Loading

 

 

அத்தியாயம் 1

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா!
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா!

“ம்ம்க்கும் பாடி பாடி பல்லு வலி வந்தது தான் மிச்சம்…” அதிகாலையிலேயே தன்னுடைய குரல் வளத்தைக் காட்டிக் கொண்டிருந்த தன் நண்பனான ‘ஜிம்மி’ என்கிற ஜெமினியின் பாடலைக் கேட்டு சலித்தான் சத்ரேஷ்.

தன்னுடைய அழகான குரல்வளத்தை கேலி செய்த நண்பனை நோக்கி நெற்றிக்கண்ணை திறக்க அவன் செய்த முயற்சி, சத்ரேஷின் கனல் பார்வையில் தன்னிச்சையாக அடங்கிவிட்டது.

அதில், “எனக்கு பல்லு வலி வந்தா உனக்கு தானடா லாபம். உன் பல் டாக்டர் தொழில் விருட்சம் அடையுறதுக்காக நான் ரெண்டு பல்லு தானம் பண்ணிருக்கேன் சத்ரு! ஞாபகம் இருக்கட்டும்.” என்றான் தீவிரத்துடன்.

ஏற்கனவே கடுங்கோபத்தில் இருந்த சத்ரேஷின் அகன்ற விழிகள் நெருப்பைக் கக்க, “உன்னால எனக்கு பல லட்சம் லாஸ்டா பன்னாட. உன் வீணாப்போன டாக்டர் ஃப்ரெண்ட நம்பி, அவ்ளோ பெரிய டெண்டல் ஹாஸ்பிடல கட்டி வச்சா, அந்த நாய், நான் லோன் வாங்கி ஹாஸ்பிடல் கட்டுற வரை சும்மா இருந்துட்டு, திடீர்ன்னு ஃபாரின்க்கு ஓடிட்டான். அவன் தரேன்னு சொன்ன ஷேரை மட்டும் ஒழுங்கா தந்துருந்தா இந்நேரம், என் ஹாஸ்பிடலை பெரிய அளவு ரீச் பண்ணிருப்பேன். பரதேசி.” என்று சீறினான்.

ஜிம்மியோ, “நெருப்பு சுட்டா காயம் ஆறும். வார்த்தை சுட்டா ஆறாது சத்ரு ஆறாது.!” என்று டி. ஆர் பாணியில் வராத கண்ணீரைத் துடைக்க, கட்டிலில் படுத்திருந்த சத்ரேஷ் உடனடியாக எழுந்து,

“எதே… எதே… நெருப்புல சுட்டா ஆறிடுமா? இங்க வாடி ஜிம்மி. எப்படி ஆறுதுன்னு நானும் பாக்குறேன்.” என உடும்புப் பிடியாக ஜெமினியின் கையைப் பற்றி தரதரவென அடுக்களைக்கு இழுத்துச் சென்றான்.

“ஐயோ காப்பாத்துங்க. காப்பாத்துங்க!” என்ற ஜெமினியின் கதறல் யார் காதிலும் விழவில்லை போலும். குளியலறையில் நீராடிக் கொண்டிருந்த அவர்களின் மற்றொரு நண்பன் திலீப்பிற்கும் கேட்காது போனதோ! அல்லது கேட்டும் கேட்காதது போல உள்ளேயே நின்று கொண்டானோ அதனை அவன் மட்டுமே அறிவான். பின்னே தற்போது வெளியில் சென்றால் அதே சூடு அவனுக்கும் அல்லவா வைக்கப்படும்.

ஜெமினி கதற கதற, கரண்டியை சூடு செய்து, அவன் தொடையில் வைத்தே விட்டான் சத்ரேஷ்.

“ஆ… ஆ… கொலைகாரப் பாவி. உன் ஹாஸ்பிடல் இடிஞ்சு தரைமட்டமா தான் போகும்.” என வலியில் சாபம் கொடுத்தவன், மீண்டும் கரண்டியுடன் சத்ரேஷ் அருகில் வருவதைக் கண்டு,

“இல்ல இல்ல. நீ பெரிய ஆளா வருவ பாரு.” என உடனே சமாளித்தான்.

சத்ரேஷ் 27 வயது நிரம்பிய பல் மருத்துவர். பெற்றோர்கள் திருச்சியில் வசிக்க, நண்பர்கள் இருவரும் சென்னையில் தொழில் பார்த்துக் கொண்டிருந்ததில், அவர்களின் வற்புறுத்துதலின் பெயரில் அவனும் சென்னைக்கு இடம் பெயர்ந்திருந்தான்.

சிறியதாக க்ளினிக் ஒன்றை நிறுவி, நன்றாகவே மருத்துவர் தொழிலை நடத்திக் கொண்டிருந்தான். அவனது பெயரும் சுற்று வட்டாரம் முழுக்க பரவலாகவே இருந்தது. அதனைக் கெடுக்கவென்றே ஒரு யோசனையுடன் அவனிடம் வந்தனர் ஜெமினியும் திலீப்பும். மூவருமே சிறு வயது முதல் நண்பர்கள் தான்.

சத்ரேஷ் நேர்மையாக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருக்க, மற்ற இருவருமோ பழங்கால சிலைகளை கைமாற்றும் வேலை செய்து, அதில் பணம் பார்த்தனர். அந்நேரம் தான், சத்ரேஷிடம் பார்ட்னராக விரும்புவதாக ஒருவனை அழைத்து வந்தனர் நண்பர்கள். அவனும் பல் மருத்துவர் தான். நன்றாகவே திட்டம் கூறி சத்ரேஷை வங்கிக்கடன் வாங்க வைத்து விட்டு, வெளிநாட்டில் வேலை கிடைத்து விட்டதாக சென்று விட்டான்.

அந்த கோபத்தை தான் இப்போது நண்பர்கள் மீது காட்டினான். பொறுமையாக குளித்து முடித்து வெளியில் எட்டிப் பார்த்த திலீப், “ஹப்பாடா! சாந்தமாகிட்டான் போல.” என்ற நிம்மதி பெருமூச்சுடன் வெளியில் வர, திடீரென இடுப்பில் சுள்ளென்ற வலி எழுந்ததில் துள்ளி குதித்தான்.

சத்ரேஷ் தான், திலீப்பின் வெற்று இடுப்பில் சூடு வைத்திருந்தான்.

“ஏண்டா! இப்படி டார்ச்சர் பண்ற. அதான் உனக்கு நிறைய பேஷண்ட் வர்றாங்கள்ல. அப்பறம் என்ன?” என சூடு பட்ட இடத்தைத் தேய்த்தபடி எகிற,

“வெளக்கெண்ண! முதல்ல க்ளினிக் மட்டும் இருந்துச்சு, சமாளிச்சுட்டேன். இப்ப இவ்ளோ பெரிய ஹாஸ்பிடல்க்கு மாசா மாசம் இ.எம்.ஐ செத்துப் போன உன் தாத்தாவா கட்டுவாரு.” எனக் கடிந்தபடி திலீப்பின் கையை முறுக்கினான் சத்ரேஷ்.

“டேய்! டேய் கைய விடுடா. உனக்காகவாவது நான் சீக்கிரம் ரௌடி ஆகிடுறேன்” என்ற திலீப்பின் கூற்றில், புரியாமல் பார்த்த சத்ரேஷ், “என்ன ரௌடியா?” என்றான்.

“ஆமாடா! நான் ரௌடி ஆகிட்டா, டெய்லி நாலு பேரு பல்ல உடைப்பேன். அவங்க பல்லு உடைஞ்சா உனக்கு தொழில் அமோகமா இருக்கும்ல” என முகம் மின்ன யோசனை கொடுக்க,

சூடு பட்ட இடத்தை தேய்த்தபடியே அவனை எரிச்சலுடன் முறைத்த ஜெமினி, “கிழிச்ச. சிலையை கை மாத்த கூட வரும் போது ஒரு போலீஸ்காரனை பார்த்தாலே, பேண்ட்ல சுச்சு போற அளவு பயந்தாங்கொல்லி நீ… வந்துட்டான் ரௌடி ஆகுறேன், ரெட்டி ஆகுறேன்னுட்டு…” எனத் திட்டிவிட்டு, சத்ரேஷிடம்,

“நான் தான் சொன்னேன்ல. ஒரு தடவை எங்க கூட சிலை கை மாத்த வா, காசு கிடைக்கும்ன்னு. ஒரு தடவை வர்றதுல உனக்கு என்ன குறைஞ்சுட போகுது.” என்றிட, சத்ரேஷ் இன்னுமாக உறுமினான்.

“உழைக்காத காசு ஒட்டாது… நீங்களும் உங்க வேலையும்” என எரிந்து விழுந்து விட்டு மருத்துவமனைக்கு கிளம்பியவனைப் பார்த்து,

“நான் வேணும்ன்னா கம் வாங்கி தரேண்டா.” என்று கத்தினான் ஜெமினி.

“க்கும்… இவன்லாம் எப்படி தான் பொழைக்க போறானோ தெரியல.” ஜெமினி சலித்துக்கொள்ள,

“அவன விடுடா. நம்ம எப்ப அடுத்த வேலைக்கு போக போறோம்? ஒரு வாரத்துல எனக்கு தல தீபாவளி வேற. என் பொண்டாட்டிக்கிட்ட சீக்கிரம் வந்துடுறேன்னு சொல்லிட்டு வந்துருக்கேன்.” என்று புது மனைவியைப் பற்றி பேசும் போதே தரையில் கோலமிட்டான் திலீப்.

‘இதுக்கு இது ஒரு கேடு!’ மனதுக்குள் முணுமுணுத்துக்கொண்டவன், “ஒரு வாரத்துக்குள்ள எப்படியும் வேலை வரும்டா…” என்று விட்டு நகன்றான்.

சத்ரேஷ் மருத்துவமனையில் எப்போதும் போல வெளி நோயாளிகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்நேரம், கதவைத் தட்டியபடி உள்ளே நுழைந்தார்,  எஸ்.ஐ ஜவஹர்.

“ஹலோ சத்ரேஷ்!” என்றவருக்கு எழுந்து கை குழுக்கியவன், சன்ன சிரிப்புடன் “ஹெலோ சார். என்ன மறுபடியும் பல் வலியா. நொறுக்கு ஸ்னாக்ஸ் ரொம்ப சாப்பிடாதீங்கன்னு சொன்னாலும் கேட்க மாட்றீங்க.” என்று மெலிதாய் முறைத்தான்.

முப்பதுகளின் இறுதியில் இருந்த ஜவகரோ, “ஹா ஹா. என்ன பண்றது வாயை அடக்க முடியல. என் பொண்டாட்டியோட ரெண்டாவது பிரசவத்துக்கு அவளை ஊருக்கு கொண்டு போய் விட போயிருந்தேன். மாமியார் வீட்ல விருந்து ஜாஸ்தி ஆகிடுச்சு.” என அசடு வழிந்தவரைக் கண்டு, அழகாக வெண்பற்கள் மினுக்க சிரித்தவன், அவரை சோதித்து விட்டு, பல்வலிக்கு மருந்தும் கொடுத்தான்.

அப்போது தான் ஜவகர் கண்களை அது கவர்ந்தது. ஒரு சிறிய பிள்ளையார் சிலை. மிகவும் பழங்கால சிலை என்பது பார்த்ததுமே அவருக்கு தெரிய, அதனைக் கையில் எடுத்து பார்த்தவர், “அட! இது ரொம்ப அழகா இருக்கு சத்ரேஷ். என் வைஃப்க்கு இது ரொம்ப பிடிக்கும்” என்று உற்சாகத்துடன் கூறியதில், அவன் நிமிர்ந்து பார்த்தான்.

அதனை சில தினங்கள் முன்பு ஜெமினி தான் பரிசாகக் கொடுத்திருந்தான்.

“இதை வச்சுக்க சத்ரு. உன் பிரச்சனை எல்லாம் தீர்ந்துடும்.” எனக் கூறியது நினைவு வர, மெல்ல இதழ் விரித்துக் கொண்டவன், “அது என் ப்ரெண்ட் குடுத்த கிஃப்ட் சார்.” என்றான்.

ஜவகரோ, “சத்ரேஷ் சத்ரேஷ்… இதை நான் எடுத்துக்குறேன். எவ்ளோ காசுக்கு வாங்குனான்னு உன் ஃப்ரெண்டுட்ட கேட்டு சொல்லு. அதை தந்துடுறேன்” என்று கெஞ்சும் தொனியில் கேட்க,

அவனோ, “காசுலாம் பிரச்சனை இல்ல சார். ஆனா, ஃபிரெண்டு குடுத்தான்…” என இழுத்தவனுக்கு, அவர்கள் அன்பாகக் கொடுத்ததை எப்படி மற்றவருக்கு கொடுக்க முடியும் என்ற தயக்கம் எழுந்தது.

“ப்ச். இதே மாதிரி இன்னொன்னு குடுக்க சொல்லு. எப்படியும் இந்த சிலை குறைஞ்சது 2 ரூபா வரும். நான் மூணா தரேன். ப்ளீஸ் ப்பா.” என்றதில், கேசத்தை எரிச்சலுடன் கோதிக் கொண்டவன் மறுக்க இயலாமல், “காசுலாம் வேணாம் சார். எடுத்துக்கோங்க” என்றான்.

“நோ! நோ! இப்பவே இதை செட்டில் பண்ணிட்டு தான் எடுத்துட்டு போவேன்.” என்று பேண்ட் பாக்கெட்டினுள் இருந்து செக் புக்கை எடுத்தவர், அதனை நிரப்பி அவனிடம் கொடுத்து விட்டு, “உன் ஃபிரெண்டுகிட்ட இதே மாதிரி வேற இருந்தாலும் கேளு சத்ரேஷ்.” என்று கூறி விட்டு சென்றார்.

‘என்ன இந்த ஆளு மூணு ரூபாய்க்கு எல்லாம் செக் குடுத்துட்டு போறாரு’ எனத் தலையை சொறிந்த சத்ரேஷ், செக்கை பார்த்து அதிர்ந்து விட்டான். முழுதாக மூன்று இலட்சத்தை நிரப்பி இருந்தார் ஜவஹர்.

சத்ரேஷிற்கு ஒன்றுமே புரியவில்லை. ‘தெரியாம ரெண்டு ஸீரோவ சேர்த்து போட்டுட்டாரா.’ என பதறியவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. உடனடியாக ஜெமினிக்கு போன் செய்து வர சொல்ல, இருவரும் அடித்துப் பிடித்து மருத்துவமனைக்கு வந்தனர்.

சத்ரேஷ் நடந்ததைக் கூறி குழம்ப, ஜெமினியோ “அடேய்… வெறும் மூணு லட்சமா. அந்த சிலையோட ஒர்த் அஞ்சு லட்சம்டா.” என்றதில் இன்னுமாக அதிர்ந்தவன்,

“என்ன அஞ்சு லட்சமா? அதை எதுக்குடா எனக்கு குடுத்த?” எனக் கேட்டவனுக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை.

“அதுவா, நான் ஒரு இடத்துக்கு சிலை கை மாத்த போனப்ப தான் இந்த பிள்ளையார் சிலை கிடைச்சுச்சு. உனக்கு தான் பிள்ளையார்ன்னா ரொம்பப் பிடிக்குமே. நல்ல விலைக்கு ஆள் வர்ற வரைக்கும் உன்கிட்ட இருக்கட்டும்ன்னு, குடுத்து வைச்சேன். நீ தான் இந்த காச வாங்கவும் மாட்ட. அதான் இத வித்த காசையாவது உன்கிட்ட குடுக்கலாம்ன்னு பாத்தேன். கடைசியில வெறும் மூணு லட்சத்துக்கு போய்டுச்சு” என்று சலித்தான் ஜெமினி.

திலீப், “எங்ககிட்ட ஒரு வார்த்தை கேட்டு இருக்கலாம்ல சத்ரு. சரி, வேற சிலை இருந்தா கேட்டாருல்ல. அப்ப இந்த காசை சரி கட்டுற மாதிரி பில்ல நிறைய போட்டுடலாம்” என்றதில் ஜெமினியும் ஆமோதிப்பாகத் தலையசைத்தான்.

அவர்களின் அன்பை எண்ணி கனிந்த சத்ரேஷ், முகத்தை முறைப்பாக வைத்துக் கொண்டு, “சரி சரி… அது உங்க பிரச்சனை. இந்த செக்க எடுத்துட்டுப் போ” என்று ஜெமினியிடம் நீட்ட, அவன் முறைத்தான்.

“நீ தான சிலையை வித்த. அப்ப இது உன் காசு தான்” என்று முறுக்கிக்கொள்ள,

“அடியே ஜிம்மி. என்னைப் பார்த்தா உனக்கு சிலை கடத்துறவன் மாதிரி இருக்கா. ஒழுங்கா வாங்கிட்டுப் போய்டு.” என்று அதட்டியும் இருவரும் அதனைக் காதில் வாங்காமல் சென்று விட்டனர்.

“ச்ச்சே… கடைசில நம்மளையும் சிலை விக்க விட்டுட்டானுங்க.” என தலையில் அடித்துக் கொண்டவனுக்கு தலைவலி தீர்ந்தபாடில்லை. அடுத்த நாளே ஜவகர் போன் செய்து ‘சிலை இருக்கிறதா?’ என விசாரிக்க,

“சார்… நான் அதெல்லாம் பண்றது இல்ல சார்” என்று நொந்தான்.

அவரோ விடாமல் நச்சரிக்க, பின் வேறு வழியற்று, ஜெமினிக்கு போன் செய்தவன், “டேய் ஜிம்மி. இந்த போலீஸ்காரன் தொல்லை தாங்கலடா. ஏதாவது சிலை இருந்தா குடுத்துத் தொலை…” என்றதில், ஜெமினி வெடித்து சிரித்தான்.

“இந்த தொழிலுக்கு வர மாட்டேன் வர மாட்டேன்னு சொல்லிட்டு, ஒரு கஸ்டமரே புடிச்சுருக்க சத்ரு” என்று வார, “மவனே! நேர்ல வந்தேன்… இந்த தடவை தொடைல சூடு வைக்க மாட்டேன்” என்று பல்லைக்கடித்திட, அவன் கூற வருவது புரிந்து பதறி அழைப்பைத் துண்டித்தான் ஜெமினி.

பின், சத்ரேஷே எப்படி பட்ட சிலை வேண்டும் என ஜவகரிடம் விசாரிக்க, அவர் ஒரு பெரிய சாமி சிலை கேட்டார். ஜெமினியும் மூன்று நாட்களில் அதனை தயார் செய்து விட்டு, சத்ரேஷிடம்  தெரிவிக்க, அவனும் ஜவகரிடம் விவரம் கூறினான்.

அவரோ, “நான் ஒரு கேஸ் விஷயமா வெளியூர் வந்துட்டேன் சத்ரேஷ். இஃப் யூ டோன்ட் மைண்ட். முட்டுக்காடு தாண்டி எனக்கு ஒரு கெஸ்ட் ஹௌஸ் இருக்கு. அங்க இந்த சிலையை டெலிவரி பண்ண முடியுமா? என் வாட்ச்மேன்கிட்ட கொடுத்துட்டா போதும்” என்றதில், சத்ரேஷ் கடுப்பானான்.

“சரி சார். என் ப்ரெண்ட்ஸ் தான் வருவாங்க. நான் குடுக்க சொல்லிடுறேன்” என்றதில்,

“நோ நோ… வாட்ச்மேன்க்கு உன் போட்டோ தான் சென்ட் பண்ணிருக்கேன். வேற யாரும் வந்தா அவனுக்குத் தெரியாது சத்ரேஷ். இந்த ஒரு தடவை நீயும் வந்தா நல்லா இருக்கும். அடுத்த தடவை நேரடியா உங்க ப்ரெண்ட்ஸ்கிட்டயே கான்டாக்ட் வச்சுக்குறேன்.” என்றவர், அவனின் பதிலை கேளாமல் போனை வைத்து விட்டார்.

சத்ரேஷிற்கு தான் கோபம் பலமடங்கு பெருகியது. ‘போலீஸ்காரன்னு அமைதியா போனா. அவன் என்னை டெலிவரி பாயா மாத்திட்டு இருக்கான். ச்சே… இங்க இருந்து இந்த ஆளு சொல்ற அட்ரஸ்க்கு போகவே ரெண்டு மணி நேரம் ஆகும்.” என புலம்பியவனுக்கு முகத்தில் ரௌத்திரம் தாண்டவமாடியது.

ஆனால், அவன் அறியவில்லை இப்பயணம் அவனது வாழ்வில் பெரும் மாற்றத்தை நிகழ்த்தப் போகிறது என… அது நல்லதா கெட்டதா என்பதை விதியே அறியும்.

நீல நிற ஷோல்டர் பேக் ஒன்றில், சிலையை வைத்தவர்கள், முட்டுக்காட்டை நோக்கி காரை செலுத்தினர்.

ஜெமினி தான் அமைதியாக இராமல், “இந்த சிலையை குடுத்துட்டு, ஜவகர் சாருக்கு நான் ஒரு சிலை வைக்கணும்டா” என்றிட, காரை செலுத்திக் கொண்டிருந்த சத்ரேஷ் விழிகளைத் திருப்பி ஏனென்று பார்த்தான்.

“பின்ன, உன்னையவே கடத்தலுக்கு வர வைச்ச பெருமை அவரைத் தான சேரும்” என்று வெடித்துச் சிரிக்க, பின்னால் அமர்ந்திருந்த திலீப்பும் சிரித்து வைத்தான்.

ஏற்கனவே கடுப்பில் இருந்தவன், இருவரையும் ஏகத்துக்கும் முறைத்து, காரை அதிவேகத்தில் செலுத்தினான்.

அந்நேரம், அவனது வேகத்தையும் முந்திக்கொண்டு, கருப்பு நிற டொயோட்டோ கார் ஒன்று பறக்க, முதலில் சத்ரேஷ் அதனைக் கண்டுகொள்ளவில்லை.

ஆனால் ஜெமினி, “இந்த கார்க்காரனுக்கு திமிர பாரேன். நம்ம நண்பனே கோபத்துல தீ வேகத்துல போறான். அதையும் முந்திக்கிட்டு போய் அவனை இன்னும் கோபப்படுத்துறான். சத்ரு அந்த காரை ஓவர் டேக் பண்ணுடா. உன் கோபத்தோட அளவு என்னன்னு அவனுக்கு இன்னைக்கு புரிய வைச்சே ஆகணும்.” என்று சபதம் எடுத்ததில், ஏதோ ஒரு ஆர்வம் தோன்ற, சத்ரேஷும் வேகத்தை அதிகப்படுத்தினான்.

நினைத்தது போல அந்த காரை ஓவர் டேக் செய்து விட்டவர்கள், ‘ஹை – ஃபை’ கொடுத்துக் கொள்ள, இம்முறை மீண்டும் அவர்களை டொயோட்டா கார் முந்தியது.

திலீப், “சத்ரூ கம் ஆன். திரும்ப ஸ்பீட ஏத்து” என்றதில்,

“ப்ச், விடுடா. போய் தொலையட்டும்” என அசட்டையாகக் கூறினான் சத்ரேஷ்.

“என்ன சத்ரு நீ. ஒரு பொம்பளைப்பிள்ளை நம்மளை ஓவர் டேக் பண்ணிட்டு போகுது. நம்ம கொஞ்சமாவது டஃப் குடுக்க வேணாமா?” ஜெமினி குறையாகக் கூற,

“எது பொண்ணா? அது எப்படிடா உனக்கு தெரியும்.” என ஒரு மாதிரியாகப் பார்த்தான்.

அனைத்து பற்களும் தெரிய இளித்தவன், “இந்த தடவை நம்மளை க்ராஸ் பண்ணும்போது பாத்துட்டேனே…” எனப் பெருமையாக கூற, பெண் என்றதும், சத்ரேஷிற்கும் ஒரு உந்துதல் தோன்ற, மீண்டும் வேகத்தை அதிகப்படுத்தினான்.

இப்போது இரு கார்களும் ஒரே பக்கவாட்டில் செல்ல, அப்பெண்ணும் வேகத்தை குறைத்தபாடில்லை. அவனும் குறைத்தானில்லை.

“கம் ஆன் சத்ரூ. அந்த போலீஸ்காரனை மனசுல வச்சுக்க. அவன் உன்னை சிலை விக்க விட்டுருக்கான். டெலிவரி பாயா மாத்தி இருக்கான்… கம் ஆன்…” என்று இரு நண்பர்களும் சத்ரேஷை ஏற்றி விட, அவனும் வேகத்தை இன்னும் அதிகப்படுத்தினான்.

அப்பெண்ணும் அவனுக்கு சளைத்தவள் இல்லை என்பது போல, புயல் வேகத்தில் காரை செலுத்த, சத்ரேஷிற்கு அப்பெண்ணை பார்க்கும் ஆர்வம் தோன்றியது. அதில், மேலும் அவளை அவன் முந்த, அவனை அவள் முந்த என்று நிமிடங்கள் நகர, இறுதியில் சத்ரேஷே வென்றான்.

“யாஹூ…!” என மூவரும் கத்திக்கொள்ள, சிறு புன்னகையுடன் கண்ணாடி வழியே பின்னால் வந்த டொயோட்டோவைக் கண்ட சத்ரேஷின் விழிகள் சுருங்கியது.

நடு சாலையில் அப்பெண்ணின் டொயோட்டோ கார் பிரேக் டௌன் ஆகி நின்றிருக்க, அவன் வேகத்தைக் குறைத்தான்.

“ஏண்டா ஸ்லோ பண்ற?” என்ற ஜெமினியின் கேள்விக்கு, விழியை அந்த காரில் இருந்து பிரிக்காமல், “ஏதோ ப்ராப்ளம்ன்னு நினைக்கிறேன்டா. கார் நின்னுடுச்சு.” என்றான்.

“சத்ரூ, ஏற்கனவே லேட் ஆகிடுச்சு. இதெல்லாம் பார்த்துட்டு இருந்தா, நம்ம திரும்ப வீட்டுக்கு போக மிட் நைட் ஆகிடும்.” என்ற திலீப்பின் பேச்சை சட்டை செய்யாமல், சரட்டென காரை வளைத்துத் திருப்பி அப்பெண்ணை நோக்கி சென்றான் சத்ரேஷ், பின்வரும் தலை போகும் விளைவுகளை அறியாதவனாக!

விளைவுகள் தொடரும்
மேகா!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
27
+1
3
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment