சமுத்ரா வீட்டிலிருந்து கிளம்பிய ஷாத்விக்கிற்கு அந்நேரத்தில் எங்கு செல்வதென்று தெரியவில்லை.
தற்சமயம் யாரின் உதவியை நாடுவதென்று யோசித்தவனுக்கு பவனின் நினைவு வந்தது.
ஏதும் யோசிக்காது பவனுக்கு அழைத்தான் ஷாத்விக்.
பவன் அழைப்பை ஏற்றதும்
“டேய் கொஞ்ச நாளைக்கு நான் இந்த ஊருல தங்குற மாதிரி ஏதாவது ரூம் கெடைக்குமா?” என்று கேட்க
“அதான் சமுத்ரா வீடு இருக்கே?” என்று அவன் நடந்தது தெரியாமல் பேச
“டேய் கேட்டதுக்கு பதில் சொல்லுடா. ரூம் இருக்குமா இல்லையா?” என்று ஷாத்விக் கேட்க
“ரூம்னா கொஞ்சம் விசாரிச்சு பார்க்கனும். ஆனா இப்போ வீட்டுல நான் மட்டும் தான் இருக்கேன். அம்மா ஊருக்கு போயிட்டாங்க. இப்போதைக்கு வரமாட்டாங்க. உனக்கு ஓகேனா நீ இங்க தங்கிக்கலாம்.” என்று பவன் சொல்ல
“சரி அப்போ நான் அங்கேயே வரேன். ஆனா நான் அங்க தங்குறது யாருக்கும் தெரியக்கூடாது.” என்று கூற பவனும் சம்மதிக்க ஷாத்விக் நேரே கிளம்பி சென்றான்.
கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்த பவன் கை நிறைய பைகளுடன் நின்றிருந்த ஷாத்விக்கை பார்த்தவன்
“என்னடா இதெல்லாம்?” என்று கேட்க
“கேள்வி கேட்காமல் முதல்ல கையிலுள்ளதை வாங்கு.” என்று தன் ஒரு கையிலிருந்த பொதியை அவன் முன் நீட்ட பவனும் வாங்கிக்கொண்டு வழி விட ஷாத்விக் உள்ளே சென்றான்.
அவனை தொடர்ந்து கதவை பூட்டிவிட்டு பவனும் அவனை பின்தொடர்ந்தான்.
“டேய் எந்த ரூம்டா?” என்று ஷாத்விக் கேட்க அவனுக்காக ஒதுக்கியிருந்த அறையை காட்டினான் பவன்.
தன் உடைமைகளை வைத்துவிட்டு வந்தவனிடம்
“என்ன திடீர்னு?” என்று பவன் கேட்க அவன் தோளை தட்டிய ஷாத்விக்
“க்ரேட் எஸ்கேப்டா.” என்று கூற பவனுக்கோ எதுவும் புரியவில்லை.
“என்ன சொல்லுற?” என்று பவன் கேட்க
“நீ அதிஷ்டசாலிடா. இல்லைனா உனக்கு போட்ட ஸ்கெட்சுல நான் சிக்கியிருப்பேனா?” என்று பொடிவைத்து தன் மனக்குறையை கொட்டிக்கொண்டிருந்தவனின் வார்த்தைகளின் ஒரு அர்த்தத்தை கூட பவனால் புரிந்துகொள்ளமுடியவில்லை.
“ஷாத்விக் நீ பேசுற எதுவுமே எனக்கு புரியல.” என்று பவனோ தலையை சொறிய
“அது ஒரு பெரிய கதடா. நடுவுல ஒரு பக்கத்த காணோம்ங்கிற மாதிரி நடுவுல என்ன நடந்துச்சு இனி என்ன நடக்க போகுதுனு ஒன்னுமே தெரியல.”என்று ஷாத்விக் சொல்ல பவனுக்கு தான் அடியும் புரியவில்லை நுனியும் தெரியவில்லை.
“சமுத்ரா ஏதும் சொன்னாளா?” என்று பவனும் தன் முயற்சியை கைவிடாமல் கேட்க
“அவளுக்கு என்னடா? நிறைய சொல்லுவா. அவளுக்கு தோனுறத செய்வா.” என்று அவன் மீண்டும் அவ்வாறே பேச பவனுக்கு தான் மண்டை காய்ந்தது.
“உன்கிட்ட எதுவும் கேட்கலடா. சாப்பிட்டியா?சாப்பிட ஏதாவது ஆர்டர் போடவா?” என்று பவன் கேட்க
“அதெல்லாம் வேணாம். நான் வரும் போதே கையோடு வாங்கிட்டு வந்துட்டேன்.” என்று சொன்ன ஷாத்விக் தான் வாங்கி வந்த பொதியை பிரித்து உணவை வெளியே எடுத்துவைத்தான்.
இருவரும் உணவை முடித்ததும் பவன் மீண்டும் விசாரிக்க ஆரம்பித்தான்.
“என்னாச்சு ஷாத்விக்? உனக்கும் சமுத்ராவுக்கும் என்ன பிரச்சினை?” என்று விசாரிக்க நடந்த அனைத்தையும் சொன்னான் ஷாத்விக்.
“இப்போ புதுசா என்ன பிரச்சினை? எதுனால இப்படி நடந்துக்கிறானு எதுவுமே புரியல. இதுக்கு மேல என்ன செய்றதுனும் எனக்கு தெரியல.” என்று ஷாத்விக் தன் மனக்குமறல் அனைத்தையும் கொட்ட பவனுக்கும் அவன் நிலைமை கவலையே கொடுத்தது.
“நான் வேணும்னா சமுத்ரா கிட்ட பேசி பார்க்கட்டுமா?” என்று பவன் கேட்க
“என்னன்னு போய் பேசுவ? அவ என்ன விஷயம்னு சொன்னா தானே நாமளும் ஏதாவது செய்ய முடியும்? அவ தான் யாருகிட்டயும் வாய் தொறக்கவே மாட்டேங்கிறாளே.” என்று ஷாத்வித் சலித்துக்கொள்ள
“அதுக்காக இப்படி கிளம்பி வந்துட்டா எல்லாம் சரியாகிடுமா? யாராவது ஒருத்தர் பேசுனா தானே ஏதாவது செய்ய முடியும்?” என்று பவன் கேட்க
“இல்லை. இனி நான் அவ கூட பேசுறதா இல்லை. அவளுக்கு எப்போ அவ செய்றது தப்புன்னு புரியிதோ அப்போ பேசுறேன். அதுவரைக்கும் அவ இஷ்டப்படி என்ன செய்யனும்னு நினைக்கிறாளோ அதையே செய்யட்டும்.” என்று ஷாத்விக் சொல்ல
“அவ பிடிவாதத்தை பத்தி தெரிஞ்சும் நீ இப்படி பேசுனா எப்படி ஷாத்விக்?” என்று பவன் கேட்க
“நான் என்ன செய்யனும்னு எதிர்பார்க்கி்ற? அவ கால்ல விழுந்து கெஞ்சனும்னு சொல்லுறியா? அதையும் அவ மனசுல என்ன ஓடுதுனு அவ சொல்லத்தயார்னா நானும் அதை செய்ய தயார். எனக்கு ஆரம்பத்துல அவ மேல கோபம் இருந்தது உண்மை தான். அதுக்கு காரணம் அவளை பத்தி நான் மனசுல உருவாக்கியிருந்த விம்பம் உடைஞ்சுபோனது தான். அவ தைரியத்தை பார்த்து எனக்கு பொறாமையாக இருந்தாலும் நான் அதை நினைத்து எப்பவும் பெருமைப்படுவேன். எதையும் தைரியமா சமாளிக்கிறவ அப்பா சொன்னாருனு எந்த எதிர்ப்பும் சொல்லாமல் மணமேடையில் வந்து உட்கார்ந்துட்டாளேங்கிற கோபம் தான் எனக்கு. அதுவும் கூட அவ என் மேல வச்சிருந்த காதலோட வெளிப்பாடுங்கிறது எனக்கு லேட்டா தான் புரிந்தது. நான் இன்னொரு பொண்ணை விரும்புனவன் தான். ஆனா என்னைக்கு மணமேடையில் இவ கழுத்தில் தாலி கட்டுனேனோ அப்பவே இனி சமுத்ரா மட்டும் தான் என் வாழ்க்கையில்ங்கிற ஒரு முடிவுக்கு வந்திட்டேன். ஆனா அதை என் புத்தி புரிஞ்சிக்க தான் கொஞ்ச அவகாசம் தேவைபட்டுச்சு. அதனால தான் அவ எவ்வளவு தூர துரத்திவிட்டாலும் அவளை தேடி திரும்ப போனேன். அவளுமே வார்த்தையால தூர நிறுத்தினாலும் என்னை மனசளவுல தூர நிறுத்தல. அதுவும் நான் அவ பின்னாடி போக ஒரு காரணம். இப்பவும் நான் எதுவும் செய்யத் தயார். ஆனா அவ தான் ஒதுங்கிப்போகனும்னு நெனைக்கிறா. இங்க அவளா வாய் திறந்து பேசுற வரைக்கும் நானும் எது செய்தாலும் எதுவும் பயனில்லை. அவ மனசு, என்ன பிரச்சினைனாலும் நான் அவளுக்காக இருப்பேன்னு புரிஞ்சிக்கனும். அதை அவ புரிஞ்சிக்கிறவரைக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புது பிரச்சினையா வந்துட்டு தான் இருக்கும்.” என்று ஷாத்விக் சொல்ல பவனுக்கும் என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை.
“நீ சொல்லுறது எனக்கு புரியிது ஷாத்விக். ஆனா அவ நிலைமையில இருந்து பாரு. தனியாக வளர்ந்த மரம் அவ. ஆணிவேர் ஆழமாக இருக்கனுங்கிறதுக்காக சின்ன விஷயத்தை கூட ரொம்ப யோசிச்சு முடிவு செய்றது அவளோட வழக்கம். இல்லைனா இந்த சமூகத்துல வாழ முடியுமா சொல்லு? எங்க அம்மாவே பார்த்து பயப்படுற ஒரே ஆள் அவ தான். அப்படிபட்டவளுக்கு தைரியம் எவ்வளவோ அதே அளவு எந்த காரணத்துக்காகவும் யாரு முன்னாடியும் தலைகுனிந்து நிற்கக்கூடாதுங்கிற எண்ணமும் ஜாஸ்தி. அதோட விளைவு தான் அவளோட இந்த விலகல். நீ சொல்றதை வச்சு பார்த்தா சித்தப்பா இறப்புல தான் ஏதோ நடந்திருக்கு. இது தான் நடந்திருக்கும்னு என்னால குறிப்பிட்டு சொல்ல முடியல. ஆனா சமுத்ரா குணத்துக்கு, வேணாம்னா அவ உடனே தூக்கி தூரப்போடுவாளே தவிர அமைதியாக இருக்கமாட்டா. அதனால வீட்டுல ஏதாவது நடந்துச்சானு விசாரி. அவ சொல்லலைனா என்ன நீ நடந்ததை விசாரி. அப்போ என்ன நடந்துச்சுன தெரிஞ்சிக்கலாம்ல?” என்று பவன் சொல்ல
“யாருகிட்ட என்னன்னு விசாரிக்க சொல்லுற? என்ன நடந்துச்சுனு தெரியாமல் என்னன்னு விசாரிக்கிறது?” என்று ஷாத்விக் கேட்க
“அதான் உன் கொழுந்தியா இரண்டு பேரு இருக்காங்களே. அவங்க மூலம் விசாரி. சிலநேரம் சமுத்ரா அவங்ககிட்ட வாய் திறந்தா என்ன நடந்துச்சுன தெரிஞ்சிக்கலாமே.” என்று பவன் சொல்ல ஷாத்விக்கிற்கும் இது நல்ல யோசனையாக தெரிந்தது.
“ம்ம் கேட்டு பார்க்கிறேன். ஆனா அவங்ககிட்டயும் இவ பேசுனா தானே தெரிஞ்சிக்க முடியும்?” என்று ஷாத்விக் கேட்க
“ஒன்னுமே செய்யாமல் இருக்கிறதுக்கு ஏதாவது முயற்சி செய்யலாமே?” என்று பவன் சொல்ல ஷாத்விக்கிற்கும் அது சரியென்றே பட்டது.
“சரி நான் பேசிபார்க்க சொல்லுறேன்.” என்று ஷாத்விக் சொல்ல இருவரும் இன்னும் சற்று நேரம் பேசிவிட்டு உறங்கச் சென்றனர்.
மறுநாள் மஹதி மற்றும் வினயாஸ்ரீயை நேரில் சந்தித்து பேசினான் ஷாத்விக்.
“மஹி வினி நீங்க எனக்கு ஒரு உதவி செய்யனும்.” என்று ஷாத்விக் ஆரம்பிக்க
“மாமா நீங்க என்ன கேட்க போறீங்கனு எங்களுக்கு தெரியும். நீங்க கவலைப்படாதீங்க. நாங்க அக்காகிட்ட பேசுறோம்.” என்று மஹதி சொல்ல
“அதைவிட முக்கியமான ஒரு விஷயத்தை பத்தி கேட்க தான் வந்தேன்.”என்று ஷாத்விக் கேட்க
“என்ன மாமா?” என்று ஷாத்விக் கேட்க
“நான் கிளம்பி போனதும் உங்க அக்கா என்ன செஞ்சா?” என்று ஆர்வமாக கேட்க
“வேற என்ன எப்பவும் போல தான். அத்தை நியாயம் கேட்டாங்க. அவ ஸ்டைல்ல ஷாட் அண்ட் ஸ்வீட்டா ஒரு பதிலை சொல்லிட்டு போயிட்டா.” என்று மஹதி சலிப்புடன் பதிலை சொல்ல
“அது தான் எனக்கு தெரியுமே. அதுக்கு பிறகு?” என்று ஷாத்விக் எதையோ தெரிந்துகொள்ளும் நோக்கத்துடன் கேட்க
“அதுக்கு பிறகு…” என்று யோசித்த மஹதியை பார்த்த வினயாஸ்ரீ
“அதுக்கு பிறகு மதினி காலையில தான் ஆபிஸ் கிளம்பி வெளியில வந்தாங்க.” என்று கூற ஷாத்விக்கோ வேறொரு பதிலை எதிர்பார்த்து ஏமாந்து போனான்.
“ஏன் மாமா இவ்வளவு விசாரிக்கிறீங்க?” என்று மஹதி யோசனையுடன் கேட்க
“இல்லை புருஷன் கோவிச்சுட்டு போயிட்டானேனு சின்னதா ஒரு ரியாக்ஷன் இருக்கும்னு எதிர்பார்த்தேன். ஆனா இங்க எதுவும் நடந்த மாதிரியே தெரியலையே.” என்று ஷாத்விக் சலிப்புடன் சொல்ல
“இதெல்லாம் என் கூட பிறந்தவகிட்ட நீங்க எதிர்பார்க்கலாமா மாமா?” என்று இப்போது மஹதி கிண்டல் செய்ய
“அதுவும் சரி தான். சரி நீங்க இரண்டு பேரும் அவகிட்ட மெதுவாக விசாரிங்க. வேற யார் மூலமாக ஏதாவது தெரிஞ்சாலும் எனக்கு சொல்லுங்க. எப்படியும் நான் இங்க தான் இருப்பேன். ஏதும் தேவைனா என்னை கூப்பிடுங்க.” என்று சொன்ன ஷாத்விக் சொல்ல
“இப்போ எங்க அண்ணா தங்கியிருக்கீங்க?” என்று வினயாஸ்ரீ கேட்க
“பவன் வீட்டுல தான் தங்கியிருக்கேன். வேற இடம் பார்க்க சொல்லியிருக்கேன்.” என்று ஷாத்விக் சொல்ல
“ஐயோ பெரியம்மாவை எப்படி சமாளிச்சீங்க?” என்று வினயாஸ்ரீ பதட்டத்துடன் கேட்க
“அவங்க ஊருல இல்லை. இல்லைனா கஷ்டம் தான்.” என்று ஷாத்விக் சொல்ல மற்ற இருவருக்கும் அது உண்மையென்று புரிந்தது.
“சரி நீங்க பத்திரமா இருங்க. என் பொண்டாட்டியையும் பத்திரமா பார்த்துக்கோங்க.” என்றவனை சிறிது நேரம் கேலி செய்துவிட்டு கிளம்பினர் மஹதியும் வினயாஸ்ரீயும்.