

சிற்பமே 2
தன் அண்ணியிடம் துள்ளிக் குதித்து பேசியவள், ஓடி வந்து தன் அண்ணனை கட்டிக் கொண்டு, “அப்பாடா! வந்துட்டியா பாலா… உனக்காக நான் எவ்வளவு நேரம் முழிச்சிட்டு இருந்தேன் தெரியுமா! போடா… உனக்கு நடுராத்திரி ஃபிளைட் தவிர வேற எதுவும் கிடைக்கலையா” என்று அண்ணனின் தோளில் சாய்ந்தபடி கேட்டாள் ஜானவி.
“லவ் யூ டா பாப்பா… சாரிம்மா, அண்ணாக்கு வேற ஃபிளைட் கிடைக்கலை. இனி மேல் வரும் போது என் பாப்பாவுடைய தூக்கத்தைக் கெடுக்காத மாதிரி டைம்ல வரேன்” என்று கூறியவனின் பாசத்தைக் கண்ட அனைவருக்கும் நெகிழ்ச்சியாக இருந்தது.
“பாட்டி” என்று தங்கையோடு ஆனந்த கூச்சலிட்டபடி சென்றவனை, பாசத்துடன் வரவேற்றார் பாட்டி.
“தாத்தா எங்கே பாட்டி?”
“உன் தாத்தா மாத்திரைப் போட்டு தூங்குனார்னா, நிலநடுக்கமே வந்தாலும் கொறட்டை விட்டுட்டு தூங்கிட்டு இருப்பார்” என்று சைகை செய்தபடி பேசி சிரிக்க, அனைவருமே சிரித்து இடமே கலகலத்தது.
தன் அண்ணா அண்ணியை கேக் வெட்ட சொன்னவள் அதை புகைப்படம் எடுத்து அவர்களோடு கலகலத்தாள்.
அடுத்த நாள் சற்று தாமதமாக தான் எழுந்தான் ரிஷி. அன்று அவனுக்கு விடுமுறையும் கூட.
மகனுக்கு காஃபி கலக்கி கொடுத்தபடி, “ரிஷி… மாமா அக்காவெல்லாம் எப்படி இருக்காங்க?” என்று அன்னை கேட்க, ஒரு மடக்கு பருகியபடியே அன்னைக்கு பதில் அளித்தவனின் மனநிலை இன்னும் ஆதங்க நிலையில் தான் இருந்தது.
“சரி டா நானும் அப்பாவும் கிளம்புறோம்… நீ” என்று தயக்கத்துடன் பார்த்த அன்னையிடம் இத்தனை நேரம் மனதுக்குள் அழுத்திக் கொண்டிருந்த கோபத்தை வெளிப்படுத்தியே விட்டான் மகன்.
“ஏம்மா! மாமாவுடைய பாட்டி என்னை யாருன்னு கேட்டு அசிங்கப்படுத்துறாங்க. மாமாவுடைய தங்கச்சி அந்தக் குட்டச்சி என்னைத் திருடன்னு சொல்றாள்ம்மா. அவளுக்கு எவ்வளவு திமிரு இருந்தால் என்னை திருடன்னு சொல்வாள்.பணக்காரின்ற திமிரு… அவள் மட்டும் என் கையில தனியா கிடைக்கட்டும் அவளை அலற விரட்டிருப்பேன். இதுல மாமா அவங்க சொன்னதை அப்படியே தப்பில்லாத மாதிரி சொல்லிக்காட்டிட்டாங்க.”
“ஏன்டா! ஏன் இப்படி காலையிலேயே கோபப்படுற… மாப்பிள்ளையோட பாட்டி, தங்கச்சி எல்லாம் ரொம்ப நல்ல மனுஷங்கடா… உனக்குத் தான் பணக்காரங்களைக் கண்டாலே ஆகாது. வித்யாவுக்கு கல்யாணம் பண்ணும் போது கூட நீ அவகிட்டயே இந்த பணக்கார வாழ்க்கை நிம்மதியா இருக்காதுன்னு சொன்னவன் தானே!” என்று தாய் ஆதங்கத்துடன் கூற,
“ஆமாம்மா, காதலிச்சிட்டு வந்த அக்காவை யோசிச்சு பண்ணுன்னு சொன்ன நான் தப்பு…காதலிக்குறேன்னு அவள் சொன்ன உடனே டொபுகடீர்ன்னு சந்தோஷமா கல்யாணம் பண்ணி வைச்ச நீங்களும் அப்பாவும் ரொம்ப சரி… இந்த மாதிரி விசித்திரம் எல்லாம் நம்ம வீட்டுல மட்டும் தான் நடக்கும்” என்று தலையில் அடித்துக் கொண்டவன், தன் துண்டை எடுத்துக்கொண்டு குளிக்கச் சென்று விட்டான்.
“போடா இஞ்சி” என்று மகன் பாத்ரூம் கதவை சாற்றியபின் திட்டிய சரஸ்வதி எதையும் இலகுவாக எடுத்துக் கொள்ளும் தன்மை கொண்டவர். மாணிக்கமும் அதே போல் தான். அதனாலேயே என்னவோ ரிஷி இருவருக்கும் சேர்த்து அத்தனை இறுக்கமாகவும் விவரமாகவும் இருந்தான்.
குளித்து விட்டு வந்த மகனிடம், “ரிஷி! அந்த பால்பாண்டிக்கு கொஞ்சம் கால் பண்ணி வரச் சொல்லுடா! நானும் அப்பாவும் அக்கா வீட்டுக்கு கிளம்புறோம். உனக்கு சாப்பாடெல்லாம் செஞ்சு டேபிள்ல வைச்சிருக்கேன்” என்று மகனிடம் கூறியவர்,
மேஜை பக்கம் சென்று “எல்லாருக்கும் இந்த அளவு சரியா இருக்கும்” என்று தானகவே பேசியபடி தான் செய்த மீன் குழம்பு, மீன் வறுவல், இறால் கறி என வரிசையாக தூக்குச்சட்டியில் போட்டு மூடி பையில் எடுத்துவைத்தார்.
‘என்ன எல்லாருக்குமா! என்னவோ இவங்க எடுத்துட்டு போறதை அந்த பணக்கார குடும்பம் சாப்பிட்டு தான் மறுவேலை பார்க்குற மாதிரி’ என்று மனதில் சலித்துக்கொண்டவன் பேசுவது எல்லாமே அவனுடைய கருத்து (Assumption) மட்டுமே! அங்கு யார் எப்படி நடந்துக்கொள்கிறார்கள் என்று அவனுக்குத் தெரியவும் தெரியாது… தெரிந்துக் கொள்ளும் ஆர்வமும் முக்கியத்தவமும் அவன் கொடுக்கவில்லை.
“சரசு! இந்தா இதுல தேன் மிட்டாயும், கடலை பர்பியும் இருக்கு குட்டிப் பாப்பாக்கு ரொம்ப பிடிக்கும்” என்று மாணிக்கம் மனைவியிடம் கொடுக்க,
“குட்டிப்பாப்பாவா.. அது யாரு?” என்று புரியாமல் கேட்டான் ரிஷி.
“அதான் நம்ம ஜானவி பாப்பா” என்று ஆர்வமாகக் கூறிய தந்தையிடம்,
“ஏம்ப்பா அக்கா மாமாக்கு எவ்வளவு வேணும்னாலும் எடுத்துட்டுப்போங்க. அந்த பணக்கார குடும்பம் நம்மளோடதை எல்லாம் சாப்பிட மாட்டாங்க.”
“அவங்க சந்தோஷமா சாப்பிடுவாங்க ரிஷி. நீ தான் எப்போவுமே கருப்பு கண்ணாடி போட்டுட்டே பார்க்குற” என்று எடுத்துரைத்தார் தந்தை.
அதற்கு மௌனத்தை பதிலாகக் கொடுத்த மகனிடம், “நாங்க ரெடி டா” என்று கூற, பால்பாண்டிக்கு கால் செய்து வரச் சொன்னான் ரிஷி.
பால்பாண்டியின் ஆட்டோவில் தன் பெற்றோர்களை ஏற்றி விட்டவன், “உனக்கு நான் வாட்ஸ் அப்ல அட்ரெஸ் அனுப்பி இருக்கேன் பாண்டி” என்றான் இலகுவாக. பால்பாண்டியும் ரிஷியின் வயதை ஒத்தவன் தான். ஆனால் குடும்ப சூழ்நிலையின் காரணமாக படிக்கவில்லை.
“ரைட்டு… இவங்களை விட்டுட்டு அங்க ஊட்டாண்ட வெயிட் பண்ணிட்டு கூட்டிட்டு வரவா!”
“இல்லை நீ விட்டுட்டு வந்திடு. அவங்க கிளம்ப நைட் ஆகும்! நான் உனக்கு கால் பண்றேன்” என்று பதிலளித்தான் ரிஷி.
ஆட்டோவில் பயணித்துக் கொண்டிருக்கும் போது, “ஏம்பா! ஒங்க புள்ளைக்குச் சிரிக்கவே தெரியாதா… நீங்க ரெண்டு பேரும் சிரிச்ச முகமா இருக்கீங்க. ஆனால் அவராண்ட பேசுனாலே டர்ரா இருக்குது. ஆளு வேற நல்லா ஆறடியில ஆர்ம்ஸ்லாம் வெச்சிட்டு இருக்காரு. கொஞ்சம் அவராண்ட பேசி மீட்டர் மேல இருபது ரூபாய் போட்டுத் தர சொல்லுங்க. சரியான கஞ்சபிஸ்னாரி” என்று முன் கண்ணாடி வழியாக பார்த்தபடி புலம்பினான் பால்பாண்டி.
“என் பையன் கிட்ட சொல்றேன்ப்பா! அவன் கஞ்சபிஸ்னாரியில்லை கொஞ்சம் சிக்கனமா இருப்பான். அவன் மனசு சொக்கத் தங்கம். கையும் ரொம்ப சுத்தம்” என்று மகனை விட்டுக் கொடுக்காமல் பதிலளித்தார் மாணிக்கம் அது உண்மையும் கூட.
“ஆமாப்பா! எங்க ஊட்டுல கூட என் அம்மாவுக்கும் ஆயாவுக்கும் உங்க புள்ளை ரொம்ப சோக்காயிக்காருன்னு சொல்லிட்டே இருக்கும்ங்க” என்று புன்னகையுடன் பேச்சை முடித்தான் பால்பாண்டி.
நேற்றிரவு வித்யா வந்து படுத்த பின்னரும், பாலாஜி வந்தபாடில்லை. ஜானவியும் பாட்டியும் அவனை பிடித்துக்கொண்டனர்.
பாட்டி மற்றும் ஜானவி வேண்டும் என்றே பண்ணும் ரகமில்லை என்று வித்யாவிற்கும் தெரியும். ஆனாலும் மனதோரத்தில் ஒரு வருத்தம்.
‘இந்த மனுஷன் என் வீட்டுக்கு வராமல் இருக்குறதுனால தான் இத்தனை பிரச்சனை.ஏன் எங்க வீட்டுக்குள்ள வந்தால் இவருக்கு உடம்பு தேஞ்சிடுமா’ என்று ஆதங்கத்தில் முணுமுணுத்தாலும்,
‘ரிஷியும் இன்னொரு பக்கம் அவன் வீராப்பைக் காட்டி திணறிடுக்குறான் ஆனாலும் ரிஷி பக்கம் தான் நியாயம் இருக்கு’ என்று மனதில் புலம்பியபடியே முந்தைய நாள் உறங்கி விட,
இந்த முறை எப்படியாவது கணவனை தன் பிறந்த வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டுமென தீர்மானமாக இருந்தவளுக்கு பிறந்த வீட்டின் வாசமே மறந்து ஒரு வெறுமையைக் கொண்டு வந்தது.
“பாலா! எனக்கென்ன வாங்கிட்டு வந்த” என்று அண்ணன் கழுத்தைச் சுற்றிக்கொண்டேயிருந்த ஜானவியை வித்யாவிற்கு ஒரு குழந்தையைப் போல் தான் பார்க்கத் தோன்றியது.
வீட்டில் எல்லா வேலைகளுக்கும் ஆள் இருக்க, வித்யாவிற்கு அங்கே ராணி வாழ்க்கை தான். அவள் கல்யாணம் செய்து வந்த நாள் முதல் இந்நாள் வரை யாரும் அவளை, அவளின் குடும்ப நிதி நிலையை மட்டப்படுத்தி பேசியதேயில்லை.
ஜானவி குளிக்கச் சென்றிருந்த சமயத்தில், “வசந்தி கால் பண்ணினாள் பாலா. என்னிக்கு இருந்தாலும் நம்ம ஜானவிக்கும், ஜகனுக்கும் தான் கல்யாணம்ணு சின்ன வயசுல பேசினதை சொல்றாள். ஜகனுக்கும் இருபத்தி ஏழு வயது ஆகுதுல” என்று பேரனிடம் விஷயத்தை விட்டுவிட்டார் தாத்தா.
வசந்தி, குசேலன் மற்றும் காஞ்சனா தம்பதியின் இரண்டாவது பிள்ளை. சிறிய வயதில் ஜானவி பிறந்த போதே, “என் மருமகளுக்கு நான் தான் பெயர் வைப்பேன்” என்று வேண்டும் என்றே மகனின் பெயரை மனதில் வைத்து J வென ஆரம்பிக்கும் விதமாய் வைத்தார். செல்வாக்கில் இவர்களுக்கு சற்றும் குறைவில்லாத குடும்பம். ஜகன் தந்தையின் லெதர் பிசினஸை பார்த்துக் கொள்கிறான்.
“கண்டிப்பா நம்ம சொந்தத்துல தான் ஜானவியைக் கல்யாணம் பண்ணி கொடுக்கணும் தாத்தா. பாப்பாவை விட்டுட்டு நான் அமெரிக்கா போனதே தப்பு தான். ஆனால் உங்களுக்கே தெரியும் எனக்கு பிசினஸ் பண்றதுல எல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்லை. அமெரிக்கா போனதுனால தான் என்னால என் கனவை அடைய முடிஞ்சிது. நான் சுயநலமா நடந்த மாதிரி தான் தோணுது. நீங்களும் பாட்டியும் மலைப்போல இருக்குற தைரியத்துல போயிட்டேன். நீங்க சொல்றது, நான் இருக்குற இந்த ரெண்டு மாசத்துலயே அவளுக்கு ஜகனோட கல்யாணம் பண்ணி வைச்சிருவோம்” என்று யோசனையுடன் கூறினான்.
“மாப்பிள்ளை… வித்யா” என்று இன்முகத்துடன் வந்த வித்யாவின் பெற்றோர்களை சந்தோஷத்துடன் வரவேற்றார்கள் அனைவரும்.
“அம்மா, அப்பா ” என்று உற்சாகத்துடன் வித்யா ஓடி வர,
“ஹாய் மாணிக்… தேன் மிட்டாய் கொண்டு வந்தியா”
“ஹே சரசு… வேர் ஸ் மை மீன் வறுவல்” என்று மாடியிலிருந்து வேகமாக வந்தாள் ஜானவி.
வித்யா இங்கு சென்னையில் இருக்கும் போதெல்லாம் முக்கால்வாசி நாட்கள் மாணிக்கம் தம்பதியினர் இங்கே தான் உபயம். அப்போது ஜானவி நல்ல பழக்கம். துறுதுறுவென கள்ளம் கபடமின்றி பேசும் அவளை அனைவருக்குமே ரொம்ப பிடிக்கும் ரிஷியைத் தவிர.
போன முறை வித்யா அமெரிக்கா கிளம்பும் அன்று ஜானவி அவர்களிடம் உரிமையாக தனக்கு பிடித்ததை சாப்பிட கேட்டது, வாங்கச் சொல்லியது அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த நினைவில் தான் இன்று கொண்டு வந்திருந்தார்கள். இங்கே அனைவரும் தங்க சொல்லி எவ்வளவு கேட்டும் மகன் அங்கு தங்கவே கூடாது என்று கண்டிப்புடன் கூறியதால் அவர்களும் அதன் படி இந்நாள் வரை அங்கு தங்க மறுத்துவிட்டனர்.
ஜானவி தனக்கு நெருக்கமானவர்களை பெயர் சொல்லித்தான் அழைப்பாள். அப்படி பழகியவளை யாரும் தடுக்கவும் இல்லை, கண்டிக்கவும் இல்லை.
தாய் தந்தையை சிறிய வயதிலேயே இழந்த பிள்ளையென பாவப்பட்டு, அதீத செல்லத்துடன் வளர்த்த விளைவால் வந்தது இது.
குழந்தைப்பருவத்தில் எது நல்லது எது கெட்டதென தெரியாத வயதில், அவர்களுக்கு நல்லதைச் சொல்லிக் கொடுக்க வேண்டியது பெரியவர்களின் கடமை… இங்கே ஜானவியின் பாட்டி, தாத்தா, பாலாஜி, உறவினர்கள் என அனைவரும் அவளின் நடவடிக்கைகள், பேச்சுகள் இப்படி எதையும் கண்டுக்கொள்ளாமல், கண்டிக்காமல் இப்போது தன் இஷ்டத்திற்கு வாழ்ந்துக் கொண்டு இருக்கிறாள் ஜானவி.
‘என் அப்பா அம்மாவை எதுக்கு ஜானவி பெயர் சொல்லி கூப்பிடுறாள்? அவளுக்கு என்ன உரிமை இருக்கு! அவள் வீட்டு ஆளுங்களோட நிக்காமல் இப்போ வெளி ஆளான என் வயசான அப்பா அம்மாவை என் முன்னாடி இப்படி பேசுறாள். இவங்க எல்லாரும் வாய்ல மண்ணள்ளிப் போட்டு உட்கார்ந்திருக்காங்க. பணம், பதவி இருந்தால் போதுமா ச்ச’ என்று மனதில் கடுப்படைந்த வித்யா,
“ஜானவி! அவங்க வயசுல பெரியவங்க… உனக்கு மாமா, அத்தை முறை அவங்களை பெயர் சொல்லிக் கூப்பிடக் கூடாதுமா” என்று கஷ்டப்பட்டு தன் கோபத்தை அடக்கியபடி முகத்தை சிரித்த விதமாய் பாசாங்காக வைத்து கூறினாள்.
இதைக் கேட்டவுடன் மலர்வாயிருந்த ஜானவியின் முகம் சுருங்கியது. இதுவரை அவளை யாரும் எதுவும் சொன்னதில்லை என இருக்கும் போது, நல்லது கூறிய அண்ணி சொன்ன விஷயத்தை மண்டையில் ஆராயாமல் ஏற்றாமல் அண்ணி தன்னை ஏதோ திட்டுகிறார் என்பது போல் வாடிவிட்டாள்.

