Loading

 

 

மூன்று வருடங்களுக்கு பிறகு…

“ம்மா” என்று மழலை மொழியில் அழைத்துக் கொண்டு, பந்து போன்று உருண்டு ஓடி வந்தாள் வருணிகாவின் செல்ல மகள், பிருந்தாஸ்ரீ.

“செல்லக்குட்டி.. என்ன பண்ணுறீங்க? இப்படித்தான் பிச்சி சாப்பிடுவாங்களா?”

“ம்மா.. சாக்கி பிச்சி”

“சொன்னா கேட்குறது இல்ல. இரு உன் அத்தைக்கு நாலு அடி வைக்கிறேன்” என்றதும், “ஏன் அத்தை என்ன பாவம் பண்ணா?” என்று கேட்டுக் கொண்டே மேனகா வந்தாள்.

“நீங்க தான கொடுத்துருப்பிங்க?”

“நான் எங்க கொடுத்தேன்?. அவங்கம்மா மாதிரி எல்லாத்தையும் நோண்டி பார்த்து அவளே எடுத்துக்கிட்டா”

வருணிகா மகளை முறைக்க, ஸ்ரீ சிரித்து வைத்தாள்.

“நீங்க மோசம். என் மருமகன் தான்‌ சமத்து பையன். எங்க அவன்?”

“ம்மா.. நான் சமுத்து”

“நீ சமத்தா? சேட்டைக்காரி”

ஸ்ரீ தாயின் கோபத்தில் உதட்டை பிதுக்க, “பாரு நடிப்புக்காரி” என்றாள்.

“பிள்ளைய திட்டாத.. கொடு இங்க. போய் ட்ரஸ்ஸ மாத்திட்டு வா.” என்று ஸ்ரீயை வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தாள், மேனகா.

வருணிகா, இப்போது தேனியிலேயே ஒரு வழக்கறிஞரிடம் வேலை செய்கிறாள். பெரிய அளவு வேலை இல்லையென்றாலும், அவளுக்குப்பிடித்து இருந்தது. பூபதி கூட, தங்களது மில்லில் வேலை செய்ய அழைத்துப் பார்த்தான். அவள் தான் மறுத்து விட்டு, வெளியே வேலை செய்து கொண்டிருக்கிறாள்.

ஹரிஹரன், குழந்தை பிறக்கும் வரை, இங்கு எட்டிக்கூடப்பார்க்கவில்லை. விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்து விட்டுச் சென்றதோடு சரி. அவள் முகத்தைப்பார்க்கவே முடியாமல், சென்னையிலேயே இருந்தான்.

ஆனால் குழந்தை பிறந்த பிறகு, அவனால் அமைதிகாக்க முடியவில்லை. குழந்தையை பார்க்க ஓடி வந்தான். அவனை யாரும் தடுக்கவில்லை. வருணிகா கூட அவனைத் தடுக்கவில்லை.

குழந்தை அவளுக்கு மட்டுமே சொந்தமில்லை அல்லவா? அவனுக்கு பார்க்கவும், சீராட்டவும் உரிமை இருக்கிறது தான். ஆனால், அவளது வாழ்வில் அவனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று திடமாக இருந்தாள்.

இதோ, குழந்தை பிறந்து இரண்டரை வயதாகிறது. மாதம் ஒரு முறை பிள்ளையை பார்க்க ஓடி வந்து விடுவான்.

வருணிகா அவனை பார்த்தாலே, அங்கிருந்து சென்று விடுவாள். அவளாக மன்னிக்காத வரை, அவளை வற்புறுத்தவும் முடியாது. செய்த தவறு மாபெரும் தவறு. அதை உடனே மறக்க முடியாதே.

விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கியவள், அதை பதியும் வேலையில் இறங்கவே இல்லை. அதைப் பற்றி யார் கேட்டாலும், பதிலும் இல்லை.

இவர்கள் வாழ்வு இப்படியே செல்ல, சந்திரா தனிமையிலும் பயத்திலும் வாழ்ந்து கொண்டிருந்தாள்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு, லேகா வழுக்கி விழுந்து, படுத்த படுக்கையாகி விட்டார். மற்றவர்கள் அவரை பாவமாக பார்ப்பது, எப்போதுமே அவருக்குப் பிடிக்காது. ஆறு மாதங்கள் அதே நிலையில் இருந்தார். அவருக்கு உதவுபவர்களை எல்லாம், பிடுங்கி எடுத்தார். கடைசியாக தூக்க மாத்திரைகளை மொத்தமாக விழுங்கி, உயிரை விட்டு விட்டார்.

அதன் பின்பு, ராஜராஜனின் இன்னொரு குடும்பம், தங்களது உரிமையை நிலைநாட்ட ஆரம்பித்தது.

சந்திராவை சீக்கிரம் திருமணம் முடித்து அனுப்பி விட்டு, மொத்தமாக தங்களிடம் வந்து விடும்படி அழைத்தது. அதைக்கேட்டு, அவரும் மாப்பிள்ளை தேட ஆரம்பித்து விட்டார்.

திருமணம் என்றதுமே, சந்திராவிற்கு பயம் தான் வந்தது. வருணிகாவின் மிரட்டலில் உடல் பதறியது. இந்த விவரம் வெளியே தெரிந்தால், அவளை எவ்வளவு கேவலமாக நினைப்பார்கள்?

சென்னையும் பெங்களூரும் என்றதால், அவள் தைரியமாக இறங்கினாள். ‘உள்ளூரில் விசயம் தெரிந்தால்?’ நினைக்கவே மனம் நடுங்கியது.

வரும் மாப்பிள்ளைகளை எல்லாம், ஏதோ ஒரு காரணம் சொல்லி, துரத்திக் கொண்டே இருந்தாள். யாரைப் பார்த்தாலும் பிடிக்கவும் இல்லை.

அத்தை லேகாவின் கடைசி முடிவைப் பார்த்து, அவளுள் இருந்த கர்வம் அகங்காரம் எல்லாமே தொலைந்து விட்டது. இப்போது மிஞ்சி இருந்தது எல்லாம், பயமும் குற்ற உணர்வும் தான்.

கடந்த மாதம், ஒரு மாப்பிள்ளையை கொண்டு வந்து நிறுத்தினார் ராஜராஜன். அவனை சந்திராவுக்கு ரொம்பவுமே பிடித்து விட்டது. அவனை தட்டிக் கழிக்க முடியாத நிலைக்கு, மனம் தள்ளியது. ஆனால், வருணிகாவை நினைத்து பயமாகவும் இருந்தது.

உடனே வருணிகாவை சந்தித்துக் கெஞ்சினாள்.

“நீ பண்ணது தப்புனு உணர்ந்துட்ட.. அதுனால நான் உன்னை மன்னிச்சு விடுறேன். போய் சந்தோசமா வாழு.. அப்படினு வசனம் பேச நான் சீரியல் ஹீரோயின் இல்ல. நீ செஞ்சது தப்பு இல்ல. துரோகம். நம்பிக்கை துரோகம். என் பிள்ளைக்கு அப்பா.. என் புருஷன். அவரையே பண்ண தப்புக்கு தூக்கி போட்டு பந்தாடிட்டேன். நீ வெறும் ஃப்ரண்ட்.. உன்னை சும்மா விட்டுருவனா? போட்டோஸ் எல்லாம் போஸ்டர் அடிச்சு, உன் வீடு முழுக்க ஒட்டுவேன். முடிஞ்சத பண்ணிக்க.”

“என்ன ஏன்டி படுத்துற?” என்று சந்திரா கண்ணீர் விட, வருணிகா நக்கலாக பார்த்தாள்.

“இப்ப பார்த்துருக்க மாப்பிள்ளைய ரொம்ப பிடிச்சுருக்கோ..? அப்போ அவனுக்கு தான் முதல் காபி.. ஹெச்.டி ப்ரிண்ட் போட்டு அனுப்பி விடுவேன். என் வாழ்க்கையில என் புருஷன வச்சு நீ விளையாடின.. நானும் அதையே உனக்கு செஞ்சுட்டா தான் திருப்தியா இருக்கும்”

வருணிகாவின் வார்த்தைகள் எல்லாம், சந்திராவை கதிகலங்க வைத்தது.

“ப்ளீஸ் வருணி.. என்னை மன்னிச்சுடு. எனக்கு என்ன வேணாலும் தண்டனை கொடு. ஆனா இது வேணாம் ப்ளீஸ்”

“என்னடி நடிக்குற? நீ இப்படி எல்லாம் பேசுற ஆள் இல்லையே.. உன்னை மன்னிக்கனுமா? எதுக்கு? நான் எந்த தப்பும் பண்ணாதப்போ, என் வாழ்க்கைய கெடுத்து வாழா வெட்டியா என் வீட்டுல உட்கார வைப்ப.. நான் மட்டும் உன்னை மன்னிச்சு சந்தோசமா வாழுனு விடனுமா?”

வருணிகா நக்கலாக கேட்க, சந்திரா வார்த்தை வராமல் அமர்ந்து விட்டாள்.

“இன்னும் ஏன் நான் டைவர்ஸ் அப்ளை பண்ணலனு தெரியுமா? உனக்கு கல்யாணம் நிச்சயம் ஆகனும். அதுக்கப்புறம் தான், என் புருஷனுக்கும் உனக்கும் தொடர்பு இருக்குனு கேஸ் போடுவேன். மொத்த ஊரும் சிரிச்சு.. உன் கல்யாணம் நிக்கனும். அவமானத்துல நீ தலை குனிஞ்சு நிக்குறத பார்த்தப்புறம் தான், டைவர்ஸ் வாங்குவேன்னு உறுதியா இருக்கேன். போ போய் கல்யாணத்துக்கு ரெடி ஆகு. இப்போ வெளிய போ”

அவளைப் பிடித்து வெளியே தள்ளி விட்டாள்.

சந்திரா அழுது கொண்டே வீட்டுக்கு வந்து விட்டாள். நடுவீட்டில் அமர்ந்து அழுது வடிய, அவளுக்கு பார்த்த மாப்பிள்ளை வாசலில் வந்து நின்றான். முதலில் அழுகையில் கதவு தட்டும் சத்தத்தை கவனிக்காதவள், பிறகு கவனித்துத் திறந்தாள்.

மணிகண்டனை பார்த்ததும் அதிர்ந்தாள்.

“அப்பா வீட்டுல இல்ல”

“அவர் கிட்ட கேட்டுட்டு உங்கள பார்க்க தான் வந்தேன். உங்க கிட்ட பேசிட்டுப்போகலாம்னு”

வேறு வழியில்லாமல் அவனை உள்ளே அழைத்தாள். அவளது முகத்தை பார்த்து விட்டு, “அழுதீங்களா?” என்று வினவினான்.

முதலில் சமாளித்தாள். அவன் வற்புறுத்திக் கேட்கவும், உள்ளே இருந்த சோகமெல்லாம் வெடித்தது. யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்ததை எல்லாம், அவனிடம் மடை திறந்த வெள்ளமாக கொட்டி விட்டாள்.

அவன் முகத்தை பார்க்காமல் விட்டத்தை வெறித்தபடி, சிறுவயதில் வருணிகாவுடன் போட்டி போட்டது.. வளர்ந்து போட்டி பொறாமையாக மாறியது.. கல்லூரியில் அவளுக்கே தெரியாமல் செய்த அநியாயங்கள் என்று ஒன்றையும் விடாமல் கூறினாள்.

கடைசியாக ஹரிஹரனை ஏமாற்றியது. அத்தையின் பேச்சைக்கேட்டு, அவளது வாழ்வை நாசமாக்கியது வரை எல்லாம் சொல்லி முடித்தவள், முகத்தை மூடிக் கொண்டு கதறினாள்.

வருணிகா தற்போது மிரட்டுவதையும், பயத்தோடு சொல்லி முடித்தவளுக்கு, அவனை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.

“போயிடுங்க.. நான் நல்லவ இல்ல. ரொம்ப ரொம்ப கேவலமான பொண்ணு. கேடுகெட்டவ. என்னை ஃப்ரண்டா நினைச்சவ வாழ்க்கைய சீரழிச்ச துரோகி. நான் உங்களுக்கு வேணாம் போயிருங்க” என்று முகத்தை மூடிக் கொண்டு கதறினாள்.

அரை நிமிடம் அவளை பார்த்துக் கொண்டிருந்தவன், எதுவும் சொல்லாமல் வெளியேறி விட்டான். அவன் சென்ற பிறகு, மேலும் துடித்தாள்.

“வருணிகா கூட ஹரிஹரன் பிரிவில் இப்படித்தான் துடித்து இருப்பாள்” என்று மனசாட்சி குத்த, அழுகை ஓயவில்லை. அழுதபடி தரையில் படுத்து விட்டாள். வீட்டுக்கு வந்த ராஜராஜன், தரையில் கிடந்த மகளைப் பார்த்தார். காய்ச்சல் வந்து அரைமயக்கத்தில் இருந்தாள்.

அவளை மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடினார். கண் விழிப்பதற்கு ஒரு நாள் ஆகி விட்டது. காய்ச்சல் குறைந்து வீட்டுக்கு கிளம்ப மேலும் இரண்டு நாட்கள் பிடித்தது.

அவள் கிளம்பும் போது தான், மணிகண்டன் வந்து பார்த்தான். முதலில் வரும் போது அவள் மயக்கத்தில் இருந்தாள். மணிகண்டனை பார்த்ததும், குற்ற உணர்வோடு தலை குனிந்து கொண்டாள்.

அவளை விட்டு விட்டு, வருணிகா சந்திக்கக் கிளம்பினான். சில நாட்கள் போராடிய பிறகு இன்று தான் அவளை பார்க்க முடிந்தது. நடந்ததைச் சொல்லி சந்திராவின் நிலையைக்கூறினாள்.

“பரிதாபப்படனுமா?” என்று பட்டென வருணிகாவிடமிருந்து கேள்வி வர, பதில் சொல்ல முடியாமல் திணறினான்.

“அவ பயந்து ஃபீவர் வரை இழுத்துக்கிட்டா?”

“எதுக்கு பயம்? தப்பு பண்ணும் போது வரல. வெளிய தெரிஞ்சுடும்னு சொன்னதும் ஏன் வருது?”

“ப்ளீஸ்.. அவ தப்ப உணர்ந்துட்டா”

“ஓஓஓ… அப்போ நான் இழந்த நாலு வருச கல்யாண வாழ்க்கை திரும்ப கிடைச்சுடுமா? என் மனக்காயம் எல்லாமே சரியாகிடுமோ?”

“அவளுக்கு இப்போ குற்ற உணர்வு அதிகமா இருக்கு. அதை நான் போக்கனும்னு தான் உங்க கிட்ட பேச வந்தேன்”

“எப்படி? அவ பண்ணது தப்பு. உங்களுக்கு அவள பிடிச்சு இருக்கா? கல்யாணம் பண்ணிட்டுப்போங்க. என் கிட்ட வந்து சமாதானம் பேச வேணாம்”

“இப்படி பண்ணா எப்படி?”

“இப்ப என்னங்க பண்ணனும்ங்குறீங்க? அவ குற்ற உணர்ச்சி போகனும்னு, நான் என் புருஷன் கூட சேர்ந்து வாழனுமா? என் வாழ்க்கைய கெடுத்தது அவ. அவ நல்லா இருக்கனும்னு நான் நினைக்கனும்னு எதிர் பார்க்குறீங்க? சுயநலமா இல்லையா?”

மணிகண்டன் அதிர்ந்தான். உண்மை தானே. அவள் எந்த தவறும் செய்யாமல், பலியாகி இருக்கிறாள். இந்த அளவு கூட திருப்பி செய்யாமல் இருக்க, அவள் என்ன முற்றும் துறந்த நிலையிலா இருக்கிறாள்? இதில் அவளுக்கு குழந்தையும் உண்டு. எத்தனை கேள்வி அவளை எவ்வளவு கேட்பார்கள்? ஏன் கணவனை பிரிந்தாள் என்று ஆளுக்கொரு கதை பேசும் சமூகத்தில். எவ்வளவு ரணங்களை தாங்கி வாழ்கிறாளோ?

ஆனாலும், சந்திரா கதறியது கண்ணை விட்டு மறைய மறுத்தது. அவள் அத்தனையையும் அவனிடம் சொல்லி அழுகிறாள். அவனை முழுதாக நம்புகிறாள். அவளை விட அவனுக்கு மனமில்லை. அதற்காகவே வருணிகாவிடம் கெஞ்சவும் தயாராக இருந்தான்.

“ப்ளீஸ்ங்க. அவ நீங்க கல்யாணத்துல எதாவது குழப்பம் பண்ணுவீங்கனு தான் பயப்படுறா. அத மட்டும் பண்ணாதீங்க. வேற நீங்க என்ன சொன்னாலும் அவ கேட்டுப்பா”

“வேற என்ன? நீங்களே சொல்லுங்க.. அவள எனக்கு வேலைக்காரியாக்கட்டுமா? அவ்வளவு தரம் தாழ்ந்து போற மாதிரி, என்னை என் வீட்டுல வளர்க்கல. அதே போல இந்த காலத்துல அதை செய்யவும் முடியாது. அவ செஞ்ச துரோகத்த, நான் எப்படித்திருப்பிக் கொடுக்கனும்னு எதிர் பார்க்குறீங்க?”

மணிகண்டன் வாயடைத்துப்போனான். அவளது கேள்விகள் எல்லாம் நெற்றியடி தான். சந்திரா அழுது கொண்டே சொன்னாள்.

“வருணி ரொம்ப நல்லவ. அவளுக்கு துரோகம் பண்ணி அவளோட மொத்த கோபத்தையும் சம்பாதிச்சுட்டேன். அவளோட சாஃப்ட் எல்லாம் போய், ரொம்ப மாறிட்டா.. எல்லாத்துக்கும் நான் தான் காரணம். நான் மட்டும் தான் காரணம்”

வருணிகாவின் சாந்தமான முகத்துக்கும், அவளது வார்த்தைக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது. இவளது பிறவி குணம் இதுவல்ல. நடந்த நிகழ்வு அவளை இப்படி மாற்றி இருக்கிறது என்று புரிந்து கொண்டான். அதுவும் அவனுக்கு வேதனையைத் தான் கொடுத்தது.

“ப்ளீஸ் கிளம்புங்க. வேலை செய்யுற இடத்துல என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க” என்று அனுப்பி விட்டாள்.

அதை நினைத்துக் கொண்டே, இப்போது உடை மாற்றி விட்டு வெளியே வந்தாள்.

பிருந்தா ஸ்ரீ,  மேனகாவின் மகன் விஷாலுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். ஸ்ரீ பெரிய மனுசி தோரணையில் கதை சொல்ல, விஷால் குப்புற படுத்துக் கொண்டு, அவள் பொம்மைகளை ஆட்டிக்காட்டி சொல்லும் கதையை, ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தான்.

“கிழவி.. கதை சொல்லுறாளாம்” என்று வருணிகா வம்பிழுக்க, ஸ்ரீ தாயை முறைத்தாள்.

“கியவி இல்ல”

“நீ கிழவி தான்.”

“ஆஆஆஆஆன்..” என்று ஸ்ரீ கண்ணை கசக்கிக் கொண்டே கத்த, எட்டி தூக்கி மடியில் வைத்துக் கொண்டாள்.

மற்றொரு கையில் மருமகனையும் தூக்கி வைத்துக் கொண்டாள்.

“எனக்கும் கதை சொல்லு. அப்புறம் விடுறேன்” என்று கூறி குழந்தைகளோடு ஐக்கியமாகி விட்டாள்.

சில நிமிடங்கள் கழித்து ஹரிஹரன் வந்து நின்றான். அவனை பார்த்ததும் ஸ்ரீ ஓட, பின்னாலே விஷாலும் ஓடினான். இருவரும் சென்றதும், வருணிகா அறைக்குள் சென்று விட்டாள். இனி ஹரிஹரன் கிளம்பும் வரை, பிள்ளைகள் பக்கம் கூட செல்ல மாட்டாள்.

வாங்கி வந்திருந்த பொருட்களை இரண்டு குழந்தைக்கும் பிரித்துக் கொடுத்தவன், அவர்களோடு விளையாட ஆரம்பித்து விட்டான்.

எல்லோரும் பெயரளவில் வரவேற்றாலும், மேனகாவாலும் தெய்வாவினாலும் அப்படி இருக்க முடிவதில்லை. அதனால், அவனை நன்றாக வரவேற்று உபசரிக்கவே செய்தனர்.

அன்றைய நாள் நன்றாக கழிந்தது. ஹரிஹரனுடனே இரவு தூங்கி எழுந்தாள் ஸ்ரீ.

அடுத்த நாள், பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அவன் வெளியே கிளம்ப, வழக்கம் தான் என்பதால் சந்தோசமாக அனுப்பி வைத்தனர்.

பைக்கை நிறுத்தி விட்டு, ஆளுக்கொரு மிட்டாயை வாங்கிக் கொடுத்து விட்டு, அவர்கள் சொல்லும் கதைகளை கேட்டுக் கொண்டிருக்க, பின்னால் யாரோ வந்து நின்றனர்.

அவன் புரியாமல் பார்க்க, “உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்” என்றான் மணிகண்டன்.

“நீங்க?”

“சந்திரா உட் பீ”

இதைக்கேட்டதும் ஹரிஹரனின் முகம் இறுகியது.

“பேச எதுவும் இல்ல கிளம்புங்க”

“சார் ப்ளீஸ்”

“சார்.. கிளம்புங்க. புள்ளைங்க இருக்காங்க. போங்க”

மணிகண்டனை துரத்தி விட்டு, அங்கிருந்து கிளம்பி விட்டான். ஆனால் மணிகண்டன் விடுவதாக இல்லை.

நேராக, சந்திராவை அழைத்துக் கொண்டு வீட்டுக்கே வந்து விட்டான். ஆண்கள் எல்லோரும் வெளியே சென்று இருந்தனர். வீட்டு வரவேற்பறையில், மகளோடு செஸ் விளையாடிக் கொண்டு, அவளுக்கு சொல்லிக் கொடுத்தபடி அமர்ந்து இருந்தான், ஹரிஹரன்.

மேனகாவும் தெய்வாவும் வருணிகாவின் அறையில் இருந்தனர். வெளியே சத்தம் கேட்டு வந்து பார்த்தனர். சந்திராவை பார்த்ததும், எல்லோருக்குமே கோபம் வந்தது. பிள்ளைகளை வைத்துக் கொண்டு கோபப்படக்கூடாது என்று, பல்லைக்கடித்துக் கொண்டு நின்றனர்.

உடன் வந்த மணிகண்டன் தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டான். என்ன சொல்வது என்று தெரியாமல், அமரச்சொல்லி தண்ணீர் கொடுத்தனர்.

சந்திரா, தலையை நிமிர்த்தி யாரையுமே பார்க்கவில்லை. பார்க்கும் தைரியமும் இல்லை. வருணிகாவை அழைத்தனர்.

இருவரையும் பார்த்தவள், ஒன்றும் பேசாமல் நின்று விட்டாள்.

“பிள்ளைங்கள கூட்டிட்டு கிளம்பு மேனகா. கோவிலுக்குப்போயிட்டு வரலாம்”

“அத்த”

“கிளம்பு. இவங்களே பேசி முடிவுக்கு வரட்டும்.”

உடனே பிள்ளைகளை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு கிளம்பி விட்டனர்.

நான்கு பேரும் தனித்து விடப்பட, பேச்சை ஆரம்பிக்கத்தெரியாமல் எல்லோருமே தடுமாறினர்.

மணிகண்டன் எப்படிப்பேசுவது என்று தெரியாமல் வார்த்தைகளை கோர்த்துக் கொண்டிருக்க, சந்திரா வேகமாக எழுந்து சென்று, வருணிகாவின் காலடியில் அமர்ந்து விட்டாள்.

“பாவி பாவி நான்.. உனக்கு பண்ண எல்லாமே துரோகம். என்னை கொன்னுடு வருணி. இந்த குற்ற உணர்ச்சியோட வாழ முடியல” என்று சந்திரா காலைப்பிடிக்க வர, வருணிகா வேகமாக பின்னால் நகர்ந்தாள்.

சந்திராவின் அழுகையில், வருணிகாவிற்கு துக்கம் தொண்டையை அடைத்தது. அவளை உயிர்த்தோழியாகத்தானே நினைத்து இருந்தாள். அவள் பொய்த்துப்போனது அவளுக்கும் வலி தானே.

“வருணி.. எல்லாமே தப்பு தான். என்னை மன்னிக்கவே மாட்டியா? இப்ப ஒருத்தர பிடிச்சு, இவங்க தான் எல்லாம்னு வந்தப்புறம் தான், நீ எவ்வளவு துடிச்சுருப்பனு தெரியுது. சாரி வருணி.. சாரி” என்று முகத்தை மூடிக் கொண்டு அழுதாள்.

ஹரிஹரன் இறுகிப்போய் நின்றான். சந்திரா காலில் விழுந்து விட்டாள். அவனுக்கு அந்த உரிமை கூட இருக்கிறதா என்று தெரியவில்லையே.

மணிகண்டன் அவளது கதறலை பார்க்க முடியாமல் திரும்பிக் கொண்டான். அவன் தான் வற்புறுத்தி அழைத்து வந்திருந்தான். அவளாக மன்னிப்பு கேட்காமல், எதுவும் மாறாது என்று அவனுக்குத் தெளிவாக தெரிந்திருந்தது.

“எந்திரி”

“வரு‌…”

“எந்திரி”

எழுந்து நின்றவளை தீர்க்கமாக பார்த்தவள், “போ” என்றாள்.

சந்திரா அடிபட்ட பார்வை பார்க்க, “கிளம்பு.. உன்னை மன்னிச்சுட்டேன். போய் கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழு. நான் எதையும் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்” என்றாள்.

இதைக்கேட்டு சந்தோசம் வராமல், சந்திராவிற்கு கண்ணீர் தான் வந்தது.

“இவள கூட்டிட்டு கிளம்புங்க. இதுக்காக தான வந்தீங்க? கொடுத்துட்டேன். இப்போ நீங்க போகலாம்”

இறுகிய குரலில் அவள் பேச, சந்திராவிற்கு வேதனை தான் அதிகரித்தது.

“வேணாம். எனக்கு எதுவுமே வேணாம். காலம் முழுக்க குற்ற உணர்ச்சில சாகுறது தான் எனக்கு தண்டனை”

“இருந்துட்டுப்போ.. உன்னால என் வாழ்க்கையில இழந்த எதையும், நீயே நினைச்சாலும் திருப்பி கொடுக்க முடியாது. நீ காலம் முழுக்க குற்ற உணர்ச்சில வாழனும்னு எல்லாம் எனக்கு ஆசை இல்ல. உன்னை மிரட்டுனேன் தான். ஆனா செய்யத்தோணல. அட்லீஸ்ட் உன் லைஃப் பார்ட்னருக்காச்சும் உண்மையா இருக்கியே! அது வரை சந்தோசம். இனி வராத கிளம்பு.”

அடுத்த நொடி, வருணிகாவின் கையைப்பிடித்துக் கொண்டு சந்திரா சத்தமாகவே அழ ஆரம்பித்து விட்டாள்.

“சாரி சாரி சாரி.. எல்லாமே தப்பு தான். என்னை மன்னிச்சுடு” என்று அழ, வருணிகாவிற்கு மீண்டும் தொண்டை அடைத்தது. அவளது துன்பங்கள் எல்லாம் ஒரு நிமிடம் கண் முன் வந்து போனது.

சந்திராவிடமிருந்து கையை வெடுக்கென பிடிங்கிக் கொண்டாள்.

“என்னடி சாரி? என்ன சாரி? நீ துடிக்குறத பார்த்து நான் உருகனுமா? நானும் துடிச்சேன். யாருமே உருகலையே..? நீ துடிக்கிறனு அவர் வந்து நிக்கிறாரு. எனக்கு யாரும் நிக்கலையே..! யாருமே இல்லாத அனாதை மாதிரி தனியாவே துடிச்சேனே. சைக்காட்ரிஸ்ட் கேட்குறாங்க. கூட யாரும் வரலையானு..? எப்படிச்சொல்லுவேன்? சுத்தி இருக்க எல்லாரும் துரோகிங்க. அந்த துரோகத்துல செத்துடலாம் போல இருக்கு. என் பிள்ளைய காப்பாத்துனுமேனு உங்க கிட்ட ஓடி வந்துருக்கேன்னு…?

நான் துடிச்சப்போ யாருமே எனக்காக இல்ல. ஆனா, நீங்க துடிக்கிறப்போ நான் இரக்கப்படனும்?? நான் நல்லவ தான். அதுக்காக மடச்சி இல்ல. நீங்க‌ என்ன பண்ணாலும் மன்னிச்சுட்டு, நீங்க கொடுக்குற‌ காயத்தை எல்லாம் வாங்கிட்டு, சிரிச்சுட்டே நிக்கனும்னு எதிர் பார்த்தீங்களோ? கிளம்புடி முதல்ல.. உன் சங்காத்தமே வேணாம். அந்த ஃபோட்டோ விடியோ எல்லாத்தையும் டெலிட் பண்ணிடுறேன். இனி உன் முகத்த பார்க்க கூட எனக்கு விருப்பமில்ல. இவள இங்க இருந்து கூட்டிட்டுப்போங்க. இல்ல என்ன செய்வேன்னு தெரியாது. போடி. இனி பார்வையில பட்டுறாத. போ”

பிடித்துத் தள்ளி விட்டவள் கண்ணிலும் கண்ணீர் வழிந்தது. மணிகண்டன் சந்திராவின் கையைப்பிடித்துக் கொண்டான்.

“கேட்க தகுதியே இல்லனாலும், வேற வழி தெரியல. முடிஞ்சா மன்னிச்சுடுங்க” என்று கூறி விட்டு, மணிகண்டன் சந்திராவோடு வெளியேறி விட்டான்.

சந்திரா தோழியை ஒரு முறை திரும்பிப் பார்த்தாள். வருணிகா இப்படிப்பேசுபவள் அல்ல. மனதில் பட்ட காயத்தில், அவளது இயல்பை மீறி அவள் பேசிய புதுமொழி, சந்திராவை உடைத்தது. கண்ணீரோடு வெளியேறி இருந்தாள்

வெகுநாட்களுக்குப்பிறகு மனதில் இருந்ததை கொட்டி விட்டதில், வருணிகாவிற்கு கண்ணீர் நிற்காமல் வடிந்தது. அறைக்குள் சென்று பல நாட்களுக்கு பிறகு அழுது தீர்த்தாள்.

சில நிமிடங்கள் கழித்து, ஹரிஹரன் அறைக்குள் சென்றான்.

கண்ணை மூடி படுத்துக்கிடந்தவள் அருகே சென்றவன், அவள் காலைப்பிடித்துக் கொண்டு தரையில் அமர்ந்தான்.

அவள் அசையவில்லை. அவனும் அசையவில்லை. நொடிகள் கடக்க, ஹரிஹரனின் கண்ணீர் அவள் காலில் விழுந்தது. அதை உணர்ந்ததுமே காலை வேகமாக பிடுங்கிக் கொள்ளப் பார்த்தாள். அவன் விடவில்லை.

நின்றிருந்த கண்ணீர் மீண்டும் வர, வருணிகா அமைதியாக தேம்பினாள். அவளது காலில் முகத்தை வைத்துக் கொண்டு, ஹரிஹரனும் கண்ணீர் வடித்தான்.

முற்றும்.

வருணிகா மன்னிச்சாளா? இல்லையா? இது புதிராவே தான் இருக்கும். எனக்கு இந்த முடிவு சரினு தோனுச்சு. மன்னிச்சுட்ட மாதிரி முடிச்சா சினிமேட்டிக்கா இருக்கும். இல்லனா தண்டனை வருணிகாவுக்கு மட்டுமே கிடைச்ச மாதிரி இருக்கும். இதுக்கு மேல வாழ்க்கை நின்னுடாது. வாழ்க்கை போற போக்குல அவங்க வாழ்க்கை இருக்கட்டும். உங்களோட கருத்துக்களை மறக்காம சொல்லுங்க. எதிர் பார்ப்பேன். நன்றி.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
16
+1
1
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்