21 – காற்றிலாடும் காதல்கள்
இவர்களின் திட்டத்தின்படி மிருணாளினி வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் ஆதர்ஷ் கொடுக்கும் சுவடிகளை ஆராய்ந்து விளக்கம் கண்டுபிடிப்பத்தில் சந்தோஷமாக லயித்திருந்தாள். அவளின் தேடுதலுக்கு நல்ல தீனியாக விஜயராகவன் சில சுவடிகளை அவளுக்கு நேரடியாக அனுப்பவும், அவளின் மகிழ்ச்சி பன்மடங்காகிக் குதூகளித்தாள்.
“அம்மா மிரு.. எப்படா வீட்டுக்கு வர்ற? நீ சொன்ன மாதிரி அந்த மாப்ள வீட்டப்பத்தி நல்லா விசாரிச்சிட்டேன் டா. நல்ல குடும்பம். பையனும் நல்ல விதமா தான் இருக்கான். டிடெக்டிவ் ரிப்போர்ட் வந்துரிச்சி. நீ வந்தா நேர்ல பாத்துட்டு முடிவு பண்ணிடலாம். தாத்தாவும் நாளைக்கு வீட்டுக்கு வரேன்னு சொல்லியிருக்காரு.” எனக் கனகவேல் கூறினார்.
“நான் நாளைக்கு நைட் வந்துடுவேன் ப்பா. ஒரு சந்தோஷமான விஷயமும் இருக்கு. நேர்ல வந்து சொல்றேன். கிருபா லைன் பிஸியா இருக்கு. என்ன பண்றா அவ?” எனக் கேட்டாள்.
“யார்கிட்டயோ பேசிட்டு இருந்தா குடுக்கவா டா?”எனக் கேட்டார்.
“வேண்டாம் ப்பா.. சர்ப்ரைஸ் அஹ் இருக்கட்டும் நான் வர்றதது. கிருபாகிட்ட இந்த சம்பந்தம் பத்தி பேசி அவளுக்கு சரியான்னு மறக்காம கேட்டுடுங்க.” எனக் கூறிவிட்டு மற்ற விஷயங்களைப் பேசி வைத்தனர்.
“என்ன சொல்றா உங்க பொண்ணு?” ஜெயந்தி முகத்தை தூக்கிவைத்துக் கொண்டுக் கேட்டார்.
“நாளைக்கு ராத்திரி வந்துடுவாளாம். வந்து ஏதோ சந்தோஷமான விஷயம் சொல்றேன்னு சொன்னா. கிருபாகிட்ட கல்யாணத்துக்கு சம்மதமா கேட்டுக்கோங்கன்னு ஞாபகப்படுத்தினா. அப்பா நம்ம வீட்டுக்கு வராருன்னு சொன்னதும் குஷியாகிட்டா. அங்க போய் ரெண்டு மூணு மாசம் தங்க போறாளாம்.” என அவர் பாட்டுக்கு பேசிக்கொண்டிருக்க ஜெயந்தி சுரத்தே இல்லாமல் அமர்ந்திருந்தார்.
அதைக் கண்டவர், “ஜெயந்தி என்னாச்சி ? ஏன் முகம் வாட்டமா இருக்கு?”என அருகே வந்துக் கேட்டார்.
“கிருபா யாரையோ மனசுல வச்சிருக்கா போலங்க. இந்த ஒன்றரை மாசமா அவ போக்கு பிடிபடல. எந்நேரமும் ஃபோன்ல பேசிக்கிட்டு அதயே பாத்து சிரிச்சிட்டு இருக்கா. நேத்து அவ செயின்ல இருந்த அவங்க தொப்புள்கொடி டாலர் இல்ல.” என மனதில் இருக்கும் கலக்கத்தை எப்படி கூறுவது என்று தெரியாமல் தான் கவனித்ததைக் கூறினார்.
“அவ புரொஃபசர் ஜெயந்தி. யாராவது அவ ஸ்டூடண்ட்ஸ் ஃபோன் பண்ணி டவுட் கேக்கலாம். டாலர் கிளீன் பண்ண எடுத்து வச்சிருக்கலாம். இதெல்லாம் ஏன் மனசுல போட்டு குழப்பிக்கற? நாளைக்கு மிரு வந்தா கிருவ பாத்துப்பா விடு.”
“இல்லைங்க. என் மனசு ஒருமாதிரி இருக்கு. நாளைக்கு குலதெய்வ கோவிலுக்கு போயிட்டு வரலாமா?”
“கண்டிப்பா போலாம். நம்ம போயிட்டு அப்பாவ கூட்டிட்டு வந்துடலாம். எல்லாம் நல்லதா தான் நடக்கும். நம்ம கிருபா அப்படியே யாரையாவது மனசுல வச்சிருந்தாலும் பையனப்பத்தி முழுசா விசாரிச்சிட்டு பாத்துக்கலாம் சரியா. கதவு எல்லாம் பூட்டியாச்சா?” எனக் கேட்டுவிட்டு உறங்க ஆயத்தம் செய்தார்.
ஜெயந்தியும் மிருணா நாளை வந்ததும் அவளிடம் பேசிக்கொள்ளலாம் என மனதில் நினைத்துக் கொண்டு கிருபாவைக் கோவிலுக்கு அழைத்து செல்லவேண்டும் என்று எண்ணிக்கொண்டார்.
அடுத்தநாள் கிருபாலினிக்கு கல்லூரி விடுமுறைதான் என்பதால் மூவரும் அதிகாலையிலேயே விண்ணூர்காரப்பட்டினம் கிளம்பிச் சென்றனர். கிருபாவும், மிருணாவும் விவரம் தெரிந்து இந்த ஊருக்கு செல்லவில்லை காரணம், அப்பா தாத்தா இடையிலான சண்டை மற்றும் தொலைதூரக்கல்வி பயில சென்றதால் வரும் வாய்ப்பும் வாய்க்கவில்லை.
“அப்பா.. ரொம்ப வருஷம் ஆச்சு நம்ம ஊருக்கு வந்து. எனக்கு பத்து வயசு தானே நான் கடைசியா இங்க வந்தப்ப?” என சுற்றிலும் பச்சைப் பசேலென இருக்கும் வயல்வெளி மற்றும் தோட்டங்களைப் பார்த்தபடிக் கேட்டாள்.
“ஆமா டா. உனக்கு இந்த இடம் பிடிச்சிருக்கா?”
“ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு ப்பா. மிருவுக்கும் ரொம்ப பிடிக்கும். நானும் அவளும் தாத்தா கூட கொஞ்ச நாள் இங்க தங்க வரணும். நல்ல ஸ்மெல் காத்துல வருது.”
“அது நெல் வாசம் கிருபா. அறுவடை அடுத்தமாசம் நடக்கும். அப்ப இன்னும் மணமா இருக்கும். நெல் அவிப்பாங்க அப்ப எல்லாம் அப்படியே அத எடுத்து சாப்பிடலாம்ங்கற அளவுக்கு வாசனை ஆளை தூண்டும்.” ஜெயந்தியும் கிராம வாழ்வியலைப் பற்றிப் பகிர்ந்துக் கொண்டு வந்தார்.
இவர்கள் எல்லைக் கோவிலில் கால் வைக்கும் போது அங்கே வெள்ளைச்சாமி, விஸ்வநாதன், விசாலாட்சி, மாலா என அனைவரும் நின்றிருந்தனர்.
கிருபாலினி அந்த மண்ணில் கால் வைத்ததும் உடலில் ஓர் அதிவலை பாய, தன்னை மறந்து கோவிலின் படிகளில் ஏறிச் சென்று அங்கிருந்த செந்தூர கணபதி முன்னே நின்று வணங்கினாள். பொதுவாக அந்த கோவிலின் வழக்கபடி மூலவரை கும்பிட்டு செல்லும் போது தான் இவரை வணங்கி செல்வர். இவள் முதலில் இவரை வணங்கிவிட்டு மூலவரை தரிசித்து, அம்பாளை தரிசித்து இறுதியாக தேவர்கள் வந்து அமர்ந்து உணவுன்பதாக கருதப்படும் கல்மேடையில் அவள் அமர்ந்ததும் நான்கு கிண்ணங்களில் திரவம் தோன்றியது.
தொண்டை வரண்டது போல இருக்கவும் அந்த கிண்ணங்களில் இருந்த நீர் போன்ற திரவத்தை அருந்திவிட்டு, கீழே வைக்க இருமல் எடுத்தது. மற்ற மூன்று கிண்ணங்களில் இருந்தவற்றையும் அவள் அருந்தி முடித்ததும் அக்கிண்ணங்கள் தானாக மறைந்துவிட்டது. அவள் அதைக் கவனிக்கும்போது, அவளைத் தேடிக்கொண்டு ஜெயந்தி வருவதைப் பார்த்து அவரிடம் சென்றாள்.
“எங்க போன அதுக்குள்ள?” எனக் கடிந்தபடி அவளைத் தன்னுடன் வரும்படிக் கூறி அழைத்துச் சென்று மூலவர் முன்பு நின்று மற்றவர்களை அறிமுகம் செய்துவைத்தார்.
“சாரி.. கோவில பாத்ததும் சாமி கும்பிட உள்ளே வந்துட்டேன். மிரு வந்திருந்தா இன்னும் ஒரு தூண் கூட தாண்டாம அங்கயே தான் இருப்போம். கோவில் ரொம்ப அழகா இருக்கு. சுத்தமா இருக்கு.” என அவள் சிரித்தபடிப் பேசும்விதம் கண்டு விசாலாட்சி மனதில் கீதனுக்கு இவளைக் கேட்கலாமா என்ற எண்ணம் உதித்தது.
“என்ன வெள்ளையா அந்த குடும்பம் நல்ல மாதிரி தானே இருக்கு. புள்ளைய குடுக்கலாம் தானே? பையனப்பத்தி விரிவா என் பேரன்கிட்ட சொல்லி விசாரிச்சேன். அவனோட சுத்துர பயலுகப்பத்தியும் விசாரிச்சோம். நேரா புள்ளைங்க பாத்து பிடிச்சி போனா மேற்கொண்டு பேசிக்கலாம். என்ன கனகவேலு நான் சொல்றது சரி தானே?” என அவர்கள் பேசுவது கேட்டு விசாலாட்சி லேசாக மனம் சுணங்க கிருபாலினியோ தலையில் இடிவிழுந்ததைப் போல நின்றாள்.
திருமண ஏற்பாடு நமக்கா? இத்தனை சீக்கிரம் மாப்பிள்ளை பார்த்துவிட்டார்களா? மணீஷ் பற்றி எப்படி சொல்வது? மிரு எப்போது வருவாள்? அவனை மனதில் வைத்துக் கொண்டு இன்னொருவன் முன்பு நிற்கமுடியாது. இறைவா.. உன்னை வந்து கண்டதும் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையா? அடுத்து என்ன செய்வது?
மிருணாளினியை அழைக்க எண்ணி அலைபேசி எடுக்க அங்கிருந்தவர்கள் அவளை விடாது பேச்சுக் கொடுத்தபடி இருந்தனர். மிருணாவிற்கு புலனவழி செய்தியாக அனுப்பிவிடலாம் என தட்டச்சு செய்து அனுப்ப அவளுக்கு சென்று சேரவே இல்லை. மனம் தவிப்பிலும், குழப்பத்திலும் ஆழ்ந்துச் சூழன்றது. இதை எப்படி சமாளித்து தன் மனதில் உள்ளவனை இவர்கள் முன் கொண்டு வந்து நிறுத்துவது என்ற எண்ணம் மட்டுமே அவளுக்குத் தலைக்குள் சுற்றிக் கொண்டிருந்தது.
அன்று மதியம் வரையிலும் அங்கிருந்துவிட்டு, வெள்ளைச்சாமியை அழைத்துக் கொண்டு மாலை இல்லம் வந்துச் சேர்ந்தனர்.
அந்த நேரம் வரையிலும் மிருணாளினி கிருபாவின் தகவலைக் காணவில்லை என்றதும் அவளின் பரிதவிப்பு அதிகமாகி மிருவிற்கு அழைத்தாள். பத்து முறைக்கு மேல் முயன்றும் மிருணா எடுக்கவில்லை என்றதும் இவளுக்கு பயம் தொற்றியது. ஏன் எதனால்? எங்கு சென்றாள்? என்ற கேள்விகள் அவளின் பயத்தை அதிகரிக்க மனம் தடதடக்க வெளியே வந்துப் பார்க்க மிருணாளினி அப்பாவின் மடியில் படுத்துப் பேசிக்கொண்டிருந்தாள்.
கிருபா அதைக் கண்டதும் அவள் அருகே சென்று அவளின் கன்னத்தை திருப்ப, மிருணாளினி அவளின் கைகளைத் தட்டிவிட்டாள். மீண்டும் மீண்டும் இதுவே நடக்க,“ஏண்டி ஃபோன் எடுக்கல? நான் பயந்துட்டேன் தெரியுமா?”எனக் கண்களில் நீரோடுக் கேட்டாள்.
“நீ இந்த ஒரு மாசத்துல என் ஃபோன் எத்தன தடவ எடுத்த?”என மிருணா கேட்டதும் கிருபா தலைக்குனிந்து நின்றாள்.
“இல்ல மிரு… அது… நீ… பிஸியா… அது…”என வார்த்தைகளை விழுங்கினாள்.
“யார் அந்த பையன்? என்ன பண்றான்?” என நேரிடையாகக் கேட்டாள்.
“மிரு…”என அதிர்ந்து அவளைப் பார்த்தாள். அவளின் அப்பா, அம்மா, தாத்தா அனைவரும் அவர்களைத் தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“சொல்லு.. யாரு அந்த பையன்?” என மீண்டும் அழுத்திக் கேட்க, கிருபாலினி மணீஷை சந்தித்தது முதல், முதல்நாள் அவன் கேட்டது வரைக் கூறினாள்.
“பாத்தீங்களா ப்பா? நீங்க இவளுக்கு மாப்ள பாக்கலன்னு நெனைச்சி அவளே பாத்துட்டா போல. கல்யாணம் ஆகிரிச்சா இல்ல?”என மிருணாளினி கேட்டதும் தேம்பியபடி அவளைக் கட்டிக்கொண்டாள்.
“சாரிடி உன்கிட்ட நேர்ல சொல்லணும்ன்னு தான் இவ்ளோ நாள் சொல்லல. எனக்கே சந்தேகம் இது காதல் தானான்னு. அவரு நல்லவரு தான். ஆனா அவரு நட்பா பாத்து நான் காதலிக்கறேன்னு சொன்னா தப்பா நெனச்சிடுவாரோன்னு சந்தேகத்துல இருந்தேன். இருவது நாள் முன்னாடி தான் அவரும் காதல சொன்னாரு. நானும் சொல்லிட்டேன். நீ தான் மத்தது எல்லாம் பாத்து செய்யணும். உனக்கு பிடிக்கலன்னா..” எனக் கூறி வார்த்தையை முடிக்காமல் நிறுத்தினாள்.
“பிடிக்கலன்னு சொன்னா விட்டுடுவியா கிருபா?”என மிருணாளினி கேட்டதும் அழத் தொடங்கினாள்.
“லூசு.. எதுக்கெடுத்தாலும் அழு.. முதல்ல கண்ண தொட மாண்புமிகு அம்மையாரே உங்க சந்தேகம் தீர்ந்துச்சா? அப்பா. என் அக்கா ஒருத்தன விரும்பறா. உங்க கருத்து என்ன?” என அவர்களிடம் நேரிடையாகக் கேட்டாள்.
“அந்த பையனுக்கு யாரும் இல்லையாமே” ஜெயந்தி சந்தேகமாகப் பேசினார்.
“அதான் நம்ம இருக்கோமே ஜெயந்தி. தவிர இந்த விஷயத்த அந்த பையனே வந்து சொன்னதால தான் நமக்கு தெரிஞ்சது இல்லைன்னா இன்னிக்கி தெரிஞ்சிருக்காதே” எனக் கூறி மணீஷ் அவரை மாலையில் இல்லத்தின் பக்கத்தில் இருந்த பூங்காவில் சந்தித்துப் பேசியத்தைக் கூறினார்.
காலையில் கோவிலில் திருமணம் சம்பந்தமாகப் பேசியதைக் கேட்டு மிருவிற்கு தகவல் அனுப்பியதும், மணீஷிற்கும் அனுப்பிவிட்டாள் கிருபா. அதன்பின் அவர்கள் இல்லம் வந்துச் சேர்ந்த சிறிது நேரத்தில் ஆதர்ஷ் கூறியபடி கனகவேலுவை சந்தித்துப் பேசினான்.
மிருணாளினி அந்த நேரம் சரியாக இல்லம் வரவும் கனகவேலு அவனைக் காட்டி விவரத்தைக் கூற, மிருணாளினி அவனிடம் சில நிமிடங்கள் பேசி அவனின் விலாசம் முதல் அனைத்தும் வாங்கிக்கொண்டு பின்னர் அழைப்பதாகக் கூறியனுப்பிவைத்தாள்.
ஆதர்ஷ் தொல்பொருள் ஆராய்ச்சி துறையில் மிருணாளினிக்கு தற்காலிக பணி நியமனத்தை அனுப்பிவைத்து நாளையே வந்து சேர்ந்துக் கொள்ளும்படிக் கூறியிருக்க, அதைக் குடும்பத்தாரிடம் பகிர்ந்துக் கொண்டாள்.
“ஏன் கண்ணு அந்த பையன் எங்க வேலை பாக்கறான்?” வெள்ளைச்சாமி கேட்டார்.
“தஞ்சாவூர் சரஸ்வதி மஹால்ல தாத்தா.” கிருபாலினி கூறினாள்.
“சூப்பர். அப்ப என் டிபாரட்மெண்ட் ஆளுங்கள வச்சே ஆளு எப்படி, என்ன வேலை, சம்பளம் எல்லாம் விசாரிச்சிடலாம் ப்பா.” என மிருணாளினி கூற, குடும்பத்தவர்கள் அவன் கொடுத்த போலித் தகவல்களை எங்கிருந்து விசாரிப்பது எனக் கலந்துப் பேசிக்கொண்டிருந்தனர்.