18 – காற்றிலாடும் காதல்கள்
“குட் மார்னிங் சார்..” மிருணாளினி அங்கிருந்தவர்களைப் பார்த்துவிட்டு தனது ஆசிரியருக்கு வணக்கம் கூறினாள்.
“வாங்க மிருணாளினி. இவரு மிஸ்டர்.விஜயராகவன். தொல்பொருள் துறையோட முக்கியமான அதிகாரி. இவரு ஆதர்ஷ் அவரோட அசிஸ்டெனண்ட்.” என அறிமுகப்படுத்தி வைத்தார்.
அவளும் அவர்களுக்கு தலையசைத்து முகமன் கூறிவிட்டு மீண்டும் தனது ஆசிரியரைப் பார்த்தாள்.
“மிருணாளினி. உன் தீஸிஸ் பாத்து இவங்க ரொம்ப இம்ப்ரஸ் ஆகிட்டாங்க. ஒரு பழைய சுவடி இப்ப கெடச்சிருக்காம். அத நீ டிகோட் பண்ணி தரணும்.” என அவர் கூறியதும் அவளின் கண்கள் சந்தோஷத்தில் மின்னியது.
அதை ஆதர்ஷ் நன்றாகக் குறித்துக் கொண்டான். அவளை தங்கள் வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என்ற நம்பிக்கை வந்திருந்தது. தவிர அவளைக் கண்டதும் ஒரு கிறக்கமும் வந்திருந்தது.
“கண்டிப்பா சார்.. நாளைக்கு நான் எட்டயபுரம் போறேன்.. வந்து செஞ்சி தரேன்.” எனக் கூறினாள்.
“அந்த ரங்கய்யா வாத்தியார்கிட்டயா?”விஜயராகவன் கேட்டார்.
“ஆமாங்க சார்.“
“சரி அதையும் கத்துக்கிட்டு வரட்டும் ஹெச்.ஓ.டி. சார். கைக்கு வந்திருக்கறது ரொம்பவே பழசு. இவங்க அங்க போயிட்டு வந்தப்புறம் என்னை வந்து பாக்க சொல்லுங்க. வேலைய அப்பறம் ஆரம்பிக்கலாம். நான் வரேன்.” எனக் கூறி விஜயராகவன் கிளம்பிவிட்டார்.
ஆதர்ஷிடம் தங்களது முகவரி மற்றும் எண்ணைக் கொடுத்துவிட்டு வரும்படிக் கூறிச்சென்றார்.
ஆதர்ஷ் மிருணாளினியைத் தேடிவந்து,“மிஸ்.மிருணாளினி, இது எங்க கார்ட். நீங்க திரும்பி வந்ததும் இந்த நம்பருக்கு கூப்பிடுங்க. சீக்கிரம் நம்ம சேரலாம். ஐ மீன் சேர்ந்து வேலை பாக்கலாம்.” எனக் கூறிவிட்டு ஒரு மார்க்கமாகப் பார்த்துவிட்டுச் சென்றான்.
“என்னடி இவன் பார்வையே சரியில்ல.” பாமா கூறினாள்.
“என்னைய பத்தி தெரிஞ்சா திரும்பி கூட பாக்கமாட்டான். விடு. நான் நாளைக்கு காலைல கெளம்பறேன். நேத்து ஒரு புக் கொண்டு வந்தியே அது இருக்கா? கிருபா கொண்டு வரேன்னு சொல்லிட்டு வழக்கம் போல சேவை செய்ய ஓடிட்டாடி.”
“ஆனாலும் உன்கூட பொறந்தும் எப்டி தான் கிருபா அப்படி இருக்காங்களோ தெர்ல மிரு.. எனக்கு இன்னமும் அது ஆச்சரியம் தான். நேத்து என்ன கதை?” எனத் தோழி கேட்க மிருணாளினி கூறியபடி தனது புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தாள்.
“ரொம்ப இளகின மனசுல்ல?”
“அதான் என் பயமே. இவளோட இந்த குணமே அவளுக்கு ஆபத்தா ஆகிடக்கூடாதுன்னு பயமாயிருக்கு. எதையும் யோசிக்காம யாரும் கேட்காமயே உதவின்னு ஓடுவா. ஏதாவது பேசினா கேட்காம செய்யறதுக்கு பேர் தான் உதவின்னு டயலாக் அடிப்பா. இவள எல்லாம் ப்ரோபசர்ன்னு பசங்க எப்படி நம்பி ஏத்துகிட்டாங்களோ தெரியல?”
“சரி விடு. 10 நாள் உன் இம்சை இல்லாம நான் இங்க தூங்குவேன். சீக்கிரம் கிளம்பிபோயிட்டு மெதுவா வா மிரு.”
“இந்த புக் எல்லாம் இங்க வச்சிட்டு போறேன். இதுல இந்த பிரிவு செய்யுள் எல்லாம் எடுத்தெழுதி அர்த்தமும் எழுதிவை.” என 10 புத்தகங்களை அவளிடம் கொடுக்க அவள் கடுப்புடன் முறைத்தாள்.
“இதுக்கு நீ இங்கயே இருந்தா கூட ரெண்டு தான் குடுப்ப. ஏண்டி இப்டி டார்ச்சர் பண்ற?”
“இந்த தீஸிஸ் இன்னும் ஒரு மாசத்துல முடிச்சி அடுத்த டைட்டில் எடுக்கணும். நமக்கு ஒவ்வொரு செகண்டும் ரொம்ப முக்கியம் பேபி.”
“என்னைய நிம்மதியாவே இருக்க விடமாட்டியா நீ? இப்டியே போனா நான் எப்ப கல்யாணம் பண்ணி என் புருஷன் கூட சந்தோஷமா இருந்து புள்ளை பெத்துக்கறது ?” பாமா பாவமாகக் கேட்டாள்.
“அதான் என்னை கட்டிக்கிட்டியே இன்னும் என்ன?” என மிருணாளினி கூறியதும் பாமா மயங்கியது போல நடிக்க அங்கே சிரிப்பும் விளையாட்டும் களைக்கட்டியது.
இங்கே கல்லூரிக்குச் சென்ற கிருபாலினி உடல்நிலைக் குன்றியிருந்த மாணவனை அழைத்து உணவுக் கொடுத்து உண்ணச் சொல்லிவிட்டு வழக்கமான வேலைகளில் மூழ்கினாள்.
“மேடம். கிருபா மேடம் எங்க இருக்காங்க மேடம்?” என பியூன் வந்துக் கேட்டான்.
“அவங்க கிளாஸ் எடுத்துட்டு இருப்பாங்க. ஏன்?”
“அவங்கள பாக்க விசிட்டர் வந்திருக்காங்க மேடம்.”
“எமர்ஜென்ஸியா?”
“இல்லைங்க மேடம்.”
“சரி வெயிட் பண்ண சொல்லு கிளாஸ் முடிஞ்சி வருவாங்க.” எனக் கூறினார் மற்றொரு பேராசிரியர்.
“சரிங்க மேடம். உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கு. ஸைன் பண்ண நீங்க வரணும் மேடம்.”
“வரேன் போப்பா.” எனக் கூறி மெதுவாக எழுந்துச் சென்றுக் கையெழுத்திட்டு, தனக்கு வந்திருந்தப் பார்சலை வாங்கி பையில் வைத்துக் கொண்டார்.
அப்போது கிருபாலினி உள்ளே வர்ற, “கிருபா மேடம். உங்கள பாக்க யாரோ வந்திருக்காங்கலாம்.” எனக் கூறி தனது வகுப்பிற்குக் கிளம்பினார்.
“ஓகே மேடம். தேங்க் யு.”தனதுப் பொருட்களை வைத்துவிட்டு விருந்தினர் அறைக்குச் சென்றாள்.
அங்கே ஒருவன் இவளுக்காகக் காத்திருந்தான். இதுவரை கிருபாலினி அவனை எங்கும் கண்டதாக நினைவில்லை.
“யாரு நீங்க? யார பாக்கணும் ?” என அவனருகே வந்துக் கேட்டாள்.
“மிஸ்.கிருபாலினி..” எனக் கேட்டு கைநீட்டினான்.
“வணக்கம். நான் தான் கிருபாலினி நீங்க யாரு? எதுக்கு என்னை பாக்க வந்திருக்கீங்க?”
“நான் மணீஷ். உங்களுக்கு இந்த புக் தேவைபடுதுன்னு கேள்விப்பட்டேன். அதான் குடுத்துட்டு போகலாம்னு வந்தேன்.”எனக் கூறி மிருணாளினி காலையில் சொல்லிக் கொண்டிருந்த புத்தகத்தை அவளிடம் கொடுத்தான்.
“ஹோ.. ரொம்ப நன்றிங்க சார். யார் சொன்னா உங்களுக்கு?”
“பழைய புக்ஸ்க்கு ஒரு நூலகம் அமைப்பு ஆரம்பிச்சி இருக்கோம். வாட்ஸ்அப்ல ஒரு குழு இயங்கிட்டு இருக்கு. அதுல தான் ஒருத்தங்க இந்த புக் வேணும்ன்னு சொல்லியிருந்தாங்க. இது என்கிட்ட இருந்தது அதான் கொண்டு வந்தேன். நான் இங்க பக்கத்துல தான் இருக்கேன். ஆனா நீங்க மேத்ஸ் ப்ரோபசர் போலவே. உங்களுக்கு இந்த புக்?” எனக் கேட்டுக் கேள்வியாகப் புருவத்தை உயர்த்தினான்.
“என் சிஸ்டருக்காக கேட்டேன் சார். இது உங்களுக்கு எப்ப குடுக்கணும்?”
“இதே புக் இன்னொன்னு என்கிட்ட இருக்கு. சோ.. நீங்களே வச்சிக்கலாம்.”
“இல்லல்ல.. சும்மா எல்லாம் நீங்க குடுக்க வேணாம். இதுக்கான விலை சொல்லுங்க.”
“இந்த புத்தகத்துக்கு விலையே சொல்லமுடியாது. இத படிக்கறவங்க தமிழ் ஞானமும் விலைமதிப்பில்லாதது மேடம். இருக்கட்டும். நான் எப்பவாது வேற புத்தகம் கேட்டா அது உங்ககிட்ட இருந்தா குடுங்க போதும்.” மணீஷ் சிரித்தபடிச் சொன்னான்.
“சரி..“
“மேடம் ஒரு நிமிஷம்..“ என மணீஷ் அழைத்தான்.
“உங்க நம்பர் இல்லாம நான் எப்படி புக் கேக்கறது?” எனக் கேட்டு அழகாகச் சிரித்தான்.
“ஹோ… சாரி, நோட் பண்ணிக்கோங்க.” என அவளது எண்ணைக் கொடுத்துவிட்டு அவனது எண்ணில் இருந்துக் குறுஞ்செய்திப் பெயரிட்டு அனுப்பக் கூறிவிட்டுப் புத்தகத்தை வாங்கிக்கொண்டுச் சென்றாள்.
“ஹேய் மிரு… நீ கேட்ட புக் வாங்கிட்டேன். வந்து வாங்கிட்டு போறியா?” என தங்கைக்குச் செய்தியனுப்பினாள்.
“சரி. மதியம் வரேன். லீவு போட்டுட்டு வா சினிமா போலாம். டிக்கெட் எடுத்துட்டேன்.”
“எப்ப பாரு எடுத்துட்டு சொல்லு. முன்னவே சொல்லமாட்டியா? திடீருன்னு லீவு கேட்டா நான் என்னனு போய் கேக்கறது?” கோபமாகப் பதிலனுப்பினாள்.
“உன் கொள்ளுபாட்டி செத்து போச்சின்னு சொல்லு.”
“அது தான் எப்பவோ செத்து போச்சேடி.”
“அது செத்தப்ப நம்ம லீவு எடுக்கல அதனால இப்ப சொல்லி எடுக்கலாம். சீக்கிரம் கேட் கிட்ட வந்துடு. வெயிட் பண்ண வச்சா பனிஷ்மெண்ட் ஹெவியா இருக்கும்.” என மிரட்டல் எமோஜி அனுப்பி வைத்தாள்.
கண்ணடிக்கும் எமோஜியை இவள் அனுப்பிவிட்டு அவசரமாகப் பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை ஊருக்கு செல்லவேண்டும். நாளையும் வரமுடியாது எனக் கூறிவிட்டு மதியம் உணவு இடைவேளை ஆரம்பித்ததும் வெளிவாசலில் வந்து நின்றாள். அவள் வரவும் மிருணாளினி பாமாவோடு அங்கே வரவும் சரியாக இருந்தது.
“என்னடி இன்னிக்கு உங்களுக்கு லைப்ரரி சுத்தம் பண்ற வேலை இல்லயா?”கிருபாலினி கிண்டலாகக் கேட்டாள்.
“நக்கலா கிருபா உனக்கு? உன் தங்கச்சி பத்துநாள் வரமாட்டான்னு நான் சந்தோஷமா தூங்கலாம்னு நெனச்சிட்டு இருக்கறப்ப 10 செய்யுள் புக் எடுத்து வச்சி வேலைய சொல்லிருக்கான்ற கடுப்புல சினிமா போலாம்னு வந்தா, நீ என்னை நக்கல் பண்றயா?” பாமா பல்லைக்கடித்தபடிக் கேட்டாள்.
“இப்பவும் நீ வேலை செய்யாம சினிமா தான் வந்திருக்க பாமா. ஆனாலும் இவகிட்ட இவ்ளோ வருஷம் நீ இருக்கறது பெரிய விஷயம் தான். அதுக்கே உனக்கு பாராட்டு விழா எடுக்கலாம்.”
“அதெல்லாம் விட இவக்கூடவே ஒட்டி பொறந்த நீ இவளுக்கு நேர்மாறா இருக்கறத்துக்கு உனக்கு கோவிலே கட்டணும் கிருபா.”
“ரெண்டு பேரும் இப்டியே பேசிட்டு பொடி நடையா நடந்து வந்து சேருங்க நான் முன்ன போறேன்.” மிருணாளினி இப்படி கூறவும் இருவரும் வண்டியில் அவளின் பின்னே அமர்ந்தனர்.
“போலீஸ் பிடிக்கமாட்டானா நம்ம 3 பேரு போனா?”கிருபாலினி கேட்டாள்.
“பிடிச்சா பாமாவ உக்கார வச்சிட்டு நாம படம் பாத்துட்டு வந்து கூட்டிட்டு போலாம் கிருபா. நீ பயப்படாத.”
“சரிதான்டி.. ஒழுங்கா எந்த போலீஸ்காரனும் நிக்காத சந்து வழியா ஓட்டிட்டு போ. இல்ல நீ திரும்பி வரப்ப வண்டி இருக்காது.”
மூவரும் ஒருவழியாக திரையரங்கம் சென்றுச் சேர்ந்து தங்கள் இருக்கையைக் கண்டுப்பிடித்து அமர்ந்தனர்.
“கன் டைம் பாமா பேபி.” எனக் கூறி கிருபாவை நடுவில் அமரவைத்து இரண்டு பக்கமும் தோழிகள் அமர்ந்துக் கொண்டனர்.
அவர்களுக்கு பின் வரிசையில் இருந்த இருக்கையில் மணீஷ் அமர்ந்திருந்தான். பெண்கள் வந்ததில் இருந்து கிருபாலினி சிறுபெண்ணை போல இருப்பதும், மிருணாளினி காக்கும் விதமாக நடந்துகொள்வதும் நன்றாகத் தெரிந்தது. அவனது குறியாக கிருபாலினியை தேர்வுச் செய்து அவளை நன்றாக கவனிக்கத் தொடங்கினான்.
இடையே ஆதர்ஷ் எண்ணிற்கு, “உன் வேலை கஷ்டம். எனக்கு சுலபம் தான்.” எனத் தகவல் அனுப்பிவிட்டு தன்னருகே அமர்ந்திருந்தப் பெண்ணைத் தகாத இடத்தில் கைவைத்து இம்சித்துக் கொண்டிருந்தான்.
அந்த பெண்ணும் அவனின் கையசைவிற்கு ஏற்ப அவனுக்கு வாகாக தன்னைக் கொடுக்க, திரையரங்கின் இருட்டில், இருவரும் சல்லாபித்துக் கொண்டிருந்தனர்.
பாமாவிற்கு வினோத சத்தம் காதில் விழவும் அவள் கண்களில் அந்த பெண் மட்டும் பட அருகேயிருந்த ஆண் இருட்டினில் தெரியவில்லை.
“ச்சே.. கொஞ்சம் கூட அறிவே இல்லாத ஜென்மங்க. கண்ட இடத்துல அசிங்கம் பண்ணிக்கிட்டு. இதெல்லாம் தியேட்டர்காரன் கண்ணுல விழாது. ஒரு சிப்ஸ் பாக்கெட் வச்சிருந்தா மட்டும் படையோட வந்து புடுங்கிட்டு போவான்.” என அவள் சத்தமாகப் பேசவும், அருகிருந்தவர்கள் பின்னால் திரும்ப மணீஷ் முகத்தை மறைத்தபடி எழுந்துச் செல்ல, அந்த பெண்ணும் அவன் பின்னோடுச் சென்றாள்.
மிருணாளினி எழுந்துச் சென்றவர்களின் உடையை மட்டுமே பார்த்தாள்.