Loading

உள்ளே வந்த பரதனை கண்டு மகேஸ்வரி

“இதோ என் தம்பி வந்துட்டான். இனி யாரும் வாலாட்ட முடியாது.” என்று அளவுக்கு அதிகமான தெனாவட்டுடன் சொல்ல அந்த பெண் அதிகாரியோ இப்போது மகேஸ்வரியை எரிக்கும் பார்வை பார்த்தார்.

“எந்த கொம்பன் வந்து என் ஸ்டேஷன்ல வாலாட்டுனாலும் அந்த வாலை ஒட்ட நறுக்கி லாடம் கட்டிடுவேன்.” என்றவரின் எச்சரிக்கையில் அதை செய்தே தீருவேன் என்ற அறிவுறுத்தல் இருந்தது.

“அக்கா என்னக்கா ஆச்சு?” என்று அவர்களை நெருங்கிய பரதன் மகேஸ்வரியை விசாரிக்க அந்த பெண் அதிகாரியோ

“ஏய் யார் நீ? ஏதோ தொறந்தவீட்டுக்குள்ள ஏதோ நுழையிற மாதிரி நொழைஞ்சு என் கஸ்டடியில இருக்கவங்க கிட்ட என் அனுமதி இல்லாமல் பேசிட்டு இருக்க?” என்று விசாரிக்க இப்போது பரதனின் முகமோ கோபத்தில் சிவந்து போனது.

உதய்யிற்கு அந்த பக்கத்து வீட்டுக்காரர் பரதன் சாராயக் கடை வைத்திருப்பதை சாதாரணமாக கூறியிருந்த போதிலும் அவனுக்கு அந்த ஊரில் செல்வாக்கு பலமாக தான் இருந்தது. அந்த தைரியத்தில் தான் மகேஸ்வரி இத்தனை தைரியமாக பேசிக்கொண்டிருந்தார்.

“ஹலோ மேடம் மரியாதையாக பேசுங்க.” என்று பரதன் மிரட்ட

“எவ்வளவு தைரியம் இருந்தா என் இடத்துக்கே வந்து குரலை உயர்த்து பேசுவ?”என்று அந்த பெண் தலைமை அதிகாரியும் வெகுண்டெழ இப்போது இடை புகுந்தார் வக்கீல்.

“மேடம் சாரி மேடம். சார் ஏதோ கோபத்துல பேசிட்டாரு. அவர் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்.” என்று வக்கீல் பிரச்சினையை சுமூகமாக முடித்திடும் முயற்சிக்க

“சொல்லி வைங்க வக்கீல் சார். நான் மத்தவங்க மாதிரி இல்லை.” என்று அந்த பெண் அதிகாரி மீண்டும் ஒருமுறை எச்சரிக்க இப்போது அந்த வக்கீல் பரதனிடம் ஏதோ குசுகுசுக்க அவனும் அமைதியை கையிலெடுத்துக்கொண்டான்.

“மேடம் இவங்களை எதுக்கு இங்க அழைச்சிட்டு வந்திருக்கீங்க? கேஸ் ஏதும் பைல் ஆகியிருக்கா?” என்று கேட்க

“இன்னும் எப்.ஐ.ஆர் போடல. விசாரணை முடிஞ்சதும் என்ன கேஸ் போடப்போறேன்னு சொல்றேன்.” என்று அந்த தலைமை அதிகாரி சொல்ல மகேஸ்வரி தன் புலம்பலை ஆரம்பித்தார்.

“பரதா இந்த குடி கெடுத்தவ ஆத்தா உசுருக்கு பாவப்பட்டதுக்கு என்னை போலீஸ் ஸ்டேஷனுல கொண்டு வந்து உட்கார் வச்சிட்டாடா. பணத்தையும் கொடுத்து வாழ்க்கையும் கொடுத்ததுக்கு நல்ல மரியாதை செஞ்சிட்டா.” என்று சொல்ல இப்போது பரதனின் பார்வை மகிழினியின் புறம் திரும்ப அவளோ அஞ்சி நடுங்கி மலரின் கையை இறுக பற்றிக் கொண்டாள்.

இதை அந்த பெண் தலைமை அதிகாரியும் கவனித்திட ஏதோ யூகித்தவராய் மகிழினியை பார்த்து

“இவன் உன் வீட்டுக்காரனாம்மா?” என்று கேட்க மகிழினியோ தன் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த தாலியையும் பரதனையும் மாறி மாறி பார்த்தாள்.

இப்போது அந்த அதிகாரியின் சந்தேகம் உறுதியாகிட மலரை பார்த்து கேள்வி தொடுக்க தனக்கு தெரிந்த மற்றும் தான் தெரிந்துகொண்ட அனைத்தையும் சொன்னாள்.

“இவன் துள்ளும் போதே நெனச்சேன். இங்க பாரும்மா. நீ ஒரு கம்ப்ளெயிண்ட் கொடுத்தா போதும். மொத்த குடும்பத்தையும் உள்ள போட்டு அத்தனை எலும்பையும் முறுச்சி எடுத்திடுறேன்.” என்று அந்த பெண் அதிகாரியும் சொல்ல நிலைமை கைமீறி போவதை உணர்ந்து வக்கீல் இடை புகுந்தார்.

“சாரி மேடம். நீங்க தப்பா நெனச்சிட்டீங்க. இது புருஷன் பொண்டாட்டிக்குள்ள வர்ற சின்ன பிரச்சினை. உங்களுக்கு தெரியாததா?” என்று பிரச்சினைக்கு வேறு டைட்டில் கார்ட் போட முயல அந்த பெண் அதிகாரியோ விடுவதாயில்லை.

“சார் இன்னும் சம்பந்தப்பட்ட பொண்ணு வாயை தொறந்து எதுவும் சொல்லலை. இப்படியிருக்கும் போது நான் எப்படி இதை சாதாரண பிரச்சினைனு விடுறது? ஊருக்குசொல்லாமல் கல்யாணம் செஞ்சிருக்கீங்க? கல்யாணத்தை ரெஜிஸ்டர் செஞ்சாங்களா இல்லையானு கூட தெரியல. இத்தனை சிக்கல் இருக்கும் போது நான் அமைதியாக இருக்கிறது அந்த பொண்ணுக்கு வினையா மாறிடுச்சினா?” என்று லாடம் கட்ட வேண்டியவர் லா பாயிண்டாய் பேச வக்கீலோ பரதனை பார்த்தார்.

“கல்யாணமெல்லாம் சட்டப்படி பதிவு செஞ்சு தான் இருக்கு. இவ அம்மாவுக்கு உடம்புக்கு முடியாததால அவசரமாக கல்யாணம் முடிஞ்சிருச்சு. அதான் யாருக்கும் சொல்ல முடியல” என்று காரணத்தை சொல்ல 

“மேடம் நாங்க சர்டிபிகேட்டை சப்மிட் செய்றோம். இந்த பிரச்சினையை இதோட முடிச்சிக்கலாம்.” என்று சொல்ல இப்போது அந்த அதிகாரியோ

மலரையும் மகிழினையையும் தனியாக விசாரிக்க வேண்டுமென்று சொல்ல மகேஸ்வரியோ இடையில் புகுந்து குழப்ப முயல அவரின் பாட்ஷா எதுவும் பலிக்கவில்லை. 

 

மகிழினியையும் மலரையும் தனியே அழைத்து சென்றவர்

“இங்க பாரும்மா. உன் முகத்தை பார்த்தப்பவோ ஏதோ சரியில்லைன்னு எனக்கு புரிஞ்சிடுச்சு. இப்போ நீ வாயை திறந்து ஏதாவது சொன்னா தான் உனக்கு என்னால உதவி செய்யமுடியும்‌. நீ எதை பத்தியும் கவலைபடாமல் என்ன பிரச்சினைனு சொல்லு. எனக்கும் உன் வயசுல ஒரு பொண்ணு இருக்கா. உன் அம்மாவா நெனச்சு எதுனாலும் சொல்லு. என்ன பிரச்சினைனாலும் நான் உனக்கு உதவி செய்றேன்.” என்று அந்த அதிகாரி சொல்ல மகழினியோ அமைதியாகவே இருந்தார்.

“என்ன மகி அமைதியாக இருக்க? நீ நடந்ததை சொன்னா தானே நாங்களும் என்ன செய்யலாம்னு யோசிக்கமுடியும். நீயே பல தடவை அந்த பரதன் ஒரு பொறுக்கினு என்கிட்ட சொல்லியிருக்க. இப்போ நீயே அவன் கட்டுன தாலியை வாங்கிட்டு நிற்கிறனா இடையில ஏதோ நடந்திருக்கனும். ஆனா அம்மா எப்படி இதுக்கு சம்மதிச்சாங்க?” என்று மலர் கேட்க இப்போது அனைத்தையும் சொன்னாள் மகிழினி.

மகேஸ்வரி மகிழினியை அவளின் தம்பிக்கு திருமணம் செய்து வைத்ததோடு நின்றுவிடவில்லை. மகிழினியின் தைரியத்தை பற்றி நன்கு அறிந்திருந்த அவரோ மகிழினியின் அன்னையின் அறுவை சிகிச்சைக்கு பணம் கொடுத்ததோடு அவரை மகிழினி அறியாத வகையில் வேறொரு மருத்துவமனைக்கு மாற்றி அவரை தன்னுடைய காவலில் வைத்திருந்தார். இது போதாதென்று மகிழினி அவரை மீறி ஏதும் செய்யக்கூடாதென்று அவளின் அன்னையின் உயிருக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் வகையில் சில செயல்களை செய்து அதனை மகிழினிக்கு காண்பித்து அவளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

இது போதாதென்று அந்த பரதனும் மனைவி என்ற உரிமை எடுத்துக்கொள்வதாய் மகிழினியை உடல் ரீதியாக அவளின் மறுப்பை மீறி நெருங்க முயல இந்த சந்தர்ப்பத்தில் அவளின் அன்னையின் உயிரை விட தன் மானம் மேலென்று எண்ணியவள் அவன் தன்னை நெருங்கமுடியாதபடி சில வேலை செய்துவைத்தாள்.

“என்னை தொடமுடியலைங்கிற கோவத்துல அந்த பொறுக்கி பய அவன் அக்காகிட்ட கோர்த்து விட அவ என்னை அடிச்சு காயப்படுத்திட்டா” என்று அன்று காலை அவளுக்கு விழுந்த அடிகளால் உண்டான காயத்தை காட்ட மற்ற இரு பெண்களுக்கும் உள்ளம் கனத்து போனது.

“என்னம்மா படிச்ச பொண்ணு நீ. நீயே இப்படி பயந்து அமைதியாக இருந்தா உலகம் தெரியாத பொண்ணுங்க என்ன செய்வாங்க? ” என்று அந்த அதிகாரி விரக்தியோடு சொல்ல

“மகி உன் தைரியத்தை கண்கூடாக பார்த்தவ நான். ஏன்டி இவ்வளவு நடந்தும் அமைதியாக இருந்த?” என்று மலரும் ஆற்றாமையுடன் கேட்க

“அவங்க என் அம்மா உயிரோட விளையாடும் போதும் எனக்கும் வேற வழி தெரியல மலர். என்னை உடலளவிலும் மனசளவிலும் பலவீனப்படுத்திட்டாங்க மலர். நான் சாப்பிட்டே நாலு நாளாச்சு.” என்றவளின் வார்த்தைகள் மற்ற இரு பெண்களையும் அதிரச்செய்தது.

விரைந்து இன்னொரு பெண் அதிகாரியை அழைத்து உணவு வரச்செய்தவர் அதனை மகிழினிக்கு கொடுத்து உண்ணச் சொல்லிவிட்டு வெளியே வந்தார்.

இன்னும் மற்றவர்கள் அங்கேயே நிற்க 

“மாலினி எப்.ஐ.ஆர் பைல் பண்ணு. டொமேஸ்டிக் வையவன்ஸ் அப்புறம் கொலை முயற்சினு இவங்க இரண்டு பேரையும் போடு.” என்று கூற வக்கீல் 

“மேடம் நீங்க பிரச்சினையை பெருசாக்குறீங்க.” என்று ஏதோ கூற வர

“மங்களம் என்ன பார்த்துட்டு இருக்க? இந்த பொம்பளையை தூக்கி உள்ள போடு. இவன் கையில வெலங்கை மாட்டி செய்ய வேண்டியதை செய்” என்று கூறிவிட்டு யாரையும் பொருட்படுத்தாது மீண்டும் மகிழினியை பார்க்க செல்ல இப்போது பரதனோ ஆர்ப்பரித்தான்.

அவனது வக்கீல் தான் அமைதியாக இருக்க சொல்லி வற்புறுத்தியவர் இதனை தான் வேறு விதத்தில் சரி செய்வதாக கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக கிளம்பினார்‌.

இந்த பிரச்சினை அனைத்தையும் உதய்யும் அங்கிருந்து பார்த்துக்கொண்டிருந்தான்.

தன் வழியிலும் ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தவன் அங்கிருந்து வெளியேறி போலீஸ் ஹெட் க்வார்ட்டஸ் நோக்கி கிளம்பினான்.

ஏற்கனவே அவன் வருவதாக கூறியிருக்க அவன் தன் பெயரை கூறியதும் எந்த கேள்வியும் இல்லாது உள்ளே அனுப்பப்பட்டான்.

ஏ.சி.பீ. மதன்ராஜ் என்ற பெயர் பலகை இருந்த அறைக்கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றான் உதய்.

“வாய்யா மாப்பிள்ளை. எப்படி இருக்க?” என்று வரவேற்க

“நான் நல்லா இருக்கேன் மாமா. நீங்க எப்படி இருக்கீங்க? அக்கா பாப்பாலாம் ஷிப்ட் ஆகிட்டாங்களா?” என்று உதய்யும் நலம் விசாரிக்க

“இன்னும் இல்லய்யா. ட்ரான்ஸ்பர் ஆகிவந்து ஒரு மாசம் தான் ஆகுது. இன்னும் அங்க செட்டில் செய்யவேண்டியது நிறைய இருக்கு. அதெல்லாம் முடிஞ்ச பிறகு தான் எல்லாரையும் இங்க அழைச்சிட்டு வரமுடியும்‌. பார்ப்போம். ” என்று மதன்ராஜ் சொல்ல

“அதுவும் சரி தான். ஏதும் தேவைனா சொல்லுங்க. நான் செஞ்சுதாரேன்.” என்று உதய் கூற

“சரிடா. ஆமா என்ன திடீர்னு பார்க்கனும்னு சொன்ன? என்ன விஷயம்? ஏதாவது பிரச்சினையா?” என்று கேட்க மகிழினியை பற்றி முழுதாக சொன்னான் உதய்.

“இப்போ இந்த விஷயத்துல நான் என்ன செய்யனும்னு எதிர்பார்க்கிற?” என்று கேட்க

“அந்த பரதன் அவங்க அக்கா இரண்டு பேரும் கொஞ்ச காலத்துக்கு வெளியவே வரமுடியாதமாதிரி செய்யனும். எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அந்த பரதனுக்கு வெளியில பலமான செல்வாக்கு இருக்குறதால தான் இவ்வளவு ஆட்டம் போடுறான்னு தோனுது. நிச்சயம் அவன் மேல ஏதாவது மூடி மறைக்கப்பட்ட தப்பு இருக்கனும்”என்று உதய் மேலோட்டமாக தன் எண்ணத்தை பற்றி கூற

“சரி நான் அதை பத்தி விசாரிக்க சொல்லுறேன்.” என்று மதன்ராஜ் கூற

“ரொம்ப தேங்க்ஸ் மாமா.” என்று நன்றி கூற

“அதெல்லாம் இருக்கட்டும். கேட்குறேன்னு தப்பா நெனக்காத. நீ அந்த பொண்ணை விரும்புறியா?” என்று மதன்ராஜ் கேட்க உதய்யோ என்ன பதில் கூறுவதென்று தடுமாறினான்.

இந்த பிரச்சினைக்கு பின் மகிழினி மீதான அவனின் காதல் அதிகரித்த போதிலும் தன் குடும்பத்தாருக்கு மகிழினி மீது எந்தவித தவறான எண்ணமும் வந்துவிடகூடாதென்ற பயம் அதிகமாகவே இருந்தது. அதனாலேயே தனக்கு தெரிந்த பெண் என்று மட்டும் சொல்லியிருந்தான் உதய்.

ஆனால் எதிரில் இருப்பவரிடம் கள்ளத்தனம் இருக்கிறதா இல்லையா என்று அளவிடுவதையே தொழிலின் ஒரு அங்கமாக செய்பவருக்கு இதனை கண்டுபிடிப்பது அத்தனை கடினமல்ல.

உதயின் தயக்கத்தை வைத்தே அவனின் எண்ணவோட்டத்தை புரிந்துகொண்டவர் லேசாக புன்னகைத்தபடி

“அப்போ கூடிய சீக்கிரம் ஒரு நல்ல விஷயத்தை எதிர்பார்க்கலாம்.” என்று கூற உதய்யோ இதற்கு மேல் இங்கே இருந்தால் நிச்சயம் மதன்ராஜ் கண்டுபிடித்துவிடுவார் என்று உணர்ந்து அங்கிருந்து சொல்லிக்கொண்டு கிளம்பினான்.

தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடுபவனை பார்த்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்ட மதன்ராஜ்

“காதல் வந்துட்டா கள்ளத்தனம் அலாதியாகிடும் போலயே” என்று எண்ணிக்கொண்டு தன் வேலையை தொடர்ந்தார்‌.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
2
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்