19 – காற்றிலாடும் காதல்கள்
“என்னடி பாமா?” மிருணாளினி கேட்டாள்.
“வெவஸ்த கெட்ட ஜென்மங்கடி. போயிரிச்சிங்க. ஆனா இந்த தியேட்டர் மேனேஜர பாத்துட்டு தான் போகணும்.” எனக் கூறி படத்தில் மூழ்கிவிட்டாள்.
“ம்ம்..”
பட இடைவேளையில் மிருணாளினி கிருபாலினிக்கு வேண்டியதைப் பார்த்து வாங்கிக் கொடுத்துவிட்டு மேனேஜர் அறைக்குச் சென்று வருவதாக கூறிச்சென்றனர்.
அவள் தனியாக லாபியில் அமர்ந்திருந்தபோது மணீஷ் அங்கே வந்தான்.
“ஹலோ மேடம்.” எனச் சிரித்தபடி அவள் அருகே வந்து இடைவெளிவிட்டு நின்றான்.
“ஹலோ சார்.” கிருபா மென்னகை செய்தாள்.
“தனியாவா வந்தீங்க? எந்த படம்?” என ஒன்றும் அறியாதவன் போல கேட்டான்.
“ஸ்கிரீன்1. என் சிஸ்டர் அண்ட் ஃப்ரெண்ட் வந்திருக்காங்க.”
“எங்க அவங்க?”
“மேனேஜர பாக்கணும்ன்னு போய் இருக்காங்க. நீங்க தனியா வந்தீங்களா? எந்த படம்?” அவனைக் கேட்டாள்.
“நான் ஸ்கிரீன்3. ஃபிரண்ட்ஸ் கேங் கூட வந்திருக்கேன். அதோ அங்க ஸ்நாக்ஸ் வாங்கிட்டு இருக்காங்க.” எனத் தூரமாகத் தெரிந்த ஒரு நண்பர்கள் கூட்டத்தினைக் காண்பித்தான்.
“சரி சரி. படம் எப்படி போகுது?”
“சுமார் தாங்க.. இந்த படம் எப்படி போகுது?”
“இது நல்லா இருக்கு. சிரிப்பா போகுது. எனக்கு இந்த சண்டை எல்லாம் அலர்ஜி. ஆனா என் சிஸ்டர் சண்டை படம்ன்னா விரும்பி பார்ப்பா.”
“அப்போ அவங்கள இண்ட்ரோ குடுங்க மேடம்.”
“உங்க பிரேக் டைம் முடிஞ்சது போலயே. எல்லாரும் போறாங்க. அவ இன்னும் காணோம். எங்க ஸ்கிரீன்க்கு இன்னும் டைம் இருக்கு.” முகத்தில் நவரசமும் காட்டிப் பேசுபவளைக் கண்டு மணீஷின் உணர்ச்சிகள் எல்லையைக் கடந்துக் கொண்டிருந்தன.
“சரிங்க மேடம். இன்னொரு நாள் பாக்கலாம்.பை” எனக் கூறி மூன்றாம் திரையில் புகுந்து அவள் எழுந்து சென்றதும் தன்னுடன் வந்த பெண்ணை அழைத்துக் கொண்டு தனது அறைக்கு விரைந்தான்.
“என்ன ஆதர்ஷ். அந்த பொண்ணு சரிவருமா?” என விஜயராகவன் அலுவலகம் வந்துச் சேர்ந்தபின் கேட்டார்.
“வரும் சார். அதுக்கு தேடல் அதீதமா இருக்கு. நானும் நம்ம வேலைய ஆரம்பிச்சிட்டேன்.” எனக் கூறிக் கோணலாகச் சிரித்தான்.
“அதுக்குள்ளயா? அவளோ பிடிச்சி போச்சா உனக்கு அந்த பொண்ண?” நக்கலாகக் கேட்டார்.
“அவ ரெட்டை பிறவி சார். இங்க பாருங்க.” என அவனுக்கு வந்திருந்த அவளின் குடும்பப் புகைப்படத்தைக் காட்டினான்.
“சரிதான். உனக்கும் உன் தம்பிக்கும் நல்ல வேட்டைதான். நமக்கு வேலை முக்கியம். அப்பறம் உங்க வேட்டைய வச்சிக்கங்க. புரியுதா?” எனச் சிரித்தபடி எச்சரிக்கை செய்துவிட்டு தன் பணியில் மூழ்கினார்.
ஆதர்ஷ் மிருணாளினி படத்தை மீண்டும் மீண்டும் பார்த்துக் கிறங்கிக் கொண்டிருந்தான். அவளிடம் கூற வேண்டிய பொய்களும், அதற்கான போலி ஆதாரங்களும் தயார் செய்யக் கூறிவிட்டு அவன் தம்பியின் அறைக்குச் சென்றான்.
அவன் உடை கலைந்திருக்கும் நிலைக்கண்டு, “என்னடா.. மண்டை சூடு ஆகிரிச்சா?”
“நீ அவளுங்கள ஒண்ணா பாரு அப்ப தெரியும். நல்லவன் வேஷம் ரொம்ப கஷ்டம்டா ஆது. நீ எப்படி தான் இப்படி மெயின்டய்ன் பண்றியோ எனக்கு தெரியல? எனக்கு ரெண்டு மணி நேரத்துல உடம்பே ஜிவ்வுண்ணு ஆகிருச்சி.. ரெண்டும் செம கட்டைங்கடா.. வேலை முடிஞ்சதும் என்கிட்ட குடுத்துரு நான் வெளயாண்டுட்டு இருப்பேன்.”
“அக்காவ நீ என்ன வேணா பண்ணிக்க. மிருணாளினி மேல உன் நிழல் கூட படக்கூடாது. புரியுதா?” என எச்சரித்தான்.
“சரி. அவ ஃப்ரெண்ட் எனக்கு வேணும். அவள மாறி ஒருத்திய தான் போன மாசம் ஒருத்தன் கேட்டான். யாருமே கெடைக்கல அதனால எனக்கு 2 கோடி லாஸ்.”
“சரி எடுத்துக்க. காரியம் முடியறவரைக்கும் ஒழுங்கா நடி. மிருணா கண்ணுல நீ படவே கூடாது. புரிஞ்சதா? சரி ராகவன் சார் நம்ம எடத்துக்கு ராத்திரி வரச்சொன்னாரு. மறக்காம வந்துரு. அடுத்த ஆர்டர் ஏலம் இருக்கு.” எனக் கூறிச் சென்றான்.
“வந்துடறேன்டா. உள்ள உனக்கு ஏத்த ஆளு இருக்கா போறியா?”
“இல்ல. நீ சீக்கிரம் வந்து சேரு. 9 மணி” எனக் கூறிவிட்டுச் சென்றான்.
விஜயராகவன் பின்னால் அமர்ந்திருக்க, முன்னே ஆதர்ஷ் ஏலத்தின் விவரங்களைக் கூறியபடி வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.
“இந்த ஏலம் எடுக்கணுமா சார்?” அனைத்தும் கூறிவிட்டுக் கேட்டான்.
“எடுக்கணும் ஆதர்ஷ். அடுத்து விண்ணூர்காரப்பட்டினம் ஏலமும் நம்ம கண்டிப்பா எடுக்கணும். அதுல நான் ஜெயிச்சே ஆகணும்.” என்றபடி விஜயராகவன் சுருட்டை வாயில் வைத்தான்.
“அந்த மலைக்கோவில் தான் திறக்கமுடியலன்னு சொல்றாங்களே சார். அதுவும் தவிர பெரிய உயிர் இழப்பு நமக்கும் அங்க நடந்திருக்கு.”
“அதனால தான் அத மறுபடியும் வெற்றிகரமா செஞ்சி முடிக்கணும்ன்னு சொல்றேன். இந்த தடவ எந்த தப்பும் வராம செய்யணும். அதுக்கும் ஆளுங்கள ரெடி பண்ணிடு. அது இன்னமும் மூடநம்பிக்கை உள்ள ஆளுங்க அதிகமா இருக்க இடம். கவனமா தான் கையாளணும்.”
அந்த நட்சத்திர விடுதியில், அதிநவீன மின்தூக்கியில் இருவரும் சென்று அந்த கூட்டத்தில் கலந்துக் கொள்ளப் பிரத்யேக கடவு எண்ணைக் கூறியபின், இருவரும் அந்த கூடத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
அங்கே இவர்களை போல சுமார் 20 கூட்டத்தைக் கொண்ட ஆட்கள் அமர்ந்திருந்தனர். அனைவரையும் ஆட்டிப் படைக்கும் கர்வமும், ஆளுமையும் நிறைந்த மத்திம வயதுடைய ஒருவன் அங்கே வந்தமர்ந்தான். அவனைத் தொடர்ந்து அவனது உதவியாளன் வந்து எஜமானின் கண்ணசைவிற்கு ஏற்ப வேலைகளைத் தொடங்கி ஏலத்தை ஆரம்பித்தான்.
அது தென்னிந்திய முழுமைக்குமான ரகசியமான பொக்கிஷங்கள் நிறைந்த இடங்களைக் கண்டுப்பிடித்து, அரசாங்கம் அறியும் முன் அங்கே ஆராய்ச்சி நடத்தி, அறிய பொருட்கள் இருந்தால் எடுத்துக் கொண்டு அந்த இடத்தை அழித்து விடுவர். அப்படி இவர்கள் கண்டுபிடிக்கும் 10 இடங்களில் ஒன்றை அரசாங்கத்திற்குக் காட்டி, அரசாங்கத்திடம் சலுகைகளும் பெற்றுக்கொண்டு இன்னும் அதிகமாகக் கொள்ளையடிக்கும் கொள்ளைக் கூட்டம்.
இவர்களின் தேடல் எல்லாம் எப்போதும் பழைய குறிப்புகள் கிடைக்கும் சுவடிகள், பட்டையங்கள், மற்றும் கல்வெட்டுகளையுடைய கோவில்களும், கோட்டைகளும் தான். நமது நாட்டில் அரசாங்கம் அறியாத பல பொக்கிஷங்கள் இன்றும் பல இடங்களில் மறைந்திருக்கிறது என்று அவர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தனர். இந்தியாவை நான்காகப் பிரித்து இவர்கள் அதைத் தேடிவருகின்றனர். அப்படியானக் கூட்டத்தின் தென்னிந்தியா முழுமைக்குமான ஏலம் இன்று நடக்கிறது. ஏலம் நடத்துபவன் அந்த இடத்தை அறிவதற்கானத் துருப்புச் சீட்டைக் கொடுத்துவிடுவான். அதை வைத்து ஏலம் எடுத்தவன் அந்த இடத்தைக் கண்டுபிடித்து இவனை அழைத்துக் காட்ட, அவன் மொத்தமும் எடுத்துக் கொண்டு இதற்கான கூலியோடு சில கோடிகளையும் கொடுத்துவிடுவான்.
வருடத்தில் ஒரு இடத்தைக் கண்டுபிடித்தாலும் சில நூறு கோடிகள் கையில் நிற்கும் தொழிலாக இது பல நாடுகளிலும் நடந்து வருகிறது. இந்தியாவில் மண்ணில் புதையுண்டு இருக்கும் பொருட்களும், எந்த தனி மனிதருக்கும் உரிமையில்லாத இடங்களில் இருக்கும் அத்தனை பொருட்களும் அரசாங்கத்திற்கே சொந்தம் என்பதால் நமது நாட்டில் சட்டரீதியாகப் புதையல் தேடும் கூட்டும் குறைவு தான். சட்டத்திற்கு புறம்பானவர்களுக்கு இது அதீத வாய்ப்பாக அமைந்துவிட அவர்கள் செவ்வன இந்த வேலைகளைச் செய்துக் கோடிகளில் பணம் ஈட்டி வருகிறார்கள்.
“சார் ஏலம் ஆரம்பமாகிரிச்சி. நம்ம பெட் ஆரம்பிக்கலாமா?” ஆதர்ஷ் கேட்டான்.
“இரு.. நமக்கு சவுத் தமிழ்நாடு தான் வேணும். அதுல அந்த கேங் எடுக்கக்கூடாது. புரியுதா?” விஜயராகவன் முகத்தில் இருந்தக் கடுமைக் கண்டு ஆதர்ஷ் கவனமாக ஏலத்தைக் கவனித்தான்.
மத்திய பிரதேசத்தில் இருந்து பகுதி வாரியாக நடந்த ஏலம், தமிழ்நாட்டினை ஏலம்விட்டது.
“ஒரு நிமிஷம் ஹெட். தமிழ்நாட்ட ரெண்டா பிரிச்சி கேட்டா பரவால்ல.” என விஜயராகவன் எழுந்துக் கூறினான்.
அவனால் ஹெட் என அழைக்கப்பட்டவன் திரும்பி அவனைப் பார்க்க விஜயராகவன் பேச்சைத் தொடர்ந்தான்.
“இதுவும் ரொம்ப பெரிய ஏரியா. திருச்சி மேல, அதுக்கு கீழன்னு ரெண்டா பிரிச்சா வேலை அதிகமா நடக்கும். நிறைய கோவில்கள்ல இங்க பொக்கிஷம் இருக்கு.”
“ஹாஹாஹாஹா என்ன ராகவன் எதுக்கு பிரிக்கணும்? இங்க என்ன சோர்ஸ் இருக்கு அத எவ்ளோ இந்த வருஷம் எடுக்கணும்ன்னு எனக்கு தெரியும். உன்னால முடிஞ்சா மட்டும் ஏலத்துல உக்காரு இல்லையா போயிட்டே இரு.” எனக் கூறிவிட்டு மொத்த தமிழ்நாட்டிற்கும் ஏலம் விடுத்தான்.
விஜயராகவனுக்குப் போட்டியாக மூன்று குழுக்கள் விலையை ஏற்றிக் கொண்டே போக, விஜயராகவன் தன்னிடம் இருக்கும் கடைசி ரூபாய் வரைக்கும் கொடுத்து ஏலத்தை எடுத்தான்.
“என்ன ராகவ் மொத்த காசும் இதுலயே விட்டுட்ட? எடத்த கண்டுப்பிடிச்சி எடுக்கற செலவுக்கு என்ன பண்ணுவ?” அவனுக்கு போட்டியாக ஏலத்தில் விலைக் கேட்டவன் எகத்தாளமாகக் கேட்க, சத்தமில்லாமல் தோட்டா அவனது நெற்றிப்பொட்டில் நுழைந்து மறுப்பக்கம் வெளியே சென்றது.
“ஏலம் எடுத்தவன் முன்ன இப்படி பேசக்கூடாதுன்னு தெரியாதா? தொழில் ஒழுக்கம் இருக்கணும். கெளம்புங்க. உங்களுக்கான துருப்பு வந்து சேரும்.” என ஹெட் கூறிவிட்டு அங்கிருந்துச் சென்றான்.
இறந்தவனைச் சத்தமில்லாமல் இரண்டே நிமிடத்தில் அப்புறப்படுத்திவிட்டு, தொழில்முறைப் பார்ட்டி இடமாக மாறியது. புதிய ஆட்கள் உள்ளே வர வர முன்பிருந்தவர்கள் வெளியேறினர். அந்த இடத்தில் இப்படியான சம்பவம் நடந்த சுவடுக் கூட இல்லாமல் அடுத்த நிகழ்வுகள் நடக்கத் தொடங்கியது.
மணீஷ் இம்முறை வண்டியை ஓட்ட விஜயராகவன் கடுப்புடன் பின்னே அமர்ந்துத் தனதுக் கையிருப்பை ஆராய்ந்துக் கொண்டிருந்தார். ஆதர்ஷ் அமைதியாக அவர் கேட்க நினைப்பதையெல்லாம் கணினியில் எடுத்துக் காட்டினான்.
“இத வச்சி என்ன பொருள் வாங்கி எப்படி வேலைய ஆரம்பிக்கறது? இது வேலைக்கு ஆகாது, ஹெட்கிட்ட ஹெல்ப் கேக்கணும்.” எனக் கூறி யோசனையாக வந்தார்.
“சார்.. எனக்கு ஒரு விஷயம் தோணுது. சொல்லவா?”
“சொல்லு..”
“இந்த இடத்த அரசாங்கத்துகிட்ட காட்டி அங்கயே பணமும் வாங்கிட்டு ஆளுங்களும் வாங்கிக்கலாம். இத முன்ன வச்சிட்டு மத்த ரெண்டு இடத்தையும் அதுல வாங்கின பணத்த வச்சி பொருள் வாங்கி நம்ம ஆளுங்களை இறக்கினா வேலையும் சீக்கிரம் நடக்கும். நமக்கும் ரிஸ்க் கம்மியாகும்.”
“இதெல்லாம் நான் யோசிக்கலன்னு நெனச்சியா ஆதர்ஷ்? இப்ப நம்ம டிபார்ட்மெண்ட் போறதுக்குள்ள இந்த மீடியா யூடியூப் ஆளுங்க முன்ன போய் நிக்கறாங்க. போலீஸும் இப்ப நமக்கு போட்டியா வராங்க. அவனுங்களுக்கு மொய் அழ முடியாது.”
“சார். மிருணாளினி வச்சி இந்த இடத்த ஒரு மாசத்துல ஓபன் பண்ணிட்டா நமக்கு பணம் வந்துரும். இப்போதிக்கு வெறும் 5 லட்சம் இருந்தா போதும் அவளுக்கு. கொஞ்சம் கொஞ்சமா மட்டும் அவளுக்கு வேணுங்கற பொருள வாங்கி தரலாம். நானும், என் தம்பியும் அவளோட அக்காவ வச்சி இவள வேலை செய்ய வைக்கமுடியும். இந்த சின்ன மலைய கண்டுபிடிச்சா போதும் மத்தது நம்ம பண்ணிக்கலாம். நிஜமா அவ திறமையுள்ளவளா இருந்தா நம்ம கூட்டத்துல வச்சிக்கலாம். இல்லைன்னா விட்ரலாம். செலவு பெருசா இல்ல. உமேஷ் மட்டும் கூப்டுக்கலாம். அவன் ஏற்கனவே ஓரளவு ஃபிகர் பண்ணிட்டான்.”
“அந்த பொண்ணு நேர்மை உள்ளவ மாதிரி தெரியறாளே.” விஜயராகவன் யோசனையாகக் கேட்டார்.
“ஆனா அவ அக்கா மேல உயிரே வச்சிருக்கா. கிருபா நம்ம கைல இருந்தா அவள பொம்மையா மாத்திடலாம். அது என் வேலை பாஸ். ஒரு மாசம் டைம் குடுங்க.” என மணீஷ் சிரித்தபடிக் கூற, ராகவன் சரியெனக் கூறினார்.