Loading

விண்கலத்தில் வாழவும் பழகிவிட்டனர். பூமியின் வளிமண்டலம் தாண்டியபின், ஒரே இருட்டு.

“சார்.. இப்போ விண்கலத்தில் ஏதாவது பழுது ஏற்பட்டால் என்ன செய்வீங்க?” ஆரு.

“உன்னைய கீழ இறங்கித் தள்ள சொல்லுவாங்க” தணிகை.

“ஆமா..  உனக்கு வாய்ல நல்ல வார்த்தையே வராதா?” வேதன்.

“இருங்க… இருங்க.. சண்டைப் போடாதீங்க.. உண்மையா பழுது ஏற்பட்டா, ஏதாவது அருகில் உள்ள தரைத் தளத்தில் தரையிறக்கணும். அதன்பிறகு பழுதுபார்க்கணும். ஆனா அவ்வளவு எளிதா அதை செய்துவிட முடியாது. நீ வண்டில போகும்போது பெட்ரோல் தீர்ந்தா என்ன செய்வ” காப்பியன்.

“வண்டில பெட்ரோல் தீர்ந்துச்சுன்னா வண்டியைத் தள்ளிக்கிட்டே வீட்டிக்கு போகணும்” தணிகை.

“இங்க நீ தள்ளவே வேண்டாம். அதுவா போகும்” காப்பியன்.

“அதெப்படி..” ஆரு.

“பலூன் மாதிரி நீ பறந்து எல்லைகள் கடந்து போய்கிட்டே இருப்ப” காப்பியன்.

“சார்.. பலூன் மேல பறக்குறதுக்கு காத்துதானே காரணம். அதுதான் இங்க இல்லையே” நேரு.

“காத்து இல்லைமா… ஈர்ப்பு விசையும் இல்லை. ஆனால் விண்வெளயில் ஒரு வேகம் இருக்கும். அது ஒரு உந்துசக்தி மாதிரி. இப்போ இந்த ஷட்டிலைவிட்டு தவறி வெளில விழுந்தா கொஞ்ச நேரத்தில் நம்ம ஆக்ஸிஜன் இல்லாம உயிர் போயிடும். ஆனா நம்ம டெட்பாடி ஸ்பேஸ்ல மிதந்து போயிக்கிட்டே இருக்கும். அது ப்ளூட்டோ வரைக்கும் கூட போகும். இல்ல விண்வெளி குப்பைகளா நாம மிதந்துட்டே இருக்க வேண்டியதுதான்” காப்பியன்.

“சார்.. போதும் இந்த டாபிக்‌.. தலையை சுத்துது” மதுபல்லவி.

“சரி எல்லாரும் படுங்க..” என்ற காப்பியன் அவர்களுக்கான இடங்களை காண்பித்தான்.

ஊதிய பலூன் போல் ஒரு படுக்கை. அதில் சுற்றிலும் பெல்ட்.

காப்பியன் அதன் மேலே படுத்து, தன்னைச் சுற்றிலும் பெல்டை அணிந்து கொண்டு படுத்ததும், மற்றவர்களும் ஏறி அவ்வாறே படுத்தனர்.

“சார்.. தூங்குறப்போ கூட நல்லா தூங்க முடியாதா?” வேதன்.

“இங்க வாழ ஒரு வழிமுறை இருக்கு. அதை நாம எல்லாரும் பின்பற்றியே ஆகணும்” காப்பியன்.

அனைவரும் உறங்க தயாராக, “என்ன சார் ராக்கெட் ஓட்டுற எல்லாரும் வந்து படுத்துட்டாங்க. இது பாதை மாறிப் போச்சுனா” தணிகை.

“டேய்.. இது பஸ் இல்லடா… வளைஞ்சு நெளிஞ்சு போக. ஒருத்தர் மட்டும் இருப்பாங்க. அவுங்க நம்ம ஸ்டேஷனோட கணெக்ஷனில் இருப்பாங்க” காப்பியன்.

காலையில் எழுந்ததும் பல் துலக்குவதில் இருந்து அனைத்தையும் காப்பியன் பாடம் எடுத்தான். ஒரு பெரிய பை போல் இருந்தது. அதில் பேஸ்ட், ப்ரஷ், சோப் என்று சகலமும் இருந்தது. ஒரு அலுமினியம் ஃபாயில் நிறத்தில் ஏர் லாக் பையில், தண்ணீர் இருந்தது.

“சார்.. இது எப்படி பத்தும் பல்லு விளக்க?” சித்திரன்.

“இரு.. ஒரு நிமிஷம்… நான் எப்படி பண்றேனோ அப்படி செய்யணும்” காப்பியன்.

ஒரு ப்ரஷை எடுத்தவன் அதை அப்படியே விட்டுவிட்டு பேஸ்ட்டை எடுக்கத் திரும்பினான். ப்ரஷ் அதுவரை அவன் முகத்தின் முன் முன்னும் பின்னும் மிதந்துகொண்டிருந்தது. பின் அதைப் பிடித்து, அதில் பேஸ்ட்டை வைத்தான்.  ஏர்லாக் பையில் இருந்த தண்ணீரை கொஞ்சம் அமிழ்த்தினான். அந்த பையிலிருந்து வெளியில் வந்து நீர், முன்னும் பின்னும் நடனமாடியது. ஒருதுளி நீர் கூட கீழே சிந்தவில்லை. அதை பேஸ்ட்டில் வைத்து, பல்லில் முன்னும் பின்னும் வைத்து தேய்த்தான். அவன் என்ன செய்கிறான் என்று அனைவரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

அனைவரையும் பார்த்தவன் விழுங்கிவிட்டான். அனைவரும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டனர்.

“இந்த பொழப்புக்கு எதுக்கு வெள்ளையும்‌ சொள்ளையுமா திரியனும். எச்சித் துப்ப கூட முடியாதுபோல” தணிகை.

“கரெக்ட்… காரித் துப்புனா திரும்ப மிதந்து உன் மூஞ்சிக்கே வரும்” காப்பியன்.

“பல்லு விளக்குனாத்தான இந்த பிரச்சனை. நாங்க விளக்கமாட்டோம்பா” இரட்டையர்.

“விளக்குனா உனக்கு மட்டும்தான் பிரச்சனை. விளக்கலைனா சுத்தி உள்ள எல்லாருக்கும் பிரச்சினை” சித்திரன்.

“சார்.. அதுல நிறைய கிருமி இருக்கும். வயிறு கெட்டுப்போகாதா?” இரட்டையர்கள்.

“இல்லமா.. ஒன்னும் ஆகாது. அதுக்கு தகுந்த மாதிரிதான் நமக்கு உணவு தருவாங்க” காப்பியன்.

“சார்.. குளிப்பீங்களா மாட்டீங்களா..” வேதன்‌.

“என்ன எல்லாம் புதுசா கேக்குற. உனக்கு இங்க எப்படி இருக்கணும்னு வீடியோ போட்டுக் காண்பிச்சோமே. என்ன செஞ்ச” காப்பியன்.

“தூங்கிட்டோம். கிலாஸ்லயே பாடம் கவனிச்சதில்ல. வந்துட்டாங்க” தணிகை.

“சார்.. ஒரு டவுட்.. செவ்வாய்ல போய் ப்ரஷ் பண்ண முடியுமா..” நேரு.

“முடியும்மா… அங்க தண்ணிக்கு ரெடி பண்ணிட்டோம்” காப்பியன்.

“சரி எல்லாரும் ப்ரஷ் பண்ணுங்க.. அடுத்து குளிக்கப் போகலாம்” காப்பியன்.

“சார் அவசியம் ப்ரஷ் பண்ணியே ஆகணுமா” சித்திரன்.

“அவசியம் செஞ்சே ஆகணும்.”

“எனக்கு கொஞ்சம் எச்சில் உள்ள போனாலும் வாந்தி வந்திடும்.. என்ன செய்றது?” சித்திரன்.

“அவர் மூஞ்சிலையே எடு” தணிகை.

“அதுக்குத்தான் வழியில்லையே” ஆரு.

“அப்ப முழுங்க வேண்டியதுதான்” தணிகை.

“என்ன வாந்தியை முழுங்கணுமா?” சித்திரன்.

“நீ வாந்தி எடு.. இல்ல முழுங்கு.. ஆனா பல்லு விளக்கணும்” காப்பியன்.

பின் சதுர வடிவில் உள்ள வெள்ளைத் துணி ஒன்றில் லேசாக தண்ணீரும், க்ரீம்போல் ஒன்றையும் தடவி, அதை வைத்து முகம் மற்றும் கைகால் துடைத்தான்.

“இதுக்கு பேருதான் குளிக்கிறதா?” வேதன்.

“யெஸ்.. டவல் பாத்..” காப்பியன்.

“எங்க ஊர்ல வேற பேரு இதுக்கு.. காக்கா குளியல்” தணிகை.

“இதுக்கே இப்படியா… இன்னொரு விஷயம் இருக்கு. அதை நீ தெரிஞ்சுக்க வேண்டாம்” காப்பியன்.

அனைவரும் குளித்துவிட்டு வந்தபின்னர் தேனீர் கலந்து வைத்திருந்தான். அதை அருந்திக்கொண்டிருந்தனர்.

“சார்.. என்னமோ தெரிஞ்சுக்க வேண்டாம்னு சொன்னீங்களே. அது என்ன?” சித்திரன்.

“ரொம்ப ஆர்வம் போல?” காப்பியன்.

“சும்மா சொல்லுங்க சார்.. பல்லு விளக்குன எச்சிலை முழுங்கினதோட ஒண்ணும் ஷாக்கா இருக்காது” தணிகை.

“நீ குடிக்கிற ப்ளாக் டீ உன்னோட யூரின்லேந்து தயார் செஞ்சது” என்று கூறி முடிக்க, அவன் துப்பப் போனான்.

காப்பியன் எழுந்து சென்று அவன் வாயை மூடிவிட்டான். மற்ற அனைவரும் மலங்க மலங்க விழித்தனர்.

“ஆத்தாடி… இம்புட்டு நேரம் மூத்தரத்தையா குடிச்சோம்” திருநல்லன் முதன்முதலாக வாயைத் திறந்தார்.

“அது அப்படியே குடிக்கல சார்.. அதை சுத்திகரிச்சு சுத்த தண்ணீயா பிரிச்சு அப்புறம் அதை பயன்படுத்துவோம்” காப்பியன்.

“எப்படி சார் முகம் சுழிக்காம உங்களால குடிக்க முடியுது?” இரட்டையர்.

“முதல் காரணம், நாம பூமில குப்பையைப் போடுற மாதிரி, விண்வெளில போட முடியாது. ஏனா இங்க மிதந்துட்டே இருக்கும். இன்னொரு விஷயம், அதை ஸ்டோர் பண்ணி கைக்கவும் முடியாது. ஏதாவது லீக்கேஜ் வந்தா நம்ம இங்க இருக்கவே முடியாது. அப்புறம் தண்ணி நிறைய நம்ம கொண்டும் வரமுடியாது. இந்த மாதிரி பல காரணங்கள் இருக்கு” காப்பியன்.

“நீங்க என்ன காரணம் சொன்னாலும் யூரின் பன்னீராகாது சார்.  வீட்லயாச்சும் தண்டச்சோறுன்னு சொல்லி தண்டமா திட்டுனாங்க. இது என்ன தண்டனை மாதிரி இவன் யூரின் அவன் யூரின்லாம் குடிக்கணும்னு தலையெழுத்தா எனக்கு” தணிகை.

“பாத்துக்கோங்க. ஈர்ப்புவிசையும் காத்தும் இல்லைனா என்னலாம் நடக்கும்னு. பூமில எல்லாம் இருக்கதால நாம குப்பையைப் போட்டுட்டு போய்கிட்டே இருக்கோம். இந்த மாதிரி பூமி ஒருநாள் நமக்கு திருப்பிக் கொடுத்தா தெரியும்” காப்பியன்.

“சார்… யூரினைக் குடிக்க வச்சிட்டு பிரசங்கம் வேற செய்றுங்களே.. இது உங்களுக்கே நியாயமா?” இரட்டையர்.

“இப்போ சென்னைல சாக்கடைத் தண்ணீய சுத்திகரிப்பு செஞ்சு டாய்லெட்க்கு பயன்படுத்தல.. அந்த மாதிரிதான் இதுவும்” காப்பியன்.

“அதுவும் இதுவம் ஒண்ணா?” வேதன்.

“அப்படித்தான் நினைச்சுக்கணும்” காப்பியன்.

மதுபல்லவி அதீத களைப்பால் நல்ல உறக்கத்தில் இருந்தாள். அவள் தூங்கட்டும் என்று அவளை எழுப்பவில்லை.

ஒவ்வொரு விஷயத்திற்கும் மலைத்து மலைத்து இறுதியில் பழகியும்விட்டனர் அனைவரும். செவ்வாயில் தரையிறங்கும் நாளும் வந்தது.

பயணம் ஒருவழியாக சில மணிநேரங்கிளில் முடிவுக்கு வரவுள்ளது. அனைவரும் சாரளம் வழியே செவ்வாய் கிரகத்தைப் பார்த்தனர். சிவப்பு நிறத்தில் உருண்டையாக காட்சியளித்தது விண்ணில் இருந்து பார்க்கும் பொழுது. செவ்வாய் வளிமண்டலம் வந்து சேர்ந்துவிட்டனர். தூரத்தில் இருந்து பார்க்க கிரகத்தில் ஆங்காங்கே பொத்தல்களும் மேடுகளும் தென்பட்டது. பூமியும் ஒரு காலத்தில் இப்படி இருந்திருக்கக்கூடும் என்ற மாயத்தோற்றத்தை கொடுத்தது.

இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஆக்சைடு இக்கோளைச் செந்நிறமாகக் காட்டுகிறது.

செவ்வாய் கோளின் மேற்பரப்பில் சந்திரனில் உள்ளதுபோல் கிண்ணக் குழிகளும், புவியில் உள்ளது போன்ற எரிமலைகள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள், பனிமூடிய துருவப் பகுதிகளையும் கொண்டது. செவ்வாயின் சுழற்சிக்காலமும், பருவ மாற்றங்களும் புவிக்கு உள்ளதைப் போன்றவையே. சூரிய மண்டலத்துள் மிக உயரமான ஒலிம்பசு மலையும், மிகப்பெரிய செங்குத்துப் பள்ளத்தாக்குகளுள் ஒன்றான மரினர் பள்ளத்தாக்கும் செவ்வாயிலேயே உள்ளன.

செவ்வாயின் நிறம் சிவப்பு. அதனால்தான் கதைக்கு அக்கினிப் பழத்தில் அரைத்த ஆரல்னு வச்சிருக்கேன்.

அக்கினி பழம் – நெருப்பின் பழம்பு சிவப்பு

ஆரல் – செவ்வாய்.

ஆரல் வளரும்…

கொஞ்சம் சின்ன எபிதான். எனக்கு என்ன தகவல்கள் கிடைக்கிதோ அதை சின்ன சின்னதா எபியா எழுதிடுறேன். ஏனா பெருசா எழுத தகவல் திரட்டி அதை எழுதி முடிக்கிறதுக்குள்ள எனக்கே ப்ஃளோ மறந்திடுது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்