Loading

காற்றைக் குவித்து,

வெட்பம் ஏற்றி,

கொண்டல்(மேகம்) தொடுத்து,

மின்னல் வெடித்து, 

விண்ணேறு இடித்து,

திவலைப் பனித்தது!

 

மனமும் மழையும் ஒரே குணாதிசயங்கள் கொண்டவை. அடர் வனமாம்.. அடை மழையாம்.. ஆழ் மனதில் அமிழ்ந்து போனதெல்லாம் அவலமாம். அடவயில் பதித்தச் சுவடுகளை வெளிவுலகம் உணராது. ஆழ் மனதின் புதையலை அகழ்வு செய்ய முடியாது. இந்த நொடியில் இருக்கும் நீ மட்டுமே நீ. கடந்து போனவையும், இனி கடக்கப் போவதும் மனதின் சுவடுகள்.  மனவேட்டில் பதிந்திருக்கும் எழுத்துக்களை மூன்றாம் நபராக படித்துப் பார்க்கலாம். பல சமயங்களில் அன்று எழுதிய உணர்வு இன்றும் இருக்காது‌. மடிந்து போயிருக்கும். அதன்பொருட்டே நமக்கு, “அன்று அப்படி செய்திருக்கலாமோ. அன்று கோபம் கொள்ளாமல் இருந்திருக்கலாமோ?” என்றெல்லாம் தோன்றும். இப்படியெல்லாம் தோன்றினால் மனம் பக்குவப்பட்டுவிட்டதாம். ஆனால் அந்த பக்குவமே அன்று நிகழ்ந்தவைகளால்தானே. பக்குவம் அடைந்த பிறகு, அதற்கு காரணியாய் விளங்கியவை தவறாய் போகிறது. மனதில் நீ நீயாக இருக்கையில் பாதைத் தவறிப் போகிறது. ஆனால் அதை உன் முன் நிறுத்தி ஆராய்ந்தால், தீர்வு வருகிறது மனித மனம் விசித்திரம் நிறைந்தது. 

 

அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான் கீதன். ஒருவேளை நிரண்யாவின் தாயார் கூறுவதுபோல் அவளுக்கு பேய் பிடித்து விட்டதா என்று சிந்தித்தான்.

 

நிரண்யா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்‌. நிரண்யாவின் அன்னை மீண்டும் அவன் முன் வந்து நின்றார்.

அடுத்து என்ன பூகம்பம் வரப்போகிறதோ என்று அவரைப் பார்த்தான். அவனின் முன் கைகளை நீட்டினார் அவர். கைகள் முழுக்க மாத்திரை பல வண்ணங்களில். அனைத்தும் நிரண்யாவிற்கு மருத்துவர் எழுதிக்கொடுத்தது. பாதி கரைந்ததும் கரையாமலும் வேறு இருந்தது. அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

 

“என்ன அத்தை இதெல்லாம்? ஏன் இவ்ளோ மாத்திரையை எடுத்துட்டு வந்து காமிக்கிறீங்க..”

 

“இதெல்லாம் நிரண்யா சாப்பிட்டதா நாம நினைச்ச மாத்திரைகள்..”

 

“வாட்.. அப்படின்னா? புரியலை.”

 

“மெத்தை விரிப்புக்கு அடியில் இருந்துச்சு இவ்வளோ மாத்திரை. நிரண்யா ஒரு வாரமாக எந்த மாத்திரையும் சாப்பிடலை. நாம இந்த பக்கம் வந்ததும் அதை மெத்தை விரிப்புக்கு அடியில் வச்சிருக்கா” என்று அவர் கூற அதிர்ந்துவிட்டான் கீதன்.

 

“நான் டாக்டர்கிட்ட பேசுறேன். நீங்க போங்க..” என்று அவரை அனுப்பி வைத்துவிட்டு மருத்துவருக்கு அழைத்தான்.

 

அழைப்பை ஏற்றதும், தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள, “சொல்லுங்க” என்றார் எதிர்முனையில்.

 

நடந்ததை இவன் விளக்கிக் கூற, சில நொடிகள் அமைதி.

 

“கீதன்.. இதுவும் ஒருவித நோயின் அறிகுறிதான். இந்த நோயால் பாதிக்கப்பட்டவுங்க மாத்திரை சாப்பிட மாட்டாங்க.. அவுங்க முழுங்குறவரை நீங்க பக்கத்தில் இருக்கணும். அப்புறம் நிரண்யா யாரோ ரெண்டு பேர் சொல்றான்னு சொன்னீங்களே. அது ஹேலுசினேஷனாவும் இருக்கலாம். உண்மையா நடந்தும் இருக்கலாம்.”

 

“புரியல டாக்டர்..”

 

“ஹேலுசினேஷன்னா ரெண்டும் கற்பனை பெயர்கள், கற்பனை உருவங்கள். ஆனா உண்மைனா யாராவது அவுங்களுக்கு இதையெல்லாம் சொல்லியிருக்கணும்.”

 

“இங்க யாருக்குமே இந்த விஷயம் தெரியல மேம். இவ மட்டும்தான் சொல்றா.”

 

“நிரண்யா செத்துப்போன பொண்ணு வீட்டுக்கு போனதா சொன்னீங்களே. அங்க அந்த பொண்ணோட டைரி, இல்ல அந்த பொண்ணு சம்மந்தப்பட்ட ஏதாவது விஷயம் இருந்திருக்கலாம் இல்லையா” என்று மருத்துவர் வினவ, அவனுக்கும் அப்படி இருக்குமோ என்று தோன்றியது. 

 

இந்தப் பாழாய்ப்போன மனம், இக்கட்டான இன்னல் வரும்பொழுது திடமாய் சிந்திக்கும் ஆற்றல் இழந்து விடுகிறது. யார் எது சொன்னாலும் இது இப்படி இருக்குமோ, அது அப்படி இருக்குமோ என்று ஏங்கித் தவித்து மருகுகிறது.

 

அடுத்து அதை எப்படி அறிந்து கொள்வது என்று தீவிர சிந்தனையில் இருந்தான் கீதன். நிச்சயம் நற்பவியிடம் வினவினால் மட்டுமே இதை அறிந்து கொள்ள முடியும். இப்பொழுது முன்புபோல் அந்த வீட்டிற்கும் செல்ல முடியாது. ஏதோ ஒரு பெண் காணாமல் போனதாக கூறியிருக்கிறாள் நற்பவி. இந்த சூழ்நிலையில் அவன் அந்த வீட்டிற்கு சென்று அவன் நினைத்தபடி ஒரு பொருளைத் தேடுவது என்பது நடவாத காரியம்.‌ 

 

*****

 

நற்பவி அவளுடைய வீட்டில் அமர்ந்து தீவிர சிந்தனையில் இருந்தாள். அவளின் முன் பல வெள்ளைத் தாள்கள் சுருட்டி எரியப்பட்டிருந்தது. எதுவும் பிடிபடவில்லை‌. நிரண்யா எதிர்வீட்டிற்கு சென்றது சீ.சீ. டீவியில் பதிவாகவில்லை. அப்படியென்றால் நிச்சயம் ஏதோ நிகழ்ந்திருக்கிறது என்று அவள் மனம் அடித்துக் கூறியது. ஆனால் அதை ஏன் செய்யணும். காணாம போன பொண்ணுக்கும் நிரண்யாவிற்கும் என்ன சம்மந்தம். இதை யார் செஞ்சிருக்கணும். அனைத்தும் விடை தெரியா வினா. எழுதி எழுதி சலித்துப் போனது. பின் அவசரமாய் எழுந்தாள்‌. அங்கிருந்த குப்பைகளைப் பார்த்து உச்சுக் கொட்டியவள், அனைத்தையும் எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டாள். திடீரென ஏதோ தோன்ற, அவசரமாக, தன் கணினியில் இருந்து சில கோப்புகளைப் திறந்து எதையோ அலசி ஆராய்ந்தாள்.

 

அங்கு கீதன் சிந்தனையில் இருக்கும்பொழுதே அவனின் அலைபேசி ஆர்வமாய் அரவம் எழுப்பியது. நற்பவி அவனை அழைத்திருந்தாள். அழைப்பை ஏற்று காதில் வைத்தான் கீதன்.

 

“மிஸ்டர் கீதன்.. நான் உங்க கூட கொஞ்சம் பேசணும். 

நான் அனுப்புற அட்ரெஸ்க்கு வாங்க. வேற யாருக்கும் தெரிய வேண்டாம். வேற விஷயமா வெளில போறதா சொல்லிட்டு வாங்க” என்று அழைப்பைத் துண்டித்தாள்.

 

அவனும் அவளைக் காண சென்றான்.

 

“என்ன மேடம்.. என்ன ஆச்சு” கீதன்.

 

“கீதன்… உங்க அப்பார்ட்மெண்ட் சீ.சீ.டீவி ஃபூட்டேஜ் இது..‌ இதைக் கொஞ்ச நேரம் பாருங்க. ஏதாவது வித்தியாசமா தெரியுதான்னு” என்று கூற, அவனும் சற்று நேரம் அந்த காணொளியை ஓடவிட்டுப் பார்த்தான். ஆனால் அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. 

 

“எனக்கு ஒண்ணும் தெரியலையே. க்ரிஸ்டல் க்ளீயரா இருக்கு” கீதன்.

 

அவனின் இந்த பதிலைக் கேட்டவள், ஒரு பாயிண்ட்டரை எடுத்து அந்த காணொளியில் ஓரிடத்தில் அடித்தாள்.

 

“இது என்ன?” என்றாள் கேள்வியாக.

 

“அது தெரியலையே.. க்ளீயரா இல்லை.”

 

“இது ஒரு பொருளோட நிழல்.”

 

“அங்க எதுவும் பொருள் இல்லையே.”

 

“ம்ம்ம்.. அது வேற கேமரால இருக்கணும். பொதுவா நைட்ல நிழல் பெருசா தெரியும். கவனிச்சிருக்கீங்களா. இரவு நேரம் போக போக உங்க நிழல் பெருசா ஆகும். ஐந்து மடங்குலேருந்து பதினொரு மடங்குவரை. பொதுவா விடியல் மற்றும் சூரியன் மறையும் நேரம் நம்மளோட நிழல் ரொம்பவே பெருசா இருக்கும்” என்று அவள் கூற அவன் திருதிருவென விழித்தான்.

 

“எனக்கு ஒண்ணுமே புரியலை மேடம்.”

 

“உங்க மனைவி எதிர்வீட்டுக்கு போன ஆதாரம் இல்லை. நீங்க வந்து ஒரு நாள் முழுக்க அவுங்களைத் தேடிருக்கீங்க. ஆனா அவுங்க எதிர்வீட்டில் இருந்திருக்காங்க. எப்போ போனாங்கன்னு உங்களுக்கு தெரியாது. ஆனா நிச்சயம் நீங்க வரதுக்கு முன்னாடி போயிருக்கணும்.”

 

“ஆமா.. சரிதான்..” என்று அவன் கூற, “என்னோட கணிப்பு சரின்னா உங்க மனைவி நீங்க வந்த அன்னைக்குக் காலைல நாலுலேருந்து அஞ்சு மணிக்குள்ள அந்த வீட்டுக்கு போயிருக்காங்க” என்று அவள் கூற, அவன் மீண்டும் குழப்பத்துடன் அவளைப் பார்த்தான்.

 

“அதெப்படி உறுதியா சொல்றீங்க.”

 

“இந்த நிழல் வச்சுத்தான்.”

 

“அதெப்படி.”

 

“முதல்ல இந்த நிழல் எந்த பொருளோட நிழல்ன்னு பார்க்கலாம்” என்று வேறு ஒரு கேமராவின் காணொளியை ஓடவிட்டாள். 

 

“இங்க பாருங்க கீதன். இந்த குப்பைத்தொட்டியோட நிழல்தான் நாம இன்னொரு வீடியோல பார்த்தது. நாலு மணிக்கு இந்த நிழலோட அளவைப் பாருங்க. அது கிட்டத்தட்ட அஞ்சு மடங்கு பெருசா இருக்கு” என்றவள் மேலும் சில நொடிகள் அந்த காணொளியை ஓடவிட்டாள். 

 

“இப்போ பாருங்க. நாலு பத்து மணி. அந்த நிழலோட அளவு சின்னதா இருக்கு. அறிவியலின் கருத்துப்படி இது சாத்தியமில்லை” என்று கூறியவள் அந்த காணொளியை ஐந்து மணி வரை ஓடவிட்டாள்.

 

“இப்போ பாருங்க. இவ்வளோ நேரம் சின்னதா இருந்த நிழல் திடீர்னு பெருசா இருக்கு” என்று அவள் கூற அவனுக்கு அப்பொழுது அனைத்தும் விளங்கியது.

 

“அப்போ யாரோ கேமராவை ஹேக் பண்ணிருக்காங்க.”

 

“யெஸ்.. யூ ஆர் ரைட். இந்த ஒரு மணிநேரம் ஒரு சின்ன பிட் வீடியோவை ஒட்ட வச்சிருக்காங்க‌. அதுக்கு முன்னாடி இருக்கதும் உண்மை. அதுக்கு பின்னாடி இருக்கதும் உண்மை. அப்போ அந்த நேரத்தில் ஏதோ நடந்திருக்கு” நற்பவி.

 

கீதன் மலைத்து நின்றான். அப்படி என்ன நடந்திருக்ககூடும். காணாமல் போன பெண் எதற்காக அங்கு வந்தாள். அவளை நிரண்யா பார்த்தாளா? இல்லை யாரேனும் அந்த பெண்ணைக் கடத்தி வந்தனரா? என்று மூளையைக் குடையும் வினாக்கள். 

 

சிறிது நேரம் சிந்தித்தவள், “உங்க அப்பார்ட்மெண்ட்டில் எத்தனை செக்கியூரிட்டி” என்று வினவினாள்.

 

“அது இருக்கும் பத்து. நானூறு வீடு இருக்கு.. நாலு கேட் இருக்கு” என்றான் கீதன். 

 

“அடுத்து அவுங்களை விசாரணை செய்யணும். ரகசியமா” என்று கூறியவள், அவனிடம் சில விஷயங்கள் கூறி அனுப்பி வைத்தாள். 

 

திக்குத் தெரியாமல் நின்றிருந்த வழக்கில் சில தடயங்கள் கிடைத்திருக்கிறது. அடுத்த என்ன செய்ய வேண்டும் என்று ஒரு வெள்ளைக் காகிதத்தில் எழுதினாள். இம்முறை காகிதத்தைக் கசக்கி எரியவில்லை. தன் சட்டைப் பையில் பத்திரமாய் வைத்தாள்.

 

திகையாதே மனமே!

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்