கொடைக்கானலின் நகரப் பகுதியை தாண்டி மகிழுந்து பயணித்துக் கொண்டிருந்தது. கட்டுப்போட்ட கையுடன் தான் கதிர் மகிழுந்தை இயக்கிக் கொண்டிருந்தான்.
அழகி ஏறியதிலிருந்து அவனையே பார்த்தபடி வந்தாள்.
“என்ன டி அப்படி பார்க்குற?” அதுவரை கவிந்திருந்த மௌனத்தை அவன் தான் கலைத்தான்.
“நீ ஓகே தானே கதிர்?”
“ம்ம் ஓகே தான்.”
“நிஜமா ஓகே வா?”
“ஹே நிஜமாவே ஓகே டி. இங்க பாரு நான் இப்படித்தான். எதையும் ரொம்ப யோசிச்சு ரொம்ப குழப்பிக்க மாட்டேன். மனசுக்கு சரினு பட்டுச்சுனா பட்டுனு முடிவெடுத்துருவேன். அதுக்கப்புறம் அதை பத்தி யோசிக்கவே மாட்டேன். அதுல இருந்து மாறவும் மாட்டேன்.”
அழகி அழகாகப் புன்னகைத்தாள்.
“எதுக்கு டி சிரிக்கிற?”
“நான் உனக்கு அப்படியே ஆப்போசிட். நிறைய யோசிச்சு நிறைய குழப்பிக்குவேன். மெதுவா தான் முடிவெடுப்பேன்.”
“அப்போ நமக்கு நல்லா செட்டாகிடும்.” என்றவனை எப்படியென பார்த்தாள்.
“நம்ம வாழ்க்கைல அதிரடி முடுவகள்லாம் நான் எடுக்குறேன். நிதானமான முடிவுகள்லாம் நீ எடு. சிம்பிள்.”
அவன் சிரித்து கண்ணடித்தான். அவளும் சிரித்தாள்.
பாடலை சத்தமாக ஒலிக்க விட்டான்.
“உனக்கு யார் பாட்டு ரொம்ப பிடிக்கும்?”
“இதோ ஓடுதே ஏ ஆர் ஆர் பாட்டு. எப்பவும் அவர் பாட்டுதான்.”
“எனக்கும் அவர்தான் ஃபேவைரேட்.”
என்னோடு நீ இருந்தால்…. என அவளும் உடன் சேர்ந்து இரண்டு வரிகள் பாட, அவன் அமைதியாக அவளைப் பார்த்தான்.
“இந்த பாட்டுல ஒரு வலி இருக்கும். ஆனா அதே சமயம் ஆழமான காதல் இருக்கும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாத காதல் இருக்கும்.” , அவள் இரசித்துச் சொன்னாள்.
“ஆமா. எப்ப கேட்டாலும் உள்ள ஏதோ பண்ணும்.”, அவனும் கூறினான்.
“அப்படி ஒரு காதல் சாத்தியமானு யோசிச்சுருக்கேன். ஆனா உன்னை பார்த்ததுக்கப்புறம் ஏன் இல்லைனு தோணுச்சு.” என்றவள் அவன் விழிகளை நோக்கினாள்.
அவன் மென்னகைப் புரிந்தான்.
“அப்படி ஒரு காதலை உன்கிட்ட தான் முதல்ல பார்க்குறேன்.” என்றவள் சொன்னபோது அவளது கரத்தை பற்றிக் கொண்டான்.
அவளும் சிறிதாய் இதழ் வளைத்து அவனது விரல்களோடு தன் விரல்களை பிணைத்துக் கொண்டாள். இருவரது உதடுகளும் என்னோடு நீ இருந்தால்…. என பாடலைப் பாடத் துவங்கின.
கொடைக்கானலை தாண்டி பழனியை நெருங்கியபோது இருவரும் மகிழுந்தை நிறுத்தி இரவு உணவை உண்டுவிட்டு மீண்டும் பயணத்தைத் துவக்கினர்.
நள்ளிரவில் இருவரும் திருச்சியை அடைந்திருந்தனர்.
“எந்த ஹோட்டல்ல தங்கலாம்?” என்று கதிர் கேட்க,
“ஹோட்டல்லாம் வேணாம். அதியோட வீடு இருக்கு. சாவி என்கிட்ட இருக்கு. அங்க தங்கிக்கலாம்.” என்றாள் அழகி.
அவனும் அதற்கு ஒப்புக்கொள்ள, அழகி வீட்டிற்கு வழி கூற, அரைமணி நேரத்தில் இருவரும் அதியின் அன்னையும் தந்தையும் வாழ்ந்த வீட்டை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர்.
இரண்டு வருடமாக பூட்டியே கிடந்ததால் குப்பையாக தூசியாக இருந்தது. உறங்குவதற்காகப் படுக்கை அறையை மட்டும் ஒதுங்க வைத்தனர். காலையில் மற்றவைகளை சுத்தம் செய்து கொள்ளலாம் என்று இருவரும் கைக்கால்களை சுத்தம் செய்துவிட்டு வந்து படுத்தனர்.
கதிரின் கையை பிடித்து காயத்தை வருடிய அழகி, “வலிக்குதா?” என்றாள்.
“லைட்டா வலி இருக்கு. காலைல சரியாகிடும்.”
கையை எடுத்து அவள் கன்னத்தில் வைத்துக் கொண்டாள். அவன் புன்னகைத்தான்.
“நீ ஏன் டி எப்பவும் புடவையே கட்டுற?”
“எனக்கு ரொம்ப பிடிக்கும். கம்பர்டபுளாவும் இருக்கு. அதான். மத்த டிரெஸூம் போடுவேன். ஆனா இது தர்ற கான்பிடனஸ் வேற எதுவும் எனக்கு தரல.” என்று புன்னகைத்தாள்.
அவன் அவளிடம் நெருங்கிப் படுத்தான். அவள் விழிகளில் மிரட்சி படர்ந்தது.
“பயப்படாத டி ஒன்னும் பண்ண மாட்டேன்.”
“தெரியும். ஆனா சட்டுனு பக்கத்துல வந்ததும் கொஞ்சம் படபடப்பா ஆகிடுச்சு.” என்று மென்னகைத்தாள்.
அவனும் சிரித்தான். அவள் மீது கையைப் போட்டான். அவளது புடவையை விலக்கி இடையைப் பார்த்தான். அவள் புன்னகைத்தாள்.
“இப்போ எரிச்சல் இல்ல டா.”
“ஆனா ரத்தம் கட்டியிருக்கும் போலயே டி.” என்று இடையை வருடினான்.
“அது ரெண்டு நாள்ல சரியாகிடும் டா.”
“ம்ப்ச் ரொம்ப முரட்டு தனமா பிடிச்சுட்டேனா?”
அவன் பாவமாகக் கேட்டான். அவள் மென்னகைப் புரிந்தாள்.
“நீ என்ன வேணும்னேவா அவ்வளோ இறுக்கி கட்டிப்பிடிச்ச? உனக்கு அப்போ அந்த அணைப்பு தேவைனு தோணுச்சு. அதான் நான் எதுவுமே சொல்லல. இப்பவும் எதுவும் சொல்ல மாட்டேன்.”
அவன் புன்னகைத்தான். மென்மையாக இடையை பற்றி அவளை தன்புறம் இழுத்து அணைத்தான். அவளும் அவனை அரவணைத்துக் கொண்டாள். அவன் அவளது நெஞ்சில் சாய்ந்துக் கொள்ள, அவள் தலைக் கோதினாள். இருவரும் அப்படியே உறங்கிப் போயினர்.
காலையில் எட்டு மணிக்கு தான் இருவரும் கண் விழித்தனர். பல் துலக்கி வெளியே சென்று தேநீர் அருந்திவிட்டு வந்தனர்.
வந்ததும் இருவருமாக வீட்டை பெருக்கி, துடைத்து சுத்தம் செய்தனர். செய்யும்பொழுதே மாதம் ஒரு முறையோ இல்லை இரண்டு மாதத்திற்கு ஒருமுறையோ வந்து வீட்டை சுத்தம் செய்துவிட்டு போக வேண்டுமென்று பேசிக் கொண்டனர். அதிக்காக அவனின் பெற்றோர் விட்டுச் சென்ற வீட்டை நன்றாக பராமரித்து எதிர்காலத்தில் அவனுக்கு தர வேண்டும் என்று முடிவு செய்துக் கொண்டனர்.
பின் இருவரும் குளித்து உடைமாற்றி தயாராகி வந்தனர். தேவையான ஆவணங்களை எடுத்துக் கொண்டார்கள். பதினோரு மணிக்கு நீதிமன்றத்தில் இருக்க வேண்டும் என்பதனால் இருவரும் செல்லும் வழியிலேயே காலை உணவை உண்டுவிட்டுச் சென்றனர்.
நீதிமன்றத்தை அவர்கள் அடைந்தபொழுது நேத்ரா வர முடியாததால் அவள் அமர்த்தியிருந்த வக்கீல் அவர்களுக்காகக் காத்திருந்தார். அகவழகி அதிரனை தத்தெடுப்பதற்கான ஆவணங்கள் சரிப் பார்க்கப்பட்டு எல்லா தடைகளும் நீங்கி அவள் கையெழுத்திட்டால் போதும் என்று இருந்தது. ஆனால் அழகி கதிரவனையும் தனது கணவனாக சேர்க்க வேண்டும் என்று எண்ணியதால் நேத்ராவிடம் கூறி தங்களது கல்யாண பத்திரிக்கை ஒன்றை தயார் செய்ய சொல்லி இருந்தாள். அந்த பத்திரிக்கையோடு கதிரவனின் ஆவணங்களையும் இணைத்த வக்கீல் அவைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
கதிரவனின் ஆவணங்களை சரிபார்த்து அழகியோடு அவனும் அதிரனை முறையாக தத்தெடுக்க அனுமதி கொடுக்க மூன்று நாட்களாவது ஆகுமென்று நீதிமன்றம் கூறியது. அதனால் இருவரும் அதனை முடித்துக் கொண்டே கொடைக்கானல் திரும்பலாம் என்று முடிவெடுத்தனர்.
நீதிமன்றத்திலிருந்து வீடு திரும்ப மாலையானது. இருவரும் மதியம் எதுவும் சாப்பிடவேயில்லை. ஆதலால் இருவரும் சற்று காலார நடந்துவிட்டு அப்படியே உண்டுவிட்டு வரலாமென்று வெளியேக் கிளம்பினர்.
இருவரும் தெப்பக்குளம் வந்தனர். அங்கிருந்த கடைகளையும் மக்கள் கூட்டத்தையும் வேடிக்கைப் பார்த்தபடி நடந்தனர். அழகி உணவு இங்கு அருமையாக இருக்குமென்று ஒரு கடைக்கு அழைத்துச் சென்றாள். இருவரும் பேசியபடியே உண்டு முடித்தனர்.
இருவரும் பணம் செலுத்திவிட்டு வெளியே வந்தபொழுது ஒரு ஆள் அவர்களை மறித்தான்.
முதலில் யாரென்று தெரியாது விழித்த அழகி, அவனை அடையாளம் கண்டுக் கொண்டதும் பயந்து கதிரின் கரத்தைப் பற்றிக் கொண்டாள்.
கதிர் அவன் யாரென்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, அவன் பேசத் தொடங்கினான்.
“என்னமா என்னை அடையாளம் தெரியுதா?” என்று அவன் சிரிக்க, அழகிக்கு பற்றிக் கொண்டு வந்தது.
“அடுத்தவங்க தப்பா பேசிடக் கூடாதுன்றதுக்காகவும் ஒரு அனுதாபம் கிரியேட் பண்ணவும் அந்த புள்ளைய நாங்க கேட்டா. நீ என்னமோ நிஜமாவே அந்த புள்ளய வளர்க்க கேட்ட மாதிரி பயந்து அவன தூக்கிக்கிட்டு எங்கயோ ஓடி போயிட்ட? அவன் அம்மா ஊர் பேர் தெரியாத எவனையோ காதலிச்சு ஓடிபோய் எங்கள சந்தி சிரிக்க வெச்சா. அவன கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த ஊருக்கே வந்தா. புள்ளயும் பெத்துக்கிட்டா. கடைசியில செத்தும் போயிட்டா. அவ பண்ணுன காரியத்துக்கு அவ புள்ளய வேற நாங்க வளர்க்கணுமாக்கும்.” என்றபோது அவன் கண்களில் அத்தனை வன்மம்.
“செத்து போனவளே எங்களுக்கு வேண்டாதவ. அவ பெத்த புள்ள எங்களுக்கு எதுக்கு?” என்று அவன் மீண்டும் பல்லைக் காட்ட, அழகி அவனை முறைத்தாள்.
“முடிஞ்சது இப்ப எதுக்கு? போய் தொலைஞ்சுச்சு பீடை. ஆமா இது யாரு? உன் புது புருஷனா?” என அவன் நக்கலாகக் கேட்டு ஒருவிதமாக சிரித்தான்.
“ஏய்.” என்ற கதிரின் கையை பற்றி கண்களால் அவனை பேசாதே என்ற அழகி, அவனை முறைக்க, அவனோ நக்கலாகச் சிரித்துக் கொண்டே அங்கிருந்துச் சென்றான்.
கதிரின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. அழகி சிந்தனை வயப்பட்டிருந்தாள்.
“அவன் யாரு டி? அதியோட மாமாவா?” என்று கேட்க, அவள் தலையை மட்டுமே அசைத்தாள்.
“இவன பார்த்து தான் அன்னைக்கு பயந்து ஒளிஞ்சியா?”
“ம்ம்.” என்ற அழகி அவனை திசைமாற்றும் விதமாய், “அவன விடு. லூசுப்பய. அதிய என்கிட்டேயிருந்து பிரிச்சுருவானோனு பயந்தேன். இப்ப அவனுக்கு அதி தேவையில்லனு சொல்லிட்டான். இப்பதான் நிம்மதியா இருக்கு.” என்றாள்.
கதிர் எதுவும் பேசாது அவளையே பார்த்தான்.
“ம்ப்ச் கோவப்படாத டா. இது அதுக்கான இடமில்ல.” என்று அவள் கூறியபோது அவன் மெல்ல இறுக்கம் தளர்ந்தான்.
“நாளைக்கு காலையில மலைக்கோட்டைக்கு வரலாமா கதிர்?” அவள் ஆசையாகக் கேட்டாள்.
“அதுக்கென்ன டி வரலாம்.” என்றதும் அவள் முகத்தில் அப்படியொரு புன்னகை.
“தாயுமானவர பார்த்து எவ்வளோ நாளாச்சு. நாளைக்கு சீக்கிரம் வந்துடணும்.”
“சரி டி வரலாம். இப்ப வீட்டுக்கு போவோமா?” என்றவன் கேட்க, அவள் சரியென்று தலையசைக்கவும் இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.
உடைமாற்றி வந்து இருவரும் படுக்கையில் விழுந்தபொழுது அழகியின் முகத்தில் சிந்தனை அப்பிக் கிடந்தது.
“என் செல்லம் என்ன யோசிக்கிது?” என்று கதிர் அவளை அணைத்தான்.
“கதிர்! அதியோட அப்பா, அம்மா ஆக்ஸிடென்ட்ல சாகலையோனு தோணுது.” என்றாள்.
“என்ன டி சொல்ற?” கதிர் அதிர்ந்தான்.
“அப்படித்தான் தோணுது. அப்போ அதி இருந்த நிலைமைல நான் இருந்த நிலைமைல போலீஸ் அக்ஸிடென்ட் தான்னு சொன்னத நானும் நம்பிட்டேன். இன்னைக்கு அதியோட மாமா பேசுனத வச்சு பார்க்குறப்போ தான் அது ஆணவக் கொலையோனு தோணுது.” என்றாள் சிந்தித்த வண்ணம்.
அவனும் யோசனையோடு “நிறைய வாய்ப்பியிருக்கு.” என்றான்.
“அதியோட மாமாவுக்கு கொஞ்சம் போலீஸ்ல பழக்கம் உண்டு. அதான் இப்ப டவுட் ரொம்ப வருது.”
“நாம ஆக்ஸிடென்ட்னு க்ளோஸ் பண்ண கேஸ ரீ ஓப்பன் பண்ணுவோமா?” என்று கேட்க,
“கண்டிப்பா பண்ணனும்.” என்றாள் தீவிரமாக!
“அவனுக்கு போலீஸ்ல யார தெரியும்னு பார்த்துடலாம் டி. இப்ப திருச்சியோட டிஜிபியா இருக்குறவன் என் க்ளாஸ்மேட் தான். நாளைக்கு காலைல அவன்கிட்ட பேசுறேன். கேஸ ரீ ஓப்பன் பண்ணிடலாம்.” என்ற கதிரை அழகி இறுக்க அணைத்துக் கொண்டாள்.
“அதிக்கு இவ்வளோ பெரிய இழப்ப குடுத்த யாரையும் சும்மா விடக்கூடாது கதிர்.”
“கட்டாயம் தண்டனை வாங்கி தந்துடலாம் டி. நீ கவலைப்படாம இரு.” என்று அவளை தன் மார்பில் படுக்க வைத்தான்.
நிமிரிந்து மெல்லியதாக இதழ் வளைத்தவள் மென்மையாக அவனது நெற்றியில் முத்தமிட, அவனும் புன்னகைத்து அவளது நெற்றியில் முத்தமிட்டு அவளை மார்பில் சாய்த்துக் கொண்டான்.
மறுநாள் காலை இருவரும் தாயுமானவரை தரிசிக்கக் கிளம்பினர். அழகி அவளது மனதில் தான் இருந்தால் இந்த புடவையை உடுத்தி வெளிப்படுத்து என்று கதிர் எடுத்துத் தந்திருந்த பச்சைநிறப் பட்டுப்புடவையை உடுத்தியிருந்தாள்.
அவளை அந்த புடவையில் கண்டதும் மென்மையாக அணைத்து விலகினான்.
“யாரோ இந்த புடவைய கல்யாணத்துக்கு கட்டிக்கிறேன்னு சொன்னாங்க?” அவன் கிண்டலாகக் கேட்டான்.
“என் புருஷன் தான் எனக்கு புதுபுடவை எடுத்து தரேன்னு சொல்லியாச்சே அப்புறம் இதை ஏன் கட்டாம இருக்கணும்.” என்று அழகி புருவம் உயர்த்தி சிரிக்க, அவனும் சிரித்தான்.
சிரித்தபடியே இருவரும் கிளம்பி தாயுமானவரை திவ்யமாக தரிசித்துவிட்டு உச்சிப்பிள்ளையாரையும் உளமாற வணங்கிவிட்டு அங்கு சிறிது நேரம் அமர்ந்து திருச்சியின் அழகை இரசித்துவிட்டு வந்தனர்.
வரும் வழியிலேயே இருவரும் உண்டுவிட்டு மதியத்திற்கும் உணவை வாங்கி வந்திருந்தனர்.
வீட்டிற்கு வந்ததும் கதிர் முதல் வேலையாக தனது டிஜிபி நண்பனுக்கு அழைத்துப் பேசி அதியின் பெற்றோரின் வழக்கை மீண்டும் விசாரணைக்குத் திறக்கச் செய்திருந்தான்.
வழக்கிற்குரிய காவல் நிலையத்திலிருந்து கதிருக்கு அழைக்க, கதிரும் அழகியும் தங்களது சந்தேகத்தை கூறி வழக்கின் விசாரணைக்கு ஆரம்பப் புள்ளி வைத்தனர்.
அன்றைய நாள் அதிலேயே கழிய, மறுநாள் அவர்கள் சில சந்தேகங்களுக்காக நீதிமன்றம் செல்ல வேண்டியிருந்தது.
அன்றைய இரவு தனது அணைப்பிலிருந்த அழகியிடம் கதிர் மெல்ல கேட்டான்.
“உங்க வீட்டுக்கு நம்ம விஷயம் சொல்ல வேணாமா?”
“சொல்லணும். ஆனா மாமாவுக்கு மட்டும் சொன்னா போதும்.”
“அப்போ நாளைக்கு அவரை போய் பார்ப்போமா?”
“இல்லை அவரை பொதுவா ஒரு இடத்துக்கு வரச்சொல்லி நம்ம விஷயத்த சொல்லலாம்.”
“ஏன் டி உன் அம்மாவ உனக்கு பார்க்கணும்னு தோணலயா?”
“இல்ல டா. நான் மாமாக்கிட்ட மாசத்துக்கு ஒருதடவை பேசுவேன். அம்மாவுக்கு நான் கொடைக்கானல்ல இருக்கேன்னு தெரியும். மாமாதான் என்னை பத்தி சொல்லுவாராம். ஆனா எங்கம்மா ஒரு தடவை கூட நான் எப்படி இருக்கேன்னு கேட்டதில்லையாம். மாமா என்கிட்ட ஒருதடவை சொல்லி வருத்தப்பட்டார். நான் இனிமே என்னை பத்தி அவங்களுக்கு எதுவுமே சொல்லாதீங்க மாமானு சொல்லிட்டேன். அதுலேர்ந்து மாமாவும் சொல்றதில்லை.” என்று விரக்தி புன்னகைப் புரிந்தாள்.
“உனக்கு நீ எனக்கு நான். நமக்கு நாம போதும் டி.” என்று அவளை தன் நெஞ்சுக்குள் புதைத்துக் கொண்டான்.
மறுநாள் காலை நீதிமன்றத்திற்கு செல்லும் முன் அழகி அவளின் மாமாவை சத்திரம் பேருந்து நிலையத்திற்கு வரச்சொல்லி கதிரை அறிமுகம் செய்வித்து தங்களது திருமண செய்தியைக் கூறினாள். அவர் மிகவும் மகிழ்ந்து இருவரையும் ஆசிர்வதித்தார். அவளது தங்கை கர்பமாக இருப்பதாகக் கூறவும் அவளுக்காக பழங்கள் வாங்கிக் கொடுத்தவள் தான் வாங்கிக் கொடுத்து என்று கூற வேண்டாம் என்று கூற, அவரும் சரி என்றார்.
கதிரிடம் அவனது வேலையை பற்றி விசாரித்தார். அவருக்கு அவனை மிகவும் பிடித்திருந்தது. அழகி இத்தனை நாள் பட்ட துயரங்கள் அனைத்தும் இனி இல்லை என்று நம்பிக்கை வந்தது. அழகியின் வாழ்க்கை கதிரோடு ஆனந்தமாக இருக்கும் என்று தோன்றவே இருவரிடமும் மகிழ்ச்சியாக விடைபெற்றுச் சென்றார்.
அவர் சென்றதும் இருவரும் நீதிமன்றத்திற்கு வர, அவர்கள் வந்த வேலை மதியத்திற்குள் வெற்றிகரமாக முடிந்தது. இருவரும் கையெழுத்திட்டு அதிரனை முறையாக தங்கள் பிள்ளையாகத் தத்தெடுத்தனர்.
மதியமே வந்த வேலை முடிந்ததால் மாலையில் இருவரும் கொடைக்கானலுக்கு கிளம்பினர்.
வந்தது போல் அல்லாமல் மிகவும் நிதானமாக சென்றனர். இரவில் மலையேற வேண்டாம் என்று கொடைக்கானலின் அடிவாரத்தில் மகிழுந்தை நிறுத்தி விட்டு இருவரும் ஓய்வெடுத்தனர்.
அன்றைய இரவை இருவரும் பேசி பேசியேக் கழித்தனர். அதிகம் பேசியது அதிரனை பற்றி தான். அவனை எப்படி வளர்க்க வேண்டும் என்று அழகி எண்ணினாளோ அவை அனைத்தையும் அவனிடம் உரைக்க, அவனும் தனக்கு தோன்றிய சிலவற்றை அதனோடு சேர்த்தான். தங்களுக்கு என்று குழந்தை பிறந்தாலும் அதிரன் தான் என்றுமே தங்களது மூத்த பிள்ளை என்று உறுதியாக உரைத்துக் கொண்டனர்.
விடியத் தொடங்கியது. பனிமூட்டமாக இருந்ததால் கதிர் மகிழுந்தை மெல்ல இயக்கினான். அழகி அவனது தோளில் சாய்ந்திருந்தாள். அந்த சூழலும் வேளையும் அருகே அவனும் அவள் மனதிற்கு இதமாய் இருந்தனர். அவனும் சிறு புன்னகையோடு அவளை அடிக்கடி பார்த்தான்.
ஒன்றரை மணி நேரத்தில் வீட்டை அடைந்திருந்தனர்.
அனைவருக்கும் அவர்கள் போன காரியம் வெற்றியடைந்ததை கூற, அனைவரும் மகிழ்ந்தனர். கூடவே அதிரனின் பெற்றோர் பற்றிய வழக்கை பற்றி கூற, அவர்கள் தாங்களும் உதவுவதாய் கூறினர்.
அன்று அதிரனுக்கு விடுமுறை ஆதலால் அழகி குளித்து முடித்து வந்து எழுப்பிய போது தான் எழுந்தான். எழுந்தவன் அழகியை கண்டதும் கட்டிக்கொண்டு முத்தமழை பொழிய, அழகிக்கு மகிழ்ச்சி தாளவில்லை.
அங்கு வந்த கதிர் இருவரையும் உடை எடுக்க கிளம்பச் சொல்ல, அதிரனை வேகமாக தயார் செய்தாள். பின் மூவரும் காலை உணவை உண்டுவிட்டு கதிரின் பொட்டிக்கிற்கு வந்தனர்.
அங்கு கதிரிடம் வந்து பேசியவனை கண்ட அழகி குழப்பத்தோடும் கேள்வியோடும் கதிரை நோக்கினாள்.
அழகியின் பார்வை புரிந்து எதிரே இருந்தவனே அவளிடம் பேசினான்.
“அண்ணி! நல்லாருக்கீங்களா அண்ணி?”, அழகி குழப்பத்தோடு நின்றிருந்தாள்.
“சாரி! நான் உங்களை அண்ணினு கூப்பிடலாம்ல?” என்றவன் கேட்க, மெலிதாக இதழ் வளைத்தாள்.
“கதிர என்னனு கூப்பிடுவ?”
“அண்ணானு”
“அப்போ என்னை அண்ணினே கூப்பிடு.” என்றவள் கூற அவன் புன்னகைத்தான்.
“சரிங்க அண்ணி!”
“அப்போ இப்படித்தான் என் பாஸ்ட்ட கண்டு பிடிச்சியா?” என்று அழகி கதிரை பார்க்க,
“ஆமாம் டி.” என அவன் சிரிக்க, அவளும் சிரித்தாள்.
“சரி நீ எப்படி இருக்க?” என்று அவள் எதிரே இருந்தவனைக் கேட்டாள்.
“நல்லாருக்கேன் அண்ணி.” என்று புன்னகைத்தான்.
“உங்க அண்ணன் எப்படி இருக்கார்?” அழகி மிக இயல்பாகக் கேட்டாள்.
“அவன் முன்னை விட மோசமாகிட்டான் அண்ணி. அவன் சந்தோஷத்துக்காக செஞ்சுட்டு இருந்த கருமத்தை இப்ப காசுக்காக செய்யுறான் அண்ணி. அவன் நிறைய காசு கொண்டு வந்து தர்றான்னு அப்பாவும் அம்மாவும் அவனை எதுவுமே கேட்கிறதில்லை. நான் தான் அடிக்கடி சண்டை போடுவேன். எனக்கு அங்க இருக்கவே பிடிக்கல அண்ணி. ஒருநாள் அண்ணன் உங்களுக்கு என்ன நடந்துச்சுனு தெரிஞ்சுக்க வந்தாரு. அப்படியே பழக்கமாகி கதிர் அண்ணன்கிட்டயே வேலைக்கு வந்துட்டேன். கதிர் அண்ணன் உங்களுக்கு ரொம்ப பொருத்தமானவர் அண்ணி. உங்க கல்யாணத்துக்கு என்னோட வாழ்த்துகள் அண்ணி!” என்று அவன் நீளமாகப் பேசினான்.
“வாழ்த்து மட்டும் பத்தாது. கல்யாணத்துக்கு கண்டிப்பா வரணும்.” என்று அவள் அவனை அழைக்க, கதிர் புன்னகைத்த வண்ணம் அவளது கையோடு கைக்கோர்த்தான்.
இருவரும் கடைக்குள் செல்ல, அதிரன் அவர்களுக்கு முன்பே சென்று தனக்கான உடையை தேர்வு செய்யத் தொடங்கியிருந்தான்.
அழகி கதிரையே தனக்கான புடவையை தேர்வு செய்ய கூறினாள். கதிரும் பத்தே நிமிடத்தில் நீல நிறத்தில் பச்சைக்கரை வைத்த பட்டுப்புடவை ஒன்றை தேர்வு செய்தான். அழகிக்கு அந்த புடவை மிகவும் பிடித்திருந்தது. பின் கதிருக்கான வேட்டி சட்டை எடுத்துவிட்டு அதிரனுக்கும் வேட்டி சட்டை எடுத்தனர்.
திருமண வேலைகள் பரபரவென்று நடந்தேற, அந்த நாளும் வந்தது. கதிரும் அழகியும் வீட்டிலேயே தயாராகி கோவிலுக்குச் சென்றனர்.
சக்கரவர்த்தி, மிருதுளா, ராம்குமார், அதிரன், கவி பாப்பா, நிரஞ்சன், கதிரின் நண்பர்கள் நால்வர் இவ்வளவு தான் அவர்களின் திருமணத்திற்கு வந்திருந்தவர்கள். அனைவரின் ஆசிர்வாதத்தோடும் வாழ்த்துகளோடும் கதிர் அழகியின் கழுத்தில் தாலி கட்டி அவளை தனது மறுபாதி ஆக்கிக் கொள்ள, அழகிக்கு விழிகள் கலங்கின.
இரண்டு வருடங்கள் கழித்து…
அழகி தனது வேலையை விட்டுவிட்டு கதிரின் பொட்டிக்கை தன் கையில் எடுத்துக் கொண்டாள். கதிர் பொட்டிக்கிற்கான துணிகளை உற்பத்தி செய்ய தனியாக சிறிய அளவில் ஒரு தொழிற்சாலை தொடங்கி தனது கனவின் முதல் படியை ஏறியிருந்தான். அவன் மேலும் முன்னேற தொடங்கினால் கொடைக்கானலை விட்டு தாங்கள் நகரக்கூடும் என்பதால் அழகி அங்கிருக்கும் ஒவ்வொரு நாளையும் கதிரோடும் அதிரனோடும் அனுபவித்து வாழ்ந்துக் கொண்டிருந்தாள்.
அன்று அழகி முன்பொரு நாள் கண்ட கனவு பலித்திருந்தது.
ஆதவனின் கதிர் ஊடுருவ முடியாதபடி பனி படர்ந்திருந்தது. அழகி வழக்கம்போல் வீட்டிற்கு அருகில் இருக்கும் குன்றின் மீது நின்று ஆதவனின் உதயத்தை பார்த்திருந்தாள். அவளுதட்டில் புன்னகை உறைந்திருந்தது. குளிருக்கு இதமாக அவள் சால்வையை இழுத்து போர்த்த முனையும் முன் பின்னிருந்து நீண்ட இருகரம் அதனை செய்து முடிந்திருந்தன. செயலை செய்தது யாரென்று அறிந்ததினால் அவள் உதட்டில் உறைந்திருந்த புன்னகை மலர்ந்து விரிந்தது. சால்வையை போர்த்திய கரங்கள் பின்னிருந்து அவளை அணைக்க, அவள் முகம் மலர்ந்து சிறு நாணம் துளிர்க்க, மெல்ல தலையை திருப்பி குறுஞ்சிரிப்போடு அவளின் கன்னத்தோடு கன்னம் வைத்து இழைத்த கதிரவனை கண்டாள். செல்லமாக அவன் நெற்றியில் முட்டி அவள் சிரிக்க, அவனும் மெல்லிய சிரிப்பை உதிர்த்தான். அவள் கரம் உயர்ந்து அவனது பின்னந்தலையை கலைத்து விளையாட, அவன் அவளின் மூக்கோடு மூக்குரசினான். இருவரையும் அழைத்தபடி ஓடி வந்த அதிரனை கண்டு இருவரும் விலகி நின்று அதிரனை பார்த்து சிரித்தனர். ஓடி வந்த அதிரனை கதிரவன் தூக்கிக் கொள்ள, அழகி அதிரனை கொஞ்சினாள்.
“கதிர்! உனக்கு பையன் வேணுமா பொண்ணு வேணுமா?”, அழகி மெல்லிய குரலில் கேட்டாள்.
“பையன் தான் டி வேணும்.” என்று அவன் அவளது தோளில் கைப்போட்டு அணைத்துக் கொண்டான்.
“உனக்கு பெண் குழந்தைனா ரொம்ப பிடிக்குமே. இப்ப என்ன பையன்?”
“பிடிக்கும் தான். அதுவும் பெத்துப்போம். ஆனா இப்போ பையன் தான் வேணும்.”
“ஆஹான் ஏன் அப்படி?”
“அதிரன் நமக்கு லேட்டா தான் கிடைச்சான். அவனையே இப்படி வளர்க்குறனா அவன் கைக்குழந்தையா கிடைச்சுருந்தா எப்படி வளர்த்திருப்பனு பார்க்க ஆசையா இருக்கு. சோ பையன் தான் வேணும். அதோட நீ ஒரு ஆம்பள பிள்ளை இப்படித்தான் இருக்கணும்னு அதிரன மட்டும் இந்த சமூகத்துக்கு தர வேண்டாம் நம்மளோட இன்னொரு பிள்ளையையும் கொடுப்போம்.” என்று அவளது வைராக்கியத்திற்கு துணை நிற்கும் தன் கணவனை கண்க்கொட்டாது பார்த்தாள்.
அவன் என்ன என்று புருவம் உயர்த்த, அதிரனின் கவனம் தங்கள் மீது இல்லை என்று உறுதிப்படுத்தி கொண்டு கதிரவனின் கன்னத்தில் பட்டென்று இதழ் ஒற்றி எடுத்தாள். அவன் விழிவிரித்து வியப்பைக் காட்டி அவளது கன்னத்தில் இதழ் பதித்தான்.
“அம்மா! அப்பா! இதோ சூரியன் வந்துடுச்சு.” என்று அதிரன் எதிரே கைநீட்டி உற்சாகமாக சிரிக்க, இருவரும் அவனது கன்னங்களில் முத்தமிட்டனர்.
மூவரின் விழிகளும் செம்மஞ்சளாய் எழுந்த ஆதவன் மீது படிந்தன. புன்னகையோடு அழகி கதிரவனின் தோளில் சாய, திரும்பி புன்னகைத்தை கதிரவன் மேடிட்டிருந்த அவளது வயிற்றில் ஒரு கரம் பதிக்க, அவன் கரத்தின் மேல் அழகியும் ஒரு கரம் பதிக்க, இருவரும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்தபடி நின்றனர்.
சுபம்.