Loading

மறுநாள் காலை சூரிய ஒளியின் தீண்டலால் கண்விழித்த ஷாத்விக் தன் கைவளைவில் முதல் கூடல் தந்த களைப்பில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த சமுத்ராவை பார்த்தான்.

இத்தனை நாள் அவளுள் தன்மீது அளவுக்கு அதிகமான வெறுப்பு மண்டிக்கிடக்கின்றதென நம்பிக்கொண்டிருந்தவனின் நம்பிக்கையை முதல் நாள் இரவு முற்றாக உடைத்திருந்தது.

நிச்சயம் சமுத்ராவின் மனதில் தன் மீதான காதல் அதே ஆயுளுடன் இருக்கின்றதென்பதை நேற்றிரவு நன்றாகவே புரிந்துகொண்டான் ஷாத்விக்.

உணர்வுகளின் ஆட்டத்தினை கையாளும் பக்குவநிலை இல்லாத விடலைகளல்ல இருவரும். நேற்றிரவு நடந்த கூடல் இருவரதும் காதலின் வெளிபாட்டால் நடந்த ஒன்று. அதில் வயதின் கோளாறோ, மோகத்தின் ஆக்கிரமிப்போ சற்றுமில்லையென்று ஷாத்விக் உறுதியாக நம்பினான்.

ஆனால் நேற்றைய இரவிற்கு பிறகு சமுத்ராவின் எதிரொலி எப்படி இருக்குமென்பதே ஷாத்விக்கின் கவலை. ஆனால் அவனை பொறுத்தவரை வாழ்நாள் முழுவதும் அவன் வாழ்க்கையில் சமுத்ரா மட்டுமே. இதனை சமுத்ரா புரிந்துகொள்ளும் வரை அவள் காலில் விழுந்து கெஞ்சுவதற்கு கூட ஷாத்விக் தயாராக இருந்தான்.

தன்னருகே அயர்ந்து உறங்குபவளின் நெற்றியில் அவள் உறக்கம் கலையாதவகையில் இதழ் பதித்தவன்

“லவ் யூடி பொண்டாட்டி.” என்றவன் அவளை விலக்கி படுக்கவைத்துவிட்டு கழற்றி எறிந்திருந்த சட்டையை தேடி எடுத்து மாட்டிக்கொண்டு மெதுவாக வெளியே வந்து பார்த்தான்.

இப்போது மழை முற்றாக விட்டிருக்க தேங்கியிருந்த தண்ணீரும் சூரியனின் வருகையால் மறையத்தொடங்கியிருந்தது.

இப்போது கிளம்பினால் சரிப்படுமென்று எண்ணியவன் வெளியே இருந்தபடியே சமுத்ராவை அழைத்தான் ஷாத்விக். மெதுவாக உறக்கம் கலைந்து எழுந்தவள் விழிகளை திறக்காமலேயே என்னவென்று கேட்க ஷாத்விக் கிளம்பலாமென்று சொல்ல இப்போது தான் அவளின் உறக்கம் மொத்தமாக கலையத்தொடங்கியது.

உறக்கம் கலைந்தவளுக்கு முதல்நாள் இரவு நடந்த அனைத்தும் நினைவு வர அவளின் முகம் செம்மையை சிறிது சிறிதாக தத்தெடுக்கத்தொடங்கியது. கடினப்பட்டு தன்னை சமன் செய்துகொண்டவள் தன் ஆடைகளை சரி செய்துகொண்டு வெளியே வந்தாள்.

வெளியே வந்தவள் ஷாத்விக்கை நேரே பார்க்க வெட்கி பார்வையை வேறு புறம் திருப்பிக்கொண்டவள்

“போகலாம்.”என்று கூறி முன்னே நடந்தவளை இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருந்தான் ஷாத்விக்.

இன்று ஏனோ அவளுள் பொதிந்துகிடந்த மொத்த அழகும் வெளிப்படுவதாக அவனுக்கு தோன்றியது.

அவளை ரசித்தபடியே பின்னால் நடந்தவனது நா பாடல்வரிகளை முணுமுணுத்தது.

“மின்சாரம் மேலே கை வைத்து விட்டேன்

ஆனாலும் கண்ணே விரும்பி தான் தொட்டேன்

கடிகாரம் போலே நம் சிநேகம் என்பேன்

இரு உள்ளம் சேரும் நேரம் எதிர்பாத்து நின்றேனே”

இந்த வரிகள் சமுத்ராவின் செவிகளில் விழுந்து அவளின் இதழ்களில் ஒரு வெட்கப் புன்னகையை உதிரச்செய்ய பின்னால் வந்ததால் ஷாத்விக்கிற்கு அது தெரியவில்லை.

இந்த வரிகளுக்கு ஏதாவது ஒரு எதிரொலி இருக்குமென்று எதிர்பார்த்தவனுக்கோ சமுத்ராவின் வேக நடையே பதிலாக கிடைத்தது.

அதுவே சில நிமிடங்களுக்கு தொடர இது சரிப்படாது என்று எண்ணியவன் ஓடிச்சென்று அவளின் பாதையை மறைத்தபடி நின்றான்.

சட்டென்று தன் முகப்பாவத்தை இறுக்கமாக மாற்றிக்கொண்டவள்

“எதுக்கு வழியை மறைச்சிட்டு நிற்கிறீங்க?” என்று கேட்டவளிடம்

“உன்னை பேஸ் டூ பேஸ் சைட் அடிக்கனும்னு தோணுச்சு. அதான்.” என்று அவன் சாதாரணமாக சொல்ல சமுத்ராவிற்கு தான் சட்டென்று முகம் சிவந்து விட்டது.

எல்லை கடக்க முயன்ற புன்னகையை வலுக்கட்டாயமாக இழுத்து பிடித்து மறைத்தவள் முறைப்பதை போல் நடித்தாள்.

அதை கண்டு வெளிப்படையாகவே சிரித்தவன்

“இப்படி முறைச்சா நாங்க பயந்திடுவோமா?” என்று ஷாத்விக் சிரிப்புடனேயே கேட்க தன் கை மணிக்கட்டை தூக்கிபிடித்து திருப்பிகாட்டியபடி

“அப்போ உதைச்சா பயந்திடுவீங்களா?” என்று கேட்க ஒரு அடி பின்வாங்கினான் ஷாத்விக்.

“அது அது நான்.. ஆஆ வழி தெரியுமானு கேட்க வந்தேன்.” என்றவன் மீண்டுமொருமுறை இருக்கும் இடையிலான இடைவெளியை உறுதிசெய்துகொண்டான்.

“ம்… வழி தெரியும்” என்றவள் முன்னே நடக்க அவளை அமைதியாக பின்தொடர்ந்தான் ஷாத்விக்.

காலை வெயில் படர்ந்திருந்த குளிருக்கு இதமாக அதனை கண்டுகொள்ளாது சமுத்ரா பாதையில் கவனம் வைத்து முன்னேற ஷாத்விக்கோ சூழலை அனுபவித்தபடி மனைவியை ரசித்தபடியே பின்தொடர்ந்தான்.

இறுதியாக இருவரும் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்திட அவர்களோடு வந்திருந்த மற்றவர்கள் பதட்டத்துடன் அவர்கள் இருவரையும் வரவேற்றனர்.

அவர்கள் நலம் அறிந்துவிட்டு இனி குழுவை விட்டு தனியே பிரிந்து செல்லவேண்டாமென்ற அறிவுறுத்தலுடன் அவர்கள் ஓய்வெடுக்க அனுப்பிவைத்தனர்.

அப்போது அவ்வூரின் போஸ்ட் ஆபிஸிலிருந்து ஷாத்விக்கிற்கு தந்தி வந்திருப்பதாக தெரிவிக்கப்பட உடனேயே என்ன செய்தியென்று விசாரித்தான்.

அவ்வூரில் சிக்னலுக்கே வாய்ப்பில்லாத காரணத்தால் ஒருவரை உடனடியாக தொடர்புகொள்ள வேண்டுமென்றால் தந்தி அனுப்புவதொன்றே ஒரு வழி.

வந்த தந்தியோ அவனின் தந்தைக்கு விபத்தென்றும் அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல் சொல்ல ஷாத்விக் நிலைகுலைந்து போனான். சமுத்ரா தான் நிலைமையை புரிந்துகொண்டு உடனே கிளம்புவதற்கான ஏற்பாடுகளை செய்தாள்.

ஊரை தாண்டியதும் சமுத்ரா வீட்டிற்கு அழைக்க அழைப்பு எடுக்காமல் போக அடுத்து மஹதிக்கு அழைத்தாள்.

இரண்டே ரிங்கில் அழைப்பு எடுக்கப்பட மறுபுறம் அமராவதியோ ஓவென்று கதறினாள்.

இப்போது சமுத்ராவுக்கும் உள்ளுக்குள் கலங்கியது. தன்னருகே ஏதாவது நல்ல செய்தி வருமாயென்று தன் முகத்தையை பார்த்துக்கொண்டிருந்த ஷாத்விக்கை பார்த்தவள் அழைப்பில் தன் வார்த்தைகளை நிதானமாக வெளியிட்டாள்.

“அம்மா மஹிகிட்ட கொடுங்க.” என்று சொல்ல இப்போது அழைப்பு கைமாறியது.

“மஹி என்னாச்சு?” என்று விசாரிக்க மஹதி நடந்ததை விவரிக்கத்தொடங்கினாள்.

“மாமாவும் அத்தையும் நேத்து நைட்டு நம்ம வீட்டுக்கு வந்தாங்க. காலையில் மாமா கடைக்கு போயிட்டு வரும் வழியில லாரி மோதிடுச்சு. ஹெவி ப்ளட் லாஸ். 24 மணிநேரத்திற்கு பிறகு தான் எதுவும் சொல்லமுடியும்னு சொல்லிட்டாங்க அக்கா.” என்று மஹதியும் தேம்பலுடன் விஷயத்தை சொல்லி முடித்தாள்.

மேலும் சில விவரங்களை கேட்டு தெரிந்துகொண்டவள் அழைப்பை துண்டிக்க ஷாத்விக்கும் கலக்கத்துடன் என்னவென்று விசாரிக்க அவன் பதட்டமடையாதவாறு விஷயத்தை சொன்னாள்.

ஆனால் விஷயம் தீவிரமில்லாது அப்படியொரு தந்தி வராது என்று எண்ணியவன் சமுத்ரா ஏதோ மறைக்கிறாளென்று புரிந்து உடனேயே நாதனுக்கு அழைத்து விஷயத்தை கூறிவிட்டு விசாரிக்க சொன்னான்.

அடுத்து பவதாரிணியிடமிருந்து அழைப்பு வர அதை ஏற்றவனுக்கு மறுபுறம் பவதாரணியின் அழுகுரலே கேட்டது.

“பவி பவி ஏன் அழுற? என்னாச்சு சொல்லு.”என்று ஷாத்விக் கலக்கத்துடன் கேட்க

“அப்பாவை கடைசியாக ஒருமுறை கூட பார்க்க முடியாத பாவியாகிட்டேனாடா.”என்று பவதாரணி அழ, நடுங்கும் கரங்களால் தன் அலைபேசியை இறுக பற்றியவன் 

“பவி நீ….நீ…. என்ன சொல்லுற? ” என்றவனின் குரல் கம்ம 

“அப்பா… அப்பா … அப்பா பொழைக்கிறது கஷ்டம்னு டாக்டர் சொல்லிட்டாங்கடா… ” என்றவள் ஓவென்று கதறினாள்.

அதற்கு மேல் அவளால் பேசமுடியாது போக அவளின் கணவனான பல்லவன் பேச விஷயத்தை முழுதாய் கேட்டு தெரிந்துகொண்டான் ஷாத்விக்.

அழைப்பு துண்டிக்கப்பட்டதும் ஷாத்விக் ஏமாற்றத்துடன் சமுத்ராவை பார்க்க

“அவங்க சொல்லுற மாதிரி மாமாவுக்கு எதுவும் ஆகாது. நாம போய் சேரும் போது மாமா நல்லாயிருக்காருங்கிற குட் நியூஸ் கிடைக்கும்.”என்று எந்த பதட்டமும் இல்லாமல் சமுத்ரா நம்பிக்கையுடன் கூற ஷாத்விக்கிற்கும் அது ஏதோவொரு வகையில் நம்பிக்கையை கொடுத்திருந்தது.

என்னதான் சமுத்ரா தைரியமூட்டுவதாய் பேசிய போதிலும் மஹதி சொன்ன விஷயங்கள் அவளை உள்ளுக்குள் ஆட்டிபடைத்தது. எதுவும் தவறாக நடந்திடகூடாதென்ற பிரார்த்தனையுடனேயே இருவரின் அந்த பயணம் தொடர்ந்தது.

இருவரும் ஊரில் வந்து இறங்கியதும் நேரே மருத்துவமனைக்கு சென்றனர்.

அங்கே பவதாரணியை தவிர குடும்பத்தார் அனைவரும் வேதனையோடு அமர்ந்திருக்க சமுத்ராவும் ஷாத்விக்கும் தம் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு உள்ளே அவர்களை நோக்கி நடந்தனர்.

அழுதழுது ஓய்ந்து போய் இந்திராணியும் அமராவதியும் அமர்ந்திருக்க அவர்களை கண்டதும் இருவரையும் கட்டிக்கொண்டு அழுதனர்.

ஷாத்விக் மற்றும் சமுத்ரா இருவருமே மனதளவில் நிலைகுலைந்து போயினர்.

என்னதான் ஷாத்விக்கிற்கு தன் தந்தை மீது கோபம் இருந்தாலும் அதனை விட பாசமும் மரியாதையும் அளவுக்கதிகமாகவே இருந்தது.

சாதாரண தந்தை மகன் மனஸ்தாபங்களை மறந்து தன் தந்தையோடு சகஜமாய் இருந்திருக்கலாமோ என்று அந்நேரத்தில் வருந்தினான் ஷாத்விக்.

எப்போதுமே தன்னை பற்றிய அக்கறை அவருக்கு இல்லை என்று எண்ணியிருந்தவனுக்கு இன்று அந்த எண்ணம் எத்தனை அபத்தமென்று புரிந்தது.

இதுநாள் வரை அவனை தேவையான சந்தர்ப்பங்களில் கண்டித்தாரே தவிர அவனை எந்த விஷயத்திலும் தடுத்ததில்லை. தன் திருமணத்தில் கூட அவர் தனக்கு நல்லதே செய்திருக்கிறாரென்ற உண்மை அவனுக்கு இந்த நொடியில் தான் புரிந்தது.

தன் மடத்தனத்தையும் முட்டாள்தனமான கோபங்களையும் எண்ணி உள்ளுக்குள் வருந்தியவன் பெரும் சோகத்துடன் தன் தந்தையை பார்க்க அறைக்குள் சென்றான்.

மறுபுறம் சமுத்ராவினுள்ளும் பல விஷயங்கள் ஓடிக்கொண்டிருந்தது.

சிறு வயதிலிருந்தே அவளுக்கு தன் மாமா என்றால் கொள்ளை விருப்பம். அவள் இன்று தைரியமான பெண்ணாக வளர்ந்து நிற்பதற்கு அவரே காரணம். அவளின் தந்தைக்கு இணையான ஸ்தானத்திலிருந்த அவளின் வழிகாட்டி பரசுராமர். அவளின் அன்னை கூட அறியாத சமுத்ரா பற்றிய பல ரகசியங்களை அறிந்த ஒருவரும் அவரே. அவள் பிரச்சினையென்று நொடிந்து விழமுயன்ற பல சந்தர்ப்பங்களில் அவளுக்கு உறுதுணையாய் நின்றிருக்கிறார் பரசுராமர்.

 திருமணத்திற்கு பின் சமுத்ரா பரசுராமரிடம் தன் செயலுக்காக மன்னிப்பு வேண்டியபோது

“அம்மாடி நீ ஏதும் காரணமில்லாமல் அர்த்த ராத்திரியில கிளம்பி வந்திருக்கமாட்டனு எனக்கு தெரியும். உன் விருப்பம் தெரிஞ்சதால தான் இந்த கல்யாணத்தை நடத்தி வச்சேன். இது உன் வாழ்க்கை. நீ அதை சரியாக அமைச்சுக்குவனு எனக்கு தெரியும். உன் முடிவு எதுனாலும் அதுக்கு இந்த மாமா எப்பவும் துணையாக இருப்பேன்.”என்று பரசுராமர் அன்று சொன்ன வார்த்தைகள் மனதில் ஓடியது.

தந்தையை பார்த்துவிட்டு கண்களை துடைத்தபடியே ஷாத்விக் வெளியே வர சமுத்ரா உள்ளே சென்றாள்.

உள்ளே வயர்களுக்கு நடுவே கண்களை மூடி படுத்திருந்தவரை பார்த்த சமுத்ராவுக்கு அழுகை முட்டிக்கொண்டு வர கண்களை துடைத்துக் கொண்டு பரசுராமரருகே சென்று அமர்ந்தாள்.

“மாமா உங்களுக்கு ஒன்னும் இல்ல. நீங்க சீக்கிரம் சரியாகி பழையபடி எழுந்து வருவீங்க. நானும் மாமாவும் சந்தோஷமாக வாழுறதை நீங்க பார்க்க வேண்டாமா? உங்க பேரப்பிள்ளையை நீங்க தான் பார்த்துக்கணும். நீங்க குணமாகி வந்ததும் நீங்க சொன்ன இடத்தை அம்மா பேருக்கு ரெஜிஸ்டர் பண்ணிடலாம். மாமாவும் இங்கேயே புதுசா பிசினஸ் ஆரம்பிக்கிறதா சொன்னாரு. அதை உங்க கையால தான் ஆரம்பிச்சு வைக்கனும்.”என்று அவள் ஏதேதோ பேச பரசுராமரிடம் எந்த அசைவும் இல்லாதபோதிலும் விழியோரம் இரண்டு துளி நீர் உருண்டோடியது.

இரவு இரண்டு மணியளவில் அவரின் உயிர் உடலைவிட்டு பிரிய குடும்பத்தாரின் அழுகுரலில் அவ்விடமே அதிர்ந்தது.

உடனேயே அடுத்த காரியங்கள் அனைத்தும் நடந்தேற பரசுராமரின் உடல் ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது. பவதாரணியும் பல்லவனுடன் வந்து சேர அன்று மாலையே இறுதிச்சடங்கு அனைத்து நடாத்தப்பட்டு பிரேதம் சிதையூட்டப்பட்டது.

16ம் நாள் காரியம் முடியும் வரை அனைவரும் அங்கேயே தங்கியிருந்தனர்.

துக்கம் நடந்த வீடு என்பதால் ஆட்கள் வந்து போவதாகவே இருக்க அனைத்திலும் ஒதுங்கே இருந்த சமுத்ராவை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அனைத்து வேலைகளும் சரியாக நடக்கின்றதாவென்று மேற்பார்வை பார்த்தவள் பெரிதாக எதிலும் தலையிடவில்லை. அவளின் முகமும் ஒரு இறுக்கத்துடனேயே இறுக்க என்னவென்று விசாரிக்க தான் ஆளில்லை.

இன்னுமே வீட்டிலுள்ள யாரும் பரசுராமரை இழந்த துக்கத்திலிருந்து மீளாதிருக்க அவர்களுக்கும் சமுத்ராவின் மாற்றம் தெரிந்திருக்கவில்லை.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்