Loading

அக்குழு வாலண்டியரிங்கிற்காக வந்திருந்த ஊரிற்குள் பஸ் நுழைந்ததும் குழுவின் வழி நடத்துனர் ஊரிற்குள் வந்துவிட்டதாக அறிவிப்பு விடுக்க மெதுவாக கண்விழித்தாள் சமுத்ரா.

வண்டி ஒரு கோவிலின் முன் நிற்க தன் உடைமைகளோடு கீழே இறங்கியவள் மெதுவாக சுற்றுப்புறத்தை ஆராய்ந்தாள்.

மண்வாசனையை சற்றும் மறக்காத அந்த இடத்தினை பனியும் பச்சை மரங்களும் போட்டிபோட்டு ஆக்கிரமித்திருக்க சூரியனின் செங்கதிர்கள் தன் முழுப்பலத்தையும் வெளிகாட்டமுடியாதபடி திண்டாடிக் கொண்டிருந்தது.

இந்த 21ஆம் நூற்றாண்டில் கூட நகரவாசனையை அறியாத இருந்த அக்கிராமத்தில் கல்வி அறிவும் அடிப்படை வசதிகளும் அறவே மறுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் கூட அது அக்கிராமத்தின் செழுமையையோ அங்கிருந்த மக்களின் வதனங்களில் தேங்கிக்கிடந்த புன்னகையையோ சற்றும் மங்கவிடவில்லை.

அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட அம்மக்களுக்கு அரசாங்கம் பெயருக்காக சில உதவிகளை மட்டும் செய்திருக்க இந்த வாலண்டியரிங் குழுவின் முக்கிய நிர்வாகி அக்கிராமத்தை தத்தெடுத்திருந்தார். அந்த கிராமத்தின் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை தன் குழு உறுப்பினர்களிடம் கேட்க விரும்பியவர் ஒன்று கூடலின் போது தெரியப்படுத்த பலர் பொருளாகவும் பலர் இப்படி கிளம்பி வந்து உதவுவதாகவும் கூறிட மாதம் ஒரு முறை இந்த குழு வருகை ஏற்பாடு செய்யப்படும். இம்முறை சமுத்ராவும் இவர்களோடு வந்திருக்கிறாள்.

எப்போதும் போல் அந்த ஊரின் அழகை ரசித்தபடி நின்றிருந்தவளது கண்கள் அப்போது தான் ஷாத்விக்கை கண்டது. அவனை கண்டதும் ஒரு நொடி குழம்பியவள் மறுநொடியே என்ன நடந்திருக்குமென்று புரிந்துகொண்டாள். ஆனால் முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளாதவள் அவனை கவனிக்காததை போல் நின்றுகொண்டாள்.

அவளையே கவனித்தபடி நின்றிருந்த ஷாத்விக்கும் இதனை கவனித்துவிட்டு பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு அங்கு நடப்பதை கவனிக்கத் தொடங்கினான்.

அந்த கோவிலுக்கு பின்னாலிருந்த பெரிய வீட்டில் வந்திருந்த அனைவரும் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சற்று நேரம் ஓய்வெடுத்தவர்கள் உணவை முடித்துவிட்டு கிளம்ப சமுத்ரா ஷாத்விக் இருக்கிறானா என்று தேடியபடியே வெளியே வந்தாள்.

அவனோ வெளியே ஓரமாய் நின்று வாந்தி எடுத்துக் கொண்டிருந்தான். அக்குழுவில் வந்திருந்த இன்னொரு இளைஞன் அவனுக்கு உதவி செய்துகொண்டிருக்க சமுத்ராவோ பதட்டத்துடன் அவர்களருகே சென்றாள்.

“என்னாச்சு?”என்று சோர்ந்து போய் அமர்ந்திருந்த ஷாத்விக்கை பார்த்தபடியே சமுத்ரா கேட்க 

“தெரியலங்க. சாப்பாடு சேரல போல. நீங்க இந்த தண்ணியை குடிக்க கொடுங்க. நான் டாக்டர் யாரும் இருந்தா அழைச்சிட்டு வரேன்.”என்று அந்த இளைஞன் சமுத்ராவிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு செல்ல சமுத்ரா ஷாத்விக்கை நெருங்கி மெதுவாக அவனின் தலையை தொட்டு பார்த்தாள்.

உடல் சூடு சீராக இருக்க

“என்ன சாப்பிட்டீங்க?” என்று கேட்க ஷாத்விக்கோ சோர்வான குரலில்

“ஒன்னும் சாப்பிடல”என்று கூற அவனுக்கு அல்சர் இருக்கும் விஷயம் நினைவு வர அந்த இளைஞன் கையில் திணித்து விட்டு சென்ற தண்ணீர் போத்தலை திறந்து கொடுத்து குடிக்கச்சொன்னாள் சமுத்ரா.

அதனை வாங்கி மெதுவாக வாயில் சரித்தான் ஷாத்விக். அப்போது அந்த இளைஞன் இன்னொருவருடன் வர

“என்ன சமுத்ரா என்னாச்சு?” என்று மற்ற நபர் கேட்க

“அவருக்கு அல்சர் இருக்கு கேசவ் சார். காலையில இருந்து ஏதும் சாப்பிடல போல. அதான் வாமிட் பண்ணிட்டாரு.” என்று சமுத்ரா தன் யூகத்தை கூற அவனை பரிசோதித்த அந்த மருத்துவரும் தான் கையோடு எடுத்து வந்திருந்த சில மாத்திரைகளை கொடுத்து தற்காலிகமாக குடிக்க கொடுத்துவிட்டு தற்சமயம் குடிப்பதற்கு ஏதுவாக ஏதாவது நீராகாரமாக கொடுக்கச்சொன்னார்.

நன்றி கூறிய சமுத்ரா

“நீங்க இரண்டு பேரும் போங்க. நான் இவரை பார்த்துக்கிறேன்.ஈவனிங் இரண்டு பேரும் வந்து ஜாயின் பண்ணிக்கிறோம்.” என்று கூறி அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்தவள் ஷாத்விக்கை பார்த்தாள்.

அவன் இன்னுமே சோர்வாக இருக்க அவனை உள்ளே அழைத்து சென்ற சமுத்ரா அவன் குடிப்பதற்கு ஏதுவாக கஞ்சி கேட்டு எடுத்து வந்தாள்.

அதனை வாங்கி பருகிய ஷாத்விக் சற்று தெம்பானதும் அவளை பார்க்க பயந்து தலையை குனிந்தபடியே 

“தேங்க்ஸ்.”என்று மட்டும் கூற

“நேரத்துக்கு சாப்பிடுங்க”என்று மட்டும் கூறியவள் மருத்துவர் கொடுத்து சென்ற மாத்திரைகளை கொடுத்து குடிக்கவைத்துவிட்டு அவனை சற்று நேரம் உறங்கச்சொன்னாள்.

அமைதியாக தன்னை கவனிப்பவளை உள்ளுக்குள் சற்று அச்சத்துடனேயே பார்த்துக்கொண்டிருந்தான் ஷாத்விக். அவன் எதிர்பார்த்த எதுவும் நடக்காததே அவனின் அச்சத்திற்கு காரணம். ஆனால் அவனின் நிலையை எண்ணியே சமுத்ரா அமைதியாக இருக்கின்றாளென்று அவன் அறிந்திருக்கவில்லை.

இரண்டு மணிநேர உறக்கத்திற்கு பின் மெதுவாக கண்விழித்த ஷாத்விக் வெளியே வந்தபோது சமுத்ரா வெளியே ஒரு குழந்தையை மடியில் வைத்து கொஞ்சிக்கொண்டிருந்தாள்.

குழந்தையை கொஞ்சும் அவளின் வதனத்தில் ஒரு இலகுத்தன்மையும் எப்போதும் மறைக்கப்பட்டிருக்கும் புன்னகையும் மேலோங்கி படர்ந்துகிடக்க அது ஆழ்ந்து ரசிப்பதற்குரிய அழகிய காட்சியாய் ஷாத்விக்கிற்கு தெரிந்தது.

குழந்தையோடு குழந்தையாகி செல்லம் கொஞ்சும் அவளின் நளினத்தை பார்த்தபடியே நின்றிருந்த ஷாத்விக்கை எதேச்சையாக திரும்பும் போது கவனித்தாள் சமுத்ரா.

குழந்தையை தூக்கியபடியே எழுந்தவள்

“இப்போ எப்படி இருக்கு?”என்று கேட்க

“பரவாயில்லை”என்று ஷாத்விக் சொல்ல

“சாப்பிட்டு கிளம்பலாம்”என்றவள் அவர்களுக்கு தயாராயிருந்த வாழையிலையால் சுற்றப்பட்டிருந்த உணவுப்பொதியை எடுத்து வந்தவள் ஷாத்விக்கிடம் ஒன்றை கொடுத்துவிட்டு கீழே அமர்ந்தவள் தன்னதை பிரித்து உண்ணத் தொடங்கினாள்.

அவளருகே அமர்ந்த ஷாத்விக்கும் உணவுப்பொதியை பிரித்தபடியே

“அந்த பாப்பா?”என்று கேட்க

“வேலைக்கு வந்திருக்கிற அக்காவோட பாப்பா. அவங்ககிட்ட இருக்கா”என்று பதிலை சுருக்கமாக சொன்னவள் சாப்பிட்டு முடித்துவிட்டு ஷாத்விக்கோடு கிளம்பினாள்.

கிளம்பும் முன் சில ஸ்நேக்ஸ்களையும் தண்ணீர் போத்தலையும் மறக்காமல் பத்திரப்படுத்திக் கொண்டாள் சமுத்ரா.

இருவரும் கிளம்பி வெளியே வந்ததும்

“மத்தவங்க இப்போ எங்க இருப்பாங்க?”என்று ஷாத்விக் கேட்க

“இன்னைக்கு இங்க இருக்க ஸ்கூலை சுத்தம் பண்ணுறது தான் ப்ளான். எல்லாரும் அங்க தான் இருப்பாங்க.”என்று சமுத்ரா கூற

“உனக்கு வழி தெரியுமா?”என்று கேட்க

“ஆமா”என்று மட்டும் கூறியவள் நடக்கத்தொடங்கினாள்.

ஆனால் சற்று நேரத்தில் பேய் மழையொன்று அடித்து ஊற்ற இருவராலும் முன்னேற முடியவில்லை.

தற்காலிகமாக ஒதுங்குவதற்கு இடம் தேடிய இருவரும் வழி தவறி ஒரு காட்டிற்குள் நுழைந்து விட்டனர்.

“மழை விடுற மாதிரியும் தெரியல”என்று ஷாத்விக் வானத்தை ஆராய்ந்தபடியே சொல்ல சமுத்ராவுக்கும் அதுதான் நிஜமென்று புரிந்தது.

“நாம வழி மாறி வந்துட்டோம். மழை விட்டா தான் வழி தேட முடியும்.”என்று சமுத்ராவும் சொல்ல இருவரும் அப்போதைக்கு அங்கேயே இருப்பதென்ற முடிவுக்கு வந்திருந்தனர். இருவரும் பெரிதாக குடையப்பட்டிருந்த மரத்தினுள் ஒதுங்கியிருக்க அதுவோ சின்ன சைஸ் டென்டை போலிருந்தது. 

இருவருக்கும் இடையிலான இடைவெளி குறைவாகவே இருக்க இருவருக்குமே அந்த சூழ்நிலை சற்று சங்கடமாக இருந்தது.

இந்த அமைதி தொடர்ந்தால் ஏதாவது ஏடாகூடமாகிவிடுமென்று பயந்த ஷாத்விக் மெதுவாக பேச்சு கொடுக்க ஆரம்பித்தான்.

“அடிக்கடி இங்க வருவியா சமுத்ரா?”என்று கேட்க

“மனசுக்கு ஒரு தனிமை தேவைங்கிற நேரம் ஒரு வாரம் வந்துட்டு போவேன்.”என்று சமுத்ரா கூற

“ஓ…”என்றவனிடம்

“நீங்க எதுக்கு வந்தீங்க?”என்று சமுத்ரா கேட்க இப்போது ஷாத்விக்கின் வாய் இறுக மூடிக்கொண்டது.

உன்னை கரெட் பண்ணதான் வந்தேனென்று சொல்லும் தைரியம் அவனுக்கு சுத்தமாக இல்லை. அப்படியே சொன்னாலும் இந்த கொட்டும் மழையில் தயவுதாட்சண்யம் பார்க்காமல் சமுத்ரா அடித்து துரத்தவும் தயங்கமாட்டாளென்று அவனுக்கு நன்றாகவே தெரியும்.

“அது அது நானும் இது பத்தி சோஷல் மீடியால பார்த்தேன். அதான் ஒரு புது அனுபவமாக இருக்குமேன்னு”என்றவனுக்கு அதற்கு மேல் ஏதாவது சொன்னால் நிச்சயம் அடுக்கடுக்காய் கேள்வி வருமென்று தெரிய பேச்சை மாற்றினான்.

“இந்த ஊரு ரொம்ப அழகாயிருக்குல்ல. சுத்தி மரம்,சுத்தமான காத்து, வளமான மண்ணு இந்த மாதிரி ஒரு இடம் நம்ம ஊருலயும் இருந்தா நல்லா இருந்திருக்கும். ஆர்கனிக் பார்மிங் செய்ய சூப்பரான இடம்”என்று ஷாத்விக் சொல்ல சமுத்ரா அமைதியாக அவனை பார்த்துக்கொண்டிருந்தாள்.

“நேத்து உங்க ப்ரெண்ட் கூட எங்க போனீங்க?”என்று சமுத்ரா திடீரென்று கேட்க ஷாத்விக்கிற்கு எதுவும் புரியவில்லை.

“அது…”என்று அவன் தயங்க

“நேத்து உங்க ப்ரெண்ட்டும் நீங்களும் பேசிட்டு இருந்ததை கேட்டேன்.” என்று சமுத்ரா சொல்ல ஷாத்விக்கோ இவள் எப்போது கேட்டாளென்று குழம்பினான்.

பின் அவளிடம் முழு விவரமும் சொன்னான். சமுத்ராவும் அதை ஆர்வத்தோடு கேட்டதோடு தன்னாலான உதவிகளையும் செய்வதாக உறுதி கூறினாள்.

ஷாத்விக்கிற்கோ அது பெருத்த மகிழ்ச்சியை கொடுத்தது. இத்தனை நாட்களாய் பாராமுகத்தை மட்டுமே காட்டியவள் இன்று அவளே முன்வந்து விசாரித்ததோடு உதவுவதாக கூறியது ஏனோ அவர்களின் உறவுக்கான சிறு முன்னேற்றமாக தெரிந்தது. 

இப்படியே நேரம் கடந்தபோதிலும் வெளியில் கொட்டிக்கொண்டிருந்த மழையோ நின்றபாடில்லை.

இப்போது நன்றாகவே இருட்டத்தொடங்கியிருக்க இன்று இங்கிருந்து வெளியேற முடியாதென்று இருவருக்கும் தெரிந்துபோனது.

“மழை நிற்கிற மாதிரி தெரியல. இன்னைக்கு இங்க தான் தங்கனும் போல” என்று ஷாத்விக் சொல்ல

“அப்படி தான் தெரியிது. கூட வந்தவங்க நம்மளை காணமேனு தேடுவாங்கனு தான் கவலையாக இருக்கு”என்று சமுத்ரா யோசனையோடு கூட ஷாத்விக்கிற்கும் அவ்வூரில் சிக்னல் சுத்தமாக இல்லை என்ற விஷயம் அப்போது தான் ஞாபகம் வந்தது.

“இப்போ என்ன செய்றது?” என்று அவனும் சற்று கவலையோடு கேட்க

“லைட்டா நெருப்பு மூட்டி இங்கேயே தங்கிக்கலாம். எதுக்கும் இருக்கட்டுமேனு கொஞ்சம் ஸ்நேக்ஸ் அப்புறம் தண்ணியெல்லாம் எடுத்துட்டு வந்தேன். நைட்டு அதை வச்சி சமாளிச்சுக்கலாம். இப்போதைக்கு ஈரமில்லாத குச்சி எதுவும் இருக்கானு பாருங்க. போன்ல சார்ஜூம் கொஞ்சம் தான் இருக்கு.” என்று சமுத்ரா கூற இருவரும் போன் டார்ச் லைட்டின் உதவியோடு சில குச்சிகளை பொறுக்கி சிறிதளவில் நெருப்பை எறியவிட்டனர். தாங்கள் இருக்குமிடம் பெரிய மரப்பொந்து என்பதால் நெருப்பை அதிகமாக எரியவிடவும் பயமாக இருந்தது. அதோடு வேறேதும் பூச்சி எதுவும் கடிக்காமலிருக்க தன் பையிலிருந்த ஒரு க்ரீமை எடுத்து கொடுத்தாள் சமுத்ரா.

இருவரும் அதை பூசிக்கொண்டு கொண்டு வந்திருந்த ஸ்நேக்ஸை காலி செய்தனர். 

வெளியில் மழையின் வீரியத்தில் எந்த மாற்றமும் இல்லாதிருக்க உள்ளே குளிரின் அளவு கூடிக்கொண்டிருந்தது.

ஏற்கனவே இருவரின் உடையும் முற்றாக நனைந்திருந்ததால் மிச்சமிருந்த ஈரம் இப்போது இருவரின் உடலையும் ஊசியாய் துளைத்தது. 

சமுத்ராவோ நொடிக்கு நொடி குளிரில் நடுங்க அவள் அணிந்திருந்த எந்த கனமான உடையும் அவளின் குளிரை போக்குவதாயில்லை. ஷாத்விக்கிற்கும் குளிராயிருந்த போதிலும் பெரிதாக அது அவனை ஊடுருவாததால் அவனிடம் நடுக்கமில்லை.

சமுத்ராவின் நிலையை கண்டவனுக்கு அவளின் தேவை புரிய கேட்கலாமா வேண்டாமாவொன்று பெரிதும் தயங்கினான். இப்படியே இருந்தால் பின் காய்ச்சல் வந்துவிடுமென்று எண்ணியவன் எதை பற்றியும் யோசியாது அவளருகே சென்று இறுகி அணைத்துக்கொண்டான். 

குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த சமுத்ராவின் மனம் வேண்டாமென்று மறுத்த போதிலும் உடலோ ஷாத்விக்கின் உடல் கதகதப்பிற்கு ஏங்க தந்தியடித்த பற்களை கட்டுப்படுத்திக்கொண்டு ஷாத்விக் கதகதப்பில் அமர்ந்திருந்தாள்.

உதவும் நோக்கத்தோடு சமுத்ராவை அணைத்திருந்த ஷாத்விக்கின் நிலை தான் இப்போது சிக்கலானது.

முதலில் சாதாரணமாக இருந்த ஸ்பரிசம் நேரம் செல்ல செல்ல அவனின் உணர்வை கிளரச்செய்யும் வேலையில் தன்னை முழுதாக இறக்கியிருந்தது.

சமுத்ராவை தொடர்ந்து அணைத்திருக்கவும் முடியாமல் சட்டென்று அவளை விட்டு விலகவும் முடியாமல் உணர்வுகளின் கோரத்தாண்டவத்தால் கதிகலங்கி போனான் ஷாத்விக். அதற்கு வெளியிலிருந்த காலநிலையும் தாளம் போட தன் உணர்வுகளை அடக்க பெரும்பாடுபட்டான் ஷாத்விக்.

அவனின் மனமோ 

“உன் மனைவியை தொடுவதற்கு ஏன் இத்தனை தயக்கம்?”என்று வியாக்யானம் பேச மூளையோ

“உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து உறவை கெடுத்திடாதே”என்று அச்சுறுத்தியது.

அவனின் அணைப்பிலிருந்த சமுத்ராவுமே இதே நிலையில் தான் இருந்தாள். தூர நின்றபோது பாதிக்காத அவனின் ஆளுமை இந்த அருகாமையில் அவளை கொஞ்சம் கொஞ்சமாக அவள் வசமிழக்கச்செய்திருந்தது. 

மனம் உனக்குரியவன் தானே என்று வாதிட மறுக்கும் காரணம் தெரியாது திண்டாடிப்போனாள் சமுத்ரா. 

அவள் என்னதான் ஷாத்விக் மீது வெறுப்பிருப்பதாக காட்டிக்கொண்டாலும் அவள் மனம் அவன் மீதான காதலாலேயே நிரம்பிவழிந்தது.

முதலிரவு அறையில் ஷாத்விக் தன் வார்த்தைகளை கட்டுப்படுத்தியிருந்தால் இந்த இடைவெளியை சமுத்ராவோ எப்பதோ சரி செய்திருப்பாள்.

இப்போது அதனையே காரணமாய் காட்டி விலகமுயன்றவளை அவளின் உணர்வுகள் விடுவிக்கவில்லை. அவளுணராமலே அவள் அவர்களுக்கிடையிலான இடைவெளியை குறைக்க காரணம் தேடிக்கொண்டிருந்தவனுக்கு அவளின் அதிகப்படியான நெருக்கம் சமிஞ்ஞையாகிட குனிந்து அவளின் இதழ்களை கவ்வி தன் மொத்த உணர்வுகளையும் அவளுக்கு கடத்தினான்.

சமுத்ராவும் இசைந்து கொடுத்ததால் அந்த நீண்ட முத்தம் அவர்களின் முன்னேற்பாடில்லா தாம்பத்தியத்திற்கு அடித்தளமாகி அவர்களை அடுத்த நிலைக்கு அழைத்து சென்றது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்