Loading

 

திடீரென தூயவன் கொடுத்துவிட்டு போன அதிர்ச்சியில் இருந்து மீளாமல் பெண்ணவள் சிலையென நிற்க அவனோ சற்று முன் நடந்ததற்கும் தனக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லையென்றபடி வெளியில் சென்றுவிட ஆதினிக்கே குழப்பமாக தான் இருந்தது. 

‘இப்போ நடந்தது நிஜமாவே உண்மைதானா இல்ல நம்ம கற்பனையா.. ஒருவேளை பிரம்மையா.. அப்படி தான் இருக்குமோ.. இவன் வாயில இருந்து என்னை பொண்டாட்டின்னு ஒத்துக்குறதெல்லாம் நடக்குற காரியமா.. ஆனாலும் நிஜமா நடந்தமாதிரியே இருக்கே..’ என்று குழம்பியபடி யோசிக்க அவனின் தீண்டலினால் ஏற்பட்ட குறுகுறுப்பு இன்னுமே அவளுக்கு அடங்கியபாடு இல்லை. 

‘கடவுளே என்னை பைத்தியக்காரியா ஆக்கிருவான் போல’ என்று நொந்தவளுக்கு தெரிய வாய்ப்பில்லை.. இதைவிட அவனின் மேல் அவள் ஒருநாள் பைத்தியமாக ஆக தான் போகிறாள் என்று. 

இவ்வாறு யோசனையில் இருந்த ஆதினியைக் கலைத்தது அவளின் அலைபேசி. வேறு யாருமல்ல காதம்பரி தான் அழைத்திருந்தாள். சலிப்பாக அழைப்பை ஏற்று காதில் வைத்தவள் எதுவும் கூறாமல் அமைதியாக இருக்க கதம்பரியோ,

“ஹே ஆது என்னாச்சு டி.. பாட்டிக்கு இப்போ எப்படி இருக்கு.. மண்டைய கிண்டைய போடல தான” 

“வாய கழுவு டி பன்னி.. அதெல்லாம் ஒண்ணுமில்ல.. பாட்டி குணமாயிட்டாங்க” என்க 

“ஹப்பாடா… நான் கூட பயந்தே போய்ட்டேன் ஆது.. எங்க பாட்டி சீரியஸா இருக்க நேரம் பேரன் கல்யாணத்தை பார்த்தா தான் கண்ண மூடுவேன்னு டயலாக் பேசி உன் கழுத்துல தாலி ஏறிடும்னு” என்று ஆருடம் கூறுவது போல கூற ஆதினியோ,

‘இவ என்ன நேர்ல பார்த்த மாதிரி சொல்றா’ என்று நினைத்தவள்,

“அது தான் டி நடந்துச்சு..” என்று சோகமாக எனவும் கதம்பரிக்கோ தூக்கிவாரி போட்டது. 

“என்ன டி சொல்ற.. அப்போ நிஜமாவே கல்யாணம் ஆயிடுச்சா..” 

“ஆமா காது.. ஏன் தான் என் தலையெழுத்தை மட்டும் இந்த ஆண்டவன் இப்படி எழுதி வச்சுருக்கானோ” என்று புலம்ப,

“நீ எதுவும் தடுக்கலயா.. எப்படி டி நீ சம்மதிச்ச.. நீ சம்மதம் இல்லன்னு சொல்ல வேண்டியது தான” 

“அது பெரிய கதை டி.. நான் சொல்றேன் ப்ரீ ஆயிட்டு.. நீ ரெண்டு நாள் லீவ் போட்டுட்டு இங்க வரியா.. நீ வந்தா நான் கொஞ்சம் பெட்டரா ஃபீல் பண்ணுவேன்” என்று கேட்க அவளும் அதற்குமேல் நேரில் கேட்டுக்கொள்ளலாம் என்று நினைத்துவிட்டு,

“சரி டி.. நான் இன்னைக்கே கிளம்புறேன்” என்று அழைப்பைத் துண்டித்தவளுக்கு ஆதினிக்கும் தூயவனுக்கும் தான் திருமணம் நடந்தேறியுள்ளது என்று தெரியாது. மாதவனுக்கும் ஆதினிக்கும் தான் திருமணம் என்று நினைத்துவிட்டாள். 

‘பாவி.. இங்க வச்சு பெருசா காதல் தான் முக்கியம்னு வசனம் பேசிட்டு அங்க பொய் கமுக்கமா தாலிய கட்டிட்டானா.. நேருல போய் நாக்கை புடுங்குற மாதிரி கேட்டா தான் என் மனசு ஆறும்’ என்று நினைத்தவள் இரவு மதுரை செல்ல பேருந்தில் முன்பதிவு செய்தவள் விறுவிறுவென்று தன் பணியை முடிக்கலானாள். 

அப்பொழுது தான் மாதவி அறையை விட்டு வெளியே வர அங்கு யோசனையுடன் நின்றிருந்த ஆதினியை பார்த்து அவளருகில் சென்றாள். 

“ஆதினி” என்று தோள் தொட அவளோ,

“சொல்லுங்க மாதவி” என்றாள். 

“ஏன் இங்கயே நிக்குற.. வா” என்றபடி தூயவனின் அறைக்கு அழைத்து சென்றாள். அவளும் மறுபேச்சு எதுவும் கூற தோன்றாமல் சென்றாள் மாதவியுடன். அறைக்குள் வந்தவளை மாதவன் மற்றும் சமர் இருவரும் வரவேற்றனர். உள்ளே வந்தவள் மலைத்து நின்றாள் அந்த அறையைப் பார்த்து. மூளை முடுக்குகள் கூட பளிச்சென மின்னியது. 

“வாவ்.. அத்தை ரூமை செம க்ளீனா மெயின்டெயின் பண்றாங்க” என்று வாய்பிளந்து கூற மற்ற மூவரும் குபீரென சிரித்தனர். புரியாமல் முழித்த ஆதினியோ,

“ஏன் என்னாச்சு.. எதுக்கு இப்படி சிரிக்குறீங்க” என்க மாதவனோ,

“இந்த ரூமை க்ளீன் பண்ற உரிமை யாருக்குமே கிடையாது.. தூயவன் அந்த விஷயத்துல ரொம்ப ரொம்ப ஸ்ட்ரிக்டு.. அவன் ரூமை அவனைத் தவிர யாரையும் க்ளீன் பண்ண விடமாட்டான்..” என்றான். அதனைக் கேட்ட ஆதினிக்கோ,

‘என்ன இவனுக்கு இம்புட்டு பில்டப் கொடுக்குறாங்க.. ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது.. நல்லாவே வச்சிருக்கான் ரூமை’ என்றபடி சிந்தித்தவளுக்கு அப்பொழுது தான் தானும் இனிமேல் அவனுடன் இங்கு தான் தங்க வேண்டும் என்ற நிதர்சனம் புரிய அவனுடன் தனியே இருக்க வேண்டும் என்று நினைத்த கணம் அவன் தீண்டிய அவளின் இடை குறுகுறுத்தது.

அப்பொழுது அறையின் குளிரூட்டும் பேட்டியின் இயக்கியை எடுக்கவென மாதவி குனிய நிலைதடுமாறியவள் அருகிலிருந்த ஆதினியின் இடையைப் பற்றுதலுக்காக பிடித்து நிற்கிறேன் என்ற பேர்வழி தூயவன் தீண்டிய இடத்தில் பிடித்துவிட,

“அவுச்” என்றபடி துள்ளி குதித்துவிட்டாள் ஆதினி. அதில் பதறிய மாதவியோ,

“ஹே என்னாச்சு ஆதினி.. நான் ஜஸ்ட் சும்மா தான பிடிச்சேன்.. வலிக்குற அளவுக்கு ஒன்னும் பிடிக்கலையே.. ஏன் கத்துன.. ஏற்கனவே அங்க ஏதும் அடிபட்டுருக்கா” என்று கேட்க அவளோ,

‘அட கடவுளே.. இப்படியா கத்தி வைப்போம்.. இப்போ என்ன சொல்லி சமாளிக்குறது.. எல்லாம் அந்த உராங்குட்டானால வந்த வினை’ என மனதினுள் அர்ச்சித்து வெளியில் பதில் கூற தெரியாமல் திண்டாட சரியாக வந்து சேர்ந்தான் அவளின் அர்ச்சனைக்குரியவன். அறையை நெருங்கும் போதே ஆதினியின் அலறல் சத்தம் அவனின் காதில் விழ யோசனையுடன் வந்தவன்,

“என்னாச்சு.. யாரு கத்துனது இப்போ..” என்று கேட்டபடியே தூயவன் உள்ளே வர,

‘அட பாவத்த.. இப்போ யார்ரா இவனை என்ட்ரி கொடுக்க சொன்னது.. மானம் போக போது’ என்று நொந்தவள் தூயவனை முறைக்க மாதவியோ நடந்ததைக் கூறினாள். மாதவி கூறியதையும் ஆதினி தன்னை முறைப்பதையும் ஒப்பிட்டு பார்த்தவனுக்கு அவள் அலறலுக்கான காரணம் புரிந்தது. சமரோ,

“இங்க வரதுக்கு முன்னாடி ஆதினி தூயவன் கூட எக்சர்சைஸ் ரூம்ல நின்னு பேசிட்டு இருக்க மாதிரி சவுண்ட் கேட்டுச்சே.. டேய் மச்சான்.. ஒருவேளை கோவத்துல நீ ஒரு பன்ச் விட்டுட்டியா..” என்று சாதாரணமாக கேட்க அப்பொழுது தண்ணீர் குடித்து கொண்டிருந்த ஆதினிக்கு புரையேறிவிட்டது. அந்த நேரம் அபிராமி ஆதினியை அழைக்க இது தான் சாக்கென்று தப்பித்தோம் பிழைத்தோமென ஓடிவிட்டாள். 

கேசவனும் அபிராமியும் கிளம்புவதாக கூறி விடைபெற தயாராகி நிற்க அதனைக் கண்ட ஆதினிக்கு கண்கள் கலங்கிவிட்டது. வெளியில் காட்டிக்கொள்ளாமல் அமைதியாக வந்து நிற்க கணபதி தூயவனையும் அழைத்தார். அறையில் இருந்த நால்வருமே இறங்கி வந்தனர். ஆதினியிடம் வந்த கேசவனோ,

“பாத்து நடந்துக்கோமா.. எதை பத்தியும் ரொம்ப யோசிக்காத.. எல்லாமே நன்மைக்கு தான் சரியா டா” என்க அவரை அணைத்துக் கொண்டாள் பெண்ணவள். தான் கலங்கினால் அவர்களும் கலங்குவார்களோ என்றெண்ணியவள் வெளிவர துடித்த கண்ணீரை உள்ளிழுத்தபடி நின்றாள். அபிராமியும் அவர் பங்கிற்கு சில அறிவுரை வழங்கினார். தூயவனிடம் வந்த கேசவனோ அவனின் கரத்தை ஆதரவாக பற்றி தலையை மட்டும் அசைத்தார். என்ன நினைத்தானோ அனிச்சையாக அவனது மற்றொரு கரம் அவரின் கரத்தில் அழுத்தம் கொடுக்க அதிலேயே பெண்ணை பெற்றவருக்கு மனது நிறைந்து காணப்பட்டது. 

பெற்றவர்கள் கண்ணைவிட்டு மறைந்ததும் அதற்குமேல் அடக்கமாட்டாது கண்ணீர் சிந்திய ஆதினி விறுவிறுவென அறைக்கு சென்றிட அவளைக் காண அனைவருக்குமே பாவமாக தான் இருந்தது ஒருவனைத் தவிர்த்து. யாருக்கு வந்த விருந்தோவென தூயவனோ வெளியில் செல்ல எத்தனிக்க மீனாட்சி பாட்டியோ,

“டேய் உன் பொண்டாட்டிய சமாதானம் பண்ணி சகஜமாக்கி கூட்டிட்டு வா” என்றிட அவனோ,

“எதேய் நான் சமாதானம் செய்யணுமா.. அதெல்லாம் முடியாது” என்று வீராப்பாய் நின்றான்.

“பின்ன நீ தான தாலி கட்டுன அவ கழுத்துல.. போடா ஒழுங்கா” என்ற பாட்டியின் வார்த்தைகள் அவனது எரிச்சலுக்கு தூபம் போட்டது போன்று இருந்தது.

‘ஏய் கிழவி.. எல்லாம் உன்னால வந்த வினை தான்.. உன்ன கவனிச்சுக்குறேன் இரு’ என்று மனதில் திட்டியபடி பாட்டியை முறைக்க பாட்டியோ,

‘கொஞ்சம் ஓவரா தான் போறோமோ.. போவோம் என்ன பண்ணிட போறான்’ என்ற பாணியில் தெனாவெட்டாக நின்றார். கணபதியோ,

“தூயவா.. இது கட்டாய கல்யாணமே ஆனாலும் அவ நீ கட்டுன பொண்டாட்டி.. கொஞ்சமாச்சு அவ நிலமைல இருந்து யோசிச்சு பாரு.. நாம ஜாதகம் மாத்தி அனுப்பி செஞ்ச தப்புக்கு அவ தண்டனை அனுபவிக்குற மாதிரி ஆகணுமா.. நாம தான் அவளை தங்க தட்டுல வச்சு தாங்கணும்.. போ ஒழுங்கா..” என்று கூற இதற்கு மேல் இங்கு நின்றால் இவர்கள் அறிவுரையைக் கேட்டு காது வெடித்துவிடும்.. இதற்கு ஆதினியுடன் வாக்குவாதத்தில் முட்டிக்கொள்வதே மேல் என நினைத்தானோ என்னவோ அவனின் கால்கள் படியேறின. 

‘ஏதோ இவ பெரிய தியாக செம்மல் மாதிரி தான்.. அவளே ஒரு பிராடு.. இது தெரியாம இவங்க எல்லாரும் அவளை தலைல தூக்கி வச்சுட்டு ஆடுறாங்க.. இந்த லட்சணத்துல நான் அவளை சமாதானம் வேற படுத்தணுமாக்கும்.. எல்லாம் என் கிரகம்..’ என தலையிலடித்தவன் மாடியில் சென்றான்.

‘எங்க போய் தொலைஞ்சா இவ’ என்று நினைத்தபடி தேட அவனது அறையில் இருந்து சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்க்க அவனது குளியறையில் இருந்து வெளியே அவள் வருவதைக் கண்டவனுக்கோ கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது. 

“ஏய்.. யார கேட்டு முதல்ல என்னோட பாத்ரூமை நீ யூஸ் பண்ணுன.. அறிவில்ல” என்று எகிற அதில் கடுப்பானவள்,

“என்ன ரொம்ப ஓவரா பேசுற.. இதெல்லாம் என் கழுத்துல தாலி கட்டுறதுக்கு முன்னாடி யோசிச்சுருக்கணும்.. உங்க வீட்டாளுங்க சொன்னாங்கன்னு தான கட்டுன.. அவங்களே தான் நான் இனிமே உன்னோட ரூம்ல இருக்கணும்னு சொன்னாங்க” என்றவள் சாவகாசமாக அவனது கட்டிலில் படுக்க, பார்க்க பார்க்க தூயவனுக்கு எரிந்தது. 

“ஏய்.. ஏய்.. அது என் பெட்டு.. ஒழுங்கா எழுந்திரு டி..”

“ஓவரா சத்தம் போட்டா.. இப்போ பாட்டி அத்தை மாமா எல்லாரையும் மேல கூப்பிடுவேன்.. எப்படி வசதி” என்று கேட்டபடி தெனாவெட்டாக பார்க்க செய்பதறியாமல் கடுப்பில் தன் காலை தரையில் உதைத்தவன் உட்சபட்ச கோபத்தோடு தோட்டத்தை நோக்கி சென்று அங்கு அமர்ந்து கொண்டான். அவனை கண்ட சமரோ,

“ஹே மாதவி.. அவன் ஏன் இப்படி கடுப்பா போறான்.. வா என்னன்னு கேப்போம்” என்றபடி மாதவி மாதவனுடன் தூயவனைத் தொடர்ந்து தோட்டத்துக்கு சென்றான். மாதவனோ,

“டேய் தூயவா என்னாச்சு..” என்று கேட்க அவனையும் மாதவியையும் முறைத்தவன்,

“எல்லாம் உங்களை சொல்லணும்.. நீயும் இந்த பைத்தியமும் செஞ்சு வச்ச ஒரு காரியத்தால இப்போ நான் தான் அவஸ்தைப்படுறேன்.. என் ரூமுக்குள்ள வந்ததுமில்லாம என் பெட்ல இருந்து பாத்ரூம் வரை எல்லாத்தையும் அவ இஷ்டத்துக்கு யூஸ் பண்ணுறா” என்க மாதவியோ,

“டேய் அவ வேற யாரு ரூமை யூஸ் பண்ண முடியும்.. கொஞ்சமாச்சும் புரிஞ்சு பேசு.. தெரிஞ்சோ தெரியாமையோ இப்போ நீங்க ரெண்டு பெரும் புருஷன் பொண்டாட்டி ஆயிட்டிங்க.. அதுக்கு ஏத்தமாதிரி நடந்துக்கோ சரியா” என்று அறிவுரை வழங்க அவளை தான் தீயாய் முறைதான். சமரோ,

“அவளை ஏன்டா முறைக்குற.. கரெக்ட்டா தான பேசுறா.. இங்க பாரு நீ உங்க அப்பாக்காக தாலி கட்டிருக்க.. அவ அவ அப்பாக்காக கழுத்தை நீட்டிருக்கா.. நிலைமையைப் புரிஞ்சி நிதர்சனத்த அவ ஏத்துக்க ஆரம்பிச்சுட்டா.. நீ தான் இனிமே மாறனும்.. ” என்க தூயவனோ,

“ஐயோ உங்க யாருக்குமே அவளை பத்தி தெரியாது.. அவளை போய் எப்படி என்னோட மனைவியா.. என்னால நெனைக்க கூட பார்க்க முடியல..” என்று தலையில் கை வைத்து அமர பொறுமையிழந்த மாதவனோ,

“உங்க முதல் சந்திப்புல அப்படி என்ன தான் டா நடந்து தொலஞ்சுது.. இப்போவாச்சு சொல்லி தொல” என்று கேட்க தூயவனின் நினைவுகள் அன்றைய நாளை நோக்கி பயணப்பட்டது. 

தொடரும் அதிர்வுகள்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
8
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்