Loading

பளிங்கு கட்டிடம் வானூர்தியை தொட்டு விடும் போல் சற்று உயரம் எழுப்பி இருந்தால். அருணன் ஒளியில் நீல நிற கண்ணாடி இன்று மெருகேறி பளபளக்க, அவர்களை உற்சாகப் படுத்தியது மேளச் சத்தங்கள். அங்கிருந்த அனைவரின் விழிகளும் மின்னும் கட்டிடத்தைப் பார்க்க, செவிகள் ஓயாமல் இசைத்துக் கொண்டிருக்கும் பறை இசைகளைக் கேட்டுக் கொண்டிருந்தது.

“என்னம்மா எல்லாம் ரெடியா?” என்று ஐம்பது வயதைத் தொட்ட செல்வகுமார் சுற்றிலும் பார்த்துக் கேட்க, அவரின் உதவியாளர் பெண்,

“எல்லாமே ஓகே சார்.” என்றார்.

“எங்க சந்திராவ காணோம்.” செல்வகுமார் கேள்விக்கு அப்பெண் பதில் சொல்லும் முன்,

“எங்கேயும் போகல சார் உங்க பின்னாடி தான் இருக்கேன்” என்றவன் மேல சத்தங்களையும் மீறி அவர் காதில் சிரிப்பொலியை சேர்க்க, புன்னகை முகமாக திரும்பினார் செல்வகுமார்.

“வாப்பா நம்பிக்கை நட்சத்திரம்.” என்றவர் அவனை கட்டிக் கொண்டார் .

சிரிப்பு மாறாமல் பதிலுக்கு அணைத்துக் கொண்ட அக்னிசந்திரன், “என்ன சார் நீங்க கிண்டல் பண்றீங்க.” எனக் கேட்டான்.

“கிண்டல் இல்ல சந்திரா நீ தான் என்னோட முழு நம்பிக்கை. நீ மட்டும் என்கூட இல்லன்னா இந்த கம்பெனியை தேற்றி இருக்கிறது ரொம்ப கஷ்டம். கடவுள் எனக்கு கொடுத்த மிகப்பெரிய பலம் நீ. இதே நம்பிக்கையும், பலத்தையும் நிர்வாகம் பண்ணப்போற என் பொண்ணுக்கும் கொடுக்கணும் சந்திரா.” என்று அவன் கைகளை கோர்த்துக்கொள்ள,

“இதை நீங்க சொல்லணுமா சார் . சாதாரண எம்ப்ளாய் என்னை இந்த அளவுக்கு நம்புறீங்க நிச்சயம் உங்களுக்கு எவ்ளோ பக்க பலமா இருந்தானோ அதே மாதிரி உங்க பொண்ணுக்கும் இருப்பேன்.” அவர் கோர்த்திருந்த கைகளை இவன் உள்ளங்கையில் அடக்கிக் கொண்டு, பரம சிரிப்பு பெரியவர் முகத்தில்.

இவர்களின் சம்பாஷனைகளை தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த விக்ரம் காதுகளில் புகை கிளம்பியது. செல்வகுமாரின் மூத்த மகன் இவன். பெற்ற பிள்ளையை விட வேலை பார்க்கும் ஒருவனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதை சகித்துக் கொள்ள முடியாமல் சமயம் கிடைக்கும் போதெல்லாம் அதை அக்னியிடம் காட்டி விடுவான்.

“அம்மா உங்க புருஷனுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல. எப்ப பாரு அந்த வேலைக்காரன் பெருமைய பாடுறதையே ஒரு பொழப்பா வைச்சிருக்காரு.” காதருகில் பேசும் மகனை முறைத்த நந்தினி,

“என் புருஷனுக்கு அறிவு நிறையவே இருக்கு நான் பெத்த ரெண்டுத்துக்கும் தான் ஒன்னும் இல்ல.”என்றார்.

அவர் வார்த்தையில் விக்ரம் மேல் உதடு தூக்கி முறைக்க,

“முறைக்காத விக்ரம். நீயும் உன் தங்கச்சியும் இந்த பிசினஸ் வேணாம்னு அவருக்கு உதவி பண்ணாம வெளிநாட்டுக்கு ஓடிட்டீங்க. அந்த தம்பி தான் கூட இருந்து நஷ்டத்துல இருந்த கம்பெனிய மீட்டுக் கொடுத்தான். பிள்ளைங்க கூட இல்லாத குறைய தீர்த்தது அந்த தம்பி தான்.” என்றவரின் பார்வை அக்னி சந்திரன் மீதுதான் இருந்தது.

மனைவியும் மகனும் பேசிக்கொள்வதை பார்த்த செல்வக்குமாருக்கு என்ன பேச்சு வார்த்தைகள் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை யூகிக்க முடிந்தது. மகன் பார்வை தன் மேல் விழும் நேரம் அக்னிசந்திரன் தோள் மீது கை போட்டு தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.

பெற்றவர்கள் பேச்சில் நாட்டம் இல்லாதவன் அங்கிருந்து நகர்ந்து விட்டான். விக்ரம் செல்வதை பார்த்த நந்தினி ‘இவனே இப்படி இன்னும் வரது எப்படியோ கடவுளே!’ என்று மனதில் நினைத்துக் கொண்டார்.

விடாமல் தொலைபேசி தொந்தரவு செய்து கொண்டிருக்க அதை எடுத்தவன், “அம்மா வேலையா இருக்கேன் அப்புறம் கூப்பிடுறேன் வைங்க.” என்று வைக்க சென்ற நேரம்,

“அக்னி அஞ்சு நிமிஷம் பேசுனா ஒன்னும் ஆகிடாது.” என கணீர் குரலில் பேசித்தான் ஆக வேண்டும் என்ற கட்டளையை மறைமுகமாக அளித்தார் அக்னி சந்திரனின் அன்னை பரமேஸ்வரி.

எந்த மறுப்பும் சொல்லாதவன் சத்தம் வராத இடத்தில் நின்று கொண்டு, “சொல்லுங்கம்மா என்ன விஷயம்.” என்று விசாரித்தான்.

“ஒரு அம்மா கிட்ட கேட்கிற வார்த்தையா இது அக்னி. எப்படி ம்மா இருக்க. சாப்டியா அம்மான்னு ஒரு வார்த்தை கேக்குறது இல்ல.” என்றதும் அக்னி எதிர்முனையில் பதில் கொடுக்க முயல,

“இரு நீ என்ன சொல்ல போறன்னு எனக்கே தெரியும்.”என்று மகனை தடுத்தவர்,

“நான் என்னம்மா பண்றது இங்க எல்லா பொறுப்பும் என் கையில இருக்குறதால அதை சரியா பார்க்க வேண்டிய கடமை இருக்கே. அதான அக்னி” என்றதும் சிரித்து விட்டான் அக்னிசந்திரன்.

“சிரிக்காத  எப்ப பாரு வேலைன்னு அங்கேயே இருக்க. உனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு ஞாபகம் வச்சிக்கோ.” மகன் வீட்டை மறந்து  அனுதினமும் அங்கேயே இருப்பதால் புத்திரப்பிரிவு வாட்டி எடுத்தது பரமேஸ்வரியை.

“அம்மா இனிமே நீங்க கவலை பட வேண்டாம். சாரோட பொண்ணு இன்னைக்கு ஆபீஸ்க்கு வராங்க. இனிமே என்னோட வேலையும் சேர்த்து அவங்களே பார்க்க போறதா சொல்லி இருக்காங்க. அதனால உன் மகன் சுதந்திரப் பறவையா உன் மடியில இருக்கப் போறான். இன்னைக்கு ஒரு நாள் மட்டும் உங்க செல்ல மகனுக்காக பொறுத்துக்கோங்க.” என்றவன் அவர் சமாதானம் அடைய ஓசை முத்தங்களை அவர் காதில் சேர்த்தான்.

முத்த சத்தம் விடாமல் செவிகளை நிறைக்க பிறகு எங்கு திட்டுவது மகனை பெற்றவர்! உதடுகள் நன்றாக விரிந்து பற்களை வெளிக்காட்ட,

“அம்மா சிரிக்கும் போது அப்படியே மகாலட்சுமி மாதிரி இருக்கீங்க.”என்று அன்னையை ஐஸ் மழையில் நனைய வைத்தான்.

“போதும்! போதும்! சீக்கிரம் வீட்டுக்கு வா அக்னி. உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.” என்றதும்,

“சரி ம்மா சீக்கிரம் வரேன்.” என்று போனை வைத்து விட்டான்.

மகனுக்கு அலைபேசியில் விடை கொடுத்தவர் சிரித்த முகமாக திரும்ப, அவரை முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள் திவ்யா. எதற்கென்று தெரிந்தாலும் தெரியாதது போல் அவளை விட்டு நகர பார்த்தவரை,

“இதுக்கு தான் ம்மா உன்ன நம்பவே மாட்டேன். மகன் பேசலன்னு அழுது புலம்ப வேண்டியது பேசிட்டா இப்படி பல்ல காட்டி என்னை வெறுப்பேத்த வேண்டியது. இன்னொரு தடவை என் மகன் என்ன பண்றானோ அப்படின்னு சோகமா மூஞ்ச வச்சிக்கிட்டு புலம்பி பாருங்க அப்புறம் இருக்கு.” என்றாள் அக்னி சந்திரனின் ஆசை தங்கை திவ்யா.

மகளுக்கு துணையாக, “அதான் பாருடா நைட் எல்லாம் மகன் வீட்டுக்கு வரலைன்னு தூங்கவே இல்ல உங்க அம்மா. இப்ப பாரு பத்து வீட்டுக்கு லைட் போட வேண்டிய தேவையே இல்ல போல உங்க அம்மா முகம் பிரகாசத்துக்கு.” மகளின் தோள் மீது கை போட்டு மணிவண்ணன் கூறியதும்,

“ரெண்டு பேரும் சேர்ந்து  கிண்டல் பண்றீங்களா இருங்க என் மகன் வரட்டும் இன்னைக்கு இருக்கு.” என்றார் பரமேஸ்வரி.

“அப்பா அவங்க மகன் அவங்களுக்கு இருந்தா உங்களுக்கு நான் இருக்கேன். இன்னைக்கு வரட்டும் இவங்களா நம்மளான்னு பார்த்துடலாம்.” என்ற திவ்யாவிற்கு ஐ பை அடித்து கூட்டணி அமைத்துக் கொண்டார் மணிவண்ணன்.

அவ்விருவருக்கும் பதில் மொழியாதவர் சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகர, செல்லும் அன்னையை மனம் நிறைந்து பார்த்துக் கொண்டிருந்தாள் திவ்யா.

***
ஃபோனை அணைத்தவன் அதை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு சுவரை ஒற்று இருந்த படிக்கட்டில் இறங்க திரும்ப, அந்த நேரம் நவீன யுகதி  சரியாக அவன் கால் வைக்கும் படிக்கட்டில் கால் வைத்தாள்.

இருவரின் உடல்களும் மோதிக் கொண்டது. மேல் நின்று இருந்ததால் அக்னி சந்திரன் விழாமல் இருந்தான். ஏறிக்கொண்டு வந்தவள் ஒரு காலை மட்டும் வைத்ததால் நிலை தடுமாறி விழப்போக வலது பக்கத்தில் இருந்த படிக்கட்டு கம்பியை பிடிக்க முயன்றாள்.  அகல படிக்கட்டு என்பதால் அவை கைக்கு சிக்காமல் போனது. மொத்தமும் தடுமாறி விழ துவங்க,

“ஹேய்ய்ய்!” என்று விழப்போனவளை தாங்கிப் பிடித்தான் அக்னிசந்திரன்.

விழப்போகும் பயத்தில் இருந்தவள் உதவிக்கு கரம் கிடைத்ததால் அதை இறுக்கப்பற்றிக் கொண்டு நிற்க முயல, அந்த போர்க்களத்தில் அக்னி சந்திரனும் கீழே விழ ஆரம்பித்தான். இருவரும் பிடித்துக் கொண்டு படிக்கட்டில் உருண்டனர். கடைசி படிக்கட்டில் இருந்து ஐந்தாவது படிக்கட்டில் கம்பியை பிடித்து சாய்ந்தவன் மீது அவளும் சாய்ந்த படி அமர்ந்தாள். 

நிமிடங்கள் கடந்து இயல்பு நிலைக்கு திரும்பிய அக்னி, “ஓகே வாங்க அடி ஒன்னும் படலையே.” என்று அவளை ஆராய்ந்தபடி கேட்டான்.

காப்பாற்றியவனக்கு பதில் சொன்னாள் கன்னத்தில் வேகமாக அறைந்து. இதை எதிர்பார்க்காத அக்னி அதிர்வோடு அப்பெண்ணை பார்க்க,

“ஸ்டுப்பிட்! கண்ண எங்க வச்சுட்டு வந்த‌. என்னமோ உன் பொண்டாட்டிய கட்டிப்புடிச்சு உருள்ற மாதிரி உருண்டுட்டு வர.” என்றவள் மீண்டும் அடிக்க கை ஓங்க, அந்த கையை வேகமாக பிடித்தான் அக்னி சந்திரன்.

“யூ இடியட்! எவ்ளோ தைரியம் இருந்தா என் கையை பிடிப்ப.” என்றவள் கையை விடுவிக்க முயல,

“ஏன் உன் கைய பிடிக்க கூடாதுன்னு நாட்டுல சட்டம் போட்டு இருக்காங்களா.” என்றவாறு அவள் கையை விடாமல் எழுந்து நின்றான் அக்னி.

“என்ன திமிருடா உனக்கு கைய பிடிச்சதும் இல்லாம இப்படி பேசுற. ராஸ்கல் இப்பவே உன்னை என்ன பண்றேன்னு பாரு.” என்ற யுவதி கைகளை விடுவிக்கப் போராட,

“யாரு எனக்கு திமிரா? விழுந்து மண்டைய ஒடச்சிக்க இருந்த உன்ன காப்பாத்துனவனை அடிச்சியே அதுக்கு பேர் என்ன.” என்றான் அவள் அடித்த கோபத்தில்.

“மண்ட உடைந்து இருந்தா கூட கவலைப்பட்டு இருக்க மாட்டேன்  என்னை டச் பண்ணிட்டியே. ச்சீ! முதல்ல நீ பிடிச்சிருக்க கைய டெட்டால் போட்டு நல்லா துடைக்கணும். விடிடா” என்றவளை மேல் பார்வை வைத்து புருவம் சுருக்கி முறைத்தவன்,

“பொண்ணுன்னு பார்க்கிறேன் இன்னொரு தடவை “டா” போட்டு பேசின நாக்கா அறுத்துடுவேன்.” என்றான் உஷ்ணமாக.

“டேய்! நான் யாருன்னு தெரியாம பேசுற மரியாதையாக கையை விடு.”

“உன்ன தெரிஞ்சிட்டு நான் என்ன பண்ண போறேன்.” என்றவன் அவள் முகத்தை பார்த்து, “உன்னை எல்லாம் ஒருத்தன் கட்டிக்கிட்டு என்ன கஷ்டப்பட போறானோ. வாயில நாகப் பாம்பை வச்சிருக்க பிசாசு.” என்று
அவள் கையை விட, மீண்டும் அடிக்க கை ஓங்கினாள்.

இந்த முறையும் சரியான நேரம் பார்த்து அதை பற்றி கொண்டவன், “இந்த வேலை தான் வேணாம்னு சொல்றது. திருப்பி நான் அடிச்சா பத்து நாள் எந்திரிக்க மாட்ட ப்பே.” என்றவன் சலிப்போடு அவளை லேசாக தள்ளிவிட, மீண்டும் தடுமாறி அவன் சட்டையைப் பிடித்தாள்.

கொஞ்சமும் பாவம் பார்க்காதவன் சட்டையில் இருந்த கையை எடுத்து விட, வேகமாக கீழே விழுந்தாள் அன்பினி சித்திரை.

“ஆஆ..அம்மா ” என்ற ஓசையோடு இடுப்பை பிடித்தவளின் அருகில் அமர்ந்தவன்,

“வலிக்குதா இப்படி ஆக கூடாதுன்னு தான் புடிச்சேன்.”என்றான் விழிகளில் குறும்புகள் போட்டி போட.

அதை உணர்ந்துக் கொண்ட அன்பினை சித்திரை கோபத்தோடும் முறைக்க, புருவம் உயர்த்தி புன்னகைத்தவன், “ஹெல்ப்” என்ற ஒற்றை வார்த்தையில் அவள் முன்பு கைகளை நீட்டினான்.

அந்த வலியிலும் அதை நிராகரித்தவள், “நான் எந்திக்கிறதுக்குள்ள இங்க இருந்து போயிடு இல்லன்னா…” என  வசனம் பேச வர,

“நீ பர்ஸ்ட் எந்திரி அப்புறம் டயலாக் பேசலாம்” என்று பேசுபவளை தடுத்தான் அக்னி சந்திரன்.

“பிளடி ராஸ்கல் யாருடா நீ என் கிட்ட இவ்ளோ திமிரா பேசுற.”

“அது கூட தெரியாம தான்  இவ்ளோ நேரம் பேசிக்கிட்டு இருக்கியா பைத்தியமே!” என்றவனை மீண்டும் கன்னத்தில் சப்பென்று அறைந்தாள் அன்பினி சித்திரை.

“யாருடா பைத்தியம்னு சொல்ற வாய ஒடச்சிடுவேன்.” என்று விரல் நீட்ட, அந்த விரலோடு சேர்த்து கன்னத்தில் ஓங்கி அறைந்தான் அக்னிச்சந்திரன். விரலில் கூர்மையாக வளர்த்திருந்த நகம் அவள் பால் கன்னத்தை கீறி விட, உடனே அந்த இடம் சிவந்து விட்டது.

அறைந்த எரிச்சலில் அந்தக் கீறலை உணராத அன்பினி சித்திரை பேச வரும் முன் மீண்டும் அவள் கன்னத்தில் அறைந்தவனுக்கு ஃபோன் வர,

“இதோ அஞ்சு நிமிஷத்துல வந்துடுறேன் சார்.” என்று பதில் சொல்லி அழைப்பை நிறுத்தி விட்டு, அவளைப் பார்த்து,

“இன்னொரு தடவை என்னை மட்டும் இல்ல  யாரையும்  கை நீட்டி அடிக்க கூடாது அதுக்கு தான் இந்த எக்ஸ்ட்ரா அடி.” என்றான்.
முறைத்தவள் கத்திக் கொண்டிருக்க , அவளைக் கண்டு கொள்ளாமல் அங்கிருந்து நகர்ந்தான்.

***
“சொல்லுங்க சார் கூப்பிட்டு இருந்தீங்க.” ஃபோனில் அழைத்ததற்கான காரணத்தை அக்னிசந்திரன் கேட்க,

“என் பொண்ணு வந்துட்டா சந்திரா. ரெப்ரெஷ் ஆகிட்டு வரேன்னு மேலே போய் இருக்கா. நீ எல்லாத்தையும் ஒரு தடவை சரி பார்த்து வை. அவ வரும்போது ஏதாவது தப்பாகிட்டா அவ்ளோ தான் கத்த ஆரம்பிச்சிடுவா.” என்றார் செல்வகுமார் பரபரப்பாக.

“கூல் சார்! எல்லாமே பக்காவா இருக்கு. நீங்க டென்ஷனாக வேண்டிய அவசியமே இல்லை.” என அவரை சாந்தப்படுத்தினான்.

மேள சத்தங்கள் இன்னும் வேகமாக அடிக்க ஆரம்பித்தது இன்று முதல் கம்பெனியை நிர்வாகம் செய்ய வருபவளை வரவேற்க. தங்கையை வாழ்த்துகளோடு வரவேற்க நின்றான் விக்ரம். பக்கத்தில் நந்தினி மகிழ்ச்சியோடு நின்றிருக்க, பின்வாசல் வழியாக சென்ற அன்பினை சித்திரை ஒய்யாரமாக காரில் இருந்து இறங்கினாள் முன்வாசலில்.

“வெல்கம் மை டியர்!” என்று வரவேற்ற செல்வக்குமார் மகளை கட்டியணைத்து தன் மகிழ்வை தெரிவிக்க,

“தேங்க்ஸ் ப்பா” என்ற அன்பினி சித்திரை உடல் மொழிகள் யாவும் உயர்ரக மக்களின் தோரணையை கொண்டிருந்தது. அதன்பின் அன்னையை அணைத்து தன் மகிழ்வை பகிர்ந்துக் கொண்டவள்,

“என்ன விக்ரம் பொக்கே எல்லாம் தர என் மேல கடுப்புல இருப்பேன்னு நினைச்சேன்.”  தன்னிடம் வாழ்த்து தெரிவித்து பூங்கொத்து நீட்டிய விக்ரமிடம் கேள்வி கேட்டாள்.

“நான் எதுக்கு உன் மேல கடுப்புல இருக்க போறேன்.”என புரியாமல் விக்ரம் அவளிடம் கேட்க,

“இல்ல நீ மட்டும் நிர்வாகம் பண்ணலாம்னு ரொம்ப ஆசையா இங்க வந்திருப்ப. இப்ப  உனக்கு போட்டியா நானும் வந்துட்டேன்னுல அதான் சொன்ன” என்று வாய்ப்பேச்சு பேசினாலும் அண்ணனின் வாழ்த்தை பெற்றுக்கொண்டு கட்டி அணைத்தாள்.

“உனக்கு நானோ இல்ல எனக்கு நீயோ  இங்க போட்டி இல்லை அன்பினி நம்ம ரெண்டு பேருக்கும் ஒருத்தன் தான் இங்க போட்டி.” என்றதும்,

“ஐயோ விக்ரம்! போதும் நீயும் அவன் புராணத்தை பாடாத‌. அப்பா டெய்லி அவனைப் பத்தி பேசி பேசியே கொல வெறிய ஏற்படுத்திட்டாரு.” என்று சலித்துக் கொண்டாள் அன்பினி சித்திரை ‌.

அண்ணன் தங்கை பேச்சுக்களை கேட்டுக் கொண்டிருந்த செல்வகுமார் தங்களுக்கு பின்னால் நிற்கும் அக்னி சந்திரனை சங்கடத்தோடு பார்த்தார். அவனோ எந்த முகம் மாறுதல்களும் இல்லாமல் புன்னகை முகமாக நின்றிருந்தான்.

நிலைமையை சகஜமாக்க எண்ணியவர், “அன்பினி இவன் தான் அக்னிசந்திரன். என்னோட ஆல் இன் ஆல்.” என்று அக்னி தோள் மீது கை போட்டு மகளின் முன்பாக நிறுத்த அவளோ அதிர்ந்தாள்.

அக்னி முகத்தில் அவ்வித எந்த அறிகுறிகளும் இல்லாமல் சாதாரணமாக இருந்தது. அதில் மேலிருந்து கீழாக அவனை ஆராய்ச்சி செய்தவள், “நீ தான கொஞ்ச…” என சற்று நேரத்துக்கு முன் நடந்த சம்பவங்களை அவனிடம் கேள்வி கேட்க முயல,

“வெல்கம் மேடம்!” குழந்தை சிரிப்போடு அவளிடம் பூங்கத்தை கொடுத்து வரவேற்றான்.

விட்ட கோபங்கள் மீண்டும் அவள் முகத்தில் துளிர் விட, அவன் அருகில் சென்றவள் பூங்கொத்தை வாங்குவது போல் ரகசியமாக, “அப்போ நான் யாருன்னு உனக்கு முன்னாடியே தெரியும்.” என்று பற்களை கடித்தாள்.

“கண்டிப்பா மேடம் சாருக்கு எந்த அளவுக்கு உதவியா இருந்தனோ அதே அளவுக்கு உங்களுக்கும் இருப்பேன்.” என சம்பந்தமே இல்லாமல் பேசி சிரித்தவன் செல்வகுமாரிடம்,

“சார் உங்க டாட்டர் ரொம்ப ஆர்வமா இருக்காங்க. வந்து பத்து நிமிஷம் கூட ஆகல அதுக்குள்ள கம்பெனி டீடைல்ஸ் வேணும்னு கேக்குறாங்க.” என்றதும் விக்ரம், அன்பினிசித்திரையை தவிர மீதம் இருந்த அனைவரும் பெருமிதத்தோடு சிரித்தனர்.

“ராஸ்கல்! கேம் ப்ளே பண்றியா? அதுவும் இந்த அன்பினிசித்திரை கிட்ட. பார்க்கிறேன்டா எத்தனை நாளைக்கு இதே மாதிரி சிரிச்சி மழுப்புறன்னு.”

“இத்தனை வருஷமா கம்பெனியில வேலை பார்க்கிற ஒருத்தனை கூட தெரிஞ்சு வச்சுக்காத உன் லட்சணத்துக்கு என்னத்த பார்த்தாலும் விளங்காது.”

“எங்க அப்பா தினமும் மணிக்கணக்கா உன்ன பத்தி பேசும் போதே சந்தேகப்பட்டேன். நானும் என் அண்ணனும் இந்த கம்பெனிக்கு வராததால நீ ஆட்டைய போடலாம்னு கனவு கண்டுட்டு இருந்தியோ. உன்னோட எண்ணம் ஒரு நாளும் பலிக்காது.” என்றவள் அவன் கொடுத்த பூங்கொத்தை வாங்கிக் கொண்டு,

“ஒரு எம் டி பொண்ண வரவேற்கிறீங்க மிஸ்டர்…” என அவன் பெயர் தெரிந்தும் தெரியாமல் இழுத்தவள்,

“இவன் பெயர் என்ன ப்பா?”என தந்தையிடம் கேட்டாள்.

“அன்பினி இப்படித்தான் மரியாதை இல்லாம அவன் இவன்னு பேசுவாங்களா” என மகளை கண்டித்தார் நந்தினி.

“ஏன்மா பேசினா என்ன தப்பு? இவன் என்ன பில்கேட்ஸ் மகனா. இல்ல எங்க அப்பா மாதிரி இவ்ளோ பெரிய கம்பெனிக்கு ஓனரா? மாச சம்பளத்துக்கு வேலை பார்க்கிற அதுவும் எனக்கு கீழ வேலை பார்க்க போற இவன நான் எதுக்கு மரியாதையா பேசணும்” என்றவள் அனைவரின் முன்பும் அவனை அசிங்கப்படுத்தி விட்டதாக நினைத்து கர்வத்தோடு பார்க்க,

“அன்பினி இங்க  மாச சம்பளத்துக்கு சந்திரா  வேலை பார்க்கலாம் ஆனா அவன் இல்லாம இந்த கம்பெனி இல்ல. நீயோ இல்ல உங்க அண்ணனோ இனி இந்த சாம்ராஜத்தை ஆளணும்னா கண்டிப்பா அவன் உதவி வேணும் உங்களுக்கு.” என்று கோபமாக பேசி முடித்தார் செல்வகுமார்.

மகளுக்கும் தந்தைக்கும் வாக்குவாதம் ஏற்படுவதற்கு முன், “சார் அவங்க சொல்றதுல என்ன தப்பு இருக்கு. வந்த முதல் நாளே மேடமை மூட் அவுட் பண்ணாதீங்க சார் விடுங்க.” என்று அவரை சமாதானப்படுத்தியவன்,

“மேடம் என்னோட பேரு அக்னிசந்திரன். நீங்க அக்னின்னு கூப்பிடலாம் இல்ல சார் மாதிரி சந்திரான்னும் கூப்பிடலாம்.”என்று பேசுவது போல் அவள் அருகில் நின்றவன்,

“அதுவும் இல்லன்னா ஏதாச்சும் செல்லப் பேரு வைத்தும் கூப்பிடலாம்.”  என்றான் சத்தம் வராமல் அவளிடம்.

மிளகாய் பொடியை கண்ணில் தூவியது போல் சிவந்து விட்டது அன்பினி சித்திரை கண்கள். தந்தையிடம் மீண்டும் பேச்சு வாங்க விரும்பாதவள் அவன் சொன்னது போல் ரகசியமாக,

“என்னோட நாய்க்குட்டி பேரு அடிமை. ஏன்னா அது நான் கொடுக்கிறது சாப்பிட்டு என் பின்னாடியே வரும்.  இனி நீயும் அந்த நாய்க்குட்டி மாதிரி தான் எனக்கு அடிமையா இருக்கணும். சோ இன்னையில இருந்து உன்னோட பேரு அடிமை. நான் என்ன சொன்னாலும்  நாய் மாதிரி வாலை ஆட்டி  செஞ்சு முடிக்கணும்.” என்றவளின் வார்த்தைக்கு கோபம் கொள்ளாமல் அழகாக சிரித்தவன்,

“சரிங்க மேடம்.” என்று வாலுக்கு  பதிலாக அவன் தலையை ஆட்டினான்.

அவனின் திமிரும், அலட்சியமும் அவளுக்குள் என்னவோ செய்தது. விக்ரம் அன்பினி இருவரும் தந்தை தொழிலை பின்பற்ற முடியாமல் வெளியூருக்கு படிக்க செல்கிறேன் என்ற பேர்வழியில் ஊர் சுற்றி கொண்டிருந்தார்கள். நலிந்து போன கம்பெனியை மீண்டும் உயிர் பூட்டினான் அக்னிசந்திரன். சாதாரண காரியதரிசி வேலைக்கு சேர்ந்தவன் மெல்ல செல்வகுமாரோடு பழகி, அவருக்கு உறுதுணையாக பின் நின்றான்.

ஓரளவுக்கு எழுந்து நின்றவர் எங்கு பார்த்தாலும் அக்னிசந்திரன் புராணத்தை பாட ஆரம்பித்து விட்டார். தொழில் ரீதியாக உள்ள அனைவரும் அக்னிசந்திரன் உங்கள் மகனா என்று கேட்கும் அளவிற்கு இருவரின் நெருக்கமும் தொழில் வட்டாரத்தில் பிரபலமாக இருந்தது. இதை முதலில் அறிந்த விக்ரம் தானாக முன்வந்து தந்தை முன்பு நின்றான்.

மறுப்பு சொல்லாதவர் தன்னுடன் சேர்ந்து கம்பெனியை பார்க்கும் பொறுப்பை கொடுத்து விட்டார். கூடவே அவனை அக்னிசந்திரனின் பொறுப்பில். அண்ணனின் புலம்பலை கேட்ட அன்பினை சித்திரையும் ஓடி வந்து விட, அண்ணன் தங்கை இருவருக்கும் தீராத தலைவலியாக தெரிந்தான் அக்னிசந்திரன்.

“ஆட்டு நல்லா தலையாட்டு. இன்னும் ஒரு மாசத்துல இதே மாதிரி தலையாட்டி என்கிட்ட உன்ன கெஞ்ச வைக்கல நான் அன்பினி சித்திரை இல்லடா.”என அவனைப் போல் ரகசியமாக சொல்லி முடித்தாள்.

ரகசியம் ரகசியமாக இருவரின் காதுக்குள்ளும் ஒலித்தது. ஒருவரை ஒருவர் யாரும் அறியா வண்ணம் முதல் சந்திப்பில் முட்டிக்கொண்டு நிற்க, வருங்காலம் அன்போடு வரவேற்று முட்டிக் கொள்ள இருவரையும். 

அம்மு இளையாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
22
+1
36
+1
5
+1
8

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment