Loading

 

அத்தியாயம் 2

பொதியில் மலைநாடு

சலங்கையினில் ஜதி வாசித்துக் கொண்டே தன் தோழியைக் காண மானோடும் முயலோடும் துள்ளிக் குதித்து கொண்டு இருக்கிறாள் பொதியத்தின் இளவரசி முத்தழகி. அவளின் பின்னே அவளின் திருநாமத்தை அழைத்துக் கொண்டே ஓடி வருகின்றனர் துமியும் கமழியும்.

துமி “என்னடி கமழி? இவள் மந்தியை விட இவ்வளவு குறும்புத்தனம் செய்கிறாள். அத்துணை வேகம் பார்த்தாயா அவள் கால்களில்?” என்று மூச்சுவாங்கியபடி பேசினாள்.

கமழியிடம் பதில் வராமல் போக, துமி தன் வேகத்தைக் குறைத்து அவளைக் கண்டாள். கமழி மெதுவாக ஒரு புதரின் அருகில் சென்றவள், அப்படியே உறைந்து நின்று விட்டாள் எனில் துமியோ அவள் கண்ட காட்சியை பார்த்து கத்தியே விட்டாள்.

உடன் வந்த தோழிகளின் அலறல் சத்தம் கேட்க, விரைந்து அவ்விடம் வந்தவள் ஒரு நொடி திடுக்கிட்டாலும், பின் சூழ்நிலை அறிந்து, தன் தோழிகளை அடக்கினாள்.

முத்தழகி “அமைதியாய் இருங்கள்! அதுவே வலியில் துடித்துக் கொண்டிருக்கிறது. சற்று மூர்க்கமாக வேறு உள்ளது. துமி, நீ சென்று காணாம் வாழையைப் பறித்துக் கொண்டு வா. கமழி உன்னிடம் இருக்கும் பருத்திக் கந்தையைக் கொடு. அப்படியே மாய மூலிகையையும் பறித்து வா.” என்று கட்டளையிட்டாள்.

ஆனால் இருவரும் திடுக்கிடலுடுன் நின்று கொண்டிருந்தனர். பின்னே இவர்கள் கண்டது நம் அரிமாவைத் தான். வனத்தில் திடீரென்று வெள்ளைச் சிங்கத்தைக் கண்டவர்கள் கத்தாமல் வேறு என்ன செய்ய முடியும்?

முத்தழகி “இருவருக்கும் செவி செயலிழந்து விட்டதா? ம்ம்ம்? விரைந்து செல்லுங்கள். உடனே ரணத்தை ஆற்ற வேண்டும்.”

இருவரும் அங்கிருந்து செல்லத் தயங்க, முத்தழகி முறைத்த முறைப்பில் விரைந்தனர்.

மெல்ல அரிமாவை நோக்கிச் சென்றவள், அதன் அருகினில் அமர்ந்தவள், அதன் தொடைப் பகுதியில் பாய்ந்திருந்த ஈட்டியை மெல்ல வெளியே எடுத்தாள்.

வலியில் அரிமா உறும, சற்றுப் பயந்தாலும் பின் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு முழுவதுமாக ஈட்டியை எடுத்தாள். எடுத்த மாத்திரமே இரத்தம் கசிய, அதற்குள் துமியும் கமழியும் மூலிகையுடன் வந்தனர்.

ஈட்டியின் கூர்முனையானது பலத்த காயத்தை அரிமாவிற்கு ஏற்படுத்தியிருக்க, காணாம் வாழை இலையை நன்கு கசக்கி பச்சிலைப் பூசி, பருத்தித் துணியால் அதன் தொடையை இறுகக் கட்டினாள். வலியில் மீண்டும் அரிமா உறும, முத்தழகியைத் தவிர மற்ற இருவருக்கும் அடிவயிற்றில் ஏதோ ஒன்று ஆனது.

பின் மாய மூலிகை எனும் தொட்டால் வாடியை நன்கு கசக்கி உடலின் பிற இடங்களில் ஏற்பட்ட ரணத்தின் மேலும் பூசினாள். தற்போது தான் அரிமாவின் உறுமல் சற்று நின்றது.

துமி “அதான், பச்சிலை வைத்தியம் பார்த்தாயிற்று தானே! வா அழகி செல்லலாம். எனக்குப் பயமாக உள்ளது.” கமழிக்கு ஐயத்தில் நா மேலண்ணத்தில் ஒட்டியேக் கொண்டது.

இவர்களின் உணர்ச்சிக்கு நேர்மாறாக முத்தழகியோ அரிமாவின் பிடரியில் தன் கைகளை நுழைத்து, அதனை தடவிக் கொடுத்து கொண்டிருந்தாள். அதில் சுகம் கொண்ட அரிமா கண்களை மூடி அமைதியாகப் படுத்திருந்தது.

இவள் செய்கையைக் கண்டு அதிர்ந்தது துமி, கமழி மட்டுமல்ல. வயமாவுடன் வந்த மாறனும், திரவியனும் தான். அவர்களைத் தேடிக் கொண்டு வந்த அந்துவன் கூட.

கமழி “என்ன செய்துக் கொண்டிருக்கிறாய் நீ? அது குருளை அல்ல, வளர்ந்த ஆண் சிங்கம் என்பதை மறந்தாயா அழகி? அது உண்டதோ இல்லையோ? வலியில் இருந்ததால் வேட்டையாடும் திராணியில்லாமல் இருக்கும். இப்போது வருகிறாயா இல்லை நீயே அதற்கு உணவாகப் போகிறாயா?”

தன் தோழி செய்யும் செயலைக் கண்டு, எழுந்த சினத்தில் இவள் இவ்வாறு கூற,

முத்தழகியோ “இது நம்மை ஒன்றும் செய்யாது கமழி. அஞ்சவேண்டாம். வனத்திலேயே வாழ்ந்த சிங்கமாய் இருந்தால் நம்மைக் கண்ட நொடி மிரண்டிருக்கும். ஆனால் இது நம்மைக் கண்டு மிரளவோ, மூர்க்கமாகவோ இல்லை. இதிலிருந்து என்னத் தெரிகிறது?”

துமி “ம்ம்ம்.. இன்னும் சிறிது நேரத்தில் நாம் எமதூதருடன் செல்லப் போகிறோம் என்று தெரிகிறது.”

கண்களை மூடி பிடரியில் கை வைத்து வெள்ளைச் சிங்கத்தின் மென்மையை அறிய முற்பட்டு கொண்டிருந்தவள், “அடியே அறிவீலி! இச்சிங்கம் யாரோ ஒருவரின் வளர்ப்புப் பிராணி என்று தெரிகிறதடி.” என்று கூறிட, எதிர் பதில் வராது தன் மிழிகளைத் திறக்க, அவள் அருகே இருந்த அரிமா அவளையே உறுத்து விழித்துக் கொண்டிருந்தது. துமியும் கமழியும் அங்கு வந்திருந்த வயமாவை கண்டு பயத்தின் உச்சியில் இருந்தனர்.

ஒரு நிமிடம் அவள் அதிர்ச்சியாகிட, பெண்ணவளின் கை அனிச்சையாய் பிடரியில் இருந்து விலகியது. வெள்ளைப் புலி, வெள்ளைச் சிங்கம் தன் கண் முன் இருந்தால் பேதைகளுக்கு பேச்சு வருமா என்ன? இங்கு மூச்சே போய்விடும் போல் இருந்தது மூவருக்கும்.

முத்தழகி தன் மரவாளை உறையிலிருந்து எடுக்கப் போக, அரிமாவும் வயமாவும் ஒன்றாக உருண்டு பிரண்டு தன் அன்பை நாவால் பொழிந்தனர். புதரின் மறைவிலிருந்த அந்துவனுக்கோ என்ன செய்வதென்றே புரியவில்லை. பயத்தில் அவன் இயற்கை உபாதை வந்ததை கூட அறியவில்லை பாவம்.

முத்தழகி வயமாவை தாக்க எடுத்த மரவாளானது திரவியனின் அம்புக்கு இரையாகியது. தன் முகங்களை மறைத்தப்படி வந்தனர் மாறனும் திரவியனும்.

திடீரென்று வந்த ஆண்களின் வருகையால் மூவரும் திடுக்கிட்டனர். முத்தழகியோ அதனை வெளிக்காட்டாமல் தான் மறைத்து வைத்திருந்த தன் மற்றொரு வாளை உறுவினாள்.

ஷ்த்ருஞ்ஜய திரவியன் முத்தழகியைப் பார்த்த மறுநொடி அவனின் இதயக் குதிரை அவள் புறம் ஓடியது என்பதை மறந்து விட்டான்.

“யார் நீங்கள்? கள்வர்களா? இல்லை, அந்நிய நாட்டு உளாவாளிகளா? இச்சிங்கமும் புலியும் தங்களோடதது தானா?” என்று தன் மிழிகளை உருட்டி, வாளைச் சுழற்றி கேள்விக் கணைகளை தொடுத்தாள்.

அப்போது மறைந்திருந்து அந்துவனும் வெளிப்பட்டு, “இவர்கள் என் சகாக்கள் தான் மலையிளவரசியே! நீங்கள் அஞ்ச வேண்டாம்.” என்றான்.

முத்தழகி “அஞ்சுவதா? நானா? அஞ்சுதல் என் அகராதிலேயே இல்லை தமையனே!. ம்ம்ம்… இவர்கள் எந்நாட்டு இளவரசர்கள்? நீங்கள் இந்நேரத்தில் இங்கு என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்?”

அந்துவன் “சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்ளம்மா. ஏன் இந்த ஆவேசம்?”

முத்தழகி “கேட்டதற்கு விடை!” என்று மிடுக்காக பதில் கூறினாள்.

அவளின் மிடுக்கும் கண்களில் இருக்கும் குறும்புப் பார்வையையும் ரசிக்கத் திகட்டவில்லை திரவியனிற்கு. சற்றுமுன் கற்றக் கல்வியும் கூறிய மந்திரமும் எம்மூலையில் சிதறவிட்டானோ, ஆண்டவா உனக்கே வெளிச்சம்.

அந்துவன், “இவன் மிழலை நாட்டு இளவரசன். வருங்கால மன்னன் இளவல் இளந்திருமாறன். இவன் மிழலை நாட்டின் வருங்கால சேனாதிபதி” என்று அவன் கூறிக் கொண்டு இருக்க,

துமி “இடையில் குறுக்கிடுவதற்கு பொறுத்தருள வேண்டும். எமக்கு ஒரு முக்கிய வேலை இருக்கிறது. இளவரசியார் அனுமதியளித்தால் உடனே செல்லலாம்!” என்றாள்.

முத்தழகி அவளை கேள்வியுடன் பார்க்க, “சமிக்ஞை ஒலி” என்று மட்டுமே கூற, முத்தழகி அர்த்தத்துடன் தலையசைத்தாள்.

முத்தழகி “பொருத்தருள வேண்டும், இளவலே! மலைவேந்தர் மெய்கண்டான் அவர்களின் புதல்வி யான் உங்களை அன்புடன் இந்த பொதியையிற்கு வரவேற்கிறேன். ஒரு முக்கிய விடயமாக உடனே செல்ல வேண்டும். விடைபெறுகிறேன். தமையனே! அந்தி சாய்வதற்குள் தத்தமது இடத்திற்கு விரையுங்கள். வேட்டை விலங்குகள் நடமாட்டம் அதிகமிருக்கும். இக்கூற்று தங்களுக்கு மட்டுமே. சிங்கம், புலி வளர்ப்பவர்கள் எதையும் எதிர்கொள்ளுவார்கள். வருகிறேன்!”

அந்துவன் “உத்தரவு இளவரசி” என்றுவிட்டு தன் நண்பர்கள் பக்கம் செல்ல, முத்தழகி தோழிகளோ வடக்கு நோக்கி நகர்ந்தாள்.

திரவியன் “சரியான ராங்கிக்காரியாய் இருப்பாள் போலவே. உன்னையே பரிகாசம் செய்து விட்டு செல்கிறாள்.”

அந்துவன் “உங்கள் இருவரையும் விடவா அவள் என்னைப் பரிகாசம் செய்கிறாள்? அதனை விடுங்கள், என்ன நடக்கிறது இங்கே? என்னுடன் வருமாறுத்தானே அழைத்தேன். எங்கேயடா சென்றீர்கள்?”

மாறன் “வயமா உறுமியச் சப்தம் நின் செவிக்கும் கேட்டதல்லவா? அறியாது போல் எம்மிடம் வினவுகிறாய்?” என்று சற்று குரலை உயர்த்தினான் இளவல்.

அந்துவன் “அது, அறிந்ததால்தான், வழிபாட்டுக்கு வருமாறு அழைத்தேன். ஆனால், நீங்கள் இங்கல்லவா விஜயம் செய்திருக்கிறீர்? அரிமாவையும், வயமாவையும் குருகுலம் அருகே சில மாணவர்கள் கண்டு, குருவிடமே கூற சென்றார்கள். இறைவன் சித்தம், நான் அவர்களை மடக்கி, பற்பல மாற்றுமொழி கூறி அனுப்பி விட்டேன். குருவிற்கு தெரிந்திருந்தால் என்னவாயிருக்கும்?” என்றவன் மொழியில் சிறிது சினம் எட்டிப் பார்த்தது.

திரவியன் “சினம் கொள்ளாதே அந்துவா! குருகுலம் சென்று பேசிக் கொள்ளலாம்!”

மாறன் “இல்லைத் திரவியா, நாம் இங்கேயே கலந்துரையாடலாம். முழு நிலவு நாளன்று நம்மை அழைத்துச் செல்லப் பரிவாரங்கள் சூழ தந்தை வருவதாய் செய்தி. குருகுலத்தில் உரையாடுவது உசிதமல்ல!” என்றான்.

அதை ஆமோதித்த திரவியன் “அந்துவா, நீ எப்படி இங்கு வந்தாய்? அந்த பெண்ணை உனக்கு எவ்வாறு பரிட்சியம்?” என்று வினவினான்.

“வயமாவைத்த தொடர்ந்து சென்ற நீங்கள் ஒன்றை கவனிக்க மறந்து விட்டீர்கள். வயமாவின் உறுமல் தெற்கு நோக்கி வந்தது. எப்போதும், வயமா வடக்கு நோக்கியே கர்ஜிப்பான். அதானல்தான் நான் வடக்கு நோக்கி வந்தேன். அப்போது அரிமாவின் காலில் அடிப்பட்டுக் கிடந்ததையும், அவனுக்கு அப்பெண்கள் பச்சிலை வைத்தியம் செய்ததையும் கண்டேன்.”

திரவியன் கேட்ட இரண்டாம் வினாவிற்கு பதில் கூறாமல் பேச்சை மாற்றினான்.

மாறன் “ம்ம். நாங்களும் கண்டோம். அவள் அரிமாவனின் பிடரியினை சிறிதும் ஐயமின்றி தடவிக் கொண்டு இருந்தாள்.” என்றான் சிறு புன்னகையுடன்.

திரவியன் வலுக்கட்டாயமாக அவள் எண்ணத்தை ஒதுக்கி வைத்து விட்டு, விடயத்தைக் கூறத் துவங்கினான்.

“அந்துவா, தண்டராணியத்தின் வடமேற்கு எல்கையில் ஒற்றர்கள் உலாவுவதாக செய்தி வந்தது. அவர்களை அறியவே அரிமாவையும், வயமாவையும் அனுப்பினேன். ஒற்றர்களின் ஓலையை வயமா அளித்தான். அரிமாவை இன்னும் நான் ஆராயவில்லை.” என்று ஒரு பார்வை அரிமாவைக் காண, அவன் பார்வையை அறிந்தவன் தன் பிடரியை சிலுப்பினான். அதிலிருந்து இடைக்காழி நாட்டின் நாணயம் வந்து விழுந்தது. அதைக்கண்ட மாறனும் திரவியனும் யோசனையில் ஆழ்ந்தனர்.

அனுதினமும், அந்தி சாய்ந்த பிறகு, மாறனும், திரவியனும் புரவியில் நாட்டின் நிலைமையை அறிய செல்வதுண்டு. அந்துவனோ வனத்தின் உச்சியில் இருக்கும் அகத்தியர் குகைக்கு சென்றிடுவான். இது இவர்களின் பல திங்கள் வழக்கமாக இருந்தது.

அந்துவன் “இது இடைக்காழி நாட்டு மக்கள் பயன்படுத்தும் நாணயம் தானே? அப்போது ஒற்றர்கள் இடைக்காழி நாட்டைச் சார்ந்தவர்களா?” என தன் வினாவை முன் வைத்தான்.

மாறன் “ஏன், அவற்றை நம்மை குழப்புவதற்காக ஒற்றர்கள் உபயோகப்படுத்தியிருக்கக் கூடாது?”

திரவியன் “நாட்டின் நிலையை முழுவதும் ஆராயமல் நாம் ஒரு முடிவுக்கு வரலாகாது.” என்றான் யோசனையாக.

பெருமூச்சொன்றை விட்ட மாறன், “நாளை குருகுலத்தில் தான் நமக்கு விடைக் கிடைக்கும்.”

அந்துவன் “விரைவில் குருவிடம் அனைத்தையும் உரைக்க வேண்டும் திரவியா!”

திரவியன் “முக்காலமும் உணருபவர் நம் குரு, இந்நேரம் நாம் செய்யும் அனைத்தையும் அறிந்திருக்க மாட்டாரா என்ன?” என்று கூறிய இச்சமயம், தியானத்தில் திளைத்து இருந்த குருவின் முகத்தில் புன்னகை மலர் பூத்தது.

வயமாவையும், அரிமாவையும் வனத்திலேயே விட்டுவிட்டுப் பரணி ஊற்றை நோக்கி சென்றனர் மூவரும்.

அதுவரை அவர்களை கண்காணித்துக் கொண்டிருந்த ஒரு பருந்து சட்டெனப் பறந்துச் சென்றது.

வெகு நாட்கள் கழித்து சந்தித்த தோழிகள் மகிழ்ச்சியுடன் அளவளாவிக் கொண்டனர்.

முத்தழகி “உன்னை வனத்தின் தொடக்கத்தில்தானே காத்திருக்கச் சொன்னேன். ஏன், நீ இத்தனை தூரம் வந்தாயடி?” என்று தன் உயிருக்கு உயிரான தோழியைச் செல்லமாகக் கடிந்துக் கொண்டாள்.

துமி “இடைக்காழி நாட்டு இளவரசிக்கு மலைவேந்தன் இளவரசியைக் காண மிகுந்த ஆவல் எழுந்திருக்கும், அப்படித்தானே இளவரசியாரே?”

கமழி “அதில்லையடி துமி, அவர்களுக்கு அவரின் மாமாவின் நினைவு வாட்டியிருக்கும். பசலைக் காற்றுத் தாங்காமல் வனாந்திரம் உள்ளே மூலிகைத் தேடி வந்திருப்பார்.” எனக் கூறிச் சில்லறையாய் சிரித்தனர்.

இடைக்காழி நாட்டு இளவரசி மீயாள் சினமிகா. சிறு வயதில் தந்தையுடன் தன் மாமன் இளந்திருமாறனை காண வருகையில் வழித் தவறி ஆரண்யத்திற்குள் மாட்டிக் கொண்டாள். அவளைக் காப்பாற்றியது நம் முத்தழகி தான். அதிலிருந்து, இருவரும் இணைப்பிரியாத் தோழிகள். மலையிலிருந்து இடைக்காழிக்கு முத்தழகி ஒரு திங்கள் சென்றால், மறுதிங்கள் பொதியலிற்கு சினமிகா வரவேண்டும் என்பது இவர்களுக்குள் எழுதப்படாக விதி.!

சினமிகா “பார்த்தாயா முத்தழகி, அவர்கள் செய்யும் பரிகாசத்தை? இவர்களின் வாய்த் துடுக்கைப் பார்த்தாயா?”

முத்தழகி சிரித்து விட்டு, “சினம் கொள்ளாதே சினமிகா. வரும் வழியில் உன் மாமா அவர்களைப் பார்த்தோம். அதனால் தான் அவர்கள் அப்படி கூறுகிறார்கள்.”

சினமிகா “என்ன, மாமாவைப் பார்த்தாயா? எங்யேடி நானும் அவரைக் காணலாம்தான் என்றிருந்தேன். ஆனால்…” என்றவள் கால்களால் நிலத்தில் கோலம் போட,

கமழி “இளவரசியவர்கள் என்ன செய்கிறீர்கள்?”

முத்தழகி “ஆஆன், வெட்கமாம்! அப்படித்தானே சினமிகா?”

சினமிகா “ச்சீ போங்களடி! மாமா, அவர்கள் குருகுலம் விட்டு வந்ததும் அவருக்கு பட்டம் சூட்டி, பரிசம் போடுவதாக அத்தையார் அன்னையிடம் உரைத்துக் கொண்டிருந்தார்; தெரியுமா? அந்நாளிற்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேனடி.” என்று சிலாகித்துக் கொண்டாள்.

துமி “கமழி, எனக்கு ஒரு ஐயம்!” முத்தழகியும், சினமிகாவும் உரையாடல் விடுத்து அவர்கள் உரையாடுவதைக் கவனிக்கத் தொடங்கினர்.

கமழி “என்ன துமி?”

துமி “ஒரு பெண்ணிற்கு அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு அவசியமல்லவா?”

கமழி “இதென்னடி வினா? ‘அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த, நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப’ என்று தொல்காப்பியமும் கூறுகிறதே!”

துமி “சரிதான், இவையனைத்தும் நம் முத்தழகிக்கும் இருக்கின்றது என்பபை இன்றுதான் அறிந்தேன்.” என்றாள்.

கமழி “என்னடி பிதற்றுகிறாய்? அவளும் பெண்தானே?” என்றாள் வாய்வரை வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு.

துமி “ம்ம்.. ஆமாம் தான். ஆனால்..?”

முத்தழகி “என்னடி ஆனால்..?” என்றாள் சற்று முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு.

துமி சிரித்துக் கொண்டே, “நற்கோடன் உன்னைக் காணும் போதெல்லாம், அவனை எரித்துவிடுவது போல் பார்க்கும் உன் பார்வை, இன்று சிங்கத்தின் சொந்தக்காரன், தேசத்தின் படைத்தளபதியைக் காண்கையில் தணல் பார்வை, நாணப் பார்வையாய் மாறியதே. வனத்தில் சுற்றி வந்ததால் வீரம் மட்டுமே இருக்கின்றது என நினைத்து வருந்தாத நாட்கள் இல்லை நான்.” என்று கூறி, அடிக்க வந்த முத்தழகியிடம் இருந்து தப்பிக்க சினமிகா பின் ஒன்றிக் கொண்டாள். அங்கு நால்வரும் சிரித்து விளையாடிக் கொண்டிருக்க, ஒரு ஜோடிக் கண்கள் அவர்களை நோட்டமிட்டுச் சென்றது.

சினமிகா “பொழுது சாய்வதற்குள் நான் அரண்மனை திரும்ப வேண்டும். அடுத்தத் திங்கள் உன் வருகைக்காகக் காத்திருப்பேன் என் தோழியே!”

முத்தழகி “நிச்சயம் சந்திப்போம். நின் மணஓலைக்காக நானும் காத்துக்கொண்டிருக்கிறேன்”

வெட்கப் புன்னகை சிந்தி விடைப்பெற்றாள் மீயாள் சினமிகா.

யாமம்.
பரணி ஊற்று.

 
பரணி ஊற்றுக்குச் சென்ற நம் நாயகர்கள் தங்களை சுத்தப்படுத்திக் கொண்டு, மலை உச்சியில் வீற்றிருக்கும் அகத்தியர் குகைக்கு சென்றனர். சாந்த சொரூபியாக காட்சியளித்த அகத்தியரின் திருவடிகளை சரணடைந்த மூவரும் தியானத்தில் அமர்ந்தனர்.

கண்கள் மூடி மனதை ஒரு நிலைக்கு கொண்டு வர முயன்றுத் தோற்றுப்போனான் திரவியன். கண்களை மூடினாலே, வாள் ஏந்திய அழகியின் தோற்றமே வர, நிலைத் தடுமாறினான், தளபதி சத்ருஞ்ஜய திரவியன்.

திடீரென்று ஏதோ சப்தம் கேட்க, மூவரும் திடுக்கென விழித்தனர். அந்துவன் பேச வாயெடுக்கும்முன் இளந்திருமாறன், அவனை கையமர்த்தியதும் மூவரும் சப்தத்தைக் கவனிக்கத் தொடங்கினர்.

ஒருவன் “ஏனடா, இன்னும் இரண்டு தினங்களில் முழு நிலவு நாள். அதற்குள் நாம் பொதியம் வந்தடைந்துவிட்டோம். சொச்சம் இருக்கும் இரண்டு தினங்களில் நாம் என்ன செய்வது?”

இரண்டாமவன் “நமக்கிட்ட பணியை செய்ய இரண்டு தினங்கள் உள்ளது. அதுவரை தளபதியார் கூற்றின்படி இளவலையும், திரவியனையும் கண்காணிக்க வேண்டும்தானே. அதற்கு இவ்வகாசம் உபயோகப்படும்.”

மூன்றாமவன் “சரியாக கூறினாய்! ஆமாம், ஏன் தளபதியார் இவர்களை கண்காணிக்கும்படி சொன்னார்?”

இரண்டாமவன் “அன்று, தண்டராணியத்தின் எல்கையில் வெண்ணிற சிங்கமும், புலியும் வந்ததல்லவா, நீ கூட சிங்கத்தின் காலில் ஈட்டியை எறிந்தாயே?”

மூன்றாமவன் “அட, ஆமாம்மப்பா! இந்நேரம் எங்கு மடிந்து கிடக்கின்றதோ?”

இதனைக் கேட்ட திரவியன் தன் சினத்தில் கை முஷ்டியினை இறுக்க, இளவலும் அந்துவனும் அவனை ஆசுவாசப்படுத்தினர்.

இரண்டாமவன் “ஆம், அந்த சிங்கத்தின் முதுகில் நம் மிழலை நாட்டு சின்னம் மின்னியது. அதை நான் கண்டு தளபதியிடம் கூறினேன். அவர்தாம், ‘இத்தகைய துணிச்சல் இவ்விருவர்க்கு மட்டுமே உண்டு’ என்று அவர்களை கண்காணிக்கச் சொன்னார்.

முதலாமவன் “சரி, வாருங்கள். சற்று நித்திரைக் கொண்டுவிட்டு வைகறையில் நம் பணியைத் தொடங்குவோம்.”

(மூவரும் சமவெளிப் பகுதியை நோக்கி சென்றனர்)

இளவல் “இவர்கள் நம் வீரர்களா?”

அந்துவன் “ஒருவேளை இவர்கள் இடைக்காழி நாட்டைச் சேர்ந்தவர்களாய் இருப்பார்களோ? ஏனெனில் நமக்குக் கிடைத்தத் தடயங்கள், இடைக்காழியைச் சேர்ந்தது தானே?”

இளவல் “இருக்கலாம். இவர்கள் குறிப்பிடும் தளபதி யாராய் இருக்கக் கூடும்.? இடைக்காழி நாட்டுத் தளபதி குலபதியா, அல்ல நம் தளபதி சிவநேயரா? எனக்குக் குழப்பமாய் இருக்கிறது. திரவியா, இதனைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்று இருவரும் திரும்புகையில் அவன் அங்கு இல்லை. 


 

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்….

பழந்தமிழ் நாடு (குமரிக் கண்டம் (அ) குமரி நாடு)

பரந்து விரிந்து, சுற்றியும் பரவை சூழ்ந்த நிலப்பரப்பில், தன் செங்கதிர்களை வீசிக் கொண்டு உதித்தெழுகிறான் செங்கதிரோன். அவனின் ஒளி இந்நிலப்பரப்பை அடையும் முன் தன் புரவியில் சிலிர்த்தெழுந்தான் முதுகுடுமி மாறவர்ம செங்கோலேந்திய முடத்திருமாறப் பாண்டியன். அவனுக்கு ஈடாக தன் புரவியை செலுத்திக் கொண்டு முன்னேறுகிறாள் சங்கேந்திய அகத்தினியாள். நாட்டின் தென்கோடி எல்கையில் அமைந்துள்ளது இந்த நாடு.  குமரி நாட்டின்கீழ் சுமார் நாற்பத்தி ஒன்பது நாடுகள் கட்டுக்குள் இருக்கின்றன. அனைத்தும் குமரி வேந்தள் முதுகுடுமி மாறவர்ம செங்கோலேந்திய முடத்திருமாறப் பாண்டியன்கீழ் தான் இயங்கி வருகின்றன. அவரது தர்மப்பத்தினி தான் சங்கேந்திய அகத்தினியாள். தன் தந்தை வேந்தனுக்கெலாம் வேந்தன் குமரியின் குணசீலன் நன்மாறவர்ம செங்கோலேந்திய பெரும்வழுதிப் பாண்டியனிற்கு பிறகு இன்றும் சிறப்பாக ஆட்சி செய்து, நாட்டை தன் கண்ணுக்குள் வைத்துக் காத்துக் கொண்டு வருகிறார் மாறவர்மப் பாண்டியன். இளவயது யாழிப் போல் கம்பீரம் நிறைந்து காணப்படும் இம்மன்னனின் ஆட்சியில் மக்களின் நலன் சொல்லவொண்ணா அளவு ஆனந்தத்தில் திளைத்து இருக்கிறது.

மேற்சொன்ன நாற்பத்தியொன்பது நாடுகளையும் ஏழாகப் பிரித்து, அதனை நிர்வகிக்கும் மிகச் சிறந்தப் பொறுப்பை வழங்கவே தற்போது இருவரும் கோட்டையை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கின்றனர். அந்த நாற்பத்தியொன்பது நாடுகளையும்,

ஏழுதெங்க நாடு
ஏழுமதுரை நாடு
ஏழுமுன்பலை நாடு
ஏழுபின்பலை நாடு
ஏழுகுன்ற நாடு
ஏழுகுனக்கரை நாடு
ஏழுகுரும்பனை நாடு

எனப் பிரித்து வைத்துள்ளனர் மாறவர்மனின் முன்னோர்கள். ஏழு நாடுகளைக் கொண்ட ஒரு பகுதிக்கு ஒரு பொறுப்பாளர் வீதம் ஏழுப் பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும். அந்த ஏழு பேரும் மன்னருக்கு நம்பிக்கையானவர்களாய் இருத்தல் அவசியம் தானே. இந்த நாற்பத்தியொன்பது நாடுகளையும் பாதுகாத்து நிர்வகிக்கும் பொறுப்பு மன்னாதி மன்னர் குமரி வேந்தள் முதுகுடுமி மாறவர்ம செங்கோலேந்திய முடத்திருமாறப் பாண்டியரைத் தவிர வேறு யாருக்குச் சாலச் சிறந்ததாக இருக்கும். ஏழு மன்னர்களையும் நியமிக்கும் பொறுப்பும் அவருடையது தானே. இந்த நாற்பத்தியொன்பது நாடுகளில் கபாடபுரமும் தென்மதுரையும் அடக்கம்.

மிகப் பெரிய ஆறாகப் பஃறுளி ஆறும் குமரி ஆறும் மேருமலையின் வசம் இருந்து மற்ற நாடுகளுக்குப் பரவி தன் பொழில் தாயின் செழுமையை இன்னும் அதிகரித்தது. இதில் கன்னியாற்றின் பங்கும் உண்டு. இந்த குமரி நாட்டின் வடக் கிழக்கு கோடியில் அமைந்துள்ளது பொதியில் மலைத் தொடர்.

தற்போது முத்தூரில் இருந்து குமரி நாட்டின் முக்கிய இடமாகவும் நாட்டின் தலைமைப் பகுதியாகவும் இருக்கும் பெருவள நாட்டிற்குத் தான் மன்னரும் மகாராணியாரும் சென்றுக் கொண்டிருக்கின்றனர்.

வைகறை பொழுது.
பஃறுளி ஆற்றங்கரை.

பஃறுளி ஆற்றுக்கும் குமரி ஆற்றுக்கும் நடுவே அமைந்துள்ள நாடு தான் பெருவளநாடு. தான் கொண்டப் பெயருக்கு ஏற்றார்போலவே பெரும் வளங்கள் உடைய நாடு. தன் வெண்ணிறப் புரவியில் பஃறுளி ஆற்றங்கரைக்கு வந்தடைந்தனர் மாறவர்மரும், அகத்தினியாளும்.

அகத்தினி “வேந்தளே, வைகறைப் புலர்ந்து விட்டது. யாம் சற்று நீராடிவிட்டுப் பயணத்தைத் தொடரலாம் என்பது எந்தன் சிந்தைக்கு எட்டிய ஒன்றாகின், வேந்தள் அவர்கள் தமது சிந்தைக்கு சிக்கும் ஒன்றாகியதைக் கேட்க யான் சித்தம் கொள்கிறேன்” என்று புன்னகைச் சிந்தினாள்.

தன் அகத்தினை வென்றவளின் அகம் குளிர்ந்த சொற்களைக் கேட்டு, மாறவர்மர் “என் அகத்தினியவளின் சிந்தைக்கு எட்டிய ஒன்று, என்று குன்றிப் போய் இருக்கின்றது?. அவ்வாறே தொடரலாம்” என்று மறுமொழிப் பகர்ந்தான்.

பஃறுளி ஆற்றின் ஒரு பகுதியில் பெண்கள் நீராடும் இடத்திற்கு சென்றாள் சங்கேந்திய அகத்தினியாள். அதுவரை தங்களது புரவிகளுக்கு நீரைப் புகட்ட இட்டுச் சென்றார் வேந்தள்.

பெண்கள் நீராடுவதற்கென்றே அமைந்த அந்த இடமானது, ஆற்றின் குறிப்பிட்ட அளவு நீர் மட்டும் உள்ளே வரும்படி அமைக்கப்பட்டு இருந்தது. இருப்பக்கமும் கிட்டத்தட்ட மொத்தம் இருபது அறைகள் இருக்கும். நடுவிலே பிரம்மாண்ட அறை ஒன்று இருந்தது. அது மன்னர் குடும்பத்து பெண்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட இடம். அங்கு பெண்கள் நீராடுவதற்குத் தேவையான அனைத்து வகையான பொருட்களும் இருக்கும். அந்த நடு அறையில் இருந்து உள்ளே ஒரு அரை மணித் திளாயங்கள் நடந்தால் அரசியாரின் அந்தப்புரம் வந்துவிடும். அவ்வாறு அமைக்கப்பட்டு இருந்தது அவ்விடம். முதலில் உள்ளே நுழைபவர்களுக்கு அதனைக் கண்டால் மாளிகைப் போல்தான் காட்சியளிக்கும்.

உள்ளே நுழைந்தவர், தன் கனத்த ஆடைகளைக் களைந்து, மெல்லிய ஆடையோடு நீராடத் துவங்கினார். காந்தள் மலர், ஆம்பல் மலரும் கலந்து அதில் சிறிது ஆவாரம் மலர்களையும் குழைத்து அதனை தன் மேனிக்குப் பூசினாள். பின், மேலை நாட்டில் அன்றொரு நாள் தன் மன்னவர் வணிக ரீதியாக சென்றிருந்த பொழுது, அவர்கள் அன்பாகக் கொடுத்தத் நறுமணத் திரவியத்தையும் தன் மேனியில் பூசினாள். அவற்றின் நாற்றமே (நாற்றம் என்றால் வாசனை) மனதை மயக்கச் செய்தது. பின், குவளை மலரையும், செங்கொடுவேரி மலர்களையும் குழைத்து, அதனுடன் மேலும் இத்தியாதிகளைக் கலந்து தன் கூந்தலில் பூசினாள். தற்போது, பாண்டியனிற்கு வந்த வினா, நமக்கும் வருவதில் எந்த வித ஐயமும் இல்லைப் போலும் என்றே தோன்றுகிறது. அப்படி ஒரு மனதை மயக்கும் மணம்.

பின், ஆற்று நீரில் முங்கி எழுந்து தன் மேனியை பஃறுளி மூலிகை நீரால் கழுவினாள். இறுதியாக, காட்டு மஞ்சளை தேய்த்து, மீண்டும் மேனி முழுவதும் தடவ, மஞ்சள் பூத்த புது மலராக நீரை விட்டு வெளியே வந்தாள் சங்கேந்திய அகத்தினியாள்.

தன் மெல்லிய மேனியை பட்டுத் துகில் கொண்டு துடைத்தவள், ஏற்கனவே அங்கு வைக்கப்பட்டிருந்த ஆடைகளில் தனக்கானதை எடுத்துக்கொண்டாள். அதனை நேர்த்தியாக உடுத்தியவள், எந்த வித ஆபரணமும் இன்றி தாரகைப் போல் மின்னினாள். தயாராகி வெளியே வந்தவள், அங்கு பூத்துக் குலுங்கிய செம்முள்ளி மலரைப் பறித்து கெண்டைக்கால் வரை தொங்கிய தன் கருநாகக் கூந்தலுக்குச் சூடினாள். தேவர்களின் அரம்பையோ மேனகையோ இவளின் சுந்தரத்தில் தோற்றுத்தான் போவார்கள்.

அங்கு தன் மன்னவன் புரவிகளுக்கு நீரைக் காட்டிக் கொண்டு இருப்பதைப் பார்த்தவள், இடை வளைத்து, உடல் நளினம் கொண்டு வேந்தளை நோக்கி சென்றாள்.

“வேந்தளே!”

மனையாளின் அழைப்பில் மத்தம் கொண்டவர், அவளின் வதனம் கண்டு மதிமயங்கினார். “அகத்தினி… எந்த வித விலையுயர்ந்த ஆடை ஆபரணமுமின்றி மின்னும் நிந்தன் எழிலில் ஏழேழு நாடுகளை ஆளும் நான் ஏழையாகிப் போனேன் என் ஏந்திழையே!. எந்தன் உதிரம் மண்ணில் வீழ்ந்தாளும், நிந்தன் இந்த மென்னகையை காலனே வந்தாலும் மென்றுத்திண்ண விடமாட்டேன் என் அகமே!”

உயிரானவனின் வார்த்தைகள் கேட்டு, சட்டென்று அவர் வாயில் தன் கைகளை வைத்து, மேலும் எதுவும் கூறவேண்டாம் என்பதற்கிணங்க மறுப்பாகத் தலையசைத்தாள் அகத்தினி.

புன்னகையோடு மாறவர்மர் அகத்தினியை நெருங்கும் சமயம், எங்கிருந்தோ வந்த வில் இருவரையும் நூலிடை அளவில் உரசிச் சென்றது.

நடந்த சம்பவத்தையே அதிர்ச்சி மாறாமல் பார்த்துத் திகைத்து விட்டனர் இருவரும்…

நாடாளும் மன்னனைத் தாக்கும் முயற்சியினை செய்யத் துணிந்த அந்த நாசக்காரன் யார்?

குமரிக்கும் பொதியிலிற்கும் இடையில் என்ன?

திரவியன் எங்கு சென்றான்?

அந்த மூவரும் யார்?

அந்த பருந்து யாருடையது?

பெண்களை நோட்டமிட்ட அந்த கண்கள் யார்?

 

விரைவில் சந்திப்போம் விடைகளை…

 

சந்திப்போம் அடுத்த மோ(கா)தலில்!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்