Loading

நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தது. செவ்வாயில் எந்த மாற்றமும் நிகழவில்லை. கணியும் மதுபல்லவியும் ஒன்றாக அமர்ந்திருந்தனர். ஏரிக்கரையும் இல்லை. ஏகாந்தமும் இல்லை. எங்கும் செம்மண். இரும்பு சத்து நிறைந்த மண்.

புயலுக்கு முன் இருந்த உற்சாகம் ஏனோ இப்பொழுதெல்லாம் இல்லை. ஒவ்வொரு நிமிடமும் பயமாக இருந்தது. மீண்டும் செடிகள் வளர்க்க, பெரும் ஆயத்தங்கள் செய்தனர். முன்பு போல் மதுபல்லவி செடியின் அருகில் அமர்ந்திருந்தாள். அவளின் அருகில் கணி அமர்ந்திருந்தான்.

பூமியில் ஆங்காங்கே புரட்சிகள் வெடித்தது‌. உண்மையில் அதற்கு ஒரு செய்திதான் காரணம். செவ்வாய் செல்ல வேண்டுமானால் விவசாயம் படிக்க வேண்டும். மென்பொருள் துறை, மருத்துவ துறையின் மோகம் முடிந்தது. இனி விவசாயத்தின் காலம். இனி விவசாயம் ஒரு தகுதியாக இருந்தால் மட்டுமே செவ்வாய்க்கு செல்ல முடியும் என்று ஊடகங்கள் செய்திகள் பரப்பிட, பூமியில் அனைவரும் என்ன செய்வதென்று குழம்பிப் போய் இருந்தனர். மருத்துவ கல்லூரிகளும் பொறியியல் கல்லூரிகளும் பீதியில் இருந்தது. அவர்கள் அனைவரும் ஒரு பக்கம் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளப் போராடினர். ஒரே குழப்பம். ஒருவேளை சென்னியின் பண்டம் மாற்றும் திட்டம் செவ்வாயில் அமலுக்கு வந்தால், செவ்வாயேனும் மனிதனிடம் இருந்து தப்பும். ஏனெனில் பணம் என்ற ஒன்று வந்தபின் தான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற திமிர் மனிதனுக்கு வந்திருக்கக் கூடும். நான் ஒரு கிலோ காய் தந்தால், நீ இரண்டு கிலோ அரிசி கொடு என்று இருந்தால் எவ்வளவு சேர்த்து வைக்க முடியும். ஆசை‌ மனிதனை விட்டு ஒழியும். இது பெரும் பின்னடைவாக இருக்கலாம். ஆனால் இந்த உலகை நாம் அழித்ததற்கு முதல் காரணம் இந்த பணம்தான்.

“பல்லவி.. என்ன ஆச்சு? ஏன் அந்த செடியையே பார்த்துட்டு இருக்க?” கணி.

“கணி.. இந்த செடியைப் பாருங்க. விதை விதைச்சு எத்தனை நாளாச்சு தெரியுமா? இன்னும் வளராம இருக்கு..” என்று சலித்துக் கொண்டாள்.

“இது என்ன பூமியா? விதைச்சோன செழிச்சு வளர.. இங்க நாம பொறுமையாதான் இருக்கணும்.”

“பயமா இருக்கு கணி..”

“ஏன் என்ன ஆச்சு?”

“இந்த மாதிரி பூமியும் மாறிடுமோன்னு..”

“மாறாம இருக்கணும்னா நாமதான் முழிச்சுக்கணும்” என்ற அதி அவர்களின் அருகில் வந்தான். அவனுடன் கீர்த்தியும் வந்தான்.

“சார்… நனி சொன்னது ஞாபகம் இல்லையா? இந்த முறை போராடப் போறது மனித இனம்னு தெளிவா சொன்னாளே.. அவ சொன்ன மாதிரிலாம் நடக்குது..” கீர்த்தி.

“யாரு அவ..? ஏன் அப்படி சொன்னா?” பல்லவி..

“உனக்கு சொன்னா புரியாது.. விடு..” கணி.

“இல்ல.. எனக்கு யாருன்னு தெரியணும்.. பெண் குழந்தை பிறந்தா நனியிதழ்ன்னு பேர் வைக்கணும்னு சொன்னீங்க. என்னைவிட முக்கியமான அந்த நனி யாரு?” பல்லவி.

“அட.. உரிமைப் போராட்டமா?” அதி.

“அப்படித்தான் வச்சுக்கோங்க..”

“சொன்னா நம்ப மாட்டீங்க.”

“நீங்க சொல்லுங்க.. நம்புறதா வேண்டாமான்னு நான் முடிவு செஞ்சுக்கிறேன்.”

“அதி.. பேசாம இரு.. வேண்டாம் பல்லவி விடு.. அது தெரிஞ்சா உன் மனசு கஷ்டப்படும். நானே ஒருநாள் உனக்கு சொல்றேன்” கணி.

“அதெல்லாம் முடியாது. எனக்கு இப்போவே தெரிஞ்சாகணும்.”

“அடம் பிடிக்காத பல்லவி..”

“உங்ககிட்ட பேச்சு இல்லை. நீங்க சொல்ல வேண்டாம். அதி நீங்க சொல்லுங்க..”

கணியை‌ சிந்தனையுடன் பார்த்தான் அதி. என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என்று அவன் திரும்பிக் கொண்டான்.

“மது மேடம்.. அது நீங்க நினைக்கிற அளவுக்கு தப்பா ஒண்ணும் கிடையாது.. விடுங்களேன்..” கீர்த்தி.

“அதி.. இப்போ சொல்லப் போறீங்களா இல்லையா?” என்றாள் அவள் பிடிவாதமாக.

“செம்பியன் சார் கேஸை முடிக்க ஒரு நபர் ரொம்பவே உதவியா இருந்தாங்க.. அவுங்க பேருதான் நனியிதழ்..”

“அப்படியா.. உங்க கூட போதினி, வெண்ணிலா தானே இருந்தாங்க. இது யாரு புதுசா.. அவளும் பாதிக்கப்பட்ட பொண்ணா?” என்றாள் சிந்தனையுடன்.

அதி திடுக்கிட்டு அவளைப் பார்த்தான்.

“ஆமா பல்லவி.. அவளும் பாதிக்கப்பட்ட பொண்ணு. போராட்டத்தோட ஆரம்பமே அவதான்” என்றான் கணி.

“ஓ.. ” என்றதுடன் சரி. அவள் எதுவும் பேசவில்லை. அவளுக்கு செம்பியன் நினைவு வந்துவிட்டது. அவள் வருந்துவாள் என்று அறிந்தே இந்த விஷயத்தைத் தவிர்த்துவிடுவான் கணி.

சற்று நேரத்தில் அனைவரும் அங்கு வந்தனர். அனைவரின் முகத்திலும் சோகம் இழையோடியது.

தணிகை கூட சற்று மிரட்சியுடன் இருக்க, மது பல்லவி என்னவென்று அவனை வினவினாள்.

“அக்கா.. சாப்பாடு இன்னும் கொஞ்ச நாளைக்கு தான் இருக்காம். காப்பியன் சார் சொன்னாரு” தணிகை.

“இங்க மட்டும் இன்னும் மூணு மாசத்தில் நமக்கு தேவையானதை நாம விளைய வைக்கலைனா இந்த செவ்வாய் திட்டமே பெய்லியராம்” ஆரெழில்.

“அப்போ‌ பூமியும் மாறாது. செவ்வாயும் மாறாது. விவசாயம் முன்னுரிமை பெரும்னு பேசுனதல்லாம் வெறும் பேச்சாவே போயிடும்ல..” நேரெழில்.

“மலையைக் கூட பிரிட்டிடலாம் போல. இந்த விதையை முளைக்க வைக்க முடியல” சித்திரன்.

“நான் ஒரு அனாதை. திருடன். இப்படி எதுக்காவும் கவலைப் பட்டதே இல்லை. ஆனா நான் திருடி சாப்பிடுற சாப்பாட்டுக்கு பின் இவ்வளவு உழைப்பு இருக்கும்னு தெரியாது அக்கா. ரொம்பவே வருத்தமா இருக்கு” வேதன்.

கணி இவர்கள் அனைவரையும் விசித்திரமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
இங்கிருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையைச் சார்ந்தவர்கள். திருநல்லன் மட்டுமே விவசாயம் அறிந்தவர். அப்படி இருக்கையில் ஒவ்வொருவரும் ஒரு விதையை நினைத்து ஏங்குகின்றனர் என்றால், இது இயற்கையின் வெற்றியல்லவா. ஒருவேளை இந்த உணர்ச்சிதான் நனியிதழ் எதிர்பார்த்தாளோ. அனைவரின் விழிகளிலும் கலக்கமெனும் வெள்ளம் வழிந்தது.

திருநல்லன் அமைதியாவே இருந்தார். மது பல்லவி அவரைப் பற்றி நன்றாகவே அறிவாள். அவரின் மனதில் எரிமலை ஒன்று வெடித்துக் கொண்டிருக்கிறது என்று புரிந்து கொண்டாள்.

“அப்பா.. ஏன் இப்படி அமைதியா இருக்கீங்க?” பல்லவி.

அவரின் விழிகளில் இருந்து ஒரு துளி நீர் கீழே விழுந்தது. அவரின் கலங்கிய விழிகள் கண்டு அனைவரும் கலங்கினர்.

“எனக்கு இருந்த திமிர இந்த கிரகம் அடக்கிருச்சு மா.. தரிசு நிலம் கொடுத்தாலே அதை செழிப்பாக்குவேன்னு மார் தட்டி சொல்லிருக்கேன். ஆனா இப்போ அதெல்லாம் முடியாதுன்னு ஒரு பெரிய மரண அடி எனக்கு. உங்களுக்கு எல்லாம் ஒண்ணு தெரியுமா.. எங்க ஊர்ல சொல்லுவாங்க. என்னோட கைப்பட்டா ஒரு நெல்லு விளைய வேண்டிய இடத்தில் நூறு நெல்லு விளையுமா. இதெல்லாம் கேட்டு பூரிச்சுப் போயிருக்கேன். ஆனா நிதர்சனம் இப்போத்தான் புரியிது. இயற்கை மனசு வைக்காம இதெல்லாம் நடக்காதுன்னு இப்போதான் புரியிது” என்றார் மிகவும் வருத்தத்துடன்.

அனைவரையும் உள்ளே அழைத்தான் காப்பியன். உணவு தயாராகியிருந்தது. ஒரு துளி உணவு கூட வீண் செய்வதில்லை. இது அங்குள்ள சட்டம். அனைவரும் சென்றனர். கணி, கீர்த்தி மற்றும் அதி மட்டும் அங்கிருந்தனர். அவர்களுக்கு சற்று தணித்து உரையாட வேண்டியிருந்தது. நனியிதழ் பற்றித்தான்.

“சார்.. நனியிதழ் கொஞ்சம் மனசு இறங்கலாமே. ஏன் இவ்வளோ கல் நெஞ்சா மாறிட்டா” அதி.

“மண்ணுல இருக்க ஈரம் கொஞ்சமாவது மனிஷனுக்கு இருக்கா அதி. இது இயற்கைக்கும் மனதினுக்குமான போராட்டம். இதுல பாதிக்கப்படப் போறது என் இனமா இருந்தாலும், எதிர்வாதிக்கு குறைந்த ஞாயமாவது கிடைக்கணும்” என்றான் உணர்ச்சி மிகுதியில் கணி.

“சார்.. அங்க பாருங்க” என்று இருவரின் கவனத்தையும் திருப்பினான் கீர்த்தி.

சிறிது தூரத்தில் பச்சை வர்ண ஆடையில் ஒரு பெண் நடந்து செல்வது தெரிந்தது. அவள் பாதம் தொட்ட இடத்தில் ஒரு விதை முளைத்திருந்தது. மூவரும் அந்த இடத்திற்கு விரைந்தனர்.

அங்கு யாரும் இல்லை. ஆனால் செடி மட்டும் இருந்தது‌.

“சார்.. அப்போ நம்ம கஷ்டமெல்லாம் தீர்ந்து போச்சா? நனியிதழ் இங்க வந்துட்டாளா?” கீர்த்தி.

“நனி.. நனி.. ” என்று கத்தினான் அதி.

ஒரு பயனும் இல்லை.

“உன்னை ஒரே ஒரு தடவை மட்டும் பார்க்கணும்” என்று கத்தினான் கணி.

ஒரு தென்றல் அவர்களைக் கடந்து சென்றது. கண்களை மூடி அதை ஸ்பரிசித்த அனைவரும் அவளை உணர்ந்தனர்.

“என்னைப் பார்க்கும் பொழுது மட்டுமே இயற்கையின் மீதான பற்று வெளிபடுகிறது. எப்பொழுதும் தன்னுடனே இருக்கும் காற்றை யாரும் உணர்வதில்லை. காற்று புக முடியாத அறைக்குள் அடைத்து வைத்த பின்னே காற்றின் உன்னதம் உணர்வது விதியாக இருக்கிறது” என்ற அசரீரி ஒலித்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவளின் தோற்றம் அவர்களின் விழிகளுக்குப் புலப்பட்டது.

அதே தோரணை. அதே பார்வை. அதே நடை. அதே பாவனை. அவள் மாறவில்லை. அப்படியே இருந்தாள். பூமியில் அவளை சுற்றியிருந்த பச்சை ஆபரணங்கள் மட்டும் இங்கு இல்லை. அவள் தோன்றியதும், அந்த இடத்திற்கே புதுப் பொலிவு வந்ததுபோல் தோன்றியது அவர்களுக்கு.

“திரும்பவும் உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி. நீ இங்க இவ்வளோ சீக்கிரம் வரமாட்டன்னு நினைச்சேன்” என்று கணி கூற, மெல்லிய நகைப்பொன்றை உதிர்த்தாள் அவள்.

“பல சமயங்களில் மனித இனம் தான் இயற்கையின் அங்கம் என்பதை மறந்துவிடுகிறது. இயற்கையை வென்ற ஒரு பிறப்பாக, உங்களை நீங்களே போற்றிக் கொள்வதில் பலன் இல்லை. பெற்ற அன்னையாய்‌ தலையில் கொட்டுக்கள் வைத்திடுவேன். ஆனால் அரக்கத்தனமாய், உன் அழிவினைப் பார்த்திட மாட்டேன்” நனி.

அவர்கள் மூவரும் அவளை விசித்திரமாக பார்த்துக் கொண்டிருந்தனர். இப்பொழுது சாந்தமாக விளங்குகிறாள். இவளின் அடுத்த போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதோ என்ற கேள்வி அவர்களின் புருவ மத்தியில் தோன்றியிருந்தது.

“உங்கள் மனதின் வினாக்களுக்கு விரைவில் விடை கிடைத்திடும். இங்குச் செடிகள் வளர்வதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை என்பது மனிதனின் கண்டுபிடிப்பு. ஆனால் அக்கினி பழத்தை அரைத்துப் பூசியிருந்தாலும், என் சுவாசம் நுழைய நான் மனது வைத்தால் முடியும். என் கட்டுப்பாடுகளும் தளர்வுகளும் இனியும் தொடரும். பூமியில் மட்டுமல்ல. அண்டத்தின் மூளை முடுக்கெல்லாம். அதில் இந்த ஆரல் மட்டும் விதிவிலக்கல்ல. எம்மைப் புரிந்து கொள்ளவும், அறிந்து கொள்ளவும் மனிதன் பல நூறு பிறவிகள் எடுத்தாலும் சரி. பிறவிகள் தோறும் ஆராய்ச்சிகள் மேற்கொண்டாலும் சரி…”

“புரிந்து கொள்ள முடியாதா?” கணி.

“இல்லை.. நீ ஒரு முடிச்சு அவிழ்த்தால் பல முடிச்சுகள் இடுவேன். என்றுமே எம்மை முழுமையாக அறிந்த பிறவியாக நீ இருத்தல் முடியாது. ஒவ்வொரு உயிருக்கும் எல்லைகள் வகுத்திருக்கிறேன்.  அதைத் தாண்ட முற்பட்டால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்.”

“இப்போ மனிதன் செவ்வாய்க்கு வந்தது அந்த எல்லையில் இருக்கா?” கீர்த்தி.

“மனிதன் செவ்வாய்க்கு வருவதில் எல்லைகள் வகுக்கவில்லை. செவ்வாய் என்றொரு கிரகம் இருந்தது. அதில் மனிதன் குடியேறினான். அது வாழத் தகுதியற்ற நிலப்பரப்பாக மாறியது என்ற வரலாறு எழுதப்படாமல் இருப்பதே மனித இனத்தின் எல்லை. இப்பொழுது உங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த பரிட்சையில் வெற்றி அடைவதும் தோல்வி அடைவதும் இனி உங்கள்‌ கையில் இருக்கிறது. என்னைக் கூண்டிற்குள் அடைத்தாலும் சரி. உறைபனியில் உறைய வைத்தாலும் சரி. நான் மனது வைத்திட வேண்டும்.”

“நீ ஒரு அதிசயம் நனி..”

“அதை உங்கள் இனம் உணர்ந்து கொண்டால் நன்று. உலக உயிர்கள் உன்னதம் அடையட்டும். ஆரலில் எனக்கான வேலைகள் கொட்டிக் கிடக்கிறது. வருகிறேன்” என்று எழுந்து சென்றாள்.

அவள் நான்கடி எடுத்து வைத்திருக்கக் கூடும். பின் மறைந்துவிட்டாள். அவள் பாதம் தரையில் பட்ட இடத்தில் மீண்டும் செடியொன்று முளைத்திருந்தது.

இவர்களைக் காணாமல் தேடி வந்த பல்லவி, அங்கு சிறு செடி முளைத்திருப்பதைப் பார்த்து திடுக்கிட்டாள்.

“கணி.. இது எப்படி சாத்தியம்.. கூண்டுக்குள் நாம் கஷ்டப்பட்டு வளர்க்க நினைச்சோம். வளரல. ஆனா இங்க எப்படி.”

“நீ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கேட்டியே.. நனியிதழ் யாருன்னு. இதுதான் நனியிதழ்” என்று அந்த செடியைக் காட்டினான்.

“ஐயோ..‌திரும்பவும் குழப்பாதீங்க. நான் போய் எல்லாரையும் கூட்டிட்டு வர்றேன்” என்று அவசரமாக உள்ளே சென்றாள்.

அதைப் பார்த்த அனைவரும் ஆனந்தத்தில் மிதந்தனர். செவ்வாய்க்கு விண்கலம் செலுத்தியதில் பெருமை கொண்டிருந்த காப்பியன் விக்கித்து நின்றிருந்தான். இதுவரை பயணம் செய்து வந்ததில், இங்கு வாழ்வாதாரம் தேடியதில் என்று இவனின் ஆராய்ச்சிகள் அனைத்தும் தோற்றுப் போனது அந்த ஒற்றை விதையின் முன். திருநல்லன் இப்பொழுது ஆனந்தத்தில் அழுதார்.

“அப்பா… பாருங்க. உங்க கண்ணீரோட மதிப்பை” மதுபல்லவி.

சிறிது நேரத்தில் பூமியில் இருந்து செய்தி வந்தது. இனி விளைநிலங்கள் அனைத்திலும் விவசாயம் மட்டுமே செய்ய வேண்டும் என்றும், அதை வேறு காரியங்களுக்கு பயன்படுத்திடக் கூடாது என்று சட்டம் அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி காடுகள் வளர்ப்பதும், விவசாயமும் மொழிப் பாடம் போல் அனைத்து பிரிவுகளிலும் பயிற்றுவிக்கப்படும் என்றும் செய்தி வெளியானது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சில விளைநிலங்கள் இருக்க வேண்டும் என்றும் அறிவிப்புகள் வெளியாகியிருந்தது. இப்பொழுது ஃப்ளாட் போட்டு வீடுகட்ட அனுமதியளித்த அரசாங்கம், விவசாய நிலங்களுக்கு ஃப்ளாட் போட்டது. ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் அனைத்தும் பின்வாங்க உத்தரவிடப்பட்டது.

இதைக் கேட்டதும் கணி, அதி மற்றும் கீர்த்தி மூவருக்கும், நனி சற்று முன் கூறியது விளங்கியது.

கணிணி யுகம் போதும். இனி விவசாய யுகம் வரட்டும். உயிர் உருவானது பூமியில் என்ற கோட்பாடில் மெய்யிருப்பின், பூமியைக் காக்கும் பொறுப்பு நம்மிடம் கொட்டிக் கிடக்கிறது. நாம் எதற்காக பிறந்தோம் என்ற வினாவிற்கு நம்மிடம் பல பரிமாணங்களில் விடை இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் பொதுவான பதிலாக, பூமியைக் காக்க வேண்டும் என்ற தாரக மந்திரம் இருக்கட்டும்.

இந்த கதையை எழுதும் நான் கூட‌, ஒரு விவசாய நிலத்தில் கட்டப்பட்ட வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஆனால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இயற்கையின் அங்கங்களை சுரண்டியே நாம் வாழ்கிறோம். இப்படி ஏதேனும் புரட்சிகள் பின்னொரு காலத்தில் வெடிக்க வேண்டும் என்று மனதில் சூல் கொள்ள மட்டுமே முடிகிறது. பூமியில் நிகழும் அனைத்தையும் பார்த்தும் கடந்தும் செல்லும் மிக சாமானியையாகிய நான்….

இன்னும் கொஞ்சம் திமிர் கொள்ளலாம் தமிழனென்று பிழையில்லை! – இதுதான் நான். தமிழனாய் பிறந்ததில் துளியும் என் பங்குயில்லை, எனினும் எனக்குள் நானே பெருமிதம் கொள்ளும் மீப்பெரு விடயம் உண்டென்றால் அது இதுதான்.

ஒவ்வொருவருக்குள்ளும் விடை தெரியா பல வினாக்கள் வலம் வரும். அப்படி விடை தெரியாமல், என் மனச்சுவரை அரித்தெடுக்கும் பல வினாக்களின் விடையே இந்த கதை.
சமூகத்தில் நடக்கும் பிழைகளை கண்டும் காணாமல் கடந்து செல்லும் சாமானியையான மென்பொருள் பணியாளர் நான். அதையெல்லாம் கொட்டித் தீர்த்து, என் மனப்புழுக்கம் தளர்த்த நினைக்கிறேன். அதில் உதித்த முத்துதான் அற்றைத் திங்களில் மற்றும் நனியிதழ் கதாபாத்திரம். அதன் நீட்சியாய் இந்த கதையும். உயிரித் தொழில்நுட்பம் பயின்றதால், விஞ்ஞானம் பிடித்த ஒன்று. ஆனால் அதன் பாதகங்களையும், இயற்கையின் மீதான அதன் தாக்கத்தையும் கொஞ்சம்  எழுதியிருக்கிறேன். என்னுடன் மனச்சவாரி செய்திட்ட அனைத்து உள்ளங்களுக்கும் நனி நன்றி..

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். உள் பெட்டியில் நிறைய வாழ்த்துக்கள். தனித்தனியாக பதிலளிக்க முடியவில்லை. மன்னிக்கவும்.

                மீனாட்சி அடைக்கப்பன்

முற்றும்…

உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்