Loading

இந்த மௌனம் சற்று நேரம் தொடர ஷாத்விக்கே பேச்சை தொடர்ந்தான்.

“டாக்டர் என்ன சொன்னாங்க?” என்று கேட்க சமுத்ராவோ

“அதை பத்தி உங்களுக்கு என்ன கவல?” என்ற ரீதியில் அவனை பார்க்க ஷாத்விக்கிற்கு தான் உள்ளே கோபம் குபுகுபுவென எரிந்தது.

“இவளுக்கு நெஞ்சழுத்தம் ஜாஸ்தி தான்‌. கேள்வி கேட்டா பதில் சொல்லாமல் முறைச்சு பாக்குறா. எக்கேடோ கெட்டு போனு விடாமல் இங்க வந்தது தப்பா போச்சு.” என்று அவன் உள்ளுக்குள் முணங்கிக்கொள்ள சமுத்ராவோ அவனை பார்த்தபடியிருந்தாலேயொழிய எதுவும் பேசவில்லை.

“வாயை திறந்து பதில் சொல்லக்கூடாதுங்கிற முடிவுல இருக்கியா இல்லை இவனுக்கு எதுக்கு சொல்லனும்னு அமைதியா இருக்கியா?” என்று ஷாத்விக்கின் வார்த்தைகளில் உக்கிரம் கூடியிருக்க

“நீங்க நேத்து பேசுனமாதிரி வரம்பில்லாமல் வார்த்தை வந்திடக்கூடாதுனு அமைதியாக இருக்கேன்” என்றவளின் பதிலில் முதலில் விழித்தவன் பிறகு தான் அன்றிரவு அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவன் மனதில் வந்து போனது.

முதல்நாள் இரவு பெரியவர்களின் திருப்திக்காக சமுத்ரா அமைதியாக இருந்தாலே தவிர அவளுக்குமே இந்த சாந்தி முகூர்த்த ஏற்பாட்டில் பெரிதாக ஆர்வமில்லை. எப்படியும் ஷாத்விக்கும் இதே எண்ணத்தில் தான் இருப்பானென்ற நம்பிக்கையிலேயே சமுத்ரா அமைதியாக இருந்தாள்.

அவளை ஷாத்விக் இருந்த அறைக்குள் விட்டுவிட்டு கதவை சாற்றிவிட்டு சென்றிட சமுத்ராவோ கையிலிருந்த பால் செம்பினை அருகிலிருந்த மேசையில் வைத்துவிட்டு கட்டிலில் அமர்ந்து அவளையே முறைத்துக் பார்த்துக்கொண்டிருந்த ஷாத்விக்கை பார்த்தாள்.

“மாமா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.” என்று சமுத்ரா ஆரம்பிப்பதற்காகவே காத்திருந்தது போல் அவளை வறுத்தெடுக்கத்தொடங்கியிருந்தான் ஷாத்விக்.

“இப்போ உனக்கு சந்தோஷம் தானே? இதுக்கு தானே ஆசைப் பட்ட. நீ அன்னைக்கு பேசும்போது கூட உன்னை தப்பா நினைச்சிருக்கேனேனு ஒரு வருத்தம் மனசுல இருந்துச்சு. ஆனா நீ எப்போ மணமேடையில வந்து உட்கார்ந்தியோ அப்போ தான் நீ யார்னு புரிஞ்சிக்கிட்டேன்.” என்று ஷாத்விக் தொடர சமுத்ரா சொல்ல வருவதை அவன் காதுகொடுத்துகூட கேட்கவில்லை.

அதற்கு காரணமும் இருந்தது.

மௌனிகா ஊரிலிருந்து வந்ததுமே அவளின் சம்மதத்தை அவளின் பெற்றோரே தெரியப்படுத்தியிருந்தனர். தாமதிக்காது மௌனிகாவின் பெற்றோர் திருமணவேலைகளை ஆரம்பிக்க பரசுராமருக்கும் மறுக்க வழியில்லாததால் அவரும் தன் பக்கம் செய்யவேண்டிய ஏற்பாடுகளை செய்தார்.

இதுபற்றி அமராவதிக்கு அவர் தெரியப்படுத்த முயன்றபோது போது அவரோ பேசமறுத்துவிட சமுத்ராவிடம் விஷயத்தை பகிர்ந்தார் பரசுராமர்.

“அம்மாடி நீ சொன்ன மாதிரியே எல்லா ஏற்பாடும் செய்துட்டேன். ஆனா உன் அம்மா வராமல் இந்த கல்யாணம் நடக்காது.” என்று உறுதியாக கூறிட

“மாமா நீங்க எதைபத்தியும் கவலைப்படாமல் கல்யாண வேலையை பாருங்க. ஒரு வாரத்துக்கு முன்னாடியே அம்மாவை அங்க அழைச்சிட்டு வரவேண்டியது என்னோட பொறுப்பு” என்று உறுதியளித்திருந்தாள்.

அதுபடியே தன் அன்னையிடம் ஏதேதோ பேசி சரிகட்டி திருமணத்திற்கு ஒரு வாரம் இருக்கும் போதே அனைவரையும் ஊருக்கு அழைத்து வந்திருந்தாள் சமுத்ரா.

அமராவதி சமுத்ராவின் கெஞ்சலுக்கு பணிந்து வந்தாரே ஒழிய எந்த சடங்கிலும் பங்கெடுக்கவில்லை. இது அனைவரையும் விட ஷாத்விக்கிற்கு தான் பெரும் மனக்குறையாக இருந்தது.

தன் மீது பாசத்தை மட்டுமே காட்டுபவர் இப்படி ஒதுங்கி நிற்பது அவனை பெரிதாய் வருத்த காரணம் தெரிந்தபோதும் அவரிடம் நேரடியாக பேசி சரி செய்ய நினைத்தான்.

திருமணத்திற்கு முதல் நாள் அனைத்து சடங்குகளும் முடிந்து அனைவரும் உறங்கச்சென்றிட ஷாத்விக்கோ தன் அத்தையை தேடிச் சென்றான்.

அவனை இந்நேரத்தில் எதிர்பார்க்காத அமராவதி

“என்னடா நீ இன்னும் தூங்கப்போகலையா?” என்று கேட்க

“அத்தை என் மேல ஏதாவது கோவமா?” என்று கேட்க

“ஏன்டா அப்படி கேட்குற?” என்று அவர் குழப்பத்துடன் கேட்க

“அப்படி ஏதும் இருந்தா மன்னிச்சிருங்க அத்தை.” என்று ஷாத்விக் மன்னிப்பு வேண்ட

“டேய் அப்படிலாம் ஏதும் இல்லடா.” என்று அமராவதி சொல்ல

“இல்ல அத்த. உங்களுக்கு என்மேல கோபம் இருக்கு. அதான் நீங்க வந்ததுல இருந்து ஒதுங்கியே இருக்கீங்க.” என்று ஷாத்விக் தான் தான் கவனித்ததை கூற இப்போது அமைதியானார் அமராவதி.

“நான் யாரையும் கஷ்டப்படுத்தனும்னு நெனக்கல அத்த. நீங்க ஆரம்பத்துல இது பத்தி பேசுனப்போ கூட நான் உங்ககிட்ட இந்த விஷயத்தை சொன்னதே நீங்க பின்னாடி இப்படி வருத்தப்பட்டு நிற்கக்கூடாதுனு தான்.” ஷாத்விக் தன் தரப்பு நியாயத்தை கூற அமராவதிக்கு அது புரிந்தபோதிலும்

“உன் விருப்பத்தை தெரிஞ்சுகிட்டு என் அண்ணா இந்த கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சுட்டாரு. ஆனா நான் என் பொண்ணு விருப்பம் தெரிஞ்சும் எதுவும் செய்யமுடியாத நெலமைல இருக்கேன்‌.”என்று அமராவதி கூற ஷாத்விக்கிற்கோ எதுவும் புரியவில்லை.

“என்ன அத்த சொல்லுறீங்க?” என்று அவன் குழப்பத்துடனேயே கேட்க

“அவ உன்னை விரும்புறான்னு தெரிஞ்சும் எதுவும் செய்யமுடியாத என்னோட கையாலாகதனத்தை சொன்னேன்.” என்று அமராவதி முடிக்கும் முன்னே அம்மா என்ற சமுத்ராவின் குறுக்கிடும் அழைப்பு கேட்க சமுத்ரா அவர்களை நோக்கி விரைந்து வந்துக்கொண்டிருந்தாள்.

“அம்மா என்ன பேசிட்டு இருக்கீங்க நீங்க? முதல்ல போய் தூங்குங்க. மாமா நீங்களும் உள்ள போங்க” என்றவள் அமராவதியை உள்ளே இழுத்து செல்ல முயல

“ஒரு நிமிஷம் சமுத்ரா‌” என்று அவளை இடைநிறுத்த

“அம்மா நீங்க போங்க. நான் வாரேன்.” என்று அமராவதியை உள்ளே அனுப்பிவிட்டு வந்தாள் சமுத்ரா.

“அத்தை சொன்னது…” என்று ஷாத்விக் தயக்கத்துடன் கேட்க

“ஆமா உண்மை தான்.” என்று அவள் உண்மையை மறைக்காமல் சொல்ல ஷாத்விக்கிற்கு தான் சற்று தர்மசங்கடமாகிப்போனது.

அவன் தயக்கத்துடன் நின்றிருக்க

“நீங்க இதை பத்தி கவலைப்படவேண்டிய அவசியமில்லை. என்ன நடக்குதுனு புரிஞ்சிக்காத அளவுக்கு நான் முட்டாளில்லை. அதோடு ஐயோ போச்சேனு கண்ணீர் வடிச்சு புலம்புற பொண்ணும் நானில்லை.” என்றவளின் குரலில் எப்போதும் வீற்றிருக்கும் தெளிவும் ஆளுமையும் இப்போதும் குடியிருந்தது.

“என்னை மன்னிச்சிரு சமுத்ரா.” என்று ஷாத்விக் மன்னிப்பு வேண்ட மெலிதாக புன்னகைத்த சமுத்ரா

“இதுல மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியம் எதுவுமில்லை. எனக்கு எப்படியொரு தனி விருப்பம் இருந்துச்சோ அதே மாதிரி தான் இந்த கல்யாணம் உங்களோடு விருப்பம். இதுக்கு தடை சொல்ல யாருக்கும் உரிமையில்லை. நீங்க அம்மா சொன்னதை பத்தி யோசிக்காமல் போய் படுங்க. காலையில சீக்கிரம் எழுந்துக்கனும்னு அத்தை சொன்னாங்க.” என்றவளிடம்

“நான் உன்னை எந்த விதத்திலயாவது காயப்படுத்தியிருந்தா மன்னிச்சிரு.” என்று மீண்டும் அவன் மன்னிப்பு வேண்ட லேசாக புன்னகைத்த சமுத்ரா தன் அறைக்கு சென்றுவிட்டாள்.

ஷாத்விக்கும் உள்ளே ஒரு வித சலனத்துடன் தன் அறைக்கு செல்ல எத்தனிக்க அப்போது அங்கு வந்தார் இந்திராணி.

“என்னடா நீ இன்னும் உறங்கப்போவலையா?” என்று கேட்க சற்று முன் நடந்த அனைத்தையும் கூற இந்திராணிக்கும் இது அதிர்ச்சி தான். சமுத்ரா மனதிலும் இப்படியொரு எண்ணம் இருந்திருக்குமென்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.

“மனசுக்குள்ள ஆசையை வச்சுக்கிட்டு தான் இந்த பொண்ணு இத்தனையையும் செஞ்சாளா?” என்று இந்திராணி கேட்க ஷாத்விக்கிற்கு தான் அவர் எதை சொல்கிறாரென்று புரியவில்லை.

“என்னம்மா சொல்லுற?” என்று ஷாத்விக் புரியாது கேட்க

“உன் அப்பாவுக்கு எப்படி நீ காதலிக்கிற விஷயம் தெரியும்னு கேட்டல்ல. சமுத்ரா தான் சொல்லியிருக்கா.இப்போ இந்த ஏற்பாடு வரைக்கும் அவளோட உந்துதல் தான்.” என்று இந்திராணி கூற ஷாத்விக்கிற்கு இது புது தகவல்.

யாரும் அறியாத காதலை இவள் எப்படி தெரிந்துகொண்டாளென்ற குழம்பியவன்

“நான் உன்கிட்ட கூட சொல்லாத விஷயம் எப்படி சமுத்ராவுக்கு தெரியும்?” என்று கேட்க

“அது தெரியல. ஆனா உன் அப்பா மூலமா இந்த ஏற்பாட்டை செய்தது அவ தான். இப்போ வரைக்கும் எல்லாத்தையும் சமாளிக்கிறதும் அவ தான்.” என்று இந்திராணி கூற ஷாத்விக்கிற்கோ உள்ளுக்குள் ஏதோ செய்தது.

“சரி விடு. அவளுக்கு கொடுத்து வச்சது அவ்வளவு தான். நீ போய் உறங்கு. காலையில சீக்கிரம் எந்திரிக்கனும்.” என்று கூறி அவனை அனுப்புவிக்க திருமணத்திற்கு பின் சமுத்ராவை சந்தித்து மறுபடியும் ஒருமுறை மன்னிப்பு கேட்டிடவேண்டுமென்ற எண்ணத்தோடு அன்று அங்கிருந்து சென்றிருந்தான் ஷாத்விக்.

“நீ நேத்து நைட்டு அந்த விஷயத்தை சொல்லும் போதே உன் திட்டத்தை புரிஞ்சிருந்திருக்கனும். ஆனா நான் தான் முட்டாள் மாதிரி உன்னை நினைச்சு கவலைப்பட்டேன்.ஆனா இன்னைக்கு தானே தெரிஞ்சிது நீ எவ்வளவு பெரிய கேடினு‌.” என்று அவன் பேசிக்கொண்டே போக

“மாமா தேவையில்லாம் வார்த்தையை விடாதீங்க.” என்று சமுத்ரா பொறுமையாகவே எச்சரிக்க

“எது தேவையில்லாத வார்த்தை? நான் என் கஷ்டத்தை சொல்லி புலம்புறது உனக்கு தேவையில்லாததா தெரியிதுல்ல. அது சரி உனக்கு தெரியலனா தானே அதிசயம். இப்படி ஒரு சந்தர்ப்பம் அமையாதானு தானே பாத்துட்டு இருந்த?” என்று ஷாத்விக் மீண்டும் அதையே கூற

“மாமா என்னை கொஞ்சம் பேச விடுங்க.” என்று சமுத்ரா ஏதோ பேச முயற்சிக்க

“என்ன பேச போறப்போற? பேச வேண்டிய இடத்துல எல்லாம் அமைதியாக இருந்து காரியத்தை சாதிச்சிட்டு இப்போ என்ன பேசப்போற? அது சரி… நீ அவ்வளவு நல்லவளா இருந்திருந்தா எனக்கு விருப்பமில்லைனு தெரிஞ்சும் படுக்கையை பங்குபோட இப்படி கிளம்பி வந்திருப்பியா?” என்றவனின் வார்த்தைகள் வரம்பு மீறி வெளிவர

“மாமா ரொம்ப தப்பா பேசுறீங்க.” என்று சமுத்ரா பல்லை கடித்துக்கொண்டு எச்சரிக்க

“நான் பேசுறது தப்புனா நீ இப்போ இங்க முழு அலங்காரத்தோட படுக்க ரெடியா வந்திருக்கிறது சரியா?” என்று அவன் பாராபட்சமில்லாமல் வரம்பு மீறி பேச அதை பொறுக்கமுடியாது தான் சமுத்ரா அவனை அடி பிளந்துவிட்டு கிளம்பி வந்திருந்தாள்.

நடந்ததை நினைத்து பார்த்தவன் நொடி கூட தாமதிக்காது

“மன்னிச்சிடு. நைட்டு கோபத்துல ஏதேதோ பேசிட்டேன்.” என்று ஷாத்விக் மன்னிப்பு கேட்டிட சமுத்ராவோ அதை காதுகொடுத்து கேட்கும் முடிவில் கூட இல்லை‌.

சுய கௌரவத்தை பெரிதாக எண்ணுபவளிடம் அவளின் நடத்தையை கேவலப்படுத்தி பேசியபின்னும் எப்படி சமுத்ரா ஷாத்விக்கை மன்னிப்பாள்?

“நீங்க சொன்னபடியே எல்லாம் நடந்ததாகவே இருக்கட்டும். ஆனா இனிமேல் நடக்கப்போறது எல்லாம் உங்க விருப்பப்படியே நடக்கட்டும்.” என்றவள் தன் கழுத்திலிருந்த தாலியை கழற்றி ஷாத்விக் கையில் வைத்தாள்.

“இனிமே எதுவுமே இல்லை‌. இப்போ எல்லாமே பழையபடியே இருக்கும்.” என்றவளை அதிர்ந்துபோய் பார்த்திருந்தான் ஷாத்விக்.

கையில் இருந்த தாலியையும் சமுத்ராவையும் பார்த்தவனுக்கு பேச்சு வரவில்லை. அடுத்து என்ன செய்வதென்றும் புரியவில்லை.

ஆனால் சமுத்ராவின் அந்த செயல் அவன் மனதில் சிறு வலியை ஏற்படுத்தியதென்பதே உண்மை.

அதனை வெளிக்காட்டாதவன் எதுவும் பேசாது அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

 மாலதி உள்ளே வந்தபோது சமுத்ரா மட்டுமே இருக்க

“ஷாத்விக் எங்க?” என்று கேட்க

“கிளம்பிட்டாரு.”என்ற ஒற்றை வார்த்தையில் பதில் வர மாலதிக்கோ ஏதோ சரியில்லையென்று புரிந்தது.

“எங்க போனாரு?” என்று மாலதி கேட்க 

“சொல்லிட்டு போகல.” என்று படாரென்று பதில் வர மாலதிக்கு அதற்கு மேல் எப்படி விசாரிப்பதென்று புரியாது அமைதியானார்.

மருத்துமனையிலிந்து வெளியேறிய ஷாத்விக் சமுத்ரா கொடுத்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை.

அவனின் மனமோ அவளால் எப்படி இவ்வாறு செய்யமுடிந்தது என்ற கேள்வியையே மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தது.

ஒருமனம் வலியில் வருந்தி மறுக மறுமனமோ சமுத்ராவை சரமாரியாக வசைபாடிக்கொண்டிருந்தது.

கையிலுள்ள தாலியை பார்த்தவனுக்கு அதை தூக்கிப்போடுவதா இல்லை எடுத்து பத்திரப்படுத்துவதா என்று புரியவில்லை.

அவனை பொறுத்தவரையில் இது பிடிக்காத திருமணம் மற்றும் அவனும் சமுத்ராவின் முடிவையே செயற்படுத்துவதாக தன் அன்னையை மிரட்டிய போதிலும் அதனை செயற்படுத்தும் எண்ணம் அவனிடம் துளியும் இல்லை.

ஆனால் சமுத்ராவோ தாலியை கழற்றி கொடுத்துவிட ஷாத்விக்கிற்கு உள்ளே கோபம் புசுபுசுவென்று கனன்றது.

“எவ்வளவு தைரியம் இருந்தா தாலியை படக்குனு கழட்டி கொடுத்திருப்பா? இந்த ஷாத்விக்கை பத்தி சரியா தெரியாமல் இந்த காரியத்தை செய்திட்ட சமுத்ரா. இனி இந்த ஷாத்விக் யாருனு உனக்கு காட்டுறேன்.” என்றவன் உள்ளுக்குள் சபதமெடுத்துக்கொண்டு தாலியை தன் சட்டைப்பையினுள் பத்திரப்படுத்தியவன் சமுத்ரா வீட்டிற்கு கிளம்பினான்.

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
4
+1
3
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்