
அத்தியாயம்-2
“ப்ரகலத்தன், ப்ரகலத்தன், ப்ரகலத்தன்?” என ஆறெழில் சொல்லி பார்த்துக்கொள்ள,
“௭ன்னடி அந்த அண்ணன ஏலம் போடுற?” ௭ன்றாள் லட்சு சந்தேகமாக.
“பேரும்..வித்யாசமா நல்லார்க்குல்ல” என்க.
“பேரும்னு இழுக்கிற, வேற என்ன வித்தியாசமா? நல்லா……வேற இருக்றது?” லட்சு கேக்க.
“அவுங்க கண்ணுடி. வித்யாசமா இருக்கு. பாத்திருக்கியா நீ?”
“நாம இந்த ஸ்கூலுக்கு வந்ததுல இருந்தே பாக்றேனே, அந்த அண்ணா, அதே கண்ணோட தான் இந்த ஸ்கூல சுத்தி வராங்க”.
யாரை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனரோ அவனே அந்நேரம் அவர்கள் வகுப்பினுள் நுழைந்தான். இவர்கள் இருவரும் பேச்சு மும்மரத்தில் அவனையும் கவனிக்காமல், மிஸ் கூப்டதும் கேக்காமல் குனிந்து கடந்து மும்முரமாக பேசிக்கொண்டிருந்தனர்.
லட்சு சொன்னதற்கு பதிலாக “ஆனா நா இன்னைக்கு தான பாத்தேன்” என்றாள் ஆறு.
அப்போது நெற்றியில் ஏதோ வந்து விழ, “ஷ் ” என நெற்றியை தேய்த்துக் கொண்டே ஆறெழில் நிமிர, மிஸ் இருவரையும் முறைத்து நிற்க, அருகில் ப்ரகலத்தனும், இன்னோரு மாணவனும் நிற்பதை அப்பொழுது தான் பார்த்தாள்.
இவள் மிஸ்ஸையும் அவர் முறைப்பையும் கிடப்பில் போட்டுவிட்டு, அப்பொழுதும் அவன் கண்ணையே பார்க்க , லட்சு தான் அவள் கையில் இடித்து “ஏ மிஸ் நம்ம பேசுனத பாத்துட்டாங்க போலடி” என்க,
“ம்ம்ச், பாத்ததுனால தான்டி முறைக்கிறாங்க” என்றாள் அசால்டாய் உக்கார்த்துக்கொண்டே.
“௭ந்திரி ௭றும, முதல வாய மூடு 4 ஈ உள்ள போய்ட்டு வந்துட்டு” ௭ன லட்சு திட்டிக்கொண்டே ௭ழவும் தானும் ௭ழுந்தாள்.
இருவரும் முனங்கியவாறே எழுந்து நின்றனர். “இங்க வாங்க” என மிஸ் போர்ட் அருகில் இருவரையும் அழைக்க.,
“நீ போடி, நீ போடி” என ஒருவரை ஒருவர் இடித்து தள்ளிக் கொண்டிருக்க,
“ரெண்டுபேரும் இங்க வாங்க” என கிண்டல் கலந்த கோபத்தில் அழைத்தார் மிஸ். அருகில் வரவும் “நா இவ்வளவு நேரம் என்ன நடத்திட்ருந்தேன்” என கேக்க.
“நடத்தின உங்களுக்கே தெரியலனா எங்களுக்கு எப்டி தெரியும்?” ஆறெழில் முனங்கினாள்.
“ப்ளீஸ் பேசாம நில்லுடி” என லட்சு அவள் கையை மிஸ் அறியாமல் கிள்ளினாள்.
“இன்னமு என்னத்த தான் முனு முனுன்னு பேசுறீங்க ரெண்டுபேரும்” மிஸ் மறுபடியும் அதட்ட.
ஆறெழில் நிமிர்ந்து ஓரக் கண்ணால் ப்ரகலத்தனை பார்த்துக்கொண்டாள். அவன் இவள் பக்கமே திரும்பாமல் லட்சு மீதும் மிஸ் மீதும் மட்டுமே கவனமாய் இருந்தான் (இருப்பதாக காட்டிக்கொண்டிருந்தான்).
அவன் பார்ப்பதை வைத்து அவளும் அவர்களின் மேல் கவனத்தை திருப்ப, மிஸ் எதோ கேள்வி கேட்டிருக்க லட்சு சமாளித்துக் கொண்டிருந்தாள், ‘இந்த லூசு என்ன பதில் சொல்லிட்ருக்கு’, என யோசித்து விட்டு பின்பும் ‘யாரோ என்னவோ கேக்காங்க’ என நின்று… விட்ட வேடிக்கையை தொடர.
திடீரென “ஆறெழில் இத சால்வ் பண்ணு” என்றவாறு சாக்ப்பீசை மிஸ் இவளிடம் நீட்ட. அப்போதும் பயமெதுவும் இல்லாமல், கையில் சாக்ப்பீசை வாங்கிக் கொண்டு விறுவிறுவென போர்ட்டை நெருங்கிவிட்டாள்.
அதில் மிஸ் சற்று முன், நடத்தும் போது செய்தது போன்ற கணக்கை போலவே கீழே கேள்விக் கேட்க்கபட்டிருந்தது.
’20/10=2/1=2 என, ஜீரோவிற்கு மதிப்பு கிடையாது, சோ அத நாம கேன்சல் பண்ணிடுறோம், அப்றம் 2/1, ௭ந்த நம்பர் டிவைடட் பை 1 (its equals that number) இருந்தாலும் அதுக்கு விடை டிவைடர் மேல் உள்ள ௭ண்ணை அப்டியே ௭டுத்து கொள்ளணும்’ ௭ன மிஸ் நடத்தி போட்டிருக்க.
இவளுக்கு 42/12=? என கேட்டிருந்தார். இவளோ வேகமாக 42/12=4/1=4 என, 2யும்,2யும் அடித்து விட்டு, 4/1=4 ௭ன போட்டுவிட்டு வந்தாள். ‘தாம் கவனிக்காமலே கரெக்ட்டாக செய்துவிட்டோமே என முகத்தில் பெருமிதம் வேறு’.
மிஸ்ஸிடம் சாக்ப்பீசை நீட்ட “இப்டி தான் டிவிஷன் பண்ணுவாங்களா? 6த்ல இப்டி எழுதி தான் எக்ஸாம் பாஸ் பண்ணுனியா?” என கேக்க.
“டிவிஷனா அது?” என்றவாறு போர்டை திரும்பி பார்த்தாள். இப்பிடித்தான் தெரிந்தாலும் கவனம் இல்லாமல் தவறாக செய்துவைப்பாள்.
“ஆத்தாடி நமக்கு டிவிஷன் தெரியலன்னு ஜெயந்தி அம்மையாருக்கு தெரிஞ்சா என்னாகும்” என யோசித்தும் பார்த்துக் கொண்டாள்.
“உன்னத்தான கேக்றேன், சொல்லு டிவிஷன் இப்டித்தான் பண்ணுவாங்களா? கொஞ்சமாவது கவனிச்சாத் தான விளங்கும். எந்த நேரமு பக்கத்துல உள்ளவ காத கடிச்சுக்கிட்டு இருந்தா என்ன மண்டையில ஏறும். உங்க அம்மா மேக்ஸ் டீச்சர் தானே இத எப்டி செய்யுறதுன்னு கேட்டு தெரிஞ்சுகிட்டு நாளைக்கு பத்து தடவ எழுதிட்டு வர்ற, புரியுதா?” என்க.
“சரி சரி” என மண்டையை மண்டையை ஆட்டி விட்டு தன் இடத்தில் சென்று அமர்ந்து கொண்டாள். கூடவே வந்த லட்சுவும் அடுத்த கேள்வியில் பேந்த பேந்த முழித்துவிட்டு, மிஸ்ஸிடம் 2 திட்டும், இம்போஷிசனும் வாங்கிக் கொண்டு இவளை முறைத்தவாறு வந்து அமர்ந்தாள்.
ப்ரகலத்தன் நடந்தவற்றை சுவாரஸ்யமாய் கவனித்துவிட்டு மிஸ்ஸின் ரெஸ்பான்ஸிற்காக திரும்பினான். அவன் வந்தது 6த் டூ 9த் ஸ்டுடென்ட்ஸ் சயின்ஸ் எக்ஸிபிஷனில் கலந்து கொள்ள ஒரு வாய்ப்பு வந்திருந்தது. அதில் பேர் கொடுக்குமாறு சொல்லும் விதமாக சர்க்குலர் கொண்டு வந்திருந்தான், மிஸ் நேம் லிஸ்ட் கேட்டுவிட்டு, “௭னி வாலண்டியர்ஸ்?” ௭ன கிளாசை கவனிக்க, அப்பொழுது தான் இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததும், அதன்பின் நடந்ததும். பின் நேம் லிஸ்ட்டை லீடர் கலெக்ட் செய்து அவர்கள் கிளாஸ் மிஸ்ஸிடமே கொடுக்குமாறு சொல்லிவிட்டு அவன் வெளியேறி விட்டான்.
“ச்ச அந்த ப்ரெசிடெண்ட் என்ன மக்கு பிளாஸ்திரின்னு முடிவே பண்ணிருப்பாங்கள்ளடி” என ஆறெழில் கேட்க.
“என்ன ஏதாவது கேட்டு டென்ஷன் பண்ணாம போயிறு” என லட்சுமி எறிந்துவிழ.
“இதுக்கு மேல இவட்ட பேசுனா கடிச்சாலும் கடிச்சுருவா” என மேக்ஸை கவனிக்க ஆரம்பித்தாள் ஆறெழில்.
அவள் அப்படி ஒன்றும் மக்கில்லை, அபோவ் ஆவெரேஜ் 70%-75% கேட்டகிரி, என்ன எதையும் அசால்ட்டாக எடுத்துக் கொள்வாள். மற்றபடி சிறு பிள்ளை தனமே அதிகம். அப்பா பாசமும் கிடைக்காமல் வளரும் பிள்ளை, அதனால் மட்டுமே ஜெயந்தி அவள் என்ன வாய் பேசினாலும், ஒரு டீச்சராய் ஆயுதம் ஏந்தாமல் இருக்கிறார்.
அதன் பின் ஆறெழில் பிரேயர் அட்டென்ட் செய்வது வழக்கமானது. அவனது கண்ணைக் காண்பதற்காகவே வர ஆரம்பித்தாள். முதலில் ப்ரகலத்தனும் அவள் காண்பதை அறிந்தும், கண்டு கொள்ளாமல் தான் இருந்தான், தொடர்கதையாகவும் நிமிர்ந்து திரும்பி பதில் பார்வைப் பார்ப்பான் தான்…… பார்த்தால் குனிந்து கொள்வாள், மறுபடியும் பார்க்க மாட்டாள் என்று எண்ணி இவன் பார்க்க…,
அவளோ அவன் அவளைப் பார்க்கிறான் என தெரிந்தால் போட்டோவிற்கு போஸ் கொடுப்பது போல் தலையை சரித்து ரசனையாய் பதில் பார்வைப் பார்க்க, அவன் தான் அவள் சிறுபிள்ளை தனத்தை எண்ணி வந்த சிரிப்பையும் அவளுக்குக் காட்டாமல் வாய்க்குள் அடக்கி திரும்பிவிடுவான்.
இவையெல்லாம் பிரேயர் நேரங்களில் மட்டுமே, அதன் பின் இருவரும் இருவரையும் சந்தித்துக் கொள்வதில்லை. சந்திக்க முடிவதில்லை இருவருக்கும் வேறு வேறு ப்ளாக், அவன் 9த் ௭ன்பதால், 10த் பாடங்களும் அவ்வப்போது நடக்கும், ௭க்ஸ்ட்ரா கிளாஸஸ் உண்டு, இருவருக்கும் நேர வேறுபாடு உண்டு, அதுவும் அவர்கள் சந்திக்க முடியாததிற்கு ஒரு காரணம். இதுவே தொடர்கதையாக, பிரகலத்தன் தன்னை திருத்திக் கொண்டான், அவள் பக்கம் திரும்புவதயே நிறுத்திக் கொண்டான்.
அவள் நிறுத்தும் ஐடியாவில் இருப்பதாகவே தெரியவில்லை, ‘அவன் பாத்தா என்ன? பாக்காட்டா தான் என்ன? எனக்கு அவன் கண்ண பிடிச்சிருக்கு, அதனால பாக்குறேன், அவ்வளவுதான்’ என்ற அளவில்தான் இருந்தது அவள் எண்ணம். தப்பாக தெரியவில்லை.
அதனால்தான் அவள் அம்மா ஜெயந்தி, “ஏண்டி ஒரு ஆப்பிள் ஜூஸ்க்காகவா தினமு இப்டி சீக்கிரமா எழுந்து ஓடுற. உனக்கு ஆப்பிள் ஜூஸ்னா அம்புட்டு இஷ்டமா?” என அப்பாவியாய் கேட்டபோது.
“இல்லம்மா எங்க ஸ்கூல் ப்ரெசிடெண்ட் பையன் கண்ணு செமயா இருக்குமா… அது பிரேயர் அட்டென்ட் பண்ணும் போது மட்டும்தான் ஃப்ரீயா பாக்க முடியுது. அப்றம் அந்த பையன எங்க போய் தேட, அதான் பிரேயர் அட்டென்ட் பண்ணிடுறேன்” ௭ன உண்மையை அப்படியே கூறினாள்.
“அடி கழுத, பையன் கண்ணு நல்லாருக்கு அதான் பாக்க போறேன்னு என்ட்டயே சொல்லுற”.
“உண்மையத்தான சொல்லுறேன்”.
“அந்த பையன் அட்வாண்டேஜா எடுத்துக்கிட்டா என்ன பண்ணுவ, காலம் கடக்க கடையில, நீயா போய் வம்புல மாட்டுற, இது விளையாட்டில்ல ௭ழில்”.
“இல்லம்மா நா பாக்குறத ரெண்டு தட பாத்தும், பேசாம திரும்பிட்டாங்க, அப்றம், இப்பலா என் பக்கம் திரும்புறதேயில்ல. அப்டியே வந்து பேசினாக்கூட, உங்க கண்ணு நல்லாருக்கு அதான் பாத்தேன்னு சொல்லிருப்பேன்” என்க.
“அடிவாங்காதடி என்ட்ட, உனக்கு அதிக செல்லம் கொடுத்து கெடுத்துட்டேன்னு தோணுது எனக்கு” ஜெயந்தி புலம்ப.
“ம்மா ஒரு பாட்டு பிடிச்சிருக்குன்னா திரும்பத் திரும்ப கேக்குறோம், பாக்குறோம்ல, அது மாதிரிதான இதுவும்”.
“அதுவும் இதுவும் ஒன்னு இல்லடி, வயசுக்கு தக்கன நடக்கப் பாரு, ஸ்கூலுக்கு போனமா படிச்சமான்னு வா. ஏதாவது பிரச்சனைய இழுத்துட்டு வந்த நா மனுசியா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்”.
‘ச்சே, நா பாக்றது அந்த பிரஸிடெண்டோட கண்ணு, அதுக்கு அவங்க கூட இவ்வளவு டென்ஷன் ஆகல. இவங்க என்ன இவ்வளவு டென்ஷனாகுறாங்க’ என பேசிக்கொண்டே போய்விட்டாள்.
அப்படி விளையாட்டாகவே 7ஆம் வருட முழு ஆண்டுத் தேர்வு எழுதி முடித்தாள். அவளை உணராமலேயே, அவனுக்காக அந்த வருடம் முழு ஆண்டுத் தேர்வு விடுமுறையில் வைக்கப்படும் யோகா, கராத்தே கிளாஸில் சேர்ந்தாள்.
ப்ரகலத்தன் 9 முடிந்து 10 போவதால் விடுமுறை இன்றி 10ம் வகுப்பை ஸ்பெஷல் கிளாஸாக ஆரம்பித்து விட்டிருந்தனர். ஆக பிரேயர் இல்லாமல், பள்ளிக் கிரவுண்டிலேயே கிடப்பதால் எப்போதாவது அவன் அவள் கண்ணில் பட்டால் பார்ப்பாள். பின் சாதாரணமாய் அன்றைய பொழுதை கழித்து விட்டு கிளம்பி விடுவாள். இவள் இப்படி ௭தாவது கிறுக்கு தனம் செய்வாள் ௭ன லட்சு உணர்ந்தாளோ ௭ன்னவோ, தன் பெரியம்மா வீட்டிற்கு ஜூட் விட்டிருந்தாள்.
ஆறெழில் அதுவரை உணராத ஒன்றை அவள் வயதும், ஹார்மோன் சேஞ்சஸும், அவளுக்கு உணர்த்த ஒரு நேரம் வந்தது. அது அவள் எட்டாம் வகுப்பில் அடியெடுத்து வைத்து நான்கு மாதம் கடந்திருக்கும் போது, ஒரு நாள் பிரேயர் முடிந்து எல்லோரும் அவரவர் கிளாஸ் செல்ல ஆரம்பிக்க, லட்சுமியிடம் ஏதோ கதையடித்துக் கொண்டிருந்தவள், திடீரென வயிறு பிரட்டவும் “அம்மா” என வயிற்றை பிடித்து அமர்ந்து விட, பெண் பிள்ளைகள் அவளைச் சுற்றி வேடிக்கைப் பார்க்க கூடிவிட, தன் வகுப்பை நோக்கி சென்று கொண்டிருந்த ப்ரகலத்தனும் அப்படியே தேங்கி கிரவுண்டில் இருக்கும் பைப்பில் ஏதோ செய்வது போல் நின்று அவர்களை கவனிக்க ஆரம்பித்தான். ஏனோ அவனுக்கு ௭ன்னவென்று தெரியாமல் செல்ல மனமில்லை.
பீ.டி மிஸ்ஸும், ஆறெழிலின் கிளாஸ் மிஸ்ஸும் வந்து எல்லோரையும் விளக்கி வகுப்பிற்கு அனுப்பி விட்டு, இவளை மட்டும் ரெஸ்ட்ரூமிற்கு அழைத்துச் சென்றனர்.
போற வழியில் அவனை கண்டாள், அவனும் அவளைப் பார்ப்பதைக் கண்டு, அவனுக்கு ஆறுதல் அளிப்பதாக, தோள்பட்டையை ஒன்றுமில்லை என்பதுபோல் ஏற்றி இறக்கி, தலையை சரித்துக் கண்ணை சிமிட்டி சிரித்து விட்டு செல்ல. இவனுக்குத்தான் பக்கென்றாகிவிட்டது.
“என்ன தைரியமா இப்டி மிஸ் கூட போகும் போதே சைகைக் காமிச்சுட்டு போறா, அவங்க என்ன நினைப்பாங்க” என்று நினைத்தாலும் அவன் முகத்தில் அவளை நினைத்து சிரிப்பே நின்றது.
அதன்பின் அவள் ஏஜ் அட்டெண்ட் பண்ணி விட்டதை ஜெயந்திக்கு இன்ஃபார்ம் செய்து அவரை வந்து அழைத்துச் செல்லச் சொல்ல, அவரும் வந்து கையோடு 15 நாள் லீவ் அப்ளை செய்துவிட்டு கூட்டிச்சென்றார்.
அவருக்கு அவ்வளவு சந்தோசம், அத்தோடவே குணசீலனிடம் சொல்ல, அவரோ “அப்டியா? எவ்வளவு செலவாகும்? எப்ப வேணும்ன்னு பாத்துட்டு சொல்லு” என்றதோடு சென்றுவிட, ஜெயந்திக்கு சுள்ளென்று கோபம் ஏறியது. ஆனால் கோபத்தை காட்டினால் மட்டும் பெரிதாக என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது, தற்போது இருக்கும் சந்தோஷத்தை கெடுத்து கொள்ள வேண்டாம் ௭ண்றெண்ணி அவரை அப்படியே விட்டுவிட்டார்.
அந்த பதினைந்து நாட்களயும் கழிப்பதற்குள் ஆறெழிலுக்கு தான் மூச்சு முட்டி விட்டது.
“ஏன் அப்டி?, என்ன பிரச்சன?” என ஒன்றும் அவளுக்கு விளங்கவில்லை. ஆனால் ஒரு மாதிரியாக பயமாகவும், கஷ்டமாகவும் இருந்தது. இரண்டு நாள் அமைதியாக இருந்தவள் அவளுக்கே அவளை அப்படி இருப்பது பிடிக்கவில்லை என்பதால் தன்னை பிஸியாக வைத்துக் கொண்டாள்.
டிவியில் போடும் அத்தனை நிகழ்ச்சியையும் பார்க்க, அவள் அம்மாவை ஏதோ வகையில் டென்ஷன் செய்து பிபியேற்ற, அதிசயமாய் புக்கை எடுத்து உக்காந்து முழு கவனத்தையும் செலுத்தி படிக்க என ஒவ்வொரு வகையில் அவள் மனது எதற்காக கஷ்டப்படுகிறது என்பதை கண்டுபிடிக்க தெரியாமல் மாற்று வழியைத் தேடித்தேடி செய்து கொண்டிருந்தாள்.
அவள் வயதிற்கு அதற்குமேல் யோசிக்கவும் தெரியவில்லை, ஆனால் ஜெயந்தியிடம் எதையும் மறைத்துப் பழக்கமில்லை என்பதால், “அம்மா எதுக்கோ பயப்படுற மாதிரி ஒரு மாதிரி பயமா இருக்கும்மா. ஆனா என்ன ஏதுன்னு சொல்ல தெரியலம்மா” என்க.
“அது நீ இப்ப பெரிய பொண்ணாகிட்டியா, உள்ள புது ஹார்மோன்லா சுரக்கும் அதுதான் அப்டில்லாம் ரியாக்ட் பண்ண வைக்குது. அது உனக்கு மெச்சூரிட்டியவும் கொடுக்கும். பயப்படக் கூடாது சரியா” என்று விட, அவளும் அப்படித்தான் போல என எடுத்துக் கொண்டு இருந்து விட்டாள்.
இவர்கள் வீட்டில் இவளின் நற்செய்தியால் வந்த ஒரே ஒரு மாற்றம் என்றால் அவள் அப்பா குணசீலன் ஏழு மணிக்கெல்லாம் வீடு திரும்ப ஆரம்பித்தார். என்ன ஏதென்று கேட்காவிட்டாலும், ஆறெழிலிக்கென ஏதாவது வாங்கி வந்து வைத்து செல்வார். அதுவே அவளுக்கு அவ்வளவு சந்தோசத்தை கொடுக்கும். அவளின் 8வயது வரை நல்ல பாசமான அப்பாவாகத்தான் இருந்தார். ஏன் என தெரியாமல் திடீரென தன் வட்டத்தை சுருக்கிக் கொண்டார். அவளுக்கு புரியாத வயதில் அவள் அம்மாவும், அப்பாவும் சண்டையிடுவதை கண்டிருக்கிறாள்.
ஜெயந்தி தான் பெரியவராயிற்றே, அவரின் திடீர் மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் சண்டையிடுவார். வேறெதும் தொடர்பு வந்து விட்டது அவருக்கு, அதனால்தான் இப்படி நடந்து கொள்கிறார் என யோசிக்க ஆரம்பித்து, அது சண்டையாகியது. எதற்கும் குணசீலன் அசைந்து கொடுக்காததால் அவரை அவர் போக்கில் அப்படியே விட்டுவிட்டார். வருசமும் ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்போதுதான் 4, 5வருடம் கழித்து அவராய் அவளுக்காக கடையில் கிடைக்கும் முளைகட்டின பயறுவகைகள், ஆட்டுக்கால் சூப், நாட்டுக்கோழி முட்டை என்ன சத்து உள்ளவற்றில் வெளியில் கிடைப்பதை வாங்கி வந்து கொடுக்கிறார். அதில் தாய்க்கும், மகளுக்கும் ஏக சந்தோஷம்.
16 நாளை நன்றாக வீட்டில் ஜாலியாக இருந்து ஆட்டம் போட்டு கழித்துவிட்டு, அதுவரை அவர்கள் வீட்டுக்கென வராத சொந்தங்கள் ௭ன வந்தவரெல்லாம் ஊருக்கு கிளம்ப, அவளுக்கு ஒரே அழுகையாக வந்தது. கடைசி மூன்று நாள் வீடே கோலாகலமாக இருந்தது. அவளுக்குத் தெரிந்து அவள் வீட்டுக்கு இவ்வளவு சொந்தங்கள் வந்து மூன்று நாள் வரை தங்கியது இதுவே முதல் முறை என்பதால் அவர்கள் ஊருக்குத் திரும்புவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் ஏங்கி ஏங்கி அழ.
அவளது குழந்தை மனத்தை பார்த்து ஜெயந்தி தான் சமாதானப்படுத்தினார், “எல்லாரும் அடிக்கடி வருவாங்கம்மா, ஊருக்கு கிளம்பைல அழலாமா, சிரிச்சுட்டே டாட்டா சொல்லு” எனத் தேற்ற, பின் கொஞ்சம் ஆசுவாசப் பட்டுக் கொண்டாள்.
மறுநாள் காலை, கொஞ்ச நாள் கழித்து ஸ்கூல் கிளம்புவதால் குதூகலமாகவே கிளம்பினாள். கொஞ்சம் அழகு கூடிவிட்டது போலவே தெரிந்தது.
இவளுக்கு முன் லட்சுமி வந்துவிட்டிருக்க, “ஏ ஆறு எப்படியிருக்க? கொஞ்சம் குண்டாயிட்ட சாப்பாடு அதிகமோ??” என்க.
“ஆமா பின்ன, ஏகபோக கவனிப்பு தெரியும்ல, சும்மாயில்ல”.
“அது சரி பாத்தாலே தெரியுது. அப்றம் எப்டி பொழுத போக்குன?”.
“செமையா போச்சுடி, ஆளாளுக்கு பாக்க வாரதும், பாக்க வர்றவங்களாம் ஏதாவது வாங்கிட்டு வாரதும். எங்க அம்மாகூட ஒரே பாசமழ தான். நா என்னக் கேட்டாலும் கிடைச்சது. வெறும் 16 நாளுங்குறது, ஒரு அஞ்சாறு வருஷம்ன்னு வச்சுருக்கலாம்! இல்ல?”.
“ஏன்டி அஞ்சாறு வருஷம் வீட்டிலேயே இருந்தா நமக்குலா போரடிக்குமில்ல, அதான் இப்டி வச்சுருக்காங்க” என்றாள் லட்சுமி தன் அறிவுக்கு எட்டிய வரை.
இவர்கள் இப்படி வெட்டியாக பேசிக்கொண்டிருக்க, பிரேயர் பெல் அடித்தது. ஆறெழில் கீழே சென்றதும் கொடிக்கம்பம் பக்கம் தன்னைப்போல் பழக்க தோஷத்தில் பார்க்க, அதில் வேறொரு மாணவன் அசம்பலி லீட் செய்ய நிற்க, அப்படியே நின்ற இடத்தில் நின்றுவிட்டாள்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

கதை படிக்கும் போது மலரும் நினைவுகள் மகிழ்ச்சி அளிக்கிறது.. அதுவும் அதே போல் SPL, கொடி கம்பம், prayer… ஆனால் நாங்கள் இருவரும் ஒரே வகுப்பு 😊😊