20 – காற்றிலாடும் காதல்கள்
அதற்கு பின் மிருணாளினி அடுத்த நாள் எட்டயபுரம் கிளம்பிச்சென்றாள். கிருபா வழக்கம் போல கல்லூரிச் சென்று வந்துக் கொண்டிருக்க, ஒரு வாரம் அவளைப் பின்தொடர்ந்துக் கண்காணித்த மணீஷ் அவளைத் தன்பக்கம் இழுக்கும் வேலையை ஆரம்பித்தான்.
“ஹலோ மேடம். எப்படி இருக்கீங்க? அந்த புக் உபயோகமா இருக்கா?”எனக் கடைத்தெருவில் சந்தித்துப் பேசினான்.
“அவ அந்த புக் எடுத்துட்டு தான் படிக்க போயிருக்கா. கண்டிப்பா உபயோகமா தான் இருக்கும். நான் அவள கேட்டுட்டு சொல்றேன். நீங்க எங்க இங்க?” என பெண்கள் அழகு பொருட்கள் விற்கும் கடையில் அவன் நிற்பதுக் கண்டுக்கேட்டாள்.
“என் சித்தப்பா பொண்ணு கூட வந்தேன். அதோ அங்க இருக்கா. அவளுக்கு அடுத்த வாரம் கல்யாணம். அதான் பர்சேஸ் பண்ணிட்டு இருக்கோம்.” எனக் கூறியபடித் தங்கையென்று கூறிய பெண் அருகே அழைத்துச் சென்றான். அவள் அன்று அவனோடு திரையரங்கில் சல்லாபித்தவள். கிருபா அன்று நடந்த எதுவும் கவனியாததால் அவளை அடையாளம் தெரியவில்லை.
“உஷா” என அவளை அழைத்தான்.
“என்ன மணி?” எரிச்சலாகத் திரும்பினாள்.
“இவங்க என் ஃப்ரெண்ட். கிருபாலினி. புரொஃபசர்.” என அறிமுகம் செய்துவைத்தான்.
“வெறும் ஃப்ரெண்ட் அஹ்? கேர்ள் ஃப்ரெண்ட் அஹ் டா?” என அவள் கிண்டலாகக் கேட்கவும், மணீஷ் பதறி, “ஹேய் லூசு.. அவங்க தப்பா நெனைச்சிக்க போறாங்க. ஃப்ரெண்ட் தான் போனவாரம் இருந்து தான் தெரியும். உன்கிட்ட இருந்து ஒரு புக் வாங்கிட்டு போனேன்ல அது இவங்களுக்கு தான். நம்ம லைப்ரரி குரூப்.” என மிக இயல்பாக நாடாகமியற்றினான்.
“சாரி கிருபா. இவ லூசு மாதிரி ஏதோ ஒளரிட்டு இருப்பா. நீங்க தப்பா எடுத்துக்காதீங்க” என முகத்தில் வருத்தம் காட்டி அவன் ஆடிய நாடகத்தில் கிருபா உண்மையென நம்பாமல் இருந்திருந்தால் தான் ஆச்சரியம்.
“ஒண்ணுமில்ல மணீஷ். டென்ஷன் ஆகாதீங்க. அவங்க விளையாட்டுக்கு தானே சொன்னாங்க. நான் ஒண்ணும் நெனச்சிக்கல. கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்குன்னு மணீஷ் சொன்னாரு. வாழ்த்துகள்.” என அந்த பெண்ணிற்கு கைக்கொடுத்தாள்.
“தேங்க் யு நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. இதோ இன்விடேஷன். நீங்க கண்டிப்பா வரணும். அண்ணா.. சொல்லு டா.” என அவள் அவனை உசுப்பவும், “ஆமா கிருபா. நீங்க கண்டிப்பா வரணும். உங்க சிஸ்டர மறக்காம கூட்டிட்டு வாங்க.” என அவளிடம் நல்லவனாகப் பேசி அவளை விட்டுச் சற்று இடைவெளிவிட்டு நடக்க, பாவையும் அவனை அப்படியே நம்பிக்கொண்டாள். அவனின் ஆளை மயக்கும் சிரிப்பில் கொஞ்சம் பிடித்தமும் எழுந்தது. அவளின் கண்களில் அதைக் கண்டுகொண்டவன், அவளை விடாதுப் பேசி, பார்த்து நட்பை வளர்த்துக் கொண்டான்.
அடுத்த வாரத்தில் தங்கையென அறிமுகம் செய்தவளுக்கு போலி கல்யாணமும் ஏற்பாடு செய்து கிருபாலினி வந்து செல்லும் வரையிலும் நாடகத்தை நடத்தி அவளை முழுதாக நம்பவைத்திருந்தான்.
“உங்க அப்பா அம்மா எங்க மணீஷ்?” கிருபா கேட்டதும் அவன் கண்கள் கலங்க,“அவங்க என்னோட சின்ன வயசுலயே ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்க கிருபா. சித்தப்பா தான் என்னை வளத்தினாரு.” என அதற்கொரு பொய் கூற அவளின் மனதில் இரக்கம் சுரந்தது.
“சாரி மணீஷ்… எனக்கு… நான்… தெரியாம…” என அவனைக் காயப்படுத்தி விட்டோமோ என்ற நினைப்பில் மன்னிப்புக் கேட்டாள்.
“விடுங்க கிருபா.. நீங்க தெரியாம தானே கேட்டீங்க..”
“மன்னிக்கனும். உங்களுக்கு கூட பிறந்தவங்க?” எனப் படபடக்கும் இமைகளோடு அவள் கேட்ட விதத்தில் அவன் மனம் குத்தாட்டம் போட, “அண்ணன் ஒருத்தன் இருக்கான். துபாய்ல இருக்கான்.” என இழுத்து வைத்த வருத்தத்தைக் குரலில் காட்டிக் கூறினான்.
“அவரு இன்னிக்கி வரலியா?”
“இல்ல.. அவன் 5 வருஷம் காண்ட்ராக்ட்ல போய் இருக்கான். இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சி தான் இந்தியா வரமுடியும்.”
“ஹோ… சரி நான் கிளம்பறேன்.” என மணமக்களுக்குப் பரிசைக் கொடுத்துவிட்டு அவள் அந்த பக்கம் சென்றதும் இந்த பக்கம் மதுவருந்த ஆரம்பித்தனர் அங்கிருந்த அனைவரும்.
“என்ன மச்சி. இன்னும் எத்தன நாளைக்கு இந்த நாடகம்? பாப்பா சும்மா பால்கோவா மாதிரி இருக்கு. நமக்கும் கொஞ்சம் வாய்ப்பு குடுக்கறது.” என மாப்பிள்ளை வேஷம் போட்டவன் கேட்டான்.
“அதெல்லாம் நீ இப்ப கேக்கவே கூடாது. எனக்கு சலிச்சி போனா கொடுப்பேன்.” எனக் கூறி மணப்பெண்ணாய் நடித்தவளை இழுத்துக் கொண்டு தன்னறைக்குச் சென்றான்.
“சரியான லூசு கிருபா நீ. பாவம் அவருக்கு யாருமே இல்ல. எவ்ளோ வருத்தம் இருக்கும்? அண்ணனும் இன்னிக்கி வரலன்னு கண்ல தண்ணி வச்சிட்டு சொல்றாரு. அவர கஷ்டப்படுத்திட்ட. நைட் சாரி கேக்கணும்.” எனத் தனக்குத் தானே பேசியபடி வீட்டிற்கு வந்துச் சேர்ந்தாள்.
அன்றிரவு,“சாரி மணீஷ்.. உங்கள ஹர்ட் பண்ணினதுக்கு…” என அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.
“பட்சி சிக்கிரிச்சி.” எனச் சொல்லியபடி அவளுக்கு மனம் உருகும் அளவிற்கு பதில் அனுப்பி அன்று நள்ளிரவு வரையிலும் அவளைத் தன்னுடன் பேசவைத்துக் கொண்டிருந்தான்.
தினமும் இந்த புலனவழி உரையாடல் தொடர, அடுத்து வந்த நாட்களில் அழைப்பிலும் பேசத்தொடங்கினர் இருவரும். இப்படியாக மெல்ல மெல்ல கிருபாலினி மனதில் திட்டமிட்டு இடம்பிடித்திருந்தான் மணீஷ்.
அவளும் அவனோடு திரையரங்கம் செல்லும் அளவிற்கு பத்து நாட்களில் முன்னேறியிருந்தாள். மிருணாளினி இன்னும் எட்டயபுரத்தில் சுவடித் தமிழ் பயிற்சியில் மூழ்கியிருந்தது இவனுக்கு கைக்கொடுத்தது. அவளின் பயிற்சி ஒன்றரை மாதமாக நீண்டதில் ஆதர்ஷ் குழுவிற்கு இன்னமும் வசதியாகிப் போனது. விஜயராகவன் பல வழிகளில் பணமும் சேர்த்திருக்க, ஆதர்ஷ் மிருணாளினியின் கவனம் சிதறாமல் அவ்வப்போது தன்னிடம் இருந்த சுவடிகளை அவளுக்கு அனுப்பி முயற்சிச் செய்யக் கூறி அவளிடம் நட்பை வளர்க்க முயற்சி செய்துக் கொண்டிருந்தான்.
மிருணாளினியின் தேடலுக்கு நல்ல தீனியாக அவனது சுவடிப்படங்கள் அமைய, தனக்கு தோன்றிய அத்தனை சந்தேகங்களையும் நிவர்த்திச் செய்து, சுவடி தமிழில் நன்றாகத் தேறியிருந்தாள்.
“ஹேய் கிருபாமா. என்னை எப்ப உன் வீட்ல அறிமுகம் செஞ்சி வைக்கப்போற?” என மணீஷ் கேட்டான்.
“எதுக்கு?”கிருபா வாயிற்குள் சிரித்தபடிக் கேட்டாள்.
“அடிப்பாவி ஒண்ணும் தெரியாத அப்பாவி பையனை காதலிக்க வச்சி ஏமாத்த பாக்கறியா? என்னை எப்ப கல்யாணம் பண்ணிக்க போற? எனக்கும் ஒரு அப்பா அம்மா உன்னால கிடைப்பாங்க-ல்ல. இதுக்கு மேலயும் ரொம்ப நாள் தனியா நான் இருக்க முடியாது கிருபாமா.” விளையாட்டாய் ஆரம்பித்து உணர்வு பூர்வமாகக் கூறிமுடித்தான்.
“உன்ன பத்தி மொதல் மிருகிட்ட சொல்லி தான் வீட்ல பேச சொல்லணும் மணீஷ். அவ தான் சரியா பேசி அப்பா அம்மாவ சம்மதம் சொல்ல வைப்பா.” எனக் கூறி அவனை சமதானம் செய்துக் கொண்டிருந்தாள்.
“உன் சிஸ்டர்க்கு என்னை பிடிக்கலன்னா என்னை விட்டுட்டு போயிடுவியா கிருபாமா?”குரலில் அதீத உணர்ச்சியைக் காட்டிக் கேட்டான்.
கிருபா ஒரு நொடி அவனைப் பார்த்துவிட்டு தனது செயினில் இருந்த ஒரு டாலரை கழட்டி அவனிடம் கொடுத்தாள். “மணீஷ். இது எங்க ரெண்டு பேரோட தொப்புள் கொடி. இந்தாங்க இத நீங்க போட்டுக்கோங்க. கண்டிப்பா என் விருப்பத்தை அவ மறுக்கமாட்டா. உங்கள மாதிரி ஒருத்தரை அவ மறுக்க வாய்ப்பும் இல்ல.” எனக் கூறி அவன் உள்ளங்கையில் தனது கையை வைத்தாள்.
அவளின் கதகதப்பான கைகளைக் கண்களில் ஒற்றிக் கொண்டவன்,“நீ என்னை நேசிக்கறது எப்பவோ நான் செஞ்ச புண்ணியம் தான் கிருபா மா. உன் கைய விடவே மனசில்ல. ஆனா நீ இப்ப கிளம்பணும். நேரமாச்சி கிளம்பு. வீட்டுக்கு போயிட்டு மெசேஜ் பண்ணு. பத்திரமா போய்ட்டு வா.”என அவளை பஸ் ஏற்றி அனுப்பிவிட்டு ஆதர்ஷ்க்கு அழைத்தான்.
“ஆது. ரொம்ப நாள் என்னால நல்லவனா வேஷம் போடமுடியாது. அவ என்கிட்ட வந்தா என் கண்ட்ரோல் போயிடும். நீ சீக்கிரம் உமேஷ் அனுப்பி வை. அவன் அவக்கூட வேலை செய்ய ஆரம்பிச்சா தான் நம்ம வேலை அடுத்த ஸ்டேஜ் போகும்.” எனக் கூறினான்.
“அனுப்பிட்டேன். என்ன சொல்றா கிருபை உள்ளம் கொண்டவ?”, எனக் கேட்டு நக்கலாகச் சிரித்தான்.
“அவங்களோட தொப்புள் கொடி இருக்க டாலர என்கிட்ட குடுத்திருக்கா” என அதைக் கைகளில் எடுத்துப் பார்த்தபடிக் கூறினான்.
“அத பத்ரமா கொண்டு வந்து என்கிட்ட குடு. இது வச்சே மிருணாவ மடக்கலாம்.” எனக் கூறியவன் உமேஷை மிருணாளினியைக் காண அனுப்பி வைத்தான்.
“என்ன ஆதர்ஷ் என்னை எதுக்கு போக சொல்ற? நானே இதை முடிச்சிடுவேன் டா.” எனக் கூறிச் சலிப்பைக் காண்பித்தான்.
“நீ இப்படியே இருந்தா எங்கள முடிச்சிடுவன்னு நல்லா தெரியும். உன்கிட்ட இந்த சுவடி குடுத்து எத்தன நாள்ல டிகோட் பண்ண?” என ஒருப்படத்தைக் காண்பித்தான்.
“இதுவா. ஒரு மாசத்துல பண்ணிட்டேன் டா.” எனச் சிரிப்புடன் கூறினான்.
“மிருணா இத நாலே நாள்ல டிகோட் பண்ணி அனுப்பினா. இதுல பாரு எவ்ளோ டீடெயில்ஸ் இருக்குன்னு” என அடுத்தப் படத்தைக் காட்டினான்.
உண்மையில் உமேஷ் வெறும் நான்கு வரிகளை மட்டுமே விளக்கம் என கொடுத்திருந்தான். ஆனால் மிருணாளினி ஒரு பக்கமே அதற்கு விளக்கம் கொடுத்து, இது எந்த நூற்றாண்டைச் சேர்ந்தச் சுவடியாக இருக்கமுடியும் என்பது வரை விரிவாகக் காரணத்துடன் கூறியிருந்தாள்.
விஜயராகவனும் அதை வாங்கிப் பார்த்தார். “இவ எப்பவும் நம்மகிட்ட தான் வேலை பாக்கணும் ஆதர்ஷ். லாக் பண்ணிடு.” எனக் கூறிவிட்டு அவளுக்கு அனுப்பக் கூறி இன்னும் சில சுவடிப் படங்களை ஆதர்ஷிடம் காட்டினார்.
“சரிங்க சார். அனுப்பிடறேன்”
“இதுலாம் ரெண்டு நாள்ல இதே மாதிரி விளக்கம் கொடுத்து வேணும்ன்னு சொல்லு. அங்க கிளாஸ் முடிஞ்சதும் இங்க வந்து ஜாயின் பண்ண சொல்லு.” எனக் கூறிவிட்டு அவசரமாக வெளியே சென்றார்.
சில மணி நேரங்கள் கழித்து அவர் திரும்பி வரும்போது முகத்தில் அதீத பிரகாசம் தெரிந்தது. “என்ன விஷயம் சார்? இவ்ளோ சந்தோஷமா இருக்கீங்க?” உமேஷ் கேட்டான்.
“அந்த விண்ணூர்காரப்பட்டினம் நமக்கே குடுத்துட்டாங்க டா.. அத மட்டும் நம்ம திறந்துட்டா, ஹெட்க்கு நேரடி இந்தியன் குரூப் நம்ம தான்.” எனக் கர்வம் நிறைந்த குரலில் கூறினார். ஆதர்ஷ் அதைக் கேட்டு ஆனந்த அதிர்ச்சியில் உறைந்து நின்றான். மிருணாளினியை நிரந்தரமாக இவர்களுக்கு கீழ் கொண்டு வரும் வெறி மனதில் உருவாகியிருந்தது.