“நற்பவி.. உனக்குக் கொஞ்சமாவது என்னோட ஞாபகம் இருக்கா?”
“நான் இப்போ பிசியா இருக்கேன். வேற ஏதாவது விஷயம் இருக்கா?”
“நீ எங்கிட்ட பேசி எத்தனை நாளாச்சு தெரியுமா? கருத்து வேறுபாடு எல்லாருக்கும் நடுவில் இருக்கும். அதுக்காக பேசாம இருப்பியா?”
“கருத்து வேறுபாடு எல்லாருக்கும் நடுவில் இருக்கும். உண்மைதான். ஆனா அந்த வேறுபாட்டின் முடிவு என்ன? அது எப்பவுமே உன்னோட முடிவா இருக்கணும்னு நீ நினைக்கிற. சேம் போல்ஸ் காண்ட் ஸ்டாண்ட் வித் ஈச் அதர். ரொம்பவே லேட்டா புரிஞ்சிக்கிட்டேன். எனக்கு நீ வேண்டாம் நேத்ரன்” என்றாள் திடமாக.
“உன்னை நேர்ல பார்த்தா கொன்னுடுவேன் நவி..”
“வேண்டாம். பார்க்க வேண்டாம். முடிச்சுக்கலாம். எல்லாத்தையும் இதோட முடிச்சிக்கலாம்.”
“திமிர்.. உடம்பு முழுக்க திமிர்..”
“ஆமாடா.. இருக்கு.. திமிர் உடம்பு முழுக்க இருக்கு. அது காக்கிச் சட்டைக்கு உள்ள திமிர். உனக்கில்லாததா?” என்றாள் அழுத்தமாக.
“இப்போ எங்க இருக்க?”
“அது உனக்கு தேவையில்லாதது.”
“இந்த மாதிரி ராத்திரி தனியா போகாத அப்படின்னு சொல்றது ஒரு தப்பா. நான்தான் கூட வரேன்னு சொல்றேன்ல. சாதாரண வழக்கா இருந்தா பரவாயில்லை. ஆனா இதுல ஏதோ பெரிய விஷயம் இருக்கு. என்கிட்ட கொஞ்சமாவது கலந்து பேசலாமே. ஏனா உனக்கு ஒரு கோணம் இருக்கும். எனக்கு ஒரு கோணம் இருக்கும்.”
அவள் அமைதியாக இருந்தாள்.
“இதுக்கான பதில் நான் ஆயிரம் முறை சொல்லிட்டேன். என்னை என்னோட வழியில் விடுன்னு.”
“என்னோட பயம் உனக்குப் புரியலையா நவி.. பயமா இருக்கு.. உனக்கு ஏதாவது ஆயிடுமோன்னு.”
“மிஸ்டர் நேத்ரன். உறவு, அன்பு, காதல் எல்லாம் ஒருவரை பலப்படுத்தணும். ஆனால் நீங்க என்னை பலவீனமாக்குறீங்க. நான் குழந்தைக் கிடையாது. என்ன நடக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும். உச்ச கட்டமா உயிர் போகலாம். இல்லை என்னோட கற்பு போகலாம். ரெண்டுல எது போனாலும் எனக்கு கவலையில்லை.”
“ஆனா நான் கவலைப்படுவேன்.”
“அதுக்காக வேலையை விட்டுட்டு வீட்டில் இருக்க முடியாது என்னால. கடைசில நீங்களும் ஒரு சராசரி ஆண்ங்கிறதை நிரூபிச்சுட்டீங்க. ஒரு பெண் எந்த நிலையில் இருந்தாலும், அவளை ஏற்கும் பக்குவம் இருக்கணும். உங்களுக்கு இருக்குன்னு நினைச்சேன்.”
“இருக்கு நற்பவி… அதெல்லாம் நிறைய இருக்கு. ஆனா அதுக்காக உனக்கு அப்படி ஒரு விஷயம் நடந்த அப்புறம் நிரூபிக்கணும்னு எந்த அவசியமும் இல்லை.”
அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அழைப்பு துண்டிக்கப்பட்டது.
நேத்ரன் நற்பவி, நற்பவி என்று கத்தினான். எந்த ஒரு பதிலும் இல்லை. அழைப்பு துண்டிக்கப்படும் முன் சத்தம் வேறு கேட்டது. அடுத்து நேத்ரன் சிந்திக்கவில்லை. உடனே அவள் இருக்கும் இடம் அறிந்துகொண்டு புறப்பட்டான். அங்கு சென்று பார்த்தால் யாருமே அங்குயில்லை.
சிறிது நேரத்தில் ஒரு அழைப்பு வந்தது அவனுக்கு. அவளை யாரோ தாக்கியதாகவும், ஒரு மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாகவும் தகவல் வர, விரைந்து அவ்விடம் சென்றான் நேத்ரன்.
தலையில் பலத்த அடி என்று கூறினார்கள் மருத்துவர்கள். இரண்டு நாட்களில் அவளை வீட்டிற்கு அழைத்து வந்தான்.
விஷயம் அறிந்த கீதன் அவளைப் பார்க்கச் செல்ல, அனுமதி மறுக்கப்பட்டது.
அனைவரும் ஒரு குழப்பம் ஆட்கொண்ட மனநிலையில் இருந்தனர். அவர்களை சுற்றி நிகழ்ந்த நிகழ்வுகள் அனைத்தும் ஏன் என்று தெரியாமல் தவித்தனர். நிரண்யா, கீதன், நற்பவி இப்பொழுது நேத்ரன். நிகழ்ந்தவை அனைத்தும் தொடர்பற்றவை போல் இருந்தாலும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது. அது என்னவென்று தெரியவில்லை.
இரண்டு நாட்களாக நற்பவி ஒரு வார்த்தைக்கூட உதிர்க்கவில்லை. அவளின் பார்வையும் சரியில்லை. சில சமயங்களில் நேத்ரனை முறைத்துப் பார்ப்பது போல் தோன்றியது நேத்ரனுக்கு. இவனும் அவளிடம் ஆயிரம் கேள்விகள் கேட்டு விட்டான். அவள் பதில் கூறுவதுபோல் இல்லை.
எழுந்து நடக்க ஆரம்பித்தாள். அறையை இடமும் வலமும் நூறு முறை அளந்துவிட்டாள். தலை வலித்தது. அவளின் அமைதியை உடைக்க, அவன் ஏதேனும் வினா எழுப்பினால், உடலில் உள்ள பலம் முழுக்க, திரட்டிக் கத்தினாள். என்ன நிகழ்ந்தென்று ஒன்றும் அறியமுடியவில்லை. இப்பொழுது நேத்ரனுக்கு மாபெரும் சந்தேகம். நற்பவி இந்த வழக்கை சரியாக கையாண்டிருக்கிறாள். அதனால் தாக்கப்பட்டிருக்கிறாள் என்று அவனால் உறுதியுடன் நம்ப முடியவில்லை. உண்மையில் அவள் சரியான பாதையில் சென்றிருந்தால் அவளைக் கொன்றிருக்க வேண்டுமே. ஏன் கொல்லவில்லை. அவள் எதிரியை நெருங்கவில்லையெனில் ஏன் தாக்கப்பட வேண்டும். ஒரு முடிச்சை அவிழ்க்க, அடுத்த அடி எடுத்து வைத்தால், அடுத்தடுத்து முடிச்சுகள். இப்பொழுது எதை முதலில் களைவது என்று தெரியவில்லை அவனுக்கு. அவள் பிழைத்து வந்தது மனதில் நிம்மதியைத் தோற்றுவிக்க வேண்டும் அவனுக்கு. உண்மையில் அவனுக்கு நிம்மதியாக இருந்தது. ஆனால் நற்பவியை உயிருடன் விட்டதில் ஏதேனும் மீப்பெரும் பிண்ணனி இருக்குமோ என்று ஐயுற்றான். விரைவில் இதை கண்டுபிடிக்க வேண்டும் என்று தீர்மானம் செய்தான். நற்பவியின் மேலதிகாரியை சென்று சந்தித்துப் பேசினான் நேத்ரன்.
“வாங்க மிஸ்டர் நேத்ரன்.. நற்பவி எப்படி இருக்காங்க.”
“தெரியலை சார்..”
“வாட்?”
“உண்மையாவே தெரியலை. அவ வாயைத் திறக்கவே இல்லை. என்ன நடந்துச்சுன்னும் தெரியலை.”
“அவுங்களுக்கு ஏதாவது மிரட்டல் வந்திருக்குமோ?”
“மிரட்டலுக்குப் பயப்புடுறவ அவ இல்லை. வேற ஏதோ நடந்திருக்கு.”
“ஏதாவது தடயம்..”
“நற்பவியைத் தவிற இப்போ வரை ஒண்ணும் இல்லை. ஹாஸ்ப்பிட்டலில் சேர்ந்தவனை விசாரிச்சாலும் அவனுக்கு எதுவும் தெரியலை. நடு ரோட்டில் மயக்கமாகியிருந்த அவளை சேர்த்ததா சொல்றாரு. குறுக்கு விசாரணையில் பலன் எதுவும் இல்லை.”
“நான் கூட முதலில் காணாமல் போன பொண்ணோட கேஸ் சாதாரணமானதுன்னு நினைச்சேன். ஆனா அந்த கொலைக்கு எந்த மோட்டிவ்வும் இருந்த மாதிரி தெரியலை. நான் கூட அன்னைக்கு உனக்கு சொன்னனே. அவ கண்டுபிடிச்சுடுவான்னு. ஆனா அவளுக்கு இப்படி ஆகும்னு நினைக்கல.”
“அந்த மூணு கொலைக்கு மோட்டிவ் இருக்கா இல்லையான்னு எனக்கு உறுதியா தெரியலை. ஆனா நற்பவி கொல்லப்படாததுக்கு மோட்டிவ் இருக்கு.”
“உண்மைதான். நானும் அப்படிதான் நினைச்சேன். ஏதோ ஒரு விஷயம் தெரியக்கூடாதுன்னு மூணு பேரை கொலை செஞ்சவன், நற்பவியை விட வாய்ப்பு இல்லையே.. இந்த வழக்கை சீக்கிரம் மூட சொல்லி மேலிடத்தில் இருந்து அழுத்தம் வேற. எந்த புள்ளியில் கை வச்சாலும் ஒரு கோடு போகுது.”
“ஓகே சார்.. இந்த கேஸை நாம இனி ரகசியமா ஹேண்டில் பண்ணலாம். நற்பவி விசாரிச்ச எல்லாரும் என் விசாரணை வளையத்துக்குள் வரட்டும். அவுங்களுக்கு தெரியாமலே. இதை இனி நான் பார்த்துக்கறேன்” என்று கூறிவிட்டு எழுந்து சென்றான்.
வீட்டிற்கு சென்றவன் நற்பவியின் அலைபேசி, கணினி மற்றும் அவளின் கையேடு என்று அனைத்தையும் ஆராய்ந்தான். அவள் சேகரித்து வைத்திருந்த தகவல்கள் அனைத்தையும் வரிசைப் படுத்தினான்.
அனைத்திற்கும் பிண்ணனியில் நிரண்யாவின் எதிர் வீடு இருந்தது. இறந்து போன பெண்ணின் அலைபேசி குறிகை இறுதியாக அந்த வீட்டில் இருந்திருக்கிறது. அவளுடைய காதலனும் இறந்துவிட்டான். ஏதோ ஒரு காரணத்தால் அங்கு வேலைப் பார்த்த செக்யூரிட்டி இறந்துவிட்டான். சி.சி. டீவி ஹேக் செய்யப் பட்டிருக்கிறது. அதுவும் குறிப்பாக அந்த வீட்டில். மொழி இறந்தது அந்த வீட்டில். நிரண்யா மொழியாய் மாறியிருப்பதற்கு காரணமும் அந்த வீடு. இன்பனிடம் அந்த வீடு இல்லை. நிரண்யாவிடம் லிஃப்டில் பேசிய பெண்மணி அந்த குடியிருப்பை சேர்ந்தவள் இல்லை. ஆனால் இதற்கு ஒரு காரணம் எழுதி வைத்திருந்தாள். அந்த பெண்மணி அங்கு யார் வீட்டிற்க்கோ வந்திருந்தாள் என்றும், திரும்பி செக்யூரிட்டி கேட்டில் கையெழுத்து இருக்கிறது என்றும் எழுதியிருந்தாள் நற்பவி. அதனால் அந்த காரணத்தை விளக்கிவிடலாம். ஆனால் அவள் சி.சி.டீவி ஃபூட்டேஜில் இல்லை என்பதால் குறிப்பிட்ட அந்த நேரத்திலும் அதை அழித்திருக்க வேண்டும். எதற்காக அழிக்க வேண்டும் என்று சிந்தனை செய்தான். மீண்டும் எழுதி வைத்தவைகளை ஆராய்ந்தான். நிரண்யா தொலைந்து போய் அந்த வீட்டில் கிடைத்த சமயத்தில் சி.சி. டீவி பதிவு அழிக்கப்பட்டிருந்தது. இது ஏன் காரணமாக இருக்கக் கூடாது. நிரண்யா அந்த வீட்டிற்கு செல்லும்பொழுதெல்லாம் பதிவு அழிக்கப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தான் அவன்.
அடுத்து அவள் அங்கு சென்ற போதெல்லாம் எதற்காக அழிக்கப்பட வேண்டும் என்ற பூதாகரமாக ஒரு கேள்வி அவன் முன் எழுந்து நின்றது.
நற்பவி உறங்கிக் கொண்டிருந்தாள். அவள் அதிர்ச்சியில் இப்படி இருக்கிறாள் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர். அவளின் அருகில் அமர்ந்து அவளைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும், அவளைச் சுற்றிப் பின்னப்பட்ட வலையிலிருந்து அவளைக் காப்பதே அவனுடைய முதல் பணி என்று மூளை அவனுக்கு அறிவுறுத்தியது.
அவளிடம் அரவம் உணர, எழுந்து அவள் அருகில் சென்றான். அந்த வழக்கைப் பற்றி அவளிடம் ஏதோ பேச முற்பட, அவள் அவனைத் தடுத்து நிறுத்தினாள்.
“என்னை நம்பாதே” என்று ஒரு வாசகத்தை எழுதி கொடுத்தாள் அவனிடம். அவன் குழப்பத்துடன் அவளைப் பார்த்தான்.
திகையாதே மனமே!