Loading

வானம் – 07

அவளின் இரு கன்னங்களிலும் நீர்த்தடங்கள் பதிந்திருக்க கண்கள் இரண்டும் கோவப்பழமாய் சிவந்து கிடந்தன. அதில் பதறியவன், “என்னாச்சு புள்ள?” என்றான் பிரஷாந்த்.

“எனக்குப் பயமா இருக்கு அத்தான்” என்றவளின் குரலில் தெரிந்த பரிதவிப்பு அவனை குழப்பச் செய்தது. “என் பொண்டாட்டி இப்படிலாம் பேச மாட்டாளே! இப்ப என்னாச்சு என் பொண்டாட்டிக்கு” என ஒற்றைப் புருவம் உயர்த்த, அவனது பொண்டாட்டி என்ற அழைப்பு மனதில் பதிந்தாலும் மூளையை எட்ட மறுத்தது அவளுக்கு.

“என்னை விட்டுட்டு போய்ற மாட்டீங்கள்ள அத்தான்?” என்றவளை, “என்னாச்சு புள்ள, உனக்கு ஏன் இப்படி ஒரு சந்தேகம்?” என்றான் பொறுமையாய்.

“இல்ல, அத்தை உங்களுக்கு பொண்ணு பாத்துருக்காங்களாம். அம்மா பேசிட்டு இருந்தாங்க” என்றவளின் குரல் உடைந்துப் போயிருந்தது.

‘இது எப்போ?’ என மனம் கேள்வி எழுப்பினாலும் அதற்கு விடை காணுவதை தடைசெய்து முதலில் அவளை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டான் பிரஷாந்த்.

“அட லூசு, இதுக்கா இவ்ளோ அழுகாச்சி… இந்த ஜென்மத்துல எனக்கு பொண்டாட்டினா அது நீ மட்டும் தான் புள்ள. இன்னொருவாட்டி இப்படி கண்ண கசக்கிக்கிட்டு இருந்த அவ்ளோ தான்!” என செல்லமாய் கடிந்துக்கொள்ள,

அவனது வார்த்தைகள் ஓரளவு செயல்படத் துவங்கி இருந்ததன் விளைவாய், “இன்னொருவாட்டி இப்படி கண்ண கசக்குனா என்ன பண்ணுவீங்களாம்?” என கண்களைத் துடைத்துக் கொண்டே நக்கலாய் வினவினாள் ரேவதி.

அவனோ வார்த்தைகளில் பதிலளிக்காமல் விரல்களால் பதிலளிக்க முயன்றான். அவளது நெற்றிமுடியை காதோரம் ஒதுக்கிவிட்டவனின் விரல்கள் அவளது முகத்தில் கோலமிடத் துவங்க அவளோ அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“புரிஞ்சுதா புள்ள!” என அவன் இதழோரம் நகைப்போடு வினவ, “புரியலயே!” என இதழைச் சுளிக்க, அவள் ஓரளவு தெளிந்துவிட்டாள் என்பதைப் புரிந்துக் கொண்டவன் “நம்மள மீறி எதுவும் நடந்துடாது ரேவதி, நீ கண்டதையும் இங்க போட்டு குழப்பிக்காம எப்பொழுதும் போல இரு” என தலையை சுட்டிக் காட்டியவன், “இப்போ நீ வீட்டுக்கு கெளம்பு. எனக்கு கொஞ்சம் வேல இருக்கு, முடிச்சுட்டு வரேன்” என்றவனை ஏகத்துக்கும் முறைத்தாள் ரேவதி.

அதனைக் கண்டு புன்னகைத்தவன், “என்ன!” என கண்களால் வினவ, “சரியான தத்தி அத்தான் நீ” என செல்லமாய் கோபித்துக் கொண்டவள் அங்கிருந்து கிளம்பினாள்.

அங்கு வரும்போது இருந்த குழப்பம் தற்போது சற்று தெளிவாகி இருந்ததால் மனம் லேசாகி இருந்தது. எது நடந்தாலும் தன்னை கைவிட்டு விட மாட்டான் என மனதார நம்பியதால் ஏற்பட்ட தெளிவாக இருக்கலாம்.

ஆனால் அவள் அங்கிருந்து சென்ற அடுத்த சில நொடிகளிலே அவனது முகம் கோபத்தைத் தத்தெடுத்திருந்தது. அடுத்த சில விநாடிகளிலே தனது தங்கையை அழைத்திருந்தான் பிரஷாந்த்.

தலைவலியோடு படுத்திருந்தவள் பிரஷாந்த்தின் அழைப்பைக் கண்டு என்னவாக இருக்கும் என யூகித்தவள் அழைப்பை ஏற்று, “விசயம் காத்துவாக்குல உன்னை வந்து சேர்ந்துருச்சா உடன்பிறப்பே!” என்றாள் சரயு.

“நக்கலு” என அவன் எதிர்முனையில் கூற, “இருக்காதா பின்ன… ஒரே ஒரு தங்கச்சி, அதும் வெளியூரு போய் படிக்கப் போய்ருக்கா, அவ எப்படி இருக்கா, என்ன பண்றானு ஒரு நாள் ஃபோன் பண்ணி கேட்க நேரமில்ல துரைக்கு. ஆனா, உங்க ஆருயிர் காதலி வந்து அழுதோனே தான் என் நெனப்பு வந்து ஃபோன் பண்ண தெரியுதாக்கும்” என சிலுப்பிக் கொண்டவளை, “ஹே குட்டி பிசாசு! உனக்கு நக்கலா இருக்குல்ல” என்றான் பிரஷாந்த்.

“சரி, சரி… போன் பண்ண விசயத்துக்கு வாங்க உடன்பிறப்பே” என்றாள் சரயு. “ரேவதி சொன்னதெல்லாம் உண்மையா குட்டிமா, எனக்குத் தெரியாம வீட்ல என்ன நடக்குது… நீயாச்சும் ஒரு வார்த்தை என்கிட்ட சொன்னியா?” என வினவினான் குற்றசாட்டோடு.

“ப்ச், அண்ணா அம்மாவ பத்தி தான் தெரியும்ல. அதும் இல்லாம இதெல்லாம் எனக்கு பெரிய விசயமா படல, அதான் அத சொல்லி உன்னை ஏன் கோபப்படுத்தணும்னு விட்டுட்டேன்” என்றாள் சர்வசாதாரணமாக.

“என் வாழ்க்கை சம்பந்தப்பட்டது பெரிய விசயம் இல்லயா குட்டிமா” என்றவனிடம் புன்னகைத்தவாறே, “இங்க பாரு டா அண்ணா, என் அண்ணினா அது ரேவதி மட்டும் தான். நானே இந்த மைண்ட்செட்ல இருக்கும்போது நீ வேறொரு பொண்ணு கழுத்துல தாலிய கட்டிருவியா என்ன! எல்லாம் அந்த தைரியம் தான்” என்றாள் சரயு.

தன் தங்கை தன் காதல் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை உணர்ந்தவனுக்கு ஏனோ மனம் லேசானதை போல் இருந்தது. “இத உன் அண்ணிட்ட சொல்ல வேண்டியது தான! இங்க வந்து கண்ண கசக்கிக்கிட்டு நிக்கிறா” என்றான் பிரஷாந்த்.

“அட மக்கு அண்ணா, ரேவதி வந்து அழுது அவள நீ சமாதானப்படுத்த முயற்சி பண்ணி அப்படியே ஒரு ரொமான்டிக் எபிசோட் நடக்கும்னு எதிர்பார்த்தேன். ஆனா அப்படி ஒன்னும் அங்க நடந்த மாதிரி தெரியலயே” என்றவள், “அச்சோ என் உயிர்தோழி இப்படியா போய் சிக்கிக்குவா! ரொமான்ஸ்னா என்னனு கேட்கிற ஆளப் போய் லவ் பண்றியே ரேவதி… உன் தலவிதிய யாரால மாத்த முடியும்” என நக்கலடித்தாள் சரயு.

“வரவர வாய் கொழுப்பு அதிகமாகிட்டே போகுது குட்டிமா உனக்கு” என்றாலும் அவன் முகத்தில் ஒட்டிக் கொண்ட வெட்கத்தை மறைக்க இயலவில்லை.

அதனை நேரில் கண்டவள் போல், “என்னண்ணா வெட்கமா!” என நமட்டு சிரிப்போடு வினவ, “குட்டி பிசாசு, கோபத்த கூட வெட்கமா மாத்தற சக்தி உனக்கு மட்டும் தான் இருக்கு” என்றவன்,

“சரி, அம்மா என்ன தான் பண்றாங்க குட்டிமா? என்கிட்ட இதுவரைக்கும் எதுவும் சொல்லல. எனக்கு தெரியாம வீட்ல என்ன நடக்குது?” என்றான் பிரஷாந்த்.

இன்று ஜாதகம் பார்க்க செல்வதாக தங்கள் அன்னை கூறியதைக் கூறியவள், “நீ உன் லவ்ல ஸ்ட்ராங்க்கா இருக்கல்ல ண்ணா?” என்றாள் சரயு.

“என்னைவிட என் காதல்மேல அதிக நம்பிக்கை வச்சுருக்க நீயே இப்படி கேட்கலாமா குட்டிமா?” என்றவனின் குரலில் தென்பட்ட லேசான வருத்தம், தான் அந்த கேள்வியை கேட்டிருக்கக் கூடாதோ என எண்ண வைத்தது சரயுவிற்கு.

“டேய் அண்ணா, நான் சும்மாதான் கேட்டேன். என் அண்ணன பத்தி எனக்குத் தெரியாதா! சரி, நீ எதும் நினைச்சு குழப்பிக்க வேண்டாம் ண்ணா, நம்மள மீறி எதுவும் நடந்துறாது” என நம்பிக்கையூட்ட, “அந்த ஒரே தைரியத்துல தான் இன்னும் எதுவும் பேசாம இருக்கேன் குட்டிமா. சரி, உன் படிப்புலாம் எப்படி போகுது, நேரத்துக்கு சாப்டுறியா குட்டி பிசாசு” என்க, அவனின் குட்டி பிசாசு என்ற அழைப்பிலே அவன் நார்மல் ஆகிவிட்டான் என்பதை உணர்ந்துக் கொண்டவள் சிறிது நேரம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

பலகணி அருகே சென்று திரைச்சீலையை விலக்கியவளின் கண்களில் படர்ந்தது இதழிகாவின் இல்லம். கற்பகம்மாள் தன்னைத் தேடி வந்ததாக வார்டன் கூறியது ஞாபகம் வர, அவரை பார்த்துவிட்டு வரலாம் என கிளம்பினாள்.

அப்பொழுது தான் அறைக்குள் நுழைந்த சம்யுக்தா, “அதுக்குள்ள எந்திரிச்சுட்டியா டி, ஆமா இப்போ எங்க கிளம்புற?” என்றவாறே கட்டிலில் சாய்ந்தாள் சம்யுக்தா.

“கியூட்டியோட வீட்டுக்கு” என்றவள் வெளியே கிளம்ப, “என்ன!” என அதிர்வோடு சம்யுக்தா எழுந்து அமர்வதற்குள் அவள் சென்றிருந்தாள்.

‘இவ திருந்தவே மாட்டாளா!’ என மனம் கேள்வி எழுப்பினாலும், அவள் என்ன தவறு செய்தாள் என கூடவே மனம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிப் போனாள் சம்யுக்தா.

ஆம், அவள் அப்படி என்ன தவறு செய்தாள்? ஒரு குழந்தையோடு பேசியது தவறா? அந்த குழந்தையின் அன்னை செய்ய தவறிற்கு அந்த குழந்தை எவ்வாறு பொறுப்பாகும்? தவறு செய்தவர்களை விட அதனால் பாதிக்கப்பட்டவர்களை தான் இந்த உலகம் இன்னும் வசைப்பாடுகிறது.

அரைமணிநேரம் கழித்து தன் அறைக்கு வந்திருந்த சரயுவின் முகத்தில் அத்தனை தெளிவு. வந்தவள் எதுவும் பேசாமல் அவளது வேலைகளைப் பார்க்கத் துவங்க சம்யுக்தாவிற்கோ ஒன்றும் புரியாமல் விழித்தாள்.

‘கத்திரிக்கா முத்துனா சந்தைக்கு வந்து தான ஆகணும், அப்போ பாத்துக்கிறேன் டி’ என நினைத்தவள் அதன்பின் அவளும் ப்ராஜெக்ட் வேலைகளில் மூழ்கிவிட அன்றைய பொழுதும் நகரத் தொடங்கின.

அன்று காலையில் இருந்தே வெயில் கொளுத்தி எடுத்திருக்க அதற்கு எதிர்பதமாய் மாலையில் மழைக்காற்று வீசத் தொடங்கி இருந்தது. “செம க்ளைமேட்ல டி” என தன் தோழியிடம் கூறிக் கொண்டே சரயுவின் அருகே வந்தாள் சம்யுக்தா.

“ம்” என்றவள், “சரி, கிளம்பு சம்யு, டைமாச்சு” என்றாள் சரயு. “கிளம்புறதா, எங்க டி?” என்றாள் சம்யுக்தா.

“பார்ட் டைம் ஜாப்’க்கு” என்றவளைக் கண்டு புரியாமல் விழித்தவள், “என்ன பார்ட் டைம் ஜாப்’பா, எதுக்கு டி? இப்போ என்ன புதுசா!” என குழப்பத்தோடு வினவினாள் சம்யுக்தா.

அவளுடன் படிக்கும் சில மாணவிகள் கல்லூரி முடிந்தவுடன் பகுதிநேர வேலைக்கு செல்வது வழக்கமான ஒன்று தான். ஆனால் இதுவரைக்கும் சம்யுக்தாவோ சரயுவோ பகுதிநேர வேலைக்கு சென்றதில்லை என்பதை விட அதற்கான தேவையும் அவர்களுக்கு அமைந்ததில்லை. அவர்களின் தேவைக்கு அதிகமாகவே அவர்களது வீட்டிலிருந்து செலவிற்கு பணம் கொடுத்து விடுவதால் கல்லூரி முடிந்தவுடனே விடுதிக்கு வந்துவிடுவது வழக்கமான ஒன்றாக இருந்தது.

ஆனால் இன்று சரயு அவ்வாறு கூறவும் குழப்பத்தோடு தன் தோழியைப் பார்த்தாள் சம்யுக்தா.

“சும்மா தான்” என்றவள், “சரி, வா நேரமாச்சு” என்றவள் அவளை இழுத்துக்கொண்டு செல்ல, “அடியேய், என்னனு முழுசா தான் சொல்லித் தொலயேன்… சரி, அப்படியே வேலைக்கு போறதா இருந்தாலும் நீ மட்டும் போகலாமே, சம்பந்தமே இல்லாம என்னையும் ஏன் டி இழுத்துட்டுப் போற?” என்றவளுக்கு பதில் அளிக்க முயலவில்லை சரயு.

“ஒரு வார்த்தை பேசறாளானு பாரு… கல்நெஞ்சக்காரி, எது பண்ணாலும் சொல்லிட்டு பண்ற பழக்கமே இல்ல. உன்கூட பிரண்ட்டா இருக்கேன்ல என்னை சொல்லணும்” எனப் புலம்பிக் கொண்டே தன் தோழியோடு நடக்கத் துவங்கினாள் சம்யுக்தா.

மீண்டும் சில நொடிகள் அமைதியாய் கடக்க, “எங்க போறோம், என்ன வேலைனாச்சும் சொல்லு டி. இப்படி பலி ஆட்ட இழுத்துட்டுப் போற மாதிரியே போறாளே” எனப் புலம்ப, ஆனால் பதிலளிக்க வேண்டியவளோ தன் இலக்கை நோக்கித் தான் சென்றாளே தவிர தன்னோடு கேள்விக் கொண்டே வந்தவளுக்கு மறந்தும் பதிலளிக்கவில்லை.

இறுதியில் அவர்கள் சென்று நின்ற இடத்தைக் கண்டு அதிர்ந்தாள் சம்யுக்தா. “இங்கயா டி?” என கேள்வியாய் வினவியவளைக் கண்டு, “எஸ்” என அவள் கண்ணடிக்க அதிர்ச்சியாய் அவளை நோக்கினாள் சம்யுக்தா.

_தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
12
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment