Loading

அத்தியாயம் 17

நட்ட நடு ஹோட்டலில், அங்கு வேலை புரியும் பணியாட்கள் பார்க்கும் இடத்தில், ஒரு கொலையை செய்து விட்டு, அலட்சிய பாவனையுடன் “க்ளியர் ஹிம்!” என்று யாருக்கோ கட்டளையிட்ட ஸ்வரூப் அவ்தேஷைக் கண்ட பாவையர் மூவருக்கும் உயிர் தொண்டைக்குழியில் நின்று ஊசலாடியது.

“அடி ஆத்தாடி! நம்மளை போலீஸ்ல போட்டு குடுத்திருந்தா கூட வெறும் 420 கேஸ்ல தான் மாட்டி இருப்போம். இப்போ, கொலை கேஸ்ல மரண தண்டனை தான் போலயே” என அக்ஷிதா மிரள,

எச்சிலைக் கடினப்பட்டு விழுங்கிய விஹானா, “அதுல சந்தேகமே இல்ல அக்ஷி. ஷவி கைரேகை வேற அந்த துப்பாக்கில இருக்குல்ல…” எனத் திகைத்து, உத்ஷவியைக் காண,

அவளோ, தன்னுடன் இருப்பவன் மலையாளி போல சிவந்த நிறத்தில் அழகாக இருக்கிறான் என நினைத்தால், இவன் கொலையாளியாக அல்லவா இருக்கிறான் என மிரட்சி குறையாது, அவனைக் கண்ணெடுக்காமல் ‘ஃப்ரீஸ் மோடில்’ பார்த்துக் கொண்டிருந்தாள்.

சஜித், வந்த வேலை முடிந்து விட்ட ரீதியில், கேஷுவலாக எழுந்து விட, ஜோஷித் அங்கு அப்படி ஒரு சம்பவமே நடைபெறாத முகபாவத்துடன், “சிப்ல இருக்குற டேட்டாவை டீகோட் பண்ண முடியல. அது சைபர் லேங்குவேஜ்ல இருக்கு. அதை டிக்ரிப்ட் பண்ண ஒரு கீ வேணும்” என்றான் தமையனின் முகம் பார்க்காமல்.

எதிரில் ஒருவன் இரத்தவெள்ளத்தில் கண்கள் நிலைகுத்தி உயிரற்றுக் கிடக்க, அதனை சட்டை செய்யாமல், “எதுவுமே கிடைக்கலையா?” எனக் கேட்டான் ஸ்வரூப்.

தோளைக்குலுக்கி மறுப்பாக தலையசைத்த ஜோஷித், இறந்த உடலை தூக்கிச் சென்ற பணியாட்களை முறைத்து, “கல்யாண ஊர்வலமாடா போறீங்க. க்ளியர் ஹிம் ஃபாஸ்ட்.” என்று கோபத்துடன் மொழிய, அவசர அவசரமாக அவ்விடம் தூய்மைப் படுத்தப்பட்டது.

பத்தே நிமிடத்தில், கொலை நடந்ததற்கான அடையாளமே தெரியாத அளவு சாதாரணமாக மாறி இருக்க, இப்போது மீண்டும் மெனு கார்டை எடுத்த ஸ்வரூப், உணவை ஆர்டர் செய்து விட்டு, “உங்களுக்கு வேணுன்றத சொல்லுங்க. நம்ம போற இடத்துல சாப்பாடு நீங்க எதிர்பார்க்கிற மாதிரி கிடைக்காது.” என்று மெனு கார்டை உத்ஷவியை நோக்கி நீட்ட, அவளோ ரோபோவாகவே மாறி இருந்தாள்.

‘இரத்தம் தெறிச்ச இடத்துலயே சாப்பிடணுமா?’ என எண்ணும் போதே விஹானாவிற்கு குடலைப் பிரட்டியது. அக்ஷிதாவோ ‘சாப்பாடையே வெறுக்க வச்சுடுவானுங்க போல… பார்த்தா, சேட்ஜீ மாதிரி சாஃப்ட்டா இருக்கானுங்கன்னு நம்புனது தப்பு போலயே.’ என இருக்கையில் நெளிந்தபடி அமர்ந்திருந்தாள்.

“நீ இன்னும் ஆர்டர் பண்ணாம என்ன நெளிஞ்சுட்டு இருக்க?” என்ற சஜித்தின் கேள்விக்கு, “மனசாட்சின்னு ஒண்ணு இருக்காடா உனக்கு…” என்றாள் பாவமாக.

“மனசாட்சி பத்தி நீ பேசுறியா… வெரி ஃபன்னி.” எனக் கேலியுடன் கூற,

“ஏன் ஏன்…? ஏன் நான் பேசக்கூடாது” என அவள் எகிறியதில், “அடுத்தவங்க உழைப்பை, நோகாம திருடி வாழுற நீ மனசாட்சி பத்தி எல்லாம் பேசவே கூடாது.” என்று ஆள்காட்டி விரலை அவனுத்தட்டில் வைத்து, தலையாட்டினான்.

“நானாவது திருட தான் செய்றேன். நீங்க கொலைகாரனுங்க.” என சிலிர்த்திட,

“ஃபார் யுவர் கைன்ட்லி இன்பர்மேஷன். நாங்க செய்றது எல்லாம் கொலை லிஸ்ட்லேயே வராது.” என்றான்.

‘எப்படி?’ என்பது போல மூவரும் அவனைப் பார்க்க, ஜோஷித் வெளிறிப்போன பெண்களின் முகத்தைக் கண்டு, “போலீஸ் என்கவுண்டர் பண்ணுனா, தப்பா?” எனக் கேட்டான் தடையைத் தடவியபடி.

விஹானா, “இல்ல தான்…” என இழுக்க, “அதே மாதிரி தான் இதுவும். எங்க ஊர்ல நாங்க தான் கவர்மெண்ட். யாராவது தப்பு பண்ணுனா…” என வார்த்தையை முற்றுப்பெறாமல் விட்டவன், விஹானாவை நோக்கி இரு விரலால் சுடுவது போல் சைகை செய்தான்.

அவளோ விக்கித்து அமர்ந்திருக்க, சஜித், “போலீஸ் கூட எங்களை விசாரிக்க முடியாது. ஈவன் பொலிடீஷியன் ஆல்சோ. நாங்க மனசு வச்சா தான், ஆந்திரால அவன் அமைச்சராவே ஆக முடியும்.” என்ற அமர்த்தலாகக் கூற, நூறாவது முறையாக ராகேஷை மனதினுள் திட்டித் தீர்த்தாள் அக்ஷிதா.

உத்ஷவி அப்போது தான், அதிர்ச்சியை விழுங்கிக் கொண்டு, “நீங்க எல்லாரும் ரௌடிங்களா?” எனக் கேட்டாள்.

ஜோஷித் கடுப்பாகி, “வாட்? எங்களை பார்த்தா ரௌடீஸ் மாதிரி இருக்கா?” என்று எகிற,

“அப்போ பொலிடீஷியனா?” எனக் கேட்டாள் இமைகளை சிமிட்டி.

“இல்ல.” என்ற ஜோஷித்தின் பதிலில், “இது எதுவுமே இல்லாம, எப்படிடா நீங்க இதை எல்லாம் பண்ண முடியும்?” என்றவளுக்கு இன்னும் அவர்களது குடும்பம் பற்றிய விவரங்கள் புரியவில்லை.

அதற்கு விளக்கம் கொடுக்க இடைவெளிக் கொடுக்காமல், “நேர்ல பார்த்த சாட்சி இத்தனை பேர் இருக்கோம். நானே வாக்குமூலம் குடுப்பேன்.”  என ஸ்வரூப்பை முறைத்திட, அவனது இதழ்களில் நக்கல் சிரிப்பு.

“நீயே ஆவியாகி வந்து, உன்னை கொன்னது நான் தான்னு சொன்னா கூட, யாருமே என்னை நெருங்க முடியாது விஷா.” எனப் பரிதாபப் பார்வை வீசினான்.

‘எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்க பாத்தியா?’ என்பது போல தோழிகள் இருவரும் அவளை வெறித்துப் பார்க்க, உத்ஷவிக்கும் அவர்களிடம் இருந்து தப்பிக்கும் விதம் தெரியவில்லை.

தொண்டையைச் செருமிக் கொண்டவள், “இப்போ இங்க எதுக்கு இந்த கொலை நடந்துச்சு?” எனக் கேட்டாள் தட்டுத் தடுமாறி.

“அது உனக்கு தேவை இல்லாத விஷயம்!” எனப் பட்டென பதிலளித்த ஸ்வரூப்பின் மீது கோபம் அதிகரித்தது.

“எனக்கு ரொம்பத் தேவையான விஷயம் இது. வெறும் திருட்டுக் கேஸை கொலை கேசா மாத்திட்டு இருக்க ஸ்வரூப். என் மேல இருக்குற கோபத்துல இந்த பழியை எங்க மேல போட மாட்டன்னு என்ன நிச்சயம்.” என்றவளை எரிச்சலுடன் பார்த்தவன்,

“உன்மேல பழி போட வேண்டிய அவசியமே இல்ல விஷா. ஏன்னா, இப்ப நீங்க மூணு பேரும் இருக்குறது, அவ்தேஷ் குடும்பத்தோட எல்லைக்குள்ள. இங்க இருந்து நீ ஜடமா போகணுமா? உயிரோட போகணுமா, இல்ல ஜெயிலுக்கு போகணுமான்னு முடிவு பண்ண வேண்டியது நான்… நான் மட்டும் தான். பெட்டெர் யூ ஹோல்டு யுவர் டங்க்.” என்றவன் எழுந்து வெளியில் சென்று விட, அவளுக்குத் தான், பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்ட உணர்வு.

எப்படியும் சென்னைக்கு உயிருடன் திரும்பப் போவதில்லை என்ற தெளிவு பிறந்து விட்டது அக்ஷிதாவிற்கு.

“அவனே சாப்பாடு வாங்கி தரேன்னு சொன்னான். தேவை இல்லாம கேள்வி கேட்டு, அதையும் கெடுத்து விட்டுட்டியே டார்ல்ஸ்” உதட்டைப் பிதுக்கிக் கூறிய அக்ஷிதாவைக் கண்டு மெல்ல நகைத்தான் சஜித் அவ்தேஷ்.

ஜோஷித் தான், ஸ்வரூப் சென்ற திசையை சினத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

என்னவோ, அவன் மீதிருக்கும் கோபம் மட்டும் கடுகளவு கூட குறைய மாட்டேனென அடம்பிடித்தது.

தந்தையர்கள் இரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருக்க, பொது இடத்தில் அவர்களைக் கொல்ல வந்தவனை கொல்லும் அளவு ஆத்திரம் பிறந்தது ஜோஷித்திற்கு. சஜித்தும் அதே கோபத்துடனே இருந்தான்.

ஆனால், ஸ்வரூப் அவனைக் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கச் செய்ததில் கோபம் கொண்ட ஜோஷித், “அவனை ஏன் ஸ்வரா கொல்லாம விட்ட?” என்றான் கர்ஜனையுடன்.

“பப்ளிக் பிளேஸ்ல, நம்மளை ரோல் மாடலா நினைக்கிற டீன் ஏஜ் பசங்க முன்னாடி, வயலன்ஸை கையில எடுக்குறது தப்பு ஜோ. நம்ம தாத்தா அதை எப்பவும் ஆதரிக்க மாட்டாரு. அவன் வெறும் அம்பு… அந்த அம்பை அனுப்புன வில்லு எங்க இருக்குன்னு கண்டுபிடிக்கணும். அவனால, நம்ம ஊருக்கும் ஆபத்து…” என்று அப்போதும் தனது குடும்பப் பழக்க வழக்கங்களை பிடிவாதத்துடன் கடைபிடித்த ஸ்வரூப்பின் மீது கோபம் துளிர்த்தது.

“என்னடா பேசுற? மூணு பேரும் சாக கிடக்குறாங்க. இந்த நேரத்துல அவனைப் பொறுமையா விசாரிச்சுட்டு இருக்க.” என எரிச்சல் மிகக் கேட்க,

“ஜோ… நீ தான் புரியாம பேசுற. எனக்கும் எல்லா வலியும் இருக்கு. ஆனா, நம்மளோட சுய இன்ப துன்பத்தை பார்த்தோம்ன்னா, இந்த இடத்துல இருக்க நமக்குத் தகுதியே இல்லைன்னு ஆகிடும். நம்மளோட எண்ணம் பொதுநலமா தான் இருக்கணும். நம்ம குடும்பத்துக்காக ஒருத்தனைக் கொன்னா, அது நம்மளோட பதவியை துஷ்பிரயோகம் பண்ணுனதுக்கு சமம். காலம் காலமா இது இங்க நடக்குறது தான. ஆனா…” என ஆதங்கத்துடன் ஸ்வரூப் புரிய வைக்க முயல, அதனைப் புரிந்து கொள்ளும் அளவு ஜோஷித்தின் மனநிலை இல்லை.

“அப்போ, இதே மாதிரி எனக்கு நடந்தா கூட, என்னைத் தூக்கிப் புதைச்சுட்டு போய்டுவ அப்படித் தான.” என சீறலுடன் கேட்டதில், ஸ்வரூப்பும் கோபம் கொண்டான்.

“உளறாத ஜோ.” என்று ஸ்வரூப் கண்டித்ததில், அத்தனை நேரமும் அவர்களின் சண்டையை விலக்க எத்தனித்த சஜித், “அவன் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லல ஸ்வரா.” என்றான்.

“டேய் என்னடா நீயும் அவனை மாதிரி முட்டாள்தனமா கேள்வி கேக்குற.” என்னும் போதே, ஸ்வரூப்பின் மார்பைப் பிடித்துத் தள்ளி விட்ட ஜோஷித், “எங்களுக்காக ஒரு துரும்பைக் கூட அசைக்க மாட்ட அப்படித்தான? நாங்களும் செத்துட்டா, மொத்தத்தையும் நீ ஆளலாம். பங்குக்கு ஆள் இருக்காதுல…” என வார்த்தையை விட்டு விட, ஸ்வரூப் இறுகிப் போனான்.

ஜோஷித்தைப் பளாரென அறைந்தவன், அவனைப் பார்வையால் எரிக்க, சஜித் திகைத்து, “எல்லாத்துக்கும் ஒரு பதில் சொல்லுடா…” என அவன் வாயில் இருந்து ஒற்றை வார்த்தையை எதிர்பார்த்தான்.

‘சொல்லி தான் உங்களுக்கு என் அன்பு புரியணுமா?’ மனதினுள்ளேயே வெந்தவன், அவர்கள் எதிர்பார்க்கும் வார்த்தைகளைக் கூறாமல் அழுத்தத்துடன் நிற்க, ஜோஷித் உடைந்தான்.

“இனிமே என் முகத்துலயே முழிக்காத.” என அவன் சென்று விட, ஸ்வரூப்பும் அப்படியே அவனை விட்டு விட்டான்.

இருவரும் சஜித்திடமும் பேசாமல் மௌனம் காக்க, அவனே இருவரிடம் இருந்தும் தன்னை விலக்கிக் கொண்டான்.

பழைய ரணத்தில் பஜோஷித் புதைந்திருக்க, போன வேகத்தில், திரும்பி வந்த ஸ்வரூப், உத்ஷவியிடம், “நான் கார்ல இருக்கேன். எல்லாரும் சாப்பிட்டுட்டு வாங்க.” எனக் கட்டளையாகக் கூறி விட்டு, மீண்டும் வெளியில் செல்ல,

“ஹப்பாடா! இவ்ளோ ரணகளத்துலயும் சோறு கிடைக்குது” என்ற நிம்மதி அக்ஷிதாவிற்கு.

விஹானா தான், “நம்ம வேற டேபிள்ள உட்காந்து சாப்பிடலாமா?” என முகத்தைச் சுருக்கிக் கேட்க, ஏனோ அந்நொடி ஜோஷித்தின் கோபங்களெல்லாம் தவிடுபொடியாவது போலொரு பிரம்மை.

“ப்ச்…” எனத் தலையை உலுக்கிக் கொண்ட ஜோஷித், “ஏன் மகாராணி சாப்புடுறதுக்கு தனி ரூம் வேணும்ன்னா அரேஞ்ச் பண்ணவா?” எனத் திமிருடன் கேட்டிட, “போடா பனங்கா மண்டையா” என முணுமுணுத்துக் கொண்டாள் விஹானா.

பின், உணவு வரவழைக்கப்பட, உத்ஷவிக்கும் விஹானாவிற்கும் உணவு உள்ளே இறங்க மறுத்தது.

அக்ஷிதா தான், எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல், உணவை ரசித்து ருசித்து உண்டாள்.

“இனிமே நீ சாப்பிடவே மாட்டியாடி?” சஜித் அவளை ஒரு மார்க்கமாகப் பார்த்துக் கூற, “கண்ணு வைக்காத காட்ஸில்லா. இப்போ எல்லாம், நான் டயட்ல இருந்து சாப்பாடை குறைச்சுட்டேன்.” என சோகத்துடன் கூறினாள்.

“எது? ஹோட்டல்ல வச்சிருந்த பாதி டிஷை காலி பண்றது உங்க ஊர்ல டயட்டா?” என்றான் முறைப்பாக.

அதனைக் கண்டுகொள்ளாமல், அவள் உணவை உட்கொள்ள, ஜோஷித்தும் சஜித்தும் ஒரு வாய் கூட உண்ணவில்லை. அதனை அவர்கள் கருத்தில் கொள்ளவும் இல்லை.

பின் மீண்டும் மூவரும் தனித் தனியாகப் பயணத்தை மேற்கொள்ள, இறுதியில் ஒரு மலைக்கிராமத்தை வந்தடைந்தனர்.

மாலை நேரத்து, மஞ்சள் வெயிலில், அம்மலைகிராமமே ஜொலிக்க, வரிசையாக சிறு சிறு குடிசைகளும் ஓட்டு வீடுகளும் நிறைந்திருந்தது.

ஒவ்வொரு வீட்டில் இருந்த குடும்பங்களும், இவர்களைக் கண்டதும் “கும்புடுரேஞ்சாமி, கும்புடறோங்கய்யா” என சிலரும், “வந்துட்டீகளா ராசாக்களா” எனப் பெரியவர்களும், “வணக்கம் அண்ணய்யா” என சிறியர்வர்களும் குதூகலித்தனர்.

இத்தனை நேரமும் இருந்த இறுக்கம் மறந்து அனைவருக்கும் புன்னகை முகத்துடன் பதில் அளித்த மூவரும், அவர்களது நலன்களை விசாரித்து விட்டு, அங்கு அவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட சிறு குடிலுக்குள் நுழைந்தனர்.

அத்தியாயம் 18

ஹோட்டலில் பார்த்த வசதிகளில் பாதி கூட அல்லாமல், சாதாரணமாகவே இருந்தது. என்ன ஒன்று, குடிசையாக இல்லாமல், காட்டேஜ் போன்று காட்சியளித்தது.

அங்கேயே அருகருகே மூன்று அறைகள் இருக்க, சுற்றுப் புறம் முழுக்க, ஒரு வாகனத்தின் இரைச்சல் கூட கேட்கவில்லை.

அத்தனை அமைதியும், மூக்கைத் துளைக்கும் மூலிகை வாசமும் மேனியைக் குறுக வைக்கும் குளிர்நிலையுமாக காணும் கண்களுக்கு விருந்தாக இருந்தது அம்மலைக்கிராமம். அவ்வளவு அழகையும் ஒருங்கே கண்ட பெண்கள் தான் வாயடைத்து நின்றனர். இதுவரை சென்னையைத் தாண்டி எங்கும் சென்றிருக்காதவர்கள்.

“அழகா இருக்குல்ல டார்ல்ஸ்” என விஹானா விழி விரித்து மற்ற இருவரிடமும் கூற, உத்ஷவி ஒருமுறை ஸ்வரூப்பைப் பார்த்து விட்டு, “ம்ம்க்கும் அழகு இருக்குற இடத்துல தான் ஆபத்தும் இருக்கு டார்ல்ஸ்.” என்று எச்சரித்தாள்.

அக்ஷிதாவோ, “ஆனா இங்க இருந்து நம்ம ஈஸியா தப்பிச்சுடலாம் ஷவி. நைட்டு இவனுங்க தூங்குனதும், கமுக்கமா எஸ்கேப் ஆகிடலாம்.” என்று திட்டமிட,

உத்ஷவி அவளை முறைத்து, “இந்த டைனோசர் தெளிவா நம்மளை ஒரு காட்டுக்கு கூட்டிட்டு வந்து லாக் பண்ணிட்டான். இங்க இருந்து தப்பி போகலாம். ஆனா, எப்படி ஊருக்கு போவ. இது என்ன ஊருன்னு கூட நமக்குத் தெரியல. பாதை மாறி ப்போனா, காட்டு விலங்கு நம்மளை ஒரு காட்டு காட்டிடும்.” என்று பொறிந்திட, அக்ஷிதாவும் விஹானாவும் நொந்தனர்.

“மூணு பேரும் எஸ்கேப் ஆகுறதைப் பத்தி பேசுனது போதும். உள்ள போங்க” என்றிட, உத்ஷவி “எங்க மூணு பேருக்கும் ஒரு ரூம் குடுத்துடு” என்றதும், அவன் சந்தேகமாகப் பார்த்தான்.

“அதான் இங்க இருந்து தப்பிச்சுப் போக முடியாதுன்னு உனக்கே தெரியுமே. அப்பறம் என்ன?” எனக் காட்டத்துடன் கேட்டதில், அவனும் சிறிது சிந்தித்து விட்டு ஒப்புக்கொண்டான். பெண்கள் மூவரும் ஒரு அறையிலும், ஜோஷித்தும் சஜித்தும் ஒரு அறையிலும், ஸ்வரூப் ஒரு அறையிலும் தங்கிக் கொண்டனர்.

சரியாக பத்து மணி அளவில், பெண்களின் அறைக்கதவுத் தட்டப்பட, உத்ஷவி தான் கதவைத் திறந்தாள்.

ஸ்வரூப் அவளை ஏற இறங்கப் பார்த்து விட்டு, கையில் வைத்திருந்த ஸ்வெட்டரை கொடுத்து, “இதை போட்டுட்டு வா…” என்று அழைத்தான். அதில் மூவருக்குமே ஸ்வெட்டர் இருந்தது.

அவளோ, “எங்க வரணும்?” எனக் கடுகடுப்புடன் கேட்க,

“அப்படியே கிராமத்தை சுத்தி பார்த்துட்டு வரலாம்” என்ற ஸ்வரூப்பைக் கண்டு விழித்தாள்.

“அர்த்த ராத்திரியில சுத்தி பார்க்க கூட்டிட்டு போற உன்னோட பரந்த மனசைக் கண்டு நான் வியக்கேன்…” என்று கேலி செய்தும், அவன் நகராமல் நிற்க, அவளுக்கும் அவனுடன் செல்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.

அதே போல, சஜித் அக்ஷிதாவை அழைக்க, அவளோ உண்ட மயக்கத்தில் உருண்டு கொண்டிருந்தாள்.

“எனக்கு தூக்கம் கண்ணை கட்டுது காட்ஸில்லா, எனக்கு உன் அசிஸ்டன்ட் வேலைல இருந்து லீவ் குடுத்துடேன்.” எனப் பாவமாகக் கேட்க,

“ஒரு நாள் கூட உருப்படியா வேலை பார்க்கல. அதுக்குள்ளே லீவா? அட ச்சீ வா.” என்று இழுத்துச் சென்றான்.

அடுத்ததாகத் தன்னை அழைக்க ஜோஷித் வந்து விடுவான் என்பது புரிந்திட, அவனுக்கு வேலை வைக்காமல் விஹானாவே ஜோஷித்தின் அறை வாசலுக்கு சென்று விட்டாள்.

அவனும் அந்நேரம் ஜெர்கினை மாட்டிக்கொண்டு வெளியில் வந்து, “ம்ம்… பி. ஏ எக்ஸ்பீரியன்ஸ்ன்னா சும்மாவா? குட்.” என இகழ்ச்சியுடன் குட்டினான்.

மூன்று ஜோடிகளும் கிராமத்தை வலம் வர, உத்ஷவிக்குத் தான் ஒன்றும் புரியவில்லை.

“இப்ப எதுக்கு நம்ம நைட்டு வாட்ச்மேன் மாதிரி ரோந்து போயிட்டு இருக்கோம் டைனோசர்?” எனக் கேட்டு கொட்டாவி விட,

“உனக்கு ஏதாவது வித்தியாசமா தெரிஞ்சா சொல்லு.” என்று விட்டு கூர்பார்வையால் வழி நெடுக அலசினான்.

“எனக்கு இந்த இடமே வித்தியாசமா தான் இருக்கு. இதுல எதை சொல்ல சொல்ற?” என்றவள், நீ என்னை வேலை வாங்கணும்ன்னு நினைச்சா, அக்ஷிக்கு பிக்பாக்கெட் டாஸ்க் குடுத்த மாதிரி, எனக்கு வீட்டுக்குள்ள புகுந்து திருடுற டாஸ்க் குடு டைனோசர். சும்மா வெறும் கிராமத்தை வேவு பாக்குறதுலாம் செம்ம போரா இருக்கு.” என்றாள் சலிப்பாக.

“உனக்கு என்னைப் பார்த்தா திருட்டுத் தொழிலோட பாஸ் மாதிரியா இருக்கு?” எனக் கேட்டு முறைக்க,

அவளோ அவனைத் தான் ஆராய்ந்தாள். சில மணி நேரங்களாக ஏற்பட்ட அதிர்ச்சியின் தாக்கத்தின் விளைவில் அவனை சைட் அடிக்கும் பணியைத் தற்காலிகமாக ஒத்திப்போட்டிருந்தவள், இப்போது மீண்டும் அதனைக் கையில் எடுத்தாள்.

திரு திருடா…
உன் கண்கள் என்ன
கூர்வாளா?

திரு கொலைகாரா…
உன் கோபம் என்ன
கோரப்புயலா…

ஸ்வரூப்பை இமைக்க மறந்து அவள் பார்த்திருக்க, அவள் பார்வையை உணர்ந்து திரும்பியவன், ‘என்ன?’ எனக் கேட்டான் விழியசைவில்.
அந்நேரம், ஜோஷித் கத்தும் சத்தம் கேட்க, புயல் வேகத்தில் சத்தம் வந்த திசையை நோக்கிச் சென்றான்.

—-

போன் டார்ச்சின் உதவியுடன் சுற்றும் முற்றும் பார்த்தபடி நடந்த சஜித்துடன், தன் விதியை நொந்தபடி நடந்தாள் அக்ஷிதா.

திடீரென, “காட்ஸில்லா… உனக்கு டைம் மெஷின் கிடைச்சா நீ என்ன பண்ணுவ?” எனக் கேள்வி கேட்க,

அதில் கவனத்தை சிதற விடாமல், “பிரேக் டவுன் ஆன என் காரை சரி பண்ணி, அதுலேயே ஆபிஸ் போயிருப்பேன். பஸ்ல வந்து உன் முகத்துல முழிக்காம இருந்துருக்கலாம்ல” என்றான் கேலிக்குரலில்.

“ம்ம்க்கும், நான் மட்டும் என்னவாம். உன் வீட்டுக்கு திருட வந்த நாளை ஆசிட் ஊத்தி அழிச்சுருப்பேன்.” என நொடித்துக் கொண்டாள்.

“இனி நடந்ததை மாத்த முடியாதே கேடி. பெட்டர், நாங்களா மனசு இறங்கி விடுற வரை, எங்க கூடவே குப்பை கொட்டு.” என்றவனை மூச்சிரைக்கப் பார்த்தவள், “இப்ப எங்க தான் போயிட்டு இருக்கோம்” என்றாள் பொறுமை இழந்து.

“யாருக்குத் தெரியும். கால் போன போக்குல தான் நானே போயிட்டு இருக்கேன்” எனப் பதிலளித்திட, ‘சுத்தம்’ எனத் தலையில் கை வைத்தாள்.

பின் சில நிமிட அமைதிக்குப் பிறகு, “ஊர்ல வேற நல்ல வேலையே கிடைக்கலையா? திருடுறது எவ்ளோ பெரிய குற்றம் தெரியுமா. பேசுறதெல்லாம் பார்த்தா படிச்சப் பொண்ணு மாதிரி தான் இருக்கு. என்ன படிச்சுருக்க?” எனக் கேட்டு அவளை பற்றிய தகவல்களைத் திரட்ட எத்தனித்தான்.

“க்கும்… உங்க தாத்தா தான் டேபிள் போட்டு கூவி கூவி வேலையை வித்துட்டு இருக்காராக்கும்.” என்று அவனை வாரி, அவனது கோபத்தை அதிகப்படுத்திட, அந்நேரம் ஜோஷித் கத்தும் சத்தம் கேட்டு அங்கு விரைந்தனர்.

—-

சிறிது நேரத்திற்கு முன்பு, நடைப்பயணத்தை மேற்கொண்ட ஜோஷித்தும் விஹானாவும் அமைதியுடன் வந்தனர்.

எதையாவது பேசினால், தன்னை குத்திக் காண்பித்தே மடக்குகிறான் என்று விஹானா வாயைத் திறக்காமல் நடந்தாள்.

மறதியாக, எடுத்து வைத்த ஸ்வெட்டரை அணிந்து கொள்ளாமல் வந்திருக்க, நேரம் செல்ல செல்ல குளிர் ஊசியாகக் குத்தியது.

அவள் குறுகி நடுங்கி நடப்பதை திரும்பிப் பார்த்த ஜோஷித், “ஸ்வெட்டர் போடாம ஏன் வந்த?” என்றான் அப்போது தான் கவனித்து.

“மறந்துட்டேன்.” என முணுமுணுத்ததில், என்ன நினைத்தானோ தனது ஜெர்கினை கழற்றி அவளிடம் கொடுத்தான்.

மறுக்கும் நிலையில் எல்லாம் அவள் இல்லை. “நல்லவேளை நீ போட்டுட்டு வந்த ஜெர்கின்னால நான் ஃப்ரீஸ் ஆகல.” என வேகமாக அதனை வாங்கி அணிந்து கொண்டவளை, நோட்டமிட்டபடி வந்தவனை நோக்கி கத்தி ஒன்று வீசப்பட்டது.

அது சரியாக அவனது தோள்பட்டையை பதம் பார்த்திருக்க, “ஆ…” என வலியில் அலறினான்.

விஹானாவும் திகைத்து நின்றவள், என்ன எதிர்வினையாற்றுவது என்று கூட புரியாமல் படபடக்க, சரியாக மற்ற இருவரும் வந்து விட்டனர்.

ஜோஷித்தின் காயத்தைக் கண்டு, இரு ஆடவர்களும் அதிர்ந்து பதறிட, ஸ்வரூப் தனது லேசர் விழிகளால் சுற்றும் முற்றும் ஆராய்ந்தான். “சஜி… அந்தப் பக்கம் இருந்து தான் கத்தி வந்துருக்கணும். பாரு.” என்று எதிர்திசையைக் கை காட்ட, சஜித்தும் வேகமாக அத்திசையை நோக்கி ஓடினான்.

வலியில் முகத்தைச் சுருக்கிக் கொண்ட ஜோஷித், அவனைத் தூக்க வந்த ஸ்வரூப்பின் கையைத் தட்டி விட்டான்.

“செத்தாலும் சாகுறேன். நீ ஹெல்ப் பண்ண தேவை இல்லை.” என்று விஷமாகக் கொட்ட, கரத்தை இறுக்கி மூடி எழுந்த வேதனையை அடக்கிக் கொணட ஸ்வரூப்,

“அடம்பிடிக்காத ஜோ. லெட் மீ டூ” என அவன் அருகில் வர, “வராதன்னு சொல்றேன்ல…” என்று கத்தியவன், அந்த சிறிய அளவிலான கத்தியை தோள்பட்டையில் இருந்து அவனே பிடுங்கினான்.

இரத்தம் வேறு கொட்டிட, அதனைக் காண சகிக்கவில்லை ஸ்வரூப்பிற்கு.

மீண்டும் அவனருகில் நெருங்குகையில், அடிபடாத கையால் ஸ்வரூப்பைத் தள்ளி விட்ட ஜோஷித்தை பொறுமை இழந்து பளாரென அறைந்தவன், அவனைத் தூக்கி விட்டு, குடிலுக்கு அழைத்துச் சென்று, ஜோஷித்தை கட்டிலில் சாய்வாக அமர வைத்தான்.

இருவரின் முகமும் இறுகிப் போய் இருக்க, தனது அழுத்த விழிகள் லேசாய் கலங்கியதில் கண்ணை சிமிட்டிக் கொண்ட ஸ்வரூப் அவ்தேஷ், முதலுதவிப் பெட்டியை எடுத்து மருந்து போட விழைந்தான்.

ஜோஷித் வலியில் கத்திட, சகோதரனின் குருதி ஸ்வரூப்பை வெகுவாய் தாக்கியது.

அதுவே அவனை வெறிப்பிடிக்கவும் வைத்தது. பெண்கள் மூவரும், ‘என்னடா கத்தியை எல்லாம் பறக்க விடுறீங்க’ என்ற ரீதியில் விழித்துக் கொண்டு நிற்க, உத்ஷவி தான், ஸ்வரூப்பின் முக பாவங்களை எல்லாம் கண்ணை விரித்துப் பார்த்தாள்.

‘சில நேரம் மூஞ்சில உணர்வே காட்டாத மாதிரி வச்சுக்குறான். சில நேரம், எல்லா உணர்வையும் ஒரே நேரத்துல காட்டுறான்… ப்பா…’ என்று தனக்குள் எண்ணிக்கொண்டவளுக்கு, எப்போதுமே அவன் ஒரு புரியாத புதிர் தான்.

பின் என்ன நினைத்தாளோ, கைகள் லேசாய் நடுங்க தம்பியின் காயத்திற்கு மருந்திட்டுக் கொண்டிருந்தவனைத் தடுத்து, கையை நீட்டியவள், “குடு. நான் பர்ஸ்ட் எய்ட் பண்றேன்.” என்றாள்.

ஸ்வரூப் அவளைப் புரியாமல் பார்க்க, அவளோ ஜோஷித்தின் காயத்தை ஆராய்ந்து, “இந்த மருந்து அவ்ளோ எஃபக்ட்டா இருக்காது.” என்றபடி முதலுதவிப் பெட்டியில் எதையோ தேடியவள், வேறொரு மருந்தை எடுத்து,

“காயம் கொஞ்சம் ஆழம் தான். நல்லா க்ளீன் பண்ணலைன்னா செப்டிக் ஆகிடும். குடு.” என்று அவனிடம் இருந்து பஞ்சை வாங்கிட, ஸ்வரூப் அவளை யோசனையுடன் பார்த்தபடி நகர்ந்தான்.

ஜோஷித்தோ, “ம்மா… உன் கை வரிசைய நீ திருடியே காட்டு. என்கிட்ட காட்டாத” என லேசாய் திகைக்க,

அவனை முறைத்தவள், “வாயை மூடிக்கிட்டு படு. இல்லன்னா, நானே காயத்தை நோண்டி விட்டு பெருசாக்கி விட்டுடுவேன்.” என. மிரட்டிட,
விதியை நொந்து படுத்து விட்டவனிடம், “கையை ஆட்டாத.” என்று சிரத்தையுடன் மருந்திட்டு, நேர்த்தியாய் கட்டிட்டும் முடித்தாள்.

பின், மாத்திரை ஒன்றை எடுத்தவள், “இதை போடு வலி குறையும்.” என்று ஜோஷித்திடம் கொடுத்து விட்டு, “வேற பெயின்கில்லர் இல்லையா? இது சும்மா சின்ன காயத்துக்கு தான் தாங்கும். வேற பெயின்கில்லர் சொல்றேன். அதை காலைல வாங்க சொல்லிடு.” என்று ஸ்வரூப்பிடம் கூற, அவனோ அவளை விட்டு கண்களை அகற்றினானில்லை.

முதலும் முடிவும் நீ…!
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
84
+1
3
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  3 Comments

  1. Indhu Mathy

   கொலையை பார்த்து பதறிட்டு அதே இடத்துல அசால்ட்டா full கட்டு கட்டுறதெல்லாம் அக்ஷிதாவால தான் முடியும்… 😂😂😂

   ஷவி விட்டா ஸ்வரூப்பை சைட் அடிக்கிறதையே ஃபுல் டைம் டியூட்டியா பார்ப்பா போல… 😝😝😝😝😝 கவிதை 🤩🤩🤩
   இவ நர்ஸா.. 🤔