Loading

23 – காற்றிலாடும் காதல்கள் 

 

மிருணாளினி கூறி முடித்ததும் அதைக் கேட்டவர்களுக்கு என்ன பதிலாற்றுவது என்று புரியவில்லை. அவளின் அறிவே அவளுக்கும், அவளின் உடன்பிறந்தவளுக்கும் எமனாக நிற்கிறது. அவளது உழைப்பின் நோக்கம் வலுக்கட்டாயத்தினால் திசைமாறியதை  உணர்ந்தனர். 

இந்திரன் தான் முதலில் மனதைத் தேற்றிக்கொண்டு,“இந்தா புள்ள மிருதங்கம். உனக்கும் உன் அக்காவுக்கும் நடந்தது துரோகம். அதுக்கு நிச்சயம் இந்த கூட்டம் தண்டனை அனுபவிக்கும். இதுக்காக நீ அந்த குகை திறக்க போறது சரியில்ல.” என மீண்டும் மறுத்தான். 

“இத இன்னிக்கி நான் செய்யலன்னாலும் நாளைக்கு இன்னொருத்தர் வருவாங்க இந்திரண்ணா.  இது அவனுக்கு ரொம்ப பெரிய கனவு. அத நான் உடைச்சே தீருவேன். அதுக்கு நீங்க எல்லாரும் உதவி செஞ்சாலும் சரி செய்யலன்னாலும் சரி.” எனக் கூறிவிட்டு உமேஷ் முகத்தில் அங்கிருந்த நீரிணை ஊற்றினாள். 

அவன் மெல்ல மயக்கத்தில் இருந்து எழுந்து, “ஹேய் மிருணா.. எப்படி இருக்க? உன்ன கடைசியா அந்த மலைல பாத்தது.  அக்கா போன சோகத்துலையும் மினுமினுன்னு தான் இருக்க. ஆதர்ஷ் உன் பின்னாடி சும்மா சுத்தல.. ப்யூடி வித் ப்ரெய்ன்..” எனக் கூறி முடிக்கும் போது கீதன் அவன் வாயில் குத்தினான். 

“எங்க யாருகிட்ட இருக்கோம்ன்னு கொஞ்சமாது புரிஞ்சிக்க முயற்சி பண்ணனும் உமேஷ்.. உங்க பிளான் என்ன?” என நேரிடையாகக் கேட்டான். 

“யாரு பேபி இவன்? உன் ஆளா?”என உமேஷ் கேட்க மிருணாளினி முறைத்தாள். 

“கேட்டதுக்கு பதில் சொல்லுடா வெண்ண.. எதுக்குடா எங்க ஊருக்குள்ள சுத்திட்டு இருக்கீங்க? இன்னும் எத்தன பேரு இருக்கானுங்க?“ என இந்திரன் மற்றொரு பக்கம் வந்து நின்றுக் கேட்டான். 

“அதெல்லாம் சொல்லலாம் தான். ஆனா அதுக்கு முன்ன மிருணா விஜயராகவன் சார்கிட்ட ஒருதடவ பேசினா அவளுக்கும், அவள சேர்ந்தவங்களுக்கும் ரொம்ப நல்லது. என்ன செல்லம் பேசறியா?” என அவன் கூறிய தொனியில் மிருணாவிற்கு மனதில் பயம் எழுந்தது. 

“அவனுக்கு ஃபோன் போடு.” என கீதன் அவனது தொலைபேசியைக் கொடுத்தான். 

“என் ஃபோன் வேணும். அதுல கால் பண்ணா தான் எடுப்பாரு.” என உமேஷ் கூற அவனது போனை யுகேந்தர் லேப்டாப்பில் இணைத்திருந்த வயரை எடுத்துவிட்டுக் கொடுத்தான். 

“கிராமத்தான்னு நெனைச்சா எல்லா வேலையும் பாக்கறிங்க போலயே இது ரொம்ப தப்பு தம்பிங்களா..” என உமேஷ் திமிருடன் கூறியபடி விஜயராகவனுக்கு அழைத்தான். 

“பாஸ்.. மிரு செல்லம் இங்க ஒரு லோக்கல் டீம் வச்சிருக்கு. அதவச்சி நம்மள கவுக்க பிளான் போல. இருங்க குடுக்கறேன்.” என அவளிடம் ஸ்பீக்கர் ஆன் செய்துவிட்டு நீட்டினான். 

“மிருணா.. எப்படிம்மா இருக்க? உடம்பு பரவால்லயா?”என அவர் கேட்டதற்கு அவள் பதில் பேசாமல் உமேஷை முறைத்துக் கொண்டு நின்றாள்.  

“மிரு செல்லம் கோவமா இருக்கா பாஸ். இந்த ஆதர்ஷ் பையனுக்கு ட்ரைனிங் பத்தல..  இவளுக்கு ஒழுங்கா எதுவுமே சொல்லி குடுக்கல.. அதான் இப்படி முறைச்சிட்டு நிக்கறா..“

“இருக்கட்டும்.. இருக்கட்டும்.. அதுக்காக நம்ம கேங் விட்டு வெளிய போயிட முடியுமா என்ன? அவளோட அப்பா அம்மாவாது அவளுக்கு வேணும்ல.. என்ன மிருணா நான் சொல்றது சரி தானே?”விஜயராகவன் சிரித்தபடிக் கேட்டான். 

“இன்னும் எத்தன பேர பணையமா வைப்ப விஜயராகவன்? என்னோட கருவிலுருந்து ஒண்ணா இருந்தவள நீங்க எல்லாம் கொன்னுட்டீங்க  இன்னும் எத்தன காலத்துக்கு இப்படியே இருப்பீங்க?” அடக்கப்பட்டக் கோபத்துடன் கேட்டாள். 

“நீ எங்கக்கூட நிரந்தரமா தங்குறவரைக்கும்.. எங்களோட வேலை செஞ்சிட்டே இருக்கறவரைக்கும்.. என்னோட பல வருஷ கனவு அந்த குகை.. வடிவேலன நம்பி நான் இழந்தது பெருசு.. இப்ப உன்னால அத திறக்க முடியும்.. அத திறந்து தான் ஆகணும்.” என விஜயராகவன் வடிவேலன் பெயரைக் கூறியதும் கீதனோடு அனைவரும் கூர்மையாகக் கவனித்தனர். 

“அப்ப குகை திறந்தப்ப நீயும் இருந்தியா டா?” என கீதன் கேட்டதும் உமேஷ் அவனை உற்றுக் கவனித்தான். விஜயராகவன் முன்பொருமுறை வடிவேலன் புகைப்படத்தைக் காட்டியபோது பார்த்திருக்கிறான். அவரது ஜாடை கீதனுக்கு இருந்தது. 

“அது யாரு உமேஷ்?”

“உங்க ஃப்ரெண்ட் வடிவேலன் பையன் போல பாஸ். ஜாடை அப்டி தான் தெரியுது.” எனக் கூறி அவனைச் சிரித்தபடிப் பார்த்துவிட்டு, “பாஸ் நமக்கு நல்ல நேரம்தான். நம்ம தேடின டைரி இவன் அம்மாகிட்ட தான் இருக்கும்.” எனக் கூறிச் சிரித்தான்.

“அது கெடச்சாலும் இல்லைன்னாலும் அந்த குகை இந்த அமாவாசைல திறக்கணும்… நான் முடிஞ்சவரை முன்னாடி வரேன்… அதுவரை அங்க எல்லாத்தயும்  பாத்துக்க..“, எனக் கூறி அழைப்பைத் தூண்டித்தான். 

“பௌர்ணமில தானே குகை திறக்கணும்? இவன் என்ன அமாவாசைன்னு சொல்றான்.” யுகேந்தர் கேட்டதும் உமேஷ் டக்கென அவனைப் பார்த்து, “அந்த குகைய ஒரே நாள்ல திறக்கமுடியாது. அமாவாசை தான் முதல் திறப்பு நடக்கும். அதுக்கு மேல எப்பன்னு இவனோட அப்பா டைரில தான் இருக்கும். அந்த டைரி எங்க?” எனக் கூர்மையாகக் கேட்டான். 

அவர்கள் மீண்டும் அவனது வாயில் கள்ளை ஊற்றி மண்டபத்தின் மூலையில் கிடத்திவிட்டு வெளியே வந்தனர். 

“டேய் கீதா இது பல வருஷமா நடக்கற போராட்டம் போல.. நம்ம அவ்ளோ ஈசியா கை வைக்க முடியாதுன்னு இப்போ நல்லா புரிஞ்சிடிச்சி. இதுல மூடநம்பிக்கைய விட முகமூடி திருடனுங்க வேலை தான் அதிகமா இருக்கு. உங்கப்பா செத்தது விபத்தா கொலையா?” என யுகேந்தர் கேட்ட விதத்தில் மிருணாளினியும் யோசனையில் ஆழ்ந்தாள். 

“மொதல் நம்ம அந்த குகைப்பத்தி தெரிஞ்சிக்கலாம் யுகேந்தர் அண்ணா. அப்பறம் பாத்துக்கலாம். இவன ரொம்ப பாதுகாப்பா அடச்சி வைக்கணும். இவன்தான் அவனோட முக்கியமான ஆள்.  இவனுக்காக அவன் வருவான். அந்த குகைக்காகவும்.  இன்னும் 10 நாள்ல அமாவாசை அதுக்குள்ள நம்ம எல்லாமே தெரிஞ்சிக்கணும்.”

“புள்ள.. அவன் உங்கப்பா அம்மாவ பலியா வச்சிருக்கான். நீ அதப்பத்தி யோசிக்காம குகைய பத்தியே பேசிக்கிட்டு இருக்க?”இந்திரன் கோபமாகக் கேட்டான். 

“அவங்கள இங்க கூட்டிட்டு வந்துடலாம் இந்து.  நானே போய் கூட்டிட்டு வரேன். நம்ம ஆளுங்க நம்ம கண்முன்னாடி இருக்கறவரைக்கும் நமக்கு எந்த வகைலையும் ஆபத்தில்ல. இந்த தடவ நம்ம அந்த குகைய திறந்தே ஆகணும். அதுல இருக்க மர்மம் உடையனும்.” என கீதன் தீர்மானமாகக் கூறியப்பின், மிருணாவை யுகேந்தர் இல்லம் செல்லக் கூறிவிட்டு, இந்திரனை  வீட்டிற்கு காவல் இருக்கும்படிச் சொன்னவன், கார் எடுத்துக்கொண்டு மிருணாளினியின் பெற்றவர்களை அழைத்து வருவது என திட்டம் கூறினான். 

“உங்கப்பாகிட்ட பேசி ரெடியா இருக்க சொல்லு மிரு” கீதன் அவளிடம் முகவரி வாங்கிக்கொண்டுக் கூறினான். 

“அவரும் என்கிட்ட பேசறதில்ல கீதன். நீ போய் தாத்தா அனுப்பினாருன்னு சொல்லு நான் தாத்தாவ பேசச் சொல்றேன்.” என இறுகியகுரலில் கூறிவிட்டு வெள்ளைச்சாமிக்கு அழைத்துச் சுருக்கமாகக் கூறிவைத்தாள். 

“அவரு என்ன ஏதுன்னு கேக்கலியா மிருதங்கம்?”இந்திரன் கேட்டான். 

“அவரு என்னை இங்க கூட்டிட்டு வரும்போதே நான் நடந்தது எல்லாம் சொல்லிட்டேன். அப்பா அம்மாவ பலியா எப்ப வேணா வைப்பாங்கன்னு சொல்லி வச்சிருந்தேன்..”

“இதெல்லாம் மனசுக்குள்ள வச்சிக்கிட்டு தான் களியும் கோழியும் அப்படி திண்ணியா புள்ள நீ?” இந்திரன் கேட்ட விதத்தில் அனைவரும் சிரித்தனர். 

“போராட தெம்பு வேணுமே இந்திரண்ணா.. நான் அழுதுட்டே இருந்தா மட்டும் போனவங்க வரவா போறாங்க? தவிர இங்க வந்ததுல இருந்து அவ என்கூடவே இருக்காமாதிரி தான் தோணுது.  அவளோட வாசனையும், தொடுதலும் இப்பக்கூட நான் உணர்றேன்.” என தனது வலதுகையை அவள் பார்க்க அங்கே காற்றின் வடிவில் கிருபாலினி  அவளின் வலக்கையைப் பிடித்துக் கொண்டிருந்தாள் சிரித்தபடி…  

“மிரு.. நான் எப்பவும் உன்கூடவே தான் இருப்பேன். அந்த குகைய உன்னால திறக்க முடியும். உன்னால மட்டும் தான் அது முடியும்.” என அவள் கூறியது மிருணாவின் மனதில் எதிரொலித்தது. 

“என்ன புள்ள சொல்ற? அதெப்புடி அப்படி உணர முடியும்? சும்மா சொல்லாத.” இந்திரன் பயந்தபடிச் சுற்றிலும் பார்த்துவிட்டுக் கேட்டான். 

“எனக்கு தெரியல.  இப்ப கூட இதோ இந்த கைய அவ பிடிச்சிருக்கமாறி இருக்கு. அந்த கையோட கதகதப்பு நல்லாவே உணர முடியுது.” எனத் தனது வலதுக் கையை நீட்டித் தொட்டுப்பார்க்கக் கூறினாள். 

“ஹேய் சும்மா சொல்லாத. அதெப்புடி சூடு தெரியும்?”யுகேந்தர் கேட்டான். 

“நம்பிக்கை இல்லன்னா தொட்டு பாரு.” என அவனிடமும் நீட்டினாள். அவன் சற்றே பயந்து பின்னால் நகர கீதன் அவளது கையைப் பிடிக்க அவனால் அந்த கதகதப்பை உணர முடிந்தது. 

அதிர்வுடன் அவளின் முகத்தைப் பார்க்க, அவனுக்கு அவளருகில் நிழல் போல ஏதோ தெரிந்தது. சற்றே திகில் தோன்ற கையை உதறித் தன்னை சமன்படுத்திக் கொண்டான். 

“என்னடா? என்னாச்சி? சொல்லு மச்சி” என இந்தரனும், யுகேந்தரும் மாறி மாறி கேட்க, அவன் அவர்களது கையை இழுத்து மிருணாவின் வலது கைமேல் வைக்க அவர்களும் கையின் சூட்டை உணர்ந்துக் கைகளை உதறிக்கொண்டுத் தள்ளி நின்று அவளைப் பார்த்தனர். 

“உனக்கு எப்ப இருந்து இந்த உணர்தல் இருக்கு மிரு?” கீதன் மனதை அமைதிப்படுத்திக் கொண்டுக் கேட்டான். 

“இந்த ஊருக்கு வந்த உடனே கோவில் உள்ள போயிட்டு வெளிய ஒரு விநாயகர் கும்பிட்டோமே.. அப்ப கூட செந்தூரம் என் மேல விழுந்து நான் ஒரு தூண் மேடைல இருந்த ஒரு கப் தண்ணிய எடுத்து கைய கழுவிட்டு கொஞ்சமா குடிச்சேன். இந்திரண்ணா கூட கொஞ்சம் என்கிட்ட வாங்கி குடிச்சிட்டு இந்த கப் ஏதுன்னு விசாரிச்சாரே.. அப்ப ஒரு தடவை லேசா தெரிஞ்சது அப்பறம் இந்த மூணு நாலு நாள்ல அந்த உணர்தல் அதிகமாகிட்டே வந்தது. மனசுல இருந்த பாரம் கொறஞ்சது. இப்ப நடந்தது சொல்ல ஆரம்பிச்சத்துல இருந்து இப்படியே தான் இருக்கு. கிருபா இப்படிதான் என் கையப்பிடிச்சிட்டு நடப்பா. அதே தொடுதல்..” எனக் கூறி கண்களில் நீர் வழிய தனது கையைத் தடவிக்கொண்டாள். 

“மாப்ள இது என்னடா ஏதேதோ சொல்லுது.. எனக்கு வேற பயமா இருக்கு. கோடாங்கிகிட்ட கூட்டிட்டு போவோமா?”என இரகசியமாகக் கேட்டான். 

“டேய் கம்முன்னு இருடா. இது ஏதோ நமக்கு புரியாத விஷயம் நடக்கறமாதிரி இருக்கு. அந்த சூடு நமக்கும் தெரிஞ்சதுல. நம்மலும் வேப்பலை அடிச்சிக்கணுமா?” யுகேந்தர் கோபமாகக் கேட்டான். 

“இந்து, அந்த பொண்ணோட இன்னொரு உருவம் காத்து போல நிக்குது. உங்களுக்கு தெரியுதா பாருங்க?” என கீதன் மிருணாளினி நடந்துச் செல்வதைப் பார்த்தபடிக் கூறினான். 

இந்திரனுக்கும், யுகேந்தருக்கும் லேசாக ஏதோ உடன் நடப்பது போல தெரியத் தொடங்கி மிருணாவை போலவே இன்னொரு உருவம் உடன் கைப்பிடித்து நடந்துச் செல்வதுத் தெளிவாகத் தெரியத்தொடங்கியது. 

நண்பர்கள் மூவரும் பயத்தில் முகம் வெளிற ஒருவரையொருவர் பார்த்தபடி அவளின் பின்னே ஓடினர். 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்