Loading

அலுவலகம் செல்ல தயாராகிக்கொண்டிருந்த சமுத்ராவை தேடி வந்தார் அமராவதி.

“சமுத்ரா” என்று அழைத்தவர் அமைதியாக நிற்க

“நேத்தே என் முடிவை சொல்லிட்டேன். நீயே அத்தை கிட்ட பேசுனா எந்த பிரச்சினையும் வராது. நானா பேசுனா என்ன நடக்கும்னு என்னால எந்த உத்திரவாதமும் கொடுக்க முடியாது.” என்று சமுத்ரா தயாராகியபடியே கூற அமராவதி கையை பிசைந்தார்.

ஒருபுறம் சமுத்ரா மறுபுறம் இந்திராணியென்று இருபுறமும் இருவரும் உருட்டி விளையாட அமராவதி தான் திண்டாடிப்போனார்.

இந்திராணி விஷயத்தை சொன்னபோது சமுத்ரா நிச்சயம் இதற்கு சம்மதிக்கமாட்டாளென்று அவளுக்கு உறுதியாக தெரியும்.

சரியாக பொய்கூட சொல்லத் தெரியாத அமராவதிக்கு சமுத்ரா நம்பும் படியானதொரு காரணத்தை கூட சொல்லமுடியவில்லை.

இப்படியே ஒரு கிழமையை கடத்தியிருந்தவர் வேதாளத்தை பிடிக்க கிளம்பிய விக்ரமாதித்யனை போல் இன்றும் தன் முயற்சியை தொடர சமுத்ராவின் எதிரொலியில் தான் எந்த மாற்றமும் இல்லை.

சிறுவயதிலிருந்தே சமுத்ராவின் ஆளுமைக்கு பழக்கப்பட்டவருக்கு அவளை அதட்டி மிரட்டவும் தெரியவில்லை.

“சமுத்ரா நீ எதுக்கு இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறனு எனக்கு புரியல. ஒரு மூனு மாசம் தானே? இந்த நேரத்துல உன் மனசு மாறிடும்னு பயப்படுறியா?” என்று இந்த பதில் தான் வருமென்று நன்றாக தெரிந்தே அந்த கேள்வியை கேட்க தன்னை ஒரு முறை கண்ணாடியில் பார்த்துக்கொண்டவள்

“உங்களுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்னு நல்லாவே தெரியும். இப்பவும் அதே பதில் தான். என்னோட ஈகோவை தூண்டிவிட்டா நான் ரோஷத்துல நீங்க எதிர்பார்க்கிறதை செய்வேன்னு எதிர்பார்க்காதீங்க. இதையே தொடரனும்னு நினைச்சீங்கனா நீங்க எதிர்ப்பார்க்காத சில விஷயங்களை நான் செய்யவேண்டி வரும்.” என்று நேரடியாகவே தன் அன்னையை எச்சரிக்க அமராவதிக்கு தான் இது பீதியை கிளப்பியது.

“நான் கிளம்புறேன்.” என்றவள் தன் அறையிலிருந்து வெளியே வர வாசலில் பவித்ராவோடு உள்ளே வந்துக்கொண்டிருந்தான் ஷாத்விக்.

சமுத்ரா பின்னாடியே வந்த அமராவதியும் இதை பார்த்துவிட்டு 

“வா ஷாத்விக்.” என்றவரின் பார்வையோ அவனோடு வந்துக் கொண்டிருந்த பவித்ராவின் மீதே இருந்தது.

சமுத்ராவின் பார்வை ஒரு நொடி இருவரையும் ஆராய்ந்துவிட்டு மறுநொடியே இடம்மாறியது.

ஆனால் இது எதையும் ஷாத்விக் கவனிக்கவில்லை. அவனின் மனமோ எரிச்சலில் வெந்து புகைந்து கொண்டிருந்தது. சமுத்ராவை பார்க்க ஊருலிருந்து கிளம்பியவனை பாதி வழியில் மடக்கி பிடித்து தானும் வருவதாக அடம்பிடித்து வரும் வழி நெடுக அவனை நச்சரித்து விட்டாள் பவித்ரா.

ஏதும் செய்ய முடியாத நிலையில் அவளை இங்கேயே அழைத்துவந்துவிட்டான் ஷாத்விக்.

 

“அத்த இவ பவித்ரா பெரியசாமி மாமாவோட பொண்ணு. உங்களையெல்லாம் பார்த்துட்டு போகலாம்னு வந்திருக்கா” என்று ஷாத்விக் சொல்ல

“ஐயோ இல்ல பெரியம்மா. மாமா பாதி வெவரம் தான் சொன்னாரு‌. நான் இங்க காலேஜில் சேர்ந்து படிக்க தான் வந்திருக்கேன். பெரிய மாமா தான் என் தங்கச்சி வீடு அங்க தான் இருக்கு. அங்கேயே தங்கி படினு சொன்னாரு.” என்று புதுத் தகவலை சொல்ல ஷாத்விக்கோ குழப்பத்துடன் பார்த்தாள்.

 

இது அவனுக்கே புதுத் தகவல் தான். ஆனால் இங்கே எதுவும் கேட்கமுடியாதென்பதால் அமைதியாக இருந்தான்.

“அதுக்கென்னம்மா நீ இங்கேயே தங்கி படிக்கலாம். ஏன் வாசல்லயே நிற்கிறீங்க இரண்டு பேரும் உள்ள வாங்க.” என்று அமராவதி இருவரையும் உள்ளே அழைக்க இருவரும் உள்ளே வர சமுத்ராவோ இருவரையும் காணாதது போல் வெளியே கிளம்பினாள்.

“சமுத்ரா அக்கா”என்று பவித்ரா இப்போது சமுத்ராவை அழைக்க தன் நடையை நிறுத்திவிட்டு அவளை திரும்பி பார்த்தாள்.

“எப்படி இருக்கீங்க? ஆபிஸிக்கு கிளம்பிட்டீங்களா?” என்று பொதுவாக விசாரிக்க சமுத்ராவும் அவளின் கேள்விக்கான பதில்களை சொல்லிவிட்டு தனக்கு நேரமாகின்றதென்று கூறிவிட்டு கிளம்பிவிட்டாள்.

ஷாத்விக் அவன் அங்கு வரும் போதெல்லாம தங்கும் அறைக்கு பையோடு சென்றிட அமராவதி பவித்ரா தங்குவதற்கு ஓர் அறையை காட்டினார்.

இருவரும் சென்றதும் சமையலறையிலிருந்து வெளியே வந்த மாலதி

“யாரு அண்ணி அந்த பொண்ணு? ஷாத்விக் கூட வந்திருக்கு?” என்று சந்தேகமாக கேட்க அவள் சொன்னதை அப்படியே மாலதியிடம் ஒப்புவித்தார் அமராவதி.

இருவருக்குமே பவித்ராவின் வரவு ஏதோ ஒரு வகையில் பெரும் பிரச்சினையை கிளப்பப்போகின்றதென்று நன்றாகவே புரிந்தது.

“அண்ணி எதுக்கும் ஊருல அக்காவுக்கு விஷயத்தை சொல்லிடுங்க. எனக்கென்னமோ இந்த பொண்ணு ஷாத்விக்கை பார்க்கிற பார்வையே சரியாப்படல.”என்று மாலதி தன் அனுமானத்தை சொல்ல அமராவதிக்கும் இதே எண்ணம் தான்.

உடனேயே தாமதிக்காது அமராவதி இந்திராணிக்கு விஷயத்தை சொல்ல

“அவ எதுக்கு அங்க வந்தா? உங்க அண்ணன் மறுபடியும் ஏதாவது கோளாறு செஞ்சிட்டாரோ தெரியலேயே. இருங்க அவருகிட்ட பேசிட்டு சொல்லுறேன்.” என்று அழைப்பை வைத்தவர் பரசுராமரிடம் விசாரிக்க அவர் அப்போது தான் விஷயத்தை சொன்னார்.

இப்போது தான் பவித்ரா பட்டணத்திற்கு செல்வதாகவும் அவளை அமாராவதியின் வீட்டில் தங்கவைக்க முடியுமா என்று அவளின் தந்தை கேட்டு சென்றதாகவும் சொன்னார்.

“அந்த புள்ள பாதுகாப்புக்காக சரின்னு சொன்னேன்.” என்று பரசுராமர் சொல்ல

“நல்லா சொன்னீங்க போங்க. அந்த புள்ள இப்போ நம்ம பையனோட அங்க போய் இறங்கிருச்சு” என்று இந்திராணி தலையில் அடித்துக்கொள்ள

“இப்போ தானே போனை போட்டு கேட்டாரு? அதுக்குள்ள போயிருச்சா அந்த புள்ள?” என்று பரசுராமர் ஆச்சர்யமாக கேட்க

“நல்ல கேட்டாரு போங்க. அவ நீங்க தான் உங்க தங்கச்சி வீட்டுல தங்க சொன்னதாக சொல்லியாருக்கா. இருக்க பிரச்சினை பத்தாதுனு புதுசா இவ என்னத்தை கிளறப்போறானு தான் தெரியல ” என்று இந்திராணி புலம்பிச்சென்றார்.

இங்கு அலுவலகத்துக்கு வந்த சமுத்ராவின் மனநிலையோ ஒரு நிலையில் இல்லை. ஏதோ ஒரு விஷயத்தை எண்ணி அவள் மனம் தத்தளிக்க குழம்பித்தான் போனாள் சமுத்ரா.

அவளின் கவனம் நொடிக்கு நொடி சிதற அவளின் வேலைகள் அனைத்தும் இழுபட்டுக்கொண்டே சென்றது.

ஒருகட்டத்தில் அனைத்தையும் மூடி வைத்தவள் தன் சீட்டில் தலைசாய்த்து அமர அவளின் மனமோ நிலைகொள்ளாமல் தத்தளித்தது.

என்ன செய்வதென்று புரியாமல் குழம்பி தவித்தவள் வீட்டிற்கு செல்லும் முடிவோடு இதயாவிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பினாள்.

மதிய நேரம் நெருங்கியிருக்க வீட்டிற்கு வந்த சமுத்ராவின் காதில் பவித்ராவின் குரலே விழுந்தது‌.

உள்ளே செல்ல முயன்றவளை பவித்ராவின் வார்த்தைகள் தடுத்தது.

“என்ன மாம்ஸ் இப்படி தொட்டுக்கோ தொடச்சிக்கோனு சாப்பிட்டா எப்படி வயிறு நெரம்பும்? நல்லா அள்ளி வாயை நெரப்புங்க. ஐய்யே நீங்க சரிப்படமாட்டீங்க போலயே? இருங்க நானே ஊட்டி விடுறேன்.” என்றவளின் வார்த்தைகள் சமுத்ராவினுள் பொசஸ்சிவ்னஸ்ஸை தூண்டிவிட்டது.

விருட்டென்று உள்ளே நுழைத்தவளின் கண்ணில் ஷாத்விக் மறுக்க மறுக்க பவித்ரா அவன் வாயில் உணவு திணிக்கும் காட்சி கண்ணில் விழ அவர்களை சுட்டெரிக்கும் பார்வை பார்த்தபடியே

“அம்மா” என்று வீடே அதிரும் படி கத்தினாள் சமுத்ரா.

அவளின் சத்தத்தில் வீட்டின் பின்புறத்திலிருந்த மாலதியும் அறையில் உறங்கிக்கொண்டிருந்த அமராவதியும் அடித்து பிடித்து எழுந்து வர ஷாத்விக்கோ வாயை அடைத்துக் கொண்டிருந்த உணவை செல்லமுடியாத மொத்தமாக விழுங்கிக் கொண்டே எழுந்து நின்றான்.

பவித்ராவுக்கு தான் சமுத்ராவின் அதிகாரக்குரல் ஒருவித மிரட்சியை கொடுத்தது. சமுத்ராவை பற்றி அரசல் புரசலாக அவள் கேள்வி பட்டிருந்தாலும் அவளிடம் இப்படியொரு ஆளுமை இருக்குமென்று அவள் எதிர்பார்க்கவில்லை.

அறையிலிருந்து வெளியே வந்த அமராவதி

“சமுத்ரா என்னாச்சு? நீ எப்போ வந்த?” என்று விசாரிக்க இப்போது சமுத்ராவோ பவித்ரா மற்றும் ஷாத்விக்கை கடுமையாக முறைத்தபடியே

“கதவை தொறந்துபோட்டுட்டு எல்லாரும் எங்க போனீங்க? இப்படி அலட்சியமாக இருந்தா ரோட்டுல போற எதுவும் அதிகாரத்தோட வீட்டுக்குள்ள நுழையாதா?” என்றவளின் வார்த்தைகள் பல அர்த்தங்களை சொல்ல அங்கிருந்த யாருக்கும் சரியான அர்த்தமெது என்று புரியவில்லை.

“இல்லை அது அக்கா” என்று பவித்ரா ஏதோ கூற வர

“நம்ம வீடு பாதுகாப்புனு தான் எல்லாரும் இங்க வந்து தங்குறாங்க. அந்த பாதுகாப்பு சரியா இருக்கான்னு நாம தான் கவனிச்சுக்கனும்.” என்றவளின் பார்வை இப்போது ஷாத்விக்கை குறிவைத்தது.

ஷாத்விக்கோ அதை பார்த்துவிட்டு மனதுக்குள்

“இவ எதுக்கு நம்மளை இப்படி கொலைவெறியோட பார்க்குறா?” என்று புலம்ப

அமராவதிக்கோ சமுத்ரா இப்படி பேசும் ஆளில்லையென்று தெரிந்ததால் யாரையோ நேரடியாக திட்டமுடியாமல் இப்படி பேசுகிறாளென்று புரிந்து அப்போதைக்கு சரியென்று கூறி அவளை சமாதானப்படுத்தி விஷயத்தை முடித்தாள்.

தன் உடைமைகளோடு அறைக்கு சென்றவள் கதவை சாத்திய சத்தத்திலேயே அவளின் கோபத்தின் உக்கிரம் அங்கிருந்த அனைவருக்கும் புரிந்தது.

அவள் சென்றதும் ஷாத்விக் சமையலறையை நோக்கி ஓட பவித்ராவோ

“மாம்ஸ் நீங்க சரியாக சாப்பிடவே இல்லை”என்று அவன் பின்னாலேயே ஓட மாலதிக்கும் அமராவதிக்கும் என்ன நடந்திருக்குமென்று நன்றாக புரிந்தது.

சமுத்ராவின் கோபம் அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தர பவித்ரா வந்தது கூட ஒரு விதத்தில் நல்லது தான் என்று எண்ணிக்கொண்டனர் இருவரும்.

அமராவதி அருகே வந்த மாலதி

“அண்ணி நம்ம சமுத்ரா சீக்கிரம் மனசு மாறிடுவான்னு தோனுது அண்ணி” என்று மாலதி கூற

“எனக்கும் அப்படி தான் தோனுது மாலதி. இத்தனை நாளா அவ புருஷனை கண்டுக்காம இருந்தவ இன்னைக்கு வேறொருத்தி வந்ததும் வழமைக்கா மாறா வீட்டுக்கு வந்தது மட்டுமில்லாமல் அவங்க இரண்டு பேரையும் ஒழுங்கா இருங்கனு மறைமுகமாக எச்சரிச்சிட்டு போறான்னா என்ன அர்த்தம்? ” என்று அமராவதி மன ஆறுதலுடன் கேட்க

“வேற என்ன அர்த்தம்? அவ மனசு மனைவிங்கிற உரிமை எடுத்துக்க ஆரம்பிச்சிடுச்சு” என்று மாலதி திருப்தியுடன் கூற அமராவதியும் அதனை ஆமோதித்தார்.

அறைக்குள் வந்த சமுத்ராவின் மனமோ இன்னும் கொதித்தது.

இன்னமுமே அவளின் மனக்கண் பவித்ரா ஷாத்விக்கிற்கு உணவூட்டிய காட்சியை தான் ரீப்ளே செய்து கொண்டிருந்தது.

அதை நினைக்க நினைக்க அவளின் மனமோ கொலை காண்டாகியது.

ஏற்கனவே ஷாத்விக் மீதிருந்த கோபம் இப்போது எல்லை கடக்க ஆரம்பித்திருந்தது. எந்த சமாதானத்துக்கும் அவள் மனம் அடங்க மறுக்க அதை உரியவனிடம் காட்டிட வேண்டுமென்ற எண்ணத்தோடு தன் அறையிலிருந்து வெளியே வந்தவள் ஷாத்விக்கை தேடிக்கொண்டு செல்ல முயலும் போது பவித்ராவும் அவனும் பின்புறம் நின்று பேசுவது அவளின் செவிகளில் விழுந்தது.

“மாமா நீ ஏன் இங்க இருந்து கஷ்டப்படனும்? உன்னை சமுத்ரா அக்கா மனுஷனா கூட மதிக்கமாட்டேங்கிது. உனக்கு நான் இருக்கேன் மாமா. நீ இப்போ சரின்னு சொல்லு. அடுத்த முகூர்த்தத்துலயே நம்ம கல்யாணம் நடக்கும். நான் உன்னை நல்லா பார்த்துக்கிறேன் மாமா. என் மொத்த காதலையும் உனக்கு கொடுப்பேன் மாமா. இந்த சமுத்ரா அக்கா மாதிரியும் அந்த மௌனிகா மாதிரியும் உன்னை கஷ்டப்படுத்தமாட்டேன்.” என்று பவித்ரா கூற இந்த வார்த்தைகள் சமுத்ராவின் மனநிலையை முற்றாக மாற்றியிருந்தது.

ஏதோவொரு குற்றவுணர்ச்சி அவளை பிடித்துக்கொள்ள அவ்விடத்திலிருந்து திரும்பிவந்து விட்டாள்.

ஆனால் அங்கு நின்று முழுதையும் கேட்டிருந்தால் நிச்சயம் அவளிடம் ஒரு சாதகமான மாற்றம் வந்திருக்கும்.

ஆனால் அவளின் விதி அவளுக்கு அந்த பொறுமையை கொடுக்க மறுத்துவிட்டது.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
6
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்