Loading

உதய் சமுத்ராவை அனுமதித்தும் சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட அமராவதியோ ஓரமாய் அமர்ந்து பயத்தில் அழுதுக்கொண்டிருந்தார்.

அவர் குடிக்க தண்ணீர் போத்தல் வாங்கி வந்தவன் அவரை மெதுவாக ஆசுவாசப்படுத்த

“ரொம்ப நன்றி தம்பி. நீங்க மட்டும் சரியான நேரத்துக்கு வரலைனா அவளை உயிரோட பார்த்திருக்கமுடியுமான்னு தெரியல” என்றவரை

“அதான் ஆஸ்பிடல் அழைச்சிட்டு வந்தாச்சே. இனி பயப்படுறதுக்கு எதுவும் இல்லை ஆண்டி‌. ஆனா நீங்க நாளைக்கு தானே திரும்பி வர்றதா சமுத்ரா சொன்னா.” என்று கேட்க அமராவதியோ அங்கு நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூற உதய்க்கு அவன் கேட்ட அனைத்தும் அதிர்ச்சியே.

முறைப்பையன் திருமணத்துக்கு சென்றவள் அவனையே முறைப்படி மணந்து வந்தாளென்று சொன்னாலும் யார் தான் அதிராமல் இருப்பார்கள்?

ஆனால் இதில் அவனுக்கு புரியாத ஒரே விஷயம் சமுத்ரா இதற்கு சம்மதித்ததே. எந்த பிரச்சினை வந்தாலும் அவள் விருப்பமில்லாமல் யாருக்காகவும் எந்தவொரு விஷயத்தையும் செய்யமாட்டாள். அதோடு சுயமரியாதையை பெரிதாக நினைப்பவள் ஏதோ முக்கிய காரணமில்லாமல் இந்த திருமணத்திற்கு ஒப்புதல் கொடுத்திருக்கமாட்டாளென்று உதய்க்கு புரிந்தது. 

அவளாக சொல்லும் போது விசாரித்துக்கொள்ளலாமென்று எண்ணிய உதய்

“மத்தவங்க எல்லாம் எப்போ வருவாங்க ஆண்டி?” என்று உதய் கேட்க

“இன்னைக்கு வந்திடுவாங்கனு தான் நெனைக்கிறேன். எதுக்கும் போனை போட்டு மாலதிக்கு விஷயத்தை சொல்லிடுறேன்” என்றவர் உதயின் அலைபேசியை வாங்கி மாலதிக்கு அழைத்தார்.

மறுபுறம் மாலதிக்கு இரவு நடந்த அனைத்தையும் அப்போது தான் தெரியப்படுத்தியிருந்தார் இந்திராணி.

“என்ன அக்கா இவ்வளவு நடந்திருக்கு நீங்க என்னை எழுப்பியிருக்கலாமே?” என்று மாலதி அங்கலாய்க்க

“நான் யாரை பார்ப்பேன் மாலதி? கோவிச்சிட்டு போறவளை தடுப்பேனா? இல்லை ஏன்டா அவளை போகவிட்டனு இவனை கேள்வி கேட்பேனா?” என்றவரின் வார்த்தைகளில் சிறியவர்களின் வாழ்க்கை பற்றி கவலை அதிகமாகவே இருந்தது.

அப்போது மாலதியின் போன் ஒளிர

“அண்ணி தான் கூப்பிடுறாங்க” என்று அழைப்பை எடுத்து மாலதி பேச மறுபுறம் கூறப்பட்ட செய்தியில்

“நான் இதோ இப்பவே கிளம்புறேன்.” என்றவர் அழைப்பை துண்டிக்க அவர் அருகே நின்றிருந்த இந்திராணி மாலதியின் பதட்டத்தை பார்த்து

“என்னாச்சு மாலதி?” என்று விசாரிக்க

“சமுத்ராவுக்கு உடம்புக்கு முடியாமல் ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்களாம்.”என்று மாலதி கூற

“ஐயோ என்னாச்சு அவளுக்கு?”என்று இந்திராணியும் பதற

“டாக்டர் செக் பண்ணிட்டு இருக்காங்களாம். இன்னும் எதுவும் சொல்லலைனு அண்ணி சொன்னாங்க. அங்க துணைக்கு யாரும் இல்லைனு கிளம்பி வரச்சொன்னாங்க.” என்று மாலதி கூற இந்திராணி

“சரி உடனே கிளம்பலாம். நானும் வரேன்.” என்று கூறியவர் பரசுராமரிடம் விஷயத்தை சொல்ல அவர் உடனடியாக கிளம்புவதற்கு காரை ஒழுங்கு செய்ய அனைவரும் சமுத்ராவை பார்க்க கிளம்பினார்.

மறுபுறம் தோப்பு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த ஷாத்விக்கை உசுப்பினான் நாதன்.

“டேய் எழுந்திரிடா‌.”என்று எழுப்ப மெதுவாக கண்விழித்தான் ஷாத்விக்.

“குட்மார்னிங் மச்சான்.”என்று அவன் சோம்பல் முறிக்க

“நல்ல மார்னிங்தா போ. அங்க உன் குடும்பமே பதறி உன் பொண்டாட்டியை பார்க்க கிளம்பிடுச்சு‌. நீ சோம்பல் முறிச்சு குட்மார்னிங் சொல்லிட்டு இருக்கியா?” என்று நாதன் தலையில் அடித்துக்கொள்ள கண்களை தேய்த்துக்கொண்டு எழுந்து அமர்ந்தான் ஷாத்விக்.

“ஏன் அந்த மகாராணிக்கு என்னவாம்?”என்று ஷாத்விக் கேட்க

“ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்களாம்”என்று நாதன் கூற சற்று பதட்டமானவன்

“ஏன் என்னாச்சு? நைட்டு நல்லா தானே கிளம்பிபோனா? ஏதாவது சீரியஸா?” என்று ஷாத்விக் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக

“உன் அத்தை போன் பண்ணவும் மொத்த குடும்பமும் கிளம்பி போயிடுச்சுனு பவதாரணி தான் போன் போட்டு சொன்னிச்சு.”என்று நாதன் சொல்ல 

“உன் போனை தா.” என்று கேட்டு வாங்கியவன் விரைந்து பவதாரணிக்கு அழைத்தான்.

“பவா என்னாச்சு அவளுக்கு? டாக்டர் என்ன சொன்னாங்களாம்? இப்போ எப்படி இருக்கா?” என்று கேட்க மறுபுறம் பேசிய பவதாரணியோ

“வைரஸ் காய்ச்சல் தானாம். ஆனா டெஸ்ட் எடுத்து பார்த்ததுல அப்பெண்டிஸ் ஆப்பரேஷன் செய்யனும்னு சொல்லியிருக்காங்க. காய்ச்சல் சரியானதும் ஆப்பரேஷன் செய்யனும்னு சொல்லியிருக்காங்க.” என்று அவனுக்கு வேண்டிய தகவலை மட்டும் பவதாரணி கொடுக்க இப்போது ஷாத்விக்குள்ளும் ஒரு பயம் படரத்தொடங்கியிருந்தது.

அழைப்பை துண்டித்தவன்

“இப்போ ஊருக்கு போக பஸ் இருக்குமாடா?” என்று கேட்க நேரத்தை பார்த்த நாதன் 

“இன்னும் அரைமணி நேரத்துல பஸ் இருக்கு.” என்று கூற துள்ளி எழுந்தவன் புயல் வேகத்தில் கிளம்பியிருந்தான்.

மருத்துவரின் சிகிச்சையில் இப்போது சமுத்ராவுக்கு காய்ச்சல் சற்று மட்டுப்பட்டிருக்க மெதுவாக கண்விழித்தாள் சமுத்ரா.

அங்கே அமராவதி அமர்ந்திருக்க

“அம்மா” என்று அவள் மெதுவாக அழைக்க சமுத்ரா கண்விழித்ததை அறிந்து அவளருகே நெருங்கினார் அமராவதி.

“சமுத்ரா கண் முழிச்சிட்டியா? இப்போ எப்படி இருக்கு?” என்று அவளின் உடல்நிலையை விசாரிக்க

“கொஞ்சம் டயர்டா இருக்கு அவ்வளவு தான். நீ தனியாவா இருக்க?” என்று சமுத்ரா விசாரிக்க

“இல்ல உதய் தம்பி இப்போ தான் மெடிக்கல் ஷாப் வரைக்கும் போனிச்சு.” என்று இரவு நடந்த அனைத்தையும் சமுத்ராவிற்கு சொல்ல சமுத்ராவுக்கும் அப்போது தான் உதய்க்கு அழைத்தது நினைவு வந்தது.

“நல்ல வேளை அந்த தம்பி மட்டும் சரியான நேரத்துல வரலைனா என்ன ஆகியிருக்கும்னு என்னால நெனச்சி கூட பார்க்கமுடியல.” என்றவரின் வார்த்தைகளில் தாய்மையின் பரிதவிப்பு இருந்தது.

“இரு நர்ஸை கூப்பிடுறேன்.” என்றவர் நர்ஸை அழைக்க அவரும் வந்து பரிசோதித்துவிட்டு செல்ல

“எப்போ டிஸ்சார்ஜ்னு விசாரிச்சியாம்மா?” என்று சமுத்ரா கேட்க

“உனக்கு அப்பெண்டிஸ் சர்ஜெரி செய்யனும்னு டாக்டர் சொல்லியிருக்காரு. காய்ச்சல் குறைஞ்சதும் அதையும் முடிச்சிட்டு போகலாம்.” என்று அமராவதி கூற சமுத்ராவிற்கு தான் அவளின் அன்னையின் இந்த தெளிவான பேச்சு அதிசயமாக இருந்தது.

சிறு காயமென்றாலே பதட்டத்தில் பதறுபவர் ஆப்பரேஷன் என்ற வார்த்தையை கேட்டபின்பும் அதனை சரியாக புரிந்துகொண்டு பொறுமையாக தன்னிடம் விளக்குவது தான் அவளின் ஆச்சர்யத்துக்கு காரணம். ஆனால் சில கணங்களிலேயே அதற்கான காரணத்தையும் யூகித்து விட்டாள் சமுத்ரா.

உதயின் கைங்காரியமென்று புரிந்துகொண்டவள் அது பற்றி வேறெதுவும் யோசிக்கவில்லை.

மெடிக்கல் சென்றிருந்தவன் திரும்பிட அவனும் நலம் விசாரிக்க அவனுக்கு நன்றி கூறினாள் சமுத்ரா.

“அதெல்லாம் எதுவுமில்லை. உனக்கு சாப்பிட ஏதாவது வேணுமா?” என்று உதய் விசாரிக்க

“இல்ல எதுவும் வேணாம். நீ அத்தை வரும் வரைக்கும் அம்மா துணைக்கு இருக்கியா?” என்று சமுத்ரா கேட்க

“இதெல்லாம் நீ கேட்கனுமா? நீ ரிகவர் ஆகி வீட்டுக்கு போறவரைக்கும் ஐயா இங்க தான் டேரா ஓகேவா?” என்று உதய் கேட்க

“ஓ அப்போ இத சாக்கா வச்சு சார் ஆபிஸிக்கு டேரா போடப்போறீங்க?” என்று சமுத்ரா கேட்க

“பாத்தீங்களா ஆண்டி? உதவி பண்றேன்னு வந்தவனை எப்படி சந்தேகப்படுறான்னு?” என்று உதய் பஞ்சாயத்தை அமராவதியிடம் எடுத்து போக அவரோ

“நீங்க பேசிட்டு இருங்க நான் கேன்டின் வரைக்கும் போயிட்டு வந்திடுறேன்.” என்று வெளியே செல்ல அவர் செல்லும் வரை பார்த்திருந்தவன்

“ஆண்டி ஊர்ல நடந்த எல்லாத்தையும் சொன்னாங்க.” என்று கூற இப்போது அங்கொரு அசாத்திய மௌனம் நிலவியது.

 

“எந்த முடிவை எப்போ எடுக்கனும்னு உனக்கு நல்லாவே தெரியும். ஆனா இந்த விஷயத்துல உன்னோட ஈகோவுக்கு முன்னுரிமை கொடுக்காத. உனக்கும் அவருக்கும் இடையில் என்ன நடந்துச்சுனு நான் தெரிஞ்சிக்க விரும்பல‌. ஆனா எந்த முடிவையும் கோபத்துல எடுத்துடாத. அது உங்க இரண்டு பேரை மட்டுமில்ல. இரண்டு குடும்பத்தையும் பாதிக்கும்.”என்று உதய் தேவையான அறிவுரையை மட்டும் சொல்ல சமுத்ரா அதனை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தாலே தவிர எதுவும் பேசவில்லை.

“சரி இதுக்கு மட்டும் பதிலை சொல்லு. ஆர் யூ இன் லவ் வித் ஹிம்?” என்று உதய் கேட்க சமுத்ரா பதிலேதும் கூறாமல் அவனை சந்தேகமாக பார்க்க

“என்ன லுக்கு? ஆமானு ஓப்பனா பதிலை சொல்லுங்க மேடம்”என்று ஷாத்விக் கிண்டலான தொனியில் கூற

“எப்படி இவ்வளவு உறுதியாக சொல்லுற?” என்று சமுத்ரா அதே பார்வையுடன் கேட்க

“என் ப்ரெண்டை பத்தி எனக்கு தெரியாது? ஊரையே அலறவிடுறவ சமத்தா போய் மணமேடையில் உட்கார்ந்து தாலி கட்டிகிட்டான்னா அதுக்கு இது ஒன்னு மட்டும்தானே காரணமாக இருக்க முடியும்.” உன்னை பற்றி நானறிவேனென்ற ரீதியில் உதய் சொல்ல சமுத்ராவின் முகமோ வெட்கத்தால் சிவக்க உதயோ அவளை அதிசயமாக பார்த்தபடி

“ஷீ இஸ் ப்லஷ்ஷிங்யா. என் ப்ரெண்டுக்கு வெட்கப்படத்தெரிஞ்சிருக்குபா” என்று அவன் கிண்டல் செய்ய இப்போது அங்கிருந்த சூழ்நிலை மாற சமுத்ராவின் மனநிலையிலும் சற்று மாற்றம் ஏற்பட்டிருந்தது.

மாலை நெருங்கையில் ஊரிலிருந்து மாலதி, வினயாஸ்ரீ, மஹதி, இந்திராணி, பரசுராமரென்று அனைவரும் வந்து சேர்ந்தனர்.

வந்தவர்கள் சமுத்ராவை நலம் விசாரிக்க அவளின் கண்களோ வேறொருவனை தேட அதனை உதய்யும் கண்டுகொண்டான்.

உதய் கிளம்புவதாக கூற அமராவதி மாலதியை சமுத்ராவின் துணைக்கு வைத்துவிட்டு மற்றவர்களை அழைத்துக்கொண்டு அவனோடு கிளம்பினார்.

வீடு வந்ததும் இரவு உணவுக்கான ஏற்பாடுகள் நடக்க வினயாஸ்ரீயும் மஹதியும் சமுத்ராவிற்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் போது மஹதியின் போன் ஒலிர அதனை எடுத்து பார்த்தவள் ஏதோ யோசனையில் ஆழ்ந்தாள். 

அதனை கவனித்த வினயாஸ்ரீ

“என்ன மஹி போன் அடிச்சிட்டே இருக்கு. அதை எடுக்காமல் ஏதோ யோசிச்சிட்டு இருக்க?” என்று கேட்க

“ஷாத்விக் மாமா தான் கூப்பிடுறாங்க.” என்று கூற சற்று யோசித்தவள்

“அட்டென்ட் பண்ணி ஸ்பீக்கர்ல போடு” என்று கூற மஹதி அழைப்பை ஏற்றாள்.

“மஹி எங்க இருக்கீங்க வீட்டுலயா ஹாஸ்பிடல்லயா?” என்று கேட்க

“இப்போ தான் மாமா வீட்டுக்கு வந்தோம். அம்மாவும் அத்தையும் அக்காவுக்கு சாப்பாடு ரெடி பண்ணிட்டு இருக்காங்க.” என்று கூற

“அப்போ அவகூட ஹாஸ்பிடல்ல யாரு இருக்கா?” என்று கவலையுடன் கேட்க

“மாலதி அத்தை துணைக்கு இருக்காங்க மாமா.” என்று கூற

“ஆ… எந்த ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்கீங்க?”

“ஏன் மாமா?” என்று மஹதி விசாரிக்க

“நான் இப்போ தான் ஸ்டேண்ட் வந்து இறங்குறேன். ஹாஸ்பிடல் பக்கதுலயா இருந்தா நேரா ஹாஸ்பிடல் போகலாம்னு தான்.” என்று அவன் இழுக்க இப்போது மஹதியும் வினயாஸ்ரீயும் அதிர்ச்சியுடன் ஒருவரை மற்றவர் பார்த்துக்கொண்டிருந்தனர்.

“நெஜமாவா சொல்லுறீங்க?” என்று மஹதி மீண்டும் கேட்க

“நீ ஹாஸ்பிடல் லொகேஷனை வாட்சப்ல ஷெயார் பண்ணிவிடு.” என்றவன் அழைப்பை துண்டித்துவிட

“இவருக்கு என் கூட பிறந்தவளே பரவாயில்லை.” என்று முணுமுணுத்தபடியே தன் போனில் ஹாஸ்பிடல் லொகேஷனை ஷெயார் செய்துவிட்டு 

“ஏன் வினு இவங்க பிரச்சினையை கேட்டப்போ பத்தி எரிஞ்சாலும் பத்து வருசத்துக்கு கூட பேசிக்கமாட்டாங்கனு நெனச்சேன். இவரு என்னதுனு ஹாஸ்பிடல்ல இருக்கான்னு தெரிஞ்சதும் அடிச்சி புடிச்சி வந்து சேர்ந்துட்டாரு.” என்று மஹதி சொல்ல

“மொதல்ல இந்த விஷயத்தை பெரியம்மாவுக்கும் அத்தைக்கும் சொல்லுவோம் வா.” என்று மஹதியை இழுத்துக்கொண்டு சென்று இருவரிடமும் விஷயத்தை சொன்னார்கள்.

அவர்களுக்குமே இது எதிர்பார்த்திராத நிகழ்வு என்ற போதிலும் சற்று தாமதித்து மருத்துவமனை செல்லும் முடிவுக்கு வந்தவர்கள் மாலதிக்கும் விஷயத்தை சொல்லினர்.

பெரியவர்கள் எதிர்பார்த்தபடியே ஷாத்விக் அங்கு வர மாலதியோ ஏதோ போன் பேசிவிட்டுவருதாக கூறி ஷாத்விக்கை சமுத்ராவின் துணைக்கு வைத்துவிட்டு அறையிலிருந்து வெளியேறியிருந்தார்.

இந்த தனிமை இருவரும் எதிர்பாராதது என்பதால் இருவருக்கிடையிலும் எந்த பேச்சு வார்த்தையும் இருக்கவில்லை.

ஷாத்விக் வந்தப்போது கூட சமுத்ராவின் மனம் ஆறுதலடையாது சிலிர்த்துக் கொண்டுதானிருந்தது. அதற்கு காரணம் அவனை முன்னமே எதிர்பார்த்து எதிர்கொண்ட ஏமாற்றம் தான். அந்த ஏமாற்றம் இப்போது அவளின் கோபங்களுக்கு தூபம் போட வந்தவனை வா என்று கூட அவள் அழைக்கவில்லை. மாலதி தான் அவன் வந்ததும் அழைத்து நலம் விசாரித்தது எல்லாமே. 

இது அனைத்தையுமே ஷாத்விக்கும் கவனித்திருக்க அவனது மனமும்

“திமிரு. உடம்பு மொத்தமும் திமிரு. வந்தவனை ஒரு பேச்சுக்காவது வான்னு சொல்றாளானு பாரு. உடம்புக்கு முடியலையேனு அடிச்சு புடிச்சு வந்தேன்ல எனக்கு இது தேவைதான்.” என்று அவன் அவளையும் அவளுக்காக வருந்திய தன்னையும் சேர்த்து மனதிற்குள் தாளித்துக்கொண்டிருந்தான்.

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்