25 – காற்றிலாடும் காதல்கள்
“மிரு… நமக்கு என்ன நடக்குது? நம்ம உடம்ப நம்மளால ஏன் உணர முடியல? உனக்கு ஏதாவது புரியுதா?”என கீதன் கேட்டான்.
“நம்ம சுவடி எல்லாம் எடுத்து பாக்கணும் கீதன். வேற யாரையாவது அம்மா அப்பாவ கூட்டிட்டு வர அனுப்பு. நமக்கு இன்னொருத்தர் உதவி தேவை. உடனே தோப்புக்கு போலாம் வாங்க.” என வேகமாக அவள் காலை எடுத்து வைக்கும் போதே காற்று அவளை பல அடி தூரம் கொண்டுச் சென்றது. மற்றவர்களும் திகைத்து அவளின் பின்னே வேகமாகக் காற்றில் மிதந்து தென்னந்தோப்பிற்கு வந்துச் சேர்ந்தனர்.
“இந்து.. அவினாஷ் அன்வர வரசொல்லு.” எனக் கூறியதும் அவன் இருளாயி கீழே இருப்பதைப் பார்த்து கூவியழைத்தான்.
“அன்வர் கடைல அவினாஷ் இருப்பான். அன்வரையும் அவனையும் உடனே இங்க வரச்சொல்லு. அவனுங்க வரப்பவே டீ போட்டு குடுத்து விட்டுட்டு வீட்டுக்கு கிளம்பிக்க.” எனக் கூறிவிட்டு உள்ளே வந்தான்.
“கயல வரச்சொல்லு கீதன்.”
“அவ எதுக்கு?” யுகேந்தர் கேட்டான்.
“அவளும் தான் நம்மாளோட வைரமுனியப்பன் கோவிலுக்கு ராத்திரி வரணுமாம். கிருபா சொல்லிட்டு போனா.” என மிருணா கூறியதும் கீதனுடன் அனைவரும் அதிர்ந்தனர்.
“அவ எப்படி இதுல சம்பந்தபட்டிருக்கா?”கீதன் கேட்டான்.
மிருணாளினி தன்னுடலில் இருக்கும் பையில் இருந்து கயல்விழி கொடுத்த டைரியை வெளியே எடுத்தாள்.
“இது உங்கம்மா மறைச்சி வச்சிருந்திருக்காங்க. கயல் அத எடுத்து படிச்சிருக்கா. என்கிட்ட இன்னிக்கி குடுத்தா. அமாவாசைல திறக்கணும்ன்னு அவதான் மொதல்ல என்கிட்ட சொன்னா.” மிருணாளினி கூறவும் யுகேந்தர் தலையில் அடித்துக் கொண்ட
“அப்போ அவளும் இப்ப நம்மலாட்டம் மாறியிருப்பாளா?”யுகேந்தர் கேட்டான்.
“தெரியல.. அவள வரச்சொல்லு“ எனக் கூறிவிட்டு தனது உடமைகளை எடுக்க முனைய எதையும் அவளால் தொட்டு எடுக்க முடியவில்லை.
“எதுவும் தொடமுடியல.. ” எரிச்சலுற்றுக் கூறினாள்.
“இப்டி இருந்தா எப்டிடா குகைய திறக்க முடியும்? இந்தா புள்ள மிருதங்கம் உன் அக்காவ கூப்பிடு. இப்டி இருந்தா எல்லாம் வேலைக்கு ஆகாது. காலைல வயலுக்கு எல்லாம் தண்ணி எடுத்துவிடணும் இப்டி ஒண்ணுத்தயும் தொடமுடியாம இருந்தா எப்டி வேலையைப் பாக்கறதாம்?”என இந்திரன் கேட்டதும் யுகேந்தர் முறைத்தான்.
“இப்ப அது ரொம்ப முக்கியமாடா? நம்மலே உசுரோட இருக்கமா இல்லயான்னு தெரியல. இதுல வயலுக்கு தண்ணி எடுத்து விடணுமா? ஏண்டா இப்டி என்னைய கொடுமை பண்றீங்க? உங்ககூட வந்து சேர்ந்தேன் பாரு.”
அன்வரும், அவினாஷும் டீயுடன் மேல வந்தனர். கூடவே வெங்காய பஜ்ஜியும் ஆவிப் பறக்க இருந்தது.
“என்னடா இங்க உடனே வரச்சொன்னியாம். உன் காதல சொல்லிட்டியா மச்சான்? சிஸ்டர் ஓக்கே சொல்லிட்டாங்களா?” அன்வரும், அவினாஷும் மிருணாளினி அங்கே இருப்பதைப் பார்த்துவிட்டு, மாறி மாறிக் கேட்டபடி உள்ளே வந்தனர்.
“மொத வந்து கதவ மூடு. வீட்ல வேற வேலையாள் கீழ இருந்தாங்களா?” எனக் கீதன் கேட்டான்.
“யாரும் இல்ல மச்சான். எல்லாரும் கெளம்பிட்டாங்க. அப்பறம் கயலு ஃபோன் பண்ணிச்சி நீங்க யாரும் எடுக்கலியாம். அதான் நாங்க இங்க தான் போறோம் நீயும் வான்னு சொன்னோம் இப்ப வந்துரும். கல்யாண மாப்ள அதிசயமா கல்யாண பொண்ணு ஃபோன் அடிச்சும் எடுக்காம எங்க போன?” என அவனைக் கிண்டல் செய்தனர்.
“மச்சானுங்களா.. கொஞ்சம் இங்க வந்து உக்காருங்க.. நான் சொல்றத பயப்படாம கேளுங்க.” என கீதன் அழைத்து அங்கிருந்தச் சோபாவில் அமரச் சொன்னான்.
”இந்தாங்கடா டீ கூட சுட சுட வெங்காய பஜ்ஜி. இருளாயி கைமணமே தனி தான் தெரியுமா?” எனக் கூறியபடி அவினாஷ் பஜ்ஜியைச் சாப்பிட ஆரம்பித்தான்.
“மச்சான்…“ என ஆரம்பித்து மிருணாளினியின் கதை முதல் அவர்களின் தற்போதைய நிலைமை வரை அனைத்தும் கூறிவிட்டு அவர்கள் முகத்தை நால்வரும் பார்த்தனர்.
“சும்மா பிராங்க் பண்ணாதீங்க டா..“ என அவினாஷ் கூற அன்வர் கீதனை தொட முனைந்து முடியாமல் காற்றினில் கை அலைந்ததுப் பார்த்து ஸ்தம்பித்து நின்றான்.
“பாத்தியா மச்சான். அவன் என்ன என்ன கதை சொல்றான்னு..” எனக் கூறி அவினாஷ் சிரிக்கவும், அன்வர் முழித்தபடி,“அவன் கைல இந்த பஜ்ஜிய குடு..” என நீட்டினான்.
அவினாஷ் இந்திரன் கையருகே தட்டைக் கொண்டு செல்லவும் அவனது கைகளில் தட்டு படவில்லை, அவனது வயிற்றுக்குள்ளே தட்டு இருப்பது போல தெரியவும் அவினாஷ் பயந்து அங்கிருந்து எழுந்து மற்றொரு மூளைக்கு ஓடினான்.
“டேய்.. என்னடா சொல்றீங்க? நிஜம் தானா நீ சொன்னது? நீங்க செத்து ஆவியா இங்க இருக்கீங்களா?” அவினாஷ் நெஞ்சம் படபடக்கக் கேட்டான்.
“இல்லடா. நாங்க சாகல. ஆனா எங்க உடம்பு திடத்தன்மை காணாம போயிக்கிட்டு இருக்கு. பாரு கால் தரைய விட்டு மேல மெதந்து நிக்குது.” என கீதன் கூறியபின் தான் மற்றவர்களும் அப்படி நிற்பதை அவர்கள் கவனித்தார்கள்.
“டேய்.. எப்டி டா? எப்டி நீங்க பழையபடி ஆவீங்க? உங்களுக்கு ஏன் இப்டி ஆச்சி? எங்களால நம்பவே முடியல” அன்வர் கேட்டான்.
“எங்களுக்கும் புரியல மச்சான். எங்களால எதுவும் தொட்டு தூக்க முடியல. உங்க உதவி வேணும். இவளோட அம்மா அப்பா ஆபத்துல இருக்காங்க அவங்கள இங்க கூட்டி வரணும். ஹெல்ப் பண்ணுங்கடா” எனக் கீதன் கெஞ்சலாகக் கேட்டான்.
“உங்களுக்கு ஹெல்ப் பண்ணா நாங்களும் இப்படி மாறிடுவோமா?” அவினாஷ் கேட்டான்.
“இல்லடா. தெரியல.. ஆனா உதவி வேணும்டா.”
“நீங்க மாற மாட்டீங்க.. நாங்க நாலு பேரும் தான் எல்லை கோவில்ல அந்த கப்ல இருந்த தண்ணிய குடிச்சோம். நீங்க அப்படி எதுவும் குடிக்கல தானே?” என மிருணாளினி முன்னே வந்துக் கேட்டாள்.
“இல்ல…” இருவரும் ஒரே குரலில் கூறினர்.
“அப்ப பயபடாம எங்களுக்கு உதவி பண்ணுங்க. இன்னிக்கி ராத்திரி மலைக்குகைக்கு வடக்கு பக்கம் இருக்க வைரமுனியப்பன் கோவிலுக்கு வரச்சொல்லி கிருபா சொன்னா. அங்க போனா தான் நமக்கு ஏதாவது தெரியவரும். அதுக்கு முன்ன இப்ப சில சுவடிகள் விளக்கங்கள் நமக்கு தெரியணும். இந்த பேக் தவிர வேற எதுவும் என்னால எடுக்க முடியல. எனக்கு நான் சொல்றத எல்லாம் செய்ய ஒருத்தர் வேணும். உங்கள்ல யாரு இங்க இருக்கீங்க?”எனக் கேட்டாள்.
“நான் இங்க இருக்கேன். அவினாஷ் உன் அப்பா அம்மாவ கூட்டிட்டு வரட்டும்.“ என அன்வர் முயன்று வரவழைத்தத் தைரியத்தோடு கூறினான்.
“சரி. இது எங்க வீட்டு அட்ரஸ். இது ஃபோன் நம்பர்.” என தனது போனில் இருந்து அவனுக்கு அனுப்பினாள்.
“இத எப்டி தொட முடியுது?” அவினாஷ் கேட்டான்.
“இப்டி மாறும் போது எங்க கைல இருந்த பொருள மட்டும் தொடமுடியுது. வேற எதுவும் தொட முடியல எடுக்க முடியல.” மிருணாளினி பதில் கூறிவிட்டு அன்வர் அருகே சென்றுக் கைநீட்டி அவன் எடுக்க வேண்டிய சுவடி விளக்கம் அடங்கியக் கையேடுகள் முதல் கீதன் கொடுத்தக் காகிதங்கள் அனைத்தும் எடுத்து வரிசைப்படுத்தச் சொன்னாள்.
“கீதன் நீ என்ன கண்டுபிடிச்சியோ அந்த வரிசைல இத அடுக்க சொல்லு. நான் இந்த சுவடில இருக்கறத்துக்கு விளக்கம் எடுக்கறேன்.” என வேலையைப் பிரித்துக் கொடுத்துவிட்டு மறுபக்கமிருந்த மேஜைக்குச் சென்றாள்.
அவினாஷை அங்கிருந்துக் கிளம்பச் சொல்லியனுப்பிவிட்டு வேலையைக் கவனித்தனர்.
“ஏன் மாப்ள.. இப்படியே காத்துல நம்ம மெதந்துட்டு இருந்தா உன் கல்யாணம் எப்டி நடக்கும்? நீ எப்டி கயல் புள்ள கழுத்துல தாலிய கட்டுவ?“ இந்திரன் அதிமுக்கியமானச் சந்தேகத்தைக் கேட்டான்.
“வேணாம் இந்திரா… அப்றம் நான் மனுஷனா இருக்கமாட்டேன்.“
“இப்பவே நம்ம மனுஷங்கதானான்னு சந்தேகமா தான் இருக்கு. எதுக்கும் நம்ம உடம்பு எங்கயாவது கெடக்குதான்னு பாத்துட்டு வந்துருவோமா ஒரு தடவ?” என இந்திரன் கேட்டதும் யுகேந்தர் அழுக ஆரம்பித்தான்.
“டேய் கம்முன்னு இருங்கடா கயல் வந்துட்டாளா பாருங்க.” கீதன் அவர்களை அடக்கிவிட்டு விளக்கங்களின் வரிசையைச் சீராக்கினான்.
கயல்விழி அவினாஷூடன் காரில் வந்து தோப்பில் இறங்கி வீட்டின் கதவை நன்றாகப் பூட்டிவிட்டு மேலே சென்றாள்.
அங்கே மிருணாளினி அருகே கிருபாலினி நிற்பதைக் கண்டவள் வீலென அலறியபடி மயங்கி விழுந்தாள்.
“அச்சச்சோ. என் கயல் மயங்கிட்டாடா. டேய் அன்வர் அவள எழுப்பு டா.” என தண்ணீர் ஜக்கை யுகேந்தர் தூக்கிக் கொண்டு அவளருகே சென்று முகத்தில் நீரிணை தெளித்தான்.
அவன் கை தனியாக தண்ணீர் ஜக் தனியாக அந்தரத்தில் நிற்பதைப் பார்த்ததில் மீண்டும் அதிர்ச்சியில் மயங்கினாள்.
“டேய்… நீ கம்முன்னு இந்த பக்கம் வாடா.” கீதன் அவனை அதட்டி இந்த பக்கம் வரச்சொல்லிவிட்டு, அன்வரிடம் கயலை எழுப்பச் சொன்னான்.
“அன்வரண்ணா.. நான் பாத்தது…“ என பயந்தபடி மிருணாளினி அருகே மீண்டும் பார்த்தாள்.
அப்போது தான் அன்வரும், கிருபாலினி மிருணாளினி அருகே நிற்பதைக் கண்டுத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
“கயல்.. இங்க வா.. பயப்படாத.. நான் சொல்றத கேளு..” என கீதன் முழுதாக கூறவும், கயல்விழி அதிர்ந்துக் கீதனை தொட, அவனுடல் அகப்படவில்லை.
“அம்மாகிட்ட என்னடா சொல்வேன் இப்ப நான்?” என முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.
“கயல்.. அழாத.. எங்களுக்கு ஒண்ணும் ஆகாது. நீ தான் எங்களுக்கு இப்ப உதவி பண்ணனும்.” என மிருணாளினி அவளருகே செல்ல, கிருபாலினியும் அவளருகே வந்தாள்.
“இந்தா புள்ள கிருபை, அங்கயே நில்லு நீ. நீ கயல தொடாத. நீ தொட்டு தான் நாங்க இப்படி ஆனோம். அவள அப்படி ஆக்கிறாத. அடுத்த வாரம் அந்த புள்ளைக்கு கல்யாணம் இருக்கு.” என இந்திரன் கூறவும் யுகேந்தர் அவனை முறைத்தான்.
“மாப்ள நான் இங்க காத்துல அலைஞ்சிட்டு இருக்கேன். நான் இல்லாம அவளுக்கு யாரு தாலி கட்டுவாங்கலாம்?” யுகேந்தர் கீதனிடம் பொருமினான்.
“நான் தொட்டதால நீங்க இப்படி ஆகல. உங்களால குகை திறக்க வேண்டிய கட்டாயம் வந்திருக்கு. அதனால தான் இப்படி ஆனீங்க. இந்த நிலைமை மாற தான் ராத்திரி அந்த கோவிலுக்கு வர சொல்றேன்.” எனக் கூறிவிட்டு கிருபா அங்கிருந்து மறைந்துவிட்டாள்.
“ஆமா மாப்ள நீ எப்டி ஜக்க தூக்குன?”, கீதன் கேட்டான்.
“தெர்ல மச்சான். ஒரு வேகத்துல தூக்குனேன். ஆனா எப்டின்னு தெர்லடா. இப்ப தூக்க முடியல. உள்ள இருக்க தண்ணி தான் கைக்கு தெரியுது.”
“இது என்ன நம்ம முழுசா ஆவியாவும் ஆகல மனுஷனாவும் ஆகல போலயே?” இந்திரன் இவ்வாறு கூறியதும் அனைவரும் கொல்லென சிரித்தனர்.
“தண்ணிக்கும், நம்மாளோட இந்த நிலமைக்கும் தான் ஏதோ சம்பந்தமிருக்கு போல. அதான் நான் கூட ஓடைல தண்ணி எடுக்க முடிஞ்சது.“
“இது என்ன மாதிரியான நிலைமை மிருணா? உங்கள இப்படி பாக்க பயமாவும் இருக்கு, பாவமாவும் இருக்கு.” அன்வர் கூறினான்.
அனைவரும் சில நிமிடங்கள் அமைதியாக இருந்துவிட்டு தங்களது வேலையைத் தொடங்கினர்.