக்கு எல்லாம் அர்த்தம் இப்பொழுது தான் அவனுக்கு புரிந்தது. அந்த குடும்பத்துடன் மிகவும் ஒன்றி விட்டான்.

எந்த அளவுக்கு என்றால்… காலையில் கருணா வீட்டிற்கு சென்று அங்கு அவருடன்  ஜாகிங் போவதில் இருந்து, அன்னத்திடம் ஏலக்காய் டீயை வாங்கி குடித்து அவரிடம் வம்பு வளர்ப்பதில் ஆரம்பித்து, மீண்டும் அர்ஜுன் வீட்டிற்கு வந்து, கர்ணனுடன் அரசியல், தொழில் என்று அலசுவதில் பயணித்து, காலை உணவின் போது, லக்ஷ்மியை ஐஸ் வைத்து, அவரை சீண்டிக்கொண்டே இருப்பதில் முடியும்.

அந்த ஒரு மாத காலத்தில் அந்த நாலு பெரியவர்களுக்கும் அவன் செல்லப் பிள்ளையாகி போனான்.

இதில், சிறியவர்களுக்கும் அவன் சொல்வது தான் வேதவாக்காக இருக்க, துருவ்க்கு தான் இந்த குடும்ப அமைப்பும், இந்த பாசங்களும் புதுமையாய் நிறைவாய் இருந்தது.

அதே நேரம் மென்மையாய் உத்ராவிடம் காதலை காட்டவும் தவறாதவன், அவள் அன்று பேசியதை பற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை.

உத்ராவிற்கு, அவன் அமைதி என்னவோ செய்ய, அவன் ஏதாவது பேசுவான்… மறுபடியும் திருமணம் பற்றி பேசினால் ஒப்புக்கொள்ளலாம். என்ன ஆனாலும் அவன் என்னுடன்  இருந்தால் போதும் என்ற நிலைக்கு வந்து அவன் பின்னேயே சுற்றி கொண்டிருந்தாள். ஆனால் அவன் தான், திருமணத்தைப் பற்றி மறந்தும் கூட பேசவில்லை.

கருணா உதியிடம் ஒரு மாப்பிள்ளையின் புகைப்படத்தை காட்டி, அவனை பிடித்திருக்கிறதா என்று கேட்ட பொழுதும், அமைதி தான் காத்தான்.

உத்ரா, துருவை ஒரு பார்வை பார்த்து விட்டு, போட்டோவை பார்க்காமல் “எனக்கு வேலை இருக்கு பெரியப்பா அப்பறமா பார்க்குறேன்” என்று அங்கிருந்து நகன்று விட்டாள். இதை பெரியவர்களும் கவனித்து கொண்டு தான் இருந்தனர்.

மற்ற ஜோடிகளுடைய நிலைமையோ வெகு மோசம்.

மீரா அர்ஜுனை கண்டுகொள்ளாமல் தவிக்க விட, சுஜி, அவள் அப்பாவை முதலில் ஒப்புக்கொள்ள வை.. அப்பறம் நம்ம லவ் பண்ணலாம் என்று முறுக்கிக் கொண்டு இருக்க, விது தான், அனுவைக் காண முடியாமல் உள்ளுக்குள் உடைந்தான்.

அன்று அவளை வீட்டில் பார்த்ததோடு சரி அதன் பிறகு அவள் மருத்துவமனைக்கும் வரவில்லை. என்ன இருந்தாலும் தன் தங்கையின் எதிரி குடும்பத்துப் பெண்ணிடம் எப்படி சென்று பேசுவது என்றும், இதனால், உத்ராவுக்கும் மற்றவர்களுக்கும் தான் பாதிப்பு வரும் என்றும் அவனுள் எழுந்த மெல்லிய காதலை அவனுக்குள் புதைத்துக் கொண்டான்.

ஒரு நாள் இரவு, வழக்கம் போல, வீட்டிற்கு தெரியாமல், நைட் ஷோ படத்திற்கு போக, அஜய், விதுன் உத்ரா மூவரும் வீட்டின் சுவர் ஏறி குதிக்க, வெளியில் துருவ் இவர்களை திமிராக பார்த்து கொண்டு நின்றிருந்தான்.

இன்று தலைவர் படம் ரிலீஸ் என்று மூவரும் காலையில் இருந்து பேசிக்கொண்டிருக்கையில் இப்படி ஏதாவது செய்வார்கள் என்று தெரிந்து கொண்டவன், முன்னேற்பாடாக அங்கு வந்து நின்றான்.

கையில் போனுடன் வீட்டின் பெரியவர்களுக்கு போன் செய்ய போக, அவர்கள் அவனிடம் கெஞ்சி கூத்தாடி, மீண்டும் வீட்டினுள்ளேயே சென்றனர்.

உத்ரா, முகத்தை சுருக்கிக் கொண்டு, அவனுக்கு பழிப்பு காட்ட, அவன் அவள் கையைப் பிடித்து முறுக்கி, “இனிமே ஏதாவது சுவத்துல ஏறி குதிச்சுக்கிட்டு இருந்த, அப்பறம் அந்த சுவத்துலயே உன்னை கயறு கட்டி தலைகீழா தொங்க விட்ருவேன்…” என்று மிரட்ட,

அவள் “நீ ரொம்ப ஓவரா பண்ற துருவ். உனக்கு எங்க பெரியப்பாவே பரவாயில்லை…” என்று பாவமாக சொல்ல, அவன் அவளின் தோள் மேல் கை போட்டு, “உனக்கு படம் தான பார்க்கணும். வா” என்று அந்த வீட்டில் இருந்த ஹாம் தியேட்டரிலேயே மூவருக்கும் படத்தையும் போட்டு விட்டு, வெளியில் வந்தான்.

பால்கனியில் அர்ஜுன், வானத்தை வெறித்து கொண்டு நின்றிருக்க, துருவ் “இப்படியே யோசிச்சிகிட்டே இருந்தா எப்படி… மீராகிட்ட ஏதாவது பேசு” என்று சொல்ல,

அவன் “ப்ச் என்ன பேசுறதுன்னு நிஜமா எனக்கு தெரியல துருவ்…” என்றான் சலிப்பாக.

“வேற ஏதாவது ஜோசியர் கிட்ட செகண்ட் ஒபினியன் கேட்கலாமா…?” என்று  வினவிட,

அர்ஜுன் மறுப்பாய் தலையாட்டி, “அப்படி அவரு எதுவும் இல்லைன்னு சொல்லி அப்பறம் அவள் என்னை கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கு விருப்பம் இல்லை…” என்று தோளைக் குலுக்க, அப்படியே அவர்கள் யோசித்து கொண்டிருக்க, படத்தில் கவனம் செலுத்த முடியாமல் வெவ்வேறு மனநிலையில் பாதியில் வந்த மூவரும், “என்ன இங்க மாநாடு” என்று கேட்க, நடந்ததை அறிந்ததும் அவர்களும் என்ன செய்வதென்று யோசித்தனர்.

சிறிது நேரத்தில், உத்ரா “பங்கு ஒரு ஐடியா” என்று கத்த, அர்ஜுன், “உன்னை கொன்னுடுவேன்… இப்படித்தான் அன்னைக்கு ஐடியா சொல்லி, அனு கூட க்ளோஸ் ஆ இருக்க சொன்ன. அவள் என்னன்னா அவளையே கல்யாணம் பண்ணிக்கன்னு அசால்ட்டா சொல்லிட்டா” என்று முறைக்க,

அவள் அசடு வழிந்து விட்டு “இந்த ஐடியா கண்டிப்பா ஒர்க் அவுட் ஆகும்” என்று சொல்ல, அர்ஜுனுக்கும் இதான் சரி என்று தோன்றியது.

இதனை நாளையே செயல்படுத்த வேண்டும் என்று நினைத்து, “நாளைக்கு நீயே என்னை கல்யாணம் பண்ணிக்க அர்ஜுன்னு சொல்ல வைக்கிறேன் டி” என்று சபதம் எடுத்து கொண்டான்.

அஜய், “இந்த சுஜி அப்பாவை எப்படி சமாளிக்கிறதுன்னே தெரியல…” என்று புலம்ப,

துருவ் “நீ அவர்கிட்ட பேசி பாரு இல்லைன்னா பொண்ணை தூக்கிடலாம்” என்று கேலி செய்ய, அஜய், “அவர் பொண்ணை தூக்குறதுல எனக்கு எந்த பிரச்னையும் இல்ல. ஆனால் அது வீட்டுக்கு தெரிஞ்சுச்சு அவங்க என்னை தூக்கிருவாங்க” என்று பம்ம,

உத்ரா “பேசாம, உன் மாமனார் கால்ல சாஷ்டாங்கமா விழுந்துடு டா.” என்று சொல்ல, அஜய் அவளை முறைத்தான்.

அர்ஜுன், “என்ன உதி இன்னைக்கு உனக்கு ஐடியா மழையா பொழியுது. அஜய் நீ உதி சொன்ன மாதிரி பண்ணிடு” என்று ஊக்குவிக்க, அஜய் மிரண்டு, “டேய் அதுக்காக அவரு கால்ல போய் விழுக சொல்றியா..” என்றான்.

உதி, “நியாயமா நீ பண்ணுன வேலைக்கு சுஜி உன்னை அவள் கால்ல விழுக வச்சிருக்கணும்…” என்று முறைக்க,

அஜய் சிறிதாய் வெட்கப்பட்டுக் கொண்டு, “அப்டினா நான் உடனே விழுந்துடுவேனே” என்று நெளிய, அர்ஜுன், “பங்கு, உன் மாமனார் கால்ல நான் கூட விழுகுறேன் ஆனால் இந்த வெட்கம் மட்டும் படாதடா சகிக்கல…” என்று கிண்டலடித்தான்.

உதி “ம்ம் லவரோட கால்ல விழுகுறவன் அவள் அப்பா கால்ளையும் போய் விழு. உனக்கு பச்சை கொடியாவது காட்டுவாரு..” என்று நக்கலடிக்க, அவன் பாவமாக “பண்றேன் பண்ணி தொலைக்கிறேன்” என்று தலையில் அடித்து கொண்டு உள்ளே சென்றான்.

அர்ஜுனும் மீரா நினைவில் உள்ளே  செல்ல, நடக்கும் எதையுமே கவனியாமல், அர்ஜுன் சொன்ன அனு என்ற ஒரு பெயரிலேயே மொத்த அணுவிலும் நிறைந்திருந்தவளின் நினைவில் சிக்கி தவித்தான் விதுன்.

உத்ரா, இவன் ஏன் பேயறைஞ்ச மாதிரி நிற்கிறான்… என்று அவனை உலுக்க, தன்னிலைக்கு வந்தவன், வீட்டிற்கு கிளம்புகிறேன் என்று சொல்ல, அவள் “இந்த நேரத்துல எதுக்குடா போற… காலைல போ” என்று சொல்லியும் காதில் வாங்காமல் அங்கிருந்து சென்று விட்டான்.

உதி என்னாச்சு இவனுக்கு என்று புரியாமல் துருவை பார்க்க, துருவ் அமைதியாய் அவன் சென்ற திசையை பார்த்தான்.
 
மறுநாள் காலையிலேயே, கருணா சிறியவர்களை அழைத்து.. திருமணத்தை பற்றிப் பேசி, திட்ட ஆரம்பித்தார்.

கர்ணனும் “உதி… உன் கல்யாணத்தை பார்க்கணும்னு எங்களுக்கும் ஆசை இருக்காதா. ஏன் பிடிவாதம் பிடிக்கிற. நீ தான் இப்படி பண்றன்னு பார்த்தா இவனுங்களும்  அதே தான் பன்றாங்க.” என்க,

உதி துருவைப் பார்த்து கொண்டே, “அது கொஞ்ச நாள் போகட்டும் மாமா” என்றாள்.

கருணா “இப்படி தான் நீ ஒரு வருஷமா சொல்லிக்கிட்டு இருக்க. நான் மாப்பிள்ளை பார்த்துட்டேன். உனக்கு அடுத்த மாசம் கல்யாணம்” என்று குண்டை தூக்கி போட, நால்வரும் அதிர்ந்து விட்டனர்.

துருவை முறைத்து, “இதுக்காவது ஷாக் ஆகுறானா பாரேன்… கல்நெஞ்சக்காரன்” என்று புலம்பி அடுத்து என்ன சொல்லலாம் என்று யோசித்து கொண்டிருந்தவள் திடும் என,

“ஐயோ எனக்கு கல்யாணம் ஆனா விது செத்துருவான்” என்று சொல்ல, இப்போது அதிர்வது மொத்த குடும்பத்தின் முறையானது.

இதில் விது தான், “அடிப்பாவி… என்னை எதுக்குடி கோர்த்து விடற…” என்று பாவமாக பார்க்க,

லட்சுமி, “உதி என்ன பேசுற” என்று அதட்ட, அவள் “நான் உண்மைய தான் சொல்றேன் அத்தை” என்றாள்.

 மற்ற மூவரையும் பார்த்து, “என்ன பங்கு அமைதியா இருக்கீங்க. நம்ம ப்ராமிஸ் பத்தி சொல்லுங்க” என்று சொல்ல,

அஜய் “இவள் எந்த ப்ராமிஸ் பத்திடா பேசுறா” என்று கேட்க, அர்ஜுன், “நம்ம ஒரு நாளைக்கு பத்து ப்ராமிஸ் பண்ணுவோம். அதுல ஒன்னு கூட நம்ம செஞ்சது கிடையாது. அதுல இவள் எதை சொல்றான்னு தெரியலையே…” என்று புலம்ப,

துருவ் “ஃபிராடு ஏதோ பிளான் பண்ணிட்டா…” என்று சிறு சிரிப்புடன், சுவாரசியமாக நடப்பதை வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தான்.

உத்ரா விடாமல், “அதான் பங்கு சின்ன வயசுல, விது, மொட்டை, கல்யாணம், ப்ராமிஸ்” என்று பிய்த்து பிய்த்து பேச,

விது, “பங்கு… என்ன பங்கு இவள்… ஏதோ ஒரு வார்த்தை ஒரு லட்சம் ப்ரோக்ராம் மாதிரி ஒவ்வொரு வார்த்தையா பேசுறா. உங்களுக்கு ஏதாவது புரியுது?” என்று கேட்க, அர்ஜுனும் அஜயும் ஒரு எழவும் புரியல என்று தலையாட்டினர்.

பொறுமையை இழந்த பெரியவர்கள் விவரமாக கூற சொல்ல, உதி தலையை மேலே பார்த்து,

“அப்போ எனக்கும் அஜய்க்கும் ஒரு 3 வயசு, விதுக்கும் அர்ஜூனுக்கும் 5 வயசு. எனக்கு மொட்டை போடலாம்னு எல்லாரும் பழனி போயிருந்தோம் உங்களுக்கு நியாபகம் இருக்கா.” என்று கேட்க,

விது அவளிடம் “மூணு வருஷத்துக்கு முன்னாடி நடந்ததே உனக்கு ஞாபகம் இல்லை. இதுல மூணு வயசுல நடந்ததுலாம் உனக்கு நியாபகம் இருக்காக்கும்” என்று நக்கலடிக்க,

உதி “மூடிக்கிட்டு கதையை கேளு…” என்று பல்லைக் கடித்து கொண்டு கூறிவிட்டு,

“நான் எதுல விட்டேன்…” என்று கேள்வியாய் கேட்க, துருவ் “ம்ம் பழனில…” என்று எடுத்து கொடுத்தான்.

அவள் “எஸ், அப்போ எனக்கு மொட்டை அடிச்சதை பார்த்து, என் அண்ணன்… அதான் விது ஒரே அழுகை.” என்று கண்ணில் விரலை வைத்து நிற்க, அனைவரும் அவளை புரியாமல் பார்த்தனர்.

“அவன் அழுகறதை பார்த்து அர்ஜுன் தேம்பி தேம்பி அழுதான். நாங்கல்லாம் அழுகுறதை பார்த்து அஜய்…” என்று சிறிய இடைவெளி  விட்டு, “உருண்டு பிரண்டு அழுதான்…” என்று சோகமான குரலில் கூற, துருவால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

பின், உத்ராவே “அப்போ விதுன் என்ன பண்ணுனான்னு உங்களுக்குலாம் நியாபகம் இருக்கா” என்று கேட்க, பெரியவர்கள் இல்லை என்று தலையாட்டினர்.

மனதினுள் “ஹப்பா அதான் எனக்கு வேணும்…” என்று நினைத்துக் கொண்டு,

“விது வேகமா போய் மொட்டை அடிக்கிறவர்கிட்ட இருந்து கத்தி வாங்கி, அவனே அவன் தலையை மொட்டை அடிச்சிகிட்டான். அது போக, அர்ஜூனுக்கும் அஜய்கும் சேர்ந்து மொட்டை அடிச்சு விட்டான். எதுக்குன்னு சொல்லுங்க..” என்று கேட்க, பெரியவர்கள் ஒன்றும் புரியாமல் “எதுக்கு” என்று கேட்டனர்.

“எனக்கு ஒரு நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் அதுல அவங்க மூணு பேருக்குமே பங்கு இருக்குன்னு காட்டத்தான்…

அப்போ தான், அந்த சம்பவம் நடந்துச்சு. இதுவும் சரித்திரத்தில பொறிக்க பட வேண்டிய சம்பவம் தான்” என்று வராத கண்ணீரைத் துடைத்து கொண்டு, தீர்க்கமாக நின்று, சும்மா இருந்த அர்ஜுனிடம்

“என்னை தடுக்காத அர்ஜுன். நான் எல்லாத்தையும் சொல்லணும் என்னை பேச விடுங்க” என்று அவள் பாட்டிற்கு பேச, அர்ஜுன் திருதிருவென விழித்து, “நான் ஒண்ணுமே பண்ணலையே பங்கு” என்று தலையை சொரிந்தான்.

உத்ரா, “அன்னைக்கு… விதுன் ஒரு முடிவோட, எங்க மூணு பேரையும் சுத்தி நிற்க வச்சு, நல்லதோ கெட்டதோ அது நம்ம நாலு பேருக்கும் சேர்த்து தான் நடக்கணும்.

வளர்ந்ததுக்கு அப்பறம் நம்ம கல்யாணம் கூட ஒரே நாள்ல தான் நடக்கணும் அப்டின்னு அவனோட மொட்டை தலையில அடிச்சு சத்தியம் வாங்கிட்டான். இப்போ சொல்லுங்க, அந்த சத்தியத்தை காப்பாத்தாம நான் கல்யாணம் பண்ணிகிட்டேன்னா அப்பறம் என் அண்ணன் என் அண்ணன்…”  என்று வேண்டும் என்றே நடுங்கிய குரலில் அதற்கு மேல் பேச முடியாதவாறு நிறுத்த, மற்ற மூவரும் தான்,

“அடிப்பதாகத்தி… இப்படி எங்களையும் கோர்த்து விட்டுட்டியே” என்று பேந்த பேந்த முழித்து கொண்டு நிற்க, துருவ் வாய் விட்டு சிரித்து விட்டான்.

உறைதல் தொடரும்…
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
43
+1
9
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *

    1 Comment

    1. நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல். பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க முடிந்தது.