Loading

நண்பர்களின் பேச்சைக் கேளாமல், மகிழுந்தை அப்பெண்ணை நோக்கி திருப்பினான் சத்ரேஷ்.

எஞ்சினை ஆன் செய்ய எத்தனித்து தோற்ற பாவையோ செவ்விதழை சுளித்துக் கொண்டாள். “ஏன் திடீர்ன்னு கார் நின்னுச்சு…?” எனக் குழம்பியவளின் நெற்றியில் நீவி இருந்த குங்குமம், வியர்வைத் துளியில் லேசாகக் கலைந்தது. சிறிது நேரம் முன்பு தான் பெட்ரோலையும் நிரப்பி இருந்தாள்.

இருட்டவும் தொடங்கி விட்டதில், வயிற்றுக்குள் பயப்பந்து உருள, பின்னால் திரும்பி சீட்டின் மீதிருந்த லேப்டாப் பேகை ஒரு முறை வெளிறிய முகத்துடன் பார்த்துக் கொண்டாள். நடுங்கும் கால்களை மறைத்தபடி காரில் இருந்து அவள் இறங்கும் போதே, சத்ரேஷ் அவளருகில் காரை நிறுத்தினான்.

சிறு எரிச்சலுடன், அவனைத் தனது குட்டி விழிகளால் முறைத்தவளுக்கு, ‘இவனுங்க ரன்னிங் ரேஸ் போக என் கார் தான் கிடைச்சுச்சா…?’ என்று கோபம் வந்தது. ஏனோ அவ்விழிகள் சத்ரேஷின் இத்தனை வருட பிரம்மச்சாரிய வாழ்க்கையை சற்றே அசைத்துப் பார்த்தது.

அவள் முக வடிவத்தால் அவளது கண்கள் அழகா? அல்லது கண்களால் அவளே அழகாகத் தெரிகிறாளா எனப் பிரித்தறிய இயலாமல் திணறியவன், என்னவோ சில நிமிடங்கள் ஃப்ரீஸ் மோடில் தான் இருந்தான். அவனை உலுக்கி நிகழ்விற்கு கொண்டு வந்த திலீப் தான், “சத்ரு லேட் ஆகுதுடா என்ன பண்ணிட்டு இருக்க” என்று கடிந்து கொண்டதுமே தலையைக் குலுக்கி அவளைப் பார்த்தான்.

அவளோ பேனட்டை திறந்து வைத்துக் கொண்டு, எந்த வயரால் கார் நின்றதென்று ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாள்.

ஜெமினியோ சொல்லவே வேண்டாம்! வாயில் ஈ மட்டுமே செல்லவில்லை. அப்படி சென்றிருந்தால் கூட அதனை சட்டை செய்திருக்க மாட்டான் போலும்! அந்த அளவிற்கு அப்பெண்ணை சைட் அடித்துக் கொண்டிருந்தான்.

காரை விட்டு இறங்கிய சத்ரேஷ், தொண்டையை செருமிக் கொள்ள, அதில் அவனை நிமிர்ந்து பார்த்து விட்டு, மீண்டும் ஆராய்ச்சியை தொடர்ந்தாள்.

அவனோ, ‘என்ன கண்டுக்கவே மாட்டேங்குறா!’ என்றெண்ணி, “எனி ப்ராப்ளம்?” எனத் தன் காந்தக் குரலால் வினவ,

பேனட்டை கோபத்துடன் அடைத்தவளோ, “நீங்க தான் மிஸ்டர் ப்ராப்ளம்! காரை ஏன் இவ்ளோ ஸ்பீடா ஓட்டிட்டு வந்தீங்க?” என்றாள் காரமாக.

“அதை நானும் கேட்கலாம் மிஸ். நீங்களும் தான் எங்களை ஓவர்டேக் பண்ணுனீங்க?” என்று தோளைக் குலுக்கியபடி அவளது காரில் சாய்ந்து நின்றவன், அவளின் தீப்பார்வைக் கண்டு ரசனைப் புன்னகை பூத்தான்.

“ப்ச்… இப்ப என்ன வேணும் உங்களுக்கு? கொஞ்சம் இடத்தை காலி பண்றீங்களா. நான் கிளம்பணும்.” என்றவள், அவனை சட்டை செய்யாமல் காரினுள் அமர்ந்து மீண்டும் காரைக் கிளப்ப முயற்சிக்க, அதுவோ சிறிதும் இரக்கம் காட்டவில்லை.

‘ஐயோ’ என நொந்தவளை, விழி அகலாமல் பார்த்த சத்ரேஷின் இதழ்கள் மெல்லமாய் விரிய, “நான் கரெக்ட் பண்ணட்டுமா?” எனக் கேட்டான் விஷமமாக.

பட்டென நிமிர்ந்தவளோ ஏகத்துக்கும் முறைத்து வைக்க, சிரிப்பை அடக்கியவன், “ஐ மீன். கார்ல இருக்குற பிரச்சனையை கரெக்ட் பண்ணவான்னு கேட்டேன்… மிஸ்…?” என இழுத்து, “உங்க பேர் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்றான்.

கடுப்புடன் காரை விட்டு இறங்கியவள், “பேர் தெரிஞ்சாலும் கரெக்ட் பண்ண முடியாது…!” என்றதில், அவனது ஒற்றைப் புருவம் ஏறி இறங்க, “ஐ மீன்… காரை சொன்னேன்.” என்றாள் நக்கலாக.

அதற்கும் அவனிடம் சிறு புன்னகையே! அவனும் காரை கிளப்பிப் பார்த்தும் அது சதி செய்ததில், ஜெமினி வேகமாக அருகில் வந்தான்.

“என்ன மச்சான்… ஆஃப்டர் ஆல் ஒரு காரை உன்னால ஸ்டார்ட் பண்ண முடியலையா? நீ தள்ளு. நான் பாக்குறேன்” என காலரை தூக்கி விட்டபடி, ஸ்டைலாக பேனட்டை திறந்து அவன் பங்கிற்கு ஆராய்ச்சியைத் தொடர, சத்ரேஷிற்கு தான், ‘டாக் ஏன் அன்டைம்ல குரைக்குது’ என்று குழப்பமாக இருந்தது.

இருவரையும் பார்க்கும் போதே, அவளுக்கு இன்னும் பயம் ஆர்ப்பரித்தது. ‘கடவுளே! இதுக்குமேல நான் எப்படி ஊருக்குப் போறது…’ என்ற அச்சம் இப்பொழுது வெளிப்படையாகவே அவள் முகத்தில் தெரிய, இதில் ஜெமினியின் அசட்டுப் பார்வை வேறு அவளைக் கடுகடுக்க வைத்தது.

ஏதேதோ முயற்சித்தும் ஜெமினியால் காரை சரி செய்ய முடியாமல் போக, சத்ரேஷ் அவனை முறைத்து பார்த்து விட்டு, “நீங்க எங்க போகணும்ன்னு சொல்லுங்க. நான் டிராப் பண்றேன்” என்றான்.

அவளோ விழித்து விட்டு, “நோ தேங்க்ஸ். நானே காரை சரி பண்ணிட்டு கிளம்புறேன். நீங்க முதல்ல இடத்தை காலி பண்ணுங்க.” என்னும் போதே இதெல்லாம் நடக்குற காரியமா என உள்ளுணர்வு உந்தியது. அதற்காக யார் என்னவென்று தெரியாதவர்களுடன் எப்படி செல்வது.

அந்நேரம், ரோந்து சென்ற போலீஸ் வாகனம் அதீத சத்தத்துடன் அவர்களை நெருங்க, பாவைக்கோ இன்னும் நடுக்கம் தொற்றிக் கொண்டது.

“என்னப்பா இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” எனக் கேட்டபடி கான்ஸ்டபில் சேகர் அவர்கள் முன் வர, அவளுக்கு உதறல் அதிகரித்தது.

அதே உதறல் ஜெமினி மற்றும் திலீப்பிற்கும் எடுக்க, சத்ரேஷோ இயல்பாக, “ஹலோ சார். ஒன்னும் இல்ல. இந்தப் பொண்ணோட கார் பிரேக் டௌன் ஆகிடுச்சு. அதான் எங்க போகணும்ன்னு கேட்டுட்டு இருந்தேன்.” என்று புன்னகைத்தான். ஜவஹரின் தயவால், அந்த சேகரை அவனுக்கும் நன்றாக தெரியும்.

“அப்டியா டாக்டர் சார். ஆமா, இவங்கல்லாம் யாரு” என அவனின் நண்பர்களைப் பார்க்க, “என் ப்ரெண்ட்ஸ் தான் சார்.” என்றதில்,

“திருட்டு முழியா இருக்கு…” என முணுமுணுத்தவர், அவளிடம், “நீ எங்க இருந்துமா வர்ற? எங்க போகணும்?” எனக் கேட்டுக்கொண்டே காரினுள் நோட்டம் விட்டதில், இதயமே வெளியில் வந்து விடும் போல இருந்தது.

“அ… அது… சார்… நா… நான் இங்க பக்கத்துல தான்…” எனப் பேசி முடிக்கும் முன்னே, கண்கள் கலங்கி இருக்க, அவளையே பார்த்திருந்த சத்ரேஷ், “நான் அவங்களை எங்க போறாங்கன்னு கேட்டு இறக்கி விட்டுடுறேன் சார். லேட் ஆகவும் கொஞ்சம் பயந்துட்டாங்க போல.” என அவளுக்கு ஆதரவாகப் பேச, சேகரும் மேலும் ஆராயாமல்,  “சரி சரி சார். கிளம்புங்க.” என்றபடி அங்கேயே நின்றார்.

அவளுக்கோ, சத்ரேஷ் உடன் வரமாட்டேன் எனக் கூறவும் இயலவில்லை. அதே நேரம், காவலரின் இருப்பும் அவளைக் கதி கலங்க வைக்க, வேறு வழியற்று, அவளது லேப்டாப் பேகை எடுத்துக் கொண்டு, சத்ரேஷின் காரை நோக்கிச் சென்றாள்.

இதற்கிடையில், திலீப்பிற்கு வயிறு கலங்கி விட்டது காவலரைக் கண்டு. திருட்டுச் சிலை வழக்கில் பிடித்தால், நிச்சயம் கம்பி தான் எண்ண வேண்டும். இன்னும் நான்கு நாட்களில் தலை தீபாவளி வேறு!

அதில் மிரண்டவன், “சீக்கிரம் வேலையை முடிச்சுட்டு என்னை பஸ் ஏத்தி விடுங்கடா” என எச்சிலை விழுங்க, அவனைத் திரும்பி கேவலமாக ஒரு பார்வை பார்த்த ஜெமினி, “தொடை நடுங்கி. மூடிட்டு உட்காரு.” என்றவன், அவளைக் கண்டதும், வேகமாக அவளிடம் இருந்து பையை வாங்கி கொண்டதில், அவள் வெடுக்கென பறித்தாள்.

“அட… பேகோடா எப்படி உட்காருவீங்க. நாங்க பத்திரமா பாத்துக்குறோம்.” என அசடு வழிந்து இளித்து வைத்தவன், பையை மீண்டும் வாங்கி அவனுக்கும் திலீப்பிற்கும் நடுவில் வைத்துக் கொள்ள, அவளுக்கோ கையாலாகாத நிலை. அந்தப் பையின் மீது கண்ணை வைத்தபடியே, முன்னால் ஏறிக் கொண்டதும், கார் மீண்டும் பறந்தது.

சத்ரேஷ் தான் முதலில் ஆரம்பித்தான். “உங்க பேர் என்னன்னு சொல்லவே இல்லையே?” என்றதும், ஜெமினி, “உங்க ஊர் பேரும் சொன்னா நல்லா இருக்கும்” என்று இளித்தான்.

கண்ணாடி வழியாக சத்ரேஷ் முறைத்ததில், “அப்ப தான மச்சி டிராப் பண்ண முடியும்?” என நல்லவன் போல பேச, அவளோ எதற்கும் வாயை திறக்கவில்லை.

“என் பேர் சத்ரேஷ். டென்டிஸ்ட்…” என தன்னைத் தானே அறிமுகப்படுத்திக் கொள்ள, “ஐ ஆம் ஜிம்மி என்கிற ஜெமினி. யூ கேன் கால் மீ ஜிம். இவன் திலீப். ஆனா கல்யாணம் ஆகிடுச்சு. இங்க இருக்குறதுலயே நான் மட்டும் தான் எலிஜிபிள் பேச்சுலர்” என்று ஜெமினி ஆஜரானான்.

சத்ரேஷ் ஜெமினி மீது காரப்பார்வை வீச, பாவைக்குக் கோபம் கொழுந்து விட்டு எரிந்ததில், “ப்ச். கொஞ்சம் சீக்கிரம் போறீங்களா? என்னை ஏதாவது பஸ் ஸ்டாண்ட்ல இறக்கி விடுங்க. நான் போய்க்கிறேன்.” என்றாள்.

“நீங்க எங்க போகணும்ன்னு சொன்னா தான நான் எந்த பஸ் ஸ்டாண்ட்ல இறக்கி விடுறதுன்னு தெரியும்?” சத்ரேஷ் உரைத்ததில்,

“வயலூர். திருவண்ணாமலை போகணும்.” என்றாள் அவள்.

“ஓ. அவ்ளோ தூரமா?” என சத்ரேஷ் கூறும் போதே, “என்ன பெரிய தூரம் ஜஸ்ட் 3 ஹவர்ஸ் மச்சி.” என்று வழிந்தான் ஜெமினி.

“டேய் ஜிம்மி. நீ இப்ப மூடிக்கிட்டு இருக்கல… கம்பியை சூடு காட்டி இழுத்துடுவேன்” எனக் கண்ணாடி வழியே மிரட்டல் விடுத்ததில், அவன் கப்சிப் தான்.

“இங்க பக்கத்துல ஒரு இடத்துக்குப் போகணும், சின்ன வேலை தான். அதை முடிச்சுட்டு உங்களை டிராப் பண்றேன்.” என்ற சத்ரேஷிடம் மறுத்துப் பேச இயலவில்லை. கண்ணாடி வழியே ஜெமினி அணைத்துக் கொண்டிருந்த தன்னுடைய பேகை ஒரு முறை பார்த்துக் கொண்டாள்.

“என் பேகை ஓரமா வைங்க…” என்று கடுப்பும் பதற்றமும் கலந்து அவள் கூற, “உங்களை தான் ஓரமா உட்கார வச்சுட்டேன். அட்லீஸ்ட் உங்க பேகாவது என் கூட இருக்கட்டுமே” எனக் கவிதை நடையில் அவளைக் கவர முயல, “ஓங்கி அடிச்சா, நீ ஓரமா ஒன் பாத்ரூம் போய்டுவ” என பல்லைக்கடித்தான் சத்ரேஷ்.

அதனை எல்லாம் கண்டுகொள்ளாத ஜெமினி, அவளது பையை தலைக்குக் கொடுத்து திலீப் மீது காலை நீட்டி படுத்துக் கொள்ள அவளுக்கு எரிச்சல் மிகுந்தது. இருந்தும் பொறுத்துக் கொண்டாள். ஜவஹரின் வீட்டிற்குச் சென்றதும், ஜெமினியும் திலீப்பும் சிலை இருக்கும் பேகை வாட்ச்மேனிடம் கொடுத்து விட்டு வர, சத்ரேஷ் காரில் இருந்தபடியே அவரிடம் பேசினான்.

பின் நேராக பேருந்து நிலையத்திற்குச் சென்றான்.

பாவைக்கோ, அப்போது தான் நிம்மதி பிறந்தது. அவசரமாக இறங்கியவள் “தேங்க்ஸ்” எனப் பட்டும் படாமல் கூறி விட்டு “என் பேகை குடுங்க” என்று ஜெமினியிடம் கேட்க, அவனோ அவளது பேகை நெஞ்சில் வைத்து பாதுகாத்துக் கொண்டான்.

இதே போல அவளையும் பார்த்துக் கொள்வேன் என்று சொல்லாமல் சொல்கிறானாம்!

அதில் கடுப்பாகிய சத்ரேஷ், “உன் தங்கச்சி பேகை சீக்கிரம் குடுடி ஜிம்மி. கிளம்பனும்ல” என்று நக்கலுடன் கூறியதில், “அடப்பாவி…” எனக் கடுகடுத்தான் ஜெமினி.

அந்நேரம் பேருந்து நிலையத்தில் ஒரு வித பரபரப்பு காணப்பட்டது. மாணவ மாணவிகள் திரண்டு யாருக்கோ நீதி கேட்டு போராட்டம் நடத்தத் தொடங்க, காவலர்களும் அங்கு குழுமத் தொடங்கினர்.

பேருந்துகள் அனைத்தும் மறிக்கப்பட பெண்ணவள் அதிர்ந்து நின்றாள். சத்ரேஷ் இன்னும் காரைக் கிளப்பவில்லை. அவள் பேருந்து ஏறியதும் கிளம்பலாமென காத்திருக்கையில், நடந்த நிகழ்வுகள் அவனைக் குஷி படுத்தியது.

பின்னே, ஏற்கனவே பார்த்த நொடியில் மனம் கவர்ந்தவளை ஊருக்கு அனுப்பும் சோகத்தில் அல்லவா இருந்தான். இருந்தும் உற்சாகத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல்,

“அடடா… என்ன இப்படி ஆகிடுச்சு.” எனப் பரிதாபமாகப் பார்க்க, அவளது முகமோ பயத்தில் வெளிறிப் போனது.

இப்போ எப்படி ஊருக்குப் போவது என்ற அச்சம் மிளிர நின்றிருந்தவளின் கோலம் ஆடவனை என்னவோ செய்ய, “இஃப் யூ டோன்ட் மைண்ட். என் கூட வாங்க. நான் டிராப் பண்றேன்” எண்றான் சத்ரேஷ்.

“ஆமா, ஆமா வாங்க…” என வாயெல்லாம் பல்லாக அழைத்தான் ஜெமினி.

“பாத்தீங்களா உங்க அண்ணனுக்கு உங்க மேல எவ்ளோ பாசம்ன்னு” சத்ரேஷ் நாசுக்காக ஜெமியை முறைக்க,

“டேய் எனக்கு தமிழ்ல பிடிக்காத ஒரே வார்த்தை தங்கச்சி…” என மூச்சிரைத்தான்.

திலீப்போ, “நம்ம என்ன ஃபாஸ்ட் டிராக்கா வச்சு நடத்திட்டு இருக்கோம். இங்க இருந்து திருவண்ணாமலை போறதுலாம் நடக்காத காரியம். நான் வேற ஊருக்கு போகணும்டா” என்று திலீப் கதறினான்.

அதை எல்லாம் காதில் வாங்காத சத்ரேஷ், “யோசிக்காம வாங்க மிஸ்?” என இழுக்க, அவள் மெல்லிய குரலில் “வர்ணிகா” என்றாள்.

ஜெமினி, “ஆஹா பேரே வர்ண மயமா இருக்கே” என சிலாகிக்க, அவனை முறைத்தவள் முன் பக்கம் அமர்ந்து கொண்டாள்.

இப்போது சத்ரேஷின் கார் திருவண்ணாமலை நோக்கிப் படையெடுத்தது.

திலீப் தன்னை நொந்து பயணிக்க, ஜெமினி வழக்கம் போல அவளது பையை தலைக்குக் கொடுத்து படுத்துக் கொண்டான்.

அரை மணி நேரம் சென்றிருக்கும், “ப்ச், அப்போ நல்லா படுக்க எசவா இருந்துச்சு. இப்ப ஏன் கரடுமுரடா இருக்கு…” என ஜெமினி முணுமுணுத்துக் கொள்ள, பொறுத்துப் பொறுத்துப் பார்த்த வர்ணிகா, “முதல்ல என் பேகை குடுங்க.” என்றாள் அழுத்தமாக.

அவன் தராமல் அடம்பிடித்ததில், “சத்ரேஷ் ப்ளீஸ் வாங்கி குடுங்க” என்றதும் வானத்தில் பறந்த சத்ரேஷ், காரை ஓரமாக நிறுத்தி விட்டு, ஜெமினியிடம் இருந்து பேகை பிடுங்கி அவளிடம் கொடுத்தான் சிறு புன்னகையுடன்.

“தேங்க்ஸ்…” என்றவள் பேகை கட்டிக்கொண்டாள். கார் மீண்டும் எடுக்கப்பட்டதும், ஏதோ தோன்ற அவசரமாக பையைத் திறந்து சோதித்தவள் அதிர்ந்து போனாள்.

“ஏங்க இது என் பேக் இல்ல…” என்று கத்தி விட்டதில், மூவரும் புரியாமல் பையை பார்க்க, அதில் அவர்கள் கொண்டு வந்த சிலை இருந்தது.

“அட கடவுளே! டேய் பேகை மாத்திக் குடுத்துட்டீங்களா?” என சத்ரேஷ் நண்பர்கள் இருவரையும் முறைத்தான்.

ஜெமினியோ தலையில் கை வைத்து, “ரெண்டு பேகும் ஒரே மாதிரி இருந்ததுல குழம்பிடுச்சு சத்ரு” என்றதில், “ப்ச் என்னடா…” என்றான் எரிச்சலாக.

திலீப், “முதல்ல போய் இதைக் குடுத்துட்டு வருவோம் டா. போலீஸ்காரன் வேற. மாத்தி குடுத்தது தெரிஞ்சா நம்மளை உள்ள தள்ளிடுவான்” என்று சலித்திட, வர்ணிக்க பேயறைந்தத்து போல அமர்ந்திருந்தாள்.

“எனக்கு உடனே என் பேக் வேணும். ப்ளீஸ் சீக்கிரம் அங்க போங்க.” என்று பதறியவளை சமன் செய்தான் சத்ரேஷ்.

“ஒன்னும் ப்ராப்ளம் இல்ல வர்ணிகா. வாங்கிடலாம். ரிலாக்ஸ். அதுல முக்கியமான பொருள் எதுவும் இருக்கா?” எனக் கேட்டான் அக்கறையாக.

“அதெல்லாம் உங்களுக்கு எதுக்குங்க. சீக்கிரம் போங்க” என்று அவசரப்படுத்த, சத்ரேஷும் முயன்ற அளவு வேகமாக ஜவஹரின் பங்களாவிற்கு சென்றான்.

அங்கு சென்றதும், காரை விட்டு இறங்கிய வர்ணிகா, “என் பேகை வாங்கி குடுங்க சத்ரேஷ்” என நடுக்கத்துடன் கூற, “ரிலாக்ஸ் வரு… நான் வாங்கிட்டு வரேன்.” என்றதில்,

‘செல்லப்பேர் வச்சு கூப்புடுறியாடா கொய்யால’ எனக் கடியான ஜெமினி, “செல்லம்… உனக்காக நான் போய் பேகை வாங்கிட்டு வரேன்” என்று முதல் ஆளாக சென்றான்.

போன வேகத்தில் திரும்பி வந்தவன், சத்ரேஷின் முறைப்பில் மிரண்டு, “நம்ம குடுத்த பேகை நார்த் இந்தியாவுக்கு பார்சல் அனுப்பிட்டாங்களாம் மச்சி.” என்றதில் வர்ணிகாவிற்கு தலையே சுற்றியது.

“ச்சே…” என நொந்த சத்ரேஷ், “அங்க தான் ஜவஹரோட மாமியார் வீடு இருக்கு ஜிம்மி. சரி, அவங்களுக்கு ரீச் ஆனதும் திரும்ப நமக்கே அனுப்ப சொல்லலாம். இப்ப இந்த பேகை குடுத்துட்டு வா” என்றதும் வர்ணிகா, “இல்ல இல்ல அதெல்லாம் முடியாது. எனக்கு இப்பவே என் பேக் வந்தாகணும் … எங்க கொரியர்ன்னு அனுப்புனாங்கன்னு கேளுங்க அங்க போய் விசாரிக்கலாம்.” என்று பரபரக்க,

ஜெமினி, “உடனே வாங்க முடியுமான்னு தெரியல.” என்றதில், “ஐயோ ஏன் புருஞ்சுக்காம பேசுறீங்க. அதை யாராவது பார்த்துட்டா அவ்ளோ தான். ப்ளீஸ் சத்ரேஷ்… ஏதாவது பண்ணுங்க” என்று அவன் கையைப் பிடித்தாள்.

அதிலேயே அவளது நடுக்கம் புரிய, “ஹே ரிலாக்ஸ் வரு. எப்படியாவது பேகை வாங்கிடலாம். அதுல அப்டி என்ன இருக்கு. இவ்ளோ நடுங்குற…” என்று புருவம் சுருக்கிக் கேட்க,

இதற்கு மேலும் உண்மையைக் கூறவில்லை என்றால் இவர்கள் இதனை தீவிரமாக எடுக்க மாட்டார்கள் என்று உணர்ந்து, கண்ணை மூடித் திறந்தவள்,

“தலை இருந்துச்சு.” என்றாள்.

“ஓஹோ தலை போட்டோ வச்சு இருந்தியா” ஜெமினி ஆசுவாசமாகக் கேட்க,

அவனை சிவந்த விழிகளால் வெறித்தவள், “இல்லடா பைத்தியம். ஒருத்தனைக் கொன்னு அவன் தலையை வெட்டி பேக்ல வச்சு ஊருக்கு கொண்டு போயிட்டு இருந்தேன். பன்னாடைங்களா உங்களால இப்ப நான் நார்த் இந்தியா போலீஸ் வரைக்கும் மாட்ட போறேன்” என்று பெருமூச்சு வாங்க காளி அவதாரம் எடுத்தவளின் பேச்சைக் கேட்டு மூன்று ஆடவர்களும் உறைந்து நின்றனர்.

விளைவுகள் தொடரும்

மேகா

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
15
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment