Loading

ஊர் வந்து சேர்ந்த மகிழினியை சந்திப்பதற்கு தகுந்த சந்தர்ப்பம் தேடிக்கொண்டிருந்தான் உதய். 

சமுத்ரா நேரடியாக சந்தித்து பேசு என்று கூறியிருந்த போதிலும் முன்பின் தெரியாத நபரொருவர் பேசவேண்டுமென்று சொன்னால் யார் தான் சம்மதிப்பார்கள்?

மலர் மூலமாக சந்திக்க வழி செய்யலமென்று அவன் நினைத்திருக்க மகிழினியோ அதனையும் தவிர்த்துவிட்டாள்.

கூடுதல் தகவலாய் இப்போதெல்லாம் அவள் மலரோடு பேசுவதுகூடயில்லையென்ற தகவல் கிடைக்க உதய்க்கு தான் அடுத்து என்ன செய்வதென்று புரியவில்லை.

அவளின் வீட்டாரை பற்றி விசாரிக்க நினைத்தவன் மலரிடமே அதையும் கேட்டான்.

அவளோ

“அவ அப்பா உயிரோட இருந்தவரைக்கும் அவங்க நல்லா தான் இருந்தாங்க. எப்போ அவளோட தாய்மாமாகிட்ட அடைக்கலம் கேட்டு போனாங்களோ அப்போதிருந்து தான் அவளுக்கு பிரச்சினை‌. இத்தனை பிரச்சினையிலேயும் அவளுக்கு நடந்த ஒரே நல்ல விஷயம் அவ விருப்பப்பட்ட படிப்பை படிச்சு முடிச்சது தான். ஆனா படிப்பை முடிச்சிட்டு வீட்டுக்கு வந்த பிறகு அவகிட்ட இருந்து ஒரு தகவலும் இல்லை. அவ வீட்டுக்கு போய் விசாரிக்கலாம்னு போனா அவளோட அத்தை அவ ஊருக்கு போயிட்டதா சொல்லுறாங்க. அக்கம் பக்கத்துல விசாரிச்சப்போ உருப்படியாக எந்த பதிலும் இல்லை. போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுக்க என் வீட்டுல உள்ளவங்க விடமாட்டேங்கிறாங்க. உங்களால ஏதாவது செய்யமுடியுமா அண்ணா?” என்று உதயிடமே உதவி கேட்க சற்று யோசித்தவன்

“நான் வேற வகையில் விசாரிக்கிறேன். நீ அவங்க வீட்டு அட்ரஸை அனுப்பிவிடு.” என்று கேட்டு வாங்கியவன் அடுத்து என்ன செய்வதென்று யோசித்தான்.

நேரடியாக அவள் வீட்டிற்கே சென்று பார்த்தாலென்ன என்று யோசித்தவன் அதை செயற்படுத்தும் எண்ணத்தோடு மலர் அனுப்பியிருந்த விலாசத்தை தேடிக்கொண்டு சென்றான்.

ஆனால் அங்கு அவனே எதிர்பார்க்காத இடத்திலிருந்து அவனுக்கு உதவி கிடைத்தது.

மகிழினியின் மாமா வீடு இருந்த தெருவிலேயே அவனின் காலேஜ் நண்பன் ஒருவனின் உறவுக்காரர் வீடு இருந்தது.

உதய் அங்கு சென்றிருந்த போது அவனின் நண்பனும் உறவுக்காரரின் வீட்டிற்கு வந்திருக்க இருவரும் சந்திக்கும் வாய்ப்பு அமைய அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டான் உதய்.

முதலில் தெரியாதென்று கூறிய உறவுக்காரர் பின் தான் கேள்விபட்ட சில விஷயங்களை கூறினார்.

“அந்த பொண்ணோட அத்தைக்காரிக்கு இரண்டு தம்பிங்க. ஒருத்தன் ஊருல ரௌடித்தனம் பண்ணுறதா கேள்வி. இன்னொருத்தன் இங்க தான் xxxxx ஏரியாவுல ஏதோ சாராயக் கடை வச்சிருக்கிறதா சொன்னாங்க. இந்த பொண்ணை அவனுக்கு கட்டி வைக்கப்போறதா தான் பேச்சு. ஆனா அந்த பொண்ணொட அம்மா மறுத்துட்டாங்க போல. சமீபத்துல தான் அந்த அம்மாவுக்கு உடம்புக்கு முடியலனு ஹாஸ்பிடல்ல சேர்த்தாங்க. அப்போ தான் ஏதே கேன்சர் கட்டி இருக்கிறதாகவும் உடனே அத ஆப்பரேஷன் செய்யனும்னு டாக்டர் சொல்லியிருக்காங்க. அந்த பொண்ணோட அத்தைக்காரி தன் தம்பியை வேணாம்னு சொன்ன கோவத்துல பணம் தரமுடியானு சொன்னதோட உதவி செய்ய வந்தவங்களையும் மிரட்டி உருட்டி அதையும் நிறுத்திட்டா. இது பத்தாதுனு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கல்யாணத்துக்கு சம்மதிச்சா மொத்த செலவையும் பார்த்துக்கிறதாக சொல்லி அந்த பொண்ணை சம்மதிக்க வச்சிருக்காங்க. கல்யாணம் முடிஞ்சிருச்சா இல்லையானு தெரியல.” என்று அந்த உறவுக்காரரும் தனக்கு தெரிந்த அனைத்தையும் சொல்ல உதய்யிற்கு தான் ஒரு நிமிடம் தலையே சுற்றிவிட்டது.

மொத்த கதையையும் கேட்டவனுக்கு எங்கே ஆரம்பிப்பதென்றே தெரியவில்லை.

ஆனால் விரைந்து ஏதாவது செய்யவேண்டுமென்று எண்ணியவனுக்கு ஒரு யோசனை தோன்ற நேரே மகிழினியின் வீட்டை நோக்கி சென்றான் உதய்.

வீட்டு வாசலில் நின்று மகிழினியின் பெயரை ஏலம் போட வெளியே வந்தார் மகிழினியின் அத்தை மகேஸ்வரி.

“யாருப்பா நீ? காலிங் பெல் இருக்க எதுக்கு எங்கவீட்டு பொண்ணு பெயரை ஏலம் போட்டுட்டு இருக்க?” என்று விசாரிக்க

“மகிழினி உன்னை கூப்பிட்டா வீட்டாளுங்களை அனுப்பி விசாரிக்கிறியா? அமுக்குனி மாதிரி இருந்து அத்தனை தப்பும் செஞ்சுட்டு இப்போ வீட்டுக்குள்ள ஒளிஞ்சிக்கிட்டா சரியா? வெளிய வாடி” என்று உதய் தன் கூச்சலை அதிகரிக்க 

“யோவ் யாருய்யா நீ? எதுக்கு வாசல்ல நின்னு குலைச்சிட்டு இருக்க? இப்போ நீ போறீயா இல்ல போலீஸை கூப்பிடட்டுமா?” என்று மகேஸ்வரி அச்சுறுத்தும் தொனியிலேயே கேட்க உதய்யின் காதில் அவை எதுவும் விழுந்ததாக தெரியவில்லை.

“ஓ போலீஸை வச்சு மிரட்டுவாங்களா உன் வீட்டு ஆளுங்க? வரச்சொல்லு. அவங்க வந்ததும் நடந்த அத்தனையும் நானும் சொல்றேன். அவங்களே நியாயம் சொல்லட்டும். அதுவரைக்கும் நான் இந்த இடத்தைவிட்டு நகரமாட்டேன்.” என்று உதய் தெருவில் அமர்ந்திட இப்போது அந்த தெருவிலுள்ள ஒவ்வொருவராய் அவ்விடத்தை சூழத்தொடங்கினர்.

ஆனால் மகேஸ்வரியோ இதற்கும் தனக்கும் சம்பந்தமில்லையென்ற ரீதியில் வாயிற்கதவை அடைத்துவிட்டு செல்ல உதய் தன் கூச்சலை விடுவதாக இல்லை.

இப்படியோ ஒரு மணிநேரம் கடந்திருக்க அவ்விடத்தில் ஒரு போலீஸ் ஜீப் வந்து நின்றது.

மகிழினியின் வீட்டின் முன் அமர்ந்திருந்தவனை நெருங்கிய தலைமை அதிகாரி

“சார் யாரு நீங்க? எதுக்கு இங்க வந்து கலாட்டா பண்ணிட்டுருக்கீங்க?” என்ற விசாரிக்க இந்த சந்தர்ப்பத்திற்காகவே காத்திருந்தவனை போல் உதய் எழுந்து நின்றான்.

“சார் இந்த வீட்டுல தான் என் ப்ரெண்டோட லவ்வர் இருக்கா. அவளை வெளியே வரச்சொல்லுங்க. நான் நடந்ததை விவரமாக சொல்லுறேன்.” என்று கூற அந்த தலைமை அதிகாரியின் பார்வையோ இப்போது மாறியது.

 

“எதுக்கு அந்த பொண்ணு? உனக்கும் அவங்களுக்கும் என்ன பிரச்சினை?” என்று கேட்க 

“சார் அந்த பொண்ணை வரச்சொல்லுங்க. அப்போ தான் எது உண்மை எது பொய்னு விசாரிச்சு உங்களால நியாயம் சொல்ல முடியும்.” என்று உதய் கூற

“டேய் என்ன லந்தா?” என்று மிரட்டும் தொனியில் கேட்க

“இல்ல சார். நான் உண்மையாக தான் சொல்றேன்.” என்று கூறியவன் அவரின் காதருகே சென்று உண்மையான நடப்பை கூறினான்.

அவன் சொன்னதை கேட்ட தலைமை அதிகாரிக்கு உதய்யின் மீது சந்தேகம் வலுத்தது.

ஆனாலும் எதற்கும் விசாரித்துவிடுவோமென்று எண்ணியவர் மகிழினியின் வீட்டாரை வெளியே அழைத்தார்.

மகேஸ்வரி மட்டும் வெளியே வர தன் விசாரணையை தொடங்கினார் அந்த அதிகாரி.

“இந்த பையன் சொல்லுற பொண்ணு உள்ள இருக்காளா?” என்று கேட்க மகேஸ்வரியோ

“சார் இந்த பையனே அநாவசியமா இங்க வந்து கலாட்டா செஞ்சுட்டு இருக்கான். தூக்கி உள்ள போட்டு நாலு தட்டு தட்டுனீங்கனா சரியாகிடும் சார்.” என்று போலீஸிற்கே அறிவுரை கூற

“யாரை எப்போ என்ன செய்யனும்னு எங்களுக்கு தெரியும். நீங்க மொதல்ல அந்த பொண்ணை வரச்சொல்லுங்க.” என்று கூற 

“சார் யாரே தெரியாதவன் சொல்றான்னு” என்று மறுக்கும் முன்னே

“அந்த தெரியாதவன் கோர்ட்டுல பெட்டிஷன் போட்டு உங்க வீட்டு பொண்ணைகோர்ட்டுக்கு வரச்சொன்னா தான் வெளிய வரச்சொல்லுவீங்களா?” என்றவரின் வார்த்தைகளில் மறுக்காதே என்ற எச்சரிக்கை இருந்தது.

மகேஸ்வரியும் பெரும் தயக்கத்தோடு உள்ளே குரல் கொடுக்க வெளியே வந்தாள் மகிழினி.

அவளின் கழுத்தில் புதுத் தாலி தொங்கிக்கொண்டிருக்க கண்கள் அழுததின் அத்தாட்சியாக வீங்கியிருந்தது. அதோடு அந்த சிவந்த முகத்தில் ஆங்காங்கே கைதடம் பதிந்ததற்கான அடையாளம் இருக்க காவல் அதிகாரிக்கோ உதய்யின் மீதிருந்த சந்தேகம் இப்போது முற்றாக மறைந்திருந்தது.

உதய்யிற்கு தான் மகிழினியின் நிலை மனதினுள் பெரும் பூகம்பத்தை கிளம்பி அவனை நிலைகுலைய வைத்திருந்தது.

ஏதோ சரியில்லையென்று தெரிந்திருந்தபோதிலும் அது இத்தனை வீபரீதமாயிருக்குமென்று அவன் எண்ணியிருக்கவில்லை.

“உங்க பேரு என்னம்மா?” என்று போலீஸ் அதிகாரி விசாரிக்க மகிழினியோ குனிந்திருந்த தலையை நிமிர்த்தாது உள்ளே போன குரலில் தன் பெயரை மட்டும் சொன்னாள்.

“இவங்க யாரு உங்களுக்கு?” என்று மகேஸ்வரியை காண்பித்து கேட்க

“என்னோட அத்தை.” என்று கூற இப்போது மகேஸ்வரி இடைபுகுந்தார்.

“போதுமா சார்? இப்போதாவது அந்த பையன் தேவையில்லாமல் இங்க வந்து பிரச்சினை செய்றான்னு புரியிதா?” என்று கேட்க அந்த அதிகாரியோ அதையெல்லாம் கண்டுகொண்டதாக தெரியவில்லை.

“இருங்கம்மா. நீங்க எதுக்கு பதர்றீங்க? நான் இன்னும் விசாரிச்சு முடிக்கல.” என்றவர் மீண்டும் மகிழினியின் புறம் திரும்பி

“உங்க வீட்டுக்காரர் எங்கம்மா?” என்று விசாரிக்க மகேஸ்வரி இடைபுகுந்து பதில் சொன்னார்.

“அவன் வேலை விஷயமா எங்க சொந்த ஊர் வரைக்கும் போயிருக்கான்.”என்று கூற 

“நான் அந்த பொண்ணுகிட்ட விசாரிச்சுட்டு இருக்கேன்.” என்று கூறியவரின் குரலில் இனிமேல் வாய் திறந்தால் உன் கதை அவ்வளவு தான் என்ற எச்சரிக்கை இருந்தது.

 

“நீ சொல்லும்மா. உன் வீட்டுக்காரர் எங்க?”என்று கேட்க அவளோ தலை நிமிராமல் அமைதியாக நிற்க அந்த அதிகாரிக்கு சந்தேகம் வலுத்தது.

இனிமேல் விசாரிப்பதில் பலனில்லையென்று எண்ணியவர் அழைப்பினூடாக மகளிர் அதிகாரிகளை அங்கு வரவைத்து விஷயத்தை தெரிவிக்க அவர்கள் இதனை தங்கள் பொறுப்பில் ஏற்று விசாரிக்கத் தொடங்கினர்.

அவர்களிடமும் மகேஸ்வரி விதண்டாவாதமாய் பேச மகேஸ்வரி மற்றும் மகிழினி இருவரையும் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இரு பெண்களும் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட உதய் மலருக்கு அழைத்து விஷயத்தை தெரிவித்து அவளையும் காவல் நிலையத்துக்கு வரச்சொன்னான்.

காவல் நிலையத்தில் அந்த பெண் தலைமை அதிகாரி பல கேள்விகள் கேட்டிருக்க மகிழினியிடமிருந்த எந்தவொரு பதிலும் வரவில்லை. ஆனால் அவளுக்கும் சேர்த்து பேசிக்கொண்டிருந்த மகேஸ்வரியை எச்சரித்து எச்சரித்து ஓய்ந்து போனார் அந்த பெண் அதிகாரி.

அப்போது உதய்யோடு உள்ளே வந்த மலர் நேரே மகிழினியை அழைத்தபடி அவர்களை நெருங்க இத்தனை நேரம் தலையை கூட நிமிர்த்தாமல் நின்றிருந்த மகிழினி தன் தோழியை கண்டதையும் கோழியின் சிறகிற்குள் அரவணைப்பினை தேடும் குஞ்சினை போல் தன் தோழியை கட்டியணைத்து அழுது தீர்த்தாள்.

மலர் யாரென்று விசாரித்த அதிகாரி நடப்பதை கவனிக்கத் தொடங்கினான்.

“மகி என்னடி ஆச்சு? ஊருக்கு வந்ததுல இருந்து ஒரு கால் இல்லை. மெசேஜ் இல்ல. என்னடி ஆச்சு?” என்று விசாரித்தவளுக்கு அப்போது தான் மகிழினியின் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த தாலி கண்ணில் பட 

“ஹேய் என்னடி இது?” என்று அதிர்ச்சியாக கேட்க மகிழினியோ ஆற்றாமையோடு மகேஸ்வரியை திரும்பி பார்க்க

“என்ன ஆச்சுன்னு வாயை திறந்து சொன்னா தானே எங்களுக்கு தெரியும்.” என்று மலர் அதட்ட 

“அம்மா” என்று மட்டும் மகிழினி கூற

“அம்மா எங்க? அவங்களுக்கு என்னாச்சு?” என்று விசாரிக்க

“மேடம் இது எங்க குடும்ப பிரச்சினை” என்று மீண்டும் மகேஸ்வரி உள்ளே புக

“ஏய் நீ வாயை மூடிட்டு நிற்க போறியா இல்லை லாடம் கட்ட சொல்லட்டுமா?” என்று மிரட்ட 

“அம்மாவை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்கோம்” என்று மகிழினி நடந்ததை கூறத்தொடங்கினாள்.

மகிழினி படிப்பு முடித்து ஊர் திரும்பியிருந்த போது அவளின் அன்னையின் உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவேண்டுமென வலியுறுத்த மகேஸ்வரியோ மகிழினி யாரிடமும் உதவி பெறமுடியாத வகையில் சதி செய்திருந்தார்.

வெளியே தன்னால் முடிந்தவரையில் உதவிகளை பெற உழைத்தவளின் முயற்சிகள் அனைத்தும் தாமதமாகிட அது அவளின் அன்னையின் உடல்நிலையை மோசமாக்கியது.

இதற்கு மேல் தாமதிப்பது தன் அன்னையின் உயிருக்கு ஆபத்தாகிவிடுமென்று பயந்த மகிழினி மகேஸ்வரியின் உதவியை நாட இதை தனக்கான சந்தர்ப்பமாக எண்ணியவர் தன் தம்பியை மணந்திட வற்புறுத்தி அதையும் நிறைவேற்றிக்கொண்டார்.

அதன் விளைவே இன்று மகிழினியின் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த தாலி.

நடந்த அனைத்தையும் மகிழினி கூறி முடித்ததும் 

“ஏன்டி அவசரப்பட்டு இப்படியொரு முடிவெடுத்த? என்கிட்ட கூட சொல்லனும்னு தோணலையா?” என்று மலர் ஆற்றாமையுடன் கேட்க

“எனக்கு வேற வழி தெரியலடி. அம்மா உயிர் ஒரு பக்கம் என் மானம் இன்னொரு பக்கம்னு இவங்க சொல்லுறதுக்கெல்லாம் தலையாட்டுற பொம்மையாகி நிற்கிறேன்டி” என்று மகிழினி வெறுப்புடன் சொல்ல அப்போது ஒரு வக்கீலோடு உள்ளே வந்தான் ஒருவன்.

“சார் அவங்க தான் சார்.” என்ற அந்த ஆடவனின் குரல் கேட்டு அங்கு நின்றிருந்த அனைவரும் திரும்பி பார்க்க மகேஸ்வரியோ

“பரதா வந்துட்டியாடா?” என்று கேட்க மகிழினியின் முகமோ மிரட்சியை தத்தெடுத்திருந்தது.

 

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்