Loading

நாள் 4

அனுமதியில்லா 

அழைப்புகளும் 

அழைப்புகளில்லா

அனுமதிகளும் 

சேரும் இதயங்களின் 

சீழ்படாத

சித்திரங்கள்.

மறுநாள் காலை அனைவரும் வீட்டிலிருந்து கிளம்பியதும் தன் அண்ணனாக பரசுராமனுக்கு அழைத்தார் அமராவதி.

“ஹலோ அண்ணே”என்ற அமராவதியின் குரல் கேட்டதும்

“ஹலோ அமரா எப்படிம்மா இருக்க?” என்று இருவரும் மாறி மாறி நலம் விசாரித்த பின்பு

“அண்ணே உங்கிட்ட ஒரு விஷயம் பேசனும்”என்று அழைப்பில் தயங்க 

“சமுத்ரா-ஷாத்விக் கல்யாணத்தை தவிர வேற எந்த விஷயம்னாலும் பேசலாம்மா”என்று பரசுராமன் சொல்ல அவரின் இந்த பதிலை அமராவதி எதிர்பார்க்கவில்லை.

“அண்ணே உங்களுக்கு எப்படி?””என்று அமராவதி இழுக்க

“அப்போ அத பத்தி தான் பேசபோற?” என்று பரசுராமன் தன் அதிருப்தியை வெளிப்படுத்த

“என்ன அண்ணே நீயே இப்படி பேசுற?”என்று அமராவதி தன் மனக்குறையை தெரிவிக்க

“இங்க பாரு அமரா. என் மருமக படிக்கும் தகுதிக்கு அவன் இவன்னு போட்டிபோட்டுக்கிட்டு வரன் அமையும். அவ மாமா நான் இருக்கேன். நீ எதை பத்தியும் கவலைப்படாத”என்று பரசுராமன் கூற

“என் அண்ணே வீட்டுலயே மாப்பிள்ளை இருக்கும் போது நான் எதுக்கு வெளியில வரன் தேடனும்?”என்று அமராவதி தன் உரிமையை என்ற பெயரில் தன் எண்ணத்தை செயல்படுத்த முயல

“தண்டச்சோறு திங்கிறவனுக்கெல்லாம் உரிமை ஒன்னு தான் கேடு.”என்று பரசுராமன் சலித்துக்கொள்ள

“அண்ணே நீ என்ன வேணாலும் சொல்லிக்கோ. என் பொண்ணு தான் உன் வீட்டு மருமக. ஷாத்விக் தான் எனக்கு மருமகன். மீதியை நான் ஊருக்கு வந்ததும் பேசிக்கலாம்”என்று கூறிய அமராவதி அழைப்பை துண்டித்துவிட்டார்.

அழைப்பு துண்டிக்கப்பட்டதை உணர்ந்து போனை காதில் இருந்து எடுத்தவரை படுபயங்கரமாய் முறைத்துக் கொண்டிருந்தார் இந்திராணி.

அதனை கண்டும் காணாது நகர முயன்றவரை

“என்னங்க நினைச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல? பெத்தபையனை எந்த அப்பவானது இப்படி பேசுவானா?”என்று இந்திராணி தன் மகனுக்காக போர்கொடி தூக்கி

“பெத்தது தறுதலையாக இருந்தா எந்த அப்பனும் இப்படி தான் பேசுவான்.”என்று பரசுராமனும் சலிக்காமல் பேச

“அவன் அருமை பத்தி உங்க தங்கச்சிக்கு தெரிஞ்ச அளவு கூட உங்களுக்கு தெரியல.”என்று அவர் விரக்தியோடு சொல்ல

“இவ்வளவு பேசுறியா இதே மாதிரி நம்ம பொண்ணுக்கு ஒரு தொழில் இல்லாத ஒரு பையன் வரன் வந்திருந்தா நீ சரின்னு சொல்லியிருப்பியா?”என்று கேட்க இந்திராணியிடம் பதிலில்லை.

“பதில் சொல்ல முடியலல உன்னால. சமுத்ராவும் என் பொண்ணு மாதிரி தான். பெத்த என்னாலயே நம்பமுடியாத ஒருத்தனை எப்படி அவளுக்கு கட்டிவைக்க முடியும்? பெரிசா எதுவும் வேணாம். உன் புள்ளையை ஒரு நாளைக்கு ஒரு நூறு ரூபாய் மட்டும் சம்பாதிக்க சொல்லு. நானே இந்த கல்யாணத்தை முன்ன நின்னு நடத்தி வைக்கிறேன் “என்று சொன்னவர் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.

இத்தனை நேரம் அவர் கரித்துகொட்டிவிட்டு சென்றவனோ மறுபுறம் மண்ணோடு போராடிக்கொண்டிருந்தான்.

“என்ன மாப்பிள்ள தோட்ட மண்ணுக்குள்ள புதையல் தேடிட்டு இருக்க?” என்று ஷாத்விக்கின் வேலையை தொந்தரவு செய்துக்கொண்டிருந்தான் நாதன்.

“இப்போ நீ வாய மூடிட்டு இருக்க போறியா இல்லை நான் கிளம்பட்டுமா?” என்று தன் வேலையை தொடர்ந்தபடியே ஷாத்விக் கேட்க

“கோவிச்சிக்காதய்யா. ஏதோ ரொக்கட்டு விடுற சயன்டிஸ்டு மாதிரி தோட்ட மண்ண துலாவிட்டு இருக்கியேனு கேட்டேன்.”என்று நாதனும் பவ்வியமாக கேட்க

“இவ்வளவு வக்கணையா கேள்வி கேட்கிறவன் உரக்கடைகாரன்கிட்ட ஒத்த கேள்வி கேட்டிருந்தா இத்தன மரமும் பட்டு போயிருக்குமா?” என்று கேட்டபடியே தன் கையில் அணிந்திருந்த கையுறையை கழற்றிய படி எழுந்தான் ஷாத்விக்.

“என்னாச்சுயா?”என்று சற்று பதட்டத்துடனேயே நாதன் கேட்க

“வெளச்சல் நெறஞ்சு வெள்ளாமை பார்க்கனும்னு ஆசைப்பட்டு தோதான விலைக்கு உரம் வாங்கி நெறச்சா எப்படிடா மரம் தழச்சி நிற்கும் ? அதான் வேலைய காட்டிருச்சு”என்று ஷாத்விக் சொல்ல இப்போது நாதனோ திருதிருத்தான்.

“அது மாப்பு இரண்டு மாசத்துல வெளச்சல் பார்க்கலாம்னு…”என்று இழுக்க

“இந்த இரண்டு மாசத்துக்கு பார்ப்ப. அடுத்த இரண்டு மாசத்துக்கு ஈ ஓட்டுவியா? அவன் இலாபத்துக்கு எதையோ உருட்டுறான்னா அதை நம்பி இப்படி தான் செய்வியா? உனக்கு மண்ணு தான் உழைக்கிற சாமி. அதுக்கே விசத்தை வைப்பியா நீ?” என்று ஷாத்விக் வறுத்தெடுக்க நாதனுக்கு அமைதியாக இருப்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை.

“உழைக்கிற மண்ணுக்கு உரிய ஊதியம் அதுல நம்ம விதைக்கிற பொருள் தான். பெரியவங்க இந்த காசை பாத்து விளைச்சல் செய்திருந்தா இப்போ நாமெல்லாம் உயிரோட இருந்திருக்கவே முடியாது. இனிமேலாவது கிடைச்ச கழிசடையை மண்ணுக்கு போடாமல் இயற்கையா கெடைக்கிற உரத்தை போடு. நம்ம பாலு தோப்புல வேற உரம் எடுத்து வைக்க சொல்றேன். அவன்கிட்ட வாங்கிக்கோ. இனிமேலாவது இப்படி கண்டதை போடாமல் எப்பவும் போல இயற்கை உரத்தை பயன்படுத்து. சீக்கிரமான விளைச்சல் இல்லைனாலும் இப்போ இந்த ஆர்கானிக் பார்மிங்கிற்கு மார்க்கெட்டில் நல்ல க்ராக்கி. நீ நாலு வெளைச்சல் பார்த்து கிடைக்கிற காசை ஒரே வெளைச்சல்ல அதுவும் எந்தவித பின்விளைவும் இல்லாமல் கிடைக்க வைக்கும்.” என்று ஒரு நீண்ட விரிவுரையை கொடுக்க அதை கேட்டிருந்த நாதன்

“சரிடா நான் நீ சொன்னபடியே செய்றேன்.”என்று அவன் சொன்னதை ஆமோதிக்க

“ம்ம்ம் சரி. நான் அந்த வழியா தான் போறேன். வேணும்னா சொல்லு சொல்லிட்டு போறேன்.” என்று ஷாத்விக் கூற தன் சட்டைப் பையிலிருந்து பணத்தை எடுத்து கொடுத்த நாதன்

” நாலு மூட்டையா சொல்லிடு.”என்று கூற பணத்தை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டவன் இன்னும் சில குறிப்புகளை கூறிவிட்டு அங்கிருந்து சென்றதும் நாதனின் தோட்டத்தில் வேலை செய்யும் வயதில் மூத்தவர் ஒருவர் நாதனிடம் வந்தார்.

“என்ன தம்பி பொசுக்குனு காசை தூக்கி கொடுத்துட்டீங்க?”என்று சற்று மனக்குறையுடன் கேட்க அவரை பார்த்து சிரித்த நாதன்

“அண்ணே அவனை பத்தி தெரிஞ்சதால தான் கொடுத்தேன்.” என்றவன் அதே சிரிப்புடனேயே கடந்துவிட்டான்.

அவனுக்கு ஷாத்விக்கை பற்றி நன்றாகவே தெரியும். பொதுநலத்தில் சுயநலம் பார்ப்பதே அவனின் ஸ்டைல்.

 அக்ரிகல்சர் பட்டப்படிப்பை முடிந்திருந்தவன்‌ மண்ணின் மீதும் தாவரங்கள் மீதும் இருந்த ஆர்வத்தில் ஹோட்டி கல்சர்ஸ்ஸில் சேர்ந்து அதிலும் தேர்ச்சி பெற்றிருந்தான். அது சேதன விவசாயத்தின் தார்பரியத்தை அவனுக்கு உணர்த்த அதற்கு தன்னால் முடிந்த சில முயற்சிகளை செய்திருந்தான். ஆனால் இது முழுக்க முழுக்க பொது நலமாகவும் இலவசமாகவும் இருந்தால் மதிப்பு குறைந்துவிடுமென்று எண்ணியவன் தன் பொதுநலத்தை காசாக்கும் முயற்சியாக அறிவுரையும் கொடுத்து அதற்குரிய பொருளையும் தானே கொடுத்து இலாபம் பார்க்க தொடங்கியிருந்தான்.

இதற்கு அவனுக்கு உதவியது பாலு என்று அழைக்கப்படும் அவனது நண்பனான பாலேந்திரன் தான்.

பாலேந்திரனுக்கு சொந்தமாக சில தோட்டங்களும் உரக்கடையும் இருந்தது. அவனது தோட்டத்திலேயே சில இயற்கை உரங்களை தயாரித்த ஷாத்விக் அதனை பாலுவின் கடையிலேயே விற்பனை செய்ய பெரிதாக இலாபம் பார்க்க முடியவில்லை. அதனால் இப்படி தன்னிடம் உதவி கேட்பவர்களிடம் ஆலோசனையாய் கூறி தன் பொருட்களை விளம்பரப்படுத்தி வாங்க வைத்துவிடுவான்.

அவனின் தயாரிப்பு தரமானதாக இருந்ததால் அடுத்தடுத்து அவனின் இயற்கை உரத்திற்கான கிராக்கி அதிகமாகியது. 

ஆனால் ஊராருக்கு இது ஷாத்விக்கின் முயற்சி என்று தெரியாது. ஷாத்விக்கும் பணத்திலிருந்து இடம் வரை பாலுவின் உதவியை பெற்றிருந்தமையால் அவனும் தன்னுடைய ஈடுபாடு பற்றி மற்றவர்கள் அறிவதை விரும்பவில்லை.

ஆனால் பாலுவோ வரும் லாபத்தை சரியான கணக்கு வழக்கோடு ஷாத்விக்கிற்கு காட்டுவதோடு அவனின் பங்கையும் சரியாக கொடுத்துவிடுவான்.

தோட்டம், பெரிய விவசாய நிலங்களென்று அந்த ஊரில் விவசாயம் , தாவர வளர்ப்பு தொடர்பான என்ன பிரச்சினையென்றாலும் ஷாத்விக்கையே அழைப்பர். 

அதனை பரசுராமன்

“ஊரு மொத்தமும் கூலியாள் வேணும்னா இவனை தான் தேடுது”என்று ஏளனமாய் சொல்வதுமுண்டு.

ஷாத்விக் ஏமாளியெல்லாம் இல்லை. ஆனால் தன் தந்தையை பழிவாங்குவதாக எண்ணி திடமான ஒரு தொழிலை நிலைப்படுத்தாமல் ஃப்ரீ லான்சர் வேலை செய்துக்கொண்டிருக்கிறான். 

அதில் கிடைக்கும் ஊதியத்தை சற்று தனக்கும் மீதியை ஊருக்கும் செலவழித்துக் கொண்டிருந்தான்.

இது பற்றி அவன்‌ யாரிடமும் பகிர்ந்துகொண்டதில்லை.

நாதனின் தோட்டத்திலிருந்து கிளம்பிய ஷாத்விக் பாலுவின் தோட்டத்துக்கு வந்திருந்தான்.

அங்கு வந்தவனை பார்த்த பாலு

“என்னடா இந்த பக்கம்?” என்று கேட்க

“நாதனுக்கு மூனு மூட்டை உரம் வேணும்னு கேட்டான். அனுப்பி வச்சிரு‌” என்றவன் தன் பாக்கெட்டில் உள்ள பணத்தை எடுத்து கொடுத்தான்‌.

அதை வாங்கிக்கொண்டவன்

“இந்த முறை ஸ்டாக்கு பத்தலடா. நிறைய ஆர்டர் பெண்டிங்கில் இருக்கு.”என்று பாலு சொல்ல

“நான் என்னோட ஃப்ரெண்ட்ஸ் மூனு பேருகிட்ட சொல்லியிருக்கேன். இப்போதைக்கு இதை வச்சு சமாளிப்போம். ஆனா இதுக்கு வேற ஏதாவது வழி செய்யனும்”என்றவன் அடுத்து என்ன செய்வதென்ற திட்டத்தை பாலுவிடம் கூறினான்.

“ம்… சரிடா அப்படியே செய்யலாம். ஆனா நாளுக்கு நாள் உரத்துக்கு க்ராக்கி ஏறிட்டே போகுது.”என்று பாலு சொல்ல

“நல்ல பொருளை சும்மா கொடுத்தா இங்க எவனும் அதை சல்லி காசுக்கு மதிக்க மாட்டான். அதையோ கொல்லை வெல வச்சு சொல்லு. அடிச்சு பிடிச்சு வாங்குவானுங்க.”என்று ஷாத்விக் யதார்த்தத்தை சொல்ல

“அது நெசந்தான். ஒரு பொரணியில தானே நமக்கும் கல்லா கட்ட ஆரம்பிச்சுச்சு.” என்று பாலுவும் கூறி சிரிக்க

“இதெல்லாம் தொழில் ரகசியம். வெளியில சொல்லிடாத.”என்று கூறி சிரிக்க பாலுவும் அதனை ஆமோதித்தான்.

“இன்னொரு விஷயம் டா. அந்த சதாசிவத்தோட தோட்டம் ஏலத்துக்கு வருதுன்னு சொன்னாங்க‌. நீ அது நமக்கு தோதுப்படுமானு பார்த்து சொல்லு.” என்று பாலு கூற

“அது எத்தனை ஏக்கர் இருக்கும்?”என்று கேட்க

“அது எப்படியும் எட்டு ஏக்கர் இருக்கும்” என்று பாலு கூற

“தோதுப்படும்னு தான் நெனைக்கிறேன். எதுக்கும் ஒருக்கா தோட்டத்தை சுத்தி பார்த்துட்டு சொல்றேன். மண்ணு நல்லா இருந்தா அதையே வாங்கிடலாம்.”என்று ஷாத்விக்கும் கூற சற்று நேரம் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் ஷாத்விக்.

அவன் செல்லும் வழியில் இரண்டு பெண்கள் அவனை வழிமறிக்க

“யோவ் மாம்ஸ் என்ன பார்த்துட்டு அமைதியா போற?” என்று அவனின் பைக் சாவியை பறித்து கையில் ராட்டினம் சுற்றியபடி அப்பெண்களில் ஒருத்தி கேட்க

“ஏய் பவி சாவியை குடு. எனக்கு வேற சோலி இருக்கு” என்று அவனும் அவள் கொடுக்கமாட்டாளென்று தெரிந்தே சாவியை கேட்க

“வெள்ள மாளிகையில இருக்க மகாராஜாக்கு கூட உன்கணக்குக்கு சோலி இருக்காது மாம்ஸூ.” என்று அவனை சீண்ட இன்று அவள் தன்னை விடமாட்டாளென்று புரிந்துகொண்ட ஷாத்விக்

“உனக்கு இப்போ என்னடி வேணும்?”என்று ஷாத்விக் கேட்க

“யே அண்ணே அவ எதுக்கு உங்கள சுத்தி சுத்தி வர்றானு கூடயா உங்களுக்கு வெவரம் தெரியல? அடியேய் பவித்ரா வெவரமிவ்லாத மனிஷனை கட்டிக்கிட்டு நீ தான் அர்த்த ராத்தாரியில வெவரம் சொல்லிக்கொடுக்கனும் போலயே”என்று பவித்ராவின் தோழியான அமலா ஷாத்விக்கை கிண்டல் செய்ய ஷாத்விக்கிற்கோ என்ன பதில் பேசுவதென்று தெரியவில்லை. இப்போது எதை சொன்னாலும் அது ஏடாகூடமாக போய்விடும் என்று பயந்தவன்

“நான் வெவரம் இல்லாதவனாகவே இருந்துட்டு போறேன். மொதல்ல சாவியை கொடு.”என்று கேட்க பவித்ராவோ அந்த எண்ணத்திலேயே இல்லை.

“மாம்ஸூ நீ என்னை கட்டிக்கிறேன்னு ஒத்த வார்த்தை மட்டும் சொல்லு. இந்த சாவி மட்டும் இல்லை. நீ எதை கேட்டாலும் தரேன்.”என்று அவள் காதல் ஒழுக வார்த்தைகள் பேச ஷாத்விக்கின் நிலை தான் பரிதாபமானது.

அந்த ஒற்றையடிப்பாதையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் தெரியாத வழியில் இப்படி இந்த இரண்டு வாய் மூடா தபால்பெட்டியிடம் மாட்டிக்கொண்டதோடு உச்சி வெயிலில் லவ் டார்ச்சரை சந்தித்து தன்னை நொந்து வெந்து போக செய்த தன் விதியை உள்ளுக்குள் திட்டிக்கொண்டவன்

“இப்போ சாவியை கொடுக்கப்போறியா இல்லையா?”என்று அவன் மீண்டும் கேட்க அவன் பைக்கின் முன்புறம் நன்றாக சாய்ந்துக்கொண்டவள்

“அப்போ நீ என்னை கட்டிக்கிறேன்னு சொல்லு.”என்று கூற விருட்டென்று பைக்கிலிருந்து இறங்கியவன் எதிர்திசையில் விருவிருவென நடக்கத் தொடங்கினான்.

“ஹேய் என்னடி அவரு பாட்டுக்கு போறாரு?”என்று அமலா கேட்க

“விடு இன்னொரு நாளைக்கு சிக்காமலா போவாரு. அன்னைக்கு பார்த்துக்கலாம்.” என்று கூறிய பவித்ரா கையிலிருந்த பைக் சாவியை ராட்டினம் சுற்றியபடியே ஷாத்விக்கின் பைக்கில் ஏறினாள்.

இது வழமையாக நடப்பது தான். பவித்ரா ஷாத்விக்கின் முறைப்பெண். அவளும் பி.ஏ இகோனோமிக்ஸ் முடித்தவள். சிறு வயதிலிருந்தே ஷாத்விக் என்றால் அவளுக்கு அத்தனை பிரியம். அது வளரும் போது காதலாக மாறிட அதனை அவனுக்கு தெரிவித்தும் விட்டாள். பவித்ராவின் பெற்றோர் இவர்களின் திருமணம் பற்றி ஏற்கனவே பேசியிருக்க நிரந்தர தொழில் இல்லாத தன் மகனை பவித்ராவிற்கு கட்டிவைத்து அவளின் வாழ்க்கையை சீரழிக்க விரும்பவில்லையென்று மறுத்துவிட்டார் பரசுராமர் ஆனால் அப்படி அமைந்ததும் திருமண நிச்சயத்தை நடாத்தலாமென்ற என்ற உறுதியுடனேயே வீடு திரும்பியிருந்தனர் பவித்ராவின் பெற்றோர். அப்படி வீடு திரும்பி இரண்டு ஆண்டுகளாகியபோதும் அவர்கள் எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை. பவித்ராவும் காணும் இடங்களிலெல்லாம் அவனை வம்பிழுக்க, முடியாத கட்டத்தில் இப்படி வண்டியை கைகழுவி விட்டு திரும்பி பார்க்காமல் ஓடிவிடுவான் ஷாத்விக்.

அப்போதெல்லாம் பவித்ராவே அவனின் வண்டியை எடுத்து சென்று அவனது வீட்டில் விடுவாள். இன்றும் அதற்காக அவள் வண்டியில் ஏறிட அமலாவும் ஏறியதும் வண்டியை ஷாத்விக் வீட்டை நோக்கி கிளம்பினாள் பவித்ரா.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
10
+1
2
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.