Loading

யக்ஷித்ராவின் திடுக்கிடலுடனானத் திகைத்தத் தோற்றத்தைக் கண்ட நேஹாவோ, ‘கணவன், மனைவிக்கிடையே ஏதோ கருத்து வேறுபாடு போலும், அதைக் கிளறிக் குளிர் காய்வது தவறு’ என்பதால்,

 

*ஏதோ வேலையாக இருப்பாங்களா இருக்கும். அதான், ப்ரோ, உன்னை டிராப் பண்ணலை போல” என அவளே விடையளித்துக் கொண்டாள்.

 

அதைக் கேட்கவும் நிம்மதிப் பெருமூச்சு வந்தது யக்ஷித்ராவிற்கு.

 

“அதே தான் நேஹா! ஆஃபீஸில் ஏதோ புது பிராஜக்ட் வருது போல, மனுஷன் முகமே சரியில்லை. விட்டுப் பிடிச்சுத் தான், அதைப் பத்திக் கேட்கனும்” என்று தோழியிடம் கூறினாள்.

 

“ஓகே யக்ஷி” என்று நேஹாவும் அடுத்ததை துருவிக் கேட்கவில்லை என்பதில் ஆசுவாசமடைந்து வேலையில் ஆழ்ந்தாள் யக்ஷித்ரா.

 

அதற்கு  மேல் இவளிடம் கேட்பதற்கும் நேஹாவிற்கு அந்தளவிற்கு உரிமையும் இல்லையே?

 

அடுத்த மாதம் தொடங்கியது கூட நினைவில்லாமல், தன் பிராஜக்ட்டைச் செய்து முடித்தான் அற்புதன். ஆனால் அதற்குப் பிறகு, தான் சூழல் தலைகீழாக மாறப் போகிறதே?

 

சண்டை என்பதே இல்லாத பொழுது, கழுகு போல அவர்களைப் பார்த்திருந்தக் கீரவாஹினி, கணவனின் கூற்றிற்கு உடன்பட்டு, மகன் மற்றும் மருமகளைக் கவனியாமல் விட்டு விட்டார்.

 

அதுவே அவர்களுக்கும் தேவையானதாகப் போய் விட்டது. தங்களுக்குள் இருக்கும் சிறு பூசலை,‌ அவர்களிடம் பெரிய விஷயமாக எடுத்துக் காட்டி, பதைபதைக்க வைப்பதில் இருவரும் விரும்பவில்லை.

 

ஆனால் , அவளிடம் கதைக் கேட்க ஆரம்பித்ததில் இருந்து தான், இருவருக்கும் இடையேயான அன்னியோன்யம் வளர்ந்து கொண்டிருந்ததை அப்போதே உணர்ந்திருந்தான் அற்புதன். இவன் தான் அலுவலகப் பிரச்சனையில் அவளிடம் கடுமையாகப் பேசி விட்டான். யக்ஷித்ராவும் மீண்டும் எதற்குப் பேசி, அடுத்து ஏதாவது மனக்கிலேசம் ஏற்பட வேண்டும் என்று விட்டு விட்டாள் போலும்.

 

அவளிடம் கதை வேண்டாம் என்று கோபத்தில் கூறிய அற்புதனுக்கு, அன்றைய தினம், அவனது அலுவலகம் எதிர்பாராத விஷயம் ஒன்றை வைத்துக் காத்திருந்தது போல!

 

அதை அறியாமல்,” அற்புதா! உன்னோட டூவீலர் ரிப்பேர் ஆகிப் போச்சாடா?” என்று இடுங்கிய கண்களுடன் விசாரித்தார் அகத்தினியன்.

 

சாப்பிடுவதை நிறுத்தி விட்டு, “இல்லையே அப்பா” என்றுரைத்தான் அற்புதன்.

 

“யக்ஷியை டிராப் பண்ணலையே, அதான் கேட்டேன்?” என்றார்.

 

யக்ஷித்ரா தன் தோழியிடம் மாட்டிக் கொண்டதைப் போல, இங்கு தந்தையிடம் சிக்கிக் கொண்டு முழித்தான் அற்புதன்.

 

“கேப் அலர்ட் செய்து கொடுத்திருப்பாங்க அப்பா. அதான், எங்கூட வர்றேன்னுக் கேட்கலை” எனத் தடுமாறினான்.

 

அவன் சொல்லிய பொய் என்றாலும், அன்று யக்ஷித்ராவின் மேலதிகாரி அவளை அழைத்து,”உங்களுக்கான கேப் என்னன்னு அலர்ட் செய்தாச்சு மிசஸ்.யக்ஷித்ரா. உங்களோட சேர்த்து, இன்னும் ரெண்டு பேருக்கான கேப் டீடெயில்ஸ்ஸை, நோட்டிஸ் போர்டில் போட்டு இருக்கோம். பார்த்துக்கோங்க! இன்னைக்கு இருந்தும், இனிமேலும்,  அதிலேயே நீங்க வீட்டுக்குப்  போயிடலாம்” என்று தெரிவித்தார்.

 

அதைக் கேட்டதும், இனிமேல், அடித்துப் பிடித்து, தயாராகி, பேருந்திலோ அல்லது வாடகை வண்டியிலோ அலுவலகத்திற்குப் போகத் தேவையிருக்காது என்று அவளுக்கு நிம்மதியாக இருந்தது.அதற்காக அவரிடம் நன்றி தெரிவித்து விட்டு வந்தவள், கணவனுடன் அவனது இருசக்கர வாகனத்தில் சென்ற நாள் வேறு நினைவுக்கு வரவும் சிரமப்பட்டு ஒதுக்கினாள் யக்ஷித்ரா.

 

இங்கு மனைவிக்கு அலுவலகத்தில் ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது என்றால், கணவனுக்கோ, பெரிய அதிர்ச்சியைத் தலையில் ஏற்றியது.

 

“கைஸ்! நைட் ஷிஃப்ட் யார் யாருக்கெல்லாம்னு, லிஸ்ட் வந்துருச்சு” என்று ஒவ்வொரு பெயராக வாசித்தார் அங்கே வேலை செய்யும் ஒருவர்.

 

அதில் தன்னுடைய பெயர் வந்திருக்கவே கூடாது எனப் பிரார்த்தித்து நிமிர்ந்தவனது செவிகளில்,”அண்ட் தி லாஸ்ட் மெம்பர் இஸ்.. மிஸ்டர்.அற்புதன்” என்று செவ்வனே சொல்லி முடித்திருந்தார் அவர்.

 

“உஃப்” என்ற எரிச்சல் மிகுந்த ஒலியை எழுப்பி விட்டு, அவ்விடத்திலேயே நின்று விட்டான் அற்புதன்.

 

அங்கிருப்போர் கண்கள் எல்லாம் அவனையே மொய்க்க ஆரம்பித்தது.

 

அதனால், தன் இருக்கைக்குச் சென்று சிறிது தண்ணீர் அருந்தியவனோ, நிறுவனத்தின்‌ உரிமையாளரை மனதிற்குள் அர்ச்சித்தான் அற்புதன்.

 

“ஹேய்! காங்கிராட்ஸ்” என்று ஏதோ அவனுக்கு பதவி உயர்வு வந்ததைப் போல, வாழ்த்துகள் கூறினர் சக ஊழியர்கள்.

 

அவர்களது வாழ்த்தில் இருந்தது சுத்தமான கேலி என்பது அவனுக்கும் தெரிந்திருந்தது. ஆனால், அதைத் தட்டிக் கேட்கக் கூடத் தோன்றாமல், இறுதிப் போயிருந்தான் அற்புதன்.

 

“தாங்க்யூ வெரி மச்!!” என்று இவன் பற்களை நறநறத்தவாறே அவர்களுக்கு நன்றி கூறினான்.

 

“இனிமேல் ஜாலி தான்.. காலையில் அஞ்சு மணியிலிருந்து, சாயந்தரம் மூனு மணி வரைக்கும் தூக்கம் கிடைக்குதுன்னா, நீ ரொம்ப லக்கி அற்புதன்!” என்று கிண்டலடித்தனர்.

 

“கைஸ் லீவ் மீ ப்ளீஸ்!” என்று அழுத்தத்துடன் உரைத்துக், கேபினை விட்டு வெளியேறியவன்,

 

தன் மொபைலில் இருந்தே, அரைநாள் விடுப்பிற்கான கடிதத்தை தயார் செய்து அலுவலகத்தின் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டு, வீட்டிற்குச் சென்றான் அற்புதன்.

 

யக்ஷித்ரா வர மாலை ஆகும், இப்போது பெற்றோரின் அரவணைப்பைத் தேடியது அவனுடைய மனம்.

 

அழைப்பு மணியை அடித்து விட்டுக் காத்திருந்தான்.

 

ஓரிரு மணித்துளிகள் கடந்ததும், “யாரு?” என உள்ளிருந்த விசாரிப்புக் குரல் கேட்கவும்,

 

“நான் தான் அற்புதன் ம்மா!” எனக் கூறினான்.

 

உடனே கதவு திறக்கப்பட்டது.

 

ஆச்சரியப் பாவனையுடன்,”டேய்! என்னடா பாதி நாள் தான் ஆஃபீஸ் இருந்துச்சா?” என்று அவன் உள்ளே வர வழி விட்டார் கீரவாஹினி.

 

“இல்லை ம்மா‌. நான் லீவ் எடுத்துட்டேன்” என்று வருத்தத்துடன் கூறினான் அற்புதன்.

 

“ஏன் டா? உடம்பு சரியில்லையா?” எனப் பரிவாக வினவினார் அவனது தாய்.

 

மகனின் குரலைக் கேட்டு அவ்விடத்திற்கு வந்த அகத்தினியன்,

 

“அற்புதா! என்னடா இப்போ வந்திருக்க?” என்றார்.

 

“லீவ் ப்பா” எனப் பதில் சொன்னான்.

 

“யக்ஷியும் வர்றாளா?” என்று வாசலைப் பார்த்தார் கீரவாஹினி.

 

“நான் லீவ் எடுத்ததே அவகிட்ட சொல்லலை ம்மா! ஆஃபீஸ் முடிஞ்சு வரட்டும்” என்றவன்,

 

தாயைப் பார்த்து,”நான் டிரெஸ்ஸை மட்டும் மாத்திட்டு வர்றேன் ம்மா” என அறைக்குப் போனான் அற்புதன்.

 

“பொண்டாட்டிக்குத் தெரிய வேண்டாம்னு இவன் சொன்னாலும், சாயந்தர வீட்டுக்கு வந்து இதை தெரிஞ்சு, யக்ஷி கேட்க மாட்டாளா ங்க?” என்று கணவனிடம் முறையிட்டார் கீரவாஹினி.

 

“ஆமாம் வாஹி. இவனைக் கால் பண்ணி சொல்லச் சொல்லுவோம்” என்று கூறினார் அகத்தினியன்.

 

மகன் சோர்வாக வந்தமர்ந்தாலும்,”யக்ஷிக்குக் கால் பண்ணி சொல்லுடா” என்று அவனுக்கு அறிவுறுத்தினார் தந்தை.

 

“ஏன் ப்பா? அவளையாவது நிம்மதியாக இருக்க விட்றேன்!” என்று கத்தினான் அற்புதன்.

 

“டேய்!” என அவனது கரத்தைப் பற்றிக் கொண்டார் கீரவாஹினி, அவனுக்காக நீரைக் கொணர்ந்து வந்தார் அகத்தினியன்.

 

“ஆஃபீஸூல் என்னாச்சு? பிராஜெக்ட் எதுவும் நினைச்ச மாதிரி வரலையா?” என்று வினவினார்கள்.

 

“எனக்கு நைட் ஷிஃப்ட் போட்டுட்டாங்க!” என்றான் அற்புதன்.

 

“இதுக்கு ஏன்டா இவ்ளோ டிப்ரஷன் உனக்கு வருது?” என்று கேட்டார் கீரவாஹினி.

 

“என்னோட ஃபுட் சிஸ்டம், ஸ்லீப்பிங் ஷெடியூல் எல்லாமே மாறும்ல அம்மா?” என்று புகாரளித்தான் மகன்.

 

“வேற என்ன அங்கே நடந்தது?” என்று கேட்டார் அகத்தினியன்.

 

“டீஸ் பண்ணாங்க!” என்று வெறுப்புடன் உரைத்தான் அற்புதன்.

 

அதனால் தான், மகனுக்கு இவ்வளவு அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது என்று உணர்ந்தனர் அவனுடைய பெற்றோர்.

 

“உன் பொண்டாட்டிக்குக் கால் பண்ணு” என்று கூறவும்,

 

வேறு வழியில்லாமல், யக்ஷித்ராவிற்கு அழைத்துப் பேசினான் அற்புதன்.

 

எதுக்கு லீவ்? என்றெல்லாம் கேட்காமல், “நானும் வர்றேன் ங்க” என அவளும், விடுப்பு எடுத்து விட்டு வீட்டிற்கு வந்தாள் யக்ஷித்ரா.

 

அவளுக்காக கதவைத் திறந்தவர், அங்கேயே வைத்து மகன் கூறியதை மருமகளிடம் தெரிவித்தார் அகத்தினியன்.

 

மகனுடைய சிரசைத் தன் மடியில் வைத்துக் கொண்டிருந்தக் கீரவாஹினி, மருமகளைக் கண்டதும்,

“வா யக்ஷி” எனக் கூறி விட்டு, மகனை எழுப்பினார்.

 

அவளோ”இருக்கட்டும் அத்தை” என்றாள்.

 

அதற்குள் அவளது கணவன் கண் விழித்து விட்டான்.

 

“யக்ஷூ” என்று அவளை விரக்தியுடன் அழைத்தாள் அற்புதன்.

 

ஏனெனில், மனைவிக்காக, அவளுடைய கதைக்காக, இத்தனை நாட்களாக, ஏங்கிக் கொண்டு இருந்தானே?

 

“போய் ஃப்ரெஷ் ஆகிட்டு, என்னன்னுக் கேளு இவனை!” என்று இருவரையும் அனுப்பி வைத்தார் கீரவாஹினி.

 

“எவ்ளோ படிச்சு, உயர இருக்கிற ஆஃபீஸில் உத்தியோகம் பாத்தாலும், இந்த சுபாவம் போகாதுல்ல ம்மா?” என்றார் அகத்தினியன்.

 

“என்ன மனுஷங்களோ? இப்படியா பிள்ளையைக் கலங்க வைப்பாங்க!” என்று கோபத்தில் வெடித்தார் கீரவாஹினி.

 

“இவனே இப்படி அஃபெக்ட் ஆகுறானே? நம்ம மருமகளுக்கும் இதெல்லாம் நடந்துருக்கும்ல வாஹி?” என்று வினவினார் அவரது கணவன்.

 

“ஆமாம் ங்க‌. அவ அதையெல்லாம் எப்படித் தான் தாங்கிக்கிறாளோ?” என்று யக்ஷித்ராவின் மேல் இருந்தப் பாசத்தையும் காட்டினர் இருவரும்.

 

“ஏன் சீக்கிரம் வந்துட்டீங்க?” என்று கணவனிடம் கேட்டாள் யக்ஷித்ரா.

 

“இன்னைக்கு, ஒரு லிஸ்ட் வந்துச்சு” என்று அனைவரும் தன்னைக் கேலி செய்தது வரைக் கூறி முடித்தான் அற்புதன்.

 

“அதனால் லீவ் எடுத்துட்டு வந்துடறதா?” என்று அதட்டினாள் மனைவி.

 

“வேறென்ன செய்ய? இதைப் பத்தி ஒரு மாசத்துக்கு முன்னாடியே சொல்லியாச்சு. அப்போ இருந்தே பயங்கர டென்ஷன்!” என்கவும் தான்,

 

மூளையில் மணி அடித்ததைப் போல,”அதான், அன்னைக்கு உங்க ரியாக்ஷன் அப்படி இருந்ததா?” என்றாள் யக்ஷித்ரா.

 

“ம்ஹ்ம்” என்று சுரத்தே இல்லாமல் கூறினான் அற்புதன்.

 

“எனக்கு ஸ்கூலில் நடந்ததை எல்லாம் கேட்டீங்கன்னா, இதையெல்லாம் தூசுன்னுத் தட்டி விடுவீங்க!” என்று உரைத்தாள்.

 

“என்ன நடந்துச்சு?” 

 

“உருவக் கேலி, கலரை வச்சு ரொம்ப கிண்டல் செய்வாங்க தெரியுமா?” என்றாள் யக்ஷித்ரா.

 

“அப்படியா? அதையெல்லாம் நீ கதைக்கு இடையில் சொன்னதே இல்லையே?” என்று வினவினான் அற்புதன்.

 

“இப்போ சொல்லவா? கேட்க முடியுமா? இல்லை, வேலையைப் பார்க்கப் போறீங்களா?” என்று தீர்க்கமாக கேட்டாள் யக்ஷித்ரா.

 

“சொல்லு யக்ஷூ! ப்ளீஸ்!” என்று கெஞ்சவும்,

 

தனக்குப் பள்ளியில் நிகழ்த்தப்பட்டக் கேலிக், கிண்டல்களைப் பற்றிக் கணவனிடம் சொல்லத் தொடங்கினாள்.

 

  • தொடரும் 
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்