Loading

சில நொடிகளில் தன்னுள் ஏற்பட்ட மன அதிர்வையும், சினத்தையும் மறைக்க இயலாது, வசுந்தராவின் கன்னத்தில் தன் கைத்தடத்தை பதித்தவன், சிறு துளி செங்குருதி ஒன்று அவள் இதழ் வழி சிந்தியதை ஏற்க இயலாது, அவன் இதழ் கொண்டே உதிரத்தை துடைத்து விட்டான்.

அவன் அடித்ததற்கான காரணமும் புரியாது, தற்போது அவனது நெருக்கத்திற்கான காரணமும் புரியாது வசுந்தரா அதிர்ந்திருக்க, ஜிஷ்ணுவை விலக்காது அதே நேரம் அவனை தீண்டாமல் அப்படியே நின்றிருந்தாள்.

நிமிடங்கள் கடந்தே அவளை விட்டு விலகிய ஜிஷ்ணு, வசுந்தராவின் முகம் காண, அதுவோ கண்ணீர் தடங்களை ஏந்தி இருந்தது.

இவர்களை வாய் பிளந்து பார்த்திருந்த அர்ச்சனா தான், திடுதிடுவென வெளியில் ஓடி வந்து மூச்சிரைத்தாள்.

“ஆத்தாடி… இவங்க கூட இருந்தா லவ் பண்ணவே பயம் வரும் போலயே!” என மிரண்டவளின் அலைபேசி அழைக்க, பரத் தான் அழைத்திருந்தான்.

உடனே, காதில் வைத்தவள் “பரத் சார்” என ஆரம்பிக்கும் போதே, எதிரில் குமரனின் குரல் கேட்டது.

வெகுநேரமாக அர்ச்சனாவிற்கு முயற்சி செய்த பரத், “இப்ப ரிங் போகுது…” என குமரனிடம் கூறிய நொடியில் அவன் அலைபேசியை இடம் மாற்றி இருந்தான்.

“உன் போனை உலைல போட்டு கொளுத்து. சிக்னல் கூட கிடைக்காத சிம்கார்ட எதுக்குடி வச்சுருக்க. வசு எங்க? நீங்க எங்க இருக்கீங்க முதல்ல?” என அவளை பேசக் கூட விடாது, பதற்றத்தில் கத்தினான்.

அர்ச்சனாவோ, ‘இதென்னடா எல்லாரும் ரொம்ப கோபக்காரங்களா இருப்பாங்க போல’ என நொந்து, ஏதோ பேச வர, அதற்குள் பொறுமை இழந்தவன்,

“உன்ன தான் கேக்குறேன். வாயில என்ன வச்சு இருக்க? சொல்லித்தொல. வசு எங்க இருக்கா?” என்று மீண்டும் கத்தியதில்,

“ஐயோ… மேடம் வீட்டுக்குள்ள தான் இருக்காங்க. எனக்கு வீட்ல டவர் கிடைக்கல போல. வெளிய வந்ததும் தான் போன் வருது போதுமா.” என்றாள் அவசரமாக.

அப்பதிலில் தான் சற்றே தணிந்தவன், “ஒன்னும் பிரச்சனை இல்லைல. தர்மா அங்க இருக்கானா?” என மீண்டும் வினா எழுப்ப,

“ம்ம் இருக்காரு இருக்காரு” என்று முணுமுணுத்தவளுக்கு, ‘அவன் என்ன செய்கிறான்’ எனக் கேட்டு விடுவானோ என்ற பயம் எழ, “நாங்க வந்துடுறோம்” எனக் கூறி விட்டு அவசரமாக போனை வைத்து விட்டாள்.

வசுந்தராவின் கன்னம் ஏந்திய கண்ணீர் தடம் ஜிஷ்ணுவை உறுத்தினாலும், முயன்று இழந்த கோபத்தை வரவழைத்து,

“அறிவில்ல உனக்கு. எப்பவுமே போனை பிஸியா தான் வச்சு இருப்பியா? அவசரத்துக்கு போன் செஞ்சா கூட, எடுக்க முடியாதா உன்னால? அதான், கால் வெயிட்டிங் ஆப்ஷன் இருக்குல்ல. அதை வச்சு தொலைக்க வேண்டியது தான. அன்னைக்கும் இப்படி தான் போனை எடுக்காம…” எனக் கோபத்தில் வார்த்தைகளை உதிர்க்க வந்தவன் சட்டென்று நிறுத்திக் கொண்டான்.

ஏதோ ஒரு அவசர விஷயமாக தன்னை அழைத்திருக்கிறான் என்பது மட்டும் புரிந்திட, அவனது இறுதி வரிகளில் இறுகிப் போனாள் பெண்ணவள்.

“என்ன சொல்ல வந்த? அன்னைக்கு போன் எடுத்துருந்தா ராதி இறந்துருக்க மாட்டாள்ல?” கண்ணில் மொத்த வலியையும் தேக்கி கேட்டவளை திகைத்து பார்த்தவன்,

“நான்… நான்… அப்படி சொல்லல.” என தடுமாறி அவளருகில் வர எத்தனிக்க, மெல்ல பின்னே விலகியவள், “கிளம்பலாம். சுந்தர் முழுச்சுருப்பான்” என்றாள் எங்கோ வெறித்து.

ஜிஷ்ணுவிற்கு தான் முதன் முதலில் தவிப்பு அரங்கேறியது. அவள் மேல் இருக்கும் பழைய கோபத்தை மறக்கவும் இயலவில்லை. அதே நேரம், ஒட்டி உறவாடவும் மனமில்லை. ஆனால் மனம் ஒரு கல்லெறிந்த குளமல்லவோ!

நடப்பவற்றை ஆராய்ந்தபடியே, காருக்கு சென்ற ஜிஷ்ணுவின் பின்னாலேயே தன் கைப்பையை எடுத்துக் கொண்டு வந்த வசுந்தரா, பின்னால் ஏறிக்கொள்ள, அதற்கும் சுள்ளென ஆத்திரம் எழுந்தது ஆடவனுக்கு. கண்ணாடி வழியே அவளை முறைத்து வைத்தவனை நிமிர்ந்தும் பார்த்தாளில்லை.

அர்ச்சனா தான், இப்போது அவர்களுடன் செல்வதா அல்லது இப்படியே நிற்பதா என்பது புரியாது விழிக்க, இப்போது அர்ச்சனா மீது அனல் பார்வை வீசிய ஜிஷ்ணு,

“மகாராணி கார்ல ஏறுறீங்களா? இல்ல ஆள் வச்சு உள்ள ஏத்தணுமா?” எனக் கேட்டான் நக்கலாக.

அதில் மறுநொடி காரினுள் அமர்ந்த அர்ச்சனா, சில நிமிடங்கள் கடந்தும் அவன் காரை செலுத்தாமல் இருந்ததில் குழம்பி அவனைப் பார்த்தாள்.

அவனோ, எஞ்சின் உறும, ஆக்சிலேட்டரை அதிகப்படுத்தி, வசுந்தராவை தீப்பார்வை பார்த்தானே ஒழிய, காரை எடுத்தபாடில்லை.

‘நீ முன்னால் வந்து அமராமல் ஒரு அடி கூட கார் நகராது’ என அவன் பார்வையாலேயே உணர்த்த, அதை உணர்ந்த வசுந்தராவும், அழுத்தமாக அமர்ந்திருந்தாள்.

அர்ச்சனாவோ, “சார்… இப்படியே கார ஆன் பண்ணி வச்சு இருந்தா, பெட்ரோல் தீந்துடும்.” என நிலைமை புரியாது கூறி, அவன் முறைப்பில் கப்சிப் என அமர்ந்து விட்டாள்.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த வசுந்தரா, “அரச்சு… காரை எடுக்க சொல்லு. லேட் ஆகுது” எனக் கூற, அவள் மூடிய வாயை திறக்கவே இல்லை. அவனும் பிடிவாதத்தை தளர்த்தவில்லை.

நேரம் கடப்பதை உணர்ந்தவளுக்கோ, “டைம் வேஸ்ட் பண்ணாத தர்மா.” என்று கண்டிக்க,

“எனக்கும் டைம் வேஸ்ட் பண்ணனும்ன்னு அவசியம் இல்ல… உன்னால குற்றவாளியை கண்டுபிடிக்கிற நேரம் தான் வேஸ்ட் ஆகுது.” என அவன் தோளைக் குலுக்க, அதற்கு மேல் அவனிடம் வாதம் செய்ய பிடிக்காமல், எரிச்சலுடன் முன்னால் சென்று அமர்ந்தாள்.

இதழ் கடையோரம் வெற்றிப்புன்னகை பூத்த ஜிஷ்ணு தர்மன், விசிலடித்தபடியே காரை கிளப்ப, வசுந்தராவின் எண்ணம் முழுக்க குழப்பமும் குற்ற உணர்வும் மேலும் மேலும் வதைத்தது.

என்னதான் அர்ச்சனாவின் மூலம் பிரச்சனை எதுவும் இல்லை என்று தெரிந்தாலும் இரு ஆடவர்களும் குடோன் வாசலிலேயே நண்பர்களை எதிர்பார்த்து நிற்க, அந்நேரம் நாற்காலி நகரும் சத்தம் கேட்டதில் உள்ளே விரைந்தனர்.

அங்கு சுந்தர் தான், கண் விழித்து, அவனை சுற்றி போடப்பட்டிருந்த கயிற்றை அவிழ்க்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.

அவனைக் கண்டதும் கடுப்பான குமரன், “டேய்… பரதேசி. எதுக்குடா உன் அப்பாவையே கொலை பண்ண பார்த்த?” என சப்பென அறைய, வாய் மூடப்பட்டிருந்ததில் “ம்ம்… ம்ம்” என திமிறினான்.

பரத் அதனை எடுத்து விட்டு, “ஒழுங்கா உண்மையை சொல்லு” என்று மிரட்ட,

அவனோ, “என்னடா என்னை தூக்கிட்டு வந்து மிரட்டுறீங்களா?” என்று எகிறினான்.

குமரன் தான், “இங்க பாரு. இன்னும் அஞ்சு நிமிஷத்துல தர்மா இங்க வந்துடுவான். அவன் வந்தா, இப்படி வாய் வார்த்தையா பேச மாட்டான். நீ அரை உசுரா இருக்கும் போது தான் கேள்வியே கேட்பான். உனக்கு எது வசதின்னு நீயே முடிவு பண்ணிக்கோ” என நாசுக்காக மிரட்ட, அதில் அவனுக்குள் அச்சம் பரவியது.

சற்றே குரலை தாழ்த்தியவன், “கு… குமரா. நான் சொல்றதை கேளு. வீணா எல்லாரும் என் மேலே பழி போடுறீங்க. எனக்கு எதுவும் தெரியாது. நானே ஏன் என் அப்பாவை கொல்ல போறேன்…” என்றான்.

பரத்தோ, “ஓ! அப்ப ராதிகா கொலைக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?” எனக் கேட்க, அவன் முகத்தில் ஒரு நொடி திகைப்பு பரவினாலும் மறுநொடி, “எனக்கு சத்தியமா எதுவும் தெரியாது…” என்று எச்சிலை விழுங்கினான்.

எப்படி கேட்டும் அவனிடம் உண்மையை வரவழைக்க இயலாது போக, சுந்தர்,

“ஐயோ ஏன் நான் சொல்றதை நம்ப மாட்றீங்க. எனக்கு எதுவும் தெரியாது.” என்றதில், “நீ எந்த தப்பும் பண்ணலைன்னா, எதுக்குடா இப்ப ஓடி ஒழிஞ்ச” குமரன் கடுப்பாகக் கேட்டான்.

“என் அப்பாவை நான் தான் கொலை பண்ண பாத்தேன்னு நீங்க என்னை தேடுறது என் பிரெண்டு மூலமா தெரிஞ்சுது. எப்படியும் நான் என்ன சொன்னாலும் நம்ப மாட்டீங்கன்னு தான் பயந்து ஊருக்கு வராம இருந்தேன். இதான் உண்ம.” என்றிட,

பரத் எகத்தாளமாக, “அப்ப, உன்னோட இன்னோவா கார்ல ஆளை அனுப்பி உன் அப்பாவை கொலை பண்ண முயற்சி பண்ணல அப்படித்தான?” என முறைத்ததில் சுந்தரின் புருவ மத்தியில் சிறு முடிச்சு விழுந்தது.

“என்ன இன்னோவா காரா?” என அவன் அதிர, சுந்தர் கூறியதை கேட்டு இரு ஆண்களுக்கும் தலை சுற்றியது.

ஏதேதோ யோசனையில் மூழ்கிக்கொண்டிருந்த வசுந்தரா, சட்டென, “ஸ்டாப் த கார்” என்று கத்த, ஜிஷ்ணு சரட்டென காரை நிறுத்தி, “எதுக்கு இப்படி கத்துறவ?” என்றான் புரியாமல்.

அவள் நன்றாக அவன் புறம் திரும்பி அமர்ந்து, சுருங்கிய புருவங்களுடன் தீவிரமாக பேசத் தொடங்கினாள்.

“என் பெர்சனல் போன்ல எப்பவும் வெயிட்டிங் ஆப்ஷன் ஆன்ல தான் இருக்கும் தர்மா. ராதி இறந்த அன்னைக்கு, நான் டாடி கிட்ட தான் போன் பேசிட்டு இருந்தேன். அப்பவும் என் போன்ல ‘வெயிட்டிங் ஆன்’ல தான் இருந்துச்சு. ஆனா நீ போன் பண்ணுனது எனக்கு தெரியவே இல்ல. போனை வச்சதுக்கு அப்பறமும் கூட, நீ போன் பண்ணதுக்கான ஒரு நோட்டிஃபிகேஷன் கூட எனக்கு வரல. அதெப்படி வராம இருக்கும்?” என குழப்பத்துடன் கேட்க,

அவள் அவளையே வருத்திக்கொள்கிறாள் எனப் புரிந்து, “நீ கவனிக்காம இருந்து இருப்ப வக்கீலு…” என்றான் மென்மையாக.

“இல்ல இல்ல இல்ல… ஏதோ சரி இல்ல. எல்லாமே ஏதோ முரணாவே இருக்கு. அன்னைக்குன்னு பார்த்து என் டாடி ஏன் அரை மணி நேரம் என்கிட்ட போன் பேசணும்?” என புரியாமல் கேட்க,

அர்ச்சனா உடனே, “அன்னைக்கு உங்க பர்த்டே தான மேம். அதனால கால் பண்ணிருப்பாங்க.” என்றாள்.

“இல்ல அர்ச்சு. என் டாடி, என் பர்த்டேக்குலாம் பெருசா அலட்டிக்கிட்டது இல்ல. எப்பவும் நானும் மம்மியும் தான் செலப்ரெட் பண்ணுவோம். ஏன், அதுக்கு முந்தின வருஷம் நான் சென்னைக்கு போனப்ப கூட, டாடி வீட்ல இல்ல. நான் மட்டும் தான் இருந்தேன். அப்பறம் ஏன், அவரு அப்ப மட்டும் கால் பண்ணி பேசணும்?” எனக் கூர்மையாக யோசிக்க,

ஜிஷ்ணு, “நீ அவரு மேல சந்தேகப்படுறியா வசு?” எனக் கேட்டான்.

“ப்ச்…” எனத் தலையை பிடித்தவள், “தெரியல. ஆனா இப்ப இருக்குற நிலைல எல்லாரு மேலயும் சந்தேகப்பட தான் தோணுது.” என்றே சோர்ந்தாள்.

அவள் கேசத்தை கோத வந்த ஜிஷ்ணு, ஏதோ தடுக்க கரத்தை மூடித் திறந்து, தன்னை கட்டுப்படுத்த முயன்றான்.

ஆனால் அது முடியாது போக, அவளது பின்னங்கழுத்தை பற்றி மெல்ல தடவிக் கொடுத்தவன், அவள் உயரத்திற்கே குனிந்து, “அன்னைக்கு உன் சித்தப்பா என்ன பேசுனாரு வசு?” என வினவினான் மெல்லிய குரலில்.

தலையை நிமிர்த்தாமல், “நத்திங் இம்பார்ட்டண்ட். சும்மா தான் பேசிட்டு இருந்தாரு…” என்றவளிடம்,

“சும்மா எதுக்கு அரைமணி நேரம் பேசணும்?” எனக் கேட்டவனுக்கு, அவளும் அப்படி தேவை இல்லாது வளவளக்கும் ஆள் இல்லையே என்ற யோசனை வந்தது.

அவள் பதில் பேசாது, அவனின் கரத்தை எடுத்து விட்டு, ஜன்னல் புறம் திரும்பி, “பெருசா ஒண்ணும் இல்ல சும்மா தான். கார எடு போகலாம்” என்றாள் அவனைப் பாராமல்.

“வசு!” என்று கண்டிப்பாக அழைத்தவன், “நீ சொல்ற ஒவ்வொரு விஷயமும் நமக்கு ரொம்ப முக்கியம். ஏதாவது ஒரு க்ளூ கிடைக்கும். யோசிச்சு சொல்லு” என்று அவளை பேச வைக்க முயல,

“நான் தான் சொல்றேன்ல ஒண்ணும் இல்லன்னு! விடேன்” என அவள் மறுத்தும் ஜிஷ்ணு விடவில்லை.

அவளோ பொறுமை இழந்து, “ப்ச்… உன்ன பத்தி தான் பேசிட்டு இருந்தேன் போதுமா!” எனக் கடுப்பாக, அவள் கூற்றில் சுவாரஸ்யமானவன், “என்னை பத்தியா?” என்றே அவளை விழிகளால் அளக்க, அவளுக்கோ ஐயோ என்றிருந்தது.

அன்று நகுலன் போன் செய்த போது, முழுக்க முழுக்க அவள் பேச்சில் ஜிஷ்ணு மட்டுமே இருந்தான். கன்னிமனூர் சென்றது முதல் அனைத்தையும் உற்சாகமாக நகுலனிடம் கூறிட, அவரும் சிரிப்புடன்,

“அப்போ எங்களுக்கு மாப்ள பாக்குற வேலை மிச்சம்!” என்று கேலி செய்தார். அதில், அவளது கன்னங்களும் சிவப்பை தத்தெடுத்தது.

இப்போதோ அதே சிவப்பை விழிகள் தத்தெடுக்க, ஜிஷ்ணு பதில் பேசாது சாலையையே வெறித்தான்.

பின் ஏதோ தோன்ற, வசுந்தரா பரபரப்பானாள்.

“தர்மா… எனக்கு இப்ப தான் ஞாபகம் வருது. ரெயில்வே கிராஸ்ல வந்த சத்தமும், அந்த ஹோட்டல் ஆளு சத்தமும் எங்க கேட்டுச்சுன்னு ஞாபகம் வந்துடுச்சு.” என்றிட, அவன் ‘எங்க’ என்பது போல பார்த்தான்.

“அன்னைக்கு நான் டாடிகிட்ட பேசிட்டு இருக்கும் போது, எங்க இருக்காருன்னு கேட்டேன். சென்னைல இருக்குறதா சொன்னாரு.

ஆனா, இதே ட்ரெயின் சத்தம், அது கூட அந்த ஹோட்டல் ஆளோட சத்தம் எக்ஸ்சாட் – ஆ கேட்டுச்சு. அப்ப கூட நான் அது என்ன சத்தம்ன்னு கேட்டேன்.

அது சென்னைல இருக்குற ரெயில்வே க்ராஸிங். அதுக்கு பக்கத்துல இருக்குற ஹோட்டல்ன்னு சொல்லி சமாளிச்சாரு. நானும் சென்னைல எல்லா இடத்துக்கும் போயிருக்கேன். அங்க இந்த மாதிரி எந்த ஒரு ஹோட்டலையும் பார்த்தது இல்ல. ஐ ஆம் டாமின் சியூர்!” என உறுதியாக கூறியவள், “ஆனா, இங்க இருந்துக்கிட்டே ஏன் சென்னைல இருக்கிறதா பொய் சொல்லணும்?” என்று புரியாமல் ஜிஷ்ணுவைப் பார்த்தாள்.

“உன் அப்பா குரலும் நகுலன் குரலும் ஒரே மாதிரி இருக்குமா?” என கண்ணை சுருக்கி கேட்க,

“ம்ம். ரெண்டு பேர்க்கிட்டயும் பேசுனவங்களுக்கு வித்தியாசம் தெரியும். இல்லன்னா சித்தப்பா குரலும் என் அப்பா குரல் மாதிரி தான் இருக்கும். அப்போ… அப்போ… ராதியை கிணத்துல தள்ளி விடும் போது நீ கேட்டது அவரோட குரலா?” கேட்கும் போது அவளுக்கு குரல் நடுங்கியது.

“அவன் குரலே தான்!” உறுதியாக கூறிய ஜிஷ்ணு முதல் வேலையாக காரை குடோனிற்கு விட்டான்.

வசுந்தராவிற்கு ஒரு முடிச்சு அவிழ்ந்ததென மகிழ்வதா அல்லது தன் தந்தையே இக்குற்றத்தின் முதல் சந்தேகத்திற்கு உரியவராய் இருப்பதில் வேதனை கொள்வதா எனப் புரியாது உடைந்தாள். இதில் தமையன் வேறு!

குடோன் வாசலில் காரை நிறுத்தியதுமே, குமரன் வசுந்தராவிடம் அவசரத்துடன் நலன் விசாரிக்க, அவள் புரியாமல் “எனக்கு என்ன? நான் நல்லா தான் இருக்கேன்” என்றாள்.

“ஷப்பா… கொஞ்ச நேரத்துல உயிரே போய்டுச்சு. உன்ன கொலை பண்ணுவேன்னு ஒருத்தன் மிரட்டுனதும் மாப்ள கண் மூடித்தனமா வேண்டிய ஓட்டிட்டு உன்ன தேடி தான் வந்தான்.” என்று ஜிஷ்ணுவையும் போட்டுக் கொடுக்க, அதன் பிறகே விஷயம் உறைத்தது அவளுக்கு.

அவனின் கோபமும், பதற்றமும் அப்போது தான் புரிய, பரத், “ஹே! எதுவும் ப்ராப்லம் இல்லன்னு சொன்ன, கன்னத்துல என்ன அஞ்சு விரலும் பதிஞ்சு இருக்கு.” எனக் கேட்டதில், வசுந்தரா ஜிஷ்ணுவை முறைக்க, ஜிஷ்ணு அவளது பார்வையை தவிர்த்தான்.

அர்ச்சனா அமைதியாக இராமல், “எம். எல். ஏ சார் தான் சப்புன்னு அடிச்சாரு.” என்றிட, இரு ஆண்களும் அவனை முறைத்தனர்.

அதனை அவன் கண்டுகொள்வது போல் தெரியவில்லை என்றதும், குமரன், “சுந்தர விசாரிச்சோம்…” எனக் கூறிட, வசுந்தராவும் ஜிஷ்ணுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

ஜிஷ்ணு, “அவனோட இன்னோவா காரை அவன் சித்தப்பா நகுலன் யூஸ் பண்ணதா சொன்னானா?” என்று சரியாகக் கேட்க, அதெப்படி உனக்கு தெரியும் என்று இருவரும் திகைத்தனர்.

“சொல்றேன். சுந்தர் தப்பிச்சு போகாம ஆளை எப்பவும் காவலுக்கு வைக்க சொல்லு. இப்ப நமக்கு நகுலன் தான் வேணும்.” என்று மீண்டும் அவரைத் தேடும் பணியில் மூழ்கினர்.

‘இதென்ன வெட்ட வெட்ட பூதம் கிளம்புது. கல்யாணத்துக்கு பொண்ணு தேடுற வயசுல, அக்கியூஸ்ட்ட தேட வைக்கிறாங்களே’ என வாய்க்குள் முணுமுணுத்த பரத்தை, குமரன் முறைக்க, அதற்குள் அதே சுந்தரின் இன்னோவா கார், அவர்களை பின் தொடர்ந்தது.

அதனைக் கண்டுகொண்ட ஜிஷ்ணு, காரின் வேகத்தை அதிகப்படுத்த, அந்நேரம் எதிரில் மேலும் இரு கார்கள் அவர்கள் காரை நோக்கி அதிவேகத்தில் மோத வர, ஜிஷ்ணு சட்டென காரை ஒடித்து இடது புற குறுகிய சாலையில் விட்டான்.

“யாரு இவங்க? திடீர்ன்னு நம்மள துரத்துறாங்க?” என அர்ச்சனா பயத்துடன் சீட்டென எண்ணி, குமரனின் தொடையை இறுக்கிப் பற்றிக் கொள்ள, வசுந்தரா, “கார நிறுத்து தர்மா. ஒருவேளை இது எல்லாத்துக்கும் காரணம் என் சித்தப்பா தான்னா நான் நேரடியா அவருகிட்டயே பேசுறேன்” என்றாள், டாடி என்ற அழைப்பைத் தவிர்த்து.

சாலையில் கவனத்தை பதித்தபடி, தீ வேகத்தில் பறந்த ஜிஷ்ணு, “அவனுங்க வர்றத பார்த்தா அமைதியா பேசுவானுங்கன்னு தோணல வசு. இப்ப ரிஸ்க் எடுக்க வேணாம்.” எனக் கண்டிப்பாய் கூறியவன், ஒரு புதரின் இடுக்கில் காரை மறைத்து விளக்கையும் அணைத்தான்.

சிறிது நேரத்தில், மற்ற மகிழுந்துகளின் ஓசை இல்லாது போக, காரை நேராக கன்னிமனூருக்கு தான் விட்டான்.

காரில் இருந்தவாறே, “குமரா, நீ வேற வண்டி எடுத்துட்டு போ. விடியிறதுக்குள்ள நகுலன் பத்தின மொத்த தகவலும் எனக்கு வேணும். அஞ்சு வருஷமா நமக்கு ஆட்டம் காட்டி இருக்கான்னா முதல்ல அவனை பத்தி தெரிஞ்சுக்கணும். அப்பறம் வச்சு செய்யலாம்…” என பல்லைக்கடித்தவன், மேலும் சில விவரங்களை கூற, அதற்கு அவனிடம் பதிலே இல்லை.

எங்கே பேசுவது? பயம் இன்னும் விலகாது அவனருகில் இருந்த பாவை தான் தொடையில் பதித்த கரத்தை அகற்றவே இல்லையே. அதுவே அவனுக்கு புது வித அவஸ்தையை உருவாக்க, பேச்சற்று அமர்ந்திருந்தான்.

“டேய்!” என்ற ஜிஷ்ணுவின் அதட்டல் குரலில் தான் சுயம் பெற்றவன், “என்… என்ன மாப்ள சொன்ன?” என திக்கி திணறி கேட்க, அர்ச்சனாவோ, “அப்ப இவ்ளோ நேரம் தூங்கிகிட்டு இருந்தீங்களா எதிர்க்கட்சி வக்கீலு.” என்றாள் நக்கலாக.

அவளை திரும்பி முறைத்து வைத்தவனை, ஆராய்ச்சியாக பார்த்த ஜிஷ்ணு மீண்டுமொரு முறை கட்டளைகளை கேலியுடன் இட, தலையை உருட்டியவன், அர்ச்சனாவிடம், “எக்ஸ்கியூஸ் மீ. கொஞ்சம் கையை எடுக்குறீங்களா?” என்றான்.

அதன் பிறகே, சீட் என எண்ணி அவன் தொடையை பற்றி இருப்பதே உறைத்தது அவளுக்கு. பட்டென கரத்தை எடுத்துக்கொண்டவள் தயக்கத்துடன் நெளிந்தாள். கன்னங்கள் வேறு காரணமின்றி சிவந்து தொலைத்தது.

இருவரையும் ஒரு மாதிரியாக பார்த்த பரத், “லொக்கு லொக்கு” என இருமியபடி, “நானும் உங்க கூட வரேன்…” என்றிட, இருவரும் காரை விட்டு இறங்கினர்.

அர்ச்சனாவோ, ‘அய்யயோ! இவங்க ரெண்டு பேரு கூட நான் தனியா இருக்கணுமா? எப்ப அடிப்பாங்க எப்ப ஒட்டுவாங்கன்னு தெரியாம நான் பதட்டமாவே இருக்கணுமே…’ என மிரட்சியுடன் அமர்ந்திருக்க, அவளைக் காக்கும் தெய்வமாக குமரனே அவளையும் உடன் வரக் கூற, தப்பித்தோம் பிழைத்தோம் என இறங்கினாள்.

பரத் சந்தேகத்துடன், “இப்ப இவ எதுக்கு?” எனக் கிசுகிசுப்பாகக் கேட்க,

“அவங்க ரெண்டு பேருக்கும் பிரைவசி வேணும்ல. இவள் நந்தி மாதிரி நடுவுல உட்காந்தா அவங்கள எப்ப சேர்த்து வைக்கிறது…” என்று பெரிய மனதுடன் கூற, பரத் தான் நம்பாத பார்வை பார்த்தான்.

“இப்ப நம்ம என்ன பண்ண போறோம்?” வசுந்தரா யோசனையுடன் ஜிஷ்ணுவைப் பார்க்க,

அவனோ கூலாக, “மலை ஏறுவோமா வக்கீலு?” எனக் கேட்டதில், முதலில் திகைத்தவள் பின் முறைத்தாள்.

தீயோ தென்றலோ அவள்(ன்)
மேகா!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
20
+1
83
+1
2
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்